Home Historical Novel Raja Perigai Part 1 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

48
0
Raja Perigai Part 1 Ch18 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch18 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 18. ” PRO REGE ET PATRIA”
(For King and Country)

Raja Perigai Part 1 Ch18 | Raja Perigai | TamilNovel.in

‘அமரர்கள் அதிபதி’ என்று தேன்தமிழில் நம்மாழ் வாராலும், ‘தேவநாதன்’ என்று வடமொழியில் ஸ்தல புராணக் காரர்களாலும் சிலாகிக்கப்பட்ட திருவஹீந்திரப் பெருமாளின் திருநாமத்தைத் தரித்து, ஆதியில் தேவநாதன்பட்டினம் என்று வழங்கி, காலத்தில் மருவி தேவாநாம்பட்டினம் என்று மகாராஷ்டிரர்களால் அழைக்கப்பட்டதும், இன்று புதுக் கடலூரை (கட்லூர் நியூ டவுனை) அடுத்து அதன் ஒரு பகுதியாய்க் கடலோரம் நிற்பதுமான புராதன நகரில், பிரிட்டிஷ்காரர்களின் தலையாயப் பாதுகாப்பு நிலையமாகவும் அரணாகவும் இருந்த ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்கு, தஞ்சையிலிருந்து தேவிக் கோட்டைக்கு விஜயகுமாரன் கிளம்பிய அதே இரவின் ஆரம்பத்தில் வாலிபனான ராபர்ட் கிளைவ் உணவும் பொதிவண்டிகளுடனும் போர்டைஸுடனும் வந்து சேர்ந்தான்.

சுற்றுலும் சுமார் 18 அடிகளுக்கு மேலிருந்த பெரும் கோட்டைச் சுவர்களால் மூன்று பக்கங்கள் சூழப்பட்டதும், மற்றொரு பக்கம் கடலலைகள் வாரி அணைத்துவிட்ட மணற் பகுதியால் பாதுகாக்கப்பட்டதும், சுவர் ஓடி வளைத்த மூன்று பக்கங்களையும் அணைந்து நின்ற ஆழமான அகழியுடனும், உயர்ந்த கோட்டைச் சுவர்கள் மீது பிரவேசிக்கக் கெடிலம் நதியை அடுத்து, புதுச்சேரியை நோக்கிக் கொண்டிருந்த பெருவாயிலுடனும் காட்சியளித்த தேவானாம்பட்டினக் கோட்டையான டேவிட் கோட்டைக்குள் நுழைந்த லெப்டினன்ட கிளைவ், பொதிவண்டிகளை மட்டும் சப்ளை ஸ்டோருக்குச் செல்லப் பணித்துவிட்டு, தான் மட்டும் போர்டைஸுடன் கவர்னர் மாளிகைக்கு நேராகச் ‘செய்ஸுை ‘ வேகமாக செலுத்தினான்.

கவர்னர் மாளிகையின் முன்புறத்துக்குச் சற்று எட்டவே வண்டியை நிறுத்த உத்தரவிட்டு, போர்டைஸைக் கீழே இறங்கச் சொல்லி, அநாயாச நடை நடந்து மாளிகையின் முதல் கட்டு வாயிலில் நின்ற ḥசோல்ஜரிடம் தான் வந்திருப்பதைக் கவர்னருக்கு அறிவிக்கும்படி உத்தரவிட்டான்.

அந்த பிரிட்டிஷ் சோல்ஜரும் என்ன காரணத்தாலோ இரவென்றும் பார்க்காமல் கிளைவின் உத்தரவைக் கேட்டதும் உள்ளே பறந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்து உள்ளே செல்லலாமெனக் கூறவே, கிளைவ் போர்டைஸுடன் மாளிகைக்குள் சென்றான்.

