Home Historical Novel Raja Perigai Part 1 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

46
0
Raja Perigai Part 1 Ch22 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch22 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 22. புரியாத கதை

Raja Perigai Part 1 Ch22 | Raja Perigai | TamilNovel.in

காப்டன் கோப்பின் கூடாரத்துக்குள் விஜயகுமாரன் நுழைந்ததும், பழைய சம்பவங்கள் எழுப்பிவிட்ட தோழமையின் காரணமாகவும், காட்டுராஜா கிளப்பிவிட்டுப் பலிக்காமற் போன எண்ணத்தின் விளைவாகவும், தஞ்சைப் பிரமுகர்கள் வேறு யாரும் துணைக்கு வராவிட்டாலும், விஜயகுமாரனாவது வந்தானே என்ற நினைப்பினாலும், நண்பனுடன் கைகுலுக்க ராபர்ட் கிளைவ் தனது வலக்கரத்தை நீட்டியதும், விஜயகுமாரன் அதைக் கவனிக்காதது போலவே இருந்துவிட்டதால் பெரும் சங்கடத்துக் குள்ளானான் பிரிட்டிஷ் லெப்டினண்ட்.

விஜயகுமாரனின் மனநிலையும் கிளைவின் மனநிலைக்கு எந்த விதத்திலும் குறையாமல் குழம்பினாலும், தஞ்சை நெடுஞ்சாலைச் சத்திரத்து நினைப்புகள் அந்தச் சமயத்தில் கூட அவன் புத்தியில் வலம் வந்து நெஞ்சைத் தொட்டாலும், அத்தனையும் உள்ளடக்கிக் கொண்ட நாய்க்கர் வம்ச வாலிபன் கிளைவின் முகத்தைச் சந்திக்கவும் கூச்சம் கொண்டு, தனது சங்கடத்தை நீக்கிக்கொள்ளத் தலையை ஒருமுறை ஆட்டிக்கொண்டான்.

அப்பொழுது அவனது அழகிய குழல்களும் சிலிர்த்து ஆடி, ஓரிரண்டு மயிரிழைகள் அவன் சந்தனத் திலகத்தைத் தொட்டு அவன் முகக் கம்பீரத்தைப் பல மடங்கு உயர்த்திக் காட்டியதுடன், அவன் கண்களும் சில விநாடிகளிலேயே குழப்பத் திரையை உறுதி விலக்கிக் கொண்டதால் அவன் அந்தக் கூடாரத்திலிருந்த காப்டன் கோப்பையும் காட்டுராஜாவையும் மாறிமாறி நோக்கிவிட்டுக் கிளைவை நோக்கிக் கேட்டான், “இவர்தான் காப்டனா?” என்று.

அதுவரை குழப்பமும் சங்கடமும் அடைந்திருந்த கிளைவும் தலையை நிமிர்த்தி, “ஆம், இவர்தான் காப்டன் கோப். இந்த பிரிட்டிஷ் படையின் தலைவர்’ என்று கூறினான்.

இந்தச் சமயத்தில் காட்டு ராஜாவும் சும்மாயிருக்காமல், ”தஞ்சை மன்னன் சந்நிதானத்தில் நீ நிற்கிறாய், தலை வணங்கு” என்று உத்தரவிட்டார்.

விஜயகுமாரன் விழிகள் காட்டு ராஜாவை ஏறிட்டுப் பார்த்தன ஒருமுறை. “நீதான் அந்தப் போலியா?” என்று அவன் உதடுகள் விசாரித்தன.

