Home Historical Novel Raja Perigai Part 1 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

80
0
Raja Perigai Part 1 Ch4 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 1 Ch4 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 4. “வாள் மகளே! வா!”

Raja Perigai Part 1 Ch4 | Raja Perigai | TamilNovel.in

‘கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பட்டு, பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்’ வீதிகள் அனைத்திலுமே மகாராஷ்டிர வீரர்கள் சல்லடை போட்டுச் சலித்தும், தஞ்சை மன்னன் செல்வியைக் கடத்திச் சென்றுவிட்ட வாலிபன் கிடைக்காதது மற்றவர்களுக்குப் பெருவியப்பை அளித்தும், அவனால் தூக்கிச் செல்லப்பட்ட அரச மகளுக்கு மட்டும் அது எவ்வித வியப்பையும் அளிக்கவில்லை.

அரங்கன் சந்நிதிப் படிகளை விட்டு இறங்கிய மாத்திரத்திலேயே அநாயாசமாகத் தன்னைத் தோளின்மீது போட்டுக் கொண்டு வெகுவேகமாக ஓடத் துவங்கிய வாலிபன், ஓடிக்கொண்டே அவள் காதில் மட்டும் கேட்கும் வண்ணம்,

”வாயைத் திறவாதே” என்று கூறிய எச்சரிக்கைச் சொற்களும், பிறகு பின் தொடர்ந்த காவலருக்குப் பாய்ச்சல் காட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் அவன் பதுங்கி விட்டதும், அதற்குப் பிறகு வடக்கு வாசல் திட்டிக் கதவுக்காக மெல்ல ஓடி, அதன் வெச்ளியே தனித்து நின்ற புரவி மீது தன்னைக் குறுக்கே போட்டு அவனும் தாவி ஏறிக் கடிவாளக் கயிறுகளைத் தொட்டதுமே அந்தப் புரவி காற்றைப்போல் பறந்துவிட்டதும், எல்லாமே சொப்பனம் போல் இருந்தாலும் அந்தச் சொப்பனம் நடக்கவே செய்ததென்பதை உணர்ந்த அரசகுமாரி வாயைத் திறவாமலே குதிரை முதுகின் குறுக்கே கிடந்தாள்.

அப்படிக் கிடந்த நிலையில் அந்தப் புரவியின் முதுகின் கடினம் தன்னைக் கடத்தியவன் தோளுக்கும் இருந்ததை நினைத்து, இந்தச் சிறுவயதில் இவனுக்கு எப்படி இத்தனை உடல் உரமும் உள்ள உரமும் வந்தன?’ என்று தன்னை வினவிக்கொண்டாள். விடை காணவில்லையே தவிர அதனால் துன்பமோ கோபமோ அவள் இதயத்தைப் பாதிக்கவுமில்லை. அத்தகைய நிலையில், சற்று எட்ட உத்திர, சித்திரை வீதிகளிலும் வடதிருக் காவேரியான கொள்ளிடப் பெரும் பாதையிலும் வீரர்கள் கோஷமும் புரவிக் குளம்பொலிகளும் ‘இத்தனை பேரையும் மீறி இந்த வாலிபன் எப்படித்தப்ப முடியும்? என்ற விசனமும் அவளைக் காரணம் இல்லாமல் கவர்ந்து கொண்டாலும், வாலிபனது அடுத்த நடவடிக்கைகள் அவளுக்கு அவன் தந்திரத்தின் எல்லையைக் காட்டின.

