Home Historical Novel Raja Perigai Part 1 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

63
0
Raja Perigai Part 1 Ch7 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch7 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 7. சரித்திர புருஷன்

Raja Perigai Part 1 Ch7 | Raja Perigai | TamilNovel.in

கவேர மன்னன் மகளாகப் பிறந்ததால் காவேரி யென்றும், அவள் செல்லுமிடங்கள் எல்லாம் ‘கா’ வெனச் சோலைகள் விரிந்ததால் காவிரியென்றும் திருநாமங்களைத் தாங்கி, தான் ஊர்ந்த மண்ணில் தோன்றிய கோடானுகோடி மக்களுக்கெல்லாம் உணவு தோன்றப் பயிர்களுக்கு உரமூட்டியதால் காவிரித் தாயாக விளங்கிய அந்த மகாநதியின் தென்கரைத் தோப்பு அதிக அடர்த்தியாக இருந்தபோதிலும், இரவு மிக ஓடி கிருஷ்ண பட்சத்துச் சந்திரன் எழுந்து விட்டதால் சிறிது இருள் கிழிந்த நிலையிலேயே காட்சியளித்தது.

அந்த நிலவின் ஒரு கிரணம் அரசகுமாரி, புரவியை நிறுத்தியிருந்த இடத்தில் சற்று அதிகமாகவே மரக்கிளைகளையும் இலைகளையும் ஊடுருவி விட்டதால், அவள் தலைக்கு நேராக இறங்கி அவள் மஸ்லின் முக்காட்டின் வெண்மையைப் பல மடங்கு அதிகமாகக் காட்டியதால், ஏதோ வெண்ணிறத் தேவதையொன்று ஆகாயத்திலிருந்து இறங்கி நிற்பது போன்ற பிரமையை அளித்தது, சற்று எட்ட மரத்தின் மறைவிலிருந்து பார்த்த விஜயகுமாரனுக்கு.

தவிர, அந்த வாள் மகள், மற்றவர் அப்புறம் போய்விட்டார்களென்ற நினைப்பில் தனது முக்காட்டை இடக் கையால் அநாயாசமாக எடுத்து மடியில் கிடத்திக் கொண்டதும், மகாராஷ்டிரர்களின் வாள்போல் வளைந்து கிடந்த அவள் நுதலும், சற்றுக் கீழேயிருந்த புருவங்களை அடுத்துக் கரிய இமைகளுக்குள்ளேயிருந்த வாள் விழிகளும், அந்த ஒற்றைக் கிரணத்தால் தழுவப்பட்டதன் விளைவாக மிதமிஞ்சிய மயக்கத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அளித்தன, அந்த வாலிபனுக்கு. அதுவரை அவளை நன்றாகக் காணவோ, கண்டால் அழகை அலசவோ அதிக வாய்ப்பில்லாத அந்த வீரனுக்கு அந்தத் தோப்பும், மதியின் கிரணமும் சிறிது வாய்ப்பை அளிக்கவே அவளது தெய்விக அழகைப் பருகிய அவன் மெய்மறந்து நின்றான், மரத்தின் மறைவிலே.

அவள் அதிக உயரமோபருமனோ இல்லையென்பதையும், புரவியில் உட்கார்ந்திருந்த தோரணையில் கூட ஒரு புஷ்பக் கொடி மரக்கிளையிலிருந்து திடீரென்று புரவியின்மீது இறங்கிவிட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியதையும், வெண்மதிக் கிரணம் அவள் கரிய கூந்தலை அதிகக் கருமையாக அடித்ததன்றி அவள் தலையை அலங்கரித்த வைரச் சரத்தை ஆயிரம் மடங்கு அதிகமாக மின்ன வைத்துவிட்டதால், வானத்தில் வரிசையாகத் தோன்றி விட்ட நட்சத்திரங்கள் போல் அவள் தலையாபரணக் கற்கள் பளிச்சிட்டதையும், ஆனால் அவள் கண்ணகளின் ஒளிக்கு முன்னால் அந்த வைரக்கற்களின் ஒளி அர்த்தமற்றுப் போனதையும் கண்ட விஜயகுமாரன், நந்தினியின் அழகைப்பற்றியும் வீரத்தைப்பற்றியும் ஏற்பட்டுள்ள பிரசித்தியில் தவறேதும் இல்லை என்ற முடிவுக்கு வந்தான்.
புரவியில் உட்கார்ந்த வண்ணம், அவள் முக்காட்டைக் கழற்றிய பின்பு நன்றாகத் தெரிந்த அவள் சரீர வாகு அவனை ஏதோ தேவலோகத்துக்குக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. நீண்ட அவள் மெல்லிய கைகள் முக்காட்டைப் பற்றி மடியில் கிடத்தியதும் அவள் அணிந்திருந்த காச்மீர வெண்பட்டுச் சேலையில் மேல்பகுதியில் தெரிந்த வெளுத்த கழுத்தும், இடையைச் சுற்றியிருந்த இடத்தில் சிறிதும் தளராத கட்டு இருந்ததால் அதற்குமேலே லேசாகத் தெரிந்த அழகிய வழவழத்த மேனியும், மேலே ஆடை ஓடிய இடத்தில் ஆடையை முட்டி வெளிவர முயன்று கொண்டிருந்த இரட்டை முரட்டு மொட்டுக்களும், வெளியே புலப்பட்ட அழகுகளை ஏற்படுத்திக் கொடுக்கவே பெருமூச்செறிந்தான் அந்த வாலிப வீரன்.