“இது ராஜ துரோகம், ராஜ நிந்தை. இதற்கு மரணதண்டனை தான்” என்று சீறிய காட்டுராஜா காப்டன் கோப்பை நோக்கி, “இந்த அதிகப் பிரசங்கியை முதலில் கைது செய்யுங்கள்” என்று கூவினார் ஆத்திரத்துடன்.
ஆனால் காப்டன் கோப் உட்கார்ந்த இடத்திலிருந்து அசையவும் இல்லை, அவர் போட்ட உத்தரவைப் அமல்ப்படுத்தவும் இல்லை. வியப்புடன் விஜயகுமாரனைச் சில விநாடிகள் நோக்கினான். சற்று முன்பு விஜயகுமாரன் பெயரைச் சொல்லிக் கிளைவ் அழைத்திருந்ததால் அவன் பெயர் மட்டும் காப்டனுக்குத் தெரிந்ததேயொழிய அவன் யாரென்பது தெரியாத தால், ”நீங்கள் யாரென்பதை நான் அறியலாமா?” என்று வினவினான்.

”தஞ்சைப் படையின் உப தலைவர்களில் ஒருவன். தற்சமயம் தேவிக்கோட்டையைக் காக்கவும், இந்தப் போலி ராஜாவைப் பிடித்துச் செல்லவும் சேனாதிபதி மானாஜியுடன் வந்திருக்கிறேன்” என்றான் விஜயகுமாரன்.

காப்டன் கோப் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பு காட்டு ராஜாவே முந்திக் கொண்டு, “மானாஜியா வந்திருக்கிறான் தேவிக் கோட்டைக்கு?” என்று வினவினார்.

“ஆம்.”

”சரி, அவனை நான் வரச் சொன்னதாகச் சொல். வந்து அடி பணியட்டும், மன்னித்து விடுகிறேன்.”

”மன்னிப்பை மகாராஜா அளிப்பது கஷ்டம்.”

“ஏன்?”

“முடியுமானால் தங்களை உயிருடன் பிடித்துவரப் பிரதாப் சிம்ம மகாராஜாவின் உத்தரவு.”

”என்ன பொருள் இதற்கு?”

“முடியாவிட்டால் உங்கள் பூத உடல் முழுவதும் தேவை யில்லை. தலையை மட்டும் கொண்டு போனால் போதும்.” இதைச் சொன்ன விஜயகுமாரன் வெறுப்புடன் திரும்பி, ”காப்டன்! நான் தூதனாக வந்திருக்கிறேன். இந்த வெட்டி ராஜாவுடன் பேச அவகாசமில்லை. தங்களிடம் விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்” என்று துவங்கி, ” காப்டன் கோப் தஞ்சைப் படைகளின் தலைவர் பிரபு மானாஜி தங்களைத் திரும்பிச் சென்றுவிடும்படி கூறுகிறார். தேவிக்கோட்டையை உங்களால் பிடிக்க முடியாதென்று சொல்லச் சொன்னார். பிரிட்டிஷார் ஒரு போலி ராஜாவுக்காக வீணாகப் படைச் சேதத்தையும், மானக்குறைவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டா மென்று அபிப்பிராயப்படுகிறார். பிரிட்டிஷாரிடம் அவருக்குள்ள மரியாதையாலும் நல்லெண்ணத்தாலும் என்னையே தூது செல்லும்படி பணித்தார்” என்று கூறினான்.
காப்டன் கோப்பின் கண்கள் விஜயகுமாரனை நன்றாக ஏறெடுத்து நோக்கின. பிறகு அவன் உதடுகள் சொற்களை மிகக் கம்பீரமாக உதிர்த்தன. ”ஆறாயிரம் மைல்கள் கடல் தாண்டி இங்கே வந்திருக்கும் பிரிட்டிஷார் அச்சத்தையும் தாண்டியவர்கள். இங்கே புது வரலாறு படைக்கவும், இங்குள்ள அநீதத்தைத் தவிர்க்கவும் எண்ணுகிறார்கள். இந்தக் காட்டு ராஜாதான் தஞ்சையின் உண்மையான மன்னர் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டு போன காப்டனை இடைமறித்து ஷாஹுஜி, ”பலே பலே இப்பொழுதுதான் நீங்கள் சரியான காப்டன் ” என்று கூவிச் சிலாகித்தார்.

