Home Historical Novel Raja Perigai Part 1 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

48
0
Raja Perigai Part 1 Ch20 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch20 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 20. காட்டுராஜா சாட்சியமளிக்கிறார்

Raja Perigai Part 1 Ch20 | Raja Perigai | TamilNovel.in

மனித முன்னேற்றத்துக்குத் தேவை அதிர்ஷ்டந்தான். ஆனால் அது ஏன் வருகிறது, எப்படி வருகிறது, எப்படி மாறுகிறது என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும் அப்பாற் பட்டதாயிருக்கின்றது. திருஷ்டிக்குப் புலப்படாத காரணத்தாலேயே அது அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது. அது சம்பந்தப்பட்டவரை ‘தைவமத்ரப்ரமாணம்’ என்ற நிக மாந்த மகாதேசிகன் வாக்குப்படி தெய்வ சித்தமே சத்தியமாகிறது. அதற்கு வெள்ளாற்றங்கரையே உதாரணமாயிற்று.

செயின்ட் டேவிட் கோட்டையிலிருந்து காப்டன் இரவோடு இரவாகக் கிளம்பி மறுநாள் மாலை வெள்ளாற்றங்கரைக்கு வந்தபோது, அந்த ஆற்றின் வெள்ளத்தைப் போலவே தனது அதிர்ஷ்டமும் கரைபுரண்டு ஓடுகிறது என்று நினைத்தான் வாலிபனான கிளைவ். அவ்விருவரும் வந்தபோது வானம் நிர்மலமாயிருந்தது. கொல்லி மலையில் கிளம்பி, தொழுதூருக்கு மேற்கே வசிஷ்ட நதியும் கலந்து கொண்டதால் விசாலப்பட்டு, சுவேத நதியென்று வடமொழியிலும், வெள்ளாறு என்று தமிழிலும் அழைக்கப்பட்ட அந்தப் புண்ணிய நதிகூட, கிளைவ் தனது கரையை அடைந்தபோது அவன் அதிர்ஷ்டத்தை உயர்த்துவது போலும், அவனுக்கு அடங்கி நடப்பது போலும் மிக நிதானமாகவே பிரவகித்துக் கொண்டிருந்தது.

கிளைவ் சில நிமிடங்கள் தனது புரவியை நிறத்தி எதிரே அந்நதியையும் நதிக்கரையில் விரிந்த காட்சியையும் அநுபவித்தான். ஆற்றுக்கு அக்கரையிலிருந்த சோலைகளைத் தழுவி வந்த தமிழ் நாட்டு இன்பக் காற்றையும் நுகர்ந்தான். ஆற்றங்கரையில் அடிக்கப் பட்டிருந்த பல கூடாரங்களும், ஆங்காங்கு உலாவிக் கொண்டிருந்த சோல்ஜர்களும் இந்தியச் சிப்பாய்களும், நடுவேயிருந்த ஒரு கூடாரத்தில் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக்கும் (பிரிட்டிஷ் கொடியும்) அவனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்ததென்றால், அவனை நோக்கித் துரிதமாகப் புரவி யொன்றில் வந்த இன்னொரு வெள்ளை வீரன் உருவமும் அவன் ஆனந்தத்தை ஆகாசத்துக்குக் கொண்டு போயிற்று. கனவேகமாகப் புரவியில் வந்த அந்த வீரன், காப்டன் கோப்பும் கிளைவும் இருந்த இடத்தை அணுகியதும் சட்டென்று புரவியை நிறத்தி வியப்பு நிரம்பிய கண்களைக் கிளைவ்மீது நாட்டி, “நீ இங்கு எப்போது வந்தாய்?” என்று வினவினான்.

வந்தவன் தனது ஆருயிர்த் தோழனான எட்மண்ட் மாஸ்கலீன் என்பதைக் கண்ட கிளைவ் புரவியிலிருந்து குதித்து அவனையும் புரவியிலிருந்து கீழே இழுத்து அவனைத் தழுவிக் கொண்டான். “எட்மண்ட்! நீ இங்கிருப்பது எனக்குத் தெரியாதே. இத்தனை நாள் நீ ஸெய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் இருப்பாய் என்றல்லவா நம்பினேன்” என்றான்.
அவ்விருவரும் மேலே பேசியிருப்பார்கள், காப்டன் கோப் குறக்கிட்டிராவிட்டால். ”உறவாட இது நேரமுமல்ல, இடமுமல்ல” என்ற காப்டனின் கடும் சொல் இருவரையும் விலகச் செய்தது. அவர்கள் விலகியதும் காப்டன் கோப் கேட்டான், ”மிஸ்டர் மாஸ்கலீன்! கூடாரங்கள் சரியாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா? சோல்ஜர்களுக்கு உணவு போதுமான அளவு இருக்கின்றதா?” என்று.