தாழ்ந்து வளைந்த கமான்களுடன் மிக உறுதியாகக் கோட்டை போலவே கட்டப்பட்டிருந்த ஸெய்ன்ட் டேவிட் கவர்னரின் மாளிகையில் ஒவ்வோர் இடத்திலும் பிரிட்டிஷ் சோல்ஜர்களின் பாதுகாப்பு அன்று மிக அதிகமாயிருந்ததைக் கவனித்த கிளைவ் அதற்குக் காரணத்தை அறியாவிட்டாலும், கவர்னர் ஏதோ முக்கிய மந்திராலோசனையில் அமர்ந்திருக்கிறார்.

இந்தமாளிகையில் கிளைவ்கவர்னரானபின்புவசித்தார். அதில் இப்பொழுது தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் வசிக்கிறார். அந்த மாளிகையில் கிளைவ் வசித்ததைக் குறிக்கக் கல்லொன்று புதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் உட்புறம் நடந்து சென்றான்.

இரண்டு வாயிற்படிகளைத் தாண்டியதும் ஒரு பெரிய அறை முகப்பில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியொருவர் கிளைவை எதிர் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். கிளைவைத் தொடர முற்பட்ட ரெவரண்ட் போர்டைஸைக் கையசைப் பினாலேயே நிறுத்தவும் முயன்றார். ஆனால் போர்டைஸ் கடுங் கோபத்துக்குள்ளாகி, “போர்டைஸைத் தடுக்க சுவர்னருக்கும் அதிகாரமில்லை தடுப்பவர் யாவருக்கும் பரமபிதாவின் சாபம் கிடைக்கும்” என்று ஆங்கிலத்தில் சீறினார். அது மட்டுமின்றி அந்த ராணுவ அதிகாரியை ஒரு கையால் விலக்கிவிட்டுக் கிளைவுடன் தாமும் கவர்னர் அறைக்குள் நுழைந்தார்.

கவர்னரின் மிகப் பெரிய ஆலோசனை அறையின் தன்மையே இந்த நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்கம் காலுன்றத் தொடங்கியதை நிரூபித்தது. அதன் நட்ட நடுவே இருந்த நீண்ட விரிப்பும், அந்த விரிப்பின் மீது ஐந்தாறு இடங்களில் வைக்கப் பட்டிருந்த பீங்கான் பிளேட்டுகளும், அவற்றிலிருந்த உணவு வகையறாக்களைப் பிய்த்தெடுத்து உண்ண வைக்கப்பட்டிருந்த ‘ஃபோர்க்’ க்கும் ஸ்பூன்களும், உணவுக்கடுத்தபடி விஸ்கி, ஒயின், இவற்றை அருந்த வைக்கப்பட்டிருந்த நீளக் கண்ணாடி டம்பளர்களும், மேலே பல முகங்களுடன் கீழே இறங்கியும் ஏறியும் ஜாஜ்வல்லியமாகப் பளிச்சிட்டுக் கொண்டிருந்த ‘ஷாண்டி லியர்ஸின்’ அமைப்பும், பிரிட்டிஷ் நாகரிகத்தின், ஏகாதி பத்தியத்தின் உறுதியைச் சந்தேகமின்றி விளக்கிக் கொண்டிருந்தன.

அந்த மேஜையின் தலைப்பிலிருந்து வேலைப்பாடுகள் நிறைந்த பிரிட்டிஷ் ராஜ்ய சின்னம் அமைந்த பெரிய நாற்காலியில், தூய்மையான வெள்ளை சூட்டணிந்து கவர்னர் ஃப்ளாயர் மிகக் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே மேஜையில் பெரிய டம்ளர் ஒன்றில் விஸ்கி முக்கால் பாகம் நிரம்பிச் சின்னஞ்சிறு பொரிகளை மேலே அனுப்பிக் கொண்டிருந்தது. அத்துடன் சீட்டுக் கட்டு ஒன்றும் பாதி பிரித்து வெட்டப்பட்டு இரண்டு பகுதிகளாகக் காட்சியளித்தது.

