Home Historical Novel Raja Perigai Part 2 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

46
0
Raja Perigai Part 2 Ch14 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch14 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 14. பிரதிநிதி

Raja Perigai Part 2 Ch14 | Raja Perigai | TamilNovel.in

தஞ்சை அரண்மனையின் மூன்றாவது உப்பரிகையின் தனிப்பெரும் அறையொன்றைச்சாளரத்தின் மூலம் எட்டிப் பார்த்த முழுமதி துன்பப் பெருமூச்சு விட்டான். இல்லாவிட்டால் தன் குளிர் கிரணங்களைத் தென்றலுடன் கலந்து அனுப்புவானா? அனுப்பினாலும் பஞ்சணையில் படுத்துக் கிடந்த பைங்கிளி நந்தினியின் உடலைக் குளிர்க்கிரணங்களால் தழுவத்தான் தழுவுவானா? தழுவினவன் தன் வல்லமையின் எல்லையை உணரத்தான் செய்தானா? இல்லையே!

ஓராண்டுக் காலமாக அந்தக் கட்டழகியின் உள்ளத்தைக் குளிரச் செய்ய இம்மாதிரி முயன்று முயன்று தோற்றுப் போனவன் மீண்டும் ஏன் அதே முயற்சியில் ஈடுபடுகிறான்? உடல் குளுமைப்பட்டுவிடும் என்ற வீண் நினைப்பினால் விடாமுயற்சியில் இறங்கினானா, அல்லது காலத்தின் நடையும் தன் கிரணத்தின் வலுமையும் இணைந்தால் அவள் இதயத்தை இன்பத் தடாகமாக அடித்துவிட முடியும் என்ற வீண் பிரமையால் அவள் உடலை மீண்டும் தடவிக் கொடுத்தானா? பலன் எப்படியானாலும் அவனுக்கு அந்தக்கட்டழகியிடம் மிகுந்த ஆசை இருக்க வேண்டும். ஆகையால் தான் அன்று கூட அவள் மீது பூர்ணமாகத் தன் கிரணங்களை ஏவினான். இப்படித்தானே கலையிழந்தான் முன்பு? மீண்டும் எதற்காக அந்தத் துர்புத்தி அவனுக்கு? ஆனால் புத்தி யாருடைய இஷ்டப்படி இயங்குகிறது? புத்தி கர்மானுஸாரேண என்று கர்மத்தின் வழியே அது இயங்குகிறதல்லவா?

ஆனால் திடீரென்று தனம் கிடைத்த மனிதன் அடுத்தபடி காத்திருக்கும் அனர்த்தத்தை எண்ணிப் பார்க்காதது போலப் பூர்ணமாகக் கலைகளைப் பெற்ற முழுமதி மறுநாள் முதல் கலையை இழக்கப் போகிறோமே என்ற நினைப்பு சிறிதுமின்றி, தனது செயலைத் திறம்படவே செலுத்தினாலும், பஞ்சணையில் கிடந்த நந்தினி அவன் செய்கையால் சிறிதும் பாதிக்கப்பட்டாளில்லை. தன்மீது விழுந்திருந்த பட்டு நிலவை அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லையாதலால் அது தன் மேனிக்கு எத்தனை அழகைத் தந்திருக்கக் கூடும் என்ற யோசனையும் சிறிதுமில்லை அவளுக்கு. யோசனை அவளுக்கு இல்லாவிட்டாலும் அந்த அறை வாசலில் ஆஜானுபாகுவாக நின்றிருந்த உருவத்துக்கு இருக்கவே செய்தது.

பளிங்கு நிலவில் வெளேரென்று கிடந்த நந்தினியின் உருவம் பெரிதும் இளைத்து விட்டதைக் கவனித்த அந்த உருவம் தன்னையே வெறுத்துக் கொண்டதற்கு அடையாளமாக அதன் கண்களில் ஒரு மந்தச் சாயையும் பெருத்த மீசையின் கீழிருந்த வலுத்த, உதடுகளில் ஒரு மடிப்பும் காணப்பட்டன. அதன் விளைவாக விசாலமான வதனத்தில்கூடத் துன்பச் சாயை பிரதிபலிக்கத்தான் செய்தது. எந்தத் துன்பத்தையும் தாங்கவல்ல அந்தத் திடச்சரீரமும் மனமும் இந்தக் குழந்தையின் வேதனையை, வேதனை விளைவித்த இளைப்பைத் தாங்க முடியாமல் தவித்தனவென்பதை அது நின்றிருந்த தோரணையே நிரூபித்தது. இப்படி நீண்ட நேரம் நின்றிருந்த உருவத்தை அதற்குப் பின்னாலிருந்த மற்றோர் உருவம், “நேரமாகிறது. அரசகுமாரியை எழுப்புங்கள்” என்று கூறவே, திடகாத்திர உருவம் பஞ்சணையை நோக்கி மெள்ள நகர்ந்து நந்தினியின் நெற்றியின் மீது கையை வைத்தது மெல்ல.

நந்தினியின் உதடுகள் மெல்லத் திறந்து, ‘மகாராஜா!” என்றன.

மகாராஜா பிரதாப்சிங்கின் பெருத்த மீசை சிறிது அசைந்தது உதடுகளின் அசைவால். ”மகளே! விழித்துக் கொண்டா இருக்கிறாய்?”

