Home Historical Novel Raja Perigai Part 2 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 2 Ch13 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch13 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 13. புதுக்கதை

Raja Perigai Part 2 Ch13 | Raja Perigai | TamilNovel.in

இப்படியொரு கேள்வியைப் புதுக் கவர்னர் கேட்பா ரென்பதை விஜயகுமாரன் சொப்பனத்தில் கூட எண்ணிப் பார்க்காததால் பதில் சொல்ல திராணியற்றுப் பல விநாடிகள் திகைத்து நின்றுவிட்டானென்றால், எதற்கும் அசையாத கிளைவின் நிலையும் விஜயகுமாரன் நிலையை விட எந்த விதத்திலும் வித்தியாசப் படவில்லை . ஆகவே அவனும் பிரமை தட்டிய விழிகளைக் கவர்னரின் மீது நாட்டவே செய்தான். கவர்னர், கிளைவை அடியோடு புறக்கணித்து விஜயகுமாரனை நோக்கி, “உன்னை ஒரு கேள்வி கேட்டேன்” என்று தமிழில் சொன்னார்.

அவர் கேள்வியை விடத் தமிழைக் கவனித்ததால் அதிக அதிசய வசப்பட்ட விஜயகுமாரன், “நீங்கள் நன்றாகத் தமிழ் பேசுகிறீகள்” என்று சிலாகித்தான்.

கவர்னர் அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. ”எந்தக் காரியத்தை ஒரு மனிதன் மேற்கொண்டாலும் அதற்குத் தன்னைத் தகுதி ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்று ஒரு பெரிய சித்தாந்தத்தைச் சொன்னார்.

‘’தாங்கள் இங்கே கவர்னராக வரப் போவது…” என்றான் சற்றுத்தயக்கத்துடன் விஜயகுமாரன்.

”முன்னதாகத் தெரியாது. இந்த ஸப் காண்டினண்டில்… ஐ ஆம் ஸாரி…. இந்த உப கண்டத்தில் நடக்கும் விஷயங்கள் சில வருஷங்களாகப் பிரிட்டனில் பெரிதும் அடிபடுகின்றன. நம்முடைய பலவீனமும் புத்திக் குறைவும் டூப்ளேயினுடைய திறமையும் யுக்தியும் வெற்றிகளும் பகிரங்கமாகப் பேசப்படுகின்றன. ஆகையால் இந்த நாட்டுக்கு வருவதென்று தீர்மானித்தேன். தீர்மானித்ததும் தமிழும் ஹிந்துஸ்தானியும் இங்கிருந்து வரும் வணிகரிடம் அரை குறையாகப் பயின்றேன். பிறகு மெள்ள மெள்ளத் திருத்தி மொழி உச்சரிப்பைச் சரிப்படுத்திக் கொண்டேன். இங்கே புது கவர்னரை அனுப்ப முயற்சி நடந்த போது ஒருவன் தான் அதற்குத் தகுதியாயிருந்தான். பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி டைரக்டர்கள், போர் முறைகளிலும் வாணிபத்திலும் இந்த நாட்டு மொழிகளிலும் ஓரளவு பயிற்சியுள்ளவர்களைத் தேடினார்கள். நான் தான் கிடைத்தேன்…” என்று சொல்லிக் கொண்டு போன ஸாண்டர்ஸ் சட்டென்று தமது சரிதையை நிறுத்தி, ”கம்பெனி சீப் டைரக்டர் என்னை என்ன கேட்டார் தெரியுமா?” என்று வினவினார், இம்முறை கிளைவை நோக்கி.

”என்ன யுவர் எக்ஸலென்ஸி?” என்றான் கிளைவ், கவர்னர் இங்கு வருமுன்பு செய்து கொண்ட முன்னேற்பாட்டினால் பெருவியப்படைந்து.

கவர்னரின் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியது. “இங்குள்ள கன்ஃப்யூஷனை… இதற்குச் சரியான தமிழ்? எஸ்… எஸ்… குழப்பத்தை, குளறுபடிகளைச் சரியாக்க முடியுமா என்று கேட்டார்கள்” என்று புன்னகையின் ஊடே அறிவித்தார்.

”தாங்கள்.?” என்று கிளைவ்துவக்கினான்.

“முடியும் என்று பதில் சொல்லவில்லை.”

“வேறு என்ன சொன்னீர்கள்?”

