Home Historical Novel Raja Perigai Part 2 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

41
0
Raja Perigai Part 2 Ch11 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch11 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 11. இரும்பு மனிதன்

Raja Perigai Part 2 Ch11 | Raja Perigai | TamilNovel.in

கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸ் ஸெயிண்ட் டேவிட் கோட்டைக்கு வந்ததிலிருந்து அங்கிருந்த நிலைமை அடியோடு மாறிவிட்டதை அந்தக் கோட்டையில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் புதுவையிலிருந்த பிரெஞ்சுக்காரரும் உணர்ந்து கொண்டார்கள். அவர் வந்ததும் வராததுமாக மதுபானமும் சீட்டாட்டமும் பெரிதும் அடங்கிவிட்டதையும் கோட்டையில் கெடுபிடி மிக அதிகமாகிவிட்டதையும் கோட்டையில் இருந்தவர்கள் கண்கூடாகக் கண்டதால், ‘கவர்னர் ப்ளாயர் காலத்திலிருந்த கோலாகலம் கவர்னர் ஸாண்டர்ஸ் காலத்தில் நடவாது’ என்று ஆங்காங்கு ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.

கவர்னர் ஸாண்டர்ஸ் தாம் வந்த அன்றே தாம் இன்னாரென்பதைச் சொற்களால் அறிவிக்கவில்லை; முகத்தாலேயே காட்டினார். கப்பலிலிருந்து இறங்கியதும் தமக்கு மரியாதை செய்ய அணிவகுத்து நின்ற ஆங்கில, ஸ்விஸ் சோல்ஜர்களைக் கூர்ந்து நோக்கினார். ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்தவனும் ஆங்கிலப் படையின் பிரதான கேப்டனுமான ஜின்ஜின்ஸ் முகத்தில் புன்சிரிப்பைக் காட்டிக் கூறிய வரவேற்பு மொழிகளை மிகுந்த வெறுப்புடனும் மௌனத்துடனும் ஏற்றுக் கொண்டார் கவர்னர் ஸாண்டர்ஸ்.

பிறகு ராணுவ நடை நடந்து கோட்டையை நோக்கிச் சென்ற போது அப்புறமும் இப்புறமும் கண்களைச் செலுத்திக் கொண்டே சென்றதையும், அப்படிச் செலுத்திய சமயங்களிலெல்லாம் அவர் முகத்தில் அருவருப்பு அதிகமாயிருந்ததையும் காப்டன் ஜின்ஜின்ஸும் மற்ற சோல்ஜர்களும் கண்டாலும், ஏதும் பேசாத அந்த மௌன கவர்னரைப் பின் தொடர்ந்து, ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்ற வடமொழிப் பழமொழியில் எத்தனை உண்மையிருக்கிறது என்பதை வலியுறுத்த, அவர்களும் பேசாமலே கவர்னரைத் தொடர்ந்தார்கள். கோட்டையை அடைந்து கவர்னர் தமது மாளிகைக்கு வந்ததும், காப்டன் ஜின்ஜின்ஸும் மற்றவர்களும் தம்மைத் தொடர அவசியம் இல்லையென்பதை அறிவுறுத்தத் தமது கையை மட்டும் அசைத்துச் சைகை செய்துவிட்டு மாளிகைக்குள் நுழைந்து விட்டார்.

அவர் மாளிகைக்குள் நுழைந்து சென்ற பிறகு தனது சோல்ஜர்களை, ”டிஸ்மிஸ்!” என்று உத்தரவிட்ட ஜின்ஜின்ஸ் அந்த மாளிகை வாயிலையே பார்த்துக் கொண்டு நின்றான். ”இவருக்கு இங்கு வந்ததில் அதிகத் திருப்தியில்லை போலிருக்கிறது?” என்று பக்கத்திலிருந்த காப்டன் கோப்பை நோக்கிக் கேட்கவும் செய்தான்.

