Home Historical Novel Raja Perigai Part 2 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 2 Ch1 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch1 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 1. அல் – அலீம்

Raja Perigai Part 2 Ch1 | Raja Perigai | TamilNovel.in

புதுச்சேரி அன்று மணக்கோலம் பூண்டு நின்றது. நகரெங்கும் தோரணங்களும் பிரெஞ்சுக் கொடிகளும் அற்புதமாகக் காட்சியளித்தன. கிட்டத்தட்ட நகரின் மத்தியிலும் கடற்கரையிலிருந்து அதிக தூரம் இல்லாமலும் கட்டப்பட்டிருந்த புதுவை கவர்னரின் மாளிகையில் பிரெஞ்சு வெற்றிக்கு அறிகுறியாகச் சின்னங்கள் பலவும் காணப்பட்டன. புரவியேறித் துப்பாக்கிகளைத் தூக்கிப் பிடித்துப் பிரெஞ்சு சோல்ஜர்கள் கவர்னரின் அரண்மணையைச் சுற்றிக் காவல் கோஷமிட்டு உலவிக் கொண்டிருந்தனர். யாருக்காவது அடிமைப்பட்டு வாழ்வதென்று உறுதி பூண்டிருந்த தமிழக மக்களும் பிரெஞ்சு உற்சாகத்தைத் தங்கள் சொந்த உற்சாகமாக மதித்து, தங்கள் வீடு களுக்கு முன்னால் நீர் தெளித்துப் பெருங் கோலங்களைப் போட்டிருந்தனர்.

பிரெஞ்சுக்காரர்கள் கீழ் வேலை செய்து கொண்டிருந்த தமிழ் உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகைகளையும் கோட்டுகளையும் அணிந்து கம்பீரத்துடன் உலாவிக்கொண் டிருந்தாலும், உத்தியோகம், அடிமைத் தன்மை வாய்ந்ததாகையால் பபூன்களைப் போல் காட்சியளித்து அரை குறை பிரெஞ்சு பாஷையில் பேசிக்கொண்டு வீதிகளில் உலாவிக்கொண்டிருந்தனர். அவர்களில் பிரெஞ்சு சிப்பாய்களாகி விட்டவர்கள் எப்போதும் தாங்கள் வெள்ளைக்காரர்களின் பலி ஆடுகள் என்பதை உணர்ந்திருந்தும், அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் பிரெஞ்சுப் படைத்தலைவர்கள் உத்தரவுப்படி நகரின் மர்ம மூலைகளில் காவல் புரிய அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அந்த அணிவகுப்பு சீராக நடைபெறுவதற்காகப் பிரெஞ்சு டமாரங்கள் ஆங்காங்கு ராணுவ முறையில் ஒலித்துக்கொண்டிருந்தன. நகரின் பெருவீதிகளில் நடுவிலிருந்த கவர்னரின் மாளிகை செல்லும் வீதியில் தோரணங்களின் இடையே பெரும் பூக்கூடைகள் புஷ்பங்களுடன் மூடப்பட்டு வரும் பிரமுகர் தலையில் பூச்சொரியத் தயாராக இருந்தன.

பெரும் தூண்களைக் கொண்ட அகண்டமான பிரெஞ்சுக் கவர்னர் மாளிகையின் நடுமண்டபத்தின் அலங்காரம், நகர அலங்காரத்தைத் தூக்கியடிக்கும் வண்ணம் செய்யப்பட்டிருந்தது. கவர்னர் அமர, சிம்மாசனம் போல் போடப்பட்டிருந்த பெரும் நாற்காலிக்குப் பின்னாலிருந்த சுவரில் பிரெஞ்சுக் கொடியும் பிரெஞ்சுச் சாம்ராஜ்யச் சின்னங்களும் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தன. கவர்னர் சிம்மாசனத்திலிருந்து கிளம்பிய செம்பட்டு நார்ப் பாய் மண்டபத்தையும் தாண்டி வெளியிலும் சென்று பெரும் பாதைப் போல் ஓடிக்கொண்டிருந்தது.

