Home Historical Novel Raja Perigai Part 1 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 1 Ch25 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch25 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 25. கொள்ளிடக் காவியம்

Raja Perigai Part 1 Ch25 | Raja Perigai | TamilNovel.in

தேவிக்கோட்டையைத் தாக்க இரண்டு நாள் போகட்டும் என்று கிளைவ் கூறியதைக் கேட்ட காப்டன் கோப் வியப்பும் சினமும் ஒருங்கே இணைந்துவிட்ட உணர்ச்சியால் ஒரு விநாடி திணறினான். பிறகு மெல்லத் தனது கொந்தளிப்பை அடக்கிக் கொண்டு, ”காப்டன் இடும் உத்தரவுக்கு லெப்டினண்ட் பணிய வேண்டியது பிரிட்டிஷ் ராணுவப் பழக்கம்” என்றான்.

கிளைவின் முகம் கூடார விளக்கில் இகழ்ச்சிக் குறியை நன்றாகக் காட்டியது. ”பலக்குறைவுடனும் பட்டினியுடனும் எதிரியைத் தாக்குவதும் பிரிட்டிஷ் ராணுவப் பழக்கமா?” என்று வினவினான் கிளைவ்.

‘பட்டினியா!” கோப்பின் கேள்வியில் உள்ளிருந்த கோபம் அகன்று வியப்புத் தலைதூக்கி நின்றது.

”ஆம் நாம் கொண்டு வந்துள்ள உணவு சப்ளை இன்னும் மூன்று நாளைக்குத்தான் இருக்கும்” என்றான் கிளைவ்.

”மேலும் கப்பல் மூலம் உணவு சப்ளைகள் அனுப்புவதாகக் கவர்னர் கூறியிருக்கிறாரே”

”அந்தக்க ப்பல்கள் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டதாகப் போர்ட்டோ நோவோ துறைமுக அதிகாரி கூறவில்லையா? அப்படியிருக்க ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்குத் தகவல் போய் உணவு சப்ளை கப்பலும் இதர உதவிக் கப்பலும் வர இன்னும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஆகாதா?”

“ஆகும்.”

”தவிர நமது படைகளும் புயலில் தத்தளித்துக் களைத்திருக்கின்றன. இந்தப் படையை வைத்துக்கொண்டு எதிரேயுள்ள கோட்டையைப் பிடிக்க முடியாது.”

”அதனால்?”

”இன்னும் சில சோல்ஜர்களை அனுப்பும்படி கேட்டு ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்குக் கடிதம் எழுதுங்கள்” என்றான் கிளைவ்.
காப்டன் கோப் சிந்தனையில் ஆழ்ந்தான் சிறிது நேரம். பிறகு, ”அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுக் காகிதமும் பேனாவும் கொண்டு வரச் செய்து விவரங்களைக் கவர்னருக்கு எழுத முற்பட்டான்.

அவன் எழுத முற்பட்டதுமே கூடாரத்திலிருந்து கிளம்பிய கிளைவ் தீவிர யோசனையுடன் கொள்ளிடக்கரையை நோக்கி நடந்து அதன் கரைமீது நின்றான். எதிரே ஒரு மைலுக்கு அகண்டமாக விரிந்த கொள்ளிடமும், இடையே காடுகளும் புதர்களும் நிரம்பிய தீவுப் பிரதேசமும், கோடியில் முகத் துவாரத்துக்கும் அருகிலிருந்த தேவிக்கோட்டையின் மதிளும் பீரங்கிக் கூண்டுகளும் அவன் சிந்தனையைப் பெரிதும் கிளறின.