”கூடாரங்கள் அசைக்க முடியாது. உணவுப் பொருள்கள் இன்னும் நான்கு நாளைக்கு இருக்கும்” என்றான் எட்மண்ட்.

“பீரங்கிகள், வெடிமருந்து, குண்டுகள்?” கோப்பின் குரல் அதிகாரத் தோரணையில் விசாரித்தது.

”நமது படையில் 430 வெள்ளையர்கள், 1000 இந்தியச் சிப்பாய்களுமே இருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியும். செயின்ட் டேவிட் கோட்டையில் நான்கு மத்திய தர பீரங்கிகளும், நான்கு சிறுபீரங்கிகளும்தான் கொடுத்தார்கள்” என்றான் எட்மண்ட். அவன் குரலில் அவை போதாதென்ற பொருள் நன்றாக ஒலித்தது.

”கவலை வேண்டாம். கப்பல்களில் கோட்டையைத் தகர்க்கும் பெரும் பீரங்கி வருகிறது. உணவுப் பொருள்களும் வருகின்றன. அவை வந்ததும் நமது பலம் அதிகமாகிவிடும். அதுமட்டுமல்ல. சிதம்பரத்தில் காட்டு ராஜாவின் (ஷாஹுஜியின்) படைகளும், தஞ்சையிலிருந்து வந்து கலந்து கொள்ளும். தேவிக் கோட்டை நமது கையிலிருப்பதுபோலத் தான்” என்றான் காப்டன் கோப். பிறகு மறுபேச்சுப் பேசாமல் புரவியை முன்னால் நடத்தினான்.

நண்பர் இருவருங்கூட தமது புரவிகளில் ஏறி, காப்டனைத் தொடர்ந்தார்கள். கூடாரங்களிலிருந்த சோல்ஜர்கள் புரவிகளின் காலடிச் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்ததும் அட்டென்ஷ’னில் நின்று காப்டனுக்குச் சலாம் செய்தார்கள். அவர்களுக்குத் தலையை மாத்திரம் லேசாகத் தாழ்த்தி மிகக் கம்பீரமாகக் காப்டன் கோப் புரவியை நடத்திச் சென்று, மத்தியில் யூனியன் ஜாக் பறந்து கொண்டிருந்த கூடாரத்தின் வாயிலில் இறங்கிக் கிளைவையும் இறங்கும்படி சைகை செய்தான். பிறகு எட்மண்ட்டை நோக்கி, ”மிஸ்டர் மாஸ்கலீன்! காட்டு ராஜாவை என் கூடாரத்துக்கு வரச் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டுக் கூடாரத்துக்குள் நுழைந்தான். காப்டன் கோப் கூடாரத்துக்குள் நுழைந்த பின்பும் கிளைவ் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவனது நண்பன், “லெப்டினென்ட் தாங்களும் உடன் செல்லுங்கள். இரவு சந்திக்கிறேன்” என்று கூறி விஷமப் புன்முறுவல் செய்தான்.

“எட்மண்ட், நாம் பேச வேண்டியது நிரம்ப இருக்கிறது. நானும் உன்னுடன் தங்குகிறேனே” என்றான் கிளைவ்..

எட்மண்ட் மாஸ்கலீன் சிறிது தயங்கினான். முடிவில் கூறினான். “முடியாது” என்று.

”ஏன்? நாம் இருவரும் சென்னைக் கோட்டையில் ஒரே அறையில் தானே இருந்தோம்? பிரெஞ்சுக்காரர் அதைப் பிடித்த போது ஒன்றாகத் தானே ஓடி வந்தோம்?” என்று வினவினான் கிளைவ்.

