Home Historical Novel Raja Perigai Part 1 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

52
0
Raja Perigai Part 1 Ch9 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 1 Ch9 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 1 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

முதல் பாகம் அத்தியாயம் – 9. பின்னால் வந்த எதிரி

Raja Perigai Part 1 Ch9 | Raja Perigai | TamilNovel.in

வெள்ளைக்கார வாலிபன் சர்வசாதாரணமாகவும் மிகுந்த அலட்சியத்துடனும் தனது பெயர் ராபர்ட் கிளைவ் என்பதை அறிவித்தபோதிலும், அவன் அதை உச்சரித்த தோரணை, அவன் ஏதோ பெரிய அரசன் பெயரை உச்சரிப்பதைப் போல் இருந்தபடி யாலும், அதில் ஒரு கம்பீரமும் பெருமையுங்கூட ஊடுருவி நின்றபடியாலும் பிரட்டிஷ் படையில் அவன் பெரும் பதவி வகிப்பவனாக இருக்க வேண்டுமென்று நினைத்த தஞ்சை மன்னன் மகள், அத்தகைய பெயர் எதையும் அதுவரை கேட்டிராத காரணத்தால் சிறிது மலைக்கவே செய்தாள்.

அந்த மலைப்பினால் இரண்டு விநாடிகள் ஏதும் பேசாமல் புரவிமீதே அமர்ந்துவிட்ட அவள் தனது மலைப்பை உதறிக்கொண்டு, “பிரிட்டிஷ் படையில் நீ யார்? காப்டன், மேஜர் என்று ஏதோ சொல்கிறார்களே…. அது மாதிரி ஏதாவது பதவி வகிக்கிறாயா?” என்று வினவினாள்.

இதைக் கேட்ட அந்த வாலிபன் புன்முறுவல் கொண்டான். “இல்லை, இப்பொழுது அந்த மாதிரி எதுவும் இல்லை. சீக்கிரம் வரும்” என்று திட்டமாகக் கூறினான், புன்முறுவலின் ஊடே.

பெண்களுக்கு இயற்கையாக உள்ள குணத்தினால் பேச்சை அத்துடன் முடிவு கட்டாமல் மேலும் தொடர்ந்த அரச குமாரி, ”அப்படியானால் இப்பொழுது நீ யார்?” என்று வினவினாள்.

“வியாபாரி. போர்ட் ஸெய்ன்ட் டேவிட்டுக்கு உணவுப் பொருள் வாங்கத் திருச்சி வந்தேன்” என்று தனது பதவியை மட்டுமின்றி, பணியையும் விளக்கினான் அந்த வாலிபன்.

“சொல்ஜர் என்று சொன்னாயே?” என்று கேட்டாள் அரசகுமாரி.

“ஆம்.”

”சோல்ஜர் என்றால் படை வீரனாயிற்றே?”

“ஆம்.”

“இப்பொழுது வியாபாரி என்கிறாயே?”
“இங்குள்ள பிரிட்டிஷ்காரர்கள் எல்லாரும் அப்படித் தான். வியாபாரிகள் எல்லாரும் சோல்ஜர்கள், சோல்ஜர்கள் எல்லாரும் வியாபாரிகள். இரண்டிற்கும் வித்தியாசம் கிடை யாது.” இதைச் சொன்ன வாலிபன் நகைத்தான் மெல்ல.

அவன் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டதால் நந்தினியும் நகைத்தாள். வியாபாரிகளாக இந்த நாட்டுக்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் தற்காப்புக்காகப் படை வீரர்களாக மாறி, கோட்டைகளையும் மெள்ள மெள்ள சுவீகாரம் செய்து கொண்ட செய்திகளைத் தனது தந்தையிடமிருந்து அவள் கேட்டிருந்ததாலும், அதே விஷயத்தை நனச்சுவையுடன் வாலிபன் சுட்டிக் காட்டியதாலும் சத்திரத்துக்குள்ளிருந்த ஆபத்தையும் மறந்து அவள் சற்று வாய்விட்டே நகைத்து விட்டாள்.

அந்த இருவர் பேச்சையும் நகைப்பையும் ரசிக்காத விஜய குமாரன் மரத்து நிழலிலிருந்து தனது புரவியை இழுத்துக் கொண்டு நிலவுப் பாதைக்கு வந்து, ”சிரிப்பதற்கு இப்பொழுது சமயமில்லை .” என்று சுட்டிக் காட்டினான் அரசகுமாரிக்கு.

