Home Historical Novel Raja Perigai Part 1 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

55
0
Raja Perigai Part 1 Ch8 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch8 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 8. எமனையும் சுடுவேன்

Raja Perigai Part 1 Ch8 | Raja Perigai | TamilNovel.in

இரவின் நான்காம் ஜாமம் நடக்கத் தொடங்கிவிட்டதன் விளைவாகக் கிருஷ்ணபட்சத்துச்சந்திரன் தனது கிரணங்களை மிக வெண்மையாக்கி எங்கும் நிலவ விட்டதால், சத்திரத்துப் பாதையில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனை மரத்தடி வீசியிருந்த இருளில் மறைந்து நின்ற நால்வரும் நன்றாகவே பார்க்க முடிந்தது. அதே மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வாலிபனுக்கு வயது இருபத்து நான்குக்கு மேல் இருக்க முடியாதென்பதை அவன் முகத்தில் விழுந்த சந்திர வெளிச்சம் காட்டியது. நல்ல விசாலமான நெற்றி. ஆனால் சற்றே எழுந்து முன்புறம் வந்துவிட்ட அவன் நுதல் அவனுக்கு அதிகமாக அழகு எதையும் அளிக்க வில்லையென்பதையும் தெளிவாகக் காட்டவே செய்தது. அந்த நுதலின் காரணமாக அவன் முகம் அதிக அழகைப் பெறாவிட்டாலும் கண்களில் தெரிந்த ஒரு கம்பீர ஒளியும், நடையில் இருந்த அரச தோரணையும், மிக அலட்சியமாக அசைந்து வந்த வலக்கையும், அவன் ஏதோ பாரை ஆளவந்த மாவீரன் என்ற நினைப்பையே அறிவுறுத்தியது.

சந்திர வெளிச்சத்தில் அவன் முகமிருந்த வெளுப்பும், சட்டையால் மறைக்கப்படாத புறங் கைகளின் தோற்றமும், அவன் அணிந்திருந்த உடையும் அவன் பாரத நாட்டைச் சேர்ந்தவனல்ல என்பதையும், வெள்ளையன் என்பதையும் சந்தேகமற எடுத்துக் காட்டின. அவன் தலையில் குறுக்காக வைக்கப்பட்டுப் பக்கவாட்டில் அகன்றிருந்த ‘ஹாட்’ என்ற தலை அணியும், கீழே முக்கால்வாசிப் பித்தான்களைப் போடாததால் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த ஷர்ட்டும், காலை மூடியிருந்த நிஜாரின் மேல் பாகத்தில் அவன் இடையைச் சுற்றிக் கிடந்த தோல் பெல்ட்டும், அவனை ஏதோ வெள்ளைக்கார வியாபாரிபோல் தோற்றுவித்தாலும், அந்த பெல்டில் செருகப்பட்டிருந்த நீண்ட கைத்துப்பாக்கி அவன் வியாபாரம் வர்த்தகப் பொருள்களைப் பற்றியதாக மட்டும் இருக்கமுடியா தென்ற நினைவைச் சந்தேகமற ஊட்டவே செய்தது.

அவன் கண்களில் புலியைப் போன்ற தீட்சண்யம் இருந்தாலும் பாதங்களிலிருந்த பூட்ஸ் இரண்டும் சத்திரத்துப் பாதையில் சிறிதளவும் சத்தம் போடாமல் பூனைபோல் வந்ததால், அந்த வாலிḥபன் பூனையா, புலியா என்பதை நிர்ணயிக்க முடியாமல் இருந்தது. இத்தனைக்கும் அவன் பொதுத் தொற்றத்தில் எந்தவிதத் திருட்டுத்தனமோ, அச்சமோ இல்லாததையும், அவன் ஒரே நிர்ணயமாக அக்கம் பக்கம் பார்க்காமல் நேராக மரத்தடியையே நோக்கி வந்ததையும் கவனித்த விஜயகுமாரன் சத்திரத்துக் காவனை நோக்கி, ”அவன் நம்மை நோக்கித்தான் வருவதாகத் தோன்றுகிறது” என்று கூறினான்.

