Home Historical Novel Raja Perigai Part 1 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

48
0
Raja Perigai Part 1 Ch16 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch16 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 16. இரண்டாவது சபதம்

Raja Perigai Part 1 Ch16 | Raja Perigai | TamilNovel.in

அரண்மனை அந்தப்புரத்து முகப்பு அறையில், ஆங்கிலே யரின் மண்ணெண்ணெய் பவர் விளக்கின் வட்டத்திரி வீசிய மென்மையான ஒளியில், அரசகுமாரியை நன்றாகவும் நிதானமாகவும் பார்க்க நேரிட்ட சந்தர்ப்பத்தில், அவள் அழகை அள்ளிப் பருகிய கண்களும், சுகந்தத்தை வீசிய சுகந்தப் பொடி களும் கதம்ப மலர்களும் அளித்த நறுமணத்தை முகர்ந்த நாசியும் தங்கள் அனுபவங்களைச் சித்தத்துக்கு அனுப்பியதால் மதிமயங்கி விஜயகுமாரன் நின்ற நேரத்தில், அவனை அளவுக் கதிகமாகவே நெருங்கிய நந்தினி, ”யார் அவள்? உங்களுக்கு வெறி ஊட்டியவள்?” என்ற கேள்விகளைக் காதுக்கருகில் உதிர்த்தபோதே, அந்த வாலிப வீரனின் உணர்ச்சிகள் ஊசி முனையில் நின்றனவென்றால் கேள்விகளைக் கேட்டுக் காதிலிருந்து அவள் உதடுகள் பின் வாங்கிய சமயத்தில் அவள் கேள்வி விளைவித்த அதிர்ச்சியால் அவன் கன்னத்தைச் சரேலென்று திருப்பவே, அவள் அழகிய அதரங்கள் அவன் கன்னத்தைத் தடவிவிட்ட காரணத்தால், அவன் மட்டுமென்ன, அவளும் அதிர்ச்சியுற்றே நின்றுவிட்டாள் பல விநாடிகள். அந்த நெருங்கிய நிலையிலிருந்து அரசகுமாரி மீண்டபோது இருவருக்கும் இடையில் பரம சங்கடமான நிலைமை நீடித்து நின்றதால் மௌனமும் நீடித்தது.

நீடித்தது உண்மையில் மௌனந்தானா என்ற சந்தேகம் இருவரையும் பீடிப்பதற்கு இதயங்கள் காரணமாக இருந்தன. அவள் இடையில் கையைச் செலுத்தி அணைத்துப் பலவந்தமாகப் பூவுடல் முழுதும் தன்மீது படத் தூக்கிப் புரவி மீது ஸ்ரீரங்கத்தில் போட்டபோது ஏற்படாத உணர்ச்சி வேகம், மனத் திண்டாட்டம், இடையே ஊடுருவாத இன்ப ஜுரம் இவை விளைவிக்காத இதய ஓட்டம், அந்த ஓட்டத்தினால் ஏற்படாத மன இரைச்சல், இவை இந்தச் சாதாரண சம்பவத்தின், எதிர்பாராதவிதமாக அவள் இதழ்கள் கன்னத்தில் தடவி விட்ட காரணத்தால், ஏன் எற்பட வேண்டும் என்று எண்ணிப் பார்த்தான் விஜயகுமாரன்.

அரசகுமாரியின் நிலையோ சொல்லத் தரமல்லாமல் உயிர்ப் பெண்ணை உயிரற்ற சிலையாக அடித்திருந்தது. ‘இவர் தொட்டுத் தூக்கிய சமயத்தில் இல்லாத நாணம் இப்பொழுது எங்கிருந்து திடீரென வந்துவிட்டது எனக்கு?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள். ‘கொள்ளிட நீர்க்காலின் கரையில் உட்கார்ந்திருந்தபோது கைத்துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தினேனே இவரை, அந்தத் துணிவு இப்பொழுது எங்கு ஓடிவிட்டது?’ என்று வினவிக் கொண்டாள். ‘இவரை அப்போதே நான் ஏன் சுடவில்லை? சுட்டுவிட்டுப் புரவியில் ஏறித் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து டபீர் பண்டிதருடன் சேர்ந்து சொந்த நகரம் ஏன் திரும்பவில்லை?’ என்றும் சுயசோதனை செய்துகொண்டாள்.

