Home Historical Novel Raja Perigai Part 1 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

80
0
Raja Perigai Part 1 Ch3 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full
Raja Perigai Part 1 Ch3 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3. மறைந்த இருவர்

Raja Perigai Part 1 Ch3 | Raja Perigai | TamilNovel.in

அரங்கன் சந்நிதிக் கதவைத் திறந்த பட்டாடையார் பயத்தினால் உள்ளேயிருந்த பெருமாள் மீது தமது கண்களை நாட்டாமலே, கர்ப்பக் கிருகத்தின் பெரிய வெண்கல நெய் விளக்கின் திரியை வலக் கைப் பெருவிரலாலேயே தூண்டி விட்டாராகையால், திடீரென டபீர் பண்டிதர் இரைந்ததும் அதிகக் கிலிக்கு இலக்காகி இறைவனின் கண்களை நோக்கினார். இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் மூலவரின் இரண்டு கண்களையும் அலங்கரித்திருந்த பெருவைரங்கள் இரண்டில் ஒன்று காணவில்லையென்பதை உணர்ந்ததும் கைகால்கள் உதறியதால் நெஞ்சும் திக்கு திக்கென்று அடித்துக் கொள்ளவே மயக்கம் போடும் நிலைக்கு வந்துவிட்டார்.

அந்த நிலைக்கு இன்னொருவர் வராததற்குக் காரணம், அவர் டபீர் பண்டிதரின் உத்தரவை நிறைவேற்ற வாயிலிலிருந்த மகாராஷ்டிர வீரர்களை அழைத்து வர ஓடிவிட்டதுதான். இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் இளவரசியும் டபீர் பண்டிதருக்குப் பின்னால் கர்ப்பக்கிருகத்துக்குள் நுழைந்த வாலிபனும் மட்டும், எந்த விதச் சப்தத்தையும் கிளப்பாமலும் நிதானத்தைக் கைவிடாமலும் நின்றார்கள்.

சகல சராசரங்களின் மூலப் பொருளின் அர்ச்சாவதாரமாய்ச் சயனத் திருக்கோலம் கொண்டிருந்த மூல அரங்கனுக்கு அன்று முத்தங்கி சார்த்தியிருந்தபடியால் தலை முதல் கால்வரை மூடிய முத்துக்கோப்புகள் கர்ப்பக்கிருக வெண்கல விளக்கின் ஒளியில் அற்புதமாகப் பிரகாசித்தாலும் திடீரென ஒற்றைக் கண் மட்டும் அவனருளை வீசியதால், ஏற்பட்ட பிரமை மட்டும் அந்த இருவரையும் கூட விடவில்லை.

எந்த இரு கண்களைக் கண்ட மாத்திரத்தில் ‘அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று அரிஜன குலத்தவரான திருப்பாணாழ்வார் தமது பத்துப் பாட்டில் கடைசி அடியைப் பாடி வேறெதையும் காணாமலே அங்கேயே உயிர் நீத்தாரோ, அப்பேர்ப்பட்ட அழகிய மணவாளனின் அழகுத் திருவிழிகளொன்றின் வைரத்தை யார் திருடியிருக்க முடியும்? எப்படித் திருடியிருக்க முடியும்? இந்த எண்ணங்களே அவ்விருவர் மனத்திலும் எழுந்தபடியால் வேறு விஷயங்களில் அவர்கள் சிந்தனை செல்லாததால், இருவரும் செயலற்றே நின்று கொண்டிருந்தனர்.

அந்த வைரம் பிரெஞ்சுக்காரன் ஒருவனால் திருடப்பட்டு ரஷ்யாவில் விற்கப்பட்டு ரஷ்ய மன்னர் கிரீடத்தில் இணைந்துவிட்டதாக வரலாறு பின்னால் கூறினாலும், அதைப்பற்றி முன்கூட்டி அறிய வகையில்லாத டபீர் பண்டிதர் தனித்துச் சந்நிதிக்கு எதிரிலிருந்த அந்த வாலிபன்தான் திருடியிருக்க வேண்டுமென்ற ஊகத்தில் கூறி விட்டாரானாலும், அவர் கூறியதைப் பற்றி லட்சியம் செய்யாத வாலிபன் கர்ப்பக் கிருகத்திலிருந்து தப்ப எந்தவித முயற்சியும் எடுக்காமல், ‘அரங்கனின் ஒரு கண் காணாமற் போய் விட்டதால் அந்த ஸ்ரீரங்கத்துக்கும் சோழ மண்டலத்துக்கும் ஏதோ பெருத்த விபரீதம் ஏற்படப் போகிறது. இது நிச்சயம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே சயனங்கொண்ட பெருமாளை மனத்தால் வணங்கினான்.

