Home Historical Novel Raja Perigai Part 1 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 1 Ch17 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch17 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 17. பாதுகா ஸகஸ்ரம் – 826

Raja Perigai Part 1 Ch17 | Raja Perigai | TamilNovel.in

இரண்டாவது சபதம் ஒன்றையும் செய்துவிட்டதாகப் புதிர் போட்டுவிட்டு அந்தப்புரத்து முகப்பு அறையிலிருந்து விஜயகுமாரன் வெளியேறிவிட்ட பிறகும்கூடப் பல விநாடிகள் அரசகுமாரி அந்த அறையிலிருந்து அகலாமல் சிலையென நின்றிருந்தாள், பலமான உணர்ச்சிகள் உள்ளத்தே ஊடுருவி ஓடியதன் விளைவாக. பிறகு மெல்லச் சுய உணர்வை வரவழைத்துக் கொண்டு முகப்பறையிலிருந்து புறப்பட்டு வந்த பின்பும்கூட விஜயகுமாரனின் வெறி பிடித்த கண்கள் தன் கண்களை ஊடுருவி நிற்கும் பிரமை அவள் உள்ளத்தை வளைய மிட்டுக் கொண்டிருந்தபடியால், அவள் தனது பஞ்சணை முகப்பிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாள்.

அப்படி உட்கார்ந்திருந்த நிலையில், தான் எழுந்து நின்று கொண்டிருப்பதாகவும் தன் கன்னங்களை விஜயகுமாரன் அழுத்திப் பிடித்துக்கொண்டு அந்தப் பயங்கரக் கதையைச் சொல்வதாகவும் தோன்றியது, அந்தப் பாவைக்கு.

அப்பா! அந்த ராணி மீனாட்சியைப் பற்றிப் பேசியபோது என்ன வெறி அவருக்கு! எத்தனைத் துணிவுடன் என் கன்னங்களைப் பிடித்தார்! எவ்வளவு பலமாக அழுத்தினார்!’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, ‘உம் விடுங்கள் என்னை. அந்தப்புரத்தில் வந்து என்னைத் தொட உங்களுக்கு என்ன துணிச்சல்?’ என்று இதழ்களைக் குவித்து விரித்துச் சொற்களை முணுமுணுக்கவும் செய்தாள். பிறகு அவன் எதிரேயில்லையென்பதைப் புரிந்து கொண்டு தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள். ‘வெறி அவருக்கு அல்ல, எனக்குத்தான். வெறி மட்டுமென்ன பைத்தியமும் பிடித்திருக்கிறது எனக்கு’ என்று நினைத்தாள்.

அந்த நினைப்பின் காரணமாகவோ என்னவோ எழுந்திருந்து சற்று அப்பாலிருந்த கண்ணாடிக்கெதிரில் நின்றுகொண்டு தனது முகத்தைக் கவனிக்கவும் செய்தாள். முகம் தனது பழைய முகமாகத் தெரியவில்லை பிரதாப்சிம்மனின் மகளுக்கு. அது பெரிதும் மாறிவிட்டதையும் அதிலிருந்த பழைய கம்பீரமும், துடுக்குத்தனமும், குழைவுக்கும் விவரிக்க முடியாத அடக்கத்துக்கும் வெட்கத்துக்கும் இடம் கொடுத்துவிட்டதையும் கவனித்தாள்.

விஜயகுமாரன் பிடித்த பிடியில் தனது இரு கன்னங்களும் செவ்வல்லியைவிடச் சிவந்து விட்டதைப் பார்த்த நந்தினி, ‘அவருக்கு எதற்காக இத்தனை தூரம் இடம் கொடுத்தேன்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ‘இத்துடன் நின்றதே…’ என்று எதையோ நினைக்கத்துவங்கியவள், ‘மனமே! நீ பொல்லாதவள்’ என்று மனத்துக்கும் பாடம் கற்பித்துப் பட்டென்று கண்ணாடியிலிருந்து திரும்பி மீண்டும் பஞ்சணைக்கு வந்தவள் முகப்பில் உட்காரவில்லை; திடீரென விழுந்தாள் பஞ்சணையில்.புலன்கள் எங்கோ லயித்திருந்ததால் பஞ்சணையின் மிருதுத் தன்மையையோ அதில் தூவப்பட்டிருந்த மலர்களின் நறுமணத்தையோ ரசிக்க முடியவில்லை அவளால். தலையணையில் தலையை அசைத்து, பஞ்சணைக்கு எதிரேயிருந்த சுவரில் தன் முழு உருவமும் தெரிந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன் நிலையைப் பார்த்தாள்.