மெள்ள மெள்ள உண்மை உதயமாகவே கண்களை நிலத்திலேயே ஒட்டினாள். இந்த வாலிபனைக் கண்டது முதல் தன் மனத்தில் எழுந்த பரிதாபம் (பரிதாபம்தான் அது என்று தன்னை ஏமாற்றிக் கொண்டாள் அரசகுமாரி) பரிவும் (இதுவும் ஒரு ஏமாற்றம்) தன் இதயத்தை அவன்பால் இழுத்துவிட்டதை உணர்ந்த அரசகுமாரி, ‘ஆம். இந்த வாலிபனிடம் பரிதாபமும் பரிவையும் தவிர வேறு என்ன ஏற்பட்டிருக்க முடியும் எனக்கு?’ என்றும் கேட்டுக் கொண்டாள்.

ஆனால் அந்தக் காரணங்கள் அர்த்தமற்றவை, கேள்விகளும் அர்த்தமற்றவை என்பதை அவள் மனம் இடித்துக் காட்டியது. “இவனிடம் ஏற்பட்டது பரிதாபமென்றால், பரிவென்றால், முராரி ராவின் உதவி கிடைத்ததும் அவருடன் பயணம் செய்து இங்கு வந்திருக்கலாமே. அவர் சொன்னார் என்பதற்காக இவனுடன் ஏன் வந்தாய்? இவனிடம் உனக்குப் பைத்தியம், அதை ஏன் மறைக்கிறாய்?” என்று இதயம் இரைந்து கேட்டது, நகைக்கவும் செய்தது. ”அதெல்லாம் கிடக்கட்டும், இவனை அந்தப்புரத்துக்கு எதற்காக வரவழைத்தாய்? காதுக்கருகில் போய்த்தான் கேள்வி கேட்க வேண்டுமா? அடி கள்ளி” என்று மனம் தூற்றவும் செய்தது.

சங்கடத்தை உதறிக்கொண்டு விஜயகுமாரன் ஏறெடுத்துப் பார்த்தான். அவள் நின்ற விதத்திலேயே சிருங்காரம் இருந்தது. கலையும் இருந்தது. சற்றே ஒடிந்து ஒருபுறம் ஒதுங்கிய இடை, அவள் உடலை நர்த்தனப் பாவையாக அடித்திருந்தது. நிலத்தில் கண்கள் நோக்கியதால் கவிழ்ந்த தலை, ஜதி ஸ்வரங்களைக் கற்ற கால்கள் நர்த்தனத்துக்குத் தயாராயிருக்கின்றனவா என்பதை ஆராய்வதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. தலையின் கறுத்த குழலைப் பவர் லைட்டின் வெண்மை வெளிச்சம் அதிகக் கருமையாக்கவே கதம்பச் சரத்தின் செண்பகமும் மல்லிகையும் அதிகப்படி காந்தியை வீசின. தன்னைத் திடப்படுத்திக் கொள்வதற்குப் பக்கத்தில் வாயிற்படி இல்லாததால் இடையில் ஒரு கையைக் கொடுத்து அவள் நின்றதன் விளைவாக, பக்கவாட்டில் முக்கோணம் அமைத்த முழங்கை சேலையை லேசாகத் தூக்கவே ஒரு பக்கத்து மார்பின் ஏதோ ஒரு சிறு பகுதி கண்களுக்குப் படவே செய்தது.

ஆனால், எது மறைத்தாலும் மறைக்க முடியாத அவள் இடைக்கடுத்த திரண்ட எழில்களும், நடன பாவத்தில் வளைந்து இயற்கை கடைந்திருந்த உருண்ட மணிக் கால்களும் மருதாணியால் சிவந்த பாத விரல்களும், புறப் பாத சித்திரமும், தஞ்சை மண்டலத்தில் சோழர்களுக்குப் பிறகு சிற்பமோ சித்திரமோ அழிந்துவிடவில்லையென்ற நினைப்பையே ஊட்டின.

