Home Historical Novel Raja Perigai Part 1 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Perigai Part 1 Ch24 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch24 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 24. முராரிராவின் ஜோஸ்யம்

Raja Perigai Part 1 Ch24 | Raja Perigai | TamilNovel.in

புதுக் குரலொன்று இடையே புகுந்துவிட்டதன் காரணமாக, பரஸ்பரப் பிணைப்பிலிருந்து பிரிந்துவிட்ட விஜயகுமாரனும் தஞ்சை மன்னனின் செல்வியும் சற்றே சங்கடப்பட்டுத் திண்டாடியதைக் கண்ட முராரிராவ் புன்சிரிப்புத் தவழ்ந்த வதனத்துடன் அவர்கள் இருவரையும் சில விநாடிகள் கவனித்துக் கொண்டிருந்தது விட்டு, ”நந்தினி! இவரைச் சிறிது நேரம் எனக்கு விட்டுக் கொடுக்கிறாயா?” என்று வினவினார்.

நந்தினி முராரிராவைச் சுட்டுவிடும் சுடர் விழிகளுடன் ஏறெடுத்து நோக்கிவிட்டுக் கேட்டாள். “தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவரை நான் பிடித்துக் கொண்டா இருக்கிறேன்?” என்று.

“இப்பொழுது இல்லை” என்று இழுத்த சுமுராரிராவ் “நந்தினி நீ கோட்டைக்குப் போ. வெகு சீக்கிரம் இவரை அனுப்பி விடுகிறேன்” என்று கூறினார் விஷமம் ஒலித்த குரலில்.

நந்தினி உட்கார்ந்த இடத்தைவிட்டு வெகு வேகத்துடன் எழுந்து இருவரையும் உற்று நோக்கினாள் சில விநாடிகள். பிறகு தூரத்தே தெரிந்த கோட்டையையும் நோக்கினாள்; அடுத்து எதிர்க் கரையில் தெரிந்த வெள்ளையர் பாசறையையும் நோக்கினாள். நின்ற இடத்தில் வலக்கால் பெருவிலால் கோடு ஒன்றைப் பாதி விட்டமாக இழுத்தாள். சரேலென்று ஏதும் பேசாமல், விஜயகுமாரனிடம்கூட விடைபெறாமல் கோட்டையை நோக்கிக் காற்சிலம்புகள் கலீர் கலீரென ஒலிக்க வேகமாக நடந்தாள்.

அவள் போவதை விஜயகுமாரன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சரேலென்று திரும்பிய வேகத்திலும் ஒய்யாரமிருந்ததைக் கவனித்தான். கோபத்துடன் நடந்தபோது இலங்கிய நுண்ணிடை அடுத்திருந்த இருபெரும் அழகுகளை அசைத்த விந்தையையும் கவனித்தான். அதன் விளை வாகக் கோபத்துக்கும் அழகுக்கும் எத்தனை சம்பந்தம் இருக்கிற தென்பதை நினைத்துப் பெருமூச்சும் விட்டான். அந்தப் பெரு மூசைக் கவனித்த முராரிராவ் மெல்ல நகைத்தார்.

முராரிராவின் அநாகரிகமான தலையீட்டினாலேயே வெகுண்டிருந்த விஜயகுமாரன் அவர் நகைத்ததால் சினம் கொண்டு, ”எதற்காக நகைக்கிறீர்கள்?” என்று கேட்டான் சினம் குரலிலும் பூர்ணமாகத் தொனிக்க.
முராரிராவின் கண்கள், புதரின் அருகாமையிலிருந்த இருட்டில் கூட ஜொலித்தன விஷமத்துடன். ‘நீ பெருமூச்சு விட்டதைக் கண்டு நகைத்தேன்” என்றார் கேலி நிறைந்த குரலில்.

”பெருமூச்சு நகைப்பதற்கு உரியதா?” என்று வினவினான் விஜயகுமாரனும் மேலும் சினத்தைக் கூட்டி.