யாரோ ஒரு தேவலோக மோகினி கிடப்பதுபோல அந்த நிலைக் கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. திடீரெனப் பஞ்சணையில் விழுந்ததால் ஒரு காலில் சற்று ஏறிக் கலைந்து கிடந்த சேலைப் பகுதி, அந்தக் காலின் சிவப்பையும் வழவழப்பையும் இயற்கை கடைந்திருந்த சிறப்பையும் பளீரென விளக்கு வெளிச்சத்தில் எடுத்துக் காட்டியிருந்தது. கழுத்தில் அதுவரை சுற்றிக் கிடந்த மஸ்லின் முகத்திரை மட்டுமின்றி மேலாடையின் ஒரு பகுதியும் லேசாகச் சுருண்டு விட்டதால் அவள் மார்பகங்களின் முழுப் பரிமாணமும் ஓரளவு புலனாகத் தொடங்கினாலும் ‘பிறை நுதலவன் பெண்மையெனப்படும்’ என்ற அச்சத்தினால் முழுமையும் வெளிப்படாமல் அரையுங்குறையுமாகத் தெரிந்து கொண்டிருந்தது.

ஆனால் அறைகுறையின் தூண்டுதல் எத்தனை யிருக்க முடியும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது கண்ணாடியில். அந்தச் சமயத்தில் அவள் தன்னிலையைத் தானே ரசித்துக் கொண்டாள். ‘இந்த நிலையில் அவர் பார்த்தால்…?’ என்றும் எண்ணினாள் வெட்கத்தை விட்டு. அதனால் சிரித்தாள்களுக்கென்று. பிறகு சற்றுப் புரண்டு ஒருக்களித்துப்படுத்துத் தலையை லேசாக நிமிர்த்தி எட்ட சுவரிலிருந்த ரதி மன்மத விலாசப் படத்தைப் பார்த்தாள்.

தஞ்சைக்கென்றே பெயர் போன பாணியில் வண்ணங்கள் தீட்டியும் கற்களைப் புதைத்தும் தயாரிக்கப் பட்டிருந்த அந்தச் சித்திரம் உயிருடன் துடிப்பதைப் பார்த்த அரசகுமாரி, ‘இந்தப் படத்தை இங்கு மாட்டியது தவறு’ என்று அர்த்தமில்லாமல் யாரையோ கடிந்துகொண்டாள். ஆனால் அந்தத் தஞ்சைப் படம் அவள் நெஞ்சை என்ன ஆட்டு ஆட்டி வைத்தது. விஜயகுமார மன்மதனை மீண்டும் மீண்டும் அவள் நெஞ்சுக்குள் எத்தனை முறைகள் புகுத்தி வைத்தது! என்ன என்ன கனவுகளைக் காணவைத்தது. படத்துக்குத் தன் மனத்தைப் படபடக்க வைக்கும் திறன் இருந்ததைப் பார்த்த அரசகுமாரி ஏதேதோ எண்ணியபடியே உறங்கி விட்டாள்.

