Home Historical Novel Raja Perigai Part 1 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

52
0
Raja Perigai Part 1 Ch30 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch30 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 30. * NEC ASPERA TERRENT
(Difficulties do not terrify us)

Raja Perigai Part 1 Ch30 | Raja Perigai | TamilNovel.in

விஜயகுமாரனையும் நந்தினியையும் கோட்டைக்குள் கண்ட காரணத்தாலும், மானாஜியின் கண்ணியமும் கம்பீரமும் நிரம்பிய பதிலினாலும், ‘இத்தகைய ஒரு வீர சமுதாயத்தை எதிர்க்க வேண்டுமே’ என்ற எண்ணி மனக் கலக்கம் அடைந்துவிட்ட கிளைவ், மேஜர் லாரன்ஸிடம் உணர்ச்சி சிறிதும் இல்லாமல் மானாஜியின் பதிலை அவர் சொன்ன தோரணையிலேயே கூறினான். காப்டன் டால்டனுடனும் ஸார்ஜண்ட் பிரௌனுடனும் நின்றுகொண்டு அந்தச் செய்தியைக் காதில் வாங்கிக் கொண்ட மேஜர் லாரன்ஸ் முகத்தில் பெரும் திருப்தியைக் காட்டினார். ”இந்தப் பதிலைத்தான் நான் மானாஜியிடமிருந்து எதிர்பார்த்தேன்” என்று அவர் கூறிய பதிலிலும் திருப்தி பரிபூரணமாக ஒலித்தது.

”எதிர்பார்த்தீர்களா!” கிளைவின் கேள்வியில் வியப்பு ஒலித்தது.

”ஆம்” என்றார் லாரன்ஸ், எதிரே தூரத்தில் கொள்ளி டத்துக்கு அக்கரையில் விரிந்த கோட்டையின் பதினெட்டு அடி உயரச் சுவர்களையும், இடையிடையே இருந்த பீரங்கிக் கூட்டங் களையும் பார்த்துக் கொண்டே.

”அப்படியானால் என்னை எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்?” என்று மீண்டும் வினவினான் கிளைவ்.

”யுத்த தர்மம்” என்றார் லாரன்ஸ்.

”என்ன தர்மம் அது?”

”முடியுமானால் மனித அழிவைத் தடுப்பது சேனாதிபதியின் கடமை” என்ற லாரன்ஸ், “ஆனால் மகாவீரனான மானாஜியிடம் சரணாகதியை நான் எதிர்பார்க்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

இந்தப் பதில் கிளைவுக்கு மட்டுமின்றி காப்டன் டால்டனுக்கும் புதிதாயிருக்கவே, ”உங்களுக்கு மானாஜியை முன்பே தெரியமா?” என்று டால்டன் வினவினான்.

”தெரியாது. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன், தென்னிந்தியாவின் படைத் தலைவர்களில் மிகச் சிறந்தவர் மானாஜி என்று. அது மட்டுமல்ல; ஐரோப்பியர் போர் முறையையும் நன்றாக அறிந்தவர்” என்று கூறிய மேஜர் விடுவிடுவென்று கொள்ளிடக் கரையின் முகப்புக்கு விரைந்தார். அப்படிச் செல்லு முன்பு, “ஜான்மூர், மூர்” என்று இருமுறை இரைந்து கூவவும் செய்தார்.

போர்க் கப்பலொன்றின் தச்சனான ஜான்மூர், ”ஹியர் ஹியர்” என்று தன்னை அறிவித்துக்கொண்டு அவருடன் ஓடினான். மேஜர் லாரன்ஸ் கொள்ளிடக் கரை முகப்பில் நின்று கொண்டு நதியைச் சுட்டிக் காட்டி, ‘மூர் இந்த நதியைத் தாண்டினால் சிறு நிலப்பரப்பு வருகிறது. அதை நாம் தாண்டினால் குறுக்கே சிற்றாறு வருகிறது. அதற்கு எதிரே தேவிக் கோட்டையின் கிழக்கு வாசல் இருக்கிறது. கோட்டையின் வாயிலைத் தகர்க்க பாட்டரிங் கானனை ஏற்றியிருக்கிறேன். அது வாயிலைத் தகர்த்தால் உள்ளே நுழையப் படைகள் அக்கரை போக வேண்டும்” என்று சுட்டிக் காட்டிக் கையால் ஏதேதோசைகைகள் செய்தார்.

