Home Historical Novel Raja Perigai Part 1 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 1 Ch28 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch28 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 28. தோல்வி

Raja Perigai Part 1 Ch28 | Raja Perigai | TamilNovel.in

காப்டன் கோப் ‘மார்ச்’ என்று கூறியவுடன் வெகு துரிதமாக வெள்ளையர் படை கொள்ளிடத்தில் இறங்கிவிட்ட தென்றாலும், ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து வந்த உதவியால் அது இன்னும் அதிகப் பலம் பெற்றதாயிருந்தாலும் கிளைவுக்குப் பல விஷயங்கள் சந்தேகத்தில் இருந்தன.

பிரிட்டிஷ் படைகளும் சிறு பீரங்கிகளும் எதிரியின் கண்களுக்கு எதிரிலேயே தோணிகளிலும் படகுகளிலும் நதியில் இறங்கிய பின்புகூட எதிரி படையெடுப்பு விஷயத்தில் எந்தவிதச் சிரத்தையும் காட்டாமல் கப்சிப் என்று சும்மா இருந்ததைக் கண்ட கிளைவ், எதிரியின் இத்தனை மௌனத்துக்கும் அசிரத்தைக்கும் காரணம் என்னவாக இருக்குமென்று நினைத்துப் பார்த்தும் விடை கிடைக்க வில்லை அவனுக்கு. ஆகவே தன்னுடன் நின்றிருந்த காப்டனைப் பார்த்து, ”காப்டன் எதிர்க்கரையில எதிரியின் நடமாட்டமே காணோமே. எல்லாமே திடீரென்று நிசப்தமாகி விட்டதே!” என்று வினவினான்.

அதற்குக் காப்டன் விடை கூறுமுன்பு சர்வாலங்கார பூஷிதராய் அரச கோலத்தில் நின்றிருந்த காட்டுராஜா குறுக்கே புகுந்து, “நம்மைக் கண்டு எதிரி நடுங்குகிறான்” என்றான்.

இதைக் கேட்ட காப்டன் கோப் மிகுந்த வெறுப்புடன் அவரைப் பார்த்தான். ”உங்கள் பிரதாபத்தைக் கேட்க இந்தப் படையெடுப்பை நாங்கள் நடத்தவில்லை” என்றும் சொன்னான்.

காட்டு ராஜாவுக்கிருந்த உற்சாகத்தில் அந்தக் கடுமையைக் கவனிக்காமலே தமது சொரூபத்தைக் காட்டினார். “இத்தனை நாளாக எதிர்க் கரையில் நடமாடிக் கொண்டிருந்த எதிரிப் படை திடீரென ஏன் மறைந்துவிட்டது?” என்று கம்பீரமாகக் கேட்டார்.

”உம்மைக் கண்டு பயந்து விட்டார்கள்” என்றான் கிளைவ் இகழ்ச்சி நிரம்பிய குரலில்.

“யூ ஆர் ரைட்” என்று இங்கிலீஷிலும் தமது பரிச்சயத் தைக் காட்டிய காட்டு ராஜா, ”இங்கு நீ ஒருத்தனாவது புத்திசாலியாக இருக்கிறாயே” என்று சிலாகித்தார்.

”இருக்கிறேன். அதனால்தான் இத்தனை வெள்ளைக் காரரையும் பலி கொடுக்க வந்திருக்கிறேன்” என்றான் கிளைவ் இகழ்ச்சி மிதமிஞ்சி ஒலித்த குரலில்.

இந்தச் சமயத்தில் காப்டன் கோப் சீற்றத்துடன் திரும்பி னான், காட்டு ராஜாவை நோக்கி. “‘மகாராஜா, கான் யூ கீப் கொய்ட் ஆர் நாட்?” என்று வினவினான் சீற்றம் ததும்பிய குரலில்.

காட்டுராஜாவுக்கு அத்தனை ஆங்கிலப் பரிச்சயம் இல்லாததால் மிரள மிரள விழித்தார். ”சற்று நேரம் உம்மால் சும்மா இருக்க முடியுமா முடியாதா என்று கேட்கிறார் காப்டன்’ என்று கிளைவ் விளக்கினான் ஷாஹுஜிக்கு.

இதைக் கேட்ட காட்டு ராஜாவின் கோபம் எல்லை கடந்தது. ”காப்டன்! தஞ்சை மன்னனை மரியாதைக் குறைவாக நடத்துகிறீர்கள்” என்று இரைந்தார்.

காப்டன் கோப் அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப் படாமல் இரண்டு சோல்ஜர்களை அழைத்து, “மகாராஜாவைத் தோணியில் ḥஏற்றுங்கள்” என்று உத்தரவிட்டான்.

