Home Historical Novel Raja Perigai Part 1 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

41
0
Raja Perigai Part 1 Ch15 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch15 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 15. யார் அவள்?

Raja Perigai Part 1 Ch15 | Raja Perigai | TamilNovel.in

மகாராஜா பிரதாப்சிம்மன் உத்தரவுப்படி தஞ்சை அரணமனையில் பாதுகாப்பு வீரர் மனையறையொன்றில் தங்க வைக்கப்பட்ட விஜயகுமாரன் அன்றைப்போது முழுவதையும் அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பதிலும் மீதி வேளைகளில் அறை மஞ்சத்தில் மல்லாந்து படுத்துத் தனது வாழ்வைப் பற்றிய யோசனைகளிலும் கழித்தான். முந்திய நாளிரவில் ஸ்ரீரங்கம் கோவிலில் தான் சபதம் செய்தது முதல் அந்த இரவில் தஞ்சை அரண்மனையில் தங்கியது வரையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தனது ஆரம்பக் கால வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் திருப்பங்கள் துரிதமாகவும் எதிர்பாராத வகையிலும் ஏற்படுகின்றன என்பதை எண்ணி எண்ணி வியக்கவும் செய்தான்.

சிறுவயதுச் சம்பவங்கள் அவனுக்குச் சரியாக நினைப்பில் இல்லையானாலும், நினைவு வந்த பிறகு தான் அநாதையாக ஒரு வணிகன் இல்லத்தில் வளர்ந்ததையும், திடீரென ஒரு நாள் சிவகங்கை வீரர்கள் வணிகன் இல்லம் வந்து தன்னை அழைத்துச் சென்றதையும், பிறகு சிவகங்கை மகாராஜா தன்னை அரண்மனையிலேயே அரசரீதியில் வளர்த்ததையும், போர்ப் பயிற்சி தனக்கு அளிக்கப்பட்டதையும் எண்ணிப் பார்த்தான். கடைசியில் சில தினங்களுக்கு முன்பு தன்னை அழைத்த சிவகங்கை மகாராஜா, தன் பணி ஒரு நவாபை ஒழிப்பதென்று கூறியதையும், அந்த நவாபால் தன் வம்சம் அழிந்த வரலாற்றை எடுத்துச் சொன்னதையும், அந்தப் பாதகனை அழிப்பதாக அரங்கன் மீது ஆணையிட்டு அந்தப் பணியை நோக்கிப் போ,’ என்று கூறியதையும், எண்ணிப் பார்த்துப் ‘புறப்பட்டதோ சபதமொன்றை நிறைவேற்ற, இடையில் கிடைத்ததோதிருட்டுப் பட்டம். இப்பொழுது இங்கிருப்பதோ அரண்மனை ராஜபோகம் ‘ ‘என்று தனக்குள் கூறிச் சற்று வெளிப்படையாக நகைத்தும் கொண்டான்.

உண்மையில் அரசனுக்கு நடப்பது போன்ற உபசாரம் அவனுக்கு அவன் இருப்பிடத்தில் நடந்தது. டபீர் பண்டிதரே அவனை அழைத்து வந்து அந்த இடத்தில் விட்டுப் பணி மக்க ளுக்குத் திட்டமான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்ததால், விளக்கு வைக்கத் துவங்கிய அந்த மாலை நேரத்தில் அவனுக்கு நீராட்ட வசதிகளும் மற்ற உபசரணைகளும் மிகத் திறம்படச் செய்யப்பட்டன.

வீரர் மனையின் அறையொன்றில் அவன் தங்க வைக்கப்பட்டாலும், அந்த அறை பொது மனையுடன் ஒட்டாமல் தனித்திருந்தபடியாலும் அரண்மனை நந்தவனத்தை அடுத்திருந்தபடியாலும், அவன் தன்னந்தனியே இருப்பதற்கும் இஷ்டப்படி உலாவுவதற்கும் சாத்தியமாயிற்று. அவன் அந்த அறைக்கு வந்த சமயம் மாலை முற்றிவிட்டதால் அரண்மனைப் பிராந்தியம் முழுவதும் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின. காவல் வீரர்கள் புரவிகளில் அரண்மனையைச் சுற்றியிருந்த பெரும் சுவர்களை அடுத்து உலாவலானார்கள். அந்திக் காலம் சென்று விளக்கு வைக்கப்பட்டதும் அரண்மனையில் ஏதோ ஓரிடத்தில் வீணை வாத்யங்களின் சாதக ஒலி மிக இன்பமாகக் கேட்டது. ஒருபுறம் அந்தணர் வேதகோஷமும், இன்னொரு புறம் காவல் வீரர் வீரகோஷமுமாகச் சேர்ந்து, தஞ்சை மன்னன் மாளிகையில் வீரமும் வித்தையும் சமமாகக் கலந்து இணைந்த பெருமையை விளக்கலாயின. இவற்றை அனுசரித்து நந்தவனத்திலிருந்து கூவிய குயிலினங்கள் சில மாலை நேரத்தின் மங்கல இசையையும் அளித்தன.

