Home Historical Novel Raja Perigai Part 1 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 1 Ch19 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch19 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 19. அதிர்ஷ்டச் சீட்டு!

Raja Perigai Part 1 Ch19 | Raja Perigai | TamilNovel.in

‘ப்ரோ ரெஜி எட் பாட்ரியா.’ அதாவது மன்னருக்கும் நாட்டுக்கும்’ என்று உணர்ச்சி கோஷம் எழுப்பி, கவர்னர் உறிஞ்சியது போலவே கிளைவும் விஸ்கியை உறிஞ்சினானாலும் அவன் மனத்தில் சந்துஷ்டி சிறிதும் இல்லை. பிரிட்டிஷ் மன்னருக்கும் தாய் நாடான பிரிட்டனுக்கும் சிறப்புண்டாக்கத் தக்க எந்தப் பணியிலும் வாலிபனான கிளைவ் இறங்கத் தயாராக இருந்தாலும், தேவிக்கோட்டை படையெடுப்பு அத்தனை சுலபமல்ல வென்றும், பிரதாப் சிங் போன்ற அறிவாளியான ஒரு மன்னன் பிரிட்டிஷ் பக்கம் இருப்பதே பிரிட்டனுக்கு லாபமென்றும் அவன் கருதியதால், அவன் முகத்தில் தீவிர சிந்தனையும் உற்சாகமில்லாத வெறுப்பு கலந்த ஒரு சாயையும் படர்ந்து கிடந்தன. அதைக் கவர்னரும் கவனித்தார். அவ்விருவரில் மேஜர் லாரன்ஸ் கேள்வி எதுவும் கேட்காவிட்டாலும் கவர்னர் மட்டும் விஸ்கி டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டுக் கேட்டார், ‘லெப்டினண்ட்! உங்களுக்கு இந்தப் படையெடுப்பில் அவ்வளவு உற்சாகம் இல்லைபோல் தெரிகிறது. காரணம் சொல்ல முடியுமா?” என்று.

கிளைவின் கண்கள் கவர்னரின் நீலநிறக் கண்களைத் தைரியத்துடன் சந்தித்தன. “நமது மன்னரின் சிறப்பையும் நாட்டின் சிறப்பையும் ஓங்கச் செய்ய இப்பொழுது சபதம் செய்தோம். அந்தச் சபதத்திற்கு உயிரைக் கொடுக்க ஒவ்வொரு பிரிட்டிஷ் பிரஜையும் கட்டுப்பட்டவன். ஆனால் சபதம் நிறைவேறக் கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று கிளைவ் சிறிதும் அச்சமின்றிப் பதில் கூறினான்.

கவர்னர் ஆசனத்திலமர்ந்து மீண்டம் புகைக்குழாயை வாயில் வைத்துக் கொண்டார். அதில் பக்கத்திலிருந்த வெள்ளிக் குப்பியிலிருந்த புகையிலையையும் சிறிது அடைத்துப் பற்ற வைத்துப் புகையை வெளியே ஊதினார். இதற்குப் பிறகு கேட்டார், ‘ஏன் நமது சபதம் நிறைவேறாது?” என்று.

கவர்னர் ஆசனத்தில் அமர்ந்தவுடன் மற்றவர்களும் ஆசனத்தில் அமர்ந்துவிட்டாலும் கிளைவ் மட்டும் உட்காரவில்லை. அவன் முகத்திலிருந்த வெறுப்பும் மறையவில்லை. கையிலிருந்த டம்ளரை மேஜைமீது வைத்து போதுகூடச் சிறிது சத்தத்துடனேயே வைத்தான். அவன் உதடுகள் மெல்ல அசைந்தன. “உங்கள் படையெடுப்பு மந்திராலோசனை என்று நடந்தது?” என்று வினவினான் மெள்ள.

”நேற்று…” கவர்னர் பதில் அலட்சியமாக உதிர்ந்தது; புகைக்குழாயும் அதனால் உதடுகளில் அசைந்தது.