”பிரெஞ்சு பலத்தை ஒடுக்குவதாகச் சொன்னேன்” என்ற கவர்னர், தாம் அதிகம் பேசிவிட்டதை உணர்ந்து, ”ஸோ ஐ ஸட்டீட் த டஸ்பாசஸ் ஃப்ரம் ஹியர்’ என்று ஆங்கிலத்தில் இறங்கி, ‘இங்குள்ள கதையின் நுணுக்கங்களை அறிந்து தான் வந்தேன்” என்று முடித்தார். முடித்து எதிரேயிருந்த இருவரையும் ஒரு முறை மாறி மாறி நோக்கினார்.

அதற்கு மேல் கிளைவ் ஏதும் பேசாவிட்டாலும் விஜயகுமாரன் மட்டும் கேட்டான், ”நான் சந்தா சாகேபைக் கொல்லப் போவதாக யார் சொன்னது உங்களுக்கு?” என்று.

கவர்னர் அவன் கேள்வியை காதில் வாங்கிக் கொண்டாலும் அதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல வில்லை; ”யூ ஆர்லைக்மி’ என்று மட்டும் பதில் சொன்னார்.

அந்தப் பாராட்டுதலைக் கேட்ட விஜயகுமாரன் தலை வணங்கி, ‘ஹௌயுவர் எக்ஸலென்ஸி?” என்று ஆங்கிலத்திலேயே கேட்டான்.

”உனக்குப் பிரெஞ்சு மொழித் தெரியுமா?”

“தெரியாது.”

”தென்யூ ஆர் நாட் குட்.”

”யுவர் எக்ஸலென்ஸி’ என்ற விஜயகுமாரன் குரலில் சிறிது சினம் தெரிந்தது.

கவர்னர் அவன் சினத்தை லட்சியம் செய்யாமல் அவனைக் கூர்ந்து நோக்கி விட்டுச் சொன்னார். “நீ எங்களிடம் சேர இங்கிலீஷ் பழகியிருக்கிறாய். தட் ஈஸ் குட். ஆனால் சந்தாசாகேபை அழிக்க பிரெஞ்சு மொழி பழகவில்லை . தட் ஈஸ் பாட். நாம் யாரை நசுக்கப் பார்க்கிறோமோ அவர்களுடைய போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். போக்கைப் புரிந்து கொள்ள மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும். நீ சந்தா சாகேபைக் கொல்லத் தீர்மானித்திருக்கிறாய். அது தவறல்ல. அவர் உன் தாயைக் கொன்றிருக்கிறார்.”

விஜயகுமாரன் கண்கள் பெரியதாக மலர்ந்தன. வாயை இரு முறை திறந்து மூடினாலும் சொற்கள் வெளிவரவில்லை. கவர்னரே விளக்கினார் மேற்கொண்டு. ”சந்தா சாகேப் உன் தாயார் ராணி மீனாட்சியை நேரிடையாகக் கொல்ல வில்லை. ராணி மீனாட்சியை சந்தா சாகேப் காப்பதாகச் சத்தியம் செய்தார். ஆனால் சத்தியத்தை மீறினார், அவளைச் சிறையிட்டார். அதனால் அவள் தற்கொலை புரிந்து கொண்டாள் என்ற ஒரு கதை உலாவுகிறது பிரிட்டனில். அவளுக்கொரு வளர்ப்பு மகன் இருந்ததாகவும் அவன் பெயர் விஜயகுமாரன் என்றும் பேசிக் கொண்டார்கள். ஐ ரிக்காடட் தட் ஸ்டோரி இன் மை மைண்ட். அப்படியொருவன் இருந்தால் அவனை ஒரு கருவியாகக் கொண்டு சந்தா சாகேபையும் அவர் மூலம் பிரெஞ்சுபலத்தையும் அழிக்கலாமென இங்கிலாந்திலேயே திட்டம் போட்டேன். யூ ஸி தேர் ஈஸ் நோ பெட்டர் வெபன் தான் எ டிட்டர்மிண்ட் மான் (உள்ளத்தில் ஒரு தீர்மானத்தை ஏற்படுத்திக் கொண்ட மனிதனைவிட பெரிய ஆயுதம் கிடையாது எதிரிகளைத் தொலைக்க). ஸோ ஐ டிஸைடட் டு யூஸ் யூ.’ அத்துடன் முடிக்கவில்லை, கவர்னர். ”அண்ட் யூ (உன்னையுந்தான்)” என்று கிளைவையும் நோக்கி ஆள்காட்டி விரலைக்காட்டினார்.