”சாதாரண காலங்களில் அனுதாபத்திற்குரியது” என்றார் முராரிராவ்.

”இப்பொழுது நகைப்பதற்குரியதாக்கும்?”

”ஆம். நாடே தனது கதி என்ன ஆகுமோ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஏற்படும் காமப் பெருமூச்சு எதற்கு உரியது? நீ தான் சொல்லேன்.”

விஜயகுமாரன் நீண்ட நேரம் பதில் சொல்லவில்லை . முராரி ராவ் சொன்னதில் பெரும் பொருள் புதைந்திருந்ததால் அவன் மனம் அவனையே கண்டித்தது, ‘உன் போக்கு சரியல்ல’ வென்று. அதனால் மனத்திடமும் வெகுண்டான் விஜயகுமாரன். ‘நீ தானே அவளிடம் என்னை இழுத்துக்கொண்டு போனாய்? உனக்குப் புத்தியில்லை?’ என்று தன் மனத்தைக் கேள்வியும் கேட்டான் உள்ளூற. விஜயகுமாரன் வேதனையை முராரிராவும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே அவனை ஆசுவாசப் படுத்தச் சொன்னார், ”விஜயகுமாரா! உன் வயதின் கோளாறு இது. ஆகையால் மன்னிக்கத் தக்கது” என்று.

விஜயகுமாரன் பதிலில் வெறுப்பு இருந்தது. ”இல்லை தளபதி மன்னிக்கத் தகாதது ” என்றான்.

”காரணம்?” முராரிராவின் கேள்வியில் ஏதோ சந்தேகம் இருந்தது.

”எதிரி அக்கரையில் இருக்கிறான்.”

”ஆம்.”

”இந்தச் சமயத்தில் மனம் போரில் ஊன்றியிருக்க வேண்டும். மாற்றம் மன்னிக்கத்தகாதது.”

இதைக் கேட்ட முராரிராவ் மெல்லச் சொன்னார், ”அதை நான் காரணமாக ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று.

”வேறு என்ன காரணம்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”இதயத்தைத் தொட்டுப் பார்” என்றார் முராரிராவ், இந்தச் சமயத்தில் அவர் குரலில் விஷமமற்ற உணர்ச்சி நிரம்பி நின்றது.

”இதயம் சரியாகத்தான் இருக்கிறது தளபதி.”

“இல்லை. உன் உயிர்ப்பணியை உதாசீனம் செய்து விட்டது.”

”என்ன பணியைக் குறிப்பிடுகிரீர்கள்?”

”அதுவும் மறந்துவிட்டதா விஜயகுமாரா? அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே என்ற அறிவுரையாவது உன் அறிவிலிருந்து விலகாதிருக்கிறதா?” என்று வினவின முராரிராவ் மேலும் சொன்னார்: “விஜயகுமாரா! நீ சிவகங்கையிலிருந்து புறப்பட்ட போது புனிதமான பணியை நிறைவேற்றப் பயங்கரமான சபதத்தைச் செய்திருக்கிறாய். யாருடைய தலையைக் கொய்வதாக நீ சபதம் செய்திருக்கிறாயோ, யாருடைய பொய் சபதத்தினால் ராணி மீனாட்சி தீக்குளித்தாளோ, அந்த மனிதன் பெரும் பலம் பெற்று மீண்டும் தமிழகம் நுழைந்திருக்கிறான். இந்த நிலையில் நீ இந்த இடத்தில் தஞ்சை மன்னனுக்கு உதவ முன்வந்திருக்கிறாய், பழைய சபதத்தை நிறைவேற்றும் ஒரு படியாக இதைக் கொள்ளவில்லை. நந்தினியின் நீள்விழி வீச்சினால் அவள் தந்தைக்கு உதவ இங்கு வந்திருக்கிறாய். ஆனால் பிரதாப சிம்மனை முழுதும் நம்பி அவனுக்கு உதவுவதால் உன் சபதம் நிறைவேறாது. பிரதாபசிம்யன் சமயத்துக்குத் தகுந்தபடி மாறக்கூடியவன். ஹிந்து சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் விருப்பம் இல்லாதவன்…”