”அதாவது ஏப்ரல் 10-ஆம் தேதி?” என்று கேட்டான் கிளைவ்.
”ஆம்” என்றார் கவர்னர்.

”அதன் பிரதியைப் பிரதாப் சிங் மறுநாளே என்னிடம் காட்டுகிறார். இதிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“நம்மிடை யாரோ ஒற்றின் இருக்கிறான்.”

”சந்தேகம் இல்லை. அந்த ஒற்றனும் கவர்னரின் வெகு சமீபத்தில் இருக்கிறான். ஏனென்றால் கவர்னர் உபயோகிக்கும் காகிதத்திலேயே அந்தப் பிரதி எடுக்கப்பட்டிருக்கிறது. நமது நடவடிக்கைகளை முழுதும் அறிந்த தஞ்சை மன்னன் நமது படையெடுப்பைச் சமாளிக்க முன்னதாக நடவடிக்கை எடுத்திருக்க மாட்டானென்று நினைக்கறீர்களா?’ என்று கேட்ட கிளைவ் மேலும் சொன்னான்: “இந்த ஷாஹுஜி போலியென்று பிரதாப்சிங் சொல்லுகிறார். இவரை நம்பிப் போரில் இறங்குவது நமக்கு உசிதமல்லவென்றும் என்னைச் சொல்லச் சொன்னார். மகாராஷ்டிர சாம்ராஜ்யத் தலைநகரான ஸதாராவிலிருந்து விடுதலை யடைந்துள்ள சந்தா சாகேப் பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்திருப்பதால் நமது பலம் துர்ப்பலமென்றும் தமது நட்பே நமக்கு நல்லதென்றும் தஞ்சை மன்னர் கூறுகிறார். இதில் அதிகத் தவறில்லையென்று எனக்குத் தோன்றுகிறது.”

கவர்னர் இதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை. மேஜர் லாரன்ஸே பதில் சொன்னார். ”பிரதாப் சிங்கின் பலம் அதிகம் இல்லையென்பது நமது நம்பிக்கை. ஷாஹுஜி தஞ்சை நோக்கி வருகிறார் என்று தெரிந்தால் உடனடியாகத் தஞ்சை சைன்னியத்தின் ஒரு பகுதியும், தஞ்சை சம்ஸ்தான பிரபுக்கள் பலரும் ஷாஹுஜியுடன் சேர்ந்து கொள்வார்கள். தவிர மந்திராலோசனை நடந்தது நேற்றே ஆனாலும் நிலப்படையின் பெரும் பகுதி முன்னதாகவே வெள்ளாற்றங்கரையை நோக்கி அனுப்பப்பட்டிருக்கிறது. இங்குள்ள கடற்படை காலையில் புறப்பட்டு விடும். அப்படையில் நிலப்படைக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் பீரங்கிகளும் வருகின்றன. காப்டன் கோப் மீதியுள்ள சிறுபடையுடன் இன்றிரவே கிளம்புகிறார். அதுமட்டு மல்ல. உதவிக்கு வரும் கப்பல்கள் பலமானவை. இவற்றில் உணவு சப்ளை கப்பல்கள் இரண்டைத் தவிர • அப்போலோ என்ற சிகிச்சை மருந்துகளும் கருவிகளும் தாங்கிய கப்பலும், பெம்ப்ரோக் என்ற 60 பீரங்கிக் கப்பலும், 74 பீரங்கிகளை உடையதும், அட்மிரல் போஸ்கவானின் கொடியைத் தாங்கியிருப்பதுமான நாமூர் என்ற பெரும் போர்க் கப்பலும் இருக்கின்றன. ஆகவே வெற்றியைப்பற்றிச் சந்தேகமில்லை” என்று விளக்கினார் மேஜர் லாரன்ஸ்.