“இங்குள்ள உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ள யாருக்குத் தான் திருப்தியிருக்கும்?” என்று காப்டன் கோப் வினவினான்.
அன்று காலையிலிருந்து இது வரை ஸெயின்ட் டேவிட் கோட்டையிலிருந்த சோல்ஜர்களும் சிப்பாய்களும் புது கவர்னரின் சிடுமூஞ்சித்தனத்தைப் பற்றியே பேசிக் கோண்டார்கள். அவர் அடுத்த இரண்டு நாட்கள் மாளிகையை விட்டு வெளிவராதது, அவர்களது முடிவை ஊர்ஜிதப்படுத்தவே செய்தது. ஆனால் மூன்றாவது நாளிலிருந்து, புதிதாக வந்திருக்கிற கவர்னர் ப்ளாயரைப் போல் கலகலப்போ சோம்பேறித்தனமோ உள்ளவர் அல்லவென்பதையும், இதயத்தில் கடினம் மிக்க ஓர் இரும்பு மனிதருடன் தாங்கள் பழக வேண்டிருப்பதையும் சந்தேகமற உணர்ந்து கொண்டார்கள்.

மூன்றாவது நாள் விடியற்காலை ஐந்து மணிக்கு ஓசைப் படாமல் பூனை போல் வந்த கவர்னரைக் கவனிக்காமல் ஒரு சாய்வு நாற்காலியில் கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு படுத்திருந்த காப்டன் ஜின்ஜின்ஸ் கவர்னர் அருகில் வந்ததுமே அலறிப் புடைத்து எழுந்திருந்து மிலிடரி சல்யூட் அடித்தான்.

கவர்னர் ஸாண்டர்ஸ் பூரண ராணுவ உடையில் கையில் ஒரு சிறு பிரம்புடன் அவனெதிரே அவனைப் பல விநாடிகள் நோக்கிக் கொண்டே நின்றார். அந்த மௌனத்தின் சங்கடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற காப்டன் ஜின்ஜின்ஸ், ”யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் உலாவ வருவது எனக்குத் தெரியாது” என்றான் நடுக்கத்தைக் காட்டி.

ஸாண்டர்ஸ் அதற்குப் பதிலேதும் சொல்ல வில்லை. தமது பையிலிருந்த ஒரு வெள்ளிக் கெடிகாரத்தை எடுத்து மணியைக் கவனித்தார். அதைத் திருப்பி ஜின்ஜின்ஸிடம் காட்டினார்.

”எஸ் யுவர் எக்ஸலென்ஸி. இப்போது காலை ஐந்து மணி” என்று அறிவித்தான் மரியாதையுடன்.

”எஸ். இது பரேட் டைம். சோல்ஜர்கள் அணிவகுத்து நடை போடும் சமயம்…” என்று கூறிய கவர்னர் சாய்வு நாற்காலியைச் சுட்டிக் காட்டி, ”வாட் ஈஸ் திஸ்?” என்று வினவினார்.
”ஈஸி சேர்” என்று அறிவித்தான் ஜின்ஜின்ஸ்.

”வீ ஆர் நாட் ஹாவிங் ஆன் ஈஸி டைம் ஹியர் (இங்கு நமது நிலை அத்தனை சுலபமானதல்ல)” என்று கூறிவிட்டு, தமது கைகளாலேயே காப்டன் ஜின்ஜின்ஸின் சாய்வு நாற்காலியை எடுத்து மடித்துக் கீழே போட்டுவிட்டுக் கடற்கரையை நோக்கி ஒரே சீராக நடை போட்டுத் தாம் சோல்ஜரென்பதைக் காட்டிக் கொண்டு சென்றார்.

நடந்தது இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. அன்றிரவு சோல்ஜர்களின் சாப்பாட்டுக் கூடத்தில் கவர்னர் திடீரென நுழைந்து சோல்ஜர்களுடன் தாமும் உணவருந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். கவர்னர் வந்ததால் அனைவரும் எழுந்து அணிவகுப்பு நிலையில் நின்றார்கள். கவர்னர் அவர்களை உட்காரச் சொல்லிக் சைகை மட்டுமே காட்டிப் பட்லரை உணவு தமக்கும் பரிமாறும்படி சிரக் கம்பத்தால் உத்தரவிட்டார். முதலில் அவருக்கு விஸ்கியை ஓர் அழகிய கிளாசில் ஊற்றிக் கொடுத்த பட்லரைக் கவர்னரின் ஈட்டிக் கண்கள் நோக்கின. பிறகு, ”இது அதிகம். இன்று முதல் உணவுடன் மதுபானம் அளவுடன் பரிமாற வேண்டும்” என்று உத்தரவிட்டு, சாப்பிடு முன்பு எத்தனை மது அருந்தலாம் என்பதை நிரூபிக்கத் தமது கிளாசிலிருந்த விஸ்கியில் பாதியை வேறொரு கிளாசியில் ஊற்றி, காப்டன் ஜின்ஜின்ஸிடம் நீட்டினார். பிறகு அனைவருடன், ‘டு ஹிஸ் மெஜஸ்டி தகிங்’ என்று கூறிவிட்டு ஒரே உறிஞ்சில் விஸ்கியைப் பருகினார். பிறகு எதையோ கவனிக்கச்சுற்றுமுற்றும் நோக்கினார்.