கவர்னரையடுத்து மேஜையின் இருபக்கங்களிலும் கம்பெனி போர்டு அங்கத்தினர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களையடுத்த கோடி நாற்காலிகள் இரண்டில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பருத்த சரீரமுடையவர். அவரது பெரிய தொப்பை, மேஜைக்கு அடியிலிருந்ததால் வெளியே தெரியவில்லை அவருடைய தலை பெரியதாகவும் நுதலிலிருந்த கண்கள் சிறியனவாகவும் இருந்தாலும், தலையும் கண்களும் அவர் மிக மேதாவி என்பதையும், சிறந்த போர் வீரர் என்பதையும் கூறின. இன்னொரு அதிகாரி வாலிபர். இருப்பினும் அனுபவமும் திறைமையும் உள்ளவராகத் தோன்றினார். போர்டு அங்கத்தினர் நால்வரே அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்தாலும் அவர்களைத் தீவிர சிந்தனை கவர்ந்திருந்ததை அவர்கள் முகங்கள் நிரூபித்தன.

ஆனால் மேஜையின் தலைப்பில் அக்கிராசனம் வகித்த ஆஜானுபாகுவான கவர்னர் சார்லஸ் ஃப்ளாயரின முகத்தில் எந்தவிதக் கவலையும் தெரியவில்லை . அவர் நீல நிறக் கண்கள், எதிரேயிருந்த விஸ்கி டம்ளரையும் இரண்டாக வெட்டப்பட்டிருந்த சீட்டுக் கட்டையும் நோக்கிக் கொண்டிருந்தன. சற்றுக் குடித்திருந்தாலும் கவர்னர் சிறிதும் நிதானத்தை இழக்கவில்லை யென்பதை அவர் சர்வசகஜமாகச் சீட்டு ஒன்றைக் கையிலெடுத்து நோக்கிய திடமே தெரியப்படுத்தியது.

கிளைவும் போர்டைஸும் ஆலோசனை அறையில் நுழைந்தபோது கூட உடனே தமது கண்களைத் தூக்கி அவர்களை நோக்கிவில்லை. கவர்னர் மீண்டும் நாலைந்து சீட்டுகளை எடுத்து இடக்கையில் விசிறி போல் பிரித்தார், பிறகு வாயிலிருந்து தொங்கிய பைப்பின் முகப்புக் குழாயிலிருந்து புகையை இருமுறை வெளியிட்டார். அடுத்தபடி வலக் கையில் புகைக்குழாயை எடுத்து இரண்டு விரல்களில் மடக்கிப் பிடித்துக் கொண்டு பிறகு நோக்கினார் கிளைவையும், போர்டைஸையும்.

அவர் நோக்கியதும் கிளைவ் தனது இரு கால்களையும் சட்டென்று குவித்து இரு பூட்ஸ்களிலும் ஒலி எழுப்பி மிலிடரி சல்யூட் அடித்தான். போர்டைஸ் எதற்கும் அசையவில்லை. யாரையும் லட்சியம் செய்யவில்லை. ”கிறிஸ்டியானிட்டிக்கு இவனால் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கிறது” என்று போர்டைஸ் சுட்டிக்காட்டினார்.

கவர்னர் பதில் கூறாததால் போர்டைஸ் தொடர்ந்தார் மேலே, ”என்னைத் திருச்சியில் சவுக்கால் அடிக்க வந்தான், கிறிஸ்துவின் விரோதிகளுடன், பாவிகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை உடனடியாகச் சிறையில் தள்ள வேண்டும்” என்று போர்டைஸ் வெறியுடன் கூவினார்.

கவர்னர் புகைக்குழாயை மீண்டும் வாயில் வைத்து ஒரு முறை இழுத்துப் புகையை விட்டுவிட்டு, கையிலிருந்த சீட்டுகளை நோக்கினார். பிறகு பாதிரியைப் பார்த்து. ‘ரெவரண்ட் நீங்கள் சர்ச்சுக்குச் செல்லுங்கள்” என்று மட்டும் கூறினார்.