காட்டுராஜாவை இரண்டு சோல்ஜர்கள் பலவந்தமாகத் தூக்கித் தோணியொன்றில் ஏற்றினார்கள். அவர் கை கால்களை என்ன உதைத்தும் பயனில்லாமல் போகவே, தோணிக்குச் சோல்ஜர் வாகனத்தில் சென்றபோது, ”விடுங்கள் என்னை. பின்னால் இதற்குப் பெரும் தண்டனை அனுபவிப்பீர்கள்” என்று கூவினார் பெரிதாக. அவரை அதிகமாகக் கூவவிடாமலிருக்க ஒரு வெள்ளை சோல்ஜர் அவர் வாயை இறுகப் பொத்தினான்.

மகாராஜா தோணியில் ஏற்றப்பட்ட பிறகு காப்டனும் கிளைவும் ஒரு தோணியில் ஏறிக்கொள்ள படை கொள்ளிடத்தைக் கடக்க ஆரம்பித்தது. திடீரென வெள்ளமெடுத்தும் திடீரென வெள்ளம் வடிந்தும் பழக்கமுடைய கொள்ளிடத்தில் பிரவாகம் அதிகம் இல்லாததால் படை அக்கரையை நோக்கி அதிகம் சிரமம் இல்லாமலே நகர்ந்தது. முதல் தோணிகளில் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டிருந்த கூலிகள் சென்றார்கள். அடுத்து, சிப்பாய்கள் பகுதியும், கடைசியில் சோல்ஜர் பகுதியும் வந்தது. பாதி கொள்ளிடம் வந்ததும் காப்டன் கோப் கத்தியை உயரத் தூக்கி அசைக்கவே தோணிகள் ஒன்றுகூடிச் சென்றன.

காப்டன் கோப் இத்தனைக்கும் எதிர்க்கரையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். கொள்ளிடத்தின் இரு கிளைகளுக்கும் இடையேயிருந்த தீவு மிக அமைதியாக இருந்தது. அதன் காட்டுப் பகுதிகளிலும் கோட்டைப் பகுதியிலும்கூட அரவ மெதுவும் இல்லை. இடையேயிருந்த வெட்டவெளியும் மிக அமைதியாகவே காட்சி யளித்தது. அந்த நிலையைக் கண்ட காப்டன் கோப், ”லெப்டினண்ட் எதிரிப்படை அடியோடு மறைந்துவிட்டதே. இந்தப் பூர்ண அமைதி எனக்குத் திருப்தியாயில்லை” என்றான்.

“எனக்கும் திருப்தியில்லை ” என்றான் கிளைவ்.

”நம்மைத் திடீரெனத் தாக்க எதிரிகள் முயல்கிறார்கள்” என்று குறிப்பிட்டான் கோப்.

”இருக்காது” என்றான் கிளைவ்.

”ஏன்?”

”அவர்கள் நம்மைச் சுடுவதானால் இப்பொழுதே சுடலாம்.”

“ஆம்.”.

“சுடவில்லை.”

”அதற்குக் காரணம் கூடிய வரையில் அவர்களும் படைச் சேதத்தை விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.”

கிளைவின் இந்த விளக்கத்தை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகக் காப்டன் கோப் தலையை அசைத்தான். அணி வகுத்த படை தோணிகளில் மெல்ல மெல்ல தேவிக்கோட்டைத் தீவில் இறங்கலாயிற்று. இறங்கியபின்புகூட அவர்களை யாரும் எதிர்க்க வில்லை. பிரிட்டிஷ் படை இறங்கி முகாம் செய்த இடத்திலிருந்து தேவிக்கோட்டை ஒரு மைல் தூரம் இருந்தது. அதைத் தான் இருந்த இடத்திலிருந்து கவனித்த காப்டன் கோப் ”வெளிச்சம் இருக்கும் போதே படையை நடத்திச் செல்வோம் லெப்டினண்ட்” என்றான் கிளைவை நோக்கி.

”செய்யலாம்” என்று கூறிய கிளைவ் இரண்டு சோல்ஜர்களை அழைத்து, ”கூலிகள் உணவுப் பொருள்களுடன் படைக்குப் பின்னால் வரட்டும். படையை அணிவகுத்து முன்னால் நடத்துங்கள். நம்மிடமுள்ள சிறு பீரங்கிகள் (ஃபீல்ட் பீஸஸ்) வெள்ளையர் படையுடன் செல்லட்டும்” என்றான்.