நந்தினி அதற்குப் பதில் சொல்லத் துவங்கு முன்பாக வெள்ளைக்கார வாலிபனே பேசத் துவங்கி, ”வேறு எதற்கு சமயம்? பதுங்குவதற்கா? ஓடுவதற்கா?” என்று வினவினான் இகழ்ச்சி நிரம்பிய குரலில்.

விஜயகுமாரன் விழிகள் நெருப்பைக் கக்கின. “பேச்சு பலமாயிருக்கிறது உனக்கு. நீ என்ன ஆற்காட்டு நவாபென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று வினவினான் சினம் தலைக்கேற.

இதைக் கேட்ட அந்த வாலிபன் இரைந்தே நகைத்தான். ”ஆற்காடு நவாப் மை காட்! போயும் போயும் அது ஒரு பதவியா?” என்று கூறினான் நகைப்பின் ஊடே.

”அந்தப் பதவி கர்நாடக சாம்ராஜ்யத்தில் உயர்ந்த பதவி. நவாப் நினைத்தால் எதையும் செய்யலாம்” என்றான் விஜயகுமாரன்.

“இருந்தால்தான் செய்யலாம்.”

”என்ன சொல்கிறாய்?”

“இன்றைக்கு இருக்கிற நவாப் நாளைக்குக் கிடையாது. நவாபாகவும் கிடையாது, நபராகவும் கிடையாது. நாளைக்கு ஒரு நவாப் க்ளோஸ் ஆகிறார். யார் கெஞ்சினாலும் அந்தப் பதவியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய ராபர்ட் கிளைவ், “இங்கு இப்படியே நாம் நின்று பேசிக்கொண்டிருந்தால் நாமும் நவாபாகி விடுவோம். அதாவது ஒன்று கைதாவோம் அல்லது கொல்லப்படுவோம்” என்றும் தெரிவித்தான்.
அந்த வாலிபன் கூறிய சொற்களில் உண்மை இருந்த தாலும், இயற்கையாகவே ஓட இஷ்டப்படாத வீரம் தெரிந்ததாலும், அவனை நெருங்கினான் விஜயகுமாரன். அதே சமயத்தில் அரசகுமாரியும் புரவியிலிருந்து இறங்க முயலவே, வேண்டாம் என்று அவளை நோக்கிக் கையால் சைகை செய்த கிளைவ், “நீங்கள் எங்களுக்குப் பின்னால் மெள்ளப் புரவியில் வாருங்கள்” என்று கூறிவிட்டுச் சத்திரத்துக் காவலனை நோக்கிக் கேட்டான், ‘உள்ளே இருப்பவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார் களா, விழித்துக்கொண்டிருக்கிறார்களா?” என்று.

“நான் வரும்போது தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்” என்றான் சத்திரத்துக் காவலன்.

‘சரி. உன் கையிலிருக்கும் சிறுவாளை என்னிடம் கொடு” என்று கையை நீட்டினான் கிளைவ்.

”அது முராரிராவுடையது” என்றான் சத்திரத்துக் காவலன். ”அதனால் என்ன?” ”இதை அவரிடம்தான் கொடுக்க வேண்டும்.”

”நீ உயிருடன் இருந்தால்தானே கொடுக்கலாம், திருப்பி எடுத்துக் கொள்ளலாம். இப்படி கொடு, உம்,” என்று கிளைவின் பேச்சு உத்தரவு போல் இருந்தததால் மறு பேச்சின்றி அதைக் கொடுத்தான் காவலன்.

அடுத்தபடி என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித் தான் கிளைவ்.

சத்திரக்காரன் முதலில் சென்று கதவைத் திறந்து விட்டுப் பக்கவாட்டில் சென்றுவிடட்டும். நானும் நீங்களும் அதோ உங்களுக்குப் பின் நிறகிறானே அவனும் உள்ளே நுழைவோம். உள்ளே இருப்பவர்களை அவன் எழுப்பியதும் நம் இருவர் கைத் துப்பாக்கிகளும் அவர்கள் கண்கள் முன்பு தெரியும். ஆயுதங் களைத் தொட அவர்களுக்கு அவகாசம் இருக்காது. எவனாவது ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்திருந்து கையால் எடுத்தால் உடனே சுட்டுவிடுங்கள்” என்று உத்தரவிட்ட கிளைவ், அரசகுமாரியை நோக்கி, ‘நீங்கள் உள்ளே வரவேண்டாம்’ என்றும் உத்தரவிட்டு, சத்திரத்து வாசலை நோக்கி நடந்தான்.