”என் கம்ப்ளெய்ண்ட்?” என்று கேட்டார் போர்டைஸ் வெறி பிடித்த கண்களுடன்.

“பிறகு கவனிக்கப்படும்.”

“இப்போதே கவனிக்கவேண்டும். கவர்னரோ, இந்த போர்டோரெவரண்டை மிஞ்சியதல்ல.”

இதை நிதானமாகச் கேட்ட கவர்னர் பின்புறம் திரும்பினார். அங்கு நின்ற ஆங்கில ஆர்டர்லி தலைகுனிந்தார், கவர்னரின் உத்தரவைக் கேட்க. “இந்தப் பைத்தியத்தை ஏதாவது ஓர் அறையில் தள்ளிவிடு” என்றார் கவர்னர் மெதுவாக.

பிரிட்டிஷ் ஆர்டர்லி ராணுவ நடை நடந்து போர்டைஸிடம் வந்து, ”ரெவரண்ட்” என்று கேலியாகத் தலை வணங்கி விட்டு அவர் கையைப் பிடித்து, ”கமான்” என்று வெளியே இழுத்துக் கொண்டு போனான். ”விடு என்னை. பரமபிதாவின் சாபம் உங்கள் தலைமேல் விழும்” என்று கூவி மீறிய ரெவரண்டை இரும்புப் பிடியாகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஆர்டர்லி சென்றதும், கவர்னர் கிளைவை நோக்கி மேஜையின் ஓர் ஆசனத்தைச் சுட்டிக் காட்டி உட்காரும்படி சைகை செய்தார்.

ராபர்ட் கிளைவ் உடனடியாக உட்காரவில்லை . ”யுவர் எக்ஸலென்ஸி! முக்கிய செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.’ என்றான்.

கவர்னர் ப்ளாயரின் புருவங்கள் சற்று அசைந்தன. நீலநிறக் கண்கள் கிளைவை உற்று நோக்கின, செய்தியைக் கூறலாம் என்பதற்கு அறிகுறியாக, ‘எஸ்” என்று ஒரு சொல்லை மட்டும் கேள்வி கேட்கும் பாவனையில் கவர்னரின் உதடுகள் உதிர்த்தன. புகைக்குழாவை அசக்கிய வண்ணம்.

கிளைவ் கவர்னரையும் நோக்கினான், இரு ராணுவ அதிகாரிகளையும் நோக்கினான். “இங்கு ராணுவ ஆலோசனை நடக்கிறது. அதைப்பற்றித்தான் என் செய்தியும்” என்று கூறவும் செய்தான்.

”எதைப்பற்றி?” என்று தெளிவாகக் கேட்டார் கவர்னர்.

‘தேவிக்கோட்டையைப் பற்றி” என்று வெடியை வீசினான், கிளைவ்.

அதைக் கேட்ட பருத்த உடலைப் படைத்த ராணுவ மேஜரான ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ் சற்று ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”அதைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம் என்பது உனக்கு எப்படித் தெரியும் லெப்டினன்ட்?” என்று வினவினார், வியப்பால் சிறு கண்களைச் சிறிது மலரச் செய்து.

”எனக்கு மட்டும் தெரியுமென்று நினைக்க வேண்டாம். தஞ்சை ராஜ்யம் முழுவதுக்கும் தெரியும்’ என்றான் கிளைவ்.
‘’அப்படியா!” என்றார் எட்வர்ட் க்ருக் என்ற போர்ட் அங்கத்தினர்.

“இது ஸீக்ரட் (ரகசியம்) என்று நினைத்தோம்!” என்றார் வில்லியம் ஹோல்ட் என்ற இன்னோர் அங்கத்தினர்.

எதிரேயிருந்த வாலிப அதிகாரியைச் சுட்டிக் காட்டிய வெஸ் காட் என்ற இன்னோர் அங்கத்தினர், “லெப்டினன்ட் கிளைவ்! காப்டன் கோப்பைச் சந்தியுங்கள். இவர் தலைமையில் தான் தேவிக்கோட்டை தாக்கப்படும்” என்று கூற, கிளைவ் அந்த வாலிப அதிகாரியுடன் கைகுலுக்கினான்.