தச்சனான ஜான்மூர் கொள்ளளிடப் பிரவாகத்தையும் எதிர்க்கரையையும் காட்டினான். பிறகு ஏதோ மேஜரிடம் சொன்னான். மேஜர் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். இருவரும் திரும்பியதும் கிளைவையும் டால்டனையும் நோக்கிய மேஜர், ‘நீங்கள் இருவரும் இன்று இளைப்பாறலாம். சோல்ஜர்களும் சிப்பாய்களுங்கூட இளைப்பாறட்டும். கூலிகளில் பத்துப் பேரைஜான்மூருக்கு உதவ அனுப்புங்கள்” என்று கூறி வேகமாகத் தமது தொப்பை குலுங்க நடந்து தமது கூடாரத்தை நோக்கிச் சென்றார்.

கிளைவும் டால்டனும் ஏதும் பேசவில்லை . பத்துச் சுதேசிக் கூலிகளைத் தச்சனிடம் ஒப்படைத்துத் தங்கள் கூடாரத்தை நோக்கிச் சென்றார். ஜான்மூர் கூலிகளுடன் எதிரே சற்றுத் தூரத்திலிருந்த ஒரு தோப்பை நோக்கிச் சென்றான்.

அன்று பகல் முழுதும் மேஜர் கூடாரத்தை விட்டுக் கிளம்பவில்லை. கொள்ளிடத்தின் கிழக்குக் கரையில் தங்கியிருந்த ராணுவமும் சாப்பிடுவதிலும் உறங்குவதிலும் காலம் கழித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையைக் கோட்டைத் தளத்திலிருந்து மானாஜியும் விஜயகுமாரனும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். விஜயகுமாரனுக்கு எதிரியின் போக்கு அடியோடு புரியாததால் கேட்டான்; ”இதென்ன! எதிரி ராணுவத்தில் படையெடுப்பு சன்னத்தம் எதுவும் காணோமே” என்று.

”ஏதோ ரகசியம் நடக்கிறது” என்றார் மானாஜி. ”என்ன ரகசியம்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”இன்றிரவு தெரியலாம். எதற்கும் நீ நமது மின்னல் குதிரைப் படையைச் சித்தமாக வைத்திரு” என்று உத்தரவிட்டார். ஆனால் அவர் மனத்தில் கூட எதிரியின் அசிரத்தைக்குத் காரணம் புரியவில்லை.

”கரையில் இறங்கிய எதிரி கொள்ளிடத்தைக் கடந்து வரவேண்டும். கொள்ளிடத்திலும் இப்பொழுது நீர் அதிகமில்லை; வரமுடியும். இரவில் அலை அதிகப்பட்டு நீர் ஏறிவிடும். அப்போது எப்படி வர முடியும்?” என்று தம்மைத் தாமே பல முறை கேட்டுக் கொண்டார். அதன் விளைவாகக் கோட்டைத் தளத்திலிருந்து இறங்கி வந்ததும், ”விஜயகுமாரா! எதிரிகள் தாக்குவதானால் கிழக்கில்தான் தாக்குவார்கள். எதற்கும் மேற்கு வாசலையும் திறந்து வை. அரசகுமாரி பிடிவாதம் செய்யவில்லையானால் அவளை மட்டும் தகுந்த பந்தோபஸ்துடன் மேற்குப் புறமாக ஆச்சாள்புரம் அனுப்பிவிடு” என்று கூறினார்.

விஜயகுமாரனுக்கும் அது இஷ்டம்தான். ஆனால் அரச குமாரி சிறிதும் பிடிகொடுக்கவில்லை. ”என்னால் போரிட முடியாதா?” என்று கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டினாள்.

