Home Historical Novel Raja Perigai Part 1 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

49
0
Raja Perigai Part 1 Ch21 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch21 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 21. தோணியில் வந்த தூது

Raja Perigai Part 1 Ch21 | Raja Perigai | TamilNovel.in

குருட்டு நம்பிக்கைகள் கறுப்பர்களுக்குத்தான் அதிகம் என்று வெள்ளக்காரர்கள் அன்றும் இன்றும் எண்ணி நகை யாடினாலும், அதை வெள்ளைத் தாஸர்கள்கூட ஒப்புக்கொண்டு பகுத்தறிவைப் பல படி நமக்குப் பகிர்ந்து தந்தாலும், எண் 13 என்பது துரதிருஷ்ட எண் என்று வெள்ளைக்காரர்கள் இன்றும் நம்புவதை நமது தற்கால அரசியல்வாதிகளில் முக்கால்வாசிப் பேர் அறியாததால் வெள்ளைத் தோலுடையோருக்கும் அத்தகைய குருட்டு நம்பிக்கைகளுக்கும் சம்பந்தமில்லையென எண்ணி அவர்கள் பெருமையை நினைத்து உடலும் உள்ளமும் பூரித்தாலும், 1749 ஏப்ரல் 13-ஆம் தேதி வெள்ளாற்றங்கரையில் விளைந்த விபரீதத்தை எண்ணிப் பார்த்த காப்டன் கோப்பும் இதர வெள்ளைக்காரர்களும் அந்தப் பதின்மூன்றாம் தேதி சாயந்தரம் வரையில் நிர்மலமாயிருந்த ஆகாயம் திடீரென இரவில் கறுத்து மெல்லென்ற தென்றலும் திடீரெனச் சூறாவளியுமாக மாறி, தங்கள் கூடாரங்களைத் தார் தாராகக் கிழித்துவிட்டதையும், உணவுப் பொருள் வண்டிகளை இழுத்து வந்த பொதிக்காளைகள் எல்லாமே அந்தச் சூறாவளியிலும் அதைத் தொடர்ந்த கடுமழையிலும் செத்து விட்டதையும், பீரங்கிகளில் திணிக்க வேண்டிய வெடி மருந்துகளும் கரைந்தோடி விட்டதையும் கண்ட காப்டன் கோப், 13வது எண்ணை மறுநாள் காலை பெரிதும் கடிந்து கொண்டான். ”இந்தச் சனியன் வந்திரா விட்டால் இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்காது” என்ற காட்டு ராஜாவைக்கூட வெளிப்படையாகத் தூற்றலானான் காப்டன் கோப்.

ஏப்ரில் 13-ஆம் தேதி இரவில் காட்டுராஜாவின் கூடாரக் கூரை திடீரெனக் கிழிக்கப்பட்டு, ஆகாயக் கூரை கண்களுக்குப் புலப்பட்டவுடனேயே கிளைவ் திடீரென ராஜாவின் அருகிலிருந்த இரண்டு நர்ஸ்களையும் வெளியே அழைத்து வந்து, சற்று எட்ட இருந்த பெரிய ஆலமரத்தடியில் தங்க வைத்துவிட்டுக் காப்டன் கோப்பின் கூடாரத்தை நோக்கி ஓடினான். சர்சர்ரென்று விடா மலடித்த பெருமழைக்கிடையே அங்கே காப்டனின் கூடாரமும் கிழிந்து போய், காப்டனும் வெளியில் நிற்பதைப் பார்த்ததும் அவனையும் கையைப் பிடித்து இழுத்து வந்து அதே மரத்தடியில், விட்டான்,. பிறகு காப்டனின் கடமைகளைத் தானே மேற் கொண்டு மற்றக் கூடாரங்களில் இருந்தவர்களையும், உணவுப் பொதி வண்டிகளையும் காப்பாற்ற சோல்ஜர்களுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டுத் தானும் அங்குமிங்கும் ஓடினான்.