”அப்பொழுது நீ சாதாரண ரைட்டர் குமாஸ்தா, என்னைப்போல். இப்பொழுது லெப்டினன்ட் தவிர, கமிஸ்ஸரியேட்டாக (உணவுப் பொருள் சப்ளை அதிகாரியாக) உயர்ந்து பணமும் சேர்த்துவிட்டாய்.”

”பணம் நட்பைப் பிரிக்க முடியுமா?”

”முடியாது. அந்தஸ்தைப் பிரிக்க முடியும்.”

”என்ன அந்தஸ்து?”

“நீ லெப்டினன்ட், நான் சாதாரண சோல்ஜர். நீ இருக்க வேண்டியது காப்டன் கூடாரத்தில், தவிர…’ இந்த இடத்தில் சிறிது தயங்கினான் எட்மண்ட்.

கிளைவின் புருவங்கள் சந்தேகத்தால் உயர்ந்தன. ”தவிர?” என்று கேள்வியும் உதிர்ந்தது அவன் உதடுகளிலிருந்து.

“நான் தனிமையில்லை” என்றான் எட்மண்ட்.

”வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான் கிளைவ் சந்தேகத்துடன்.

”சிறிது நேரத்தில் உனக்கே புரியும்” என்று கூறிய எட்மண்ட், தனது புரவியைத் துரிதமாக நகர்த்திச் சென்று விட்டான்.

கிளைவ் மிகுந்த யோசனையுடன் புரவியிலிருந்து இறங்கி, காப்டன் கூடாரத்திற்குள் நுழைந்தான். அங்கு இரு காம்ப் காட்ஸ்’ (முகாம் கட்டில்கள்) போடப்பட்டிருப்பதையும் மற்ற வசதிகள் இருந்ததையும் கவனித்தான். நடுவிலிருந்த கட்டிலில் காப்டன் உட்கார்ந்திருந்தான். கோட்டையும் ஷர்ட்டையும் கழற்றி விட்டு ஷர்ட்டுடன் உள்ளே நுழைந்த கிளைவ் ஷர்ட்டைக் கழற்றாமலே உட்கார்ந்தான் மற்றொரு கட்டிலில். அவன் முகத்தில் தீவிர யோசனை படர்ந்து கிடந்தது. ”அந்தக் காட்டு ராஜா எப்பேர்ப்பட்டவர்?” என்று வினவினான் கடைசியாக.

காப்டன் கோப் நகைத்தான். “மற்ற இந்திய ராஜாக்களைப் போல்தான்” என்று நகைப்பின் ஊடே கூறவும் செய்தான்.

“அப்படி என்றால்?”‘ கிளைவின் குரலில் கடுமையிருந்தது.

“தஞ்சையின் உண்மை மன்னனை நம்மிடம் காட்டிக் கொடுக்கிறான். நாம் கொடுக்கும் விஸ்கி, வொயின் மற்றும் பல வசதிகளை அனுபவிக்கிறான்…”

“இந்த வசதிகள்…”

”உன் நண்பரின் கூடாரத்தில் இருக்கின்றன.”

“இதுதான் என் நண்பனுக்கு வேலையா?”

”இதுவும் ஒரு வேலை. ஆனால் உன் நண்பன் இதை ரசிப்பதாகத் தெரியவில்லை.”

கிளைவ் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, ”கேப்டன் எனது நண்பனைப் பார்க்க, அவனுடன் தங்க, தங்கள் அனுமதி வேண்டும்” என்றான்.

”பார்த்துவிட்டு வரலாம். ஆனால் லெப்டினன்ட் தங்க வேண்டிய இடம் காப்டனுடன்” என்று கூறிய கோப் “கிளைவ் சற்றுப் பொறு. நமது மன்னரைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்றான்.

அதற்குப் பிறகு கிளைவ் மௌனம் சாதித்தான். தனக்குத் தேவிக் கோட்டையைப் பிடிக்கும் பணியில் இடம் கிடைத்தது அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றியதென்றாலும், பிரதாப் சிம்மனை நினைத்தபோது தான் செய்யும் காரியம் அநியாயம் என்ற யோசனையும் பிறந்தது. எதற்கும் காட்டு ராஜாவையும் பார்த்த பின்பு தீர்மானத்துக்கு வரலாம் என்று நினைத்தான்.

நிமிடங்கள் பறந்தன. அரை மணி ஆயிற்று. காட்டு ராஜா வரவில்லை. அவருக்குப் பதில் எட்மண்ட் வந்து சேர்ந்தான். ”எங்கே காட்டு ராஜா?” என்று சீறினான் காப்டன்.

