Home Historical Novel Raja Perigai Part 1 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 1 Ch23 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch23 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 23. ஊர், பேர், இடம்!

Raja Perigai Part 1 Ch23 | Raja Perigai | TamilNovel.in

அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய அரசமகள் அந்தப் புதருக்கருகில் தன்மீது திடீரென மோதிவிட்டதால் அதிர்ச்சி யடைந்த விஜயகுமாரன், அவள் தன்னைத் துணிவுடன் நெருங்க முற்பட்டதும் செய்வது என்னவென்று தெரியாமல் விழித்ததைக் கண்டு, தூரத்தேயிருந்த தேவிக்கோட்டையின் உயர்ந்த மாட விளக்குகள் அவனைப் பார்த்து நகைப்பனபோல் தீக்சுடர்களை ஆட்டவே செய்தனவென்றால், கொள்ளிடத்து அலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டு நெருங்கி வந்து அந்த வஞ்சியின் தலைக்குழல் வாசமலரையும் வளைந்த உடலையும் தழுவி மெல்லச் சுழன்று அவன் உடலையும்கூடத் தொட்டுவிட்டுச் சென்ற தென்றலின் இன்ப ஸ்பரிசம், அவனை ஏதோகண் காணாத சொர்க்கத்துக்கு இழுத்துச் சென்றது.

நெருங்கிய நங்கையின் சேலையின் மேற்பகுதி சற்றே நழுவியதையும், அவள் அதைத் திரும்பவும் தோள் மீது தூக்கிவிட்டுக் கொண்டதையும் புதரையடுத்த இருளில் அவன் சரியாகப் பார்க்க முடியவில்லை யென்றாலும், தன்னைக் கடமையினின்றும் நழுவச் செய்ய அலுவல் ஒன்று நெருங்கி விட்டதை அந்த வாலிபன் உணர்ந்தான். சற்றே நெருங்க முற்பட்ட அரசகுமாரியும் என்ன காரணத்தாலோ சட்டென்று நின்று விட்டாளானாலும், அவளுக்கும் அவனுக்கும் இருந்த மிகக் குறைந்த இடைவெளி காரணமாக அவள் சேலை முந்தானை அவன் கைமீது மெல்ல உராய்ந்து அவன் உயிரையே உறிஞ்சிவிடக்கூடிய வேதனையை அளித்தது. வாலிபனான விஜயகுமாரனுக்கு.

பருவமளித்த வேதனை, சமயமளித்த சோதனை, புதரளித்த மறைவு, புனமயிலளித்த துணிவு, இத்தனையும் சேர்ந்துவிட்டதன் காரணமாக, விஜயகுமாரன் தன் கைகளிலொன்றைத் தூக்கிச் சற்றுத் திடமாகவே நந்தினியின் அழகிய தோள் ஒன்றில் வைத்தான். அந்தச் சைகைக்காகவே காத்திருந்தாலும், சரேலென்று எதிரேயிருந்த வாலிபன் மீது விழுந்தவிட உள்ளம் துள்ளியே வந்தாலும், நந்தினி இருந்த இடத்தைவிட்டு நகராமலே நின்றாள், இயற்கையளிக்கும் நாணமெனும் பாதுகாப்பின் விளைவாக. ஆனால் அந்தப் பாதுகாப்பில்லாத விஜயகுமாரன் மட்டும் சற்று அத்து மீறி அவள் இடையிலும் தனது மற்றொரு கையைப் பாய்ச்சி அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.

அந்த நிலையில் அரசகுமாரி ஏதும் பேசவில்லை . பேச்சுக்கு அவசியம் இல்லாத சந்தர்ப்பம், மனம் உந்திய ஆசை. இவற்றால் சற்று அவன் கைகளை அப்புறப்படுத்தவே முயன்றாள் தஞ்சை மன்னன் மகள். ஆனால் அவள் முயற்சி பலிக்கவில்லை; இடையில் தவழ்ந்த கையை அவள் அகற்றத் தனது கையை அதன்மீது வைத்ததும், அந்தப் பொல்லாக் கை அவளது இடையைவிட்டுக் கையைச் சுற்றிக் கொண்டது கெட்டியாக. பிறகு அவளை இழுத்துச் சற்று எட்ட இருந்த தரையில் உட்கார்த்தவும் செய்தது.