முத்திங்கி மூடிய மூலப்பெருமாளின் ஒரு கண்மட்டும் காணாதது குறையாகத் தெரிந்தும், ‘இச்சா மாத்திரத்தினாலேயே சகல உலகுக்கும் மங்களம் விளைக்கவல்ல உன் அருள் சுரக்க ஒரு கண் போதாதோ?” என்றும் வினவிக் கொண்டான் அந்த வாலிபன்.

அவன் எண்ணங்கள் இப்படிப் பலவிதமாக ஓடிக் கொண்டிருந்தபடியாலும், வீரர்கள் வருவதற்குள் தப்ப அவனுக்கு நேரம் மிக இருந்ததாலும் தப்பச் சிறிதளவும் முயலவில்லை அந்த வாலிபன். ஆனால் வீரர்கள் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டதும் கணீரென்ற குரலில் அவர்களை நோக்கிக் கூறினான்; ”கர்ப்பக் கிருகத்தை விட்டு வெளியே செல்லுங்கள். சண்டைக்கு இடம் சந்நிதானமில்லை ” என்று. வந்த வீரர்கள் பத்துப் பேர்கள் இருந் தாலும், அவர்களில் இருவர் தங்கள் கைகளில் ‘மாட்ச் லாக்’ துப்பாக்கியைத் தூக்கி அவன் மார்பை நோக்கிப் பிடித்திருந் தாலும், கர்ப்பக்கிருகத்தில் இடமின்மை காரணமாக எட்டு வாட்கள் உருவப்பட்டு மற்றவர்கள் வெளியே நின்றிருந்தாலும், அவர்கள் யாரையுமே அந்த வாலிபன் லட்சியம் செய்யவுமில்லை, தன் வாளை உருவவுமில்லை. இடையில் செருகியிருந்த கைத்துப்பாக்கியைக் கூட அவன் எடுக்கவில்லை. ஏதோ அடிமைகளுக்கு ஆணையிடும் அரசன் போலவே அவன் பேசினான்.

அவன் பேச்சும் தோரணையும் அரசகுமாரிக்கும், பட்டாடை யாருக்கும், வீரர்களுக்கும், வியப்பை அளித்ததென்றால் டபீர் பண்டிதரின் கோபத்தையும் அது அபரிமிதமாகக் கிளறிவிடவே, “நீ யார் உத்தரவிட?” என்று சீறிய அவர், ‘ஏன் நிற்கிறீர்கள்…?” இன்னும் ஏதோ சொல்ல முயன்றவர் வாயடைத்து நின்றார். அடுத்த விநாடி அந்த வாலிபனின் இடக்கரம் இளவரசியின் இடையை இரும்புப் பிடியாக இழுத்துப் பிடித்தது. “இளவரசி! வாருங்கள் வெளியே. அரங்கன் முத்தங்கி சேவை உங்களுக்கும் கிடைத்தது, உங்கள் அருளால் எனக்கும் கிடைத்தது. ஆனால் இங்கு திருட்டுப் போயிருக்கிறது. இந்த டபீர் பண்டிதனுக்கு மூளையில்லை. திறவாத கர்ப்பக்கிருகக் கதவுகளுக்குள் நான் நுழைய முடியாது என்பதை உணர். அப்படித் திருடியிருந்தால் நீங்கள் வரும் வரை மண்டியிட்டுக் காத்திருக்க நான் முட்டாளல்ல என்பதும் பண்டிதனுக்குப் புரியாவிட்டாலும் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்!” என்று கூறிக்கொண்டே அந்தப் பெண்ணை இழுத்துக்கொண்டு கர்ப்பக் கிருகத்திலிருந்து அடுத்திருந்த மண்டபத்துக்கு வந்தான். அப்படி வந்தவனைப் பார்த்துத் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கொண்டே இரு வீரர்கள் பின் வாங்க, வாட்களை உருவியர்களும் திடீரென அவனைச் சூழ்ந்து கொண்டனர். மண்டபத்துக்கு வந்ததும் வீரர்களால் சூழப்பட்ட நிலையிலும் அவன் சொற்கள் நிதானமாகவும் பயங்கரமாகவும் ஒலித்தன. ”துப்பாக்கிகளையும் வாட்களையும் கீழே எறிந்து விடுங்கள், இல்லையேல் உங்கள் அரசகுமாரியின் உயிர் சல்லிக் காசு பெறாது’ என்ற வாலிபன் சொற்களைக் கேட்ட வீரர்கள் முதலில் அவனுக்கு மூளைக் கோளாறு என்றே நினைத்தார்கள். இரண்டு துப்பாக்கிகளையும் எட்டு வாட்களையும் அலட்சியம் செய்யக்கூடியவன் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்குக் கர்ப்பக்கிருகத்திலிருந்து வெளியே வர முற்பட்டடபீர் பண்டிதர்கூட முதலில் நினைக்கவே செய்தார். ஆனால் அவனது வலக் கரத்தில் திடீரென மந்திரத்தால் வெளிக் கிளம்பியது போல் இடையிலிருந்து கிளம்பிய கைத்துப்பாக்கி இளவரசியின் கழுத்துக்கு நேரே காட்சியளித்ததும் அவர் சந்தேகமும் பறந்து பயத்துக்கு இடம் கொடுத்தது. ”டேய்! நீ யாரைத் தொட்டுவிட்டாய்? யார் மீது கைத்துப்பாக்கியை நீட்டுகிறாய் என்பது புரிகிறதா உனக்கு?” என்று அச்சத்தால் நடுங்கும் சொற்களை உதிர்த்தார்.