இத்தகைய தோற்றத்தைத் திரும்பத் திரும்ப அவன் பருகுவதை நந்தினியும் உணர்ந்தே இருந்தாள். உணர்ந்தும் என்ன? செய்யும் வகையேதும் அறியாமல் திண்டாடினாள். அவள் திண்டாட்டத்தை உணர்ந்ததாலோ அல்லது அரச மகளை அப்படிப் பார்ப்பது பண்பாட்டுக்கு உகந்ததாகாது என்ற நினைப் பாலோ விஜயகுமாரன் மெள்ள பேச்சைத் துவங்கி, ”என்ன கேட்டீர்கள் அரசகுமாரி?” என்று வினவினான்.

அரசகுமாரியும் ஒரு நிதானத்துக்கு வந்திருக்க வேண்டும், அல்லது வந்துவிட்டதாக நினைத்திருக்க வேண்டும். அதன் விளை வாகத்தன் கண்களை நிலத்திலிருந்து மீண்டும் அவனை அரை குறையாகப் பார்த்தாள். ”யாரவள் என்று கேட்டேன்” என்று பழைய கேள்வியைக் கிள்ளையைப் போல் திருப்பினாள். சொன்னதைச் சொல்வது கிள்ளைதான். ஆனால் அவள் மொழியும் கிள்ளைமொழிபோல் அவன் செவிக்கு மிக ஆனந்த மாகவே இருந்தது. ஆகவே அவனும் சொன்னான், ”ஆமாம், கேட்டீர்கள்” என்று சற்றுத் திணறி.

”உங்களுக்கு அவள் பெரிதும் வெறியூட்டியிருக்க வேண்டும்” என்றாள் நந்தினி, மெள்ள ஏதோ விஷயத்தை விசாரிப்பவள் போல்.

இந்தக் கேள்வி விஜயகுமாரன் கண்களில் ஏதோ ஒரு விபரீத ஒளியைப் படரவிட்டது. ”ஒருவிதத்தில் வெறிதான் எனக்கு. ஆனால் அதை ஊட்ட யாருமில்லை. ஊட்ட வேண்டியவள் இந்த உலகில் இல்லை” என்று கூறிய சொற்களில் துன்பம் மிதமிஞ்சிக் கிடந்தது.

”உங்கள் அன்னை என்று ஏதோ கூவிச் சபதம் செய்தீர்களே அரங்கன் சந்நிதியில்’ என்று வினவினாள் அரசகுமாரி மெதுவாக.

”ஆம், என் அன்னைதான். அன்னையாகத் தான் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் என் ரத்தம் இத்தனை தூரம் கொதித்திருக்காது. அதை ஏன் கேட்கிறாய் இப்பொழுது? அது பெருங் கதை….” என்று கூறிய விஜயகுமாரன் துன்பப் பெருமூச்சு விட்டான்.

எல்லையில்லாத் துன்பம் அவனை ஆட்கொண்டு விட்டதையும் அவன் சரீரம் லேசாக நடுங்குவதையும் கண்ட அரசகுமாரி, அவன் தன்னை அழைத்தபோது மரியாதையைக் கைவிட்டதைக் கூடக் கவனித்தாள். ‘ஆம் ஆம். உணர்ச்சிகள் மேலிடும்போது மரியாதை பறந்துவிடுகிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவள் உள்ள உணர்ச்சிகளை அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை . தவிர அவன் துணிவும் சற்று மிதமிஞ்சியது. அரசகுமாரியை அணுகி அவள் தோள்மேல் கையை வைத்தான் பலமாக. ”நந்தினி! அந்தக் கதை உனக்குத் தெரியவேண்டுமா? காலம் எப்படியும் அவிழ்க்கும் அந்தச் சதியை. ஆனால் இப்போதே தெரிந்து கொள்கிறாயா? பாரதம் யாரால் இன்னும் பிழைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று வெறி பிடித்தவன் போல் வினவினான். அவன் சொற்களிலும் வெறியிருந்தது. அவளைப் பார்த்த கண்களிலும் வெறியிருந்தது. அவள் பூவினும் மென்மையான தோளில் அழுந்திய கை லேசாக நடுங்கியது. அவன் உன்மத்த நிலையிலிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட அரசகுமாரி சற்றுப் பயம் அடைந்தாள்.