கிளைவ் மேஜர் லாரன்ஸை நோக்கித் திரும்பினான் கம்பீர மாக. “இவ்வளவு பலம் இருக்க இந்த ஸவால் ஷாஹுஜி என்ற காட்டுராஜாவின் தயவு நமக்கு எதற்கு?” என்று வினவினான்.

இதற்குக் கவர்னர் பதில் சொன்னார். ”உண்மையில் இத்தனை பலம் தேவையில்லை. தஞ்சைப் பகுதிக்குள் நுழையுமுன்பே சிதம்பரத்தில் ஷாஹுஜியுடன் தஞ்சைப் படையின் ஒரு பகுதியும் பிரமுகர்களும் வந்து கலந்து கொள்வார்கள்.”

”அதனால்?

“ஷாஹுஜி மன்னராகிவிடுகிறார். தேவிக் கோட்டையையும் சுற்றுப்புறங்களையும் நமக்களிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். போர் ஏற்பட்டால் அதற்கான செலவையும் தந்துவிடுவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.”

இதைக் கவர்னர் திடமாகச் சொல்லவில்லை. அவர் குரலில் வேறு ஏதோ பொருள் புதைந்து கிடப்பதாகத் தோன்றியது கிளைவுக்கு. ”ஷாஹுஜிக்கு அத்தனை சொல்வாக்கு இருக்கு மானால் நாம் இத்தனை படைபலத்துடன் ஏன் செல்ல வேண்டும்?” என்று மீண்டும் வினவினான்.

சாதாரண லெப்டினண்டுக்குக் கவர்னர் பதில் சொல்ல அவசியமில்லைதான். ஆனால் புதுச்சேரி போரில் போஸ்கவானிடம் சேவை செய்தபோது கிளைவ் காட்டிய வீரமும், உணவுப் பொருள் பொதி வண்டிகளை எந்தவிதச் சங்கடமுமில்லாமல் கொண்டு வந்து சேர்த்த அவன் திறனும் கவர்னருக்கும் மேஜர் லாரன்ஸுக்கும் அவனிடம் அதிகப்படியான பாசத்தை உணடாக்கியிருந்தபடியால் கவர்னர் உரையாடலை மேற்கொண்டு நடத்தினார். ஆனால் இம்முறை அவர் நேர்முகமாகப் பேசாமல் விஷமமான பாணியில் திரும்பி, ”மேஜர் லாரன்ஸ்! ஷாஹுஜி ஏன் நமக்கு அவசியம்?” என்றார்.

மேஜர் லாரன்ஸும் கவர்னர் பாணியைப் பின்பற்றி, ”தேவிக்கோட்டை அவசியம்” என்றார்.

”காரணம்?” கவர்னர் ஒற்றைச் சொல் கேள்வியை வீசினார்.

”மசூலிப் பட்டணத்திலிருந்து கேப் காமரின் (குமரிமுனை) வரை தேவிக் கோட்டையைப் போல் வசதியுள்ள கோட்டை கிடையாது. அதன் சுற்றுப்புறங்கள் செழிப்பானவை. நமது வர்த்தகத்துக்கு வேண்டிய லினன் உற்பத்தித்தறிகள் அதைச் சுற்றித்தான் இருக்கின்றன. தேவிக்கோட்டையை அடுத்த துறைமுகம்போல் ஏற்றுக் கொள்ளத் தக்க துறைமுகம் எதுவும் கிழக்குக் கடற்கரையில் கிடையாது” என்றார் ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ்.

‘’அந்தக் கோட்டை கொள்ளிடத்தின் முகத்துவாரத்தில் இருகிறதல்லவா?”

“ஆம்.

”அதன் முகத்துவாரம் அடிக்கடி மணல் தட்டி அடைத்து விடுகிறதே”

”உண்மை. ஆனால் அந்த மணலுக்குக் குறுக்கே பெரிய ஆழமான வாய்க்கால் ஓடுகிறது. அதில் பெரும் கப்பல்கள் வர முடியும். சற்றுச் சிரமப்பட்டு மணற் பகுதியை வெட்டி விட்டால் இன்னும் வசதி அதிகம். அதற்கு இணையான துறைமுகம் இந்தக் கரையோரத்தில் எதுவுமே இல்லை .”