. ”வர மறுக்கிறார்” என்றான் எட்மண்ட் பதிலுக்கு. ”ஏன் ?”‘ காப்டன் கோப்பின் சினம் அதிகமாகி முகம் சிவந்தது.
‘’அவர் மன்னராம். தாங்கள் கேவலம் காப்டனாம்” என்று எட்மண்ட் மேலும் குத்தினான் சொற்களால்.

காப்டன் கோப்பின் முகத்திலிருந்து சினம் மறைந்து வியப்பு விரிந்தது. கட்டிலிலிருந்து எழுந்திருந்து கூடாரத்தில் இருமுறை உலாவினான். பிறகு திடீரென்று நின்று. ”கிளைவ்” என்று கூவினான்.

கிளைவ் கட்டிலிலிருந்து சரேலென்று எழுந்திருந்து, கால் களைக் குவித்து, “எஸ் காப்டன்” என்று ஆஜராக நின்றான்.

”நீ காட்டு ராஜாவின் கூடாரத்துக்கச் சென்று அவரை மரியாதையுடன் அழைத்து வா. அவர் வராவிட்டால் எப்படி யாவது அழைத்து வா. திஸ் ஈஸ் ஆன் ஆர்டர்…. இது உத்தரவு” என்றான் கோப் சினத்துடன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் கலை பூராவும் காப்டன் கோப்பின் வதனத்தில் பிரகாசித்தது.

கிளைவ் தலை தாழ்த்தி எட்மண்டுடன் வெளியே சென்றான். வெளியே வந்ததும் கிளைவை நோக்கிய எட்மண்ட், ”ராபர்ட் நிதானத்தைத் தவறவிடாதே. என் கூடாரத்திலிருந்த சரக்குகள் இப்போது ராஜாவின் கூடாரத்தில் இருக்கின்றன. எதையும் கண்டுகொள்ளாதே! எப்படியும் அவர் நமது பிற்காலத் தஞ்சை மன்னர் என்பதை மறவாதே” என்று நல்ல ஆங்கிலத்தில் போதித்தான். லேசாக நகைக்கவும் செய்தான்.

கிளைவ் ஏதும் பேசாமல் நண்பனுன் நடந்தான். பத்துக் கூடாரங்களைத் தாண்டியதும் இருந்த ஒரு பெருங் கூடாரத்தின் முன்பாக நின்ற எட்மண்ட், ”ராபர்ட் உள்ளே போ. ஆனால் நான் சொன்னது நினைவிலிருக்கட்டும்” என்று எச்சரித்தான்.

அவன் எதற்காக இத்தனை தூரம் எச்சரிக்கிறான் என்பதைப் பற்றிக் குழம்பிய கிளைவ் திடீரென விழித்துக் கொண்டான். கூடாரத்திற்குள்ளிருந்து பெரும் சிரிப்பு அந்த நதிக்கரையின் அமைதியைப் பிளந்தது. அதைக் கேட்டதும் நிலைமையை ஓரளவு புரிந்து கொண்ட கிளைவ் ஒருமறை நண்பனை நோக்கினான். பிறகு சரேலென்று கூடாரத்துக்குள் நுழைந்தான்.

கூடாரத்தின் உட்புறநிலை அவனைத் திகைக்க வைத்தது. ஒரு மடக்கும் ஈஸிசேரில் காட்டுராஜா தலையணையொன்றில் மல்லாந்து கிடந்தார். அவர் கையொன்றில் பெரும் விஸ்கி குப்பியொன்று காட்சியளித்தது. இருபுறமும் இரு வெள்ளைக் காரப் பெண்கள் நின்றிருந்தார்கள். அவ்விருவர் உடைகளிலிருந்தும் அவர்கள் ராணுவ நர்ஸ்கள் என்பதைப் புரிந்து கொண்டான், கிளைவ். அவர்களில் ஒருத்தியின் இடையை ராஜாவின் இன்னொரு கை சுற்றிக்கொண்டிருந்தது. ”நர்ஸ்கள் எனக்குச் சிகிச்சை செய்ய வேண்டும். உம், செய்யுங்கள்” என்று உத்தரவிட்ட ராஜா, அவர்கள் வாளாவிருக்கவே கண்களைத் திறந்து கூடார வாயிலில் நின்ற கிளைவைப் பார்த்தார். ”யார் நீ, உத்தரவில்லாமல் உள்ளே வர?” என்றும் கேட்டார்.

