Home Historical Novel Raja Perigai Part 1 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

47
0
Raja Perigai Part 1 Ch27 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch27 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 27. போர்த் துவக்கம்

Raja Perigai Part 1 Ch27 | Raja Perigai | TamilNovel.in

தஞ்சை மன்னர் பிரதாபசிம்மனின் ஆணைக் கடிதத்தை, அதாவது, அந்தக் காலத்து மொழி வழக்கப்படி மன்னரின் திருவோலையைப் படித்தபின்பு அதன்படி நடப்பது சாத்தியமில்லையென்று விஜயகுமாரன் சொன்னதும், வியப்படைந்த மானாஜி அவசியமானால் அரசர் உத்தரவை மீறுவதும் தவறாகதென்று அவன் கூறியதைக் கேட்டதும் திக்பிரமை அடைந்த விழிகளை அவன்மீது திருப்பினாரென்றால், எதிரியை முறியடிக்கும் வழியை அவன் விளக்கியதும் அவர் பிரமிப்புப் பன்மடங்கு அதிகமாகவே அவர் ஏதும் பேசாமல் சில விநாடிகள் நின்றார்.

நள்ளிரவாகியதால் தனக்குத் தூக்கம் வருகிறதென்று கோட்டை மதிளின் மேல்தாழ்வரையில் அவர் பேசின ஹாஸ்யப் பேச்சுக்கூட அவரிடமிருந்து மறைந்திருக்க வேண்டும் என்பதை, அவர் முகத்திலிருந்த பிரமிப்பும், அவர் சில விநாடிகளுக்கு மேற்கொண்ட மௌன விரதமும் நிரூபித்தன. கடைசியாக அவர் கேட்ட கேள்வியில் விஜயகுமாரன் திட்டத்தை ஒப்புக் கொள்ளக்கூடிய தோரணையும் இருந்தது. ”அப்படியானால் மன்னர் உத்தரவில் சாரமில்லையென்று சொல்கிறாயா?”

”அப்படிச் சொல்லவில்லை தளபதி. இது பழைய போர் முறை. இதிலும் நாம் வெற்றிகொள்ளலாம். ஆனால் நமது வீரர்களில் பலரைக் காவு கொடுத்துத்தான் வெற்றி கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டினான் விஜயகுமாரன்.

“ஏன்?” வினவினார் மானாஜி.

”எதிர்க்கரையில் எதிரிகள் இருக்கிறார்கள்” விஜயகுமாரன் தொடங்கினான்.

”ஆம்.”

”எதிரியை முன் சென்று தாக்கும்படி மன்னர் அந்த ஓலையில் குறிப்பிட்டிருக்கிறார்.”

”ஆம்.”

”அப்படித் தாக்க வேண்டுமானால் கொள்ளிடத்தை நாம் கடந்து, இந்தத் தீவின் பாதுகாப்பை விட்டுச் செல்ல வேண்டும்.”

அப்படி முக்கால்வாசிக் கொள்ளிடத்தைத் தாண்டியதும் எதிரி நம்மீது பீரங்களைப் பிரயோகிப்பான். துப்பாக்கிகளால் சுடுவான். நீரிலிருந்து நாம் போராட வேண்டும். கொள்ளிட நீர், மாலை அலைகளில் பெருகினால் அலை வேகம் புரவிகளை முன்னும் பின்னும் தள்ளும். மாட்ச்லாக்குகளை நாம் கையிலெடுப்பதற்குள் நிலத்தில் திடமாக நின்றிருக்கும் எதிரி நம்மைத் தீர்த்துவிடுவான்.”

இப்படி விஜயகுமாரன் விவரித்ததைக் கேட்ட மானாஜி மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார். “எதிரியை எதிர்க்கரையில் அதிக நாள் தங்கவிட்டு அவன் பலத்தை விருத்தி செய்து கொள்ள வசதியளிப்பது சரியாகுமா?” என்றார் முடிவில்.