வெள்ளியாலும் தங்கத்தாலும் இழைக்கப்பட்ட பிடிகளை உடைய கவர்னர் சிம்மாசனத்திலிருந்த மேடைக்குச் சற்றுக் கீழே இன்னும் இரண்டு சிம்மாசனங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து சிறிது தூரம் தள்ளி, சிவப்பு நடைபாதையின் இருபுறங்களிலும் சுமார் இருநூறு நாற்காலிகளுக்கு மேல் வரிசையாகப் போடப்பட்டிருந்தபடியால் பெரும் விழாவொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த மண்டபக் கூரையிலிருந்து தொங்கிய நானாவித வர்ண ஜால விளக்குகள் அது பகலாயிருந்தும் கூட எரிந்து கொண்டிதானிருந்தன.

இப்படி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த மாளிகை மண்டபத்தின் உள்ளறையில் பிரெஞ்சு கவர்னர் டூப்ளே தீவிர சிந்தனையுடன் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தார். ஐம்பது வயதைத் தாண்டியிருந்த அவருடைய வீர வதனத்தில் வயதுக்கான சுருக்கங்களோ வேறு அடையாளங்களோ காணப்படா விட்டாலும் தலைமயிர் மட்டும் ஓரிரு இடங்களில் வெளுத்திருந்தது. இத்தனைக்கும் அவர் கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடிக்கொண் டிருந்தது. ”இனி பயமும் இல்லை. எதிர்ப்புமில்லை” என்று டூப்ளே பிரெஞ்சு மொழியில் ஒரு முறைக்கு இருமுறை இரைந்தே சொல்லிக் கொண்டார். அத்துடன் சற்று எட்டவிருந்த மேஜையிலிருந்த தமது ‘விக்’ கையும் எடுத்துத் தலைமீது அழகாகச் செருகிக்கொண்டு எதிரிலிருந்த நிலைக் கண்ணாடியில் அது சரியாகப் பொருந்தியிருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டர்.

அதே அறையின் ஒரு மூலையில் ஒரு சுவரில் பிரெஞ்சு வாலிபன் ஒருவன் சாய்ந்து கையை மார்பில் கட்டிக் கொண்டு பூர்ண ராணுவ உடையில் நின்று கொண்டிருந்தான். பிரிட்டிஷ்.

தரப்பில் கிளைவ் எத்தனை அறிவாளியோ அத்தனை அறிவாளியென்று புகழ்பட்டவனும், அரும்பெரும் காரியங் களைச் சாதித்தவனும், இன்னும் இந்திய சரித்திரத்தில் இணையிலா இடம் பெற்றிருப்பவனுமாக காஸல் நாவ் மான்ஷயாடி புஸ்ஸி மட்டும் எந்த வித உற்சாகத்தையும் முகத்தில் காட்டாமல் நின்று கொண்டிருந்தான்.

அது மட்டுமல்ல. ஈட்டிகளெனப் பளபளத்த அவன் கண்களில் சிறிது அருவருப்பும் தெரிந்தது. விக் ‘கைத் தலையில் மாட்டிக்கொண்டு முகத்தைச் சுற்றிலும் அழகிய சுருள் மயிர்கள் தொங்கக் காட்சியளித்த கவர்னர் டூப்ளே அவனைத் திரும்பி நோக்கினார், கூர்ந்து பல விநாடிகள். பிறகுக் கேட்டார், ‘கேப்டன் புஸ்ஸி உனக்கு நமது வெற்றியில் மகிழ்ச்சியில்லை போல் தெரிகிறது” என்று.

டி புஸ்ஸி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சொன்ன போதும் அவன். சொற்களில் உற்சாகமில்லை. ”பூர்த்தியான வெற்றியில் தான் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி உண்டு’ என்று அவன் கூறிய பதிலில் சற்று எரிச்சலும் கலந்திருந்தது.

கவர்னர் டூப்ளே அவனை மீண்டும் குத்தும் முறையில் கேட்டார், ”ஆம்பூர் போரில் ஆற்காட்டு நவாப் அன்வருதீன் தலை தரையில் உருளவில்லையா?” என்று.

‘’ஆம். உருண்டது ஆகஸ்ட் 3-ஆம் தேதி” என்றான் புஸ்ஸி.

