Home Historical Novel Raja Perigai Part 1 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

91
0
Raja Perigai Part 1 Ch6 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 1 Ch6 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6. சோலையில் விரிந்த காட்சி

Raja Perigai Part 1 Ch6 | Raja Perigai | TamilNovel.in

க்ஷணம் என்ற சம்ஸ்திருதச் சொல்லைத்தான் கணம் என்று தமிழில் சொல்லுகிறோம். ‘உத்பன்ன மாத்ரமேவ நச்யதி, அதாவது ‘பிறக்கும்போதே அழிந்துவிடுகிறது’ என்று க்ஷணத் திற்குப் பொருள் கூறப்படுகிறது. ஆகவே கணம் மனிதன் கணக் கால் அளவிட முடியாத ஒரு துரிதத்தைப் பெற்றது என்பது சாஸ்திரம் கண்ட உண்மை. அந்தச் சாஸ்திரத்தை விஜயகுமாரன் படித்ததில்லைதான். ஆனால் அதன் தத்துவத்தை அநுபவ பூர்வ மாகக் கண்டான் சமயபுரத்துச் சத்திரத்துப் புழக்கடையில்..

அன்றிரவு முஸ்லீம் வீரர்களின் தலைவன் சொற்படி வாளைக் கழற்றத் துவங்கிய மகாராஷ்டிர மாவீரனைப் பற்றித் தப்பபிப்பிராயம் கொண்ட விஜயகுமாரன் தனது கருத்து தோன்றி முடிவதற்குள், முராரிராவின் வலகை வாளை அவிழ்க்க, அதே சமயத்தில் இடக் கை கச்சையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து எதிரேயிருந்த முஸ்லீம் வீரர் தலைவனைச் சுட்டுவிட்டதுடன் இன்னும் இருவரையும் சாய்த்துவிட்டதையும் கண்டான். ஆகவே அவனும் தனது கைத்துப்பாக்கியை எடுத்து மேலும் இருவரை, முந்திச் சென்றுவிட்ட மூவருக்குத் துணை சேர்த்து விடவே, மீதியிருந்த ஐந்து வீரர்களும் வாட்களுடன் முராரிராவ் மீது பாய்ந்தார்கள். ஆனால் அது எத்தனை பயனற்றது என்பதை விஜயகுமாரன் உடனபடியாக உணர்ந்தான். எழுந்த வேகத்தில் கச்சைக்குள் மீண்டும் முராரிராவின் கைத் துப்பாக்கி புகுந்து விட, வலக் கை வாளை உருவிக்கொண்டு எதிரிகளைத் தடுத்தது. விஜயகுமாரனும் பெரிய மனிதர்கள் செய்யும் கொலை வழியைத் தானும் பின்பற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியில், தன் வாளையும் உருவிக்கொண்டு இரு முஸ்லீம் வீரரைத் தடை செய்தான். ஆனால் சண்டைக்கு நேரம் கிடைக்கவில்லை அதிகமாக விஜயகுமாரனுக்கு.

முராரிராவின் வளைந்த வாள் எதிரிகளின் வாள்களின்மீது பயங்கரமாக உராய்ந்து மீண்டும் ஏதோ இந்திர ஜாலம்போல் எழுந்து இருவர் கழுத்தை அறுத்துவிடவே அலறக் கூடச் சமயமின்றி அந்த இருவரும் மாய்ந்தனர். மற்றவர் ஓடி விட்டார். தனது வாளால் தடுக்கப்பட்ட இருவரும், மற்ற வீரர்களை ஒட்டப் பந்தயத்தில் வெற்றி கொள்ள விடக்கூடா தென்ற உறுதியால், திரும்பி மற்றவர் ஓடிய பாதையில் பாய்ந்து விட்டதை விஜயகுமாரன் கண்டு திகைத்து நின்ற சமயத்தில், முராரிராவ் அவனை நோக்கித் திரும்பிப் புன்னகை செய்து, ‘விஜயகுமாரா! பிரமிப்புக்கு நேரமில்லை. போன வீரர்கள் இன்னும் அதிக வீரர்களுடன் திரும்புவார்கள். அநேகமாக வருபவர்கள் பிரெஞ்சுக்காரர்களாகவும் இருக்கலாம். ஆகவே கிளம்பு சீக்கிரம்” என்று கூறிவிட்டுச் சத்திரத்துக் காவலனை நோக்கினார்.