அவன் தங்கள் ஆமோதிப்புக்கோ பதிலுக்கோ காத்தி ராமல் நடந்துவிட்டதைக் கண்ட விஜயகுமாரன் ஒரு கணம் கோபத்தின் வசப்பட்டாலும் அடுத்த விநாடி ஏதோ காந்தத்தால் இழுக்கப்பட்டவன் போல் வலக் கையில் வாளை உருவிக் கொண்டும் இடக் கையில் கைத்துப்பாக்கியை ஏந்திக்கொண்டும் அந்த வெள்ளைக்கார வாலிபனைப் பின் தொடர்ந்தான். சமயபுரத்துச் சத்திரக் காவலனும் அவர்கள் இருவரையும் தனது இடையிலிருந்த குறுவாளை எடுத்துக்கொண்டு பின் தொடரவே, அரசகுமாரி அவர்கள் போவதைச் சிறிது நேரம் புரவியில் உட்கார்ந்த வண்ணமே கவனித்தாள். ஏதோ படையைப் போருக்கு அழைத்துச் செல்பவன் போல் கம்பீர நடை போட்டுக் கொண்டு முன்னால் சென்ற வெள்ளைக்கார வாலிபனைக் கண்ட நந்தினி யின் உள்ளத்தில் விவரிக்க இயலாத வியப்பு விரிந்து கிடந்தது.

அந்த வாலிபன் தங்களைத் தொடர்ந்து வந்ததையும் தோப்பு வழியாக ஓட வேண்டிய தங்களைத் திருப்பிச்சத்திரத்துக்குள் சண்டைக்கு இழுத்துச் செல்ல ஏற்பாடு செய்து விட்டதையும், எத்தனையோ கட்டுக்காவல்களைக் கடந்து அரங்கன் கோயிலுக் குள் நுழைந்த நெஞ்சுத் துணிவுள்ள விஜயகுமாரன்கூட அந்த வெள்ளைக்கார வாலிபன் சொல்லுக்கு ஆட்பட்டு அவனைப் பின் தொடர்ந்துவிட்டதையும் நினைக்க அரசகுமாரிக்கு வியப்பு மனத்தின் எல்லையையும் கடந்து வதனத்திலும் விகசித்ததால், கிருஷ்ணபட்சத்துச் சந்திர ஒளி அவள் முகப் பொலிவை எத்தனையோ மடங்கு அதிகப்படுத்தியது.

தஞ்சை அமைச்சர் டபீர் பண்டிதரின் கண்ணிலும் மண்ணைத் தூவித் தன்னைத் தூக்கி வந்த விஜயகுமாரனையே இஷ்டப்படி இயக்கவல்ல அந்த வாலிபனிடம் ஏதோ ஓர் அபாரமான கவர்ச்சியும் சக்தியும் இருக்கின்றன என்ற முடிவுக்கே அவள் வந்தாள். அப்பேர்ப் பட்டவன் என்னதான் செய்யப் போகிறான் என்பதைக் கவனிக்கத் தனது புரவியையுைம் மெள்ள மெள்ள முன் சென்றவர்களைத் தொடரவிட்டாள்.

புரவி ராஜநடை நடந்தது. முன்னே சென்றவர்களுக்கெல் லாம் முன்பாக எப்படியும் எதிரிகளைத் தானே முதலில் சந்தித்து விடவேண்டும் என்ற ஆசையுடன் செல்பவன்போல் திடமாகவும், அவசரப்பட வேண்டாமென்று பின்புறம் வந்தவர்களுக்குக் கையால் சைகை காட்டிக்கொண்டும், ராஜநடை நடந்த ராபர்ட் கிளைவ், பாதையின் முடிவுக்கு வந்து சத்திரக் கட்டிடத்துக்குத் திரும்பும் வழியில் சற்று நின்று சத்திரக் காவலனை நோக்கி, “இனி நீ மெதுவாகச் சென்று கதவைத் திறந்து விடு ” என்று உத்தர விட்டான்.

சத்திரத்துக் காவலனும் பூனை போல் பதுங்கிப் பதுங்கி நடந்து சத்திரத்துப் படிகளை அடைந்து ஏறித் தாழ்வரையின் மங்களான விளக்கு வெளிச்சத்தில் ஒரு விநாடி நின்றான். பிறகு மெள்ளக் கதவைத் திறந்தான். திறந்ததும் பக்கவாட்டில் நடந்து தாழ்வரையின் வடக்குக் கோடிக்குச் சென்றான்.