‘தேதியைக் கூட நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாய்” என்று சிலாகித்தார் டூப்ளே.

‘’முக்கிய தேதிகளை, நிகழ்ச்சிகளை நான் மறப்பதில்லை” என்றான் புஸ்ஸி.

‘அன்வருதீன் நமது எதிரி… அவனை அழித்துவிட்டோம்.”

“இல்லை.”

”இல்லையா”
ஆம், இல்லை. இந்த ஆற்காட்டு நவாபுகளை யாரும் அழிக்க வேண்டியதில்லை. அவர்களே ஒருவருக்கொருவர் கொன்று கொள்கிறார்கள்.”

”இருந்தாலும் பிரெஞ்சு உதவியில்லாவிட்டால் இது சாத்தியமல்ல.”

“ஆம்.

”இப்பொழுது நமது அடிமைகள், இல்லை இல்லை, நண்பர்கள் முஸபர்ஜங்கும் சந்தா சாகிபும் தட்சிண சுபாவையும் ஆற்காட்டையும் ஆளப் போகிறார்கள்.”

”ஏன் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்…”

”ஆனால்?” டூப்ளேயின் குரலோடு புருவங்களும் எழுந்தன கேள்வி கேட்கும் முறையில்.

”எத்தனை நாள் ஆளப் போகிறார்கள் என்பது தெரிய வேண்டும்” என்றான் புஸ்ஸி.

எதற்கும் நிதானத்தை இழக்காத டூப்ளே கூட அன்று நிதானத்தை இழந்தார். ”புஸ்ஸி! நன்றாகக் கேள். ஆற்காட்டு நவாப் அன்வருதீன் மாண்டுவிட்டான். அவன் மூத்த மகன் சந்தா சாகிபுவிடம் சிறையிலிருக்கிறான். இளைய மகனான ‘கம்பெனி நவாப்’ திருச்சிக்கு ஓடிவிட்டான்’ என்று சொல்லிக் கொண்டு போன டூப்ளே சிறிது இகழ்ச்சி நகை நகைத்தார்.

டி புஸ்ஸி அந்த நகைப்பில் கலந்து கொள்ளவில்லை. டூப்ளேயே மேற்கொண்டு பேசினார். ”தவிர, பிரிட்டிஷ் அட்மிரல் போஸ் கவானும் தமது கடற்படையுடன் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டு விட்டார். பிரிட்டிஷாரின் கடல் பலம் இப்போது மிகக் குறைவு. தட்சிணமோ நமது கையில் இருக்கிறது. தட்சிணத்தின் தலைவர்களான முஸபர்ஜங்கும் ஆற்காட்டு நவாப் சந்தாசாகேபும் இன்று நம்மைக் காண வருகிறார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட பிரெஞ்சு சாம்ராஜ்யம் இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட மாதிரி தான்” என்றார் டூப்ளே உணர்ச்சியுடன்.

இதற்குப் புஸ்ஸி பதில் சொல்ல வில்லை . “ஏன் வாளாவிருக்கிறாய்?” என்று வினவினார் டூப்ளே.

“இன்னும் தட்சிண சபாவின் நிஜாம் நாஸிர்ஜங்தான். அவனுக்கு மகாராஷ்டிரர் உதவி இருக்கிறது. பிரிட்டிஷார் தஞ்சை மன்னனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேவிக் கோட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருச்சிக் கோட்டை பலமானது. அதில் ஒளிந்து கொண்டிருக்கிறான் முகம்மது அலி. இந்த இடையூறுகள் இருக்கும் வரையில் பிரெஞ்சு வெற்றி – பூர்த்தியில்லை” என்று விளக்கினான் புஸ்ஸி.