பயணக்களைப்பை நீராட்டத்தாலும் அரசு மாளிகை உணவினாலும் தீர்த்துக் கொண்ட விஜயகுமாரனுக்குப் புது உடைகள் அரண்மைனையிலிருந்து அளிக்கப்பட்டதால், அவற்றை அணிந்து அவன் மாலை நேரத்தில் அரண்மனை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கச் சிறிது நேரம் உலாவ முற்பட்டான்.

அரண்மனையின் பலமான பாதுகாப்பையும் எட்ட இருந்த பெரும் கோட்டைச் சுவர்களில் இருந்த சில பீரங்கிகளையும் பார்த்த விஜயகுமாரன், கோட்டைத் தளபதியாக இருந்தாலும் அவர் திறமையுடனேயே தமது பணியைச் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். இருப்பினும் வடக்குக் கோட்டை வாசல் மட்டும் அத்தனை வலுவுள்ளதாகத் தெரியவில்லை விஜயகுமாரன் கண்களுக்கு. அது இருமுறை எதிரித் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருப்பதையும், பிறகு சரியாகப் பழுது பார்க்கப்படாததையும் கண்டு, இதை ஏன் இத்தனை பலவீனமாக வைத்திருக்கிறார்கள்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு அதன் எதிரே பல நிமிடங்கள் நின்றான். அப்படி யோசனையில் ஆழ்ந்து நின்ற சமயத்தில்தான் அவன் தோள் மீது பலமானகையொன்று அசுரப்பிடியாக விழுந்தது.

அதனால் யோசனையிலிருந்து விடுபட்டுச் சிறிது திரும்பிய விஜயகுமாரன் தன்னை அடுத்து அதிக உயரமில்லாத பருமனான ஒரு மனிதர் நிற்பதைப் பார்த்து, ”தாங்கள் யார்?” என்று வினவினான்.

அந்த மனிதரின் கண்கள் ஈட்டிகளென அவன் மீது நிலைத்தன. ”மானாஜி என்று சொல்வார்கள்” என்ற அவர் சொற்களும் கரகரவென்று கடுமையுடன் உதிர்ந்தன.

”மானாஜி அப்பாவா தஞ்சைத் தளபதியா!” என்று வியப்புடன் வினவினான் விஜயகுமாரன்.

அவன் வியப்பைக் கவனித்த மானாஜி மெல்லச் சிரித்த சிரிப்பிலும் அசுரச் சாயை லேசாக இருந்தது. ”ஏன், என்னைப் பார்த்தால் தளபதியாகத் தெரியவில்லையா?” என்று வினவினார்.
”உடை சாதாரணமாக இருப்பதால்…” என்ற விஜயகுமாரன் மென்று விழுங்கினான்.

”தளபதியாயிருக்க முடியாதென்று நினைத்தாய். உடை யினால் யாராவது வீரனாக முடியுமானால் தையற்காரர்களே வீரர்களைச் சிருஷ்டித்து விடமுடியும்” என்று கூறி நகைத்த தளபதி, “நீதானே விஜயகுமாரன்?” என்று வினாவினார்.

“என்னைப்பற்றி….’’

”அரண்மனை முழுவதும் தெரியும். அரசகுமாரியைக் காப்பாற்றியவனாயிற்றே!”

“நான் எங்கே காப்பாற்றினேன்? காப்பாற்றியது முராரிராவ், கிளைவ்…”

”சரி. காக்கவில்லை… கவர்ந்தாய் ” என்றார் தளபதி.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த விஜயகுமாரனை நோக்கிய தளபதி, “என்ன இந்த வடக்கு வாசலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?” என்று கேட்டார்.