தரை கடினமாகத்தான் இருந்தது. உட்கார்ந்த இடத்தில் கற்கள் அவள் பூக்குவியல்களை உறுத்தவே செய்ததால், அவள் சிறிது சாய்ந்தே உட்கார்ந்தாள். இடக் கையை ஒருபுறம் தரையில் ஊன்றி, விஜயகுமாரனும் அவளை அணுகி உட்கார்ந்து கொண்டான் பக்கத்தில். அவள் ஒரு கையைத் தன் கையில் பிடித்துக் கொண்டு அவள் கூந்தலிலிருந்த மலரை முகர்ந்தான் நீண்ட நேரம். அப்படி அளித்த காந்தத்தால் மெய்மறந்தோ என்னவோ அவன் முகவாய்க்கட்டை அவள் தலைக்கருங்குழலில் அதிகமாகவும் அழுத்தமாகவும் புதைந்தது. அதன் விளைவாகக் குழலின் புஷ்பத்துக்கும் குழலுக்கும் அருகில் அணைந்து விட்ட அவன் நாசி புஷ்ப இன்பத்தையும் முகர்ந்தது. குழலில் தடவி யிருந்த தஞ்சை அரைக்கீரை விதைத் தைலத்தின் இணையற்ற நறுமணத்தையும் நுகர்ந்தது. அந்தப் பொல்லாத நாசிக்குப் புத்தியில்லையென்பதை விஜயகுமாரன் இதழ்கள் நிரூபித்தன.

சிறிது நேரத்தில் தலையிலிருந்த மோவாய்க்கட்டை எழுந்து அவன் இதழ்கள் அவள் கழுத்தில் புதைந்ததும், அங்கிருந்தும் விலகி, கீழே எழுந்திருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத எழிலிரண்டிலிருந்தும் எழுந்த சுகந்தத்தை நுகரக் கழுத்துக்குச் சற்று அடியில் வந்து நின்றன. மலரும் தைலமும் இணைந்த நறுமணம் தையலின் உடலிலிருந்த கந்தத்தின் முன்பு எம்மாத்திரம் என்பதை எடுத்துக் காட்டவோ என்னவோ இதழ் களுடன் நாசியும் இணைந்தது.

‘இவர் இடக் கை’ அதுதான் தோளைப் பிடித்த கை, ‘எதற் காசு அத்தனை அழுத்திப் பிடிக்க வேண்டும்? எனக்கு வலிக்க மென்று தெரியாதா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் நந்தினி. ”உம்…’ என்ற எரிச்சரிக்கைச் சொல் அவள் உதடுகளிலிருந்து உதிர்ந்தது.

”என்ன நந்தினி?” அவள் காதுக்கருகில் தன் உதடுகளைக் கொண்டு சென்று வினவினான் விஜயகுமாரன்.

”நான்… நான்…”

”என்ன நீ…?”

“இதற்காக… இதற்காக….”

”சொல்லேன்.”

”வரவில்லை.” பின் எதற்காக வந்தாய்?”
”போரைப் பார்க்க வந்தேன். ‘ இதைச் சொன்ன நந்தினி சிறிது விலகப் பார்த்தாள்.

ஆனால் அவன் இரும்புக் கைகள் விடவில்லை அவளை, “நந்தினிஃ..!” ”உம்” என்றாள் நந்தினி கடுமையாக.

”அப்பா உம் ‘மே ரொம்பக் கடுமையாக இருக்கிறதே!” என்றான் விஜயகுமாரன்.

”சும்மா இருங்கள்.”

“சும்மா இல்லாமல் என்ன செய்கிறேனாம்?”

“அது உங்களுக்குப் புத்தியிருந்தால் தெரியும்.”

”அதுதான் போய்விட்டதே!”

”எங்கே?”

”உன்னிடம்.”

”எப்பொழுது?”

இதற்கு விஜயகுமாரன் உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. பிறகு சொன்ன போதும் மெதுவான குரலிலேயே சொன்னான், “நந்தினி! ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா உனக்கு?” என்று.

”ஏன் நினைவிருக்காது? அங்கேதானே நீங்கள்…” இந்த இடத்தில் அவள் சொல் அறுந்தது, உணர்ச்சி புரண்டது.

”நான்?”

”யாரும் தொடவும் துணியாத அரசமகளைத் தொட்டுத் தூக்கினீர்கள்…”

“தக்கி?”

”புரவிமீது போட்டீர்கள், முரட்டுத்தனமாக… நான் ஏதோ மூட்டைபோல்.”

”ஏன் நீ மூட்டையல்லவா?”

“மூட்டையா?”

“ஆம், புஷ்ப மூட்டை.”

”போதும் போதும் நிறுத்துங்கள். தொட்டுக் காட்ட வேண்டாம்… சொன்னால் போதும்!” அவள் சொற்களில் கோபம் கரை புரண்டு ஒலித்தது. கொள்ளிட அலைகள் தூரத்தே எழுந்து தரையை உடைத்துக்கொண்டு அவள் உதவிக்கு வந்து விடுவனபோல் கூச்சல் போட்டன.

விஜயகுமாரன் மெல்ல நகைத்தான். ”ஏன் நகைக் கிறீர்கள்?” என்ற வினவினாள் நந்தினி.

”இந்தப் புஷ்ப மூட்டையை அன்று முரட்டுத்தனமாகத் தூக்கி என் புரவியில் போட்டபோது அது இத்தனை எதிர்ப்பைக் காட்டவில்லை.”