காப்டனின் கண்கள் சரேலென்று அவரை நோக்கித் திரும்பி எரித்துவிடுவது போல் பார்த்தன. ”லெப்டிணன்ட் இந்தப் பைத்தியத்தை அவர் கூடாரத்துக்கு அனுப்பிவிடு ” என்றும் அவன் வாயிலிருந்து சொற்கள் கடுமையுடன் உதிர்ந்தன.

விஜயகுமாரன் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. கிளைவை நோக்கிய அவன் விழிகளிலும் அந்தப் புன்முறுவலின் சாயை இருந்தது. ”காட்டுராஜா எப்படியென்று உங்களுக்கும் தெரியும் போலிருக்கிறது?” என்றான்.

”எங்களுக்குத் தெரியாவிட்டாலும் அவர் அடிக்கடி தெரியப்படுத்துவார்” என்றான் கிளைவ் எரிச்சலுடன்.

காட்டுராஜா ஆசனத்திலிருந்து எழுந்திருக்க முயன்றார் ஆத்திரத்துடன்.

காப்டன் கோப்பின் ஒரு பார்வை அவரை மீண்டும் உட்கார வைத்துவிட்டது. அதற்குப் பிறது காப்டன், ”தூதுவரே! கேளுங்கள்” என்று மரியாதைவுடன் பேச்சைத் துவங்கி, “தேவிக்கோட்டையைப் பிடிக்க எங்களுக்குக் கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார். ஆகையால் அதைப் பிடித்தே தீருவோம். அதற்கான பீரங்கிகளுடன் வந்திருக்கிறேன். வெள்ளை சோல்ஜர்களின் தரம் உங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பிரிட்டிஷ் சோல்ஜரும் பத்து இந்தியச் சிப்பாய்களுக்கு நிகர்” என்று கூறினான்.

”அப்படியும் கணக்குச் சரியாக வரவில்லையே?” என்றான் விஜயகுமாரன்.

கிளைவ் புரிந்து கொண்டதால் கண்களை மட்டும் ஓட்டினான் விஜயகுமாரன்மீது. காப்டனுக்கும் விஷயம் புரிந்து தானிருந்தது. இருப்பினும் கேட்டான், ”என்ன கணக்கு?” என்று.

விஜயகுமாரன் ஒரு விநாடி யோசனையில் இறங்கினான். பிறகு, ”உங்களிடம் வெள்ளை சோல்ஜர்கள் நானூறு பேர்கள் தான் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டான்.
விஜயகுமாரன் சொன்னது காப்டன் கோப்பிற்குப் பெரு வியப்பை அளித்தது. அதனால்?” என்றான்.

”தேவிக்கோட்டையை ஐயாயிரம் வீரர்கள் காத்து நிற்கிறார்கள். ஆகவே பத்துக்கு ஒன்று என்ற உங்கள் கணக்குச் சரியாக வரவில்லை. தவிர…”

“தவிர?”

”மகாராஷ்டிரர்களின் காற்று வேகக் குதிரைப் படை, நீங்கள் மராத்தாலைட்ஹார்ஸ்’ என்று குறுப்பிடுகிறீர்கள், அது, அதன் முழுப் பிரிவும் தேவிக் கோட்டையில் இருக்கறது.”

இந்தச் செய்தி பேரதிர்ச்சியை அளித்தது காப்டனுக்கு. இந்த ‘லைட்ஹார்ஸ்’ படையைப் பற்றி அவன் பலமுறை கேட்டிருக்கிறான். மின்னல் வேகத்தில் வரும் மகாராஷ்டிரக் குதிரைப் படை கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளை நிர்மூலம் செய்து விடும் என்பது பிரிட்டிஷ் வட்டாரங்களில் சாதாரணமாகப் பேசப்பட்டு வந்த விஷயம். அதுவே காப்டனுக்கு அதிர்ச்சியை அளித்ததென்றால், தங்கள் படைபலத்தை எதிரிக்கு அறிவிக்க எத்தனைத் துணிவிருக்க வேண்டும் விஜயகுமாரனுக்கு என்று எண்ணியதால் வியப்பும் நிரம்பியது அவன் இதயத்தில்.

