Home Historical Novel Raja Perigai Part 1 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

100
0
Raja Perigai Part 1 Ch2 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 1 Ch2 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 2. காணாத கண்

Raja Perigai Part 1 Ch2 | Raja Perigai | TamilNovel.in

சோழன் கரிகாலன் காலத்திற்கு முன்பாகவே ரோமாபுரி அழகிகளின் மனத்தையும், அம் மாநகரின் பணத்தையும் ஒருமிக்கக் கவர்ந்ததால் உலகெலாம் இணையற்றதெனப் புகழ் பெற்ற தமிழகத்தின் மிக மெல்லிய மஸ்லின் துணியால் முக்காடிட்டிருந்தபோதே அதற்குள் பரிமளித்த பாவையின் பால்வதனம், அந்த முக்காடு நீக்கப்பட்டதும், வெண்மேகத்தின் அரைகுறைத் திரையிலிருந்து வெளிவந்த பூர்ண சந்திர பிம்ப மெனக் காட்சியளித்ததன்றி, சந்திரனுக்கும் சுடும் சக்தி உண்டென்பதை நிரூபிக்கும் வகையில் கண்கள் கனலைக் கக்கியதால், முகமும் நன்றாகச் சிவந்து சந்திரனும் காலைச் சூரியனாக முடியும் என்பதை எடுத்துக் காட்டவே, அவளுடன் கூட வந்த அமைச்சர் மட்டுமின்றி, அரங்கன் சந்நிதி கைங்கர்யபரர்கள் இரண்டு பேரும் பெரும் அச்சத்திற்கு இலக்காகினர்.

அந்த இரு கைங்கர்யபரர்களின் கைகள் மட்டும் நடுங்காதிருந்திருந்தால் அவர்களுக்கும் சந்நிதியின் கதவுகளுக்கு அக்கம்பக்கத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த இரண்டு துவாரபாலகர்களின் சிலைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அமைச்சரும் சரி, அந்த இருவரும் சரி, முக்காட்டை விலக்கிய பாவையின் முக அக்னியை எப்படியாவது அணைக்க வேண்டுமென்று சிரமப்பட்ட சமயத்தில் சந்நிதிக்கெதிரே மண்டியிட்டு வணங்கிய வாலிபன் ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்ததாலும், அவன் முணுமுணுத்த சொற்கள் அவர்கள் காதில் விழந்ததாலும் அவர்கள் நா அடியோடு கட்டுப்பட்டுக் கிடந்தது.

இத்தனைக்கும் அந்த வாலிபன் தீனமான குரலில்தான் சொற்களை முதலில் முணுமுணுத்தான். முணுமுணுத்த சொற்களும் வேதம் தமிழ் செய்த மாறனின் ஆரம்பப் பாசுரமாயிருந்தும், ‘உயர்வற உயர் நலமுடையவன். எவன் அவன்’ என்ற ஆரம்பப் பாசுரத்தின் ஆரம்ப வரியாலேயே, மனுஷ்யானந்தம் பிரும்மானந்தம் என்ற ஆனந்தங்களை அளவெடுத்தும் ஆண்டவன் சங்கல்பத்தை அறியமுடியாததால் ‘யதோவாசோ நிவர்த் தந்தே’ என்று வடமொழி வேதங்கள் திரும்பிவிட்ட போதிலும், அவனுடைய குணப் பிரபாவத்தை நிர்ணயித்துவிட்ட தமிழ் மறையின் முதல் அடியையும் அடுத்த அடிகளையும் மெல்ல பய் பத்தியுடன் அவன் சொல்லிய போதிலும், அவன் குரல் மிக இனிமையாயிருந்த போதிலும், அவை எதிலும் ஈடுபட மறுத்த அந்தப் பெண் தன் வாலிப வேகத்தாலும், தன் ஆணையையும் மீறி ஒரு வாலிபன் அங்கு வந்துவிட்டானென்ற சினத்தாலும், இடக்காலை லேசாக அசைத்தாள், சந்நிதிக்கு எதிரிலிருந்த மண்டபத்தின் தூணை ஒரு கையால் லேசாகத் தொட்ட வண்ணம். வாலிபனின் இருப்பும் தீனசுரமுமே அவளுக்கு அத்தனை சினத்தை உண்டாக்கியதென்றால், அடுத்து அவன் அந்த மண்டபமே அதிரும்படி கிளப்பிய கூச்சல் அவளைத் திக்பிரமை யடையச் செய்ததன் விளைவாக அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