ஆனால் புலப்பட்ட அழகுகளுக்குத்தான் என்ன குறை என்று அவன் தனக்குத்தானே வீனவிக் கொள்ளவும் செய்தான். புரவியின் வயிற்றை அணைத்து நின்ற கால்களில் ஒன்று அவன் கண்களுக்கு நன்றாகத் தெரிந்ததால், அந்தப் பூங்கொடியிலும் திண்மையான பகுதியும் சாட்டை போன்ற பகுதியும் இன்ப ஜாலங்களை அள்ளித் தெளிக்கும் இணைப்புப் பகுதிகளும் உண்டென்பதை உணர்ந்த அவன், ஓவியத்திலும் அவளைத் திறம்படத் தீட்டுவது முடியாதென்ற முடிவுக்கு வந்தான். மேலும் அவன் கற்பனைகளை ஓட்டியிருப்பான் அவள் மட்டும் திடீரெனத் தனது சேலையின் மேற் பகுதியை நீக்கியிருக்கா விட்டால்.

என்ன காரணத்தாலோ நந்தினி தனது மார்பை மறைத்து ஓடிய சேலைப் பகுதியைத் திடீரென நீக்கி, ஒரு கையை உள்ளே விட்டு இரண்டு ஆபரணங்களைச் சேலைமீது கிடத்தினாள். அவள் சேலை மீது கையை வைத்தவுடனேயே அதற்குமேல் தனது பார்வையை ஓடவிடுவது அதர்மமென்ற நினைப்பால் சட்டென்று கண்களை மூடிக்கொண்ட அந்த வாலிபனை நோக்கி நகைப்பன போல் காவிரித் தென்றலில் அவன் பதுங்கியிருந்த மரத்தின் இலைகள் சலசலவென சப்தித்தன. அது மரமல்லி மரமாதலால் அதன் நீண்ட வெண்மை மலர்களில் சில அவன் தலை மீது விழுந்தன.

ஆசைக்கும் வேட்கைக்கும் அளவு கிடையாத காரணத்தாலும், மனிதனின் சபலத்தாலும், அறத்தின் நினைப்பு இதயத்தில் அறுக்கப்பட்டுவிடவே அவன் கண்கள் திறந்தன அடுத்த விநாடி. ஆனால் தமிழகத்தின் பெண்மை எத்தனை பண்பாடு உடையது என்று அவன் புரிந்துகொண்டான் அந்தச் சில விநாடிகளில். நந்தினி தனது சேலையை மார்புக்கு மேலேயே தனது முகவாய்க்கட்டையால் அழுத்தி நிறுத்தியிருந்தாள். அவள் கைகள் மட்டும் கழுத்துக்குப் பின்புறம் ஓடி அங்கிருந்த சிறு பட்டுக் கயிறுகளை அவிழ்த்து மார்பைத் தொட்டுக் கொண்டிருந்த பெரிய மகர ஆபரணத்தை மடியில் வைத்துக் கொண்டன. இப்படியே அவள் தனது தலையாபரணத்தையும் கற்களுடனிருந்த மகராபரணத்துடன் சேர்த்தாள். கடைசியில் காலிலிருந்த இரு சிலம்புகளையும் நீக்கினாள். இப்படி அவள் ஆபரணங்களையெல்லாம் கழற்றி மடியில் ஒன்று சேர்ப்பதைக் கண்ட விஜயகுமாரன் அதற்குக் காரணம் புரியாமல் திணறினான். அந்தத் திணறலை அவள் அழைப்பு ஓய வைத்தது.