காப்டன் மனத்திலோடிய எண்ணங்களை விஜய குமாரனும் உணர்ந்திருக்க வேண்டும். ஆகவே அவன் கூறினான், “படை பலத்தை உங்களுக்கு விளக்கும்படி மானாஜியே சொன்னார்” என்று.

இந்தச் சமயத்தில் கிளைவ் உட்புகுந்தான் சம்பாஷணையில், “உங்கள் படைபலத்தைக் கூறுவது உங்கள் நம்பிக்கையைக் குறிக்கிறது. ஆனால் படை பலம் மட்டும் போர்களை வெல்வதில்லை. இதை உன் தளபதியிடம் சொல், விஜயகுமாரா! அது மட்டுமல்ல. பிரிட்டிஷ்காரர்கள் முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று சொல்’ என்று கூறினான் கிளைவ் மிகத் திடமான குரலில்.

விஜயகுமாரன் கிளைவை நோக்கித் தலை தாழ்த்தினான். ”லெப்டினண்ட்! அநாவசியமான அழிவைத் தவிர்க்கவே என்னைத் தூது அனுப்பினார் தளபதி. பிறகு உங்கள் விருப்பம். நீங்கள் எப்பொழுதும் கொள்ளிடத்தைக் கடக்கலாம். மகாராஷ்டிரர் உங்களை நட்டாற்றில் கொல்ல மாட்டார்கள். ஒருமுறை தரையை அடைந்துவிட்ட பிறகு நாங்கள் எதற்கும் பொறுப்பாளிகளல்ல” என்று கூறினான். பிறகு காப்டனையும் நோக்கி வணங்கிவிட்டு, ”வருகிறேன்’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.

காட்டுராஜா கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்திருந்தார். காப்டன் கோப் அவரை மிகுந்த வெறுப்புடன் நோக்கினான். அவரை நோக்கிச் சற்றே நகைத்த கிளைவ், ”காட்டுராஜாவின் வீரம் பறந்து விட்டது போல் தெரிகிறது” என்று கூறிவிட்டு, கூடாரத்திலிருந்து வெளியேறிச் சற்று எட்டச் சென்று கொண்டிருந்த விஜயகுமாரனைப் பின் தொடர்ந்தான்.

பின்னால் காலடிச் சத்தம் கேட்பதை அறிந்த விஜய குமாரன் சட்டென்று நின்று திரும்பினான். தொடர்ந்தவன் கிளைவ் என்று தெரிந்ததும் அவன் முகம் மந்தகாசத்தால் விரிந்தது. கிளைவ் அருகில் வந்ததும், “கிளைவ்! இப்பொழுது உன் கையை நான் குலுக்க முடியுமா?” என்று கூறிப் பலவந்தமாகக் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு அவன் கையுடன் தன் கையைப் கோத்துக்கொண்டு கொள்ளிடக் கரையை நோக்கி நடந்தான். ”கிளைவ்! தூதனாயிருந்தபோது நான் உன் எதிரி. உன்னுடன் கைகுலுக்குவது தவறு. இப்போது தூது முடிந்துவிட்டது. இனி நாம் பழைய நண்பர்கள்” என்றான் அன்பு சொட்டிய குரலில்.

“ஆம். ஆம். நாம் இருவரும் எதிர்க்கட்சிகளில் இருப்பது துர்ப்பாக்கியம்” என்றான் கிளைவ் வருத்தத்துடன்.

”தவறு கிளைவ். பெரும் பாக்கியம் என்று சொல்” என்றான் விஜயகுமாரன்.

“பாக்கியமா?”

“ஆம்.”

‘நாம் இருவரும் ஒருவரை யெருவர் கொல்வது பாக்கியமா?”

”வேறு கையால் இறப்பதைக் காட்டிலும் வீரனும் நண்பனுமான உன் கையால் இறப்பதை நான் பாக்கியமாகக் கருது கிறேன். ஆனால் கிளைவ், ஒன்று நிச்சயம்.’’

