Home Historical Novel Raja Perigai Part 1 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 1 Ch26 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch26 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 26. காதலி ஓட்டம்

Raja Perigai Part 1 Ch26 | Raja Perigai | TamilNovel.in

கைகளில் வளைந்த வஞ்சி, காரிருள் அளித்த காப்பு, கடலலைகளின் கூச்சலளித்த வேகம், கொள்ளிட நீரைத் தொட்டுக் கொஞ்சி வந்த தென்றல், அவள் கூந்தலின் வாசமலரைத் தழுவியளித்த போதை, இயற்கையாகவே அவள் உடலில் கமழ்ந்த சுகந்தம் தந்த மயக்கம், நாண மெனும் கரையுடைந்ததால் எதற்கும் தயாராயிருந்த மனம் இத்தனையும் அந்த ஆண்மகனுக்குத் துணிவை அளித்தும், இச்சையின் பூர்த்திக்குச் செல்ல, துளிர்த்த துணிவின் பூர்த்தியை எட்ட, அவனுக்கு ஏனோ மனம் வரவில்லை.

இத்தனைக்கும் காவற் கூண்டுகளில் மட்டுந்தான் வீரர்கள் இருந்தார்கள். காவற் கூண்டுகளும் நீளமும் அகலமுமான கோட்டைச்சுவர்களின் இடையே நல்ல தூரத்தில் தான் இருந்தன; எதிர்க்கரையில் பிரிட்டிஷ் படையிருந்ததால் பந்தங்கள் கூண்டுகளைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்படியிருந்தும் ஏன் தயங்கினான் விஜயகுமாரன்? கைகளில் விலகி அவன் தோள்களில் மட்டும் பதிவானேன்? அவன் உடல் ஏன் திடீரெனக் கெட்டிப்பட்டு விட்டது? இந்தக் கேள்விகளை நந்தினி கேட்கவில்லை, ஆனால் அநுபவித்தாள்.

தன்னையும் காதற்கடலில் அழுத்தி அவனும் அழுந்த முற்பட்ட நிலையில், ஏன் அப்படி ஓர் இடையூறு வந்தது என்பது விளங்காத நந்தினி ஏக்கப் பெருமூச்சு விட்டாள். விஜயகுமாரன் அவள் ஏக்கத்தை உணர்ந்த பின்பும் உணர்ச்சிகளைக் கொட்டினானில்லை. ஆகவே, ஏதும் பேசாமல் தன் கைகளை அகற்றிச் சரிந்துவிட்ட அவள் மேலாடையைத் தன் கைகளாலேயே எடுத்து அவள் மீது போர்த்தினான் மிக மெதுவாக. அவள் இதயம் படபடத்தது. அவள் பின்னால் மீண்டம் அவன் உடல் ஒரு முறை பலமாக அழுந்தியது. அந்த நிலையில் அவள் காதுக்கருகில் சொன்னான் விஜயகுமாரன், ‘நேரமாகி விட்டது நந்தினி” என்று மிக மெதுவாக.

அவள் உதடுகளிலிருந்து பதிலேதும் உதிரவில்லை பல விநாடிகள்.

பிறகு உதிர்ந்ததும் ஒரு உம்’; அதுவும் நீண்டிருந்தது.

”நந்தினி” இதைக் காதுக்கருகில் சொன்ன விஜயகுமாரன் அவள் கழுத்தில் இதழ்களை ஆழப் புதைத்தான் ஒருமுறை. மீண்டும் அழைத்தான் ஒருமுறை, ”நந்தினி உன்னைத்தான்” என்று.

அந்த ‘உன்னைத்தான். அவளை எழுப்பியிருக்க வேண்டும். ‘என்ன எனக்கு?” என்று உதிர்ந்த சொற்களில் வேகம் இருந்தது, வேகமளித்த சீற்றமும் இருந்தது.
விஜயகுமாரன் கைகள் அவள் தோள்களை நெரித்தன. “இன்னும் சந்தேகமா?” என்று சொற்கள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன ஆசையுடன்.

”எதைப்பற்றி?” நந்தினியின் குரலில் சீற்றம் இருந்தது. ”என் ஆசையைப்பற்றி…”

”இல்லை. சந்தேகம் இல்லை. அதற்காகத் தோளை முறிக்க வேண்டாம். எடுங்கள் கையை.” நந்தினியின் சொற்கள் கடுமையுடன் உதிர்ந்தன.

”நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை நந்தினி” என்று கெஞ்சினான் விஜயகுமாரன், தோள்களிலிருந்த கைகளை எடுக்காமலே.

ஆனால் அந்தக் கைகளை அவள் தன் கைகளால் பிடுங்கி எறிந்தாள். ”நன்றாகப் புரிந்து கொண்டேன்’ என்றும் கூறினாள் சற்று விலகி நின்று, அவனை நோக்கித் திரும்பி.

”என்ன புரிந்து கொண்டாய்?” என்று வினவினான் விஜயகுமாரன் சோகக் குரலில்.

அந்த வாள் மகளின் கண்கள் நன்றாகச் சாணை பிடிக்கப் பட்ட வாள்களின் நுனிகளைவிடக் கூர்மையுடன் அந்த இருட்டில் பளபளத்தன. ”சொல்லட்டுமா?” என்று கேட்ட அவள் குரலில் பழைய இன்ப கீதம் இல்லை. புலியின் உறுமல் இருந்தது. அடிபட்ட பெண் வேங்கை போல் இருந்தாள் அவள்.

”சொல்” என்றான் விஜயகுமாரன்.

”பெண்களைத் தழுவிக் கைவிடும் கயவன் நீ” என்றாள் அவள், தயை, தாட்சண்யம், காதல் அனைத்தையும் கைவிட்டு.

”இல்லை நந்தினி’ “வேறு என்ன?” ”பெண்ணின் தனிமையைப் பயன்படுத்தாதவன்.”

”இத்தனை நேரம் செய்ததெல்லாம் என்ன?”

“அப்படி ஏதும் தவறு ஏற்படவில்லையே?”

”பெண்ணைத் தொடுவது தவறல்லவா? பின் நின்று தழுவுவது தவறல்லவா?”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத விஜயகுமாரன் திணறினான். ஆனால் அவள் தொடர்ந்து பேசினாள்: ”என்னை அடைய நீ இஷ்டப்படாததன் காரணம் தெரியும் எனக்கு. என்னைக் குழந்தையென்று நினைக்காதே.”

விஜயகுமாரன் அவள் பேச்சினால் நிதானத்தை இழந்தான். “என்ன காரணம் தெரியும் உனக்கு?”

“நீ என்னை வேண்டாத காரணம்… என் தந்தை” என்றாள் நந்தினி.

இந்தப் புதிய அஸ்திரம் அவன் இதயத்தில் வேகமாகப் பாய்ந்தது. புத்தியைக் கூடக் குழப்பியது. ‘’நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்றான் விஜயகுமாரன் குழப்பத்துடன்.

”என் தந்தை, அவர் தந்தைக்கு ஒழுங்காகப் பிறந்தவரல்ல” என்ற நந்தினி அவனைக் கூர்ந்து நோக்கினாள்.

”உன் தாய்தான் அவர் வாளுக்கு மாலையிட்டாளே! க்ஷத்திரிய தர்மப்படி அது விவாகம்தானே?”

”அது ராஜபுத்திரர் வழக்கம். மராட்டியர் பழக்கமல்ல.”

”அதனால்?”

“துக்காஜி என் தந்தையின் மனைவியைச் சேர்த்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அவர் ஆசைநாயகியாகக் கருதுகிறார்கள். ஆகவே என் தந்தை அவர் தந்தையின் வைப்பாட்டி மகன்.

இந்தச் செய்தி விஜயகுமாரனுக்குப் புதிதல்ல வென்றாலும் நந்தினி தன் போக்குக்கு அதை ஒரு காரணமாகக் காட்டியதும், அவள் தன் பிறப்பைப்பற்றிச் சொன்ன விதமும் அவன் இதயத்தைச் சம்மட்டி கொண்டு தாக்கின. அதனால் அவன் கூறினான், ”அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இது எனக்குத் தெரியாத விஷயமுமல்ல” என்று இறுக்கிப் பிடித்தான்.

அவள் திமிறினாள். ”திமிறினால் நொறுக்கி விடுவேன்” என்று இரைந்த அவன் தன் கைகளால் அவளை அளவுக்கு மீறியே நெரித்தான். “இதோ பார் நந்தினி! உன் தகப்பன் யார் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எதிர்க்கரையிலிருக்கும் காட்டு ராஜாவைப் போல் அவன் குப்பியின் மகனாயிருந்தாலும் இருக்கட்டும். சாதி காதலைத் தடுக்காது. என் விஷயத்தில் திருமணத்தையும் தடுக்காது…” என்று சீறிக்கொண்டு சொற்களை வாரிக் கொட்டிய அவனை நோக்கி நந்தினி கேட்டாள், “இப்போது தடுப்பது என்ன?” என்று.