வாலிபன் தனது ஈட்டிக் கண்களைப் பண்டிதர் மீதும் நாட்டினான், தன்னிடம் சிக்கியிருந்த பைங்கிளிமீதும் நாட்டி னான், எதிரேயிருந்த வீரர்கள் மீதும் நாட்டினான். விநாடி நேரத் தில், அவன் பதிலும் தங்கு தடையின்றி வந்தது. “நீங்கள் உங்கள் பெயரை டபீர் பண்டிதர் என்று பறைசாற்றிக் கொண்டதுமே தஞ்சை மன்னர் ராஜா பிரதாப் சிங்கன் வருமானத்துறை அமைச்சர் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நேரத்தில் உங்களுடன் தனித்து இந்தப் பெண் வரமுடியுமானால், அதுவும் உங்களுக்காக யாருக்கும் திறவாத அரங்கன் கர்ப்பக்கிருகம் இந்த நேரத்தில் திறக்க வேண்டுமானால், இவர் தஞ்சை இளவரசியாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த அரசகுமாரியைத் தொட்டதற்கே மரண தண்டனை உண்டு என்பதைக்கூடப் புரிந்து கொண்டேன் பண்டிதரே. ஆனால்…” என்ற அந்த வாலிப வீரன் அவரை நகைப்புத் ததும்பும் விழிகளால் நோக்கினான் மீண்டும் ஒருமுறை.

”ஆனால்?” என்ற கேள்வி பண்டிதரிடமிருந்து பதற்றத்துடன் வந்தது.

‘நீர் யாரைக் கைது செய்ய முயல்கிறீர் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. தவிர, யாரும் அறியாமல் இங்கு வந்த ஒரேகாரணத்தாலேயே என்னைத் திருடனென்றும் தீர்மானித் ததிலிருந்து உமக்கும் அறிவுக்கும் அதிகச் சம்பந்தமில்லை யென்பதும் தெரிய வந்தது” என்றான் வாலிபன் சர்வ சாதாரணமாக.

டபீர் பண்டிதரின் சொற்கள் குழப்பத்துடன் மீண்டும் ஒலித்தன, ‘யார் நீ?’ என்ற கேள்வியில்.

”அதைத் தஞ்சையில் புரிந்து கொள்வீர்.”

“அங்கேதான் நீ செல்கிறாயா?”

“ஆம்.”

“அப்படியானால் எங்களுடன் வரலாம்.”

”வந்திருப்பேன் நீர் மட்டும் என்னைக் கைது செய்ய உத்தர விட்டிருக்காவிட்டால்.”

இதைக் கேட்ட பண்டிதர் சினத்தின் வசப்பட்டார். ”இப்பொழுது வர மாட்டாயாக்கும்?” என்றார் கோபக் குரலில்.