”தவறாகாது. ஏனென்றால் அதிக நாள் எதிர்க்கரையில் எதிரி தாமதிக்கமாட்டான். மிஞ்சினால் இன்னும் நான்கு நாட்களுக்குள் ஆற்றில் இறங்கிக் கோட்டையை நோக்கி வருவான்” என்று விஜயகுமாரன் மேலும் விளக்கினான்.

”எதிரிக்கு உணவுப் பொருள்களோ, தளவாடங்களோ எல்லாம் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து வரவேண்டும். தரை மார்க்கத்தில் வர நாளாகும். ஆகவே கடல் மார்க்கத்தில் தான் வர வேண்டும். அப்படி வந்த கப்பல்கள் ஏற்கனவே அடித்த சூறாவளியில் அமிழ்ந்து விட்டன. மீண்டும் துரிதமாக அவர்களுக்கு ஆயுதவசதிகள் வேறு கப்பல்களில் வர வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு போன விஜயகுமாரனை இடைமறித்த மானாஜி, ”அதற்குள் அவர்களை நாம் தாக்கிவிடுவது நல்லதல்லவா?” என்று கேட்டார்.

“அல்ல. பறங்கிப் பேட்டையை விட்டால் கப்பல்களுக்கு அடுத்த துறைமுகம் தேவிக்கோட்டைதான். ஆகவே எதிரி அதிக ஆயுத வசதிகளையும் உணவு வசதிகளையும் பெறத் துறைமுகத்துக்கு வந்தாக வேண்டும்; துறைமுகத்துக்கு வர தேவிக்கோட்டைக்கு வந்தாக வேண்டும். தேவிக்கோட்டைக்கு வரக் கொள்ளிடத்தை ஏதாவது ஓர் இடத்தில் கடக்க வேண்டும்…” என்று சுட்டிக்காட்டினான் விஜயகுமாரன்.

ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாகத் தமது தலையை அசைத்தார் மானாஜி. அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் ஒரு பெரும் பவர் விளக்கின் அடியில் நின்று கொண்டிருந்தார்கள். தங்கள் தலைக்கு மேலிருந்த விளக்கைச் சுட்டிக் காட்டிய விஜயகுமாரன், ”இந்த விளக்கைப் பாருங்கள்” என்றான் தளபதியை நோக்கி.

தளபதி தலையை உயர்த்திப் பார்த்தார். ”நன்றாக இருக்கிறது” என்றார் விஷமமாக.

”இது வெள்ளைக்காரர் விளக்கு. உண்மையில் பிரிட்டிஷார் உபயோகப்படுத்தும் விளக்கு. சிம்னி எண்ணெயில் எரிகிறது. அதை நாம் உபயோகப்படுத்துகிறோம். பழைய கடலை எண்ணெய் விளக்கை மாற்றிவிட்டோம்” என்ற விஜயகுமாரன் சொற்களிலும் விஷமம் இருந்தது.

”ஆம். மாற்றிவிட்டடோம்.”

“மாறுதல் காலத்தின் இயல்பு.”

”உண்மை.”

”அதை எதிர்ப்பவன் கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்படுகிறான்.”

”ஆம். ஆம்.”

மானாஜியின் ஒப்புதலைக் கேட்டதும் பணிவுடன் கூறினான் விஜயகுமாரன். ”தளபதியவர்களைவிட நான் வயதில் சிறியவன். தளபதிக்கு யோசனை சொல்வது தவறு. ஆனால் காலத்தின் போக்குப்படி போர்முறைகளை நாம் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. எதிரியை முன்னேறித் தாக்குவது பழைய போர் முறை. நாம் இருக்கும் நிலையில் நாம் கொள்ளிட நீரில் இறங்குவதைவிட அவனை இறங்கச் செய்வது நல்லது. காலத்திற்கேற்றபடி போர்முறையை மாற்றிக் கொள்கிறோம்.”

”நல்லது, சொல் மேலே” என்றார் மானாஜி.

”எதிரி கொள்ளிடத்தில் இறங்கி வரட்டும். இந்தக் கரைக்கே வரட்டும்.”

“தேவிக் கோட்டையை அணுகட்டும் என்கிறாய்.”

”ஆம். அணுகித் தானாக வேண்டும். கப்பல்களை எதிர்பார்க்க.”