வடதிருக்காவேரிக்குச் சென்ற பெரும் பாதையிலிருந்து வாலிபன் தனது புரவியைத் திடீரெனப் பக்கத்து அடர்ந்த தோப்புக்குள் திருப்பி, புரவியிலிருந்து கீழே குதித்து, புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மரங்களின் ஊடே மெல்ல நடந்தான், அரவம் எதும் செய்யாமலே. அப்படி அரை நாழிகைப் பயணம் செய்ததும் கொள்ளிடத்தின் ஓரமாக ஓடிக்கொண்டிருந்த நீரில் குதிரையை இறக்கித் தான் மட்டும் முழங்கால் மட்டுமே ஓடிய நீர்க் காலைக் கடந்தான். அங்கிருந்து கொண்டே மிக நிதானமாகச் சற்று மேற்கே கண்களை ஓட்டியவன் மெல்ல நகைத்தான். அவன் நகைப்புக்குக் காரணத்தை அறிய மெல்லத் தலை தூக்கிய அரசகுமாரி, புரவி வீரர் பலர் கொள்ளிடப் பெரும் பாதையின் முனையிலேயே அலைவதையும் இன்னும் சிலர் புரவிகளை விட்டு இறங்கிப் பந்தங்களுடன் கொள்ளிட நீர்க்காலிலும் அதை அடுத்த மணற் பரப்பிலும் தன்னைத் தேடுவதையும் கண்டாள். அவர்கள் அப்படித் தேடி அலைந்து அலைந்து மீண்டும் கரையேறிப் பாதையை நோக்கிச் சென்றதும், வாலிபன் மீண்டும் தனது புரவி மீது ஏறிப் புரவியைத் தட்டிவிட்டதையும், அந்தப் புரவியும் அவனது எண்ணப்படி கொள்ளிட மணலில் மிக வேகமாகப் பாய்ந்து சென்றதையும் கவனித்த அரசகுமாரி, அது நல்ல அரபு ஜாதிப் புரவியென்பதை சந்தேமறப் புரிந்து கொண்டாளாதலால் மௌனமே சாதித்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் மௌனத்தை அந்த வாலிபன் கலைத்து, ”அரசகுமாரி! இனி நீங்கள் இறங்கலாம், ஆபத்து கடந்துவிட்டது” என்று கூறியபடி அவளை முன்பு தூக்கியதுபோல் மறுபடியும் தூக்கிக் கீழே இறக்கினான்.

அவள் இறங்கிய இடம் கொள்ளிடத்தில் வடக்குக் கரைக்கு அருகிலிருந்த நீர்க்காலை அடுத்திருந்ததைக் கவனித்த அரச குமாரி தனது கண்களை நாலாபுறத்திலும் அலையவிட்டாள் சில விநாடிகள். பின்புறத்தே பிரும்மாண்டமாக விரிந்து கிடந்த வடதிருக்காவேரியின் வெளேரென்ற மணற்பரப்பு அந்த நல்ல இருட்டிலும் வெண்மை மங்காதிருந்ததையும் எதிரே தெரிந்த கரைமீது வளர்ந்திருந்த நானாவித மரங்கள் கூட மெல்ல மெல்லக் காற்றில் அசைந்து கொண்டிருந்ததையும், பட்சிஜாலங்களின் அரவம் அடங்கிவிட்ட சமயமாதலால் அந்த மரக் கூட்டத்தின் இன்ப நிலைகூட அச்சத்தைத் தரக்கூடிய வகையில் அமைந்து கிடந்ததையும் கண்டாள் அந்தக் காரிகை.

ஆனால் சில அடிகளே தள்ளி ஓடிக்கொண்டிருந்த நீர்க்கால் மட்டும் சிறிது சலசலப்பக் காட்டி மரங்கள் அளித்த அச்சத்திற்கு மாற்று செய்திருந்ததால், எந்தப் பயங்கரத்துக்கும் ஒரு மாற்று இருக்கிறதென்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் தஞ்சை அரசமகள். பிறகு வானத்தை நோக்கிய அவள் சப்தரிஷி மண்டலம் இருந்த நிலை கண்டு நடுநிசி தாண்டிவிட்டதென்பதை உணர்ந்து கொண்டாலும், அந்த நடுநிசிகூட நட்சத்திரக் கூட்டங்களால் உலகத்துக்கு எத்தனை அழகை அளித்திருக்கிறதென்பதை எண்ணிப் பார்த்தாள். பிறகு இரண்டடி நடந்து சென்று நீர்க்காலுக்கு அருகே மணலில் உட்கார்ந்து காற்சேலையைச் சிறிது மேலெடுத்துக் கால்களை நீரில் அலையவிட்டாள்.