ஆனால் புயலின் வேகம் வரவர வலுத்ததால் ஏதும் செய்ய முடியாத நிலையில் எட்மண்டையும் அழைத்துக் கொண்டு வேறொரு மரத்தின் அடிக்கு ஓடினான். கடுங்காற்றடித்தது, கடுமழை பொழிந்தது. அவ்வப்போது ஆகாயத்தை ஊடுருவிக் கண்களைப் பார்வையிழக்கச் செய்த மின்னலும் காதுகளைச் செவிடாக்கிய இடித் தொடரும் விவரிக்க இயலாக பயங்கரத்தை விளைவித்தன.
ஆபத்துக்கும் இரவுக்கும் நெருங்கிய சம்பந்தமிருந்ததால் நேரமும் மிக மெதுவாகவே நகர்ந்தது. ஆனால் புயல் மட்டும் தனது வேலையைத் திறம்படச் செய்து பல மரக்கிளைகளையும் ஓரிரண்டு பெருமரங்களையும் சாய்த்து விட்டதால், இரவு கழிந்த பின்பு இருந்த நிலை இரவைவிடப் பன்மடங்கு பயங்கரத்தைத் தந்ததால் காப்டன் கோப்பின் சினம் அதிகமாயிருந்தது.

படை வீரருக்குச் சேதம் அதிகமில்லை யென்றாலும், குடை சாய்ந்து கிடந்த பொதி வண்டிகளையும் அவற்றின் கீழும் சில பெருமரக்கிளைகளின் கீழும் அகப்பட்டுக் கொண்டு மாண்டு கிடந்த காளைகளையும், வெள்ளாறு திடீரென நிரம்பி அதில் அடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்த சில மாட்டுச் சடலங் களையும், மாமிசத்துக்காகக் கொண்டு வரப்பட்ட ஆடுகளையும் கோழிகளையும் கசாப்புக் கத்தியிலிருந்து தப்புவிக்க ஆறு இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்த பயங்கரத்தையும் பார்த்துக் கொண்டு காலையில் கிழக்கில் கிளம்பிவிட்ட கதிரவன் முகத்தைப் போலவே சிவந்து கிடந்த முகத்துடனிருந்த காப்டன் கோப்பின் உள்ளம் வெள்ளச் சேதத்தால் குமுறிக் கொண்டிருந்த சமயத்தில், காட்டுராஜா அவன் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அப்போதுதான் சொன்னான் காப்டன் கோப் கிளைவை நோக்கி எரிச்சலுடன், ”இந்த ஸாடன் (சனியன்) தான் இத்தனைக்கும் காரணம்” என்று.

சுமார் ஆறுமாத காலமாக ஸெய்ன்ட் டேவிட் கோட்டையில் வெள்ளைக்காரரிடம் காவடி எடுத்துக் கொண்டிருந்த காட்டு ராஜாவுக்குச் சிறிது ஆங்கிலமும் தெரிந்திருரந்ததால், “யாரைப் பார்த்து ஸாடன் என்கிறாய்?” என்றார்.

காப்டன் கோப் இருந்த மனநிலையில் மரியாதை என்ற சொல்லுக்கு இடமில்லாததால்.

உன்னைத்தான் என்று வெகு அலட்சியமாகவும் வெறுப்புடனும் இகழ்ச்சியுடனும் பதில் சொன்னான்.

ஸவாய் ஷாஹுஜி என்ற காட்டு ராஜா தமது கம்பீரத்தை விடவில்லை . அவரது உடை நனைந்தும், சில இடங்களில் மரக்கிளை மாட்டிக் கிழிந்து இருந்தும்கூட, “நீ ஒரு காப்டன்” என்றார் கோபம் குரலிலும் ஒலிக்க,

‘யூ ஆர்ரைட்” என்றான் காப்டன்.

“நான் தஞ்சை மன்னன்” என்று சுட்டிக் காட்டினார் காட்டு ராஜா.

”யூ ஆர் ராங்” என்றான் காப்டன் கோப்.

தாம் மன்னனென்று சொன்னதைக் காப்டன் கோப் மறுத்ததாலும், அவன் சொன்னதைக் கேட்ட இரு நர்சுகளும் நகைத்ததாலும் கோபத்தின் உச்சகட்டத்தை எய்திய காட்டுராஜா, ”காப்டன்! ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்குத் திரும்பியதும் நான் யாரென்பதை உணர்ந்து கொள்வாய்” என்று சீறினார்.

காப்டன் அத்தனை சேதத்திலும் இளநகை கொண்டான். ”இப்போது புத்திசாலித்தனமாகப் பேசுகிறீர்” என்றான் ஆங்கிலத்தில்.