நந்தினி உடனடியாகப் பதில் சொல்லவில்லை அவனுக்கு. சொன்னபோது அவள் குரலில் கனிவு இருந்தது. ”அன்று என் இதயம் நிலை வேறு” என்றாள் நந்தினி மிக ரகசியமாக.

“என்ன நிலை நந்தினி?”

”விரோத நிலை. உங்களைக் கொன்றுவிடக்கூட முயன்றேன் இருமுறை.’’

“இப்போது மாத்திரம் என்ன செய்கிறாயாம்?”

“இப்போது கொல்கிறேனா?”

“ஆம்.’’

”பொய் பொய்.”

”உண்மை உண்மை.”

“எப்படி உண்மை?”

“அன்று நான் தொட்டபோது சும்மா இருந்தாய். இன்று தொட்டால் சிணுங்குகிறாய்.”

நந்தினி மௌனம் சாதித்தாள். பிறகு மெள்ள அவன் கால் மீதிருந்த அவள் தொடை சற்று அதிகமாகவே அழுந்தியது. உடலும் அவனை நோக்கிச் சாய்ந்தது. அவன் காதுக்கருகில் தனது உதடுகளைக் கொண்டு வந்து சொன்னாள் அவள், “உடலின் நிலை இதயத்தின் நிலையைப் பொறுத்தது,” என்று.

”அது என்ன நிலையோ?”

”வேண்டும் போது இடம் தரும்; வேண்டாதபோது விலகும்”

“எப்பொழுது வேண்டும், எப்பொழுது வேண்டாமென்பது எப்படி விளங்கும்?”

”விளங்காத நிலைதான் அது.”

”விளங்காது, புரியாது.”

“புதிர் போடுகிறாயே”

நந்தினி அத்தனை இருட்டிலும் புன்முறுவல் கொண்டாள். “அது புரியாத புதிர்தான். இதுவரை, இத்தகைய இதய நிலை எப்படி ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது, திடீரென ஏன் மாறுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் யாருமில்லை” என்றாள் நந்தினி.

“நாம் கண்டு பிடித்தால் என்ன?” என்று அவளை இழுத்து இறுக்கிக் காதில் சொற்களை மிக ரகசியமாகச் சொன்னான் விஜயகுமாரன்.

நந்தினி நெகிழ்ந்தாள் உணர்ச்சி மிகுதியால்.

கோட்டையைச் சுற்றிலும் நடமாடிக் கொண்டிருந்த வீரர்கள் கூச்சலோ, எரிந்த தீபங்களோ, பந்தங்களோ, எதுவும் காதிலோ கண்களிலோ படவில்லை அவனுக்கு. கடலலைகள் முட்டித் தள்ளியதால் எழுந்துவிட்ட கொள்ளிட அலைகளின் இரைச்சலும் அவனைப் பாதிக்கவில்லை. இருவருமே அந்தப் புதருக்கருகில் வேறு ஓர் உலகத்தைத் தங்களுக்காகவே சிருஷ்டித்துக் கொண்டதால் கோட்டை ஒன்று இருப்பதாகக்கூட நினைப்பில்லை அவ்விருவருக்கும். புதரில் இருக்கக்கூடிய விஷ ஜந்துக்களைக்கூட விஷய சுகம் மறைத்துவிட்டது.

உப புக்தம் விஷம் ஹந்தி, விஷயை ஸ்மரணாதபி (உண்ட பின்பு கொல்லும் விஷம்; காமமோ நினைப்பினாலேயே கொன்று விடுகிறது) என்ற வாக்கியம் எத்தனை உண்மை என்பதை நினைத்துப் பார்த்தான் விஜயகுமாரன். வீரனான அவன் விரகத்தால் துடித்தான். இருப்பினும் பண்பாடு அவனை அத்தகைய துடிப்பிலும் தேக்கி வைத்தது. உணர்ச்சி வெள்ளம் அவள் இதயத்தை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. பெண்களின் நிலையே இப்படித்தான். தாங்கும் வரையில் திடம், தாங்காத நிலையில் வீழ்ச்சி. அதன் விளைவாக அவள் உடல் நன்றாகச் சாய்ந்தது அவன்மீது. என்ன காரணத்தாலோ சட்டென்று விஜயகுமாரன் விலகினான்.” ”தவறு ராஜகுமாரி, தவறு” என்று மெல்லிய குரலில் கடிந்தும் கூறினான்.

”கொஞ்சம் எனக்குப் பேச இடம் தருவீர்களா?” என்று ஒரு குரல் ஊடே புகுந்தது சற்று எட்ட இருந்து.

அந்தக் குரலைப்பற்றி இருவருக்கும் சந்தேகம் இல்லை. ஆகவே இருவரும் எழுந்தார்கள் அச்சத்தினால். குரலுக்குடையவர் அவர்களை நோக்கி மெல்ல வந்தார்.

Previous articleRaja Perigai Part 1 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here