அவள் விழிகளில் படர்ந்த அச்சத்தை அவன் வெறிபிடித்த கண்கள் கவனித்திருக்க வேண்டும். ஆகவே அவன் கூறினான், ”அஞ்சாதே அரசகுமாரி. பாரதப் பெண்கள் அச்சத்தை உதற வேண்டிய காலம் இது. ஏற்கனவே பல கற்புக்காரசிகள் உதறி யிருக்கிறார்கள். அவர்கள் தியாகத்தால் பாரதம் இன்னும் ஜீவிக்கிறது. இந்து மதமும் சமுதாயமும் அதனால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறது” என்று.

விஜயகுமாரன் கை அவள் தோளிலிருந்து அகன்றது. பிறகு இரு கண்களும் அவள் கண்களை ஊடுருவின.

அச்சமுற்றாள் அரசகுமாரி. காவலரைக் கூப்பிடலாமா என்று ஒரு கணம் யோசிக்கவும் செய்தாள். என்ன காரணத்தாலோ அவள் தன்னை விடுவித்துக் கொள்ளவும் இல்லை, காவலரை அழைக்கவும் இல்லை. சற்றே நடுங்கிய வண்ணம் அந்த வெறியனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அப்போது அவன் வாயிலிருந்து மெல்ல உதிர்ந்தன சொற்கள். ”உன் கன்னங்களை இப்பொழுது என் கைகள் பிடித்திருக்கின்றன பலமாக. நீ தப்ப முடியாது என்னிடமிருந்து. உன் கண்களை வெறித்துப் பார்க்கிறேன். நீ அகற்றமுடியாது உன் கண்களை. இப்போது நீ அஞ்சுகிறாய். ஆனால் இப்படி எத்தனை இந்துப் பெண்களை எதிரிகள் பார்த்திருக்கிறார்கள்! தங்கள் வெறிக்கு அடிமையாக்கியிருக்கிறார்கள் ஆனால் அதிலிருந்து தப்பிய பெண்களும் உண்டு. அவர்களில்…”

”அவர்களில்?”

”என் அன்னை ஒருத்தி” என்ற விஜயகுமாரன், ‘கேள் கதையை அரசகுமாரி, பிற்காலத்துக்கு ஓடு’ என்று கூறி நந்தினியை நோக்கினான்.

”எத்தனை தூரம் ஓடவேண்டும்?”

”இப்போது என்ன ஆண்டு இது?” என்ற கேள்வியை வீசினான் விஜயகுமாரன்.

”ஆங்கிலேயர் கணக்குப்படி 1749” என்றாள் மெல்ல அரசகுமாரி.

”பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவிடு.”

“1736?”

”ஆம், அதே ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் நாயக்கர் க்ஷத்திரிய வம்ச ஆதிக்கம் அழிந்தது. வீரத்தின் குறைவாலல்ல, வஞ்சகத்தால், நம்பிக்கைத் துரோகத்தால்.”

”சொல்லுங்கள்.” உடனே சொல்லவில்லை விஜயகுமாரன்.

”இந்துக்களின் அரசுகளை அதாவது தென்னாட்டு அரசுகளை, அழித்து முடித்து விட முஸ்லீம் ஆட்சிப் பீடங்கள் முயன்ற காலம்’ என்ற வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவளைப் பிடித்திருந்த கைகளை நீக்கிவிட்டு மீண்டும் அறையில் உலாவினான் மௌனமாக.

பிறகு மெள்ள மெள்ள உதடுகள் சொற்களை உதிர்த்தன மெதுவாக, உறுதியாக, ரோசமாக. “மதுரை நாயக்கர்கள் ஸ்தாபித்த சாம்ராஜ்யம் மெள்ளச் சதியாலும் அரச குடும்பக் கலகங்களாலும், இந்துக்களுக்கு இயற்கையாவுள்ள சிறு பூசல்களாலும் மெள்ளக் குறுக முற்பட்ட காலம். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குழந்தையின்றி இறந்துவிட்டார். ஆகவே அவர் மனைவி ராணி மீனாட்சி அரசுக் கட்டில் ஏறினாள். நாடு இருந்த நிலையை முன்னிட்டு அரசபீடத்தை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றிக் கொண்டாள். அரசுப் போட்டி குடும்பத்தில் வலுத்தது. ஆதரவற்ற ராணி மீனாட்சி பங்காரு திருமலா என்பவரின் குழந்தையைச் சுவீகாரம் செய்து கொண்டாள். இருப்பினும் வலுத்தது குலச் சண்டை . விரைவில் பங்காரு திருமலா, வெங்கடாசரியார் என்ற தளபதியின் உறவு கொண்டு மீனாட்சியின் அரசைப் பறிக்கத் திருச்சிமீது படையெடுத்தார்.