அந்த வாலிபனின் தீனசுரம் இடியென மாறும் என்பதையோ, அதில் மறையின் ஆரம்பப் பாசுர முடிவில் ‘துயரறு சுடரடி’ களைத் தொழுது எழவேண்டியவன், எழாமலே மிகப் பயங்கரமான கூச்சலைக் கிளப்புவான் என்பதையோ அறியாத அமைச்சரும் கைங்கர்யபரர்களும் கிலியின் உச்சத்தை அடைந்தார்கள்.

“பிரபு! எந்தத் திருவடிகளைத் தொழுதால் இகபர சித்திகள் கிடைக்குமென்று பெரியவர்கள் கூறுகிறார்களோ அந்த உன் திருவடியின் ஆணையாகச் சொல்கிறேன். என் அன்னையைக் கொன்றவனை, அவளைத் தீயிட்டுத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிய அந்த அரக்கனை, நவாபை, அவன் தலையை இதோ கிடக்கும் இந்த வாளால் தூண்டித்து உன் சந்நிதிக்கு எடுத்து வருகிறேன். இதோ என் முன் கிடப்பது வாளானால், நான் வீரனானால், இந்த வாளின் மீது ஆணை. இந்தச் சபதத்தை நான் நிறை வேற்றுகிறேன். அதை நிறைவேற்ற உன் கருணைக் கண்கள் என் மீது திரும்பட்டும். எல்லா உலகங்களையும் ஆட்டிப் படைக்கும் உன் சக்தியின் ஒரு திவலை இந்த உடலுக்குள் சிறிது காலமாவது இயங்கட்டும். அருள் செய். பக்தனைக் கைவிட்டான் அரங்கன் என்ற அவச்சொல்லுக்கு ஆளாகாதே. அவனைக் கொன்றே தீருவேன், உன் துணையால். இது சத்தியம், இது சத்தியம்” என்ற சொற்களை மிக இரைந்து கூவினான் அந்த வாலிபன்.

சந்நிதிக்கு எதிரேயிருந்த மண்டபத்தின் தூண்களிலும், கண்ணாடியறைக் கதவுகளிலும் மண்டபக் கூரையிலும் அந்தச் சொற்கள் தாக்கியதால் ஒவ்வொன்றும் பயங்கரமாக எதிரொலி செய்தன. ‘இது சத்தியம்’ ‘இது சத்தியம்’ என்ற கடைசிச் சொற்கள் உச்சஸ்தாயிக்குப் போய்விடவே துவாரபாலகர்கள்கூட அச்சத்தால் சிறிது அடங்கியதாகத் தோன்றியது, அங்கிருந்த மற்றவர்களுக்கு. சந்நிதி வாயிலில் எரிந்துகொண்டிருந்த இரு தீபங்கள் சந்நிதியின் தங்கக் கதவுகளிலும் துவாரபாலகர்களிலும் பிரதிபலித்ததால் ஏற்பட்ட ஒளியில் கூடப்பெரும் சினமும் தீட்சண்யமும் தெரிந்தன.

‘என்ன துணிவுடன் அந்த வாலிபன் யாரும் அறியாமல் கோவிலுக்குள்ளே, அதுவும் மண்டபத்துக்குள்ளே வந்திருக்க வேண்டும்? அமரரும் அரவம் செய்ய அஞ்சும் அரங்கன் சந்நிதிக்கெதிரே கூச்சலிட என்ன துணிவு இருக்கவேண்டும்?’ என்னும் கேள்விகளை உள்ளூறக் கேட்டுக் கைங்கர்யபரர்கள் நடுங்கிக்கொண்டு நின்ற சமயத்தில், முக்காட்டைத் திறந்த முக சந்திரபிம்பம் குங்குமச் சிவப்பாக மாறிய சமயத்தில், அமைச்சரின் கை, வாளுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில், அந்த வாலிபன் தனது சபதம் முடிந்ததற்கு அறிகுறியாக வாளைக் கச்சையில் கட்டிக்கொண்டு திரும்பிய பிறகே, வேறு சிலரும் அந்த மண்டபத்தில் இருப்பது அவனுக்குத் தெரிந்தது. அப்படித் தெரிந்த பின்பும், அமைச்சர் வாளை உருவ முற்பட்டதைக் கண்டும், சிறிதும் அச்சமற்ற அவன் கண்கள் எதிரேயிருந்த நால்வரையும் ஒருமுறை அளவெடுத்துவிட்டு முடிவில் தூணைத் தொட்டு நின்ற மலர்க்கரத்தின் மீதும் அந்த மலர்க்கரத்துக்கு உடையாளின் முகத்தின்மீதும் நிலைத்தன.

