Home Historical Novel Raja Perigai Part 1 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

74
0
Raja Perigai Part 1 Ch5 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 1 Ch5 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5. சத்திரத்துச் சிக்கல்

Raja Perigai Part 1 Ch5 | Raja Perigai | TamilNovel.in

“மறந்தும் புறந்தொழா மாந்த ராயிருக்க வேண்டிய மாபெரும் வைணவரும் முடி இறக்கும் மாரியம்மன் இருப்பிடமான சமயபுரத்தின் தஞ்சை மன்னன் சத்திரத்தில், இரவு பெரிதும் முற்றிவிட்ட அந்த நேரத்தில், குடிகார வீரர்களுக்குப் பின்னாலிருந்த மஞ்சத்திலிருந்து ஆஜானுபாகுவாய் எழுந்த மனிதன் அரசகுமாரியைப் பார்த்து நகைத்ததால் விஜயகுமாரன் முதலில் சினத்தின் வசப்பட்டாலும், அடுத்த விநாடி அந்த மனிதன் அவளை ‘வாள் மகள்’ என்று அழைத்ததாலும் பெரும் பிரமிப்பையே அடைந்தான். அந்தப் பெயர் சோழ மண்டலம் முழுதும் பிரசித்தியான பெயர். நந்தினி என்ற உண்மையான பெயரை மறைத்துவிட்ட காரணப் பெயர்.

தஞ்சை மகாராஷ்டிர மன்னர் பரம்பரையில் வந்த மகாவீரனும், ராஜாதுகோஜியின் மகனும், துகோஜியின் வாளுக்கு மாலையிட்ட அன்னபூர்ணாபாயின் செல்வனும், தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர அரசகுலத்தவரின் இணையற்றவனென்று பிரசித்தி பெற்றவனுமான ‘ராஜா பிரதாப்சிங் ‘வாள் மகன்’ என்று அழைக்கப்பட்டது அவன் பிறப்பின் காரணம் மட்டுமல்ல என்பதையும் அவன் வீரத்தையும் குறிக்க ஏற்பட்டது என்பதையும் உணர்ந்திருந்த விஜயகுமாரன், பிரதாப்சிங்கின் பல மனைவியரில் ஒரு மனைவியின் புதல்வி மட்டும் வீரத்தில் அவனுக்குச் சளைத்தவளல்ல என்பதையும், பெரும் துணிவுள்ளவள் என்பதையும், ஆகவே அவளையும் மக்கள் ‘வாள் மகள்’ என்றே அழைத்து வந்தனர் என்பதையும் ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் அவள்தான் இந்த நந்தினி என்பதை உணராத காரணத்தால் பெரும் பிரமிப்பையே அடைந்தான்.

முதலில் தான் பலவந்தமாகத் தூக்கி வந்த போதிலும் அதை அவள் சிறிதும் லட்சியம் செய்யாமலிருந்தது, கொள்ளிடத்தில் தன்னைக் கைத்துப்பாக்கியையும் கத்தியையும் காட்டி அச்சுறுத்தியது, முதலிய பல சம்பவங்களுக்கும் அவனுக்கு அப்போதுதான் காரணம் புரிந்தது.

எதற்கும் துணிந்த ‘வாள்மகள்’ தன்னை அத்தனை தூரம் கொல்லாது வந்தது பெரும் விசித்திரம் என்பதை உணர்ந்ததால் விஜயகுமாரன் வியப்பிலும் பிரமிப்பிலும் சிக்கிப் பல விநாடிகள் திரும்பி அரசகுமாரியைப் பார்த்தவண்ணம் சிலையென நின்றுவிட்டான். அந்தச் சமயத்தில், அந்தப் புது மனிதன் மீண்டும் ஏளனப் பெருநகை ஒன்றை உதிர விட்டதால், அவனை நோக்கித் தீ விழிகளை திருப்பிய விஜயகுமாரன் திடீரெனத் தனது வாளின் உறையின் மீது கைவைத்தான். அந்தக் கையைக் கண்டோ விஜயகுமாரன் வாளைக் கண்டோ அந்த மனிதன் சிறிதும் அஞ்சியதாகத் தெரியவில்லை. அச்சத்துக்குப் பதில் பரிசாக இளநகையொன்று அவன் இதழ்களில் தவழ்ந்தது. ”வாள் மகள் ஒரு வாள் வீரனையும் அழைத்து வந்திருப்பதாகத் தெரிகிறது” என்றான் அந்த மனிதன், ஏளனம் ததும்பிய குரலில் அரசகுமாரியை நோக்கி.
அரசகுமாரி உடன்படியாக அந்த மனிதனுக்குப் பதில் சொல்லாவிட்டாலும் விஜயகுமாரனைத் தனது கையின் சைகையால் அடக்கவே செய்தாள். “வீரரே! வாளை உருவ அவசியமில்லை . மகாராஷ்டிரர்களின் மாபெரும் வீரரைச் சந்தியுங்கள்” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