“ஆம், ஆம். அப்படித்தான் தோன்றுகிறது ” என்று ஒத்துப் பாடிய சத்திரத்துக் காவலன் சில விநாடிகள் யோசித்து விட்டு, ”சரி சரி, உங்களுக்கு என்ன இவனைப்பற்றி? நிங்கள் பக்கத்துத் தோப்பு வழியாகத் தப்பித்துச் சென்றுவிடுங்கள்” என்று கூறியதுடன், ”உம். இதோ இருக்கிறது வழி” என்று சற்று எட்ட இருந்த ஓர் ஒற்றையடிப் பாதையையும் சுட்டிக் காட்டினான்.

சத்திரத்து வாயிலின்மீது விட்டெறிந்த கடிவாளங்களைக் கூடக் கையில் எடுக்கவில்லை விஜயகுமாரன். அரசகுமாரியையோ சமயபுரத்துச் சத்திரக் காவலனையோ செல்லுமாறும் பணிக்கவில்லை. ”ஆம் எங்களை எதற்காகத் திருட்டுத்தனமாக இங்கு அழைத்து வந்தாய்? இங்கிருந்து எதற்காக ஓடச் சொல்லுகிறாய்? இந்த இடத்தில் தங்கி இதோ இருக்கும் பெண்ணுக்கு வேறு ஆடை தந்து அழைத்துச் செல்லத்தானே குறுவாளுக்குடையவர் உத்தரவிட்டார்?” என்று சம்பாஷணையில் இறங்கினான்.

”உங்களிடம் குறுவாளைக் கொடுத்தபோது மகாராஷ்டிரத் தளபதிக்கு இங்குள்ள நிலைமை தெரியக் காரணமில்லை” என்றான் சத்திரக் காவலன்.

”அப்படியானால் குறுவாள் யாருடையதென்று புரிந்து கொண்டுவிட்டாய் நீ?”

”எனக்கென்ன, இந்த ராஜ்யத்தில் யாரிடம் இதைக் காட்டினாலும் புரிந்து கொள்வார்கள். ”

”புரிந்து கொண்டால்?”

”உங்களை யாரும் அணுகவும் அஞ்சுவார்கள். முராரிராவ் கோர்படேயின் பெயர் அல்ப சொல்பமானதல்ல.”

விஜயகுமாரன் வியப்பின் வசப்பட்டான். ‘முராரி ராவின் குறுவாளுக்கே அத்தனை சக்தியென்றால் அவர் சக்தி எத்தனை இருக்க வேண்டும்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். மேலும் ஏதோ அவன் கேட்க முயன்றதும் சத்திரத்துக் காவலன் தடுத்து, “இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் தஞ்சை போய்ச் சேர முடியாது” என்று கவலையைக் காட்டினான்.

விஜயகுமாரன் வியப்பு மேலும் அதிகப்பட்டது. ”நாங்கள் தஞ்சைதான் போகப் போகிறோம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

“மேல்புறம் போனால் திருச்சிக்குப் போகலாம். அங்கிருக்கிற நிலைமை பயங்கரம். கோட்டை மிகப் பலமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகிறார்கள். சிறிது சந்தேகம் இருந்தாலும் சிறையில் தள்ளி வருகிறார்கள். உங்களைப் பார்த்தால் சிறையை விரும்பு பவர்களாகத் தெரியவில்லை. ஆகையால் கிழக்கே தஞ்சைக்குத் தான் போவீர்கள் என்று நினைத்தேன். அது தவிர…” என்ற சத்திரத்துக் காவலன் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

“இப்படியே பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் தஞ்சைக்கும் போக மாட்டீர்கள், திருச்சிக்கும் போக மாட்டீர்கள்” என்றான் காவலன்.

”வேறு எங்கே போவோம்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”எமலோகத்துக்கு…” என்றான் காவல்காரன்.