தன் பார்வை விழுந்தவுடனேயே அந்தப் பாவையின் கண்கள் அஞ்சுமென்றோ, நாணத்தால் தரையை நோக்குமென்றோ அந்த வாலிபன் நினைத்திருந்ததால் ஏமாந்தே போனான். அவள் கண்கள் அப்பொழுதும் சினத்துடன் அவனை நோக்கின. தூணைத் தொட்ட கையின் காரணமாகவும், மேலேயிருந்த பாரத்தின் காரணமாகவும் துவண்ட இடை வளைந்து கிடந்ததால், அரங்கனுக்கு யாரோ புது மன்னன் ஒருவன் புத்தழகுச் சிற்ப மொன்றை அந்த மண்டபத்தில் கொண்டுவந்து வைத்து விட்டது போல் இருந்தது அவள் நின்ற நிலை. அவள் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு வயது பதினாறுக்குமேல் இருக்க முடியாதென்பதை அந்த வாலிபன் தீர்மானித்துக் கொண்டான். அவள் நின்ற அதிகார தோரணையிலிருந்தும் எரித்து விடுவதுபோல் தன்னைப் பார்த்ததிலிருந்தும் அவள் கழுத்தில் தெரிந்த மாணிக்க ஆபரணத்திலிருந்தும், அவள் பக்கத்தில் சற்று எட்ட நின்றவரின் பயபக்தியிலிருந்தும், அவள் அரச குலத்தவள் என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்ட அந்த வாலிபன், முன்பின் தெரியாத பெண்களை வெறித்துப் பார்ப்பது, அதுவும் சந்நிதிக்கெதிரே அபசாரப்படுவது தகாது என்ற சிந்தனையால் தன் பார்வையை அமைச்சரை நோக்கித் திருப்பினான்.

அமைச்சரின் தீர்க்கமான நாசியிலிருந்தும், அவரை அடுத்த கைங்கர்யபரர் ஒருவர் பிடித்துக்கொண்டிருந்த வட்டத் தலைப்பாகையிலிருந்தும், அவர் நெற்றியில் குறுக்கே தீட்டியி ருந்த மூன்று மெல்லிய சிவப்புக் கோடுகளிலிருந்தும், அந்தக் கோடுகளின் முனைகள் இரண்டு கோடுகளால் இணைக்கப்பட்டிருந்ததிலிருந்தும், அவர் ஒரு மகாராஷ்டிரப் பிரபுவென்பதை அறிந்து கொண்ட வாலிபன், அவர் இடையில் வாளிருந்ததைக் கண்டதும், சிறிது குழப்பத்தை அடைந்தான். அந்தக் குழப்பத்தை அவரும் கவனித்திருக்க வேண்டும். ஆகவே ”என்ன விழிக்கிறாய்?” என்று வினவினார் கோபத்துடன்.

வாலிபன் இதழ்களில் முதல் முதலாகப் புன்முறுவல் அரும்பியது. ‘விழிக்கவில்லை. வியப்படைந்தேன்!” என்றான் மிக மிருதுவான குரலில்.