அவன் உத்தரவுப்படி படை முன்னேறத் தயாராகி நின்றது. அப்பொழுது ஒரு சோல்ஜர் கோட்டைக்குச் செல்ல புதிய ஒரு பாதையும் இருப்பதாகக் கூறினான். அது நல்ல அகலமுள்ள பாதை என்பதை அவனுடன் சென்று கண்டுகொண்டு வந்த கிளைவ், காப்டன் கோப்பிடம் விஷயத்தைக் கூறி, “பின்வாங்க – அவசியம் இருந்தால் இந்தப் பாதை மிகவும் தேவைப்படும். ஆகவே அது வழியே செல்வோம்” என்று தெரிவித்தான்.

அதை ஆமோதித்த காப்டன் கோப், படையை நகரும்படி ஆணையிடவே அந்தப் பாதையில் படை நகர்ந்தது. சற்று முன்னேயிருந்த அடவியை நாடுமுன்புகூட எந்தவிதத் தொல்லையும் இல்லை பிரிட்டிஷ் படைக்கு. அந்த நிசப்த நிலையில் திடீரெனக் கோட்டையில் ஒரு பேரிகை திமுதிமுவென மெல்ல சப்தித்தது. அதைக் கேட்டதும் கிளைவை நோக்கித் திரும்பிய காப்டன் கோப் தனது லெப்டினண்ட் முகத்தில் பெரும் கவலை மண்டிக் கிடப்பதைக் கண்டு, ”என்ன லெப்டினண்ட்ட என்ன இது?” என்று வினவினான்.

”ராஜ பேரிகை!” கிளைவின் குரலில் மரியாதை, கவலை இரண்டுமே தெரிந்தன.

“யூ மீன்ட்ரம்ஸ்” என்று கேட்டான் கோப். ”எஸ். கிங்க்ஸ் ட்ரம்ஸ்” என்றான் கிளைவ்.

”எதற்கு?”

”பிரதாபசிம்மனாவது கோட்டைக்குள் வந்திருக்க வேண்டும், அல்லது அரச பரம்பரையினர் யாராவது வந்திருக்கவேண்டும். தவிர, போர் சன்னத்தத்துக்கும் அந்தப் பேரிகைதான் சப்திக்கும்” என்று கூறிய கிளைவ் சற்று நடையை நிறுத்தி நாலாபக்கமும் கண்களைச் செலுத்தினான். அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் பின்னாலும் பக்கவாட்டுகளிலும் மகாராஷ்டிரப் புரவிப் படை நிதானமாக வந்து கொண்டிருந்தது.

எதிரிப் புரவிப் படையைக் காப்டன் கோப்பும் கவனித்தான். ஆகையால், ‘லெப்டினண்ட் நமது ஃபீல்ட் பீஸஸ் (சிறு பீரங்கிகள்) வேலை செய்யட்டும்” என்று உத்தரவிட்டான்.

அந்த உத்தரவைக் கிளைவ் கத்தியை ஆட்டி அறிவிக்கவே, திடிரெனச் சோல்ஜர்கள் பீரங்கிகளை இயக்கினார்கள். சிறு குண்டுகளையே வீசவல்ல அந்தப் பீரங்கிகள் சீறியதை எதிரி லட்சியமே செய்யவில்லை. அதன் குண்டுவீச்சுக்கு எட்டாமலே மகாராஷ்டிரர் புரவிப் படை ஊர்ந்து கொண்டிருந்தது.

மிக நிதானமாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்து புரவிப்படை. பக்கங்களிலும் முன்னும் பின்னும் வந்த படையினர் தங்கள் கைகளிலிருந்த மாட்ச்லாக் துப்பாக்கிகளைக் கூடப் பிரயோகிக்கவில்லை. மிக அமைதியாக ஊர்வலம் போல் வந்து கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரர் பீரங்கிக் குண்டுகள் விழுந்தபோது சற்று விலகிச் சிரித்துக் கொண்டே புரவிகளை நடத்தினார்கள்.

மெள்ள மெள்ள இந்த ஊர்வலம் புதர்களிருந்த இடத்தை அடைந்ததும் மீண்டும் கோட்டையிலிருந்து திமுதிமுவென ராஜபேரிகை சப்தித்தது. அடுத்த விநாடி புதர்களின் மறைவிலிருந்து சீறி வந்த பல அம்புகள் வெள்ளையர் படைமீது விழுந்தன. உணவுப் பொருட்களைத் தாங்கிச் சென்ற நான்கைந்து கூலிகளும், சில சிப்பாய்களும் பத்துப் பதினைந்து சோல்ஜர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் காயமுற்று வீழ்ந்தனர். மீண்டும் புரவி வீரர்கள் தங்கள் மாட்ச் லாக் துப்பாக்கிகளால் சுட்டார்கள். மீண்டும் சில வெள்ளையர் பலியானார்கள்.