”என்ன புத்திசாலித்தனம்?” காட்டு ராஜாவின் குரலில் குழுப்பம் இருந்தது.

”ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டது புத்திசாலித்தனம்.”

”அதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?”

”தேவிக் கோட்டையில் உமக்கு வேலையில்லையென்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்?”

”ஏன் தேவிக்கோட்டைக்குப் போகக்கூடாது? நான்தான் உங்களுக்கு அதைத் தானம் செய்து விட்டேனே.”

இதைக் கேட்ட காப்டன் பெரிதாக நகைத்தான். அந்த நகைப்பைச் சகிக்க முடியாத காட்டுராஜா, “ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினார்.

“நீங்கள் தேவிக்கோட்டையை எங்களுக்குத் தானம் செய்ததை நினைத்து” என்றான் கோப்.

”ஏன், அதில் என்ன தவறு?”

“அது இன்னும் உங்களுக்குச் சொந்தமில்லை. அது கிடக் கட்டும். நானும் உங்களுக்கு ஒரு தானம் செய்கிறேன்.”

“என்ன தானம்?”

”உங்களை டில்லி நவாப் ஆக்கிவிட்டேன்.”

“அதை எப்படி நீ தானம் செய்ய முடியும்?”

”நீங்கள் தேவிக் கோட்டையைத் தானம் செய்ததுபோல்” என்ற கூறிய காப்டன் கோப், அந்தச் சமயத்தில் அங்கு வந்த கிளைவையும் எட்மண்டையும் நோக்கி, “லெப்டினண்ட் நமது படையைச் சரி செய்து கொள்ள நாம் இந்த ஆற்றங்கரை வழியே போர்ட்டோநோவோ செல்கிறோம், இன்னும் ஒரு மணி நேரத்தில். மிஸ்டர் எட்மண்ட் இந்த இரு நர்ஸ்களையும் அழைத்துச் சென்று உடைப் பெட்டியில் ஏதாவது உடைகள் இருந் தால் அதைக் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொல். சோல்ஜர் களையும் சிப்பாய்களையும் அணிவகுக்க லெப்டினன்ட்டுக்கு உதவுங்கள். ஏதாவது உணவுப் பொருள்களோ, ஆஸ்பத்திரிச் சாமான்களோ பாக்கியிருந்தால் திரட்டுங்கள்” என்று மடமட வென உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டுச் செல்ல முற்பட்டவன் சட்டென்று எதையோ நினைத்துக்கொண்டு திரம்பி, ”கிளைவ்! இந்தச் சீட்டு ராஜாவை மரியாதையுடன் அழைத்துப் போ” என்றான் வெறுப்புடன்.

தஞ்சை மன்னராக விரும்பிய ஷாஹுஜி, “என் பெயர் காட்டுராஜா” என்று குறிப்பிட்டார்.

“இல்லை, சீட்டு ராஜா” என்று மீண்டும் கத்தினான் காப்டன்.

”தவறு.”

‘இல்லை. லெப்டினண்டைக் கேட்டுப் பாரும். சீட்டை நம்பித்தான் அவர் வந்தார்.”

இந்தச் சமயத்தில் இடைபுகுந்த கிளைவ், ‘காப்டன்! நான் கவர்னரிடமிருந்து பெற்றது இஸ்பேட் ராஜா அல்ல, இஸ்பேட் ஏஸ். உங்களுக்கும் தெரியும்” என்றான். இருவரையும் சமாதானப்படுத்த.

ஆனால் காட்டுராஜா விடவில்லை. தமது சாமர்த்தியத்தை மேலும் காட்டி, ”உங்களை யார் 13-ஆம் தேதி வரச் சொன்னது? ஆம், அது உங்களுக்குத் துரதிர்ஷ்ட எண் அல்லவா?” என்று வினவினார்.

காப்டன் இதழ்களில் அத்தனை கொடூரத்திலும் புன்னகை விரிந்தது. ”உமக்கு எங்கள் நம்பிக்கையும் தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும்.”

”அப்படியானால் இன்று 14-ஆம் தேதி. இது பிரமாதமாக இருக்கும்!”