புரவியிலிருந்து இறங்கிய பின்னர் அவள் தன்னைக் கடிந்து கொள்வாளென்றோ, தன்னைப் பார்த்துச் சீறி வசை மொழிகளை வாரி உதிர்ப்பாளென்றோ வாலிபன் எதிர்பார்த்து ஏமாந்தே போனான். தான் அவளைத் தூக்கிக் கொணர்ந்ததைப் பற்றி வியப்பையாவது கண்டிப்பாய்க் காட்டுவாளென்று நினைத்திருந்தால் அதிலும் ஏமாற்றத்தையே அடைந்தான். தான் அவளைக் களவாடி வந்ததைப்பற்றி எந்தவிதப் பிரஸ்தாபத்தையும் செய்யாமல், எந்தவிதப் பரபரப்பையும் காட்டாமல், அவள் கொள்ளிட மணலையும், எதிரேயிருந்த சோலையையும், அண்ணாந்து வானத்தையும் பார்த்தது விசித்திரமாக இருந்தது அவனுக்கு. ‘இப்படியும் ஒரு பெண் உண்டா?’ என்று எண்ணி அவன்தான் வியப்படைந்தான்.

ஆனால் வியப்போ படப்படப்போ பதற்றமோ இன்றி நீர்க்காலில் கால்களை அளைய விட்டுக் கொண்டு அரசகுமாரி அசட்டையுடன் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் சிறிது கோபமும் வரவே, ”அரசகுமாரி!” என்று சற்றே சினம் கலந்த குரலில் அழைத்தான் வாலிபன்.

அரசகுமாரி உட்கார்ந்த நிலையைவிட்டு அசையவும் இல்லை, அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. அவளருகே சென்று நீரைப் பருக முற்பட்ட புரவியின் கழுத்தில் தனது கையைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். “என்ன அழகான புரவி!” என்ற சொற்கள் மட்டும் அவள் வாயிலிருந்து உதிர்ந்தன.

வாலிபன் மெள்ள நிதானத்தைப் பறக்கவிடும் நிலைக்கு வந்தான். ஆகவே அவள் இருந்த இடத்தை நெருங்கி, ”புரவியை அழகு பார்க்க உங்களை இங்கு அழைத்து வரவில்லை” என்றான் மெல்ல சினம் ஒலித்த குரலில்.

அவள் அவனைத் திரும்பக்கூடப் பார்க்கவில்லை. புரவியின் முகத்தை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்ட வண்ணம் கேட்டாள், ”அப்படியானால் என்னை அழகு பார்க்க அழைத்து வந்தீர்களா?” என்று.

இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பாராத வாலிபன் திக்பிரமை அடைந்ததால் சினத்தை அகற்றிக் சந்தேகம் வலுக்க, “அரச குமாரி! உங்களுக்கு…” என்று ஏதோ கேட்க முற்பட்டு முடியாமல் சொற்களை மென்று விழுங்கினான்.

“சித்தப் பிரமையில்லை” என்று சொற்களை அலட்சிய மாகக் கூறினாள் அவள்.

”அச்சம்?” வாலிபன் கேள்வியில் குழப்பம் மிக அதிகமாயிருந்தது.

”எதற்கு அச்சப்பட வேண்டும்?”

“தனிமையாக ஓர் ஆடவனிடம்…”

“அதாவது உங்களிடம்?”

“ஆம்.”

”அகப்பட்டுக் கொண்டு விட்டேன்.”

“ஆம், ஆம்.”

”அதற்காகக் கவலைப்பட வேண்டுமென்கிறீர்கள்?” இந்தக் கேள்வியைக் கேட்டு அவள் மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பில் அவன் புரவியும் பங்கு கொண்டு பற்களை நன்றாகக் காட்டி வாலிபனை நோக்கிக் கனைத்தது.