“சரி.”

”அவனை இந்தத் தீவின் இக்கரைக்கு வந்ததும் நாம் அவனை வளைத்துக் கொள்வோம். கோட்டையின் மேற்புறத்திலிருக்கும் காடுகளிலிருந்து.”

‘அப்படியா?”

”நமது வில்லாளிகள் விஷ அம்புகளைப் புதரின் மறைவிலிருந்து எய்வார்கள் எதிரிமீது. மாட்ச் லாக் துப்பாக்கிகளும் சீறும்.”

”அவர்கள் பீரங்கிகள் சும்மாயிருக்குமா?”

“அவையும் சீறும். அதன் வீச்சிலிருந்து விலகி நிற்போம். அவசியம் வரும்போது நமது சூறாவளிப் புரவிப் படை வெகு வேகத்துடன் எதிரிமீது பாயும்.”
இதற்குப் பிறகு மீண்டும் மோனநிலையை எய்தினார் தஞ்சைத் தளபதி. ”தேவிக்கோட்டைக்குக் குறுக்கேயும் ஒரு சிற்றாறு ஓடுகிறது…” என்றார் சிறிது நேரத்திற்குப் பிறகு.

“நாம் புதர்களிலிருந்து தாக்கினால் எதிரி அதைக் கடந்து கடற்கரைப் பக்கம் போக வேண்டியிருக்கும். அனுமதிப்போம்’’.

”அனுமதித்தால்…’’

”அங்கு எதிர்ப்புறத்தில் கோட்டையின் பீரங்கிகள் இருக்கின்றன. அவற்றுக்குப் பயந்து திரும்பினால் மாலை வந்துவிடும். சிற்றாற்று நீரும் கொள்ளிட நீரும் மாலைக் கடலலைகளில் பெருகி விடும். நீர்வேகம் அவர்களை அழிக்காவிட்டால் சிற்றாற்றின் எதிர்க்கரையில் நிற்கும் என் புரவிப் படை அவர்களைக் கரை ஏற வொட்டாது.”

”எதிரி வீரர்கள் அடியோடு அழிந்து போவார்கள். பயங்கர அழிவு” என்றார் மானாஜி.

”போரே அழிவுக்காகத்தான் தளபதி?” என்றான் விஜய குமாரன்.

மானாஜி ஏதோ யோசித்தார். பிறகு, ‘இந்தப் போர் முறை….” என்று கூறித் தலையை இருபுறமும் அசைத்துக் கொண்டார். திடீரென அவர் கண்கள் பளிச்சிட்டன. பளிச்சிட்ட கண்கள் விஜயகுமாரனை நோக்கவும் செய்தன.

விஜயகுமாரன் கண்கள் அந்தக் கண்களைக் தைரியமாகவே சந்தித்தன. ”நான் வகுத்ததல்ல” என்று அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களிலும் வெட்கமும் இல்லை, அதைரியமும் இல்லை.

சட்டென்று வினவினார் மானாஜி. ‘முராரிராவ் இங்கு எப்பொழுது வந்தான்?” என்று.

”இன்று மாலை ‘’ என்று பணிவுடன் கூறினான் விஜய குமாரன்.

”உனக்கு எப்பொழுது இந்தப் போர் போதனையைச் செய்தான்?”

”சில நாழிகைகளுக்கு முன்பு.”இது வேறு யாருக்காவது தெரியுமா?”

”தெரியும். அரசகுமாரிக்கு அவர் வந்தது தெரியும். போர்த் திட்டம் தெரியாது.’’

“ஏன்? அரசகுமாரியை அனுப்பிவிட்டு உன்னுடன் பேசினானா?”‘

“ஆம்.”

“முராரிராவுக்கு நேரிடைப் போர் பழக்கம் இல்லை. தந்திரக்காரன்” என்றார் மானாஜி வெறுப்புடன்.

”பிரிட்டிஷ்காரர்களும் தந்திரக்காரர்கள். தந்திரத்தைத் தந்திரத்தால்தான் ஜெயிக்க முடியும்” என்றான் விஜயகுமாரன்.