”என் சபதம். எதிரேயுள்ள போர். இதில் எதை நிறை வேற்றுவதில் நான் மடிந்தாலும், சந்தர்ப்பம் கிடைத்தும் உன்னைக் கெடுக்கவில்லையென்ற சந்துஷ்டியுடன் நான் மடிய வேண்டும். ஆனால் இவையனைத்திலும் நான் பிழைத்து விட்டால் உன்னை நோக்கி வருவேன். உன் தந்தை மறுத்தாலும் உன்னைத் தூக்கிச் சென்று மணம் புரிவேன். இது சத்தியம், சத்தியம்’ என்று ஆவேசத்துடன் இரைந்த அவன், அவள் கன்னத்தில் இதழ்களை ஆழப் புதைத்தான். பிறகு கழுத்திலும் புதைத்தான். பிறகு அவளை விலக்கி நின்று, ”நீ செல்லலாம்” என்று உத்தரவும் இட்டான்.

அவள் செல்லவில்லை, வேறு எதுவும் சொல்லவும் இல்லை. நகைக்க மட்டும் செய்தாள்.

”ஏன் நகைக்கிறாய்?” என்றான் கடுமையுடன் விஜய குமாரன்.

“நீங்கள் என்னைக் கெடுக்கவில்லை?”

”இல்லை.”

“இப்பொழுது நீங்கள் செய்தது…”

”உம்…?”

”வேகமா, மோகமா?” நந்தினி அதைச் சொல்லி மீண்டும் நகைத்தாள். பிறகு விடுவிடுவென்று கோட்டை மதிள் தாழ்வரையில் நடந்து சென்று கிழே சென்ற படிகளில் தடதடவென ஓடினாள்.

விஜயகுமாரன் அவளைத் தொடராமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் படிகளில் இறங்கியோடிக் கண்ணுக்கு மறைந்ததும் பெருமூச்சொன்றை விட்டான். பிறகு அந்தத் தாழ்வரையில் இரண்டு கூண்டுகளுக்கு இடையில் இருந்த இடைவெளியில் நடந்தான் அங்குமிங்குமாக. கடைசியில் கடலை நோக்கினான். கோட்டையின் வடபுறத்தில் அக்கரையிலிருந்த பிரிட்டிஷ் படையை நோக்கினான். ‘எதிரி இன்னும் இரண்டு நாட்களுக்குத் தாக்க மாட்டானென்று முராரி ராவுக்கு எப்படித் தெரியும்?’ என்று தன்னைத்தானே வினவிக்கொண்டான். அவன் எண்ணங்களில் பகிர்ந்து கொள்ள இஷ்டப்படுபவர் போல் அந்தச் சமயத்தில் தளபதி மானாஜியும் படிகளில் மெள்ள ஏறி வந்தார்.
படிகளில் ஏறிக் கோட்டைச் சுவரின் அகல பீடத்தை அடைந்ததும் மானாஜி சற்று நின்று விஜயகுமாரனைப் பார்த்தார். பிறகு அவனை மெள்ள அணுகி, ‘உபதளபதி தீவிர சிந்தனையில் இருப்பதாகத் தெரிகிறது ” என்றார்.

அவரது கரகரத்த குரலைக் கேட்டதும் சுயநிலைக்கு வந்த விஜயகுமாரன், ”தளபதியவர்கள் சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்றான் பணிவுடன்.

மானாஜியின் வளைந்த மேலெழுந்த முரட்டு மீசை சற்று அசைந்தது. கண்கள் விஷமத்தைக் கொட்டின. “வந்திருக்க மாட்டாய் ” என்ற அவர் சொல்லிலும் விஷமம் ஒலித்தது.

”தங்கள் உத்தரவை மீறக் கூடியவனா நான்?” என்று விஜயகுமாரன் வினவினான்.

”உத்தரவை மீற மாட்டாய். ஆனால்…”

“ஆனால்?”

”அதற்குப் பணிய நேரமாகும். அது குற்றம் இல்லை.”

”குற்றமில்லையா?”

‘’’இல்லை”

”ஏனோ?”