ஆபரணங்களை எடுத்த பின்பு சேலையைச் சரிப்படுத்திக் கொண்டு, “இனி நீங்கள் வரலாம்” என்று அவள் குரல் கொடுத்ததும் விஜயகுமாரன் அவளை நோக்கித் தனது புரவியைக் கண நேரத்தில் செலுத்திவிட்டாலும், அதற்கு முன்பே எங்கிருந்தோ முராரி ராவ் திடீரென முளைத்துவிட்டதாலும், அவன் புரவி அவள் புரவியை அணுகியதும் அரசகுமாரி தனது மடியிலிருந்த நகைகளைத் தனது முக்காட்டின் ஒரு பகுதியைக் கிழித்து, அதில் சுற்றிக் கட்டி அவரிடம் ஆபரண முடிப்பைக் கொடுத்துவிட்டதையும் கண்டதும் பெரும் சினத்துக்குள்ளானான். அவள் நகைகளை நீக்கத் துவங்குமுன்பு அவள் அழகில் மயங்கியும், அவள் ஆபரணங்களை நீக்க முற்பட்டவுடன் அதன் காரணத்தை ஊகித்துச் சிறிது சினத்தின் வசமும் பட்டிருந்த விஜயகுமாரன் மனம், ஆபரண முடிப்பை முராரிராவிடம் அவள் கொடுத்ததும் சினத்தின் உச்சியை அடைந்துவிட்டதால், “இதற்கென்ன அர்த்தம்?” என்று சீறினான் முராரி ராவை நோக்கி.

அரசகுமாரியின் அழகிய வதனத்தில் சிரிப்பின் சாயை லேசாக விரிந்தது. அவள் கண்களும் அந்த வாலிபனை நோக்கி மெள்ளச் சிரித்தன. “மகாராஷ்டிரத் தளபதி கொள்ளைக் காரரென்று பெயர் வாங்கியிருப்பதை நீங்கள் கேள்விப் பட்டதில்லையா?’ என்ற சொற்களை மிக மதுரமாக உதிர்த்தாள்.

அவள் தன்னைப் பார்த்து நகைக்கிறாளென்பதை அறிந்த விஜயகுமாரன் சற்றே தனது சினத்தை உதறி, “கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கென்ன இப்பொழுது?” என்று வினவினான்.

அவள் கண்கள் முராரிராவையும் நோக்கி அந்த வாலிபனையும் நோக்கின. கடைசியில் வாலிபனிடம் சொன்னாள் அரச குமாரி, ”அதை நிரூபிக்கிறார் இப்பொழுது” என்று.

“எப்படி?” என்றான் விஜயகுமாரன்.

“இந்த நகைகளைக் கொள்ளையடிப்பதன் மூலம்,” என்று அரசகுமாரி முராரிராவின் கையிலிருந்த ஆபரண முடிச்சைச் சுட்டிக் காட்டினாள்.

விஜயகுமாரன் சிறிது நிதானித்தான். தனது கூரிய விழிகளை அந்த இருவர்மீதும், அவர்களுக்குச் சற்று எட்ட வந்து புரவியில் அமர்ந்திருந்த சத்திரத்துக் காவலன் மீதும் உலாவவிட்டான் ஒரு விநாடி. கடைசியாக அரசகுமாரிமீது அவன் விழிகள் நிலைத்தன கோபத்துடன். ”அவர் கேட்கவில்லை இந்த ஆபரணங்களை” என்று கூறவும் செய்தான், கோபம் குரலிலும் ஒலிக்க.
“கேட்டார்” என்றாள் அரசகுமாரி. “எப்பொழுது?” “நம்மை விடுவிக்க ஏற்பாடு செய்தபோதே!”

“விடுவித்ததற்கு இது கூலியா?” இந்தக் கேள்வியை மிகுந்த உஷ்ணத்துடன் கேட்டான் விஜயகுமாரன்.

அரசகுமாரி ஏதும் பதில் சொல்லாவிட்டாலும் முராரிராவ் மெல்ல நகைத்து,

“சே, கூலியா! என்ன அர்த்தமற்ற பேச்சு!” என்றார்.

”வேறு என்ன?” என்று அவரைத் திரும்பி நோக்கினான்’ விஜயகுமாரன்.