”என்ன அது?”

”நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை யாரும் தொடவிட மாட்டேன்.’

“ஏன்?”

“நீ என் உயிரையும் அரசகுமாரியின் உயிரையும் காப் பாற்றியவன். எல்லாவற்றுக்கும் மேலாக மகாவீரன்!” இதைச் சொன்ன விஜயகுமாரன் குரல் குழைந்து கிடந்தது.

கிளைவ் பதில் பேசாமலே நடந்தான். நண்பன் கையுடன் தன் கை இணைந்து கிடந்தது பெரும் இன்பமாயிருந்தது அவனுக்கு. இப்படி நடந்துகொண்டே கொள்ளிடக்கரையில் இறங்கி, தோணியிருந்த இடத்துக்கு வந்ததும், ”கிளைவ்! நாம் மீண்டும் சந்திப்போம்” என்று கிளைவைத் தழுவிக் கொண்டான் விஜயகுமாரன்.

கிளைவின் கைகளும் விஜயகுமாரன் உடலைத் தழுவி நின்றன. அவர்களை விலக்க ஒலித்தது தோணிக்காரன் குரல், ”நேரமாகிறது. இப்பொழுதே கொள்ளிடத்தில் நீர் ஏறுகிறது கடல் அலைகளால். நேரம் போனால் இந்த இருட்டில் ஆற்றைக் கடப்பது சிரமப்படும்’ என்று.

அந்தக் குரல் கணீரென்று அதிகாரத்துடன் ஒலித்ததைக் கேட்ட கிளைவ் அர்த்தம் பொதிந்த பார்வையை விஜயகுமாரன் மீது செலுத்தனான். கிளைவை விட்டு லேசாகச் சிரித்துக்கொண்ட விஜயகுமாரனும், ”கிளைவ்! இந்தத் தோணிக்காரரைச் சந்தி. இருவரும் என் நண்பர். உன்னைப் போல் இவரும் என்னைக் காப்பாற்றியவர்” என்று கூறவே கிளைவின் மனம் வியப்பைத் தழுவியது.

“யார் இவர்?” என்று கேட்டுக்கொண்டே தோணியை அணுகினான்.

கண் தெரிந்த தூரம் வரையில் கொள்ளிடம், இருளில் பயங்கரமாகக் காட்சியளித்தது. எதிர்க்கரையில் சற்றுத் தூரத்தே கிழக்கில் தெரிந்தது தேவிக்கோட்டை, சின்னஞ்சிறு விளக்கு களுடன். தோணியிலும் ஒரு விளக்கு இருந்ததால் தோணிக்காரனையும் கிளைவ் நன்றாகப் பார்க்க முடிந்தது. தோணியை ஆற்றில் நகர்த்த நீண்ட பெரும் கழியைத் தாங்கி நின்றவன் தோணிக் காரனல்ல என்பதையும் அவனும் ஒரு வீரனென்பதையும் பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொண்டான் கிளைவ். அவ்விருவரையும் அறிமுகப்படுத்திய விஜயகுமாரன், “இவர்தான் என் நண்பர் கிளைவ். கிளைவ் இவர் மகாராஷ்டிரத்தின் பெரும் வீரர்களில் ஒருவர். பெயர்…” என்று சிறிது தயங்கினான்.

”பெயர்?” சந்தேகத்துடன் எழுந்தது கிளைவின் கேள்வி.

“முராரி ராவ் கோர்படே” என்று விஜயகுமாரன் அறிவித்ததும் எதற்கும் அஞ்சாத கிளைவும் அஞ்சினான்.

“முராரி ராவ், முராரி ராவ்!” என்று இருமுறை சற்று உரக்கவே சொல்லவும் செய்தான்.

தோணியிலிருந்த முராரிராவ் லேசாக நகைத்தார். ”எதிர் எதிரான படைகளில் இருக்கும் இருவர் நேசமும் எனது நெஞ்சத்தை உருக்குகிறது” என்று கூறினார் நகைப்பின் ஊடே! அத்துடன் கை நீட்டிக் கிளைவின் கையைக் குலுக்கவும் செய்தார்.