நிர்க்கதியான ராணி மீனாட்சியின் உதவிக்கு ஒரு நவாப் வந்தார், ஆற்காடுப் படைகளுடன். ‘நான் உனக்குக் சதோதரன். உன்னைக் காப்பாற்றுகிறேன். உன் அரசையும் காப்பாற்றுகிறேன்’ என்று குர்ஆன்மீது கை வைத்துச் சத்தியம் செய்தார். அந்தச் சத்தியத்தை நம்பிய ராணி மீனாட்சி நவாபைத் திருச்சிக்குள் அனுமதித்தாள். அவளைக் காப்பாற்ற நவாப் ஒரு கோடி ரூபாய் கேட்டார். அதற்கும் ராணி சம்மதித்தாள். ஆனால் நவாப் சத்தியத்தை மீறினார். திருச்சியை விழுங்கினார். சகோதரராக நடந்து கொள்ளவில்லை. ராணியைச் சிறையில் தள்ளினார். அதிக்கிரமும் செய்திருப்பார். ஆனால் ராணி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இங்கே சற்று நின்ற விஜயகுமாரன் ”எப்படியென்று கேட்கவில்லையே நீ?” என்று வினவினான்.

‘எப்படி?” அரசகுமாரியின் குரலில் துன்பச் சாயை ஏறியிருந்தது.

”ராஜபுத்திரிகள் வழியில். ஜோஹரில் தன்மீது தீயிட்டுக் கொண்டாள். அவள் புனித உடலை அக்கினி பகவான் காப்பாற்றினான் நவாபின் கைகளிலிருந்து” என்ற விஜயகுமாரன், ”இப்போது புரிகிறதல்லவாகதை?” என்றான்.

”புரிகிறது. ஆனால்…..”

”ஆனால் என்ன?”

”ராணி மீனாட்சி ஒரு சிறுவனைச் சுவீகாரம் செய்து கொண்டாள் என்றீர்களே?”

”ஆம்.”

”அவர் பெயர்?” இங்கு மரியாதை திரும்பியது. அரச குமாரியின் குரலில் கனிவும் காணப்பட்டது.

”விஜயகுமாரன்’ என்று முடித்த விஜயகுமாரன் நகைத்தான்.

”ஏன் நகைக்கிறீர்கள்?”

”அந்த விஜயகுமாரன் மறைந்துவிட்டான். அவன் நான்தானா என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த மர்மம் பின்னால் அவிழ்க்கப்படலாம். ஆனால் அவன் பெயர் எனக்கு இருக்கிறது. அவன் ஆற்ற வேண்டிய பணியும் என்மீது சுமத்தப் பட்டிருக்கிறது. அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுḥவேன்” என்ற விஜயகுமாரன் ஏதோ சிந்தித்துவிட்டு, ”அரசகுமாரி! இப்போது இன்னொரு சபதமும் செய்திருக்கிறேன்” என்றான்.

”என்ன அது?” என்று வினவினாள் அரசகுமாரி.

“நாளை சொல்கிறேன். என் உணர்ச்சிகள் என் வசத்தில் இல்லை” என்று சொல்லிவிட்டு வெகுவேகமாக அந்த அறையை விட்டு நடந்தான் விஜயகுமாரன்.

அரசகுமாரி அவன் சென்ற பின்பு நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தாள். அந்த இரண்டாவது சபதம் எதுவாயிருக்கும்? இன்னும் யார் தலையைக் கொய்யப் போகிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். பிறகு அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறையை அடைந்து பஞ்சணையில் படுத்தாள், யோசித்தாள். ஆனால் விடை கிடைக்கவில்லை. மறுநாள் விடை கிடைத்தது. விடை கிடைத்தபோது விஜயகுமாரன் கிடைக்கவில்லை.

Previous articleRaja Perigai Part 1 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here