கண்ணுக்கு மிக ரம்மியமான அந்த இயற்கைக் காட்சி போர் ஏற்படும் போது எத்தனை பயங்கரமாக மாறக்கூடும் என்று எண்ணி, போயும் போயும் இந்தக் காட்டுராஜா எதற்காக நம்மிடம் வந்து சேர்ந்தான் என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான் கிளைவ். காட்டுராஜா நினைப்பு வந்ததும் தேவிக் கோட்டையை அடுத்திருந்த காட்டையும் புதர்களையும் ஊன்றிக் கவனித்தான். அந்த இருளில் காடு பெரும் பிசாசு போல் காட்சியளித்தது. ”இந்தக் காடு எனக்குப் பிடிக்க வில்லை” என்று தனது தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டான். இருப்பினும் ரசிகனாதலால் இரவிலும் கொள்ளிடமும் தீவுக் கோட்டையும் அளித்த ரம்மியமான காட்சியில் மனத்தைப் பறிகொடுத்து நீண்ட நேரம் கொள்ளிடக்கரையிலேயே நின்றிருந்தான்.

கொள்ளிடத்தை ரசித்து அவன் மட்டுமல்ல, காட்டை நினைத்ததும் அவன் மட்டுமல்ல, எதிர்க்கரையில் முராரிராவைப் பிரிந்து கோட்டைக்குள் புகுந்த விஜயகுமாரனும் அதே விஷயங்களில் இதயத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். கோட்டையின் மேற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தவன் நேராகத் தனது அறைக்குச் செல்லாமல் கோட்டைச் சுவரைச் சுற்றி, வீரர்கள் உலாவவும் எதிரிகள் வருகையை அறியவும் கட்டப்பட்டிருந்த அகலமான தளத்திற்குச் சென்று படிகள் மீது ஏறிச் சென்றான்.

அன்று என்ன காரணத்தாலோ வீரர்கள் யாரும் அங்கு அதிகம் இல்லை. கோட்டைச் சுவரின் இடைவெளிகளிலிருந்த பெரும் காவற்கூண்டுகளில் மட்டும் பார்வையாளர்கள் மாட்ச்லாக் துப்பாக்கிகளுடன் காவல் இருந்தார்கள். அக்கூண்டுகளில் ஒன்றைத் தாண்டி, சுவரோரத் தளத்தில் அவன் நடந்து சென்றபோது அங்கிருந்த வீரனொருவன் அவனுக்குத் தலை வணங்கினாலும் அதைக் கவனியாமலே அந்தத் தளத்தில் நடந்து சென்ற விஜயகுமாரன் தளத்தின் ஒரு மூலைக்கு வந்ததும் நின்றபடியே சுற்றுமுற்றும் நோக்கினான்.

இரவும்வானக் கூரையின்தாரகைகளும் கொள்ளிடத்துக்கு இணையிலா அழகைக் கொடுத்திருந்தன. தூரத்தே கொள்ளிடத்தை அணைக்கத் துடித்த கடலுங்கூட மிக இன்பமாகக் காட்சியளித்தது. அவனுக்கு இடப் பக்கத்தில் எட்ட இருந்த காட்டில் அவன் கண்கள் நிலைத்தபோது முராரி ராவின் எண்ணமே அவன் இதயத்தை ஆட்கொண்டது. அவர் சொல்லிவிட்டுப் போன போர் முறைகளை அவன் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தான். தேவிக்கோட்டை இருந்த தீவுக்குக் குறுக்கே ஓடிய வாய்க்கால்களையும் கவனித்தான். ‘அப்பப்பா! முராரி ராவ் சொன்னது எத்தனை சரி. அவர் போர் முறையை விடச் சிறந்த போர்முறையை யார் வகுக்கமுடியும்?’ என்று தன்னைப் பல முறைக் கேட்டுக் கொண்டான்.

சமயபுரச்சத்திரத்தில் சந்தித்த சம்பங்கள் அவனை முராரி ராவுடன் பெரிதும் இணைத்து நெருக்கின. அவர் தனது சபதத்தை நினைவு படுத்தியதுகூட அவன் மனத்திலே எழுந்தது. ராணி மீனாட்சியின் உருவம்; அவள் கண்கள் அவனைச் சுட்டன. உடலை வளைத்த தீயின் மத்தியில் அவள் காட்சியளித்தாள். என்னை மறந்துவிட்டாயா விஜயகுமாரா? உன் வம்சத்தையும் மறந்துவிட்டாயா? சபதம் என்னவாயிற்று?’ என்று பல கேள்விகளைத் தீயின் மத்தியிலிருந்தே ராணி தொடுத்தாள்.