அவளுக்கு உணவுத் தட்டை ஏந்தி வந்த பணிப் பெண் அவளை எழுப்ப முயன்றாள் இருமுறை. ஒருமுறை அரைவாசிக் கண் விழித்த அரசகுமாரி தனக்கு உணவு ஏதும் தேவையில்லையென்று கூறி விட்டாள். புறத்தேயிருந்த பங்கயக் கண்கள் மீண்டும் மூடின. உள்ளக் கண்கள் விரிந்தன. விஜயகுமாரனின் இரண்டாவது சபதத்தை இதயம் ஆராயத் தொடங்கியது.
இத்தகைய ஏதோ ஓர் ஆராய்ச்சியில்தான் இருந்தான் விஜயகுமாரனும் தனது அறையில். அந்தப்புரத்து முகப்பு அறையிலிருந்து தான் தங்கியிருந்த அறைக்கு வந்தவன் அங்கியைக் களையவும் இல்லை, கச்சையில் தொங்கிய வாளை அவிழ்க்கவும் இல்லை. மனத்திலிருந்த வேகத்தைக்கூடக்களைய முடியாமல் நீண்ட நேரம் அறையில் உலாவிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் முன்பு அந்தப்புரத்திலிருந்த அழகுச் சிலை தோன்றினாள்; பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தீக்குளித்த அக்கினிச் சிலையும் தோன்றினாள். அழிந்த அந்தப் பழைய சிலை அழியாத இந்தச் சிலையிடம் தன்னைக் கொண்டு விட்டதை எண்ணிப் பார்த்து விதியின் விசித்திரத்தை நினைத்து வியந்தான் விஜயகுமாரன். அதைவிட அரசகுமாரியின் தோளைப் பிடித்ததையும் கன்னங்களை நெறித்ததையும். எண்ணித் தன் உள்ளங்களையும் பார்த்துக் கொண்டான். அந்தச் சமயத்தில் அந்த இரண்டாவது சபதம் நினைவுக்கு வரவே கையை இருமுறை தட்டிக் காவலன் ஒருவனை வரவழைத்து, ”காகிதமும் எழுது கருவிகளும் எடுத்துவா” என்று பணித்தான்.

அவற்றைக் காவலன் கொண்டு வந்ததும் அறையின் கோடியிலிருந்த ஒரு மேஜை மீது கோழியிறகுப் பேனாவை மையில் தோய்த்துச் சில வரிகளைக் காகிதத்தில் விறுவிறுவெனத் தீட்டினான்: பிறகு காகிதத்தை மடித்து விலாசமும் எழுதிக் கச்சையில் செருகிக் கொண்டு, மிக நிம்மதியாகப் படுக்கைக்கு வந்து உட்கார்ந்து கைவிரல்களைப் பின்னிய வண்ணம் யோசனையில் ஆழ்ந்து விட்டதால் நேரம் ஓடியது தெரியவில்லை அவனுக்கு. உள்ளம் உவகையால் துடித்துக் கொண்டிருந்தது.

“முதல் சபதம் ஊட்டியது உக்ரத்தை. இந்த இரண்டாவது சபதம் ஊட்டியது உவகையை. உக்ரத்துக்கும் உவகைக்கும் சம்பந்தமில்லைதான். இருந்தாலும் என் உள்ளத்தில் இரண்டுக்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது” என்ற சற்று இரைந்தே சொல்லிக் கொண்டான். அப்படி அவன் உட்கார்ந்திருந்த சமயத்தில்தான் தளபதி மானாஜி அறைக்குள் நுழைந்தார்.

அவர் நுழைந்த நேரத்தில் அவன் உட்கார்ந்த நிலையை விட்டு எழுந்திருக்கவில்லை, அவர் பூனைபோல் சத்தம் போடாமல் அறையில் நுழைந்த காரணத்தால். ”எந்தக் கோட்டையைப் பிடிக்க மனக் கோட்டை கட்டுகிறாய் விஜயகுமாரா?” என்று அவர் வினவிய பின்பே தலையை நிமிர்ந்த விஜயகுமாரன், ”தாங்களா, வாருங்கள்” என்று எழுந்திருந்து தலை வணங்கினான்.

மானாஜி தமது ராட்சத விழிகளை அவன் முகத்தில் நாட்டினார். அடர்த்தியான அவரது பயங்கரப் புருவமும், மகாராஷ்டிரர் வாள்களைப் போலவே நீண்டு நுனிகளில் வளைந்து நிமிர்ந்த பெரிய மீசையும் ஒருமுறை அசைந்தன. அவரது பருத்த உதடுகள் லேசாகப் புன்சிரிப்பைக் காட்டின. “நான் கேள்வி கேட்டேனே?” என்றும் கூறினார்.