”இருக்கும். பறங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) சென்றதும் தெரியும்.” இதைச் சொல்லிவிட்டுக் காட்டு ராஜா விடுவிடுவென்று நடந்தார்.
ஒரு மணி நேரத்திற்கெல்லாம் படையும் நடந்தது ஆற்றங்கரையோரம். அன்று மாலை பறங்கிப் போட்டைக்கு வந்து சேர்ந்த படை அந்தத் துறைமுக நகரில் முகாம் செய்தது. காப்டன் கோப், மன்னருடனும், எட்மண்ட், நர்சுகள் இவர்களுடனும் துறைமுக அதிகாரியின் இல்லத்துக்குச் சென்றான்.

அவர்களை வரவேற்ற துறைமுக அதிகாரியின் முகம் விளக்கெண்ணெயாக இருந்தது.

அவருக்குக் காப்டன் கோப், மன்னனையும், கிளைவ், எட்மண்ட் ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். துறைமுக அதிகாரியின் நீல விழிகள் அவர்களை ஒருமுறை விசனத்துடன் பார்த்தன. பிறகு நர்சுகளையும் பார்த்தன. ‘இவர்கள் எதற்கு?” என்று வினவினார்.

“இவர்கள் நர்சுகள். வெள்ளை நர்சுகள் இந்தியாவில் அதிகம் கிடையாதென்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் இவர்கḥளை ஆஸ்பத்திரிக் கப்பலில் அனுப்பாமல் நிலப் படையுடன் அழைத்து வந்தோம்.

”அப்படியா!” என்ற துறைமுக அதிகாரியின் பதிலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

“ஏன், இவர்கள் தேவையில்லையா?” என்று வினவினான் கிளைவ்.

”ஆஸ்பத்திரியிருந்தால்தான் நர்சுகள் தேவை.”

”ஆஸ்பத்திரிக் கப்பல் அப்போலோ’ வருகிறது.’’

”வராது.”

“ஏன்?”

துறைமுக அதிகாரி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது சிந்தித்துவிட்டு அவர் பதில் கூறிய போது அது இடியென இறங்கியது மற்றவர் மனங்களில்.

‘நேற்றுப் புயலில் ‘அப்போலோ’ கடலூருக்கும் ஸெய்ண்ட் டேவிட் கோட்டைக்குமிடையில் மூழ்கி விட்டது’ என்று மெள்ளக் கூறினார் துறைமுக அதிகாரி.

யாரும் பல விநாடிகள் பேசவில்லை. துறைமுக அதிகாரி வீட்டின் அந்த முகப்பு ஹாலில் பெரும் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தை மீண்டும் உடைத்தார் அதிகாரி ”அது மட்டுமல்ல” என்றார்.

‘வாட் எல்ஸ் (வேறு என்ன)?” காட்டுராஜா தமது ஆங்கில அறிவை அந்தக் கேள்வியின் மூலம் காட்டினார்.

”அறுபது பீரங்கிகள் கொண்ட பெம்ப்ரோக் மூழ்கிவிட்டது. பிரிட்டிஷ் கடற்படையின் மிகச் சிறந்த போர்க் கப்பல், 74 பெரும் பீரங்கிகள் கொண்டது, அதுவும் மூழ்கிவிட்டது. அதிலிருந்த 750 மாலுமிகளும் மூழ்கி இறந்துவிட்டார்கள். தப்பியது இருவர், இதோ இந்த நர்சுகள்” என்று அறிவித்த துறைமுக அதிகாரியைப் பிரமிப்பும், அதிர்ச்சியும் கலந்த விழிகளால் நோக்கினார் காட்டு ராஜா.

காப்டன் கோப் பேசச் சக்தியற்று உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தான். கிளைவ் மட்டும் சற்றுச் சமாளித்துக் கொண்டு காட்டு ராஜாவை உஷ்ணத்துடன் நோக்கினான். ”மகாராஜா உமது அதிர்ஷ்டம் இங்கும் எங்களை விடவில்லை” என்றான்.

காப்டன் கோப் தனது தீ விழிகளைத் திருப்பினான் ஷாஹுஜி மீது. ஷாஹுஜி அவன் கண்களைச் சந்திக்க மறுத்தார்.

அந்தச் சங்கட நிலைமையைக் கடைசியாகக் கிளைவே சீர்ப்படுத்திக் கொண்டு, ‘கிளம்புகிறோம், தேவிக்கோட்டையை நோக்கி. அதற்கு வேண்டிய உதவியைச் செய்யுங்கள்” என்றான் துறைமுக அதிகாரியை நோக்கி.