விஜயகுமாரன் தனது கண்களை இரு கைகளாலும் மூடிக்கொண்டான். “இல்லை தாயே, மறக்கவில்லை, மறக்கவில்லை” என்று வாய்விட்டு வெறியன்போல் கூவவும் செய்தான்.

அப்பொழுது அவன் தோள்மேல் பதிந்தது ஓர் ஆறுதல் கரம். ”எதை மறக்கவில்லை?” என்று வினவியது ஒரு கிள்ளைக் குரல் அவன் காதுக்கருகில்.

விஜயகுமாரன் திரும்பவில்லை அவன் காதுக்கருகில் முணுமுணுத்த உதடுகளுக்குரியவள் நந்தினி என்பதை அவன் அறியவில்லையா என்ன? அவள் உடல் தன் முதுகுப்புறத்தில் மெல்லப் பட்டுக் கொண்டிருந்தையும் புரிந்து கொள்ளாத அளவுக்கு அவன் உணர்ச்சிகள் மங்கிவிட்டனவா என்ன?

இல்லை, இல்லை, மங்கவில்லை. அதற்குப் பதில் கொந்தளித்து எழுந்து கொண்டிருந்தன. இரவு அளித்த இருட்டின் பாதுகாப்பு, அவள் உடலழகுகள் பின்புறம் பதிந்தளித்த இன்ப ஜாலம், காதுக்கருகே ஒலித்த சிறுகுரல் அளித்த மந்திர ஸ்வரம், ஆகிய மூன்றும் அவன் உள்ளத்தின் சோகத்தைக் கிழித்தன. சபதத்தின் வேகத்தைக்கூடச் சிறிது சமனப்படத்தின. அந்த நிலையில் திரும்பாமலும் அவளை முன்புறம் இழுக்காமலும் சற்றுக் கோபத்தடன் பேசுபவன்போல் கேட்டான் விஜயகுமாரன், “நீ எதற்கு இங்கு வந்தாய்?” என்று.

அரசகுமாரி நந்தினி பின்னால் பதுங்கிய நிலைவிட்டு அவன் பக்கத்தில் வந்து அவன் கையொன்றுடன் தனது கையைக் கோத்தாள். சற்று இடித்துக் கொண்டும் நின்றாள், வேண்டுமென்றே. அத்துடன் கேட்டாள் மெதுவாக, “நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்?” என்று.

”கோட்டைக் காவலைப் பார்க்க வந்தேன்” என்றான் விஜயகுமாரன். ஏதோ பதில் சொல்லித் தப்பவேண்டு மென்பதற்காக. ”எந்தக் கோட்டைக் காவலை?” என்றாள் அரசுகுமாரி சிரித்துவிட்டு.

”தேவிக் கோட்டைக் காவலை” என்றான் விஜயகுமாரன். மெள்ளத் தனது இடக்கையை அவள் இடையிலும் செலுத்தினான். செலுத்திய இடை சிறிது சாய்ந்திருந்ததால் அதன் கீழே இருந்த பகுதியின் மேலெழுச்சியிலும் அந்தக் கை பட்டது.

அந்தக் கையின் ஸ்பரிசத்தால், அது தவழ்ந்து திடீரெனக் தங்கிவிட்ட இடத்தின் காரணத்தால், நந்தினி பெரிதும் நிலை குலைந்தாள். அதன் விளைவாக அவன் காதில் ரகசியமாகச் சொன்னாள், “இல்லை, தேவக்கோட்டைக் காவலை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை ” என்று.

”என்ன! காவலைக் கவனிக்கவில்லையா” என்றான் விஜயகுமாரன். அவன் சொற்களில் ஒலித்தது வியப்பா விரகமா என்பது நந்தினிக்குப் புரியவில்லை. ”இல்லை” என்றாள் நந்தினி.

‘’என்ன இல்லை?”

”காவலைக் கவனிக்கவில்லை.”

”வேறு என்ன செய்கிறேன்?”