விஜயகுமாரன் இதழ்களிலும் இளநகை விரிந்தது. “இப்பொழுது தஞ்சைக் கோட்டையைப் பிடித்திருக்கிறேன். அதற்குள் இருக்கிறேன்” என்றான் அவன் உள்ளேயிருந்த உவகை சொற்களிலும் ஒலிக்க.

தளபதியும் நகைச் சுவையில் சளைப்பவராகத் தெரியவில்லை. “இன்னொரு கோட்டையும் உனக்குக் கிடைக்கப் போகிறது” என்றார் லேசாகச் சிரித்து.

”எந்தக் கோட்டை?” விஜயகுமாரன் கேள்வியில் வியப்பிருந்தது.

”மகாராஜாவே சொல்லுவார் உன்னிடம்” என்றார் மானாஜி.

”எப்பொழுது?”

‘இப்பொழுதே.”

“அப்படியானால்?”

”இப்பொழுது மகாராஜாவிடம் நாம் போகிறோம்.”

”நள்ளிரவு தாண்டி விட்டதென்று நினைக்கிறேன்.”

”ஆம்.”

“இப்பொழுது மகாராஜா.”

”உறங்கவில்லை. உனக்காகக் காத்திருக்கிறார்.”

மானாஜியின் இந்தச் சொற்களைக் கேட்ட விஜயகுமாரன் பிரமித்துப் போனான்.

”மகாராஜா உறங்குவதில்லையா?” என்று விசாரித்தான்.

‘முடி தரித்தவர்கள் யாருக்குமே உறக்கம் அபூர்வம்” என்று விளக்கிய மானாஜி, அறையை விட்டு வெளியேற முற்பட்டார்.

விஜயகுமாரன் கட்டிலில் கிடந்த தன் கைத்துப்பாக்கி யையும் எடுத்து இடையில் செருகிக் கொண்டு அவரைத் தொடர்ந்தான். சிறிது தூரம் நடந்து பழையபடி அரண்மனைப் பிரதான கட்டிடத்திலிருந்து மகாராஜாவின் ஆஸ்தான அறையை அடைந்ததும் பிரதாப சிம்மன் அவர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.
இருவரும் தலைதாழ்த்தி வணங்கியதும் மானாஜியைக் கேட்டார், மகாராஜா, ”விஜயகுமாரனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டீர்களா?” என்று.

“இல்லை” என்ற மானாஜி புன்முறுவல் செய்தார்.

தமது தளபதியின் ஒவ்வோர் அசைவுக்கும் காரணம் இருக்கும் என்பதை நீண்ட நாளாகப் புரிந்து கொண்டிருந்த மகாராஜாசற்றுச் சிந்தித்தார். பிறகு, “ஏன்?” என்று வினவினார்.

”இந்த வீரன் தங்களுக்குச் செய்தி வைத்திருக்கிறான்” என்றார் மானாஜி.

அவர் கூறியதைக் கேட்ட விஜயகுமாரனும் வியப்புத் ததும்பிய விழிகளைத் தளபதி மீது நாட்டினான். மன்னர் கேட்பதற்கு முன்பாக, ”என்ன செய்தி?” என்று வினவினான்.

ஒரு பெரிய வெடியை எடுத்து வீசினார் மானாஜி. ”அதோ, அந்தச் செய்தி” என்று அவன் கச்சையில் நீட்டிக் கொண்டிருந்த காகிதத்தைக் காட்டினார்.

அதிர்ச்சியுற்று நின்றான் பல விநாடிகள் விஜயகுமாரன். தளபதியின் கண்களிலிருந்து எதுவும் தப்புவதில்லை என்ற விஷயம் அவனுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. ”அது மன்னருக்குத் தான் என்பது தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

”கடிதத்தில் பாதி கச்சையில் நீட்டிக் கொண்டிருக்கிறது. அதில் ‘மகாராஜா’ என்ற சொல் மட்டும் விலாசப் பகுதியில் தெரிகிறது” என்று கூறி அந்த இடத்தையும் விரலால் சுட்டிக் காட்டினார் தளபதி. ”வேறு மகாராஜா யாரும் தஞ்சையில் இல்லை ” என்று சூசகமாகவும் கூறி இளநகை கொண்டார்.