அதுவரை நின்ற நிலையிலிருந்த வாலிபன் இருமுறை மணலில் அப்புறமும் இப்புறமும் நடந்துவிட்டு மெள்ள அரசகுமாரி இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி நீர்க்காலருகே உட்கார்ந்து கொண்டு, ”அரசகுமாரி!” என்று சற்று உரக்கவே அழைத்தான்.

”என்ன?” என்று கேட்ட அரசகுமாரி கொள்ளிட நீரை எடுத்து இருகைகளாலும் சற்று எட்ட இறைத்தாள்.

”உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான் வாலிபன் தயக்கத்துடன்.

‘புரியாததற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள் அவள்.

”உங்களைப் பலவந்தமாகத் தூக்கி வந்திருக்கிறேன், அரங்கன் சந்நிதியிலிருந்து…” என்று துவங்கினான் வாலிபன்.

”ஆம்.”

”வேறு வழியில்லை எனக்கு.”

”ஆம். பெரும் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது உங்கள் மேல். அகப்பட்டுக் கொண்டிருந்தால் உங்கள் தலையை நாளைக்கே வெட்டி விடுவார்கள்.”

”அது உங்களுக்குப் புரிகிறதைப்பற்றி எனக்கு மகிழ்ச்சி. இப்படி ஒர் அபலையை நான் தூக்கி வந்தது இதுதான் முதல் தடவை. என் உணர்ச்சிகளை மீறி, அறத்தை மீறி, நான் தெரிந்து செய்த முதல் குற்றம் இதுதான்.” இதைச் சொன்ன வாலிபன் துன்பப் பெருமூச்சு விட்டான்.

அவன் துன்பத்தைக் கவனித்த அரசகுமாரி சொன்னாள், “நீங்கள் துன்பப்பட ஏதுமில்லை ” என்று.

”ஏன்?” வாலிபன் கேட்டான் வியப்புடன்.

”முதலில் நான் அபலையல்ல. அதாவது பலம் இல்லாதவளல்ல. இரண்டாவது நான் இஷ்டப்பட்டிருக்கா விட்டால் உங்களால் என்னைக் கொண்டு வந்திருக்க முடியாது” என்று திட்டமாகக் கூறிய தஞ்சை அரசகுமாரி வாலிபனைத் திரும்பிப் பார்த்தாள்.

இருட்டு கண்களுக்குப் பழகிவிட்டதால் நட்சத்திர வெளிச் சமே போதுமாயிருந்தது அவ்விருவருக்கும், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும். ஆகவே, வாலிபன் அவள் கண்கள் தன்னை நோக்கி நகைப்பதைக் கண்டான்.

”உங்கள் இஷ்டமில்லாவிட்டால் உங்களை நான் தூக்கி வந்திருக்க முடியாதா?” என்று வியப்பு மண்டிய குரலில் வினவினான்.

”முடியாது” என்றாள் அவள், அவன் கண்களைத் துணிவுடன் தன் கண்களால் சந்தித்து.
”உங்கள் கழுத்தில் நான் கைத்துப்பாக்கியைப் புதைத் தேனே” என்று சுட்டிக்காட்டினான் அவன்.

“ஆம், புதைத்தீர்கள்” என்று ஒப்புக்கொண்டாள் அவள் சர்வ சகஜமாக.

”அது…?”

”மற்ற வீரர்களை அச்சுறுத்த.”

‘’உங்களுக்கு அச்சம் இல்லை அப்போது…?”

”அப்பொழுதும் இல்லை. இப்பொழுதும் இல்லை.” இந்தச் சொற்களைச் சந்தேகத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக உச்சரித்தாள் அரசகுமாரி.

‘இப்பொழுதும் இல்லையா?” என்று கேட்ட வாலிபன் தனது கச்சையிலிருந்த கைத்துப்பாக்கியில் கையை வைத்தான்.