அதுவரை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்த முஸ்லீம் வீரர்கள் ஓடிவிடவே, சற்றுக் கம்பீரமாகவே தனது உடலைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தான் சத்திரத்துக் காவலன். அவன் உடம்பை நெளித்துக்கொண்டதையும், சற்று உற்சாகத்துடனேயே நிமிர்ந்து கொண்டதையும் கண்ட முராரிராவ் மெல்ல நகைத்து, ”ஓடிவிட்டவர்களின் புரவிகளில் ஒன்றை நீயும் எடுத்துக்கொண்டு எங்களுடன் வா!” என்று உத்தரவிட்டார்.

சத்திரக்காரன் முகத்தில் திகில் தோன்றியது. “இது ராஜா சத்திரம்…” என்று ஏதோ பேசத் துவங்கினான்.

“ஆம்.” முராரிராவ் பதில் சொல்லிக்கொண்டே எட்ட இருந்த தமது புரவுயை நோக்கி நடந்தார். புரவியில் ஏறும்படி அரசகுமாரிக்கும் ஜாடை காட்டவும் செய்தார்.

“தளபதி! நான் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன், நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூவினான் சத்திரக் காவலன்.

”இங்கு இன்னும் சற்று நேரம் இரு, கூவ அவசியம் இருக் காது” என்று சொல்லிக்கொண்டே புரவிமீது தாவி விட்ட முராரிராவ் சத்திரக் காவலனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் புரவிகளில் ஏறிக்கொண்ட அரசகுமாரியும் விஜயகுமாரனும் பின் தொடர, சத்திரத்துப் பின்புறத்தை அடுத்திருந்த தோப்புக்குள் நுழைந்து விட்டார்.

சத்திரக் காவலன் அப்புறமும் அரைவிநாடி விழித்து விட்டுப் பக்கத்திலிருந்த புரவி மீது சற்றுச் சிரமப்பட்டு ஏறி, முன்னே சென்றவர்களைப் பின்பற்றிப் புரவியைச் செலுத்தினான். கொள்ளிடக் கரையிலிருந்து அதிகத் தூரத்தில் இல்லாத காரணத் தாலும், கொள்ளிடத்தின் ஜீவ ஊற்றுக் கால்கள் அந்தர்வாஹினி யாகப் பூமிக்குள் பாய்ந்து வந்ததாலும் பெரும் செழிப்பைச் சமய புரத்துத் தோப்பு பெற்றிருந்ததால், மரங்கள் வானளாவி நின்றன.

அவற்றுக்கிடையே ஓடிய ஒற்றையடிப்பாதைகள் இரண்டு மூன்று சிறிது விஸ்தாரமாக இருந்தாலும் மரங்களின் அடர்த்தி காரணமாகவும், கிளைகள் சில இடங்களில் மிக இடைஞ்சலாகவே இருந்தன. இருப்பினும் அந்தத் தோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் அறிந்திருந்த முராரிராவ் அநாயாசமாகத் தமது புரவியைச் செலுத்தியதாலும் தாழ்ந்த கிளைகள் வரும்போது அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டதாலும் ஏதோ ஒரு மாயப் புரவி அந்தத் தோப்பில் ஊடுருவிச் செல்லும் பிரமை ஏற்பட்டது விஜயகுமாரனுக்கு.

முன்னே செல்பவைரக் கூர்ந்து கவனித்துக் கொண்டு அவன் புரவியை நடத்தியதாலும், அவர் குனிந்த போது தானும் குனிந்தும் அவர் நிமிர்ந்தபோது தானும் நிமிர்ந்தும் கிளைகளிலிருந்து தப்பித் தப்பி மீண்டதாலும் பெரும் உற்சாகத்தை அடைந்த விஜயகுமாரன், ‘இத்தகைய வீரர்கள் இருந்தும் மகாராஷ்டிரர்களின் இந்து சாம்ராஜ்யம் ஏன் இத்தனை பலமிழந்து கிடக்கிறது?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான்.