“இது கிடைத்துவிட்டால்?” “பிரிட்டன் இந்தியக் கீழைக் கடற்கரையின் அதிபதி.”

இதற்குப் பிறகு கவர்னர் பேசவில்லை. மேஜர் லாரன்ஸின் பேச்சை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சிச் சாயை படர்ந்தது. சற்றுப் பொறுத்து, ‘மேற்கொண்டு கேள்வி ஏதாவது உண்டா?” என்று வினவினார் கிளைவை நோக்கி.

கிளைவுக்கு விஷயம் திட்டவட்டமாகத் தெரிந்தது. கவர்னருக்கும் போஸ்கவானுக்கும் காட்டுராஜாவைவிட தேவிக் கோட்டை மீதுதான் அக்கறையென்றும், கோட்டையைப் பிடிக்க ஷாஹுஜியை ஒரு சாக்காகவே அவர்கள் உபயோகப் படுத்துகிறார்களென்றும் புரிந்து கொண்டான். இருப்பினும், அதே சமயம் அவன் கண் முன்பு வீரனான பிரதாப் சிம்மனின் கம்பீர முகமும் எழுந்தது.

தஞ்சை மன்னர் அந்தத் திட்டத்தைக் குறித்து நகைப்பதாகக் கூடக் கிளைவுக்குத் தோன்றியது. இருப்பினும் பிரிட்டனுடைய நன்மை, கீர்த்தி இவை முக்கியமாக அவன் மனத்தில் எழுவே, அவன் முகத்தில் பெரும் கனவுச் சாயை படர்ந்தது. தேவிக்கோட்டை கிடைத்தால் கர்நாடக ராஜ்யம் பிரிட்டனின் கைக்குள் சிக்குவது சாத்தியம் என்ற நினைப்பு மற்ற நினைப்புகளைச் சிதறடித்தது.

பிரிட்டிஷ் கொடி தேவிக் கோட்டை மீதும் ஆற்காட்டுக் கோட்டை மீதும் பறப்பதாக மனக்கண்ணில் தோன்றியது. அதனால் முகத்தில் வெறுப்பு மறைந்து மந்தகாசம் மலர்ந்தது. தன் இடையிலுள்ள கத்தியின் மீது கையை வைத்தான் கிளைவ்.

அவன் முகத்தின் மாறுதலையும், வாளின்மீது அவன் கை அமர்ந்ததையும் கவனிக்கத் தவறாத கவர்னர் ஃப்ளாயர், ”லெப்டினண்டும் இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்ள இஷ்டப்படுவதாகத் தெரிகிறது” என்றார்.

”சரியான பிரிட்டிஷ் சோல்ஜரின் சகஜமான அபிலாஷை தானே அது” என்றார் மேஜர் லாரன்ஸும் விஷமமாக.

கவர்னர் தமது வாயிலிருந்து புகைக் குழாயை எடுத்து எதிரிலிருந்த தட்டில் வைத்தார். பிறகு சீட்டுக் கட்டை எடுத்துக் கலந்தார். ‘கிளைவ் உன் அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறதென்று பார்க்கிறேன். சீட்டை நகர்த்துகிறேன். ஒன்றை எடு. அது ஸ்பேட் ஏஸாயிருந்தால் நீ காப்டன் கோப்புடன் சிவிலியனாக (சாதாரண பிரஜையாக) அலுவல் புரியலாம்” என்று கூறிச் சீட்டுக்களைப் பரபரவென்று நகர்த்தினார். கிளைவும் அவர் சொற்படி ஒரு சீட்டை சட்டென்று உருவினான். கவர்னர் மீதிச் சீட்டுகளை மேஜைமீது போட்டுவிட்டு அந்தச் சீட்டை வாங்கிப் பார்த்தார். ”கிளைவ் நீ அதிர்ஷ்டசாலி ஸ்பேட் எஸ் கிடைத்திருக்கிறது உனக்கு. பிரிட்டனின் எதிர்காலம் உன்னால் நிர்ணயிக்கப்படும்” என்று கூறி மற்றவர்களுக்கும் சீட்டைக் காட்டினார்.