”யுவர் எக்ஸலென்ஸி என்ன தேவை?” என்று வினவினான் காப்டன்ஜின்ஜின்ஸ்.

“இங்கு யாரும் சிப்பாய்கள் இல்லையே?” என்றார் ஹிஸ் எக்ஸலென்ஸி.

‘’அவர்கள் உணவுக் கூடம் தனி” என்றான்ஜின்ஜின்ஸ்.

கவர்னர் அதற்குமேல் ஏதும் பேசாமல் அவர்களுடன் உணவருந்திவிட்டுச் சென்றார். அவர் சென்றதைப் பிரமிப்புடன் கண்ட சோல்ஜர்களுக்கு மறுநாள் அதைவிட அதிகப் பிரமிப்புத் தரும் செய்தி கிடைத்தது. கவர்னர் சம்பிரதாயத்தை அடியோடு உடைத்து விட்டதையும் அவர் சுதேசி சிப்பாய்களுடன் அவர்கள் உணவுக் கூடத்தில் உணவருந்தியதையும் பற்றிக் கேள்விப் பட்டதும், உண்மையிலேயே வெள்ளைக்கார சோல்ஜர்கள் கொதிப்படைந்தார்கள். அதைப்பற்றித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தீர்மானித்துக் கவர்னரிடம் ஜின்ஜின்ஸை அனுப்பினார்கள்.

காப்டன் ஜின்ஜின்ஸ் தான் வருவதை அறிவித்துவிட்டுக் கவர்னர் அனுமதி கிடைத்ததும் அவர் அறைக்குள் நுழைந்த போது, கவர்னர் நெட்டுக்குத்தாக விறைத்து உட்கார்ந்து கொண்டு ராணுவ தஸ்தாவேஜுகளைப் புரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். நீண்டநேரம் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலிருந்த கவர்னர், ஏடுகளிலிருந்து கண்களை உயரத் தூக்கிக் கண்களாலேயே, ”என்ன விசேஷம்?” என்று கேள்வியை எழுப்பினார்.

காப்டன் ஜின்ஜின்ஸ் ஹாட்டைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு அதன் ஓரங்களைப் பிடித்து நடுங்கும் விரல்களுடன் திருப்பினான். பிறகு மெள்ளத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இங்குள்ள பிரிட்டிஷ் சோல்ஜர்கள்…” என்று துவங்கி மேலே பேச முடியாமல் தயங்கினான்.
கவர்னர் மௌனமாக அவனைத் தமது ஈட்டிக் கண்களால் நோக்கிக் கொண்டிருந்தார். மேலே சொல்லலாம் என்ற அனுமதி அவர் பார்வையிலிருந்தது. ஆகவே தொடர்ந்து ஜின்ஜின்ஸ், ”தாங்கள் சுதேசி சிப்பாய்களுடன் பழகுவதை விரும்பவில்லை” என்று சொல்லி முடித்தான்.

”ஐ ஸீ” என்ற கவர்னரின் இதழ்களில் அவர் பார்வையை விடக் கடுமையான புன்முறுவல் விரிந்தது.

”இது சம்பிரதாய விரோதம் என்று பிரிட்டிஷ் சோல்ஜர்கள் கருதுகிறார்கள்” என்றான்ஜின்ஜின்ஸ்.

”யூ ஆர் பிரிட்டிஷ்?”(நீ பிரிட்டிஷ்காரனா?)” என்றார் கவர்னர்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் ஜின்ஜின்ஸ் விழித்தான். பிறகு, ‘நான் அவர்கள் சார்பில் பேச வந்திருக்கிறேன்” என்றான் தட்டுத் தடுமாறி. ”நாம் சுதேசிகளுடன் நெருங்கிப் பழகக்கூடாதென்பது பழைய கவர்னரின் அபிப்பிராயம். நாம் உயர்ந்தவர்கள், வெள்ளையர் கறுப்பர்களுடன் சகவாசம் நமது கௌரவத்துக்கு உகந்ததல்லவென்று பழைய கவர்னர் சொல்லியிருக்கிறார்.”