”உடைக்கிறீர்கள்!”

சட்டென்று அவளை நோக்கித் திரும்பினான் விஜயகுமாரன், “உடைக்கிறேனா?” என்றான் வேகத்துடன்.

அவன் திரும்பிய வேகத்தில் அவன் மார்புடன் தனது மார்பு சரேலென்று உராய்ந்துவிட்டதால் திடுக்கிட்டாள் அரசகுமாரி. திடுக்கிட்டாளா அல்லது திருப்திப்பட்டாளா? அவளுக்கே புரியவில்லை.

விஜயகுமாரன் நிலையும் பெரும் சங்கடத்தில் இருந்தது. அப்படி இரு கருங்கற்கள் தன்மீது தாக்கும் என்பதை அவன் எதிர்பார்க்காததால் பயத்தால் அவன் மார்பு துடித்துக் கொண்டிருந்தது. பயத்தை உள்ளெழுந்து கொண்டிருந்த வெறி உதறிவிடும் போல் இருந்தது. அதனால் என்ன செய்வதென்று அறியாத விஜயகுமாரன், ”காவலை உடைக்கிறேனா? யார் காவலை?” என்று ஏதோ உளறினான். அத்துடன் அவள் இடையில் தனது இரு கைகளையும் செலுத்தித் தனது தலையை அவள் தோள்மீது வைத்தான்.

”ஆம் உடைக்கிறீர்கள், காவலை உடைக்கிறீர்கள். கோட்டைக் காவலை உடைக்கிறீர்கள். தேவிக்கோட்டைக் காவலை” என்று முணுமுணுத்தாள் அரசகுமாரி.

விஜயகுமாரன் தன் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டாலும், முடியாமல் திணறினான். அந்த நிலையிலிருந்து தப்ப, ‘தேவிக்கோட்டைக் காவலை நான் உடைக்கவில்லை. தவறு” என்றான் மெல்ல.

நந்தினியின் கரமொன்று, தனது தோள் மீது சாய்ந்து அவன் தலையைத் தடவிக் கொடுத்தது. “நான் தேவியல்லவா?” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.

”ஆம் ஆம்” என்றான் விஜயகுமாரனும் உணர்ச்சிப் பெருக்கால்.

“என் கோட்டையை உடைத்து விட்டீர்களே, என் பாதுகாப்பெல்லாம் பறந்துவிட்டதே…” என்ற அரசகுமாரி அவனை விட்டு மெல்ல அகல முயன்றாள்.

அவன் இரும்புக் கைகள் அவளை விடவில்லை. ‘’இது இன்னும் மோசம்…” என்றாள் அவள் மெதுவாக.

”எது?”

“இப்பொழுது உங்கள் கைகள்…”

”என்ன அவற்றுக்கு?”

”கோட்டையை நெரிக்கின்றன.”

”சே சே, அரசகுமாரி…!”

”என்ன சே சே அரசகுமாரியைப் பிடிக்கவில்லை?”

“பிடிக்காமல் என்ன?”

”ஆம் ஆம். பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் பலமாக. அடடே, விடுங்கள், வலிக்கிறது.”
இதைக் கேட்ட அவன் மெள்ளப் பிடியைத் தளர்த்தினான். ஆனால் முழுதும் அவளைச் சுதந்திரமாக விடாமல், ”அரச குமாரி…” என்று அழைத்தான்.

”ஆமாம், இத்தனைக்குப் பிறகும் அரசகுமாரி பட்டம் வேறு…” என்று இன்பமாக நகைத்தாள் நந்தினி.

”நந்தினி’ என்று அழைத்தான் விஜயகுமாரன். “என்னவாம் நந்தினிக்கு?”

”அதோ பார் கொள்ளிடத்தை ” முகத்துவாரத்தைச் சுட்டிக் காட்டினான்.

”அதற்கென்ன?” ”கடலலைகள் கொள்ளிடத்தைத் தழுவத்துடிக்கின்றன.”

”உம்…”

”ஆனால் இடையே எழுந்திருக்கும் மணல் மேடு அவற்றைத் தடுக்கிறது.”