“இப்போது வந்திருக்கும் எதிரி கைத்துப்பாக்கிக்கு அஞ்சுபவன் அல்ல” என்றான் விஜயகுமாரன்.

”வேறு எதற்கு அஞ்சுவான்?” என்றாள் நந்தினி.

”கோட்டைப் பீரங்கிகளுக்கு அஞ்சுவான். நமது மின்னல் படைக்கு அஞ்சுவான்” என்று பதில் சொன்னான் நாயக்கர் வம்ச வீரன்.

“அப்படியானால் கோட்டை பீரங்கிகளில் ஒன்யை இயக்குகிறேன். இல்லையேல் மின்னல் படையில் வருகிறேன். எனக்குப் புரவியைப் பாயவைக்கவும் தெரியும், வளைவு வாளால் தலையைச் சீவவும் தெரியும்” என்றாள் நந்தினி உற்சாகத்துடன்.

விஜயகுமாரன் முகத்தில் எரிச்சல் மண்டியது. ”இவை பெண்கள் வேலையல்ல” என்றான் எரிச்சலுடன்.

”வரலாற்றைச் சரியாகப் படித்துப் பாருங்கள்” என்ற கூறிவிட்டுச் சரேலென்று தனது அறைக்குச் சென்ற நந்தினி கதவைச்சரேலெனத்தாளிட்டாள்.

விஜயகுமாரன் மிகவும் வேதனையடைந்த மனத்துடன் தனது இருப்பிடம் சென்று உணவருந்தினான். பிறகு கோட்டையின் பின்புறம் சென்று குதிரைப் படையைக் கிழக்கு வாசலில் அணி வகுத்து எச்சரிக்கையுடன் நிற்குமாறும், கோட்டை நோக்கிய மேற்கு வாசலைத் திறக்கும் நிலையில் வைக்குமாறும் உத்தரவிட்டு, மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிடக் கோட்டை மதில் படிகளில் ஏறிச் சென்றான்.

மானாஜியும் சற்று நேரத்திற் கெல்லாம் அங்கு வந்தார். இருவரும் எதிரிகள் பாசறையைக் கவனித்தார்கள். அங்கு எல்லாம் அமைதியாக இருந்தது. அந்த அமைதியைக் கண்டு முகம் சுளித்தார் மானாஜி. ”இந்த அமைதி எனக்குத் திருப்தியளிக்கவில்லை’ என்றும் கூறினார். ஆனால் அதே அமைதி அடுத்த மூன்று நாட்களும் நிலவியது.

எதிர்க்கரையில் மேஜர் மிகுந்த உல்லாசத்துடன் இருந்தார். சோல்ஜர்களிடம் அடிக்கடி ஜோக் அடித்தார். அக்கரையில் உள்ள கோட்டையைப் பற்றிய நினைப்பு அவருக்கு அடியோடு இல்லை போல் தெரிந்தது. போதாக்குறைக்குப் போர்க் கப்பல் தச்சனான ஜான்மூரைக் காணவே காணோம். மூன்றாம் நாளிரவு மேஜர் தன்னந்தனியாக எட்ட இருந்த தோப்புக்குள் நுழைந்தார். அவரைத் தொடர முற்பட்ட கிளைவை, “வேண்டாம் இங்கேயே இரு” என்று கட்டளையும் இட்டார்.

அதன் பிறகு தோப்பை அடைந்த மேஜர் லாரன்ஸ் அங்கே கண்ட காட்சியால் வெகு உற்சாகம் அடைந்தார். நீண்ட நீண்ட காட்டு மரக்கழிகளை வெட்டி ஒரு தெப்பம் தயாரித்திருந்தான் *ஜான்மூர். அடியில் சில பீப்பாய்களையும் பிணைத்திருந்தான். ”பெரிதாக இருக்கிறது” என்று உற்சாகத்தால் கூவினார் மேஜர்.

‘’ஆம். ஒரே சமயத்தில் நானூறு சோல்ஜர்கள் இதில் செல்லலாம்” என்றான் ஜான்மூர்.