”தளபதியைவிட அரசகுமாரியின் பதவி உயர்ந்தது.” ”என்ன சொல்கிறீர்கள்?”

”அரசகுமாரி ஓர் உத்தரவிட்டு நானும் ஓர் உத்தரவை இட்டால், முதலில் நீங்கள் படியக் கூடியது அரசகுமாரியின் உத்தரவுக்கு” என்று கூறினார் மானாஜி சர்வசகஜமாக.

‘’அரசகுமாரி எனக்கு என்ன உத்தரவிட முடியும்?” என்று வினவினான் விஜயகுமாரன் சந்தேகத்துடன்.

”அது எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட மானாஜி, ”ஆனால் அரசகுமாரியின் உத்தரவுக்கு நீங்கள் படியவில்லையென்பது தெரிகிறது” என்றும் தெரிவித்தார்.
”அது எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று வினவினான் விஜயகுமாரன்.

‘’அரசகுமாரி படிகளில் இறங்கிக் கோபத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறாள், என்மீது இடித்தும் விட்டாள். அதனால் பாதகமில்லை. எனக்கு வயதாகிவிட்டது” என்ற மானாஜி தமது மேலுதட்டை நன்றாக விலக்கி வெள்ளை வெளேரென்ற தந்தங்களைக் காட்டிச் சிரித்தார்.

விஜயகுமாரன் பொறுமை இழந்தான். ”தளபதி” என்று ஆத்திரத்துடன் அழைத்தான்.

”அரசகுமாரி மீது நீங்கள் மோதியது தவறு.”

மானாஜி முகத்தில் ஒரு விநாடி சிந்தனைச்சாயை படர்ந்து மறைந்தது. பிறகு, ”மகிழ்ச்சி” என்றார் புன்முறுவல் கொண்டு.

”எதற்கு மகிழ்ச்சி?” என்று கேட்டான் விஜயகுமாரன்.

”அவள் உடலின் மென்மையை நீ அறிந்து கொண்டதற்கு” என்றார் மானாஜி.

”நான் அறிந்து கொள்ளவில்லை” உளறினான் விஜயகுமாரன்.

“ஊகித்திருப்பாய்?” “ஆம்.”

”ஊகத்துக்கு நீண்ட நேரம் பிடித்திருக்கிறது. இடமும் மாற வேண்டியிருக்கிறது.”

”என்ன சொல்கிறீர்கள்?”

“முதலில் புதர், பிறகு கோட்டைச்சுவர்….”

‘’தளபதி!”

”இங்கே பல நாழிகைகள்…”

”தளபதி’’

“பிறகு காதலி ஓட்டம், கதாநாயகன் திண்டாட்டம்.”
இதைச் சொன்ன மானாஜி பிறகு விஜயகுமாரனைக் கவனிக்காமல் வானத்தைக் கவனித்தார். ”பாதி இரவு ஓடிவிட்டது. எனக்குத் தூக்கம் வருகிறது” என்றார்.

“தூங்குங்களேன்.”

”அதற்கு முன்பு உன்னிடம் இதைக் கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று ஓலையை எடுத்துக் கொடுத்தார் விஜயகுமாரனிடம்.

”இங்கு இருட்டாயிருக்கிறதே” என்றான் விஜயகுமாரன்.

”வா, என் அறைக்குச் செல்லுவோம்” என்று கூறி அவனைத் தமது அறைக்கு அழைத்துச் சென்றார் மானாஜி.

மானாஜியின் அறையிலிருந்த விளக்கில் ஓலையைப் படித்த விஜயகுமாரன், ”முடியாது. இது நடவாது” என்றான்.

”ஏன்?” என்று வினவினார் மானாஜி.

”எதிரியை அழிக்க இது வழியல்ல” என்றான் விஜயகுமாரன திட்டவட்டமாக.

”இது மன்னரின் ஆணை” என்றார் மானாஜி.

”தேவையான போது அதை மீறுவது, மன்னர் நன்மையை முன்னிட்டே மீறுவது குற்றமாகாது” என்றான் விஜயகுமாரன்.

”வேறு வழி இருக்கிறதா?” என்று கேட்டார். மானாஜி.

“இருக்கிறது.”

“சொல்.”

சொன்னான் விஜயகுமாரன். பல போர்களைக் கண்ட மானாஜி கூட வியப்பாலும் பிரமிப்பாலும் வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

Previous articleRaja Perigai Part 1 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here