கிளைவோ, விஜயகுமாரனோ நீண்ட நேரம் பேசவில்லை. கவர்னர் மீண்டும் தனது நாற்காலிக்குச் சென்று அமர்ந்து கொண்டு இருவரையும் நோக்கிய வண்ணம் மௌனம் சாதித்தார். அறையில் பல விநாடிகள் நிலவிய அந்த மௌனத்தைக் கிளைவ் கலைத்தான். ”என்னை எப்படி உபயோகப்படுத்த உத்தேசம்?” என்று வினவினான்.

”என் பிரதிநிதியாக” என்றார் கவர்னர். ”நான்காப்டனாகி ஒரு மணி நேரங்கூட ஆகவில்லை.”

”நேரம் வீரனைச் சிருஷ்டிப்பதானால், புத்திசாலிகளை சிருஷ்டிப்பதானால், கிழவர்கள் அத்தனை பேரும் வீரர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்” என்றார் கவர்னர்.

“எனக்கு அதிக ராணுவ அனுபவம் கிடையாது.”

“மூளையிருக்கிறது. வெற்றிக்கு அது தான் முக்கியம்.”

கிளைவ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கவர்னர் தாமதிக்காமல் உத்தரவுகளைப் பிறப்பித்தார். ”கிளைவ் நீ சென்னை சென்று அங்குள்ள கோட்டையைத் திடப்படுத்து. பிரெஞ்சு ஒற்றர்கள் கோட்டையிலிருந்ததால் சுட்டுவிடு. சுதேசிகளைத் தேவையான அளவு சேர்த்துக் கொள். அவர்களுக்கு நமது போர் பயிற்சியை அளி. அங்கு ஒரு பலமான ராணுவம் தேவை நமக்கு. விஜயகுமார்/ நீ தஞ்சைக்குச் செல். தஞ்சை அரசரிடம் நாம் அவரை முழுமூச்சுடன் காப்பதாகச் சொல். அதிக நாள் அங்கேதாமதிக்காதே. அங்கே யாரோ ஒரு பெண் இருப்பதாக நேற்று ஆர்டர்லி சொன்னான். ஐ டோண்ட் மைண்ட் யுவர் லவ் அஃபேர்ஸ். இருந்தாலும் இப்போது போர் முக்கியம். லவ் கேன் வெய்ட். அங்கிருந்து ஆற்காட்டுக்கு அப்பாலுள்ள மலைச் சாரலுக்குச் செல். அங்கு முராரிராவைச் சந்தித்து, புதிய கவர்னர் அவருக்கு ஆதரவு அளிப்பார் என்று என் சார்பில் உறுதி கூறு. தட்ஸ் ஆல்.”

இந்தச் சமயத்தில் விஜயகுமாரன் ஒரு சந்தேகம் கேட்டான். ”நாம் தஞ்சை மன்னருக்குப் பல சமயங்களில் உதவ மறுத்திருக்கிறோம். சந்தாசாகேபும் முஸபர் ஜங்கும் ஆதுனில், க்விஸ்னோ இவர்களுடன் தஞ்சையை முற்றுகையிட்டபோதுகூட பிரிட்டிஷார் கையை அசைக்க வில்லை.. தஞ்சை மன்னரிடம் நான் என்ன சொல்ல?”

”கதை மாறிவிட்டதென்று சொல். வெகு சீக்கிரம் வால் கொண்டா, வேலூர், ஆற்காடு அனைத்தும் தாக்கப்படும் என்று கூறிவிடு.”

கிளைவ் பேச நா எழாமல் நின்றான். “நமது நடுநிலைமைக் கொள்கை பாதிக்கப்படும்” என்றான் மெல்ல.

“இரண்டு புலிகளுக்கிடையில் மனிதன் இருப்பது தான் நடுநிலைக் கொள்கை. ஒன்று மனிதன் அவற்றை அழிக்கிறான்; இல்லையேல் அவன் அழிந்து போகிறான்” என்று ஓர் உவமையைக் கூறிய கவர்னர், அவர்கள் இருவரும் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்து விட்டு, ”ஆர்டர்லி!” என்று அழைத்தார்.

ஆர்டர்லி தலையை நீட்டினான். ”காப்டன் கிளைவும் லெப்டினன்ட் விஜயகுமாரும் கிளம்புகிறார்கள். கெட் மை ப்ரெக் பாஸ்ட்” என்று இரும்புக் குரலில் உத்தரவிட்டார். அத்துடன் எழுந்திருந்து, “தாங்யூ ஜென்டில்மென்” என்றார்.

புதுக் கவிதைத் தொடங்குவதைக் காப்டனும், லெப்டினண்டும் சந்தேகமற அறிந்தார்கள்.

Previous articleRaja Perigai Part 2 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here