”கொள்ளைக்குக் கூலியென்று பொருள் கிடையாதே,” என்று சுட்டிக் காட்டிய முராரி ராவ் மெல்ல நகைத்தார். அரச குமாரியும் நகைத்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட விஜயகுமாரன் கை அவனது வாளை நோக்கிச் சென்றது. அதைக் கண்ட முராரிராவ் இன்னும் பலமாக நகைத்தார். அந்த நகைப்பு விஜயகுமாரனின் நிதானத்தை அறவே வெட்டி விட்டதால் அவன் வெளிப்படை யாகவே சீறினான், ”தளபதி! உமது நகைப்புக்குக் காரணம் எனக்குப் புரியவில்லை !” என்று .

”எனக்குப் புரிகிறது.”

”என்ன புரிகிறது?” என்று கேட்டான் விஜயகுமாரன் சீற்றம் மீண்டும் உதயமான குரலில்.

”உன் ஆசை.”

”ஆம், சத்திரத்தில் நீ கூறவில்லை, இறப்பதானால் இந்த உடையிலேயே இறக்கப் போவதாக?”

”ஆம், சொன்னேன்?”

“நான் என்ன பதில் சொன்னேன்?”

”தஞ்சை வழியில் அதற்கு நிரம்ப வசதி இருப்பதாகச் சொன்னீர்கள்.”

“அது தவறு.”

“ஏன்?”
”இந்தத் தோப்பிலேயே அந்த வசதி கிடைக்கும் வழியை நாடுகிறாய்!” இதைச் சொன்ன முராரிராவ் பலமாக நகைத்தார். அந்த விநாடியில் அவர் நகைப்பு திடீரென நின்றது. விஜயகுமாரன் வாளின் நுனி அவர் கழுத்தைத் தடவிக் கொண்டு நின்றது.

முராரிராவ் அதைக் கண்டு நகைப்பை நிறுத்தினாரே தவிர, இதழ்களில் தவழ்ந்து கொண்டிருந்த புன்முறுவலை அகற்றவில்லை. “இது எதற்கு?” என்று மெல்ல வினவவும் செய்தார்.

”நீங்கள் குறிப்பிட்ட வசதியை விஜயகுமாரனுக்குச் சுலப மாக அளிக்க முடியாது என்பதை உணர்த்துவதற்கு” என்று பதில் கூறினான் விஜயகுமாரன்.

வாளின் நுனி கழுத்தில் சீறுமோ என்ற பயம் சிறிதும் இல்லாமல் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் முராரிராவ். வாளின் நுனி கழுத்தைத் தடவி நின்ற சமயத்திலும் அவர் காட்டிய அசட்டையைக் கண்ட விஜயகுமாரன் முராரிராவின் நெஞ்சுரத்தைப் பெரிதும் பாராட்டினான் மனத்துள்.

சற்றுப் பொறுத்து முராரி ராவ் தனது கழுத்தைத் தடவி நின்ற அவனது வாளைச் சாதாரணக் குச்சியை அகற்றுவதுபோல் கையால் அகற்றிவிட்டு, ”விஜயகுமாரா! வாளை உறையில் போடு, நான் சொல்வதை நன்றாகக் கவனி” என்று சொன்னார். ”இங்கிருந்து தெற்கில் தோப்புக்குள்ளேயே பயணம் செய்தால் அரை நாழிகைக்கெல்லாம் தஞ்சைப் பெருஞ்சாலையை அடையலாம். அந்தச் சாலையில் கால் காதம் சென்றதும் பக்கச் சோலையொன்று பிரும்மாண்டமாகத் தெரியும். அந்தச் சோலையின் நடுவில் பெரும் சத்திரம் ஒன்று இருக்கிறது. அங்கே சென்றதும் இதைச் சத்திரக் காவலனிடம் காட்டு” என்று கூறி இடையிலிருந்த குறுவாளை எடுத்து விஜயகுமாரனை நோக்கி விட்டெறிந்தார்.

திடீரெனச் சம்பாஷணையோடு சம்பாஷணையாக எதிர் பாராமல் எறியப்பட்ட அந்தக் குறுவாளை இடக் கையில் மிக லாகவமாகப் பிடித்துக் கொண்ட விஜயகுமாரன் அதைத் திருப்பிக்கூடப் பார்க்காமல கச்சையின் ஒரு புறத்தில் செருகிக்கொள்ளவும் செய்தான். அந்தச் சமயத்தில் மீண்டும் சொன்னார் முராரிராவ்: ”இதைக் கண்டால் உங்களுக்கு தேவையான சகல வசதிகளையும் சத்திரக் காவலன் அளிப்பான். அரசகுமாரி அங்கு இந்த உடையை நீக்கிப் பணிப்பெண் உடையை அணியட்டும். அங்கிருந்து நீங்கள் உடனடியாகப் புறப்பட்டால் பொழுது புலருவதற்கு முன்பாகத் தஞ்சை எல்லையை அடையலாம். பிறகு அரசகுமாரிக்கு ஆபத்து ஏதுமில்லை புரிகிறதா?”