விஜயகுமாரனின் விழிகள் அந்த மனிதனை மிக அலட்சியமாக ஏறெடுத்து நோக்கின. “இவருக்குப் பெயர் ஒன்று உண்டு என்று நினைக்கிறேன்” என்ற அவன் சொற்களிலும் பழைய பிரமை மறைந்து இகழ்ச்சி ஒலித்தது.

வாலிபன் துணிவைக் கண்ட அந்த மனினன் விழிகள் ஆச்சரியத்தில் நன்றாக மலர்ந்தன். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன்பு அரசகுமாரியே இடைபுகுந்து, “இவர் பெயர் முராரிராவ் கோபர்டே” என்று அறிவித்தாள்.

அந்த அறிவிப்பு விஜயகுமாரனுக்கு அன்றிரவின் இரண்டாவது அதிர்ச்சியை அளித்தது. மகாராஷ்டிரத் தளபதிகளில் மிகச் சிறந்தவரென்று பெயர் பெற்றவரும், அஞ்சா நெஞ்சம் படைத்தவரும், ஆர்க்காடு நவாபுகளையும் ஆங்கிலேயரையும் பிரெஞ்சுக்காரரையும் எல்லாரையுமே பெரும் பீதிக்குள்ளாக்கி யிருந்தவரும், திருச்சியிலிருந்து சந்தாசாகேபை விரட்டியடித்து, பின் தன்னிஷ்டப்படி ஆட்சி புரிந்தவரும், பிறகு அதையும் விட்டு நீங்கியவரும், நிலையாக எங்கும் நில்லாதவருமான முராரிராவைச் சந்தித்ததையே பாக்கியமாகக் கருதிய விஜயகுமாரன் அவரைகூர்ந்தும் நோக்கலானான்.

மகாராஷ்டிரர்களின் பிரதம தளபதி ரகோஜி போன்ஸ்லேயின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான முராரிராவ் சாதாரண மகாராஷ்டிரர்களைப் போல் அல்லாமல் ஆறடிக்கும் அதிக உயரத்தைப் பெற்றிருந்ததையும், அவர் சரீர உயர்வுக்குத் தக்க சதைப் பிடிப்பு உடலில் இல்லையென்றாலும் சரிரம் முழுவதுமே உருவி விடப்பட்ட சாட்டை போல் துடிப்புடன் இருந்ததையும், அவர் இரு கருவிழிகளில் சதா துள்ளிக்கொண்டிருந்த ஒரு வீர ஒளியும் அவை யாரையும் அளந்துவிடும் சக்தியுடன் சீறிக் கொண்டிருந்ததையும் கவனித்தான் விஜயகுமாரன்.