அதற்கு விடை அவனைச் சுற்றிக் கிடந்தாலும் மகாராஷ்டிரர்களுக்குள்ளிருந்த பூசல்கள் சரித்திரப் பிரசித்தி பெற்றிருந் த்தாலும் முராரிராவின் கம்பீரத் தோற்றமும் வீரமும் அவனுக்குச் சரித்திரத்தையும் நினைவூட்டவில்லை. ஏன், இரவின் முன் பகுதி யில் அரங்கன் முன்பு இட்ட பயங்கர ஆணையைக்கூட அவன் அந்தச் சில விநாடிகளில் மறந்தான்.

இப்படி யோசனையில் ஆழ்ந்திருந்தது அவன் மட்டுமல்ல. முன்னே சென்றுகொண்டிருந்த முராரிராவும் சிந்தனை வசப்பட்டிருந்தார். ‘யார் இந்த விஜயகுமாரன்? அரசகுமாரியை எப்படித் தூக்கி வந்தான்? டபீர் பண்டிதர் அப்படி ஏமாறக் கூடியவரல்லவே’ என்று சிந்தித்தார். எல்லாவற்றுக்கும் விடை தஞ்சையில் கிடைக்கும் என்ற காரணத்தால் தன் மனத்தில் ஏற்பட்டிருந்த நினைப்புகளை நீக்கிகொண்டு புரவியைத் திடீரெனப் பக்கத்துப் பாதையொன்றில் திருப்பினார்.

அதைக் கண்ட விஜயகுமாரன், “’தளபதி!” என்று அவரை அழைத்துக்கொண்டே அவரது புரவியை நெருங்கினான்.

முராரிராவ் புரவியைச் சட்டென்று நிறுத்தி அவனை நோக்கித் திரும்பி, “என்ன?” என்றார்.

“இந்தப் பாதை…” என்று இழுத்தான் விஜயகுமாரன்.

”கொள்ளிடத்துக்குச் செல்கிறது” என்றார் முராரிராவ்.

”அதைத் தாண்டித்தானே நான் வந்தேன்” என்றான் விஜயகுமாரன்.

“திரும்பத் தாண்டக் கூடாதென்று யார் சொன்னது?”

”வந்த இடத்துக்குப் போவதற்காக நான் இங்கு வர வில்லையே?”

”அங்கு யார் போகச் சொன்னது உன்னை?”

“அப்படியானால்…?”

முராரிராவ் உடனடியாக அவனுக்குப் பதில் சொல்ல வில்லை . சற்றுச் சிந்தித்துவிட்டு, ”வீரனே! கொள்ளிடம் ஒரே இடத்தில் ஓடவில்லை. பல இடங்களைத் தொட்டுக்கொண்டு ஓடுகிறது. அதன் பெயரும் மாறுகிறது. திருச்சியை அடுத்திருந்தால் திருச்சிக் காவேரி, ஸ்ரீரங்கத்தை அடுத்திருந்தால் ஸ்ரீரங்கத்துக் காவேரி, வடக்கேயும் தெற்கேயும் பிரிந்திருந்தால் அது வடதிருக் காவேரி, தென்திருக் காவேரி. மைசூரில் இருந்தால் மைசூர்க்காவேரி; தெரிகிறதா?” என்று கேட்டார்.

முராரிராவின் சொற்களைக் கேட்ட விஜயகுமாரன் அசந்து போனான். முராரி ராவ் பெரும் கொள்ளளைக்காரர், தளபதி, மாவீரர் என்று தான் கேள்விப்பட்டிருந்தான் அவன். முராரி ராவுக்கு இலக்கியப் பரிச்சயமும் உண்டு, தத்துவப் பரிச்சயமும் உண்டு என்று அப்போதுதான் தோன்றியது அவனுக்கு.