”மாட்டேன்” என்றான் வாலிபன் திட்டமாக.

“ஏன்?” என்று வினவினார் பண்டிதர்.

“தங்கள் சகவாசம் எனக்குப் பிடிக்கவில்லை” என்ற வாலிபன் சிறிது நகைத்தான்.

“ஏன் நகைக்கிறாய்?’ என்று சீறினார் பண்டிதர்.

வாலிபன் இதழ்களில் இளமுறுவல் அரும்பியது. “பண்டி தரே! உமது மனத்தில் நீர் கெட்டிக்காரராக நினைத்துக் கொண் டிருக்கிறீர். இப்படியே பேச்சுக் கொடுத்தால் நான் சற்று அயர்ந்து விடுவேனென்றும் அந்தச் சமயத்தில் உமது வீரர்களைக் கொண்டு பிடித்துவிடலாமென்றும் மனப்பால் குடிக்கிறீர். ஆனால் என்னிடம் அந்தக் கதை பலிக்காது. இது மட்டும் அரங்கன் சந்நிதியாக இல்லாதிருந்தால் இந்தக் கைத்துப்பாக்கியால் உம்மையும் இந்த இரண்டு மாட்ச்லாக் துப்பாக்கிகளையும் கொன்றிருக்கமாட்டேன், ஆனால் செயலிழக்கச் செய்திருப்பேன். இங்கு அதைச் செய்யவில்லை , ஏன் தெரியுமா?” என்று வினவினான் நிதானமாக.

“ஏன்?” பண்டிதர் குரல் வறண்டு ஒலித்தது.

”சயனத்திலிருக்கும் எம்பெருமானுக்குத் தமிழ்மறை இன் பத்தைத் தவிர வேறு அதிர்ச்சி ஒலிகளைக் கேட்டு வழக்கமில்லை. அறையர்கள் இன்னிசையைத்தான் அவன் செவிகளும் அவனுக்கு மேலிருக்கும் பஞ்சமுக அனந்தனின் கட்செவிகளும் கேட்டிருக்கின்றன. அவனுக்கு வேனிற் காலத்தில் சுகமளிக்கக் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் காவிரியின் குளிர் நீர் தேக்கப்படுகிறது. அதற்காகக் கருங்கல் தேக்கமும் ஓடுகிறது உட்பிராகாரத்திற்குள்ளே அப்படிச் சுகப்படும் பரம புருஷன் சந்நிதியில், தர்மம் துளவமாயிருக்கும் தாமோதரன் இருப்பிடத்தில் துப்பாக்கி சத்தமோ வாளரவமோ கூடாது என்ற ஒரே காரணத்தில்தான் அங்கே சுடவில்லை நான். இப்பொழுது வழிவிடுங்கள்” என்ற அந்த வாலிபன், அவன் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறான் என்பதை அறியுமுன்பே,திடீரென இளவரசியை இருகைகளாலும் தூக்கித் தோளின்மேல் போட்டுக்கொண்டு கைத்துப்பாக்கியை அவள் உடலை நோக்கி நீட்டிக் கொண்டே, ”அசைய வேண்டாம், அப்படியே நில்லுங்கள்” என்று கூறிக்கொண்டு பின்னுக்கு நகர்ந்து படிகளில் இறங்கினான். அடுத்த விநாடி அவன் வெளிவாசலை நோக்கி வேகமாக ஓடும் சத்தம் கேட்டது.

அரசகுமாரிக்கு ஆபத்துக் கூடாது என்பதால் சிலைகளாகி விட்ட பண்டிதரும் வீரரும் திடீரெனச் சுறுசுறுப்பைக் காட்டினார்கள். “பிடியுங்கள், அவனை விட்டால் உங்கள் தலைகள் தஞ்சை மண்ணில் உருளும்” என்றார் அமைச்சர். வீரர்கள் ஓடினார்கள். பண்டிதர் ஓடாமல் பட்டாடையாரைப் பார்த்தார். பட்டாடையார் நடுங்கி, “எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் தங்கள் கட்டளைப்படிதான், ஓலையின் படிதான்…” என்று குழறினார்.

“சரி சரி! கதவைப் பூட்டும். கோவில் காவலரை அழைத்துச் சந்நிதியைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யும்” என்று உடல் தள்ளாட, பெருமூச்சு வாங்க, பக்கத்திலிருந்த இன்னொரு கைங்கர்யபரர் நீட்டிய வட்டாவைக்கூட வாங்கிக்கொள்ளாமல் படிகளில் இறங்கி ஓடினார்.