‘படைகள் எதிர்க்கரையில் இறங்க வேண்டுமானால் இது நதியில் அடித்துக்கொண்டு போகாதிருக்க என்ன ஏற்பாடு?” என்று வினவினார் லாரன்ஸ்.

”இன்று நள்ளிரவில் ஆற்றங்கரையோரம் வாருங்கள்” என்றார் மூர்.

லாரன்ஸ் இரவில் மீண்டும் திரும்பி வந்தார்.

அந்த ‘ப்ளோட் அதாவது ‘மிதக்கும் மேடையின் முகப்பில் பெரும் கயிறு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான் மூர். அந்த மேடையை ஆற்றங்கரைக்குக் கூலிகளை விட்டுக் கொணரச் செய்தான். பிறகு, ”நான் அக்கரை செல்ல உத்தரவு வேண்டும்” என்றான் மூர் மேஜரை நோக்கி. மேஜர் தலையை அசைத்தார்.

கயிற்றின் நுனியை இடுப்பில் கட்டிக் கொண்டு கொள் ளிடத்தில் இறங்கி அந்த நள்ளிரவில் எதிர்க் கரையை நோக்கி நீந்தினான் மூர். பிறகு அரைமணி நேரத்தில் திரும்பி வந்து, நமக்கு அதிர்ஷ்ட ம் அதிகம். எதிர்க்கரையில் புளியமரம் இருந்தது. அதன் வேரில் கயிற்றைப் பிணைத்து விட்டேன் கயிறு வெளியே தெரியாதபடி நீரிலும் அமிழ்த்தி விட்டேன். இனி இந்த ‘ப்ளோட்’ டில் படைகள் போகலாம். எதிர்க்கரையில் போகும் முதல் படைவீரர் கயிற்றை இழுக்கலாம். ‘ப்ளோட்’ இருபுறமும் கயிறுகளால் இயக்கப்படலாம்” என்றான்.
அந்த நள்ளிரவில் அந்த மிதக்கும் மேடையில் நானூறு நானூறு பேராக அக்கரையை அடைந்த பிரிட்டிஷ் படையின் எதிரே அந்தச் சிற்றாறு காட்சியளித்தது. அந்தச் சிற்றாற்றங் கரையில் அணி வகுத்த பிரிட்டிஷ் படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார் லாரன்ஸ். ஒன்றுக்குக் கிளைவையும் இன்னைாரு பிரிவுக்குக் காப்டன் டால்டனையும் தலைவர்களாக அமர்த்தி, இன்னொரு பிரிவுக்குத்தாமே தலைமை வகித்தார்.

மறுநாள் ஜூன் 12-ஆம் தேதி காலையில், பிரிட்டிஷ் பாட்டரிங் கானன் மீண்டும் மீண்டும் முழுங்கியது. கோட்டையின் கிழக்கு வாசல் கதவுகள் தூளாயின. இருபுறத்து மதிளும் சிறிது இடிந்தது.

“இந்தக் கோட்டையை முதலில் தாக்கும் உரிமை எனக்கு வேண்டும்” என்று கிளைவ் வேண்டினான். லாரன்ஸ் சம்மதிக் கவே சிற்றாற்றைக் கடந்தான் கிளைவ். அவனுடன் 34 வெள்ளை யரும் 700 சிப்பாய்களும் சென்றார்கள். அவர்கள் சிற்றாற்றின் அக்கரையை அடைந்ததும் துப்பாக்கிகளைச் சுட்டுக்கொண்டு விசிறிபோல் விரிந்து கிழக்கு வாசலை நோக்கி ஓடினார்கள்.