வாலிபனை அமைச்சர் உற்று நோக்கினார். அவனுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டார். அவனுடைய உதட்டின் மேலிருந்த அரும்பு மீசையாலும் முகத்தின் இளமையாலும், அவன் அதிக உயரங்கூட இல்லாததாலும் சிறு பையன் என்றுகூடச் சொல்லாம் என்று தீர்மானித்தார். ஆனால் அவன் நீண்ட கைகளும், பாதம் வரையில் தொங்கிய வளைந்த வாளும், தீட்சண்யமான கண்களும் அவன் வயதில்தான் குழந்தையே தவிர, தீரத்தில் இல்லையென்பதை உணர்ந்து கொண்டார். கொஞ்சம் நஞ்சமிருந்த சந்தேகத்தை அவன் கச்சையின் குறுக்கே செருகியிருந்த நீண்ட கைத்துப்பாக்கி நீக்கிவிட்டது. உறுதியாக நின்ற அவன் கால்கள் சதா போரை எதிர்பார்ப்பவன் என்பதை அறிவுறுத்தின அமைச்சருக்கு.

அவனைப் பார்த்தது அமைச்சர் மட்டுமல்ல. அஞ்சன விழியாளும் பார்த்தாள். சீற்றம் நிரம்பிய விழிகள் அவனைக் கண்டபோதும் அவன் முக விலாசத்தையும் முகத்தில் அலைந்து விளையாடிய ஓரிரு தலைக்குழல் முடிகளையும், நுதலில் தெரிந்த அர்த்த சந்திர திலகத்தையும் கவனிக்கத் தவறவில்லை. அவன் உதடுகளின் உறுதியையும், அவற்றில் சதா விளையாடிய விஷமச்சிரிப்பையும் கூடக்காணத் தவறவில்லை. அங்கியணிந்திருந்த போதிலும், மார்பு மிகக் கடினமானது என்பதையும் ஈட்டிகூட அதில் நுழைவது சந்தேகமென்பதையம் எண்ணத் தவறவில்லை, அவள் மனம். இந்த வாலிபன் இந்தச் சிறுவயதில் எதற்காக இத்தகைய கொடிய சபதத்தைச் செய்கிறான் என்று தன்னைத் தானே வினவிக் கொண்டாள், அந்தக் காரிகை. அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு அவன் கூறிய, “விழிக்கவில்லை, வியப் படைந்தேன்’ என்ற பதில் அவளுக்குப் பிரமிப்பை அளித்த தென்றால், அடுத்துத் தொடர்ந்த உரையாடல் அந்தப் பிரமிப்பை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது.

”வியப்பா அடைந்தாய்?” என்று சீறினார் அமைச்சர்.

”ஆம்!” என்றான் அந்த வாலிபன் மீண்டும் அலட்சியமாக.

”வியப்புக்கு என்ன இருக்கிறது இங்கே?” என்று மறுபடியும் கேட்டார் அவர். இம்முறை அவர் குரலில் சிறிது குழப்பமும் இருந்தது, அந்த வாலிபன் போக்கின் காரணமாக.

வாலிபன் ஒரு விநாடி தயங்கினான். பிறகு “வியப்புக்கு…’ என்று வார்த்தையை இழுத்தான் மெள்ள.

”சொல், பயப்படாதே” என்றார் பெரியவர்.

”தங்கள் வாள் இருக்கிறது.”

”அதற்கென்ன?”

“அதை உருவவும் பார்க்கிறீர். பாதி உருவியும் இருக்கிறீர்.”

”அதில் வியப்பென்ன?”

”உமக்கும் வாட்போருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது.’
இந்த வார்த்தைகளை மிகச் சாவதானமாக உதிர்த்தான் வாலிபன். அமைச்சர் அசந்து போனாலும் அதை வெளிக்குக் காட்டாமலே கேட்டார், “அது உனக்கெப்படித் தெரியும்?” என்று.

”உங்கள் புறங்கைகளில் வடு எதுவும் காணோம். ஆகவே வாட்போர் நீங்கள் பழகவில்லை. வாள் உங்களுக்கு அலங்காரந்தான்” என்றான்.

இதைக் கேட்ட அமைச்சர் பிரமித்தார். கைங்கர்யபரர்கள் பயந்தனர். பைங்கிளி மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பொலி அமைச்சரது சினத்தைக் கிளறிவிட்டிருக்க வேண்டும். “நீ யார்? யார் உத்தரவின்மீது இங்கு வந்தாய்?” என்று வினவினார் தம் அதிகாரத்தைப் பிரயோகிக்க.