”ஆம் மகாராஜா” என்ற நந்தினியின் உதடுகள் லேசாக விரிந்தன, புன்முறுவலைக் காட்ட. அந்தப் புன்முறுவல் அழகாகத் தான் இருந்தது. ஆனால் வேதனையும் சிலருக்கு அழகு தருகிறதல்லவா?

அந்தப் புன்முறுவலைக் கவனித்த மகாராஜா பிரதாப்சிங்கின் வதனத்திலும் வருத்தம் படர்ந்தது. ‘கண்களை விழிக்கவில்லையே நீ?” என்றார் மகாராஜா வருத்தத்தின் ஊடே.

”ஆம்… மகாராஜா”

”அப்படியானால் நான் வந்திருப்பதை எப்படி அறிந்து கொண்டாய்?”

”புலன்கள் விழித்திருந்தன.”

”அப்படியா”

”ஆம் மகாராஜா! நீங்களும் டபீர் பண்டிதரும் படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டது” என்ற நந்தினி மெல்லத்தனது கண்களையும் விழித்தாள்.

மகாராஜா மட்டுமல்லாமல் அவருக்குப் பின்னால் அறைக்குள் நுழைந்த டபீர் பண்டிதரும் அரசகுமாரியின் சொற்களைக் கேட்டதும் பிரமித்து நின்றார். ”காலடிகளின் ஒலி வித்தியாசங்கள் கூட அரசகுமாரிக்குத் தெரியும் போல் இருக்கிறது?” என்றார்.

“ஆம்… தெரியும்.”

படுக்கையில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்ட மகாராஜா பிரதாப், “மிக விசித்திரம் நந்தினி” என்று கூறி அவளது தலைமயிரைக் கோதி விட்டார்.
”இதில் விசித்திரம் ஏதுமில்லை. தங்களது திடமான புலியின் நடை, படிகளில் ஏறும் போது திட்டமாகத் தெரிந்தது. அடுத்தும் ஒரு ஒலி ஏதோ மெதுவாகப் பூனை நடப்பது போலக் காதில் விழுந்தது” என்று விளக்கினாள் நந்தினி.

இதைக் கேட்ட மகாராஜா தமது துன்பத்தை மறந்து இறைந்தே நகைத்தார். அந்த நகைப்பு டபீர் பண்டிதருக்குத் திருப்தியளிக்கக் காரணமில்லையாதலால், ”அரசகுமாரி நான் பூனையா?” என்று வினவினார்.

‘குழந்தை சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று மகாராஜாசமாதானப்படுத்த முயன்றார்.

”பின் எப்படி எடுத்துக் கொள்வது? குள்ளநரி என்று எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று சற்றுக் குரலில் எரிச்சலைக் காட்டினார் டபீர் பண்டிதர்.

”அதுவும் பொருந்தலாம்” என்ற நந்தினி மெள்ள படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள் தந்தையின் அருகில்.

அதற்கு மேல் தாங்காத டபீர் பண்டிதர், ”மகாராஜாவின் சந்நிதானத்தில் நான் அவமானப்பட விரும்பவில்லை” என்று சற்றுச்சினத்துடன் கூறிவிட்டுத் திரும்ப முயன்றார்.

‘சற்றுப் பொறுங்கள் அமைச்சரோ” என்றாள் நந்தினி.

திரும்பிச் செல்ல முயன்ற டபீர் பண்டிதர், ”அரசகுமாரிக்குப் பெயர் சரியாகத்தான் ஏற்பட்டிருக்கிறது” என்று தமக்கும் பேச்சுத் திறமை உண்டென்பதை உணர்த்த முற்பட்டார்.
”என்ன பெயர் பண்டிதரே?’ என்று வினவினாள் அரசகுமாரி.

”வாள் மகள்.”

“அதைச் சொல்கிறீர்களா!”

‘’ஆம்… வாளால் வெட்டுவது போல் மனிதர்களைச் சொல்லால் வெட்டுகிறீர்கள்.”

நந்தினி அவரை நோக்கவுமில்லை, நேரிடையாகப் பேசவுமில்லை. தந்தைப் பக்கம் தனது கண்களைத், திருப்பி, “தந்தையே! சந்தா சாகிபும் பிரெஞ்சுப் படைகளும் மூன்று மாதங்கள் இந்தக் கோட்டையை முற்றுகையிடவில்லையா?” என்றாள்.

“ஆம்.”

”அந்த மூன்று மாத காலமும் போர் நடந்ததா?”

“இல்லை.”

”ஏன் இல்லை?”

”சமாதானம் பேசினோம்.”

“சமாதானம் பேச மூன்று மாதம் எதற்கு?” இதைக் கேட்ட நந்தினி டபீர் பண்டிதர் மீது கண்களை நாட்டினாள். “பண்டிதரே! உமது தந்திரத்தின் எல்லையை இந்த முற்றுகையில் தான் கண்டேன். முதல் ராஜ பேரிகையைக் கொட்டச் செய்தீர். பிறகு வெள்ளைக் கொடியேந்திச்சமாதானம் பேசச் சொன்னீர்… இல்லையா?”

டபீர் பண்டிதர் அவள் சொல்லