Home Historical Novel Raja Perigai Part 1 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

45
0
Raja Perigai Part 1 Ch29 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch29 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 29. வீரமகள் ஒருத்தி

Raja Perigai Part 1 Ch29 | Raja Perigai | TamilNovel.in

ஸெய்ன்ட் டேவிட் கோட்டையின் கவர்னர் மாளிகையின் மந்திராலோசனை அறையில் 1749-ஆவது ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி அளவுக்கு மீறிய மௌனம் நிலவிக் கொண்டிருந்தது. முந்திய மந்திராலோசனை போலவே அப்போதும் இரவு நேரம்தான்; அப்போதும் அந்த அழகிய சாண்டலியர்ஸ் விளக்கு தனது ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருந்தது; அப்போதும் கவர்னர் ஸான்டர்ஸ் கையிலிருந்த டம்ளரிலிருந்து விஸ்கியைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் கொண்டுதானிருந்தார்; அப்போதும் மேஜர் லாரன்ஸும் மற்றுமுள்ள கௌன்சில் மெம்பர்களும்கூட மேஜையின் பக்க வாட்டுகளில் அமர்ந்துதான் இருந்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம், காப்டன் கோப்பும் லெப்டினண்ட் கிளைவும் ஆசனங்களில் அமர வில்லை. விஸ்கி டம்ளர்களைத் தொடவும் இல்லை. கைகளில் இடுக்கிக் கொண்ட ஹாட்டுடன் நின்று கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் வரை அவர்களைக் கேள்வி ஏதும் கேட்காமல் விஸ்கியை மெள்ள மெள்ள டம்ளர்களிலிருந்து உறிஞ்சிக் கொண்டிருந்த கவர்னர், கடைசியாக டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டுத் தமது நீலக்கண்களைக் காப்டன்மீது நாட்டி, ”எஸ். லெட் மி ஹாவ் இட்” என்றார் எந்தவிதக் கலக்கத்தையும் குரலில் காட்டாமலே.

காப்டன் கோப் மெள்ளத் தனது தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பிறகு சொன்னான், ”தேவிக் கோட்டையில் தோல்வியடைந்தோம்; தப்பி வந்தோம், சிரமப் பட்டு” என்று.

”சேதம்?” என்று வினவினார் கவர்னர், சேதம் என்பது சாதாரண விஷயம் போல.

”நூறு பேர் சொச்சம்” என்றான் காப்டன் துன்பம் துலங்கிய குரலில்.

“வெள்ளையர்?” ”நாற்பது பேர்.”

” மற்றவர் கறுப்பர்களா?” “ஆம்.”

”அது கிடக்கட்டும். ஆயுதங்கள், உணவுச் சேதங்கள் எவ்வ ளவு?”

”எதுவும் கப்பல்களில் வராததால் சேதம் மிகக் குறைவு தான்” என்றான் காப்டன் கோப், லேசாக எரிச்சலைக் குரலில் காட்டி.

கவர்னர் அதற்கும் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால் நிதானமாகச் சொன்னார். “காப்டன், இதன் விளைவு பயங்கர மானது” என்று.

”எப்படி?” என்று கேட்டான் கோப்.

கவர்னர் மீண்டும் சிந்தனையில் இறங்கினார். அவர் பேச முற்பட்டபோது உணர்ச்சியே தெரியாத அவர் குரலிலும் உணர்ச்சி தெரிந்தது./.

“முன்பு பிரெஞ்சு என்ஜினியர் பராடிஸ் அடையாற்றுப் போரில் ஆற்காட்டு நவாபின் குமாரன் மாபூஸ்கானின் பெரும்படையை முறியடித்தபோது, ஐரோப்பியர் படைகளின் போர் முறையின் உயர்வு இந்தக் கர்நாடகம் முழுவதும், ஏன் வடக்கிலுங்கூடப் பரவியது. இப்போது இந்தத் தேவிக் கோட்டைப் போர் அந்தப் புகழை அழித்து விட்டது. வெள்ளைக்காரர்கள் அப்படியொன்றும் பிரமாத வீரர்களல்ல என்ற உணர்வு சுதேசிகளுக்கு இனி ஏற்படும். நமக்கு இது அவமானம் மட்டுமல்ல, சுதேசிகளின் துணிவையும் சுயநம்பிக்கையையும் உயர்த்தும் ஒரு சம்பவம். இதனால் இனி ஏற்படக்கூடிய விபரீதங்கள் பல. உலகம் எங்கிலும் வீரக்கொடி நாட்டிய பிரிட்டனின் போர்த் திறன், புகழ் எல்லாம் தேவிக்கோட்டையில் தவிடு பொடியாகி விட்டது” என்ற உணர்ச்சி ததும்பச் சொன்ன கவர்னர், மீண்டும் விஸ்கி டம்ளரைப் பின்னால் நீட்டி, பின்னால் அசையாமல் சாராயக் குப்பியுடன் நின்றிருந்த பட்லர் குனிந்து மீண்டும் டம்ளரை நிரப்பினான். ஏதோ பெரிய வேலையைச் செய்து களைப்புற்றவர் போல் கவர்னர் விஸ்கியைச் சற்று அதிக மாகவே உறிஞ்சினார்.

அதுவரையில் ஏதும் பேசாமல் நின்றிருந்த கிளைவ் தனது தொண்டையை மெதுவாகக் கனைத்தான். அவன் பார்யுைம்

மேஜர் லாரன்ஸின் பார்வையும் ஒரு முறை இணைந்து மீண்டன. எதையும் கவனிக்கத் தவறாத ஸாண்டர்ஸ் கேட்டார், ”வாட் லெப்டினண்ட்! யூ ஹாவ் ஸம்திங் டு ஸே?” என்று.

கிளைவ் எந்தவித யோசனையும் இல்லாமல், யாரிடம் பேசுகிறோம் என்பதைக்கூடச் சிந்திக்காமல், ”யுவர் எக்ஸ லென்ஸி…’ என்று துவங்கினான்.
மேற்கொண்டு பேசும்படி சைகை செய்தார் கவர்னர். ”என்ஜினியர் பாராடிஸையும் பிரெஞ்சுக்காரர்களையும் அடை யாற்றுப் போரையும் சுட்டிக் காட்டினீர்கள்” என்று கூறினான் கிளைவும் நிதானமாக.

”ஆம், அதனாலென்ன?” என்று கேட்டார் கவர்னர்.

“பிரெஞ்சு கவர்னர் அவர்களைப் பட்டினி போடவில்லை. தளவாடங்கள் அனுப்புவதாகச் சொல்லிக் கையை விரிக்கவில்லை” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ். கவர்னர் வாயைத் திறக்கு முன்பு மேலும் மடமடவென்று பேசினான். ”கப்பலில் உணவு சப்ளையும் கோட்டையைத் தகர்க்கும் பீரங்கியும் வேறு பல தளவாடங்களும் அனுப்புவதாகச் செய்தியனுப்பினீர்கள். ஏதும் வரவில்லை. சோல்ஜர்கள் பட்டினி. தவிர வெறும் கைகளால் கோட்டை வாயில்களை இடிக்க முடியாது. அதற்காக முயன்றாலும் எதிரி கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். இத்தனை தூரம் நாங்கள் கைவிடப்பட்டும் காப்டன் போரைத் திறம்படவே நடத்தினார். நாங்கள் பூராவாக அழியாமல் தப்பிவந்ததே அவர் வீரத்துக்கும் அத்தாட்சி; எதிரியின் வீரத்துக்கும் அத்தாட்சி” என்றான் கிளைவ்.

“எதிரியிடம் அத்தனை மதிப்பா உனக்கு?” என்று வினவினார் கவர்னர்.

‘ஆம். விருப்பப்பட்டிருந்தால், மானாஜியும், விஜயகுமாரனும் எங்களை அழித்திருக்கலாம்” என்றான் கிளைவ்.

கவர்னர் முகம் சுளித்தார். “மானாஜி தெரியும். யார் அவர் விஜயகுமாரன்?” என்று வினவினார்.

”இந்தத் தோல்விக்கு உண்மையில் அடிகோலியவன்; மகாராஷ்டிர உபதளபதி. லைட்ஹார்ஸ் படையை வெகு நன்றாக நடத்துகிறான். முராரி ராவின் சீடன்” என்றான் கிளைவ்.

கவர்னர் சட்டென்று டம்ளரை எடுத்து விஸ்கியை இரு முறை அவசரமாக உறிஞ்சினார். ”முராரி ராவா” என்று கொஞ்சம் திகிலும் குரலில் ஒலிக்கக் கேட்டார்.

கிளைவின் இதழ்களில் குரூரப் புன்முறுவல் ஒன்று படர்ந்தது. ‘ஆம், அவர்கூட அங்கு வந்திருந்தார்” என்றான் அந்தப் புன்முறுவலின் ஊடே.

186
சாண்டில்யன் கவர்னர் சிறிது ஆசுவாசம் அடைந்தார். ”தட் எக்ஸ்ப்ளெய்ன்ஸ் இட்” என்றும் கூறினார்.
கிளைவ் அந்த ஆசுவாசத்தைக்கூட அனுமதிக்கவில்லை. ”அவர் போரில் ஈடுபடவில்லை ” என்றும் கூறினான்.

கவர்னர் டம்ளரிலிருந்த விஸ்கி அத்தனையும் உறிஞ்சிவிட்டு எரிக்கும் கண்களால் கிளைவை உற்றுப் பார்த்தார். ”எதிரிகளிடம் உனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

”வீரன் எதிரியாயிருந்தாலும் என்னால் போற்ற முடியும். எதிரியைக் குறைத்து எடைபோடுவது தோல்வியின் முதல் படி. அசிரத்தை இரண்டாவது படி. சுயபலம் தெரியாமல், தளவாடம் இல்லாமல் உபவாசத்தால் எதிரியை வெற்றி கொள்ளலாமென்ற நினைப்பு மூன்றாம் படி….” என்று அடுக்கினான் கிளைவ்.

‘நான்காவது படி?” என்று கர்ஜித்தார் கவர்னர்.

”நாங்கள் இங்கே தோல்வியுடன் திரும்பி வந்திருப்பது” என்று கூறினான் கிளைவ்.

”யூ ஆர் இம்பர்ட்டினண்ட்” என்றார் கவர்னர்.

அதுவரை வாளாவிருந்த ஒரு குரல், ”சம்பவங்களை உள்ளபடி விளக்குவது சோல்ஜரின் கடமை” என்று இடையே புகுந்தது.

கவர்னர் சரேலென்று திரும்பினார் குரல் வந்த திசையை நோக்கி. மேஜர் ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ் டம்ளரிலிருந்த விஸ்கியைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. உரையாடலில் இḥடை புகுந்த பின்பு மேற்கொண்டு பேசாமலே இருந்தார். கவர்னரே கேட்டார், ”அப்படியானால் இந்தத் தோல்வி விவரங்களைக் கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டுமா?” என்று.

”மகிழ்ச்சியடைய வேண்டியதில்லை. நமது குறைகளைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் லாரன்ஸ்.

”அப்படியானால் கோட்டையைக் கைவிட்டுவிட வேண்டியதுதானா?” கவர்னர் கேள்வியில் இம்முறை ஆத்திரம் மறைந்து கவலை இருந்தது.

”நோ” என்றார் லாரன்ஸ். ”வாட்டு யூப்ரபோஸ் டு டூ?” என்று சீறினார் கவர்னர்.

மேஜர் லாரன்ஸ் ஆசனத்தை விட்டு எழுந்து சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களையும் கவர்னரையும் நோக்கினார். கடைசியாகக் கவர்னரை நோக்கிச் சொன்னார், ”தேவிக் கோட்டையை நான் பிடித்துத் தருகிறேன்” என்று.
”எப்படி? எப்பொழுது?” என்றார் கவர்னர்.

ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ் பதிலேதும் சொல்லவில்லை, சில விநாடிகள். தமது பெரும் தொந்தியை ஒரு முறை தடவிவிட்டுக் கொண்டார். இடையில் தொங்கிய வாளின் பிடிமீதும் மெள்ளக் கையை வைத்தார். கடைசியில் வார்த்தைகளைத் தெளிவுடன் உதிர்த்தார்.

“இன்று மே 22. மே 27-ஆம் தேதி கிளம்புகிறேன் கடல் மார்க்கமாக. லெப்டினண்ட் கிளைவும், கிரெனேடியர்கள் காப்டன் பால்டனும், சார்ஜண்ட் ப்ரௌனும் என்னுடன் வருகிறார்கள். 800 சோல்ஜர்களையும் 150 சிப்பாய்களையும் அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி எதிர் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த காப்டன் பால்டனையும் சார்ஜண்ட் ப்ரௌனையும் நோக்கினார். மீண்டும் கவர்னரை நோக்கி, “நான்கு போர்க் கப்பல்களில் நாங்கள் செல்கிறோம்” என்று கூறிவிட்டு, தலை தாழ்த்திக் கவர்னருக்கு வணங்கிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார். காப்டன். கோப் சிலையென நின்றான்.

கிளைவ் மட்டும் லாரன்ஸைப் பின் தெர்டர்ந்தான். “காப்டன் கோப்பை விட்டு விட்டீர்களே”.என்றான்.

“அவர் களைத்திருக்கிறார். படைக்கு இரு தலைவர்கள் தேவையில்லை. ஒரு மேஜர் போதும்” என்றார் லாரன்ஸ். மேற்கொண்டு பதிலேதும் சொல்லாமல் தமது இருப்பிடம் நோக்கி விரைந்தார்.

மறுநாள் முதல், எல்லா ஏற்பாடுகளும் ரகசியமாகவே நடந்தன. ஆனால் 27-ஆம் தேதி இரவில் திடீர் திடீரெனச் சுறுசுறுப்பு காணப்பட்டது. மேஜர் லாரன்ஸ் கிளைவின் இருப்பிடம் வந்து, ”கடற்கரைக்கு வந்து சேர்” என்று கூறிச் சென்றார்.

அப்பொழுது இரவு மணி பத்து இருக்கும். உத்தரவுக்குப் பணிந்து கிளைவ் ஆயுதம் தரித்து விரைந்தான். கடலில் ஆடி நின்றன நான்கு போர்க் கப்பல்கள். அவற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தன, தளவாடங்களையும் சோல்ஜர்களையம் தாங்கிய படகுகள். கிளைவ் வந்ததும் மேஜர் லாரன்ஸ் தமது படகிலேயே அவனை ஏற்றிச் சென்றார். முதல் போர்க் கப்பலின் நூலேணியில் தானும் ஏறிக் கிளைவும் ஏறியதும் மேஜர் லாரன்ஸ் காப்டன் டால்டனை நோக்கி, ”காப்டன் நங்கூரங்களை எடுக்கச் சொல். பாய்கள் விரியட்டும். கப்பல்கள் விரையட்டும்” என்றார்.

காப்டன் டால்டன் ஒரு பாய்மரத்தின்மீது ஏறி உயர இருந்த தட்டில் நின்று வாளை ஆட்டி, ”ஹாய் ஹாய்ஸ்ட் ஸெய்ல்ஸ் ” என்று கூறினான். தனது மடியிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தில் இரு முறை சுடவும் செய்தான். பெரும் பிசாசுகளைப் போலக் கப்பல்கள் நகர்ந்தன.
அந்தப் பிரதானக் கப்பலின் நடுவே நின்றிருந்த மேஜர் தன் தளத்திலிருந்த பெரிய பீரங்கி யொன்றை ஆவலுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கிளைவ் அவரை மெல்ல அணுகி, ”பாட்டரிங் கானன்?” என்று வினவினான்.

ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார் மேஜர். ”இதை அனுப்பியிருந்தால் தேவிக்கோட்டையை நானே பிடித்திருப்பேன்” என்றான் கிளைவ்.

”இருக்கலாம். ஆனால் லெப்டினைண்ட் போர்களை ஆயுதங்கள் வெல்வதில்லை, அறிவு வெல்கிறது” என்றார்.

கிளைவ் பதில் சொல்லவில்லை அதற்கு. ஆனால் மேஜரின் அறிவையும் சூட்சுமப் போரையும் இரண்டு நாட்களில் அவனால் உணரமுடிந்தது. மே 29-ஆம் தேதி லாரன்ஸ் கொள்ளிட முகத்துவாரத்தை அடைந்தார். 31-ஆம் தேதியன்று படைகளை தரையில் இறக்கினார். கோட்டையைத் தகர்க்கும் ஆற்றலுடைய ‘பாட்டரிங் கானனை’ மெதுவாகவும் சீராகவும் இறக்கி ஜூன் 8-ஆம் தேதியன்று அதைக் கோட்டைக் கதவுகளுக்கு எதிரே உயர்ந்த பீட மொன்றும் நிறுவி ஏற்றினார்.

ஒரு முறை பெரும் குண்டு ஒன்றை அதன்மூலம் கோட்டைமீது பயங்கரமாக வீசினார். பிறகு கிளைவைத்தூதனாக ஒரு செய்தியுடன் அனுப்பினார். மானாஜியையும் விஜயகுமாரனையும் கோட்டையின் நடு மண்டபத்தில் சந்தித்துத் தனது செய்தியை அறிவித்தான். ‘மேஜர் லாரன்ஸ் பூர்ண தளவாடங்களுடனும் பெரும்படையுடனும் வந்திருக்கிறார். ஆகையால் உங்களைச் சரணடையச் சொல்கிறார்’ என்ற இரண்டே வரிகளைச் சொன்னான் தூதனான கிளைவ்.

மானாஜியும் வார்த்தைகளை வளர்த்தவில்லை. ”இந்த நாற்பது வயதுவரை மானக்கேடு இல்லாமல் வாழ்ந்து விட்டேன். இப்போதும் சரணடைய உத்தேசமில்லை என்று சொல்லுங்கள்” என்றார்.

கிளைவ் இதைக் கேட்டபின்பும் திரும்பவில்லை. விஜய குமாரனை நோக்கினான். விஜயகுமாரன் முகம் கல்லாயிருந்தது. அந்தச் சமயத்தில் பக்கத்து அறையிலிருந்த அரசகுமாரி தலை நீட்டினாள். ”இங்கு ஒரு பெண்ணும் இருக்கிறாளே” என்றான் கிளைவ் வியப்புடன்.

”வீர குமாரிகள் எங்கள் நாட்டில் உண்டு” என்றான் விஜயகுமாரன்.

”போரிடவும் அவர்களுக்குத் தெரியும்” என்ற நந்தினி தனது இடையிலிருந்து முன்பு கொள்ளிடத்தில் விஜயகுமாரனு க்குக் காட்டிய கைத் துப்பாக்கியை எடுத்துக் கிளைவிடம் காட்டினாள்.

எதற்கும் அசையாத கிளைவின் முகம்கூட உணர்ச்சியைக் காட்டியது. “ஆண்டவன் உங்களைக் காப்பாற்றட்டும்” என்று கூறி வெளியே நடந்தான். அவன் முகத்தில் இணையிலாத பிரமிப்பு விரிந்து கிடந்தது. உள்ளத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் தாண்டவமாடின. உண்மையில் இந்தப் போரை அவன் மனம் விரும்பவே இல்லை .

Previous articleRaja Perigai Part 1 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here