சத்திரத்தைச் சுற்றியிருந்த விசாலமான பாதையில் ஒரே சீராகக் கால்கள் பரவ அரவமேதும் செய்யாமல் நடந்து வந்த வாலிபன் அவர்கள் இருந்த மரத்துக்கு வந்து, அது அளித்திருந்த நிழலுக்குச் சற்று வெளியிலேயே நின்றிருந்தான். சத்திரத்துக் காவலன் சொன்ன கடைசி வார்த்தைகள் அவன் காதில் விழுந்திருக்கவேண்டும். ஆகவே உறுதியான, ஆனால் மிக மிருதுவான குரலில் வினவினான்: ‘அது எங்கே?” என்று. அவன் தமிழ் உச்சரிப்பு சரியாயில்லை அது மிகவும் இலக்கணமாகவும் இருந்ததால் அவன் என்ன காரணத்தாலோ தமிழைச் சிரமப்பட்டுப் பியன்று வருகிறான் என்பது மட்டும் தெரிந்தது மரத்தடி யில் இருந்தவர்களுக்கு. ஆனால் அவன் தங்கள் உரையாடலில் குறுக்கிட வேண்டிய அவசியம் என்னவென்பது புரியாததால் சிறிது நேரம் மௌனம் சாதித்தனர் நால்வரும்.

அந்த வாலிபன் இரண்டாம் முறை கேள்வியைத் திருப்பினான் ”அது எங்கே?” இம்முறை அவன் கேள்வியில் உஷ்ணம் லேசாக உதயமாகியிருந்தது. அதில் அதிகார தோரணையும் இருந்தது.

அதை விஜயகுமாரன் கவனிக்கவே செய்தான். ஆகையால் வெள்ளைக்காரனுக்குப் பதில் சொல்லத் துவங்கிய சத்திரத்துக் காவலனைக் கையின் சைகையால் அடக்கிவிட்டு, “எது?” என்று தானே வினவினான், தனது குரலிலும் சிறிது உஷ்ணத்தைக் காட்டி.

வெள்ளைக்கார வாலிபன் விஜயகுமாரன்மீது கண்களை ஒரு விநாடி ஓடவிட்டான். பிறகு முக்காடிட்டிருந்த அரசகுமாரி யையும் அவளுக்குப் பின்னாலிருந்த சமயபுரத்துச் சத்திரக்காரனையும் கூர்ந்து நோக்கினான்.

அவன் பார்வை மரத்தின் நிழல் தந்த சிறு இருளையும் கிழித்துக் கொண்டு வந்தது அரசகுமாரிக்குப் புலனாகவே, அவள் மிகுந்த தர்மசங்கடத்துடன் அசைந்தாள் தனது புரவியில். சமயபுரத்தானைக் கிலி பிடித்துக் கொண்டிருந்தது. இவை எதையும் கவனிக்கத் தவறாத வெள்ளையன் சொன்னான்: ”பயம் வேண்டாம், இவன் சொன்ன இடத்தைச் சொன்னால் போதும்” என்று கூறி அதற்குமேல் தமிழ் ஓடாததால் ‘லெட் ஹிம் ஸ்பீக்’ எனறு உத்தரவிட்டான்.

இதற்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட சத்திரக் காவலன், “அட சனியனே! எதைக் கேட்கிறாய்?” என்று எரிந்து விழுந்தான்.

“நீ ஒரு இடம் சொன்னாய்?”

“எந்த இடம்?”

“எமலோகம்”

“அது எதற்கு?”

“இந்த நைட் தங்க வேண்டும்?”

“தங்கி?”

”காலையில் போவேன்.”

“முடியாது.”

“ஏன்?”

“அங்கே போனால் திரும்பி வரமுடியாது.”

“என்னால் முடியும்.”

“எப்படி?”