அவர் சென்றதும் கைங்கர்யபரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டானர். இருவரில் வட்டாவைத் தாங்கியவர் கேட்டார், “இதை என்ன செய்யட்டும்?” என்று வட்டாவைக் காட்டி.

பட்டடையார் சினம் மிதமிஞ்சிற்று. ”உன் தலையில் கவிழ்த்துக் கொள்” என்று கூவினார். ‘உனக்குத் தெரியவில்லை? சாவி நம்மிடம் இருக்கிறது. அரங்கன் கண்வைரம் காணோம். நம் இருவர் தலைக்கும் தீம்பு வந்திருக்கிறதடா பீடையே!” என்று கத்தினார்.

”பீடை போன்ற சொற்களை இங்கே சந்நிதியில் பேசக் கூடாது” என்றார் வட்டாவைத் தாங்கியவர்.

”அட பாகவதப் பிரபூ! போடா! போய்க் காவலரை அழைத்து வா. நாளைக்கு நாம் இருக்கப் போகும் இடம் இதுவல்ல!” என்றார் பட்டாடையார்.

”வேறு எதுவோ?”

“எம்பெருமான் திருவடி.”

அதைவிடப் பெரிய பேறு இல்லையென்று தெரிந்திருந்தும் வட்டாவைத் தாங்கியவர் நடுங்கினார். அத்தனை சின்ன வயதில் திருவடிகளை அடையும் நிலையை அவர் எய்தவில்லை. ஆகவே ஏதோ முணுமுணுத்துக் கொண்டு ஓடினார் காவலரை அழைக்க. இவர்கள் உரையாடல் இப்படியிருக்க, வாலிபனைத் துரத்திச் சென்ற தஞ்சை வீரர்களால் அவனைக் கண்டு பிடிப்பது எளிதாயில்லை. நான்கு பக்கங்களிலும் அவர்கள் தேடிய போது ஒருபுறத்தில் மட்டும் அவன் ஓடிய காலரவம் கேட்டதால் அங்கு அவர்களும் ஓடவே, வாலிபன் அவர்கள் வருகையை அறிந்து ஆயிரங்கால் மண்டபத்துக்குள் நுழைந்துலிட்டான். அதற்குள் வீரரும் நுழைந்து துழாவினாலும் இருட்டின் காரணமாக அந்தப் பிரும்மாண்டமான மண்டபத்தில் காலைத் தூக்கி நின்ற கற்புரவிகளைத்தான் அவர்களால் தடவ முடிந்தது.

அடுத்த சில விநாடிகளில் வேறு ஒருபக்கம் காலரவம் கேட்கவே வடக்கு வாசலை நோக்கி ஓடினார்கள் அந்த வீரர்கள். வடக்கு வாசல் திட்டிக் கதவு திறந்து கிடந்தது. அதை அணுகுமுன்பே ஒரு புரவி காற்றிலும் கடுகப் பாய்ந்ததால் ஏற்பட்ட குளம்பொலிகள் இரவின் நிசப்தத்தைப் பயங்கரமாகக் கிழித்தன. அந்த வாலிபன் புரவியில் இளவரசியைத் தூக்கிச் சென்றுவிட்டான் என்ற உண்மையை அறிந்ததும் அவர்கள் பிராணனே போய்விடும் போலாயிற்று.

அடுத்த ஒரு விநாடிக்குள் ஸ்ரீரங்கத்தின் வீதிகள் அல்லோல கல்லோலப்பட்டன. பண்டிதரின் ஆணையால் நூறு புரவிகள் பறந்தன, வாலிப வீரனின் புரவி சென்ற வடக்கு திக்கை நோக்கி. ஸ்ரீரங்கமும் சல்லடை போட்டுச் சலிக்கப்பட்டது. வாலிபனை எங்கும் காணோம். எப்படி, எந்தத் திசையில் அவன் சென்றான், எப்படிப் பலமான காவலைக் கடந்தான் என்பது பெரும் புதிராக இருந்தபடியால் பண்டிதர் பிரமை பிடித்து மக்கம் போட்டு வடக்கு வீதியிலேயே சாய்ந்துவிட்டார்.

Previous articleRaja Perigai Part 1 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here