இத்துடன் பேச்சை நிறுத்திய முராரிராவ், தமது புரவியைச் சரேலெனத் திருப்பிக்கொண்டு அந்தச் சோலையின் மற்றொரு பகுதியில் மறைந்துவிட்டார். அவரது செய்கைகளாலும் பேச்சினா லும் பிரமித்திருந்த விஜயகுமாரன் தனது வாளை உறையில் போட்டுக்கொண்டு தஞ்சைச் சாலையை நோக்கித் தனது புரவியைத் திருப்பினான். இளவரசியும் சமயபுரச் சத்திரக் காவலனும் பின்தொடர முராரிராவ் சொன்னபடி பயணம் செய்து அவர் குறிப்பிட்ட சத்திரத்தையும் அடைந்தான்.

இரவு மூன்றாம் ஜாமத்தின் பாதியைத் தாண்டி விட்டதால் சத்திரத்தில் வாயில் விளக்கு ஒன்றுதான் எரிந்து கொண்டிருந்தது. மற்றபடி எங்கும் நிசப்தம் பரிபூரணமாக நிலவிக் கிடந்தது. அந்த நிசப்தத்தை அதிகமாகக் கலைக்காமல் மெள்ளப் புரவியைச் செலுத்திய விஜயகுமாரன் சத்திரத்தை அணுகியதும் புரவியிலிருந்து இறங்கி அதன்மீதே சேணத்தை விட்டெறிந்து விட்டுச் சத்திரத்தின் படிகளில் ஏறி, கதவை, முராரிராவின் குறுவாளைக் கொண்டே மெள்ளத் தட்டினான். இரண்டு மூன்று முறை. சிறிது நேரத்திற்குப் பின் கதவின் தாழ்கள் மெதுவாகத் திறக்கப்பட்டன. நடுத்தர வயதுள்ள ஒரு மனிதன் வெளியே வந்து “யார், நீ?” என்று விசாரித்தான் விஜயகுமாரனை.

”சத்திரக் காவலன் எங்கே?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”நான்தான் சத்திரக் காவலன்’ என்று அவன் கூறியது குறுவாளை அவனிடம் விஜயகுமாரன் கொடுக்கவே, அதை வாங்கி இருமுறை திருப்பிப் பார்த்த காவலன். ”சரி, இப்படி வாருங்கள்” என்று கதவை முன்புறம் சாத்திக்கொண்டு வந்து சத்திரத்தைச் சுற்றிப் பின்புறம் சென்றான். விஜயகுமாரன் அவனைத் தொடர விஜயகுமாரனை அவன் புரவியும் தொடர்ந்தது. அரசகுமாரியின் புரவியும் சமயபுரத்தான் புரவியும் முன் சென்றவர்களைத் தொடர்ந்தன.

சத்திரத்தின் பின்புறத்திலிருந்த ஒரு மரத்தடிக்கு வந்ததும் சத்திரத்துக் காவலன் சட்டென்று நின்று, ”நீங்கள் இதோ இந்தப் பக்கத்துத் தோப்பு வழியாகச் சென்று விடுங்கள்” என்று கூறினான். அவன் சொற்களில் சிறிது நடுக்கம் தெரிந்ததை விஜயகுமாரன் கவனித்தான்.

”ஏன்?” என்று ஏதோ கேட்க முற்பட்ட விஜயகுமாரன் சரேலென்று சொற்களை அடக்கிக் கொண்டான். அவர்கள் வந்த அதே பாதையில் மெல்லிய சரீரத்தையுடைய மற்றொரு மனிதனும் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட விஜய குமாரன் கண்கள் கேள்வி கேட்பனபோல் சற்றே உயர்ந்தன, சத்திரக் காவலனை நோக்கி. சத்திரக் காவலன் முகத்திலும் குழப்பம் மிகுதியாகத் தெரிந்தது. “இவன் யாரோ புதிதாயிருக் கிறது” என்றான் சத்திரக் காவலன். பாரதத்தின் சரித்திரத்தைப் புதிதாக எழுத வந்தவன் அந்த இளைஞன் எனபதை அன்று யாரும் உணர்ந்து கொள்ளவில்லை.

Previous articleRaja Perigai Part 1 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here