”இந்த இடத்தில் கோட்டை பலவீனமாயிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினான் விஜயகுமாரன்.

“ஆம்.”

“ஏன்?”

”பலமுறை இது தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. மீண்டும் உட்படலாம்.”

“அதனால்?”

“வேண்டுமென்றே பலவீனமாக வைத்திருக்கிறோம்.”

”காரணத்தை நான் அறியலாமா?” என்று வினவிய விஜயகுமாரனை நோக்கி, ”பிறகு சொல்கிறேன் சாவகாசமாக’ என்று கூறிச்சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்றார் தளபதி.

அவர் சென்ற திக்கைப் பல நிமிடங்கள் பார்த்துக் கொண் டிருந்து விட்டுக் கோட்டையைச் சுற்றிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தபோது அறையில் பணி மக்கள் யாரும் இல்லை. கதவு திறந்திருந்தது. பணிமகள் மட்டும் ஒருத்தி நின்றிருந்தாள், கதவுக்கருகே. படை வீரர் மனையருகே பெண்ணொருத்தி எப்படி வர முடியும் என்று நினைத்த விஜயகுமாரன், ”யாரம்மா நீ?” என்று கேட்டான் வியப்புடன்.

அவள் அவனுக்கு லேசாகத் தலை வணங்கினாள். ”அந்தப் புரத்துப் பணிமகள்” என்று கூறினாள் பணிவு நிரம்பிய குரலில்.

”படை வீரர் மனைக்கருகில் நீங்கள் அனுமதிக்கப் படுவதுண்டா?” என்று வினவினான் விஜயகுமாரன்.

“இல்லை.”

“பின் ஏன் வந்தாய்?”

”சில சமயங்களில் சம்பிரதாயம் மாற்றப்படுகிறது? உதாரணமாக….”

“உதாரணமாக?”

”நீங்கள் என்னுடன் அந்தப்புரத்துக்கு இப்பொழுது வருகிறீர்கள்.”

இதைச் சொன்ன பணிமகளை மிக விசித்திரமாக நோக்கினான் விஜயகுமாரன்.:’அந்தப்புரத்துக்குள் செல்பவர்கள் தலை போய்விடுமென்பது அரசர் ஆணையல்லவா?” என்றும் கேட்டான் வியப்பு நிரம்பிய குரலில்.

”சாதாரணமாக அப்படித்தான்…” என்றாள் பணிப்பெண்.

“இப்பொழுது?”

”உங்களை நான் அழைத்துப் போவதால் காவலர் தடுக்க மாட்டார்கள்.”

”ஏனோ?”

”மேலிடத்து உத்தரவு.” இதைப் பணிப்பெண் சொன்ன போது அவள் இதழ்களில் புன்னகை அரும்பியது.

புரிந்து கொண்டான் விஜயகுமாரன், அழைப்பு அரசுகுமாரியிடமிருந்து வந்திருக்கிறதென்று: இருப்பினும் கேட்டான். இரவு ஏறிவிட்டதே” என்று.

”மேலிடத்துக் கட்டளைக்கு இரவு பகல் தெரியாது” என்றாள் பணிப்பெண்.
அவளுடன் பேசுவதில் பயனில்லை என்பதை அறிந்து கொண்ட விஜயகுமாரன் அவளைத் தொடர்ந்தான், அறைக் கதவைச் சாத்திக் கொண்டும், கச்சையிலிருந்த வாளை அவிழ்க் காமலும். பணிப் பெண் இருந்த இடத்தைவிட்டு நகராமலே, “வாளை அணிந்திருக்கிறீர்கள்” என்று சுட்டிக் காட்டினாள்.

“ஆம்…”

“வாள், துப்பாக்கி முதலிய ஆயுதங்களைத் தரித்து அந்தப் புரத்துக்குள் வரமுடியாது.”

“என்னால் வரமுடியும்.” “தவறு.” –

  ''அல்ல, சம்பிரதாயங்கள் உடையும் சமயங்களில் இதுவும் ஒன்று நட, வழிகாட்டு" என்ற விஜயகுமாரன் அவள் முன் செல்ல பின் சென்றான்.