இங்கே சிறிது தமது ஆவேசப் பேச்சை நிறுத்தினார் முராரிராவ். பிறகு ஏதோ கேள்வி கேட்க முற்பட்ட விஜயகுமாரனைத் தமது கையின் சைகையால் அடக்கி, ”விஜயகுமாரா! ஹிந்துக்களின் இந்தப் புண்ணிய பூமியைப் பார். ஏதோ ஒரு மகாவீரன் பிறந்து தலைதூக்கும் காலத்தில் ஹிந்துக்கள் தலை தூக்குகிறார்கள், மௌரியர்கள், குப்தர்கள் காலத்துக்குப் பின் சிவாஜி மகா ராஜா ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைத்தார். அவர் தந்தை ஷாஹுஜி மகாராஜா தென்னாடு முழுவதையும் மகாராஷ்டிர ஆதிக்கத்தில் கொண்டு வந்தார். மேற்கே சூரத்திலிருந்து தெற்கே திருச்சி வரை மகாராஷ்டிரர் ஆட்சி இருந்தது. அவருக்குப் பின்பு வியங்காஜி ஸதாராவுடன் தமது ராஜ்யத்தை இணைத்திருந்தால் இன்று கூட ஆர்க்காடு அரசும் இதர சில்லறை அரசுகளும் இங்கே தலைகாட்டியிருக்கமாட்டா. அவர்தான் முன்னோக்குடன் செய்யவில்லை. பெரிய அறிவாளி என்று பெயர் வாங்கியிருக்கும். இந்தப் பிரதாபசிம்மன் சற்று முன்னோக்கிப் பார்த்து ஸதாராவிடம் இணைந்திருந்தால் சந்தாசாகேபும், முஸபர் ஜங்கும் தலைதூக்க முடியாது. அவர்கள் தலைதூக்காவிட்டால் பிரிட்டிஷ்காரரும் பிரெஞ்சுக்காரரும் தலையிட முடியாது தட்சிணப் பிரதேச விவகாரங்களில். அப்படித் தலையிட முடியா தென்றால் இந்த காப்டன் கோப் அக்கரையில் வர அவசியம் இருக்காது” என்று உணர்ச்சி ததும்பப் பேசினார். இதை முடித்ததும் அவரும் துன்பப் பெருமூச்சு விட்டார்.

எதற்கும் நெகிழாத முராரிராவின் உள்ளமே நெகிழ்ந்து விட்டதைக் கண்ட விஜயகுமாரன் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந் தான். பிறகு மெல்ல வினவினான்: ”இத்தனை பேதம் நீங்கள் தஞ்சையின் சுற்றுப்புறங்களைப் பலமுறை சூறையாடியிருக்கிறீர்களே. மகாராஷ்டிர தளபதி மகாராஷ்டிர அரசையே சூறையாடுவது ஹிந்து ஆதிக்கத்திற்கு அடிகோலுவதாகுமா?”

முராரிராவ் தமது கண்களை உயரத் தூக்கி விஜயகுமாரனை நன்றாகப் பார்த்தார். அந்தக் கண்களில் அவன் கேள்வியால் வெட்கமோ வேறுவிதக் கலக்கமோ ஏற்படவில்லை.

”பிரதாப சிம்மன் ஸதாராவுடன் இணையாமல் தனிக்காட்டு ராஜாவாக இருக்க ஆசைப்படும் வரையில் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தைத் தவிர்க்க எதையும் செய்வேன், யாரையும் சூறையாடுவேன். ஆனால் விஜயகுமாரா! அவனும் ஒரு நாள் எனது வாளை நாட்டு நலனுக்காக எதிர்பார்ப்பான். அப்பொழுது முராரிராவ் பிரதாபசிம்மனுக்கு உதவத் தயங்கமாட்டான்’ என்று கூறினார் முராரிராவ்.