காப்டன் கோப் நகர்ந்து கொண்டிருந்த தனது படையைச் சட்டென்று நிறுத்தி அணிவகுத்து, ‘ஃபையர்’ என்று கூச்சலிடவே, பிரிட்டிஷ் சோல்ஜர்கள் தங்கள் மஸ்கெட்
துப்பாக்கிகளால் ஏககாலத்தில் எதிரிப் புரவிப்படையை நோக்கிச் சுட்டார்கள். ஒரே சமயத்தில் முழங்கிய துப்பாக்கிப் பிரயோக ஒலி காட்டுப் பகுதியில் பெரும் எதிரொலியை விளைவித்தாலும் எதிரிப் புரவிகள் ஒரே சீராக நகர்ந்து வளைந்து பாய்ந்து விலகி விட்டதால் ஒரு புரவிகூடச் சேதப்படவில்லை. மீண்டும் புதர்களிலிருந்து கிளம்பிய அம்பு வீச்சு அதிக நாசத்தை விளைவிக்கா விட்டாலும், சோல்ஜர்கள் கலக்கம் அதிகமாகவே காப்டன் கோப் படையைக் கடற்பகுதியை நோக்கி விரையுமாறு கட்டளையிட்டான். கடற்பகுதியைக் கடக்க தேவிக்கோட்டைக் காட்டுக்குக் குறுக்கே ஓடிய ஒரு சிற்றாறையும் கடக்க வேண்டியிருந்ததாலும் பிரிட்டிஷ் படை சிரமமின்றி அதைக் கடந்து கோட்டைக்குக் குறுக்கே தளம் அமைத்தது. “இன்றிரவு இங்கேயே தங்குவோம்” என்று அறிவித்தான், காப்டன் கோப் கிளைவுக்கு.

காட்டுராஜா குறுக்கிட்டு, ”எதற்காக?” என்று வினவினார்.

காப்டன் கோப் அவரைப் பார்க்காமலே கிளைவை நோக்கிச் சொன்னான், ”கடல் மார்க்கத்தில் உணவு சப்ளையும் ஆயுத சப்ளையும் அனுப்புவதாகப் போஸ்கவான் உறுதி கூறியிருக்கிறார்” என்று. கிளைவ்.

மோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். அன்றும் அடுத்த நாளும் கப்பல் ஏதும் கண்ணுக்குப் படாது போகவே, காப்டன் கோப் தனது படையில் பிரதான தலைவர்களை அழைத்து மந்திராலோசனையில் இறங்கினான். ”உணவு சப்ளை கப்பல்கள் வரவில்லை. நம்மிடம் கோட்டையைத் தாக்குவதற்கு வேண்டிய பெரிய பாட்டரிங் பீரங்கி இல்லை . என்ன செய்யலாம்?” என்று வினவினான்.

கிளைவ் ஏதோ சொல்லத் தொடங்கிய சமயத்தில் அவசர மாக ஒரு சோல்ஜர் படையின் ஊடே ஒரு புரவியில் வந்து, ”காப்டன் கோப் நான் போர்ட்டோ நோவோவிலிருந்து வருகிறேன். அட்மிரல் போஸ்கவான் எப்படியும் தேவிக் கோட்டையைத் தாக்கச் சொல்லி உத்தரவிடுகிறார். அந்த உத்தரவைத் தாங்கி ஒரு தோணியில் ஏறி இங்கே வந்தேன். இதோ உத்தரவு” என்று மடியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.
மாலை முதிர்ந்த நேரம். எதிரே எரிந்து கொண்டிருந்த காட்டுச் சுள்ளியின் ஒளியில் அந்த நேரத்தில் அந்த உத்தரவைப் படித்த காப்டன் கோப், கிளைவிடம் அதை நீட்டினான். அதைப் படித்த கிளைவ், ”காப்டன் கோட்டையைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை . அட்மிரலின் உத்தரவு திட்டமாயிருக்கிறது” என்றான்.

”என்ன செய்ய லெப்டினண்ட்?” என்று வினவினான் காப்டன் .

”நூறு சோல்ஜர்களைக் கொடுங்கள். இன்றிரவு நமது சிறு பீரங்கிகளைக் கொண்டு கோட்டை கிழக்கு வாயில் கதவுகளைத் தூளாக்கி விடுகிறேன். உடனே நாம் உள் நுழைந்து கோட்டை யைக் கைப்பற்றுவோம்” என்று யோசனை கூறினான் கிளைவ்.

அதை ஆமோதித்த காப்டன் இருந்த இடத்திலிருந்தே கோட்டைமீது பீரங்கிக் குண்டுகளை வீசுமாறு உத்தரவிட்டான். பீரங்கிகள் மறுநாட் காலையில் முழங்கின. ஆனால் கோட்டை தூரத்தில் இருந்ததால் எல்லாம் வியர்த்தமாயின. போதாதற்குப் படையின் உணவு நிலை பயங்கரமாகிவிட்டது. கையிலிருந்த மூன்று நாள் உணவும் தீர்ந்துவிட்டதால் பிரிட்டிஷ் படை திணறியது.

ஆகவே மறுநாள் மாலை சிற்றாற்றைக் கடந்து திரும்புமாறு படைக்கு உத்தரவிட்டான் காப்டன். ஆனால் காலையில் தண்ணீர் குறைவாயிருந்த சிற்றாறு மாலை கடல் அலைப் பிரவாகத்தில் தண்ணீர் உயர்ந்து விட்டதால் பல கூலிகள் தண்ணீரில் மூழ்கி விட்டார்கள். பண்டங்களைத் தாங்கிய பாத்திரங்கள் நீர்வேகத்தில் ஓடின. அவற்றைப் பிடிக்கப் போகிறவர்கள் போல் கூலிகள் மூச்சுத் திணறி மூழ்கியும் எழுந்தும் மிதந்தும் அவற்றுடன் சென்றார்கள். முன்னதாகக் கரை ஏறிவிட்ட சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் மகாராஷ்டிரப் புரவிப் படை திடீரெனத் தாக்கியது. மின்னல் வேகத்தில் வந்த புரவி வீரர்கள் தங்கள் வளைந்த வாட்களால், பீரங்கியை இயக்க முயன்ற பிரிட்டிஷ் சோல்ஜர்கள் பலரைப் பீரங்கியில் வெடி மருந்தைத் திணிக்கு முன்பாகவே வெட்டிப் போட்டார்கள்.

காப்டனும் கிளைவும் தங்கள் சோல்ஜர்களையும் சிப்பாய் களையும் அணிவகுத்து நிறுத்திப் போரிட்டார்கள். துப்பாக்கிகள் வெடித்த சமயங்களில் எதிரி பின்வாங்கினான். பிறகு திடீர் திடிரெனச் சாரி சாரியாக வந்து தாக்கினான். இதனால் சிதைக்கப் பட்ட பிரிட்டிஷ் படை காட்டை நோக்கி நகர்ந்தது. அங்கே கோட்டையின் பீரங்கிகள் காத்துக் கொண்டிருந்தன.

காப்டன் கோப் கொள்ளிட இக்கரையை அடைந்ததும், முகாமைக் கலைத்துக் கடற்கரைக்குப் படையை நடத்தியதுமே, விஜயகுமாரன் கோட்டைப் பீரங்கிகளைக் காட்டுக்குள் கொண்டு வந்து ஒளித்து வைத்திருக்கவே, பிரிட்டிஷ் படையின் சேதம் சொல்ல முடியாததாயிற்று. பிரிட்டிஷ் படை நிலை குலைந்து ஓடியது, புதிதாகக் கண்டுபிடித்த பாதை மூலம். ஆனால் கிளைவ் மட்டும் அந்தக் காட்சியை வெறுப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். தன்னை நெருங்கிய இரு மகாராஷ்டிரப் புரவி வீரர்களைக் கைத்துப் பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். அவன் கண்களில் கோபம் மிதமிஞ்சிக் கிடந்தது. சற்று நேரம் போர்க்களத்தைக் கவனித்துக் கொண்டே நின்றான். ”விஜயகுமாரா! இம்முறை வென்றுவிட்டாயென்று மனப்பால் குடிக்கதே. மீண்டும் வருகிறேன்” என்று எதிரேயிருந்த திறந்த வெளியை வெறுப்புடன் நோக்கிக் கூறிவிட்டு நிதானமாகவே நடந்தான். காட்டு முகப்பிலிருந்த இரு மகாராஷ்டிர வீரர்கள் தங்கள் மாட்ச்லாக் துப்பாக்கிகளை அவன்மீது குறி வைத்தார்கள். ஆனால், “நிறுத்துங்கள்” என்ற ஆணை அவர்களைத் தேக்கியது. அவர்களுக்குப் பின்னால் நின்ற விஜயகுமாரன், “இத்தகைய வீரன் பல தலைமுறைகளில் ஒருவன் பிறக்கிறான். அவனைக் கொல்லக்கூடாது” என்ற தத்துவம் பேசினான்.

Previous articleRaja Perigai Part 1 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here