திடீரென ராஜபேரிகை பயங்கரமாக முழங்கியது. மின்னல் வேகத்துடன் மகாராஷ்டிரக் குதிரைப்படை விஜயகுமாரன் தலைமையில் வெளியே பாய்ந்து வந்தது. அவர்கள் கைகளில் உயரத் தூக்கிய வளைந்த வாள்கள் பளபளத்தன. வெள்ளையர் மண்டியிட்டு, துப்பாக்கிகளை இரண்டாம் முறை சுட முயலு முன்பாக 26 வெள்ளையர் தலைகள் நிலத்தில் உருண்டன. கிளைவின் சிப்பாய்கள் பின்னோக்கிப் பறந்தனர். வேகமாகப் பாய்ந்து வந்த குதிரை வீரன் ஒருவன் கிளைவின் தலையை வெட்ட வாளை ஓங்கினான். ஓங்கிய வாள் இறங்க வில்லை. கிளைவ் வாளிலிருந்து தப்பி விலகினான். வெட்ட முற்பட்டவன், ”கிளைவ்! ஓடிவிடு” என்றான். கிளைவ் சிப்பாய்களை நோக்கி ஓடினான். விஜயகுமாரன் வாளை உறையில் போட்டுக் கொண்டு கோட்டையை நோக்கித் திரும்பினான். மகாராஷ்டிரப் படையும் அவனுடன் விரைந்து கோட்டைக்குள் மறைந்தது.

மேஜர் லாரன்ஸ் இந்த முதல் தோல்வியால் மனம் தளர வில்லை. மிகுந்த சிந்தனையுடன் தமது பெரிய தொந்தியைப் பல முறை தடவிக் கொண்டார். பிறகு தமது படையை ஒன்றாகத் திரட்டி ஒரேகட்டாகச் செய்தார்.

பக்கவாட்டுகளில் காப்டன் டால்டனையும் உயிர்தப்பிய கிளைவையும் நிறுத்தினார். படையை ஓர் இரும்புச் சுவராக சிற்றாற்றில் இறக்கி எதிர்க்கரையை அடைந்து முன்னேற்றினார். பாட்டரிங் கானன் மீண்டும் முழங்கியது. கோட்டையின் பல இடங்களில் விரிசல் கண்டது. மேஜரின் படையை ஊடுருவ மீண்டும் மகாராஷ்டிரப் புரவிப் படை வந்தது. ஆனால் பலமுறை தாக்கியும் மேஜரின் இரும்புச் சுவரைத் தகர்க்க முடியவில்லை. வெள்ளையரின் தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகத்தில் பல புரவிகள் மாண்டு விழுந்தன. கோட்டைப் பீரங்கிகளைக் காப்டன் டால்டனின் பீரங்கிகளின் எதிர்வீச்சு அடக்கியது. அன்று மாலை வெற்றி முழக்கத்துடன் வெள்ளையர் படை தேவிக் கோட்டைக்குள் நுழைந்துவிட்டது.

ஆனால் உள்ளே இருந்த காட்சியைக் கண்டு பிரமித்தார் மேஜர் லாரன்ஸ். உள்ளே மருந்துக்குக்கூடக் கைதாக வீரன் யாருமில்லை. வெளியே வந்த சிறிய குதிரைப் படையில் மிஞ்சி யவர்தான் சிறைப்பட்டார்கள். மற்றபடி தேவிக்கோட்டை காலியாக இருந்தது. மேஜர் கோட்டைக்குள் சுற்றினார். கடைசி யாக மானாஜியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு ஒரு பீடத்தில் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் கடிதம் ஒன்றிருந்தது. ”இங்கிருந்து மேற்கே ஐந்து மைல் தூரத்தில் ஆச்சாள்புரம் என்ற ஊர் இருக்கிறது. அங்கே சந்திக்கலாம்” என்று கடிதத்தில் கண்டிருந்தது.

மேஜர் அந்தக் கடிதத்துடன் வெளிப்போந்து கிளைவிடம் அதைக் கொடுத்தார். ”மானாஜி நம்மை ஏமாற்றி விட்டார். மேற்குப்புறத்தை நாம் கவனிக்கவில்லை” என்று துக்கத்துடன் கூறினார். அந்த வார்த்தைகளை அவர் உதிர்த்துக் கொண்டிருக் கையில் பிரிட்டிஷ் கொடி தேவிக்கோட்டையின் உயரே ஏற்றப் பட்டது. பிரிட்டிஷ் பாண்ட் வெற்றிக் கோஷத்தை ஊதியது. மேஜரும் கிளைவும் நின்ற இடத்திலிருந்து ஸஸ்யூட் அடித் தார்கள்.