அந்தச் சமயத்தில் மேஜர் லாரன்ஸும் சொன்னார்; ”லெப்டினன்ட் கிளைவும் அவருடன் செல்லட்டும்” என்று.

இத்தனை சம்பாஷணையிலும் கலந்து கொள்ளாமல் இடித்த புளி மாதிரி கவர்னர் உட்கார்ந்திருநாந்தார். எல்லோருடைய சம்பாஷணையும். அடங்கியதும், ‘லெப்டி னன்ட் சொல் உனக்குத் தெரிந்ததை” என்றார் சர்வ சாதாரணமாக.

கிளைவின் கூரிய விழிகள் கவர்னரின் நீலநிற அதிகாரக் கண்களைச் சந்தித்தன. ”யுவர் எக்ஸலென்ஸி! நான் எப்படிப் பேசட்டும்! லெப்டினன்டாகப் பேசட்டுமா அல்லது தஞ்சை அரசரின் தூதனாகப் பேசட்டுமா?” என்று வினவினான், கிளைவ்.

இதைக் கேட்ட கவர்னர் சபை மெம்பர்கள் வியப்பினால் அசைந்தனர். கவர்னர் மட்டும் அசையவில்லையானாலும் அவர் முகத்தில் சிறிது கடுமை தெரிந்து. முகம் சிவக்கவும் செய்தது. ”ஒரு பிரிட்டிஷ் லெப்டினன்ட் சுதேச ராஜாவின் தூதன்” என்று வெறுப்புடன் சொற்களை உதிர்த்தார் கவர்னர். வாயிலிருந்து குழாயை எடுத்து எதிரிலிருந்த பிளேட்டில் வைத்தார் அதைப் புகையவிட்டு.

”சுதேச மன்னனாக இருக்கலாம், ஆனால் பலமான எதிரி” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ்.

கவர்னரின் நீலநிறக் கண்கள் ஈட்டிகளாயின. ஒருமுறை சபையை நோக்கினார். பிறகு கிளைவின்மீது நிலைத்தன.

”ஜென்டில் மென்! 149 வருஷங்களுக்கு முன்பு செல்லுங்கள். 16-ஆவது நூற்றாண்டின் கடைசி நாள். அதாவது 1599ஆவது ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தலைநகரில், லண்டனில் பக்கிங்காம் அரண்மனையில் ஏர்ல் ஆப் கம்பர்லாண்ட் ஜார்ஜ் பிரபு, நைட் பட்டம் பெற்ற வீரர்கள், ஆல்டர்மென், வர்த்தகர்கள் கொண்ட இருநூற்றைம்பது பிரிட்டிஷ் பிரமுகர்களுடன் நிற்கிறார். அப்போது பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் அவர்களிருந்த கூட்டத்தில் நுழைகிறார். கம்பர்லாண்ட் பிரபு மண்டியிட , மற்றவர்கள் மண்டியிட, பிரபுவிடம் ஒரு சாஸனத்தை ராணி அளிக்கிறார். அந்தச் சாஸனத்தின் மேல் ஏற்பட்டது ஈஸ்ட் இந்தியா கம்பெனி. அந்தக் கம்பெனி பிறகு வளர்ந்தது, சற்றுத் தளர்ந்தது, மீண்டும் துளிர்த்தது. இப்பொழுது விரிவடைய இருக்கிறது.