மானாஜி அதற்குமேல் பேசவும் இல்லை, கேள்வி கேட்கவும் இல்லை. ”நாளை பேசுவோம். நீ போய்ப் படுத்துக் கொள்” என்று கூறிவிட்டுப் பெரிய ஆலோசனை முடிந்து விட்டதற்கு அறிகுறியாகத் தமது கையை அசைத்தார்.

அத்துடன் தளபதியின் அறையைவிட்டு வெளியேறிய விஜயகுமாரன் உறங்கச் செல்லவில்லை. கோட்டையின் பல பகுதிகளைச் சுற்றி வந்து காவலைப் பரிசோதித்தான். நீண்ட நேரம் எதிர்க் கரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டான். விடிய சிறிது நேரம் இருக்கும் சமயத்தில் உறங்கச் சென்றவன் மறுநாட் காலை சூரியோதயமாகி நான்கு நாழிகைக்குப் பிறகே எழுந்திருந்தான்.

எழுந்ததும் தனது புரவியை அவிழ்த்துச் சேணம் போட்டு அதன் மீதேறிக் கோட்டைக்கு மேற்புறமிருந்த அடவிக்குள் நுழைந்தான். அங்கு இருக்கும் நிலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பியபோது அவனை வரவேற்கக் கோட்டை வாசலில் மற்றுமிரு தளபதிகளுடன் மானாஜி காத்திருந்தார். விஜயகுமாரனைப் பார்த்தவுடன் தமது புரவியைச் சற்று முன்பு நகர்த்திய மானாஜி, ”விஜயகுமாரா! இந்த இரு உப தளபதிகளும் இனி உன் சொற்படி கேட்பார்கள். இந்தக் கோட்டை உண்மையில் உன்னுடையது. இந்தப் போரை உன்னிஷ்டப்படி நடத்தலாம்” என்று கூறிவிட்டுத் தமது புரவியை நடத்திக் கொண்டு கடற்புறம் சென்றார்.

அவருடன் புரவிகளில் அமர்ந்திருந்த உபதளபதிகள் விஜய குமாரனை நோக்கித் தலை வணங்கினார்கள். சிறிதும் தயக்கமின்றியும் அரை விநாடிகூடத் தாமதமின்றியும் தலைமையேற்ற விஜயகுமாரன் உப தளபதிகளை நோக்கி, ”உங்களில் ஒருவர் அக்கரையிலுள்ள எதிரிகளைக் கவனியுங்கள்; இன்னொருவர் நமது புரவிப் படையைக் காட்டுக்குள் நிறுத்துங்கள். புதர்களில் நமது வில்வீரர்கள் மறைந்திருக்கட்டும்” என்று உத்தரவுகளை மடமடவெனப் பிறப்பித்தான்.

பிறகு கோட்டைக்குள் சென்று தனது அறையில் உணவருந்தினான். பிறகு தனது கட்டிலில் உட்கார்ந்து ஒரு பெரிய நாட்டுப் படத்தை விரித்துப் பார்த்துக் கொண்டே பல இடங்களைப் பக்கத்திலிருந்த கோழி இறகுப் போனாவை மையில் தோய்த்துச் சுழித்தான். பிறகு மன நிம்மதியுடன் படத்தை மடித்துவைத்து விட்டுப் படுக்கையில் மல்லாந்து விழுந்தான். பிற்பகலில் ஏதோ ஒரு கடிதத்தை எழுதி ஒரு வேலைக்காரனிடம் அதை அனுப்பினான். அது சென்ற ஒரு நாழிகைக்கெல்லாம் சூறாவளியொன்று அவன் அறைக்குள் புகுந்தது. ”இந்தக் கடிதத்தை எழுத உங்களுக்கு என்ன துணிச்சல்?” என்று அந்தச் சூறாவளி சீறவும் செய்தது. அதன் அழகிய காலொன்று தரையில் உதைத்த போது கலீரென்ற தண்டை கூட ராஜ பேரிகைபோல் முழங்கியது.