விஜயகுமாரன் மேற்கொண்டு அந்தப் பேச்சை வளர்த்த விரும்பவில்லை. பிரதாபசிம்மன் பெரிய அறிவாளியென் பதிலோ முராரிராவுக்கு இருக்கும் நாட்டுப்பற்று அவருக்கும் இருக்குமென்பதிலோ விஜயகுமாரனுக்குச் சந்தேகம் ஏதுமில்லாத தால் மெள்ள விஷயத்தை மாற்றி, ”தளபதியவர்கள் திடீரென இங்கு முளைத்த காரணம் தெரியவில்லை. எனக்குத் தோணி விடுவது அந்தக் காரணங்களில் ஒன்றாயிருக்காது என்று நினைக்கிறேன்” என்றான் மெதுவான குரலில்.

சாதாரண சமயமாயிருந்தால் முராரிராவ் நகைத்திருப்பார், விஜயகுமாரன் குத்தலை ரசித்துமிருப்பார். ஆனால் கனவு நிரம்பிய அவர் முகத்தில் அத்தகைய உணர்ச்சி ஏதும் தோன்றவில்லை. ”விஜயகுமாரா! நான் இங்கு வந்த காரணம் தோணிவிட அல்ல என்று நிச்சயமாகக் கூற முடியாது. போர்ப் பிரவாகத்தில் அறிவாகிய தோணியை விட உனக்குக் கற்றுக் கொடுக்கவே வந்திருக்கிறேன்.” என்றார் முராரிராவ் மெதுவாக.

”ஏன் அதை தேவிக்கோட்டையைக் காக்க வந்திருக்கும் மானாஜியிடம் கூறினால் என்ன?” என்று வினவினான்.

முராரிராவ் ஒரு விநாடி சிந்தித்துவிட்டுப் பதில் கூற முற் பட்டு, ‘விஜயகுமாரா! மானாஜி பெரும் படைத்தலைவர், மகாவீரர், பல போர்களைக் கண்டவர், என்னைவிட வயதில் மூத்தவர். ஆகையால் நான் சொல்லும் எதையும் அவர் ஏற்கமாட்டார். ஆகையால்தான் உன்னிடம் சொல்கிறேன்” என்றார்.

‘நான் சாதாரண உபதளபதி” என்று தயங்கினான் விஜயகுமாரன்.

”சில சமயங்களில் தளபதிகள் செய்ய முடியாததை உபதளபதிகள் செய்வார்கள். உதாரணமாக, நாம் சற்று முன்பு சந்தித்தோம் கிளைவ் என்பவனை. அந்தக் காப்டன் கோப்பை விடப் பெரிய காரியங்களை அவனால் சாதிக்க முடியும்” என்றார் முராரிராவ்.

இதைக் கேட்ட விஜயகுமாரன் அசந்து போனான். ”கிளைவ்! அவனைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று வினவினான் வியப்புடன்.

”அவன் பிரிட்டிஷ் படையில் ஒரு லெப்டினண்ட் என்பது தெரியும், வேறு எதுவும் தெரியாது.”

”அப்படியிருக்க அவனைப்பற்றி மிகப் பெரிதாக எடை போட்டிருக்கிறீர்களே?”

”பெரிதாகப் போடவில்லை விஜயகுமாரா! சரியாகத்தான் போட்டிருக்கிறேன். அவன் கண்களில் மகா சூட்சுமம் இருக்கிறது. சாம்ராஜ்ய சிந்தனை இருக்கிறது.”

”கண்களிலா”

“ஆம். ”அவற்றிலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியுமா?”

”கண்கள் மூளையின் சாளரம்.”

“அதனால்?”

”அவை காட்டிக் கொடுக்கும் ஒரு மனிதனின் மேதையை. எதற்கும் இந்தக் கிளைவிடம் மிக எச்சரிக்கையாயிரு. தேவிக் கோட்டையை இந்த இங்கிலீஷ் படையால் பிடிக்க முடியாது. ஆனால் இந்தக் கிளைவ் பிடித்தாலும் பிடிப்பான். ஆகையால் எச்சரிக்கையாக இரு” என்றார் திட்டவட்டமாகச் முராரிராவ்.