பதிலுக்கு அந்த வாலிபன் இடையிலிருந்த கைத்துப் பாக்கியைத் தட்டிக் காட்டினான். உண்மையில் அவன் தட்டிக் காட்டிய தோரணையில் ஓர் அபாரத் துணிவும் அசட்டையும் இருந்ததைக் கவனித்த விஜயகுமாரன், ‘இவன் எமனையும் சுட்டு விடுவான் போல்தான் இருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுக்குத் தமிழ் புரியாததால் எமலோகம் ஏதோ அக்கம் பக்கத்தில் தங்கக்கூடிய இடமென்று கேட்கிறான் என்பதையும் புரிந்து கொண்டு, ”எமலோகம் மேலே யிருக்கிறது” என்று கூறிக் கையை உயர்த்தி ஆகாயத்தைக் காட்டினான்.

“யூ மீன் ஹெவன்?” என்று வினவினான் வெள்ளைக்கார வாலிபன்.

”இல்லை. அதற்கு நேர் விரோதம்…”

”ஹெல்…”

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் விஜயகுமாரன். இதைக் கேட்ட அந்த வாலிபன் வாய்விட்டுப் பெரிதாக நகைத்தான். ”தமிழ் இன்னும் சரியாகப் புரியவில்லை” என்றும் கூறிவிட்டு, ‘எமலோகம் எமலோகம் ஹெல் ஹெல்” என்று இருமுறை சொல்லிக் கொண்டான்.

அவன் நகைத்ததைக் கண்ட சத்திரத்துக் காவலனுக்கு உதைப்பெடுக்கவே, ”உஷ் உஷ் சிரிக்காதே” என்று எச்சரித்தான்.

‘ஏன்?” என்று கேட்டான் வெள்ளைக்கார வாலிபன். அத்துடன் ஏதோசந்தேகம் கொண்டு, “இங்கே ஏன் நிற்கிறீர்கள்?” என்றும் வினவினான்.

”உள்ளே எமன் இருக்கிறான்” என்றான் சத்திரக் காவலன் மீண்டும்.

“அப்படியானால் இதுதான் எமலோகமா?” என்று கேட்ட வெள்ளைக்கார வாலிபன் சத்திரத்தைக் கையால் சுட்டிக் காட்டி மீண்டும் நகைத்தான். அத்துடன், ”எனக்குப் புரிகிறது” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.

”என்ன புரிகிறது?” என்ற கேட்டான் விஜயகுமாரன்.

”உங்கள் மனத்தில் பயம் இருக்கிறது” என்றான் அந்த வெள்ளைக்கார வலிபன்.

விஜயகுமாரன் நிதானத்தைச் சிறிது இழந்தான். ”எனக்கா பயமா” என்று சீறினான்.

”ஆம். முதலில் நீ கதவைத் தட்டினாய்” என்றான் வெள்ளைக்கார வலிபன்.

”தட்டினேன்” என்றான் விஜயகுமாரன்.

”இவன் திறந்தான்” என்று சத்திரத்துக்காரனைச் சுட்டிக் காட்டினான் வெள்ளைக்கார வாலிபன்.

”ஆம், திறந்தான் மெள்ள.”

”அப்புறம் நீங்கள் எல்லாரும் திடுட்டுத்தனமாக இங்கு வந்தீர்கள்.”

”அதனால்?”

“உள்ளே யாரையோ கண்டு பயம் உங்களுக்கு. அவன் தான் எமன்.”

”எமன் இல்லை. எமனைவிடக் கொடியவன்” என்று விளக்கினான் சத்திரக்காரன். ”அவன் கையில் நீங்கள் சிக்கினால் சித்திரவதை நிச்சயம்” என்று பதில் கூறிய சத்திரக்காரன் சித்திர வதை எப்படியிருக்கும் என்பதைக் குறிப்பிட, கழுத்து, கால் கைகளை வெட்டுவதுபோல் சைகை காட்டினான்.

வெள்ளைக்கார வாலிபன் சிறிது யோசித்தான். பிறகு கேட்டான், “உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று.

“ஆறு பேர். ”எல்லாரும் சிப்பாய்களா?”

“ஆம்.”

‘ஆல் ரைட், வாருங்கள்.”