“இன்னும் நான்கு நாட்களில் போரை எதிர்பார்க்கிறேன்” என்றான் விஜயகுமாரன் எதிரே கனல் கக்கும் விழிகளுடன் நின்ற அரசகுமாரியை நோக்கி.

”அதனால்…”

”பெண்கள் இங்கு இருப்பதில் ஆபத்திருக்கிறது.”

”அது எனக்குத் தெரியும்.”

”போர் சமயத்தில் பெண்கள் இங்கிருப்பது உசிதமல்ல.”

“அதனால்?”

“உங்களை மீண்டும் தஞ்சைக்கு அனுப்பத் தீர்மானித்தேன்.”

“போகாவிட்டால் என்ன செய்வீர்கள்?”

”நந்தினி…”

”கொஞ்ச வேண்டாம்… சொல்லுங்கள், என்ன செய்வீர்கள்? உத்தரவை மீறியதற்குச் சிறை செய்வீர்களா?”

”உன்னை எப்படிச் சிறை செய்யமுடியும் நந்தினி?” “தாங்கள் இக்கோட்டையின் உபதளபதியாயிற்றே!”

“இருக்கலாம். ஆனால் நீ அரசகுமாரி, யார் உத்தரவையும் மாற்றலாம்.”

”மாற்றுகிறேன்” என்று சீறீய அரசகுமாரி மிகுந்த கோபத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் அவள் கண்களில் படவில்லை. கோட்டையை விட்டுப் போகவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டான் விஜயகுமாரன்.

அடுத்த நான்கு நாட்கள் கழித்து அக்கரையிலிருந்த எதிரிகள் நடமாட்டம் அதிகரித்தது.

எதிரி வீரர்கள் பீரங்கிகளையும் இதர தளவாடங்களையும் சின்னஞ்சிறு தோணிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கொள்ளிடத்தைக் கடக்கப் பலவித ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். விஜயகுமாரன் கோட்டை மதிள்மீது நின்றபடி எதிர்க்கரையில் நடந்த அனைத்தையும் கவனித்தான். காப்டன் கோப்பும் லெப்டினண்ட் கிளைவும் அக்கரையில் நிற்பதைக்கூட அவனால் பார்க்க முடிந்தது. அவர்கள் சைகை களிலிருந்து அவர்களுக்குப் புது உதவி வந்து விட்டது என்பதை விஜயகுமாரன் உணர்ந்து கொண்டான்.

உண்மையில் புது உதவி வந்துதான் இருந்தது. கிளைவின் விருப்பப்படி அதிகப்படியாகவே நூறு வெள்ளைக்கார சோல்ஜர்களையும் ஐந்நூறு சிப்பாய்களையும் கவர்னர் அனுப்பியிருந்தார். அவர்கள் வந்தவுடன் காப்டன் கோப் சுறுசுறுப்பைக் காட்டினான். கிளைவை நோக்கி, ‘லெப்டினண்ட் இரண்டு நாள் பொறுக்கச் சொன்னாய். நான்கு நாட்கள் பொறுத்துவிட்டோம். உதவியும் வந்து விட்டது. இனி போரில் இறங்க என்ன தடை?” என்று விசாரித்தான் காப்டன் கோப்.

”தடை ஒன்றுமில்லை, எடை சரியா என்றுதான் யோசனை” என்றான் கிளைவ்.

”எந்த எடை?”

”எதிரிகளைப்பற்றி நாம் போட்ட எடை.”

”சுதேசிகளைக் கண்டு பயப்படுகிறாயா லெப்டினண்ட்?”

”துப்பாக்கிக் குண்டு பாயும் போது சுதேசி விரோதி என்று அது பார்ப்பது கிடையாது” என்ற கிளைவ், ”சரி! இனி யோசித்துப் பயனில்லை. படைகள் ஆற்றில் இறங்க உத்தர விடுங்கள்” என்று கூறினான். காப்டன் கோப் கத்தியை உயர்த்தி, ”மார்ச்!” என்று கூறியவுடன் கொள்ளிடத்தில் தடதடவென்று இறங்கியது வெள்ளையர் படை.

Previous articleRaja Perigai Part 1 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here