கிளைவின் இதழ்களில் புன்னகை அரும்பியது. கவர்னருக்குச் சீட்டுத் தந்திரங்கள் தெரியுமென்பதும் தான் கைவைக்கும் இடத்தில் ஸ்பேட் ஏஸை அவரால் நகர்த்த முடியுமென்பதும் கிளைவுக்குத் தெரிந்திருந்தபடியால், அந்தப் படையெடுப்பில் தன்னை இணைக்க அவர் முன்னமே தீர்மானித்திருந்தாரென்பதை உணர்ந்து கொண்டான். இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல் மேஜர் லாரன்ஸைப் பார்த்தான்.

   ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்த உதவாக்கரை ரௌடிகளாயிருந்த வெள்ளையரைக் கொண்டு வீரமுள்ள படையொன்றை உருவாக்கிய ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸும் விஷயத்தைப் புரிந்து கொண்டு புன்னகை பூத்தார்.

கிளைவ் கடைசியாகக் காப்டன் கோப்பை நோக்கித் தலை தாழ்த்தி, “நான் எப்பொழுது புறப்பட வேண்டும்?” என்று கேட்டான்.

”நௌ (இப்பொழுதே)” என்ற காப்டன் கோப் ஆசனத்தை விட்டு எழுந்தான்.

அத்துடன் ஆலோசனை முடிந்ததென்பதைக் குறிப்பிட கவர்னர் கையை அசக்கியதால், கிளைவும் காப்டன் கோப்பும் சபைக்குத் தலைவணங்கி வெளியே சென்றனர். தனக்குப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துவிட்டதென்ற எண்ணத்துடனும், தேவிக் கோட்டை அப்பொழுதே பிடிப்பட்டுவிட்டது என்ற உற்சாகத்துடனும் காப்டனுடன் நடந்தான் கிளைவ்.

ஆலோசனை அறைக்கு வெளியே வந்ததும் காப்டன் கோப், கிளைவை நோக்கி, ‘லெப்டினண்ட் நீ இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்” என்றான்.

‘தேவையில்லை. இப்பொழுதே புறப்பட நான் தயார்” என்றான் கிளைவ்.

கிளைவின் உற்சாகத்தைக் கண்ட காப்டன் கோப் நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறாய் ” என்று சுட்டிக் காட்டினான்.

”அதிர்ஷ்டம் அலுப்பைக் கலைத்துவிட்டது” என்றான் கிளைவ்.

அப்பொழுதே இருவரும் புறப்பட்டார்கள். கோட்டையிலிருந்த சிறு படையுடன் துரிதமாகப் புரவிகளில் பயணம் செய்து பெரும் படை தங்கியிருந்த வெள்ளாற்றங்கரைக்கு மறுநாள் மாலை வந்து சேர்ந்தார்கள்.

அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டே பயணம் செய்த கிளைவ் எதிரேயிருந்த படைகளின் கூடாரங்களைக் கண்டு பெருமிதம் அடைந்தான். ஆனால் அவன் நினைத்தபடி அதிர்ஷ்டம் வேலை செய்யவில்லை. நிகமாந்த மகா தேசிகனின் கலோகம் வெகு துரிதமாக வேலை செய்தது. கிளைவையும் கோப்பையும் அந்தப் படையையும் எதிர்பாராத பிரளயம் வளைத்துக் கொண்டது.

Previous articleRaja Perigai Part 1 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here