‘அவன் கதவைத் திறந்த பின்பும் சத்திரத்துக்குள் நிசப்தமே நிலவி நின்றதால் வெள்ளைக்கார வாலிபன் மெள்ளப் படிகளில் ஏறிச் சென்று வாயிற்கதவை ஒரு பக்கமாக அணுகி உள்ளே மெள்ள எட்டிப் பார்த்தான். உள்ளே எந்த அரவமும் இல்லா திருக்கவே மற்ற இருவரையும் வரும்படி அழைத்து முதலில் அவனே உள்ளே புகுந்து விட்டான். விஜயகுமாரன் சிறிதும் தாமதிக்காமல் சமயபுரத்தானையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, கையில் இருந்த துப்பாக்கியின் குதிரையை இழுத்துக் கொண்டு எந்த நிலையையும் சமாளிக்கத் தயாரானான்.

ஆனால் அங்கே சமாளிக்கக்கூடிய நிலை ஏதும் இல்லாதிருந்தததாகத் தோன்றியது அவனுக்கு. அதேதான் தோன்றியிருக்க வேண்டும் ராபர்ட் கிளைவுக்கும். அவன் நின்ற இடத்தில் சில விநாடிகள் எச்சரிக்கையுடன் நின்றான். பிறகு எதையோ கண்டு விட்டவன் போல் கூடத்து இருட்டில் வெகுவேகமாக ஓடி எதிரே இருந்த ஓர் அறைக் கதவைக் காலால் வெகுவேகமாக உதைத்தான். அறையிலிருந்த ஒரு பெருவிளக்கின் வெளிச்சம் கூடத்தில் விழுந்தவுடன் சரேலென்று பின்புறம் திரும்பிக் கூடத்தின் எதிர்ப் புறத்தை நோக்கி, அதாவது, விஜயகுமாரன் நின்றிருந்த திசையில் இருமுறை பட்பட்டென்று வெகு துரிதமாகச் சுட்டான். அத்துடன் உள்ளே பாய்ந்து அறையின் விளக்கையும் ஊதி விட்டான். அடுத்த விநாடி அந்தக் கூடம் கன இருளில் அமளிப்பட்டது.

தன்னை நோக்கி கிளைவ் துப்பாக்கியைத் திருப்பியதும் ஒரு விநாடி திக்பிரமையடைந்த விஜயகுமாரன், கிளைவின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவு தன்னைப் பாதிக்காததையும், தனது தலைக்குமேல் சென்று விட்டதையும் கண்டதும் சட்டென்று தானும் திரும்பி, கிளைவ் குறி வைத்த இடத்தில் இருமுறை சுட்டான். பிறகு வலக் கையிலிருந்த வாளையும் பாய்ச்சி இழுத்தான். கிளைவின் கைத்துப்பாக்கியும் விஜயகுமாரன் கைத்துப்பாக்கியும் ஒன்றையொன்று அடுத்தடுத்து சப்திப்பதால் தனக்குப் பின்னால் யாரோ இருவர் அலறியதைக் கேட்ட சமயபுரத்தான் தான் செய்யக்கூடிய ஒரே ஒரு புத்திசாலித்தனமாக பணியைச் செய்தான். அதாவது, தரையில் நெடுஞ்சாண் கட்டையாக விழுந்தான். அப்படி விழுந்த தன்மீது யாரோ ஒருவன் கால் வைத்து ஓடியது புரிந்தது அவனுக்கு. இருப்பினும் அந்தச் சமயத்தில், கூடத்தின் இருட்டில், குறுக்கும் நெடுக்கும் கைத்துப்பாக்கிகளின் சுடுவெளிச்சம் மட்டும் தெரிந்து கொண்டிருந்த பயங்கர நிலையில், பூமிப் பிராட்டியைத் தவிர தஞ்சம் ஏது மில்லை என்பதை அவன் நன்றாகப் புரிந்து கொண்டதால் கையைக் காலை அசைக்காமல் கீழே கிடந்தான்.

அடுத்த விநாடியில் திடீரெனக் கூடத்தின் எதிரக்கோடியிலிருந்து இன்னொரு அறையிலிருந்து ஒரு தீபம் கொளுத்தப்பட்டுக் கூடத்துக்கு வந்தது. அப்பொழுது எழுந்தது கிளைவின் குரல், ”வாட்களைக் கீழே போடுங்கள். துப்பாக்கிகளைத் தொட வேண்டாம், அசையும் எவனும் பிணமாகி விடுவீர்கள்” என்று.