அந்தப்புரம் அவனிருந்த இடத்திலிருந்து சற்று எட்டவே இருந்தது. அதை மெள்ள அடைந்ததும் அதைக் காத்து நின்ற காவலர் அவனுக்குத் தலை வணங்கி வழி விடவே அவன் உள்ளே சென்றான். பணிப்பெண் அவனை முகப்பு அறையொன்றில் இருத்திவிட்டு உள்ளே சென்றாள்.

முகப்பு அறையில் காத்து நின்ற விஜயகுமாரன் அளவுக்கு மீறிய எந்தச் செயலிலும் அரசகுமாரி ஈடுபடவில்லையென்பதை அறையின் அமைப்பிலிருந்தும் அது இருந்த இடத்திலிருந்தும் புரிந்து கொண்டான். அந்த அறைக்குப் பத்தடி தூரத்தில் அந்தப்புரப் பெருவாயில் இருந்தது. அங்கே காவலும் இருந்தது. ஆகவே மிக முக்கியமான விருந்தாளிகளை அரச மகளிர் சந்திக்கக் கூடிய அறையிலே தான் இருந்ததால் கட்டுப்பாட்டுக்கு அதிகம் புறம்பான எதிலும் அரசகுமாரி சம்பந்தப்படவில்லை யென்பதை அறிந்து கொண்ட விஜயகுமாரன், எதற்காகத் தன்னை நந்தினி அழைத்திருக்கிறாள் என்று சிந்தித்துக் காத்திருந்த சமயத்தில் அறைக்குள் அரசகுமாரி நுழைந்தாள்.

அரசகுமாரியும் சற்று முன்பு நீராடியிருப்பதற்கான அறிகுறிகள் அவள் அந்த அறைக்கு வருமுன்பாக அவனை நாடிவந்தன. சாம்பிராணிப் பொடியின் நநுமணத்தையும் மல்லிகை செண்பகம் இரண்டும் கலந்த கதம்பத்தின் சுகந்தத்தையும், தொடர்ந்து வந்த நந்தினியை ஏற இறங்கப் பார்த்தான் விஜயகுமாரன்.

அன்று அவள் முக்காடு அணியவில்லை. சேலையின் முக்காட்டுப் பகுதி அவள் கழுத்தில் வளைந்து கிடந்தது. தலையில் அணிந்திருந்த கதம்பச்சரம் கறுத்த கூந்தலிலாட, அறை விளக்கில் செண்பக மஞ்சளையும் மல்லிகை வெண்மையையும் மட்டுமின்றி வேறு சில வர்ண ஜாலங்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்தது அவள் அழகிய திருமேனி. வாசனை கலந்த மஞ்சள் பொடியைத் தேய்த்திருந்த காரணத்தால் அவள் வழவழத்த உடலிலிருந்து கிளம்பிய தசாங்க வாசனையுடன் கன்னக் கதுப்புகளை அழகு செய்த மஞ்சள் நிறம் முந்திய வர்ண ஜாலங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

அவள் கழுத்தில் அணிந்திருந்த ஒரே ஒரு முத்து மாலை, கழுத்தைச் சுற்றிக் கிடந்த வெண்மை மஸ்லினுக்குள் காட்சியளித்தது மிக ரம்மியமாயிருந்தது பார்ப்பதற்கு. அவள் நின்ற தோரணையில் சித்திரம் இருந்தது, நடனம் இருந்தது. விம்மிய மார்பிலும் நுண்ணிய இடையிலும் சிற்பத் திறன் இருந்தது. இத்தனை கவர்ச்சிகளை உள்ளடக்கிய நந்தினி இன்னும் எத்தனை இன்ப ஜாலங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறாளோ, இன்னும் எத்தனைக் கலைகள் – சாத்திரங்கள் அவளிடம் புதைந்து கிடைக்கிறனவோ என்று எண்ணிய விஜயகுமாரன் பேச முடியாமல் வாயடைத்து நின்றான். இணையற்ற அவள் அழகைக் கண்டு நிலத்தில் கண்களை ஒட்டவும் செய்தான். ‘ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குலாம் தடந்தேரொத்த வேற்கண் வெம்புருவம் போர்வில் இவற்றுடன் ‘மெல்லியர் வளைந்தபோது பார்க்கவும் அஞ்சினான் அப்பணையனும் உயர்ந்த தோளான்’ என்று கம்பர் பிரான் குறித்த இளைய பெருமாளின் நிலையை விஜயகுமாரனும் அந்தத் தருணத்தில் அடைந்தான்.