இதைக் கேட்ட விஜயகுமாரன் வியப்பினால் ஏதும் பேசவே இல்லை பல விநாடிகள். ஆனானப்பட்ட முராரிராவே கிளைவை அத்தனை தூரம் எடை போடுவதானால் அவன் புத்தி அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆகை யால் மேலும் முராரிராவ் கிளைவைப்பற்றி அதிகம் பேசுவா ரென்று நினைத்தான். அந்த நினைப்பை முராரிராவ் உடனடியாக உடைத்தார். ‘நான் இப்பொழுது உன்னிடம் பேச வந்தது கிளைவைப்பற்றி அல்ல. தேவிக்கோட்டையைப்பற்றி, அதன் பாதுகாப்பைப்பற்றி…’ என்ற முராரிராவ் “இந்தக் கோட்டையைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார்.

“பலமான கோட்டை, கொள்ளிடத்தின் முகத்துவாரத்தி லிருக்கிறது. நல்ல கப்பல் துறை” என்றான் விஜயகுமாரன்.

இதற்குமுராரிராவ் உடனடியாகப் பதில் சொல்லவில்லை . “இதன் பழங்காலப் பெயர் தெரியுமா உனக்கு? இதன் முதற் பெயர் தீவுக்கோட்டை, பின்னால் சோழமாதேவி ஒருத்திக்கு சாஸனம் செய்யப்பட்டபடியால் தேவிக் கோட்டையாயிற்று.”

“அப்படியா…”

“ஆம். கொள்ளிடத்தின் முகத்துவாரத்தில் ஆறுகள் இருபுறமும் வளைத்த தீவில் இது அமைந்திருக்கிறது. இந்தத் தீவு முழுவதும் அடர்த்தியான காடும் புதர்களும் நிறைந்திருக்கின்றன. இந்தத் தீவுக்குக் குறுக்கே ஒரு பெரிய வாய்க்காலும் ஓடுகிறது. தேவிக் கோட்டையென்னும் இத் தீவுக்கோட்டை பிரிட்டிஷ்காரர் கணக்குப்படி ஒரு மைல் சுற்றளவுள்ளது. இதோ பார்…” என்று சொல்லிக் கொண்டே முராரி ராவ் எழுந்து நின்றார். விஜயகுமாரனும் எழுந்து நின்றான்.

முராரி ராவ் கோட்டையையும் சுற்றுப் புறங்களையும் ஒருமுறை தமது கையால் சுட்டிக் காட்டிவிட்டு, “விஜயகுமாரா! ஒரு மைல் சுற்றளவுள்ள இந்தக் கோட்டையை அணுக முதலில் கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும். அது ஓர் இயற்கைப் பாதுகாப்பு. அப்படியே கடந்தாலும் இப்புறம் இருப்பதும் பெருங்காடு, புதர்கள். அதோ அந்தக் கோட்டையைப் பார். பதினெட்டு அடி உயரமுள்ள சுவர்கள். ஆங்காங்கு இடையிடையே உயரமான கூண்டுகள். பீரங்கி வைத்துச் சுடுவதற்கும் எதிரி வரும் திசையை அறிவதற்கும் பலமான கோட்டை. ஆனால் இன்று அதற்குப் போதிய பலமில்லை” என்றார்.

”ஏன்?”

”காரணம், ஆயுதக் குறைவு.”

“என்ன ஆயுதங்கள் தேவை?”

“முக்கியமாகப் பீரங்கிகள்.”

“அவை இருக்கின்றன.”