கவர்னர் தொடர்ந்து மௌனம் சாதித்தார். கையிலிருந்த ராணுவ தஸ்தாவேஜுகளைப் புரட்டினார். திடீரென ஓரிடத்தில் நிறுத்தி, ”யாரது பிரதாப் சிங்?” என்றார்.

”தஞ்சாவூர் ராஜா.”

”நேடிவ்? (சுதேசியா?)”

”எஸ்’’

”முகம்மது அலி?”

”அவரும் சுதேசி…”

”அவர்கள் நட்பு எதற்கு?”

”அவர்கள் நட்பு இல்லாமல் நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைப் பரவச் செய்ய முடியாது.”

“அப்படியானால் அவர்களுடன் பழக வேண்டாமா?”
ஜின்ஜின்ஸ் மேற்கொண்டு பேசவில்லை. பேசா மடந்தையாக நீண்ட நேரம் நின்றான். அவன் போகலாமென்று ஸாண்டர்ஸ் சைகை செய்தார்.

ஏதும் பேசாமல் ஜின்ஜின்ஸ் மற்ற வெள்ளைக்கார சோல்ஜர்கள் இருந்த இடத்திற்கு வந்தான் மிகுந்த வெறுப்பை முகத்தில் காட்டிய வண்ணம். “என்ன சொன்னார் கவர்னர்?” என்று பல சோல்ஜர்கள் ஒரே குரலில் வினவினார்கள்.

அது வரை அடக்கி வைத்திருந்த சீற்றத்தை அவர்கள் மீது திருப்பினான் காப்டன் . ”நம்மை நமது வேலையைப் பார்க்கச் சொன்னார்” என்று சீறி விழுந்தான்.

”சம்பிரதாயம்?”

‘குப்பையில் கொட்ட சொன்னார்” என்று எரிந்து விழுந்த ஜின்ஜின்ஸ், தனக்கும் கவர்னருக்கும் நிகழ்ந்த உரையாடலைத் தெரிவித்தான்.

அதை கேட்ட சோல்ஜர்கள் வியப்பும் ஆத்திரமும் அடைந்தார்கள்.

அன்று பகல் அதிக ஆத்திரமூட்டும் செய்தி கிடைத்தது கவர்னரிடமிருந்து. கவர்னரின் மெய்காப்பாளரில் ஒருவன் அவர்கள் உணவருந்தும் நேரத்தில் வந்து அந்த உணவுச்சாலையின் சுவரில் ஒரு நீண்ட காகிதத்தை ஒட்டினான். அதில் பிரதி தினமும் கோட்டையின் நிகழ்ச்சிகள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப்பற்றி மணிக்கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘நாலரை மணிக்கு ப்யூகில், 5 மணிக்கு சோல்ஜர்கள் அணிவகுப்பு, 8மணி சிற்றுண்டி, 9 மணிக்குத்துப்பாக்கி பீரங்கிப் பயிற்சி, 12 மணிக்கு உணவு, ஓய்வு; 2 மணிக்கு மீண்டும் ராணுவப் பயிற்சி, 4 மணிக்கு மாலை ட்ரில், 3 மணிக்கு மேல் கவர்னர் அனுமதியுடன் கோட்டையை விட்டு ஊருக்குள் யாராவது நான்கு பேர் செல்லலாம். இரவு 10 மணிக்குப் படுக்கை’ என்று தினசரி நடவடிக்கைகள் குறிப்பிடப் பட்டிருந்தன. அத்துடன் கவர்னரை, யாரும் பகல் 1 மணிக்குச் சந்திக்கலாம் என்றும் ஒரு குறிப்பும் இருந்தது.

இந்தக் காகிதத்தைச் சுவரில் ஒட்டிய மெய்காப்பாளன் அதே மாதிரி நான்கு காகிதங்களுடன் சிப்பாய்கள் உணவு விடுதிக்கும் சென்றான். அன்றிரவு சோல்ஜர்கள் பாசறையிலும் சிப்பாய்களுடன் பாசறையிலும் இதைப் பற்றிப் பலபடி விவாதம் நடந்தது. ஆனால் கவர்னரும் அந்தக் கட்டுப்பாட்டுகளை ஏற்று நடப்பதைக் கண்டதும் சோல்ஜர்கள் சிறிது ஆறுதலடைந்தார்கள்.