பிரமிக்கத் தக்க அந்த அழகு கைகால்களுக்கு விலங்கு போட்டு ஸ்தம்பிக்க வைத்துவிட்டது அந்த வீரனை. இதனால் தான் கம்பன் அழகிகளை விலங்கு மெல்லியல்’ என்ற வர்ணித் தானோ என்று இலக்கியத்திலும் திளைத்த வாலிபன் மீண்டும் கண்களை உயர்த்தினான் அக்காரிகையை நோக்கி.

அவள் கண்கள் அவன் கண்களுடன் இணைந்தன. அந்தக் காந்தக் கண்கள் தனது உள்ளத்தையே ஊடுருவுவதாகத் தோன்றியதால் நிலைகுலைந்த விஜயகுமாரனை அரசகுமாரியே சுயநிலைக்குக் கொண்டு வந்தாள், “கொஞ்சம் மாறிவிட்டீர்கள்” என்ற சொல்லால்.

”என்ன மாறிவிட்டேன்?” என்று வினவினான்.

அரசகுமாரியின் பெருவிழிகள் நகைப்பது போன்ற பிரமையை ஊட்டின ஒரு விநாடி. அவள் செவ்விதழ்கள் அகன்று, ”தூராக்ருதம் குறைந்திருக்கிறது” என்று உதிர்த்த சொற்களில் அந்த நகைப்பு விரிந்து கிடந்தது.

விஜகுமாரன் கண்கள் வியப்படன் உயர்ந்து அவள் கண்களை நன்றாகவே சந்தித்தன. “துராக்ருதமா?” என்ற அவன் கேள்வியில் குழப்பம் தெரிந்தது.

”ஆம். ஸ்ரீரங்கத்தில் ….” என்று இழுத்தாள் அரசகுமாரி.

”ஓ! அதைச் சொல்கிறீர்களா?” என்ற விஜயகுமாரன் சொற்களில் சிறிது கூச்சம் தெரிந்தது. ‘அப்பொழுது ஆபத்தில் இருந்தேன்” என்று கூறினான் அவன்.

”என்ன ஆபத்து?”

”திருடன் என்றீர்கள் என்னை.”

”அதில் தவறென்ன?”

”தவறு என்னவா?”

“ஆம்.”

”எதைத் திருடினேன்? அரங்கன் கண்ணையா?”

“இல்லை அரசன் பெண்ணை …” இதைச் சொன்ன அரச குமாரி நகைத்தாள். விஜயகுமாரனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும் செய்தாள். அவள் பார்வையிலிருந்தது பரிதாபமா, காதலா? தெளிவாகத் தெரியவில்லை அவனுக்கு. ஆனால் அவள் சொற்களில் பரிதாபமே உதிர்ந்தது. ”நான் ஒரு கேள்வி கேட்கிறேன் சொல்வீர்களா?” என்று வினவினாள் அரசகுமாரி மெல்ல.

”கேளுங்கள்” என்றான் விஜயகுமாரன்.

அவள் அவனை நெருங்கினாள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு. அவன் காதுக்கருகில் உதடுகளைக் கொணர்ந்தாள். அவள் சூடியிருந்த கதம்ப வாசனை, தலைக்குழலுக்குப் போட்டிருந்த சாம்பிராணி வாசனை, உடலின் தசாங்க சுகந்தம், இவை யனைத்தும் அந்த வாலிபனை ஏதோ ஓர் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்றன. அவள் சேலை காற்றில் அசைந்து அவன் மீது மெல்ல உராய்ந்து அவன் உணர்ச்சிகளைக் கொந்தளிக்க வைத்தது. ஆனால் அவள் காதுக்கருகில் உதிர்த்த சொற்கள், கேட்ட கேள்வி, அவன் உடலில் மின்சாரமெனப் பாய்ந்தது “அவள் யார்?” என்று கேட்டாள் அரசகுமாரி.

”யார்?”முணுமுணுத்தன விஜயகுமாரன் உதடுகள்.

”உங்களுக்கு வெறி ஊட்டியவள்” என்று ரகசியமாகக் கேட்டாள் தஞ்சை மன்னன் மகள்.

Previous articleRaja Perigai Part 1 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here