புதிதாகக் கொண்டு வரப்பட்ட விளக்கின் வெளிச்சத்தில் எதிரே மூவர் இறந்து கிடப்பதை விஜயகுமாரன் கண்டான். தன் கத்தியிலிருந்த ரத்தத்திலிருந்து தான் வாளைப் பாய்ச்சி இழுத்த போது அதிலும் ஒருவன் மாண்டிருக்கிறான் என்பது புலனாயிற்று அவனுக்கு. அவனுக்கு நேர் எதிரில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தான் ஆஜானுபாகுவான ஒரு முகமதிய வீரன். அவன் நின்ற தோரணிையிலிருந்து அவன்தான் இப்ராஹீமாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான் விஜயகுமாரன். அவன் தீர்மானத்தை உறுதி செய்யும் முறையில் எழுந்தது கிளைவின் குரல்: “நீதான் இப்ரஹீம் என்று நினைக்கிறேன்,” என்று மிகக் கம்பீரமாக.

இப்ரஹீம் முகத்திலும் அவனிடமிருந்த மற்ற இருவர் முகத்திலும் ஆச்சரியம் படர்ந்தது, வெள்ளைக்காரன் தமிழ் பேசுவதைக் கண்டு. ஆனால் அந்த வியப்பைக் கணநேரத்தில் மறைத்துக் கொண்ட இப்ரஹீம், “நீ கம்பெனிக்காரன் தானே?” என்று வினவினான்.

”ஆம், ” என்றான் கிளைவ்.

”இந்தச் சண்டை இந்தியர்களுடையது. நீ எதற்காகத் தலையிடுகிறாய் இதில்?” என்று வினவினான் இப்ரஹீம்.

“இந்தியர் சண்டையில் வெள்ளைக்காரர் தலையிடுவது இப்பொழுது சகஜமாகிவிட்டது” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ்.

”என்னுடைய வீரரில் மூவர் மாண்டுவிட்டார்கள் ” என்றான் இப்ரஹீம்.

”ஐ ஆம் ஸாரி!” என்றான் கிளைவ் சிறிது தமிழை மறந்து.

“என்ன?”

“வருந்துகிறேன்?’

‘ ”எதற்கு வருந்துகிறாய்?”

”உங்கள் அனைவரையும் கொல்லாதற்கு.”

“அந்தக் குறை இருக்கிறதா உனக்கு?”

”ஆம். ஆனால் இப்பொழுதுகூடத் தீர்த்துக்கொள்ள முடியும்.”

இதைக் கேட்டதும் இப்ரஹீம் சிறிது முகம் சிணுங்கினான். ”உனக்குப் பைத்தியம் ஏதாவது உண்டா?” என்று கேட்டான் உஷ்ணமாக.

கிளைவ் சிறிது யோசித்தான். பிறகு சொன்னான், ”உண்டு. அது வரும்போது யாரையாவது சுட்டுவிடுகிறேன்” என்று கூறி விட்டுக் கையிலிருந்த சிறு துப்பாக்கியைச் சிறிது உயரத்தினான்.

இப்ரஹீம் அதைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை . “நீ கொஞ்சங்கூட மூளை இல்லாதவன். என்னை இப்பொழுது சுடு. அடுத்த விநாடி உயிருடன் இருக்கமாட்டாய்” என்று கூறினான் சுடுசொல்லால்.

“ஏன்?”

”திரும்பிப் பார்.”

”ஆல் ரைட்” என்று கூறிய கிளைவ் விஜயகுமாரனை நோக்கி, ”அவன்மீது ஒரு கண்ணை வைத்துக்கொள்” என்று எச்சரித்து விட்டுத் திரும்பினான். அவனுக்குப் பின்னால் ஒருவன் நின்றிருந்தான், கையில் துப்பாக்கியுடன். அவனைப் பார்த்த கிளைவின் கண்கள் பெரும் பிரமிப்பை அடைந்தன. ‘யூ!” என்ற சொல் மிக வியப்புடன் வெளிவந்தது.

அப்படி நின்றிருந்தவன் ஒரு வெள்ளைக்காரப் பாதிரி. அவன் முகத்தில் இறுமாப்பும் விரோதமும் மிதமிஞ்சிக் கிடந்தன. ”ஆம், நான்தான்” என்றான் அவன்.

கிளைவ் சிறதும் அச்சமின்றிக் கூறினான் அவனைப் பார்த்து, ”போர்டைஸ்! கீழே போடு துப்பாக்கியை!” என்று.

“இல்லை. உன்னை ஒழிக்கப் போகிறேன்” என்றான் போர்டைஸ். அவன் கண்களில் வெறி தெரிந்தது மிதமிஞ்சி. அவன் கையிலிருந்த துப்பாக்கியின் குதிரையும் இழுபட்டது, கிளிக் என்ற ஒலியுடன்! ஒரே விநாடி கிளைவின் உயிர் ஆகாயத்தில் பறக்க இருந்தது.

Previous articleRaja Perigai Part 1 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 1 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here