அடுத்த கணம் அவன் விழிகள் பிரமிப்பின் எல்லையை அடைந்தன. அரசகுமாரியின் கையில் எங்கிருந்தோ ஒரு சின்னஞ்சிறு கைத்துப்பாக்கி மின்னல் வேகத்தில் தோன்றியது. அதன் வாய் வாலிபன் கண்களை நோக்கிக்கொண்டு பயங்கரமாக அசைவற்று நின்றது.

வாலிபனுக்கு அப்போதுதான் மெள்ள மெள்ள உண்மை உதயமாயிற்று. அந்த உண்மையை வெளிப்படையாகச் சொன்னாள் அரசகுமாரி: “நீங்கள் தோளில் என்னைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடியபோது இந்தக் கைத்துப்பாக்கியை மெள்ள எடுத்து உங்களைச் சுட்டிருக்கலாம் மார்பில். அப்பொழுது முடியாவிட்டாலும் வடக்கு வாசலில் என்மீது பிடியைத் தளர்த்திப் புரவிமீது போட முயன்றபோது சுட்டிருக்கலாம். அப்போதும் முடியாவிட்டாலும் கொள்ளிடத்தில் நீங்கள் புரவியிலிருந்து இறங்கியபோது சுட்டிருக்கலாம். ஏன் இப்பொழுதுகூட அந்தப் பணியை முடிக்கலாம்….”

இந்த இடத்தில் பேச்சை நிறத்திய அரசகுமாரி மீண்டும் தனது இடையில் கைத்துப்பாக்கியைச் செருகி மேலாடையை இழுத்துவிட்டு, அதை மறைத்துவிட்டாள். அத்துடன் நிற்க வில்லை அவள். இடக் கையை இடையில் செலுத்தி மெல்லிய குறுவாளொன்றையும் எடுத்துக் காட்டி, “இதுவும் அந்தப் பணியைச் சுலபமாக முடித்திருக்கும்” என்றும் காட்டி அதையும் மறைத்தாள்.

வாலிபன் திகைத்தான். சில விநாடிகள். பிறகு சொன்னான்: ”அரசகுமாரி! நீங்கள் ஒரு ஆயுத சாலை.”

அரசகுமாரி மெல்ல நகைத்தாள். “இப்போது நாடு இருக்கும் நிலையில் எல்லாப் பெண்களும் ஆயுத சாலைகளாக இருப்பதே நல்லதல்லவா?” என்றும் வினவினாள்.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் வாலிபன். அவள் தன்னுடன் விருப்பத்துடன் வந்திருப்பதை உணர்ந்ததால் நன்றி ததும்பிய கண்களை அவள்மீது நிலைக்க விட்டான். ‘இத்தனை பாதுகாப்பிருக்க என்னுடன் ஏன் வந்தீர்கள்?” என்றும் வினவினான், ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள.

அரசகுமாரி வளைந்த தன் உடலை நன்றாக நிமிர்த்திக் கொண்டு அரச தோரணையில் சொன்னாள்: ”டபீர் பண்டிதர் திடீரென்று நிரபராதியான உங்கள் மீது பெரும் குற்றத்தை அந்தச் சமயத்தில் சுமத்திவிட்டார். அவர் பிடியிலிருந்து அந்தச் சமயத்தில் நீங்கள் தப்பாவிட்டால் பின்னால் உங்களைத் தப்புவிக்க என்னால் கூட முடியாது. ஆகவே உங்கள் செயலுக்கு நான் உடன்பட்டேன். தவிர, முத்தங்கியை இந்த நாட்களில் அரங்கனுக்குச் சார்த்தும் வழக்கமில்லை. தனித்து முத்தங்கி சார்த்திய முகுந்தனைப் பார்க்க எண்ணினேன். அதற்கு அரசாங்க அதிகாரத்தை உபயோகப்படுத்தினேன். வீரர்களை விட்டுப் பாக வதர்களை விலக்கினேன். பட்டர்களைக்கூட விலக்கினேன். அந்தப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள நினைத்தேன். நீங்கள் கூறினீர்களே சந்நிதியில், ‘உள்ளிருக்கும் ரங்கராஜாவைவிடப் பெரிய ராஜா யாரும் உலகத்தில் கிடையாது’ என்று. அப்போது நினைத்தேன், நான் செய்த தவறு எத்தனை மகத்தானது என்பதை. அதற்கு இதுவும் ஒரு பிராயச்சித்தம்.” இப்படிச் சொன்ன அரசகுமாரி கேட்டாள்: ”ஆமாம், நீங்கள் யார்? எதற்காக அத்தகைய பயங்கர சபதத்தைச் செய்தீர்கள்?” என்று.