கிளைவைக் கண்டதும் நர்ஸ்கள் விலக முற்பட்டனர். மன்னரிடமிருந்து ஒருத்திதான் விலக முடிந்தது. இன்னொருத்தியின் இடையில் பதிந்திருந்த காட்டுராஜாவின் முரட்டுக் கை அவளை விடாததால், அவள் நெளிந்தாள் வேதனையுடன். கிளைவ் முதல் முதலாக நிதானத்தை இழந்தான். அந்தக் காட்டுராஜாவைப் பார்த்தபோது தஞ்சை அரண்மனையின் நினைவு அவன் மனக்கண் முன்பு எழுந்து, பிரதாபசிம்மனின் கம்பீரமான அறிவு முதிர்ந்த முகமும் அவனைப் பார்த்து நகைத்தது. ‘இவனையா மன்னனாக்கப் பார்க்கிறீர்கள்?” என்று பிரதாபசிம்மன் கேட்பது போல் இருந்தது வீரனான கிளைவுக்கு. ஆகவே, ”எடு கையை, விடு அவளை”‘ என்ற சொற்கள் கடுமையுடன் உதிர்ந்தன கிளைவிடமிருந்து.

காட்டுராஜாவின் கை நர்ஸின் இடையை இரும்புப் பிடியாகப் பிடித்தது. ராஜா மற்ற விஷயங்களில் பலவீனமானவ ரானாலும் பெண்கள் இடுப்பைப் பிடிப்பதில் எமகாதகர் என்பதை உணர்ந்த நர்ஸ் செயலிழந்து நின்றாள்.

அந்தச் சமயம் இரவு மூண்டு விட்டதால் மாலையில் ஏற்றப்பட்டிருந்த கூடார விளக்கில் ராஜாவின் குடிகார முகம் மிக விரசமாகக் காட்சியளித்தது. ”விடு அவளை” என்று இரண்டாம் முறை கூறிய கிளைவ், தன் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டினான், காட்டு ராஜாவை நோக்கி.

ஆனால் காட்டுராஜா அதற்கெல்லாம் மசியவில்லை. இடி இடியெனப் பெரிதாக நகைத்தார். நகைத்தது அவர் மட்டுமல்ல, இயற்கையும் நகைத்தது. வெளியே திடீரென ஆகாயத்தில் பேரிடியொன்று தலையில் விழுவதுபோல் முழுங்கியது. பெரும் புயற்காற்று கூடாரத்தின் துணிகளைத் தூக்க முயன்றது. இரண்டாம் முறையும் பாட்டிலைத் தூக்கினார் ராஜா. அம்முறை அவர் கண்களுக்கு மட்டுமின்றிக் கிளைவுக்கும் ஆகாயம் தெரிந்தது. புயல் பலமாக உட்புகுந்து கூடாரத் துணியைக் கந்தல் கந்தலாகப் பிய்த்துவிட்ட காரணத்தால் மேலே கருமேகமாக, பார்க்கப் பயங்கரமான மின்னல் அதன் ஊடே ஒளிவிட்டது. சில விநாடிகளில் அதிர்ஷ்டம் தன்னைவிட்டுப் பறந்துவிட்டதைக் கிளைவ் உணர்ந்தான். அத்தனையிலும் காட்டு ராஜாவின் அதிர்ஷ்டமும் பறந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியுடன் அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறினான். அந்தச் சமயத்தில் பிரதாப் சிம்மன் முகம் அவனைப் பார்த்து நகைத்தது. மீண்டும் சுலோகத்தை உதிர்த்தது. ‘இதுதான் விதி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் கிளைவ். விதி அத்துடன் விடவில்லை அந்தப் படையை. மறுநாளும் அதற்கு மறுநாளும் விடாமல் தொடர்ந்தது. சிதைந்த படை தன்னை உருவாக்கிக் கொள்ளப் பறங்கிப்போட்டைக்கு நகர்ந்தபோது அங்கும் காத்திருந்தது பயங்கரச் செய்தி!

Previous articleRaja Perigai Part 1 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here