காலை ஐந்து மணிக்குச் சரியாக ராணுவ உடையுடன் வந்த ஸாண்டர்ஸ் அணிவகுப்பையும் அதைத் தொடர்ந்து பீரங்கிப் பிரயோகப் பயிற்சியில் தாமும் பங்கெடுத்துக் கொண்டார். இப்படி அவர் துப்பாக்கிச் சுட்டுக் கொண்டிருந்த ஒரு நாள் ஒரு பொதி வண்டித் தொடர் கோட்டைக்குள் நுழைந்தது. அவற்றை அழைத்துக் கொண்டு அவற்றுக்கு முன்னால் புரவியில் மராட்டிய உடையணிந்த ஒருசுதேசி வீரன் வந்தான்.

வண்டிச்சாரி எட்ட நிறுத்தப்பட்டது. அந்த வீரன் மட்டும் கவர்னரை அணுகி ராணுவ முறையில் ஸல்யூட் அடித்தான். கவர்னர் துப்பாக்கிப் பயிற்சியை ஒரு விநாடி நிறுத்தித் திரும்பி நோக்கினார்.

“நான் விஜயகுமாரன்” என்றான் வந்தவன்.

”அப்படியா?” என்றார் கவர்னர், கண்களில் சிறிது சிரத்தை ஒளியை வெளியிட்டு.

”யுவர் எக்ஸலென்ஸி என்னை உங்களுக்குத் தெரியாது’ என்றான் விஜயகுமாரன்.

“தெரியும்” என்றார் கவர்னர்.

இதைக் கேட்ட விஜயகுமாரன் ஒரு விநாடி பிரமித்தான். பிறகு, ”லெப்டினண்ட் கிளைவின் உத்தரவுப்படி….” என்று ஏதோ சொல்ல முற்பட்டான்.

கவர்னரின் ஒரே பார்வை விஜயகுமாரனை ஸ்தம்பிக்கச் செய்தது. “சோல்ஜர்…” என்று குறிக்கிட்டான் விஜயகுமாரன்.

“நீ போரிடுகிறாயா?”

“ஆம்.”

”அப்படியானால் சிப்பாய்க்கும் சோல்ஜருக்கும் பணி ஒன்றுதான். ஆனால் ஒரு விஷயம் நீ புரிந்து கொள்ள வேண்டும்.”

”என்ன விஷயம்?”

”அதிகாரிகளின் பதவிகளைச் சரியாக உச்சரிக்க வேண்டும்.”

“எதைத் தவறாக உச்சரித்தேன்?”

கவர்னர் ஒரு விநாடி யோசிப்பதாகப் பாசாங்கு செய்தார். “டிட் யூ ஸே லெப்டினண்ட் கிளைவ்” என்ற கவர்னர் மீண்டும் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபடத் துப்பாக்கியில் மருந்தைத் திணித்தார்.

அந்தச் சமயத்தில் அங்குத் தோன்றிய கிளைவ், ”யுவர் எக்ஸலென்கஸி, ”லெப்டினண்ட் கிளைவ் ரிபோர்ட்டிங்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கோண்டார்.

”எஸ் காப்டன் கிளைவ்?”

“எப்போது காப்டனானேன்?”

”சற்று முன்பு.”

”எனக்கு அறிவிக்கப்படவில்லையே!”

“நீ நேரில் வராததால்… என்ற கவர்னர், ”கம் வித் மி” என்று கிளைவை அழைத்துக் கொண்டு தமது மாளிகையை நோக்கிச் சென்றார். தமது அறைக்குள் நுழைந்ததும் தமது மேஜை அறையைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்துக்காட்டினார்.
அதைக் கண்டதும் கிளைவ் பெருவியப்படைந்தான். ”இதனால் எனக்குப் பண நஷ்டம் ” என்றான்.

‘பிரிட்டனுக்கு லாபம்” என்ற கவர்னர் ஸாண்டர்ஸ் தமது கண்களைக் கிளைவின் கண்களுடன் கலந்தார். ஓர் இரும்பு மனிதனைத் தான் சந்தித்து விட்டதைக் கிளைவ் உணர்ந்தான்.

Previous articleRaja Perigai Part 2 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here