”பிரிட்டிஷாரின் முதல் காலடி இப்பொழுது இந்தியாவில் ஊன்றிவிட்டது. அடுத்த வெற்றிகளுக்கு இது ஆரம்பம்’ என்று திட்டமாகக் கூறிய லாரன்ஸ், ”நாளைக் காலையில் நாம் ஆச்சாள்புரம் போகிறோம்” என்றார்.

மூன்று நாள் கழித்து ஆச்சாள்புரத்தை அடைந்த மேஜர் லாரன்ஸ் அங்கிருந்த பெரும் மதிள்கள் கொண்ட சிவலோக தியாகராஜஸ்வாமி கோவிலைக் கண்டார். மதிள்கள் மேல் எதிரியின் பீரங்கிகள் ஏற்றப்பட்டிருந்தன. “இந்த மதிள்களைத் தகர்ப்பது கஷ்டம்” என்றான் கிளைவ்.

‘நெக் ஆஸ்பேரா டெர்ரண்ட்” (கஷ்டங்கள் நம்மை நடுங்க வைப்பதில்லை) என்றார் மேஜர் லாரன்ஸ்.

ஆனால் கஷ்டத்துக்கு இடமில்லை. அந்தப் போர் நடக்க வில்லை. அடுத்த இரண்டாவது நாள் தஞ்சை மன்னர் சமாதானத் தூது அனுப்பியிருந்தார். அதன்படி தேவிக் கோட்டையைப் பிரிட்டி ஷாருக்குத் தத்தம் செய்ததோடு காட்டு ராஜாவுக்கு ரூபாய் ஐயாயிரம் பென்ஷனும் கொடுக்க ஒப்புக் கொண்டிருந்தார்.

அந்தச் சமாதானக் கடிதத்தைக் கோவிலுக்கு எதிரேயிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து படித்த மேஜர் லாரன்ஸ் குழம்பினார். ”கிளைவ்! இதன் காரணம் உனக்குப் புரிகிறதா?” என்று கடிதத்தைக் கிளைவிடம் நீட்டினார்.

“புரியவில்லை. தேவிக் கோட்டையை அவர்களாக விட்டுக் கொடுத்தார்கள். இந்தக் கோவிலைத் தகர்த்து உள்ளிருக்கும் எதிரிகளைப் பிடிப்பதும் சுலபமல்ல” என்றான் கிளைவ்.

மேஜர் தூதனை நோக்கி, ”உண்மையைச் சொல். தஞ்சை மன்னர் ஏன் சமாதானத்தை விரும்புகிறார்?” என்று வினவினான்.

”கோவில் புனிதமானது. மன்னர், கோட்டைகளைவிடக் கோவில்களை மதிக்கிறார். அதை நீங்கள் அழிக்காதிருக்கவும், உள்ளே புகுந்து அதன் புனிதத் தன்மையைக் கெடுக்காதிருக்கவும் தேவிக் கோட்டையை விட்டுக் கொடுக்கிறார். தவிர பிரிட்டிஷார் நட்பையும் மதிக்கிறார்….’

மேஜர் அதை நம்பவில்லை. இதில் உள் மர்மம் இருப்பதாக நம்பி அதை வெளிப்படையாகவும் சொன்னார். ஆனால் சமாதான ஒப்பந்தம் அன்றே கையைழுத்திடப்பட்டது. பிரிட்டிஷ் படை தேவிக் கோட்டையை நோக்கிப் பின்வாங்கியது. ஒப்பந்தத்தில் ‘ அரசர் சார்பில் கையைழுத்திட்ட மானாஜி கொதித்துக் கொண்டிருந்தார். ”அரசரின் போக்கு எனக்குப் புரியவில்லை ” என்றார்.

தஞ்சைக்குச் சென்ற பிறகுதான் புரிந்தது. புரிந்தபோது மானாஜி திக்பிரமைக்கு உள்ளானார்.

முதல் பாகம் முற்றும்

Previous articleRaja Perigai Part 1 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here