அவன் சொல்வதில் விவேகம் இருந்த போதிலும் வெற்றிக்களிப்பிலிருந்த டூப்ளே, அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதே சமயத்தில் வெளியிலிருந்த பேரிகைகளும் சப்திக்கவே, ”புஸ்ஸி| முஸபர்ஜங்கும் சந்தாசாகிபும் வந்துவிட்டார்கள். வா, அவர்களை எதிர்கொள்வோம்” என்று கூறி, அந்த கிளம்பி மண்டபத்துக்கு வந்து தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார். புஸ்ஸி மட்டும் அவர் ஆசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டான். வெளியில் மீண்டும் பேரிகை முழங்கியது. ஆரவாரங்கள் பெரிதாகக் கேட்டன. பிரெஞ்சு ராணுவ வாத்தியங்கள் இன்னிசை பாடின. மெள்ள மெள்ளச் சந்தாசாகிபும், முஸபர்ஜங்கும் பல முஸ்லீம் பிரபுக்கள் புடை சூழ மண்டபத்துக்குள் நுழைந்தார்கள். அவர்களுடன் அவர்களுக்கு வெற்றி வாங்கித் தந்த பிரெஞ்சு ஜெனரல்களும் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் மண்டபம் நிரம்பியது.

”தக்ஷிண சுபேதார் நிஜாம் முஸபர்ஜங் ஆற்காட்டு நவாப் சந்தாசாகிப் உங்கள் இருவரையும் பிரெஞ்சு ஆட்சி வரவேற்கிறது. ஏற்கனவே இருந்த பிரெஞ்சு ஆற்காட்டு உறவு இன்று மீண்டும் உறுதிப்படுகிறது” என்று டூப்ளே மிகக் கம்பீரமான குரலில் அறிவித்தார்.

புது நிஜாமும், புது ஆற்காட்டு நவாபும் குனிந்து டூப்ளேக்குச் சலாம் செய்தார்கள். “இந்த நட்பு வளரப் போகிறது, நமது எதிரிகளின் வீழ்ச்சித் துவங்கிவிட்டது” என்றார் சந்தாசாகிப்.

”வாழ்க பிரெஞ்சு நட்பு” என்றார் முஸபர்ஜங்.

பின்பு டூப்ளே கையை அசைக்க, இரண்டு கிரீடங்கள் இஸ்லாம் அடையாளங்களுடன் பக்கத்து அறையிலிருந்து தங்க தாம்பாளங்களில் கொண்டு வரப்பட்டன. அந்தக் கிரீடங்களைத் தமது கைகளாலேயே டூப்ளே சந்தா சாகிப்பின் தலையிலும், முஸபர்ஜங் தலையிலும் கவிழ்த்து அலங்கரித்தார்.

அத்துடன் அந்தச் சபை முழுவதும் கவர்னரின் விருந்து மண்டபத்துக்கு நகர்ந்தது. விருந்து மண்டபத்தின் அலங்காரத் தையும் படாடோபத்தையும் கண்ட புது நிஜாமும், புது நவாபும் பிரமித்தனர். தவிர கவர்னர் தமது இருபக்கங்களிலிருந்த ஆசனங்களில் அவர்களை அமர்த்திக் கொண்டதும் பட்லர்கள் உணவுகளைப் பிளேட்டுகளில் பரிமாறினார்கள். ஆடு மாடுகள் அன்று பலியாகியிருந்தது உணவு முறைகளிலிருந்து புலனாயிருந்ததால் எல்லாரும் மகிழ்ச்சியுடன் உணவருந்தி னார்கள். கடைசியில் கண்ணாடிக் கோப்பைகளில் பரிமாறப்பட்ட குடிவகையறாக்களும் பிரமாதமாக இருந்தன. அத்தனையிலும் ஒரு விந்தை நடந்தது. சந்தா சாகிப் உணவை முடித்துக் கையைத் துடைத்துக் கொண்டதும் அவருக்கு ஒரு தனி பிளேட் துணியால் மூடப்பட்டு வந்தது. துணியை நீக்கிப் பார்த்த சந்தாசாகிபின் முகம் வெளுத்தது. பயத்தால் வியர்த்தது. பிளேட்டில் ஒரு சிறுக் காகிதத் துண்டு இருந்தது. அதிலிருந்தது ஒரே ஒரு வாக்கியந்தான். அல் அலீம் (ஜல்) என்ற வாக்கியத்தைக் கொண்ட அந்தச் சீட்டை எடுத்த சந்தாசாகிபின் கை நடுங்கியது.

Previous articleRaja Perigai Part 1 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here