“உம்…”

“என் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.”

“உங்கள் நிலையா?”

”ஆம் நந்தினி. உன்னை அடைய என் இதயக் கடலில் அலைகள் கொந்தளித்து எழுகின்றன. இடையே என் சபதம் என்ற மணல் மேடு அலைகளைத் தடுக்கின்றது” என்ற விஜயகுமாரன் பெருமூச்செறிந்தான்.

”கடலும் உங்களைப் போலத்தான்” என்றாள் அவள்.

“எப்படி?”

”அதோ பாருங்கள் கடலை.”

“பார்த்தேன்.”

“தெரியவில்லையா?”

”எது?”

”மணல் மேட்டைப் பிளந்து கொண்டு அலைகள் ஒரு கால்வாயைச் சிருஷ்டித்திருக்கின்றன.”

”ஆம்.”

”அதன் மூலம் கொள்ளிடத்துக்குள் பாய்ந்து வருகின்றன.”

”ஆம்’’ என்ற விஜயகுமாரன் சிந்தனையில் ஆழ்ந்தான். ”என்ன சிந்திக்கிறீர்கள்?” என்று வினவினாள் நந்தினி.

”அந்தக் கால்வாய்….” என்று இழுத்தான் விஜயகுமாரன். அவன் குரலில் வேகம் இருந்தது.

வேகத்துக்குக் காரணம் புரியாததால் நந்தினி கேட்டாள், “என்ன அந்தக் கால்வாய்க்கு?” என்று.

“மிக ஆழம்” என்றான் விஜயகுமாரன். ”சேச்சே, மிகவும் மோசம்” என்றாள் நந்தினி.

“மோசமில்லை. நல்ல ஆழம் நந்தினி. அதில் பெரும் கப்பல்கள் நுழைய முடியும்.”

“நல்ல பேச்சு.”

”அதனால்தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தத் தேவிக்கோட்டையை விரும்புகிறார்கள்.”

விஜயகுமாரன் பேச்சும் தன் நினைப்பும் வெவ்வேறு திசைகளில் ஒடுவதை உணர்ந்த நந்தினி வெட்கத்தால் குன்றிப் போனாள். ‘ஐயையோ வெட்கக் கேடே என் நினைப்பு என்னை இத்தனை மோசமாகிவிட்டது!’ என்று தன்னை நொந்து கொண்டாள்.

அவன் கைகளிலிருந்து பலவந்தமாக விடுவித்துக் கொண்டு தாழ்வரையில் மெல்ல நடந்து சென்றாள். அவளைப் பின் பற்றிச் சென்றான். அவன் ஓரிடத்தில் நின்று கடலையும் கொள்ளிடத்தையும் நோக்கினான். விஜயகுமாரன் பின்புறமாக வந்து அவளை வளைத்து வலுவுடன் அணைத்தான். அவள் ஏதும் பேச வில்லை. அவன் பேசினான் அவள் காதுக்கருகில், ”கோட்டையை உடைக்கப் போகிறேன்” என்று.

அதற்கும் பதில் சொல்லவில்லை அவள். ”அதோ பார் கொள்ளிடத்தையும் கடலையும். கடல் வழி வகுத்துக் கொண்டது வீரகாவியம். கொள்ளிடம் இடங்கொடுத்தது காதல் காவியம். இரண்டும் கலப்பதில் விளைந்திருக்கிறது இன்ப வெள்ளம். இயற்கையின் வெள்ளம் அது. கரையை அலட்சியம் செய்வது, விளைவுகளை அறியாதது. ஆனால் கடவுள் அளித்தது” என்று அவள் காதுக்கு அருகில் காவியம் பேசினான்.

அவள் இதயமும் அந்தக் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள நிலை அத்துமீறிக் கொண்டு இருந்தது. இருவர் உள்ளத்திலும் எழுந்த எச்சரிகைக் கூச்சல்கள் அடங்கத் தொடங்கின. துணிவு தலையெடுத்தது.

Previous articleRaja Perigai Part 1 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here