”ஆம். கோட்டைக்குள் பத்திரமாக. ஆனால் எதிரி, கோட்டைக்கு எதிரில் வந்து தரிசனம் கொடுக்க மாட்டான் நீங்கள் சுட. அவர்களிடம் கோட்டையை நீண்ட தூரத்திலிருந்து தகர்க்கும் ‘பாட்டரிங் கானன்’ (கோட்டையைத் தகர்க்கும் பெரிய பீரங்கி) உண்டு.”

முராரி ராவ் விஷயத்தை விளக்க விளக்க விஜயகுமாரன் இதயத்திலும் மெல்ல அச்சம் உதயமாயிற்று. அதனால் கேட்டான்; “அப்படியானால் அவர்களைச் சமாளிக்க முடியாதா?” என்று.

“முடியும் ஒருவகையில்’ என்றார் முராரி ராவ். “எப்படி?”

“எதிரியைக் கோட்டையில் சந்திக்காதே.”

“வேறெங்கே சந்திப்பது?”

“இந்தக் காட்டில் சந்தி. இங்குள்ள புதர்களில் சந்தி.”

“இங்கிருந்தா”

”ஆம்” என்ற முராரிராவ் வெகு ரகசியமாக விஜயகுமாரனுக்குப் போர் முறையை உபதேசித்தார். மெள்ள மெள்ள எதிரியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி இம்சை செய்ய வேண்டும் என்று விவரித்தார், அணு அணுவாகத் தமது திட்டத்தை விளக்கி. “இதைச் சொல்லத்தான் வந்தேன் விஜயகுமாரா, தஞ்சைக்கு வடமேற்கிலிருக்கும் எனது படையை விட்டு. இந்தப் படையெடுப்பைப் பற்றி நீண்டநாளாகப் பிரஸ்தாபம் இருந்து வருகிறது. ஆகையால் வந்தேன் மாறுவேட உடையில்” என்றும் கூறினார்.

”ஆம், ஆம். உங்கள் வேடத்தைக் கண்டு நானே முதலில் தோணிக்காரனென்று மலைத்தேன்” என்றான் விஜயகுமாரன்.

முராரி ராவ் பழைய நிலைக்கு வந்தார். “இப்போது நீ செல்லலாம். எதையும் நான் சொன்னதாக மானாஜியிடம் சொல்லாதே. நீயாகச் சொல். எல்லாவற்றையும்விட, பீரங்கிகளைவிட மகாராஷ்டிரர் புரவிப் புயல் படையை நம்பு. மராத்தா லைட் ஹார்ஸ் என்று சொன்னால் பிரிட்டிஷாரே நடுங்குவார்கள்” என்று சொல்லி நகைத்த முராரி ராவ், ”விஜயகுமாரா! இனி நீ கோட்டைக்குச் சென்று நந்தினியின் கோபத்தைத் தணி. அதற்கு நான் வழி சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
”போர் எதிரில் இருக்கும்போது…” என்று இழுத்தான்.

”இன்னும் இரண்டு நாட்களுக்குப் போர் கிடையாது” என்று கடைசியாக ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசிய முராரி ராவ் வேகமாக நடந்து அடுத்திருந்த காட்டுப் பகுதியில் மறைந்தார்.

விஜயகுமாரன் அவர் சென்ற திசையை நோக்கிக்கொண்டு சில விநாடிகள் நின்றான். பிறகு கோட்டையை நோக்கி நடந்தான். அவன் அன்று பல விஷயங்களை, புதுப் போர் முறைகளைக் கற்றிருந்தான் முராரி ராவிடம். ஆனால் எதிரிகள் தாக்க இரண்டு நாட்கள் ஆகுமென்று முராரிராவ் ஜோஸ்யம் சொன்னாரே, அதை எப்படிச் சொன்னார் என்பது அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் எதிர்க்கரையிலிருந்த கிளைவுக்கு அது விளங்கியது. மறுநாள் காலை தாக்குதலைத் தொடங்க வேண்டு மென்று காப்டன் கோப் கட்டளையிட்டபோது, “இன்னும் இரண்டு நாள் போகட்டும்” என்றான் கிளைவ்.

Previous articleRaja Perigai Part 1 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here