கம்பனைப்பற்றி நினைத்தான் விஜயகுமாரன் அந்தச் சமயத்தில். முராரிராவின் அதே கற்பனை சரயூ நதியைப்பற்றிக் கம்பன் சொன்ன இணையிலா உவமை! ‘கல்லிடை பிறந்து போந்து’ என்று துவங்கி, ‘பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்ததன்னே’ என்று முடியும் தீஞ்சுவைத் தமிழ்க் கவிதையை, கம்பராமாயணச் செய்யுளை நினைத்தான் விஜயகுமாரன். ”எங்கோ மலைக் கல்லில் சுனையாக உற்பத்தியாகி, பெருகி, பல இடங்களைத் தாக்கி, அந்த அந்த இடங்களில் இடத்துக்குத் தக்க பெயரைத் தாங்கினாலும், அந்தப் பல பெயர்களும் ஒரே நதியைக் குறிப்பது போல், பல நாடுகளில் பரந்து கிடக்கும் மதங்கள் ஆங்காங்கு ஆண்டவனுக்குப் பல பெயர்களைச் சூட்டினாலும் அத்தனை பெயர்களும் சொல்லும் பரம்பொருள் ஒன்றுதானே!’ என்ற கம்பன் உவமையை நினைத்து மெய்மறந்தான். ஆனால் இந்த மகாராஷ்டிரருக்குக் கம்பனைப் பற்றி என்ன தெரியப்போகிறது?’ என்றும் எண்ணினான்.

அந்தச் சமயத்தில் முராரிராவ் நகைத்து, ”என்ன, ஆற்றுப் படலத்துக்குப் போய்விட்டாயா?” என்று கேட்டு விஜயகுமாரன் பிரமிப்பை ஆயரமடங்கு அதிகப்படுத்திவிட்டு, புரவியைச் சற்று வேகமாகவே கொள்ளிடப் பாதையில் திருப்பினார். அடுத்து அடுத்து வந்த சோலைகளின் நெருக்கத்தாலும் பாதைகளின் குறுகலாலும் திசை தெரியாமல் தவித்த விஜயகுமாரனுக்குச் சுரணையை வரவழைக்கச் சத்திரத்துக் காவலன் தனது புரவியை அவர்கள் புரவிகளுக்குச் சமானமாகக் கொண்டு வந்து, ”தென்கிழக்குப் பாதையில் போகிறீர்களே?’ என்று வினவினான் முராரிராவை நோக்கி.

”ஆம்,” என்று கூறித் தலையசைத்தார் முராரிராவ்.

“இந்த வழி…”

”கோவிலடிக்குச் செல்கிறது, அதுவும் கொள்ளிடத்தைத் தாண்டியபின்.”

”அங்கே பிரெஞ்சுக்காரர்களும் முஸ்லீம்களும் இணைந்த படை இருக்கிறது.”

“இருக்கட்டுமே.”

இதைக் கேட்ட சத்திரக் காவலன் எரிச்சல் அதிகமாகியது.

”அதிர்ஷ்டம் எப்போதும் நமக்குக் கைகொடுக்காது,” என்றான்.

”இப்பொழுதும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை’ என்றார் முராரிராவ்.

”வேறு எது கை கொடுத்ததோ?” என்று கேட்டான் சத்திரக்காரன்.

“எவை என்று கேள்.”

“சரி, எவை?”

”கைத்துப்பாக்கி, வாள்” என்று கூறிய முராரிராவ், தமது புரவியை வேகமாகத் தூண்டினார். மற்றவர்களும் புரவிகளைத் தூண்டவே அடுத்த ஒன்றரை நாழிகையில் கொள்ளிடத்தையும் தாண்டிவிடவே, சற்றுத் தென்மேற்கில் காவிரியின் வடக்குக் கரையில் கோவிலடியின் மதிள்கள் மெல்லத் தெரியலாயின.

ஆனல் முராரிராவ் கோவிலடியை நோக்கிச் செல்லாமல் அதைச் சுற்றிச் சென்ற பாதையில் சென்று மீண்டும் ஒரு தோப்பில் நுழைந்தார். திரும்பி விஜயகுமாரனை மட்டும் நோக்கிச் சொன்னார்: ”விஜயகுமாரா, நாம் கோவிலடிக்குச் சற்று அப்பால், அதாவது சிறிது கிழக்கில் காவிரியைக் கடக்கிறோம். கடந்தவுடன் திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் அரசாங்கப் பெருஞ்சாலையை அடைகிறோம். அங்கிருந்து நீ அதிக எச்சரிக்கயுைடன் அரசகுமாரியை அழைத்துச் செல். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் எதிரே வரும் வீரர் கூட்டம் எது, யாரைச் சேர்ந்தது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது அவ்வப்போது பக்கத்துச் சோலைகளில் மறைந்தும் மீண்டும், மிக ஜாக்கிரதையாகச் செல், புரிகிறதா?” என்று வினவினார்.