விஜயகுமாரன் சத்திரக்காரனை நோக்கினான். சத்திரக் காரன், “இவன் ஏதோ பைத்தியம் போலிருக்கிறது. இவனை நம்பி உள்ளே போகாதீர்கள்” என்று கெஞ்சினான்.

வெள்ளைக்கார வலிபன் சட்டென்று திரும்பி சத்திரக் காரனை நெருப்புப் பொறி பறக்கும் கண்களால் நோக்கினான். ”பைத்தியமென்று யாரைச் சொல்கிறாய்?” என்று சுத்தமான தமிழில் கேட்டான்.

”உள்ளேயிருப்பது யாரென்று தெரிந்தால் அங்கே போக முயல மாட்டீர்கள்.”

”இருப்பது ஆறு பேர். உன்னைச் சேர்த்து நாம் ஐந்து பேர். ஐந்து பேர் ஆறு பேர்களைச்சுட முடியாதா?” என்று வினவினான். அவன்.

”அவர்கள் தலைவன்…?”

”எமனாயிருந்தாலும் சுட்டு விடுகிறேன்.,” என்றான் அந்த வாலிபன்.

“நம்மில் ஒருவர் பெண்,” என்றான் சத்திரக்காரன்.
வெள்ளைக்கார வாலிபன் அருகில் வரும்படி அரசகுமாரிக்குக் சைகை காட்டினான். அவளும் புரவியை நகர்த்தி அவனுக்கு எதிரில் வந்து மிக அசட்டையுடன் நோக்கினாள் அவனை. அவனும் அவளை நோக்கினான் கூர்ந்து. மஸ்லின் துணிக் குள்ளிருந்த கண்களால் அவள் அந்த வாலிபனை உக்கிரத்துடன் பார்த்ததால், வெண்மதியின் நிலவு மஸ்லினை ஊடுருவியதால் அவள் கண்கள் கோபத்திலும் அழகாகத் தெரிந்தன.

”உனக்கு இவர்களைவிடத் துணிவு இருக்கிறது. வா என்னுடன்” என்று கூறி நடக்க முற்பட்டான்.

”இரு இரு. பொறு!” என்று உதறலுடன் கூறினான் சத்திரக்காரன்.

ஓர் அடி எடுத்து வைத்த வாலிபன் சற்று நின்று திரும்பினான். “என்ன?” என்று எரிச்சலுடன் கேட்கவும் செய்தான்.

‘உள்ளே இருப்பவன் இப்ரஹிம்” என்று அறிவித்தான் சத்திரக்காரன்.

”யார் அவன்?”

”சந்தா சாகேப்பின் வலக்கை.”

”அப்படியானால் அவனை முதலில் சுட்டு விடுகிறேன்” என்று கூறி அந்த வாலிபன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

அந்தச் சமயத்தில் அரசகுமாரி தனது புரவியைச் செலுத்தி அவனை வழி மறித்தாள். ”யார் நீ?” என்று வினவினாள்.

சிறிது அவன் சிந்தித்தான். பிறகு அவளை ஏறிட்டு நோக்கி விட்டுச் சொன்னான், ”நான் பிரிட்டிஷ் சோல்ஜர்,” என்று.

“பெயர்?” என்று மீண்டும் பினவினாள் தஞ்சை அரசகுமார்.

”ஏன் கேட்கிறாய்?”

”கேட்க வேண்டும் போலிருக்கிறது.”

‘ஏன்?”

”உன் துணிவு அதிகமாயிருக்கிறது.”

“துணிவில்லாதவன் இந்த நாடு இருக்கும் நிலையில் உயிரோடு இருக்க முடியாது.”

”உண்மை.”

”அதுவும் எங்கோ இருந்து வந்திருக்கிறேன். தவிர என் உயிரும் லேசில் போகாது.”

”அப்படியானால் உன் பெயரை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.”

”ராபர்ட் கிளைவ்!” என்ற சொற்கள் மிக நிதானமாக, அலட்சியமாக, ஆனால் மிகத் தெளிவாக உதிர்ந்தன அவன் வாயிலிருந்து.

Previous articleRaja Perigai Part 1 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here