வாலிபன் சில விநாடிகள் பதில் சொல்லவில்லை . தீர்க்கா லோசனையில் சிக்கிக் கிடந்தான். கடைசியாகப் பேச முற்பட்டு, ”என் பெயர் விஜயகுமாரன். சபதத்திற்குக் காரணம் கேட்கா தீர்கள். காலம் வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள், உலகே புரிந்துகொள்ளும்” என்று நிதானமாகச் சொன்ன அந்த வாலிபன் மணலிலிருந்து எழுந்து நின்றுகொண்டான். ”வாருங்கள் போகலாம்!” என்று அழைத்தான் தஞ்சை மன்னன் மகளை.

அவளும் எழுந்து நின்று ஆடையைச் சரிசெய்து கொண்டு, “இங்கிருந்து…?” ஒரு கேள்வியை அரையும் குறையுமாக விட்டாள்.

”அக்கரை சென்று சமயபுரத்தை அடைவோம். உங்களுர் சத்திரம் இருக்கிறது” என்றான்.

அரசகுமாரி பதிலேதும் சொல்லாமல் வாலிபன் உதவிக்கு வந்ததைக்கூடக் கவனிக்காமல் புரவி மீது ஏறிக்கொண்டாள். புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நீரில் இறங்கிய விஜயகுமாரன் மெள்ள எதிர்க்கரையை அடைந்தான். அங்கிருந்து புரவியை மெள்ளச் செலுத்தி வெள்ளி முளைப்பதற்கு முன் சமயபுரத்தின் சத்திரத்தை அடைந்தான் அரச குமாரியுடன். புரவியைச் சத்திரத்தின் வாயில் தூணிலேயே கட்டிவிட்டு, சாத்திரத்துக் கதவைத் தட்டினான் இருமுறை. சத்திரத்துப் பெரும் தாழ்ப்பாள்கள் சில விநாடிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டதும் கையில் விளக்குடன் தலையை வெளியே நீட்டிய சத்திரத்துக் காவலன், “இங்கு யாரும் தங்க இடமில்லை” என்று கூறிவிட்டு மீண்டும் கதவைச் சாத்தத் துவங்கினான்.

அந்தச் சமயத்தில் சத்திரக் காவலனை ஒதுக்கித் தள்ளி விட்டுத் திடீரெனக் கதவைத் திறந்த விஜயகுமாரன், ‘வாருங்கள் உள்ளே!” என்று அரசகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

நுழைந்த இருவரும் கூடத்தில் விளக்குகள் பல எரிந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். குடி மயக்கத்தில் சில வீரர்கள் இருந்ததையும் பார்த்தார்கள். இதெல்லாம் அந்த இருவரும் எதிர்பாராத காட்சிகளல்ல. ஆனால் முற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. அந்தக் குடிகாரர்களுக்குச் சற்று அப்பாலிருந்த மஞ்சத்திலிருந்து ஆஜானுபாகுவாய் எழுந்த ஒரு மனிதன் அரசகுமாரியை ஒரு விநாடி நோக்கினான். பிறகு நகைத்தான். அத்துடன் நிற்கவில்லை . ”வாள் மகளே! வா!” என்று செல்லமாக அழைக்கவும் செய்தான்.

‘வாள் மகளா! இவளா அது!” என்று பிரமித்தான் விஜய குமாரன். புரியாத பல விஷயங்கள் அப்போதுதான் புரியலாயிற்று அவனுக்கு.

Previous articleRaja Perigai Part 1 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here