”புரிகிறது. ஆனால் தாங்கள்?”

“நான் உங்களுடன் வருவது உங்களுக்குப் பாதுகாப்பை அளிக்காது” என்று கூறினார் முராரிராவ். அதற்கு மேல் ஏதும் பேசாமல் புரவியைப் பறக்கவிட்டு, காவிரிக் கரைக்கு வந்து நதிக்குள் வேகமாக இறங்கினார்.

விஜயகுமாரனுக்கு ஏதும் புரியவில்லை திரும்பித் தனது பக்கத்தில் வந்துகொண்டிருந்த அரசகுமாரியை நோக்கினான். அரசகுமாரியின் முகம் நட்சத்திர வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை . அவள் முகத்தைக் காட்டினாலும் முழுவதும் சரியாகக் காட்டவில்லை ஆனால் அவள் புரவியில் உட்கார்ந்திருந்த தோரணை, சத்திரத்துப் புழக்கடையிலிருந்து யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் புரவியை நடத்தியது, எல்லாவற்றிலுமே ஒரு கடுமை இருந்ததை அவன் கவனித்தான். அரசகுமாரி அடியோடு விலகி நிறகிறாள் என்பதை அவள் போக்கிலிருந்து விஜயகுமாரன் கவனித்தக்கினாலும் அவள் மௌனத்தை உடைக்க எண்ணினான். “முராரிராவ் உடன் வருவது நமக்குப் பாதுகாப்பை அளிக்காதாமே?”

அப்பொழுது புரளிகள் நான்கும் காவிரித் தாயின் நீர்க்கால் களைத் தாண்டி மணலில் நடந்து கொண்டிருந்தன. அப்போதும் காவிரியின் காட்சி ரம்மியமாயிருந்தும், அதன் வானக் கூரையிலிருந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டியும், எதையும் கவனிக்கவில்லை அரசகுமாரி. அவன் கேள்விக்குப் பதில் சொல்லவுமில்லை.

ஆனால் காவிரியின் தென் கரையைத் தாண்டி மீண்டும் ஒர் அடர்ந்த தோப்புக்கு வந்ததும் அரசகுமாரி புரவியைச் சற்று நிறுத்தினாள். முராரிராவின் புரவியும் சட்டென்று நின்றது. முராரிராவை நோக்கிக் கேட்டாள் அரசகுமாரி, “எடுக்கட்டுமா?” என்று.

”எடு, நான் சற்று அப்புறம் மறைவாக இருக்கிறேன்” என்றார் முராரிராவ்.

அதன் பிறகு விஜயகுமாரனை நோக்கிச் சொன்னாள், ”நீங்களும் சத்திரக் காவலனும்கூடச் சிறிது மறைவில் இருங்கள்” என்று.

”எதற்கு?” என்று சீறினான் விஜயகுமாரன்.

அரசகுமாரியின் அடுத்த சொற்கள் சீற்றத்துடன் வெளி வந்தன, ‘உம் சீக்கிரம்.” என்று.

விஜயகுமாரனுக்கு ஏதும் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் புரிந்தது, முராரிராவுக்கும் அரசகுமாரிக்கும் பேச்சுக்கு அவசியம் இல்லாத ஏதோ ஒரு சம்பாஷணை நடந்திருக்கிறது என்று. ஆனால் அதைப்பற்றி அவன் வாதிக்க இஷ்டப்படாமல் ஒரு மரத்தின் மறைவுக்குச் சென்றான். சத்திரக் காவலன் முராரிராவைத் தொடர்ந்து அவர் சென்ற திக்கில் சென்றுவிட்ட தால் அரசகுமாரியின் செய்கையை விஜயகுமாரன் மரத்தின் மறைவிலிருந்து நன்றாகக் கவனிக்க முடிந்தது. அவன் கண்கள் முன்பாக, தோப்பின் சிறு வெளிச்சத்தில் கூட விரிந்த அந்த நிழ்ச்சி, மயக்கத்தையும் சினத்தையும் ஒருங்கே ஊட்டக்கூடிய அரசகுமாரி யின் விபரீதச் செய்கை, அவனை அப்படியே கலக்கி விட்டது.

Previous articleRaja Perigai Part 1 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here