“நீங்கள் ஏன் ஸெய்ன்ட் டேவிட்டுக்கே திரும்பக் கூடாது?” என்றுவினவினார் துறைமுக அதிகாரி.

”அட்மிரல் போஸ்கவான் உத்தரவு தேவிக் கோட்டை யைத் தாக்க. அது மாற்றப்படவில்லை. ஆகையால் நாங்கள் போய்த்தான் ஆக வேண்டும். சோல்ஜரின் கடமை அது” என்று விளக்கினான் கிளைவ்.

துறைமுக அதிகாரியும் அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார். இரண்டு நாட்களில் தேவையான சகல வசதிகளையும் செய்தும் கொடுத்தார். தவிர ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து மீண்டும் ஒரு கப்பலில் சப்ளை வருவதாகவும் செய்தி வந்தது.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் படை காப்டன் கோப்பின் தலைமையில் கிளம்பியது தேவிக்கோட்டையை நோக்கி. கிளம்பும் சமயத்தில் காட்டு ராஜா கூறினார், ”பயப்படாதீர்கள். சிதம்பரத்தை அடைந்ததும், தஞ்சைப் படைகள் நம்முடன் இணையும். தேவிக்கோட்டை நமது கையில் இன்னும் பத்து நாட்களுக்குள் விழுந்துவிடும்” என்றார்.

படை நகர்ந்தது. இரண்டு நாட்களில் சிதம்பரம் வந்தது. தில்லை நடராஜன் கீழ்க்கோபுர வாயிலில் தங்கியது. நாட்கள் மூன்று ஓடின. தஞ்சையிலிருந்து ஈ காக்கை வரவில்லை. ”எங்கே உமது படை?” என்று கேட்டான் காப்டன்.

”வரும்” என்றார் காட்டுராஜா. ”எப்பொழுது? எங்கே?”

”இங்கேயே வரவேண்டும். எதற்கும் நாம் புறப்படுவோம். தேவிக் கோட்டையை அடையுமுன்பு வந்துவிடும்” என்றார் மன்னர்.

காப்டன் தனது படையுடன் மீண்டும் புறப்பட்டு அடுத்த இரண்டு நாளில் மெதுவாகக் கொள்ளிடத்தின் வடக்குக் கரையை அடைந்து பாசறை அமைத்தான். எதிர்க்கரையில் படைகள் தென்படத்தான் செய்தன. ஆனால் அவை தங்கள் துணைக்கு வரத் துடித்ததாகத் தெரியவில்லை. காப்டன் கோப்புக்கும் கிளைவுக்கும்.

அவர்கள் பாசறை அமைத்த மறுநாள் இரவு கொள்ளிட நீரில் மிதந்து வந்தது ஒரு தோணி. அந்தத் தோணி இரவின் இருளில் பேயென வந்து கரையை அடைய, அதிலிருந்து இறங்கிய ஒரு வீரன் காப்டன் கோப்பின் கூடாரத்துக்கு துரிதமாகச் சென்றான். அவன் கூடாரத்துக்குள் நுழைந்தபோது அங்கே கிளைவும் இருந்தான். வந்தவனைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி எய்திய கிளைவ், ”விஜயகுமாரனா! நீயே எங்கள் பக்கம் வந்துவிட்டாயா?” என்று குதூகலத்துடன் வினவி எழுந்திருந்து, அவனுடன் கைகுலுக்கத் தனது வலக் கையையும் நீட்டினான்.

விஜயகுமாரனின் கை எழாமல் பக்கவாட்டிலேயே இருந்தது. கிளைவ் புரிந்துகொண்டான், காப்டனும் புரிந்து கொண்டான். ஏன் அப்பொழுது அங்கிருந்த காட்டுராஜா கூடப் புரிந்துகொண்டார். விஜயகுமாரன் மெள்ள மெள்ளச் சொற்களை உதிர்க்கலானான். அவை சொற்களா? காட்டு ராஜாவைச்சுட வந்த நெருப்புத் துண்டங்களா? விவரம் ராஜாவுக்கே புரிந்தது. தோணியில் வந்த தூது உண்மையில் தனக்கு யமபாசம் என்பதை மன்னர் உணர்ந்து கொண்டார்.

Previous articleRaja Perigai Part 1 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here