அது மட்டுமின்றி அந்த மகாராஷ்டிர வீரனின் இடையிலிருந்து தொங்கிய வளைந்த வாள் கச்சையில் இறுகப் பிணைக்கப்படாமல் தொங்கலாடிக் கொண்டிருந்தபடியால், அதை அரை விநாடியில் அவர் உருவிவிட முடியுமென்பதையும், கச்சையில் செருகப்பட்டிருந்த பெரும் கைத்துப்பாக்கிகூட அவரது ஒவ்வொரு அசைவிலும் கூட அசைந்ததையும் கண்ட விஜயகுமாரன், “இவரைக் கண்டு பிரிட்டிஷாரும், பிரெஞ்சுக் காரரும்கூடப் பயப்படுவதில் வியப்பில்லை” என்ற தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுக்குப் புரியாதது மட்டும் ஒன்றிருந்தது. ஆற்காட்டுக்கு வேறு நவாப் ஏற்பட்டுவிட்டதால், மகாராஷ்டிர தளபதியின் உத்தரவுப்படி திருச்சியைப் பழயபடி நவாபின் பிரதிநிதியிடம் ஒப்படைத்தும், முராரி ராவ் திரும்பத் தமது இருப்பிடமான ‘குத்தி நகர்’ செல்லாமல் இங்கேயே எதற்காக உலாவ வேண்டும் என்பது புரியவில்லை, விஜயகுமாரனுக்கு. ஆனால் அதைப்பற்றி அவன் ஏதும் கேட்காமல் முராரிராவை மீண்டும் கூர்ந்து நோக்கவே செய்தான்.

விஜயகுமாரன் தன்னை அளவெடுப்பதையம் திடீரென அவன் கண்களில் துளிர்விட்ட சந்தேகத்தையும் முராரிராவ் விநாடி நேரத்தில் கவனித்து மெல்ல மறுபடியும் நகைத்தார். நகைத்ததோடு நில்லாமல் அரசகுமாரியை நோக்கி, ”மகளே, இவனை எங்கே பிடித்தாய்?” என்று வினவினார்.

அரசகுமாரியின் இதழ்களில் இளநகை பூத்ததை விஜயகுமாரன் கண்டான். அடுத்தபடி அவள் சொன்ன பதிலிலும் சற்றே இன்பம் கலந்திருந்ததாகத் தோன்றியது விஜயகுமாரனுக்கு. “இவரை நான் பிடிக்கவில்லை, இவர்தான் என்னைப் பிடித்தார்” என்றாள் அரசகுமாரி.

இதைத் கேட்ட முராரிராவ் பெரிதாகச் சத்திரமே அதிரும் படியாக நகைத்தார். ”பலே பலே, அப்படியா!” என்று கேட்டார் நகைப்பின் ஊடே.

விஜயகுமாரன் பொறுமையை முராரிராவின் நகைப்பு உடைத்துவிட்டதால், ‘மகாராஷ்டிரத் தளபதியின் நகைப்புக்குக் காரணம் தெரியவில்லை எனக்கு” என்று சீற்றம் சற்றே ஏறிவிட்ட குரலில் கேட்டான்.

”ஏன் தெரியவில்லை? நந்தினியைப் பலவந்தமாகத் தூக்கி வந்திருக்கிறாய்!” என்றார் முராரிராவ்.

”ஆம். ” விஜயகுமாரன் குரலில் கோபம் குறையவில்லை.

“பெண்களைத் தூக்கிச் செல்வது இந்துக்கள் பழக்கமல்ல” என்று சுட்டிக் காட்டினார் முராரிராவ்.

”அவசியம் புதுப் பழக்கங்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக…”

“உதாரணமாக…?”

“நீங்கள் தஞ்சையின் சுற்றுப்புறங்களைச் சூறையாடியிருக் கிறீர்கள். சூறையாடுவதும் இந்துக்கள் பழக்கமல்ல.”

இதைக் கேட்ட முராரி அசந்து நின்றுவிட்டார். பிறகு மெள்ள அரசகுமாரியை நோக்கிச் சொன்னார், ‘நந்தினி, நல்ல முரடனைத்தான் பிடித்து வந்திருக்கிறாய்!” என்று.

”நான் பிடித்து வரவில்லை என்று ஏற்கனவே சொன்னேன்!” என்ற சுட்டிக் காட்டினாள் நந்தினி.

”ஆம் ஆம், தவறிச் சொல்லி விட்டேன். இந்த முரடனிடம் அகப்பட்டுக் கொண்டாய். முராரிராவையே எதிர்த்துப் பேசக் கூடியவன் உண்மையில் பெரும் மூர்க்கனாயிருக்க வேண்டும்!” என்றார்.

விஜயகுமாரன் இதயத்தில் அதுவரை எழுந்து கொண் டிருந்த கோபம் தணிந்து இகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது. ”தற்பெருமை வீரர்களுக்கு உகந்ததல்ல” என்று கூறினான் முராரிராவை நோக்கி.