”மகாராஷ்டிரர்களின் மகாவீரனுக்குத் தலை வணங்கு கிறேன்” என்று கூறிய கிளைவ் கையையும் குலுக்கித் தலையையும் வணங்கினான். அத்துடன், ”இங்கு எதற்கு நீங்கள் வந்தீர்கள்? உங்களுக்கும் தஞ்சை மன்னருக்கும் விரோதம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றும் சொன்னான்.

”நான் ஒரு நாடோடி. இப்பொழுது இங்கிருக்கிறேன்” என்று கூறினார் முராரி ராவ் சர்வசாதாரணமாக. அத்துடன் விஜயகுமாரனைத் தோணியில் ஏறச் சொல்லித் தோணியை நகர்த்தவும் செய்தார்.

தோணி புறப்படுவதைப் பார்த்துக் கொண்டே நின்ற கிளைவின் மனத்தில் எண்ண அலைகள் புரண்டன. முராரி ராவ் எதிர்க்கரையில் இருப்பதிலிருந்தே அபாயத்தை அவன் முழுதும் உணர்ந்துகொண்டான். “வீ மஸ்ட் பி கேர்ஃபுல் அபௌட் மராத்தாலைட் ஹார்ஸ்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அதனால் மிகுந்த சிந்தனையுடனும் கோபத்துடனும் திரும்பக் கூடாரத்தை நோக்கி நடந்து சென்றான்.

எதிர்க்கரையை அடைந்த விஜயகுமாரன் நிலையும் அப்படித் தானிருந்தது. தோணி.கரையை அடைந்ததும், ”பிறகு சந்திக்கிறேன், பழைய இடத்தில்” என்று கூறிய முராரிராவ், எதிரேயிருந்த அடர்ந்த தோப்பொன்றை நாடிச் சென்றார். தனியே விடப்பட்ட விஜயகுமாரன் கிளைவை எண்ணியபடியே நடந்து சென்றான் கோட்டையை நோக்கி.

பல புதர்களைக் கடந்தே கோட்டையை அணுக வேண்டியிருந்ததால் சிறிது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டி யிருந்தாலும் சிந்தனை சித்தத்தில் மண்டிக் கிடந்ததால் குருடன் போலவே ஒரு புதருக்கருகில் வந்ததும் யார் மீதோ மோதிக் கொண்டான். ”மன்னிக்க வேண்டும்” என்று கூறித் தலை நிமிர்ந்தவன் இதயம் திடீரென எரிமலையாகித் தணலைக் கொட்டியது. “யார் வரச் சொன்னது, உன்னை இங்கே ?” என்று சீறினான் அந்த வாலிப வீரன்.

பதிலுக்கு நகைப்புத்தான் கிடைத்தது மோதிய நபரிட மிருந்து. அந்த நகைப்பு குளிர் நீராக விஜயகுமாரன் இதயத்தில் விழுந்ததால் தணல் அணையவே செய்தது. நந்தினியின் அழகிய பெருவிழிகள் அந்த இருட்டில் கூட ஒளி பெற்று அவனைப் பார்த்தன. ”உபதளபதியானதும் அதட்டல் சிறிது அதிகமா யிருக்கிறது” என்று அவள் உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களில் விஷமம் இருந்தது, கேலியிருந்தது. இன்னொன்றும் இருந்தது. அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை, விஜயகுமான் இதயத்தால். ஆகவே, ”அரசகுமாரி…” என்று துவங்கினான். அவன்.

”உங்களுக்கல்ல…’ நந்தினியின் குரல் குழைந்து கிடந்தது.

”சொல்வது புரியவில்லை ” என்றான் விஜயகுமாரன்.
”புரியாத கதைதான் இது” என்ற அரசகுமாரி அவனை நெருங்கவும் செய்தாள்.

Previous articleRaja Perigai Part 1 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here