”அத்தகைய கம்பெனியின் பிரதிநிதி நான். இதோ இப்போது நாம் இருக்கும் தேவானாம்பட்டினம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. 1684 வது ஆண்டில் காப்டன் காரிகிரண்ட் இங்கும் கடலூரிலும் நாம் தொழிற்சாலைகளைக் கட்ட மகாராஷ்டிர மன்னர் ஷாஹுவிடம் அனுமதி வாங்கினார். பின்னர் ராஜாராம் ஜிஞ்ஜிகோட்டைக்கு (செஞ்சி) வந்தபோது தேவானாம் பட்டினம் கோட்டையையும் கடலூரையும் முதலில் இரண்டு லட்ச சக்கரம் கேட்டுப் பிறகு 51500 சக்கரத்துக்கு விற்றார். அந்த விற்பனை ஒப்பந்தத்தில் சார்லஸ் பார்வெல்லும் தோமேல் ஏல் என்பவரும் கையெழுத்திட்டு நமக்கு உரிமை வாங்கி வந்தார்கள்.

“இப்படிச் சிரமப்பட்டு வாங்கிய தேவானாம்பட்டணக் கோட்டையை அபிவிருத்தி செய்து ஸெய்ன்ட் டேவிட் கோட்டையாக்கினோம். இந்தக் கோட்டை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வித்து. இதனருகே அட்மிரல் போஸ்கவானின் கடற்படையின் ஒரு பகுதி கடலில் புரப்படத் தயாராயிருக்கிறது. இதோ கேப்டன் கோப்பின் தலைமையில் இயங்க நிலப்படை தயாராயிருக்கிறது” என்று விளக்கிய கவர்னர் மிகுந்த கம்பீரத்துடன் ஆசனத்தில் நிமிர்ந்து உட்காரவும் செய்தார். ”இந்தப் படையெடுப்பு நிற்காது” என்று அறிவிக்கவும் செய்தார்.

கிளைவ் பதில் சொல்லவில்லை, சில விநாடிகள். “இத்தனையும் ஒரு பிரிடெண்டருக்காக” என்று கடைசியாகச் சொன்ன பதிலில் வெறுப்பிருந்தது.

”ஸவாய் ஷாஹுஜி பிரிடெண்டரல்ல. சரியான வாரிசு. பிரதாப்சிங் தஞ்சையைச் சூதினால் கைப்பற்றியிருக்கிறார்” என்றார் கவர்னர் உஷ்ணத்துடன்.

”யுவர் எக்ஸலன்ஸி! இதில் நாம் தலையிட வேண்டிய அவசியம்?” என்று வினவினான் கிளைவ்.

கவர்னர் உடனடியாகப் பதில் சொல்லாமல் தம் எதிரே யிருந்த விஸ்தி பாட்டிலை எடுத்து, பின்னாலிருந்த பட்லரிடம் கொடுத்தார். பட்லர் எல்லாருக்கும் டம்ளர்களில் விஸ்கியை ஊற்றினான். கவர்னர் ப்ளாயர் பிறகு தமது நாற்காலியை விட்டு எழுந்திருந்து விஸ்கி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார். மற்றவர்களும் ஆசனங்களிலிருந்து எழுந்து, கையில் டம்ளர்களை எடுத்துக் கொண்டனர். அந்த நிலையில் கிளைவை நோக்கிக் கேட்டார், ”லெப்டினன்ட்! அவசியத்தைக் கேட்டாயல்லவா?” என்று.
ஆமாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான் கிளைவ்.

கையிலிருந்த டம்ளரைச் சற்றுத் தூக்கிய கவர்னர், “லெப்டினன்ட்! நாம் இங்கிருப்பது வர்த்தகத்துக்கு மட்டுமல்ல, பிரிட்டிஷ் சக்தியை உயர்த்துவதற்கும்கூட. அதனால்தான் தேவிக்கோட்டை மீது படை யெடுக்கிறோம்” என்று கூறிவிட்டு, ”ஜெண்டில்மென்! ப்ரோ ரெஜி எட் பாட்ரியா” என்று சொல்லி விஸ்கியை உறிஞ்சினார். மற்றவர்களும் அந்த வாக்கியங்களைச் சொல்லி உறிஞ்சினார்கள். பெரிய அனர்த்தத்துக்கு அடிகோலப் பட்டதைக் கிளைவ் உணர்ந்தான்.

Previous articleRaja Perigai Part 1 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here