அந்த இளநகை அவனுக்கு எரிச்சலை மிக அதிகமாக உண்டாக்கினாலும் அதை வெளிக்குக் காட்டாமல் கச்சையிலிருந்த கடிதத்தை எடுத்து, ”என் காணிக்கை” என்று மகாராஜாவிடம் வணக்கத்துடன் நீட்டினான்.

கடிதத்தில் நான்கே வரிகள்தான் இருந்தன. ஆனால் அந்த நான்கு வரிகள் பிரதாப் சிங்கின் மனத்தை இளக்கியிருக்க வேண்டும். ‘வீரனே நன்றி, என் வேலையைச் சுலபமாக்கிவிட்டாய். ஆனால் இந்த ஒன்று மட்டும் உன் கையிலும் இல்லை என் கையிலும் இல்லை ” என்றார் மிகவும் உருக்கமாக.

”ஏன் மகாராஜா! என் வாள் அப்படியொன்றும் சப்பையானதல்ல, என் உயிரும் அற்பமானதல்ல” என்றான் விஜயகுமாரன் உணர்ச்சி வேகத்துடன்.
மகாராஜா அறையின் ஓரத்துக்குச் சென்று சாளரத்தின் மூலம் வெளியே நீண்ட நேரம் நோக்கிவிட்டுத் திரும்பி வந்து, ”விஜயகுமாரா! என்னை இந்த அரியணையிலிருந்து யாரும் அகற்றாமல் பாதுகாப்பதாகச் சபதம் செய்திருக்கிறாய், இந்தக் கடிதத்தில். அதற்காக உன் உயிரையும் வாளையும் அர்ப்பணிக் கிறாய்” என்று கூறினார்.

‘ஆம்” என்றான் விஜயகுமாரன்.

”அரியணையில் யார் உட்காருவது என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. இந்தத் தஞ்சையை எடுத்துக்கொள். இதில் எத்தனை அரண்மனைப் புரட்சிகள் நடந்திருக்கின்றன! எத்தனை பேர் மாறி மாறி இந்த அரியணையில் உட்கார்ந்திருக்கிறார்கள்! இப்போதுகூட இதில் உட்காரஷாஹுஜி முயலவில்லையா?”

”ஆம். முயன்றால் நடந்துவிடுமா?”

”நடக்கலாம், நடக்காதிருக்கலாம். தெய்வ சித்தம் நமக்குத் தெரியாது.”

“இதில் தெய்வசித்தம் என்ன இருக்கிறது?”

விஜயகுமாரனின் இந்தக் கேள்விக்கு மகாராஜா உடனடியாகப் பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, “விஜயகுமாரா, இராமாயணம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார். விஜயகுமாரன், ”அந்த இதிகாசத்தைப் படிக்காதவன் இந்துவாக இருக்க முடியாதே!” என்றான்.

”விஜயகுமாரா! அந்தக் கதையில் தந்தையான தசரதன் யாரை அரியணையில் அமர்த்த இஷ்டப்பட்டார்?”

”ராமனை.”

”தாயான கைதேவியாரை அரச பீடமேற்ற எண்ணி வரம் கேட்டாள்?”

”பரதனை.”

“மன்னன் வரம் கொடுத்தானல்லவா?”

“கொடுத்தான்.”

”கடைசியில் அந்த இருவரும் அமரவில்லை அரியணையில். ஒரு காலணி போய் உட்கார்ந்து கொண்டது. அதற்கு நடந்தது பட்டாபிஷேகம். இந்த விசித்திரத்தை எங்காவது கேட்டிருக்கிறாயா?”