முராரிராவுக்கு விஜயகுமாரனின் பேச்சின் அர்த்தம் புரிந்திருந்தும் அவர் சிறிதும் அதைப் பற்றிச் சினம் கொள்ள வில்லை. ஒரு அடி எடுத்து வைத்து விஜயகுமாரனை அணுகி அவன் தோள்மீது தன் வலக் கையை வைத்தார். கை மிக மெல்லியதாயி ருந்தும் லேசாகவே அது பதிந்துங்கூட ஏதோ வாளைான்று தோளின் குறுக்கே விழுந்த பிரமை ஏற்பட்டது விஜயகுமாரனுக்கு. அத்துடன் முராரிராவின் அடுத்த சொற்களும் மிக இன்பமாக அவன் காதில் விழுந்தது. ‘வீரனே! உன் பெயர் என்ன?” என்று வினவினார் முராரிராவ் கோர்படே.

”விஜயகுமாரன்.” பதிலில் நிதானம் சொட்டியது.

”உன்னைப் பேரன்ற வீரர்கள் இருந்தும் இந்த நாடு முஸ்லிம்கள் கையில் சிக்கிக் கிடப்பதும், மதுரை நாயக்கர்கள் வம்சம் மங்கிவிட்டதும் பெரும் தூர்ப்பாக்கியம். அது கிடக்கட்டும், நீ பிடித்து வந்திருக்கும் நந்தினி எப்பேர்ப்பட்டவள் தெரியுமா?” என்று வினவினார் முராரிராவ்.

”தெரியும்.”

”எப்பேர்ப்பட்டவள்?”

”விரும்பியிருந்தால் என்னைக் கொன்றிருக்கக் கூடியவள். இப்பொழுது உங்களையும் நொடிப்பொழுதில் கொல்லக் கூடியவள்.”

”சரி, சரி. புரிந்து கொண்டு விட்டாய். புரிந்துமா இவளைத் தூக்கி வந்தாய்?”

“தூக்கி வந்தபோது தெரியாது.”

”தெரியாமல் உடும்பைப் பிடித்துக் கொண்டாய்!”

”ஆம். ஆனால் ஒரு வித்தியாசமிருக்கிறது.”

“என்ன?”

”உடும்பிலிருந்து விடுபட மற்றவர்கள் இஷ்டப்படுவார்கள்…”

“நீ இஷ்டப்படவில்லை.”

”ஆம்.”

”ஏன்?”

”உடும்பு…….” மேற்கொண்டு சொல்ல முடியாமல் சொற்களை விழுங்கினான் விஜயகுமாரன்.

ஆனால் வாசகத்தை முடித்தார் முராரிராவ், ”அழகாயிருக்கிறது, அதில் மயங்கிவிட்டாய்” என்று.

அதுவரையிலும் வாளாவிருந்த ‘வாள் மகள்’ நந்தினி

வாளினும் கூரிய தன் விழிகளை அந்த இருவர் மீதும் மாறி மாறி நாட்டினாள். ”நீங்கள் இருவரும் பேசுவது வீரர்கள் பேச்சாயில்லை” என்ற அவள் பவள உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களில் உஷ்ணம் பலமாக இருந்தது.

அந்தச் சொற்கள் அந்த இருவரையும் அடக்கிவிடவே இருவரும் அவளை நோக்கித் திரும்பினார்கள். அவர்களில் முராரிராவே பேச்சைத் துவக்கினார். ”நந்தினி! இவனிடம் நீ எந்தக் காரணத்தால் சிக்கிக் கொண்டாய் என்பது எனக்குத் தெரியாது. உன் வரவுக்காக ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்ட பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி, உன்னை இவன் தூக்கிவர முடியுமானால் இவன் அசகாய சூரன் என்பதில் சந்தேகமில்லை . ஆனால் இவன் செய்ததும் தவறு. சமயத்தில் இவனை நீ தடுக்காமல் இங்கு வந்ததும் தவறு’ என்று கூறினார் முராரிராவ்.