வாலிபன் புன்முறுவல் கொண்டான். ‘நான் யார் என்பதைப் பற்றித் தாங்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவன் சந்நிதிக்கு வர யார் அனுமதியும் தேவையில்லை” என்று முறுவலின் ஊடே கூறினான்.

அமைச்சர் முகத்தில் வியப்பு விரிந்தது. சிறிது சமாளித்துக் கொண்டு, ”என் பெயர் டபீர் பண்டிட்” என்றார்.

”நல்லது.” வாலிபன் ஆமோதிக்கும் பாவனையில் பதில் சொன்னான்.

“இவர்கள்…’ என்று பக்கத்திலிருந்த பெண்ணைச் சுட்டிக்காட்டினார் அமைச்சர்.

“சொல்லுங்கள்.”

“நந்தினி.”

“அழகான பெயர்.”

“இவள் தகப்பனார் ராஜா.”

”அப்படியா?”

“மிக உயர்ந்த ராஜா.”

இதைக் கேட்ட வாலிபன் வாய்விட்டுப் பெரிதாக நகைத் தான். அதற்குப் பதில் டபீர் பண்டிதரிடமிருந்து வரவில்லை. அந்தப் பெண்ணிடமிருந்து வந்தது, ”ஏன் சிரிக்கிறாய்?” என்ற கேள்வி மூலம்.
”இதோ அந்தக் கதவுகளுக்குள் அரவணைத் துயிலும் ரங்க ராஜாவுக்கு மேல் வேறு உயர்ந்த ராஜா இருக்க முடியாது” என்ற வாலிபன் மேலும் சொன்னான்: ‘இங்கு அந்தஸ்துக்கு இடமில்லை. இந்த இடமும் யாருக்கும் சொந்தமில்லை. இங்கே தரப்படும் ஒரே அந்தஸ்து அவனிடம் ஈடுபாடு” என்று அத்துடன் நிற்கவில்லை அவன். ”அமைச்சரே! அரசகுமாரியைக் காக்க வைக்கவேண்டாம். சந்நிதிக் கதவு திறக்கட்டும். அரங்கனைக் கண்ணார ஒரு விநாடி வணங்கிச் செல்கிறேன்” என்றும் விண்ணப்பித்துக் கொண்டான்.

டபீர் பண்டிதர் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் இளவரசி பேசினாள்: ”கதவைத் திறவுங்கள்” என்று. பட்டாடை யார் அந்த இக்கட்டிலிருந்து கிடைத்த சமயத்தை உபயோகப் படுத்திக் கொண்டு தமது மடியிலிருந்த பெரும் சாவிக் கொத்தை எடுத்து ஒரு சாவியால் கதவைத் திறந்தார்.

கதவு திறக்கப்பட்டதும் முதலில் அரசகுமாரியும் அடுத்தபடி டபீர் பண்டிதரும் உள்ளே நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் அச்சமுற்று நின்றார்கள். அவர்களை நோக்கிய அரங்கனின் இரண்டு கண்களில் ஒன்று மங்கிக் கிடந்தது. இன்னென்று கோபத்தால் பல வர்ணங்களை வெளியிட்டு ஜொலித்தது. அரசகுமாரியும் அமைச்சரும் அஞ்சி, சிலையென நின்றார்கள். அடுத்த விநாடி அமைச்சரின் குரல் பெரிதாக ஒலித்தது: ‘அரங்களின் ஒரு கண்ணிலிருந்த பெரும் வைரத்தைக் காணோம். ‘அழையுங்கள் என் வீரர்களை, சிறை செய்யுங்கள் இந்தத் திருடனை!” என்று கூவினார் அமைச்சர். வீரர்களை அழைக்க வெளியே ஓடினார் பட்டாடையாருடன் கூட வந்தவர், கையில் வட்டத் தலைப்பாகையைப் பிடித்த வண்ணம். இரண்டு விநாடிகளுக்கெல்லாம் உள்ளே வந்த மகாராஷ்டிர வீரர்கள், அந்த வாலிபனை வளைத்துக் கொண்டார்கள்.

Previous articleRaja Perigai Part 1 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here