விஜயகுமாரன் மௌனம் சாதித்தான். மன்னர் அவனை அணுகி அவன் தோள்மேல் கையை வைத்தார். “விஜயகுமாரா! இது என் யுத்தியல்ல. தூப்புல் பெரியவர்* நிகமாந்த மகா தேசிகன் ‘பாதுகா ஸகஸ்ரம்’ என்ற நூலில் இப்படியொரு சுலோகம் எழுதி வைத்திருக்கிறார். தந்தைக்குப் பிரியம் ராமன் முடிசூட. பிரஜைகளுக்கும் அது சம்மதம். தாய்க்குப் பிரியம் பரதன் முடிசூட.

சத்தியவாதியான தசரதனும் வரம் கொடுத்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! இருவருக்கும் இல்லாமல் பாதுகைக்கு நடந்தது முதல் ராஜ்யாபிஷேகம். ஆகவே இறைவன் உள்ளத்தை யார் அறிய முடியும்? மனித அறிவை மீறிய விஷயமல்லவா அது?’ என்று எழுதியிருக்கிறார் அந்த மகான். அது அன்றும் உண்மை; இன்றும் உண்மை! அந்த உண்மையை இந்தத் தஞ்சை சிம்மாசனமே நிரூபித்திருக்கிறது. உலக வரலாறு நிரூபிக்கிறது.” இதைச் சொன்ன மகாராஜாவின் கண்கள் கனவுலகத்தில் சஞ்சரித்தன.

விஜயகுமாரன் மகாராஜாவின் சொற்களைக் கேட்டுப் பிரமித்து வாயைப் பிளந்து கொண்டு நின்றான். அவர் சம்ஸ்கிருத அறிவு அவனைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. அதை ஊகித்திருக்க வேண்டும் தளபதி. அதுவரை சம்பாஷணையில் குறுக்கிடாத அவர் குறுக்கிட்டு, ”மகாராஜாவின் வடமொழி அறிவுபற்றி வியப்பதற்கு எதுமில்லை. இவர்கள் பரம்பரையே சம்ஸ்கிருதப் பரம்பரை. இவர் தந்தை துகோஜி ‘ஸங்கீத ஸாரமைத’ என்ற இசைக் கிரந்தம் எழுதியிருக்கிறார். அவர் சபையிலிருந்த கனச்யாம பண்டிதர் பவபூதியின் உத்தரராம சரித்திரத்துக்கு வியாக்கியானம் எழுதியிருக்கிறார்” என்றார்.

விஜயகுமாரன் மகாராஜாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். ”மகாராஜா! எனக்குச் சம்ஸ்கிருதம் அதிகமாகத் தெரியாது. தெய்வசித்தப்படி நடப்பது நடக்கட்டும். ஆனால் நாம் நமது கடமையைச் செய்ய வேண்டாமா?” என்றான்.

”கண்டிப்பாய்ச் செய்ய வேண்டும், பலனை எதிர் பார்க்காமல். அதனால்தான், உள்னை அழைத்தேன் விஜயகுமாரா நீ இப்போதே செல் தளபதியுடன்” என்றும் உத்தரவிட்டார்.

”எதற்கு?”

”அபாய ஸ்தலத்திற்கு.”

“எது அபாய ஸ்தலம்?”

“தற்சமயம் தேவிக் கோட்டை.”

மானாஜி மகாராஜாவுக்குத் தலை வணங்கித் திரும்பினார். வெளியேற விஜயகுமாரன் தயங்கினான். சற்று மகாராஜா புன்முறுவல் கொண்டார். பிறகு கையிலிருந்த கடிதத்தைக் காட்டி, ”இதை நந்தினிக்கு அனுப்பிவிடுகிறேன்” என்றார்.

மன்னருக்கு மனோதத்துவ சாஸ்திரமும் தெரிந்திருக்க வேண்டுமென்று நினைத்த விஜயகுமாரன், ஸ்தம்பித்து நின்று விட்டான். நின்ற இடத்திலிருந்து நகராமல் மானாஜி திரும்பி, “நீ அந்தப்புரம் சென்றது மன்னனுக்குத் தெரியும்” என்று இன்னொரு பாணத்தையும் அவன் மீது வீசினார்.

Previous articleRaja Perigai Part 1 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here