“ஏன்?” என்று சர்வ சாதாரணமாக வினவினாள் நந்தினி.

”சமயபுரத்தில் இப்போது பிரெஞ்சுக்காரர் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. நவாபின் வீரர்களும் தஞ்சைச் சாலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ காவலின்றித் தஞ்சைக்குச் செல்ல முடியாது” என்றார் முராரிராவ். அத்துடன் குடிமயக்கத்திலிருந்த வீரர்களையும் சுட்டிக் காட்டி, “இவர்கள் அனைவரும் நாவாபின் வீரர்கள், என்னைச் சிறை செய்ய வந்தார்கள். நான் யார் என்பது இவர்களுக்குத் தெரியாது. இவர்களுக்குப் பிரெஞ்சுக்காரர் குடியைக் காட்டி ஏமாற்றினேன். அதில் சிறிது மயக்க மருந்தையும் கலந்து விட்டேன். நாம் இங்கிருந்து தஞ்சை செல்வதானால் உடனடியாகச் செல்லவேண்டும்” என்று உணர்த்திய மகாராஷ்டிரத் தளபதி சத்திரக்காரனைக் கூப்பிட்டு, ”நாங்கள் புறப்பட சித்தம் செய்” என்று உத்தரவும் இட்டு, ”என்னுடன் வாருங்கள்…” என்று அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு சத்திரத்தின் இரண்டாவது கட்டுக்குச் சென்றார். அங்கிருந்த உடைகளைக் காட்டி, ”நீங்கள் இருவரும் இந்த உடைகளை அணிந்து கொள்ளுங்கள்” என்றும் உத்தரவிட்டார்.

”தேவையில்லை.” விஜயகுமாரன் பதில் திட்டமாக வந்தது.

”ஏன்?’

”இறப்பதனாலும் இந்த மதுரை உடையிலேயே இறக்க இஷ்டப்படுகிறேன்.”

முராரிராவ் இளநகை பூத்தார். ”பயப்படாதே. உன் விருப்பம் இன்றிரவே நிறைவேறும். தஞ்சை வழிநெடுக அதற்கு வசதி இருக்கிறது” என்ற முராரிராவ், பின்புறம் சென்று சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் திரும்பினார். ”சத்திரத்துக்காரன்

உன் புரவியைப் பின்புறம் கொண்டு வந்து விட்டான். அரச குமாரிக்கும் ஒரு புரவியைக் கொணர்ந்திருக்கிறான். வாருங்கள் போவோம்” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று நடந்தார்.

மிகத் துரிதமாகச் செய்யப்பட்ட அந்த ஏற்பாடுகளால் பிரமையடைந்த விஜயகுமாரனும், நந்தினியும் அந்த மாவீரனைப் பின்பற்றினார்கள்.

ஆனால் சத்திரத்துக்குப் பின்னாலிருந்த நிலை அவர்களை அசர வைத்தது. இரண்டு முஸ்லீம் சிப்பாய்களின் பிடியில் சத்திரக் காரன் சிக்கித் தத்தளித்துத் திமிறிக்கொண்டிருந்தான். அவனுக்கு இருபுறத்திலும் சேணமிடப்பட்டிருந்த மூன்று புரவிகளுக்கு முன்னாலும் பத்து முஸ்லீம் வீரர்கள் வாட்களை உருவி நின்றனர். தலைவனாக இருந்தவன் கூறினான், “முராரிராவ்! வாளை எடுத்துக் கீழே எறிந்துவிடு. உன் பின்னால் இருப்பவனுக்கும் சொல், பிழைக்கும் வழியை!” என்று.

அதைக் கேட்ட முராரிராவ் பதிலேதும் சொல்லாமல் வாளைக் கழற்றலானார் கச்சையிலிருந்து. விஜயகுமாரன் பிரமிப்பு எல்லை மீறியது. ‘சே! இவர் வீரம் இவ்வளவுதானா? இவரைப் பற்றிய பிரதாபமெல்லாம்…’ என்று சிந்திக்கத் துவங்கிய விஜயகுமாரன் சிந்தனையை முடிக்க முடியவில்லை. மின்னல் வேகத்தில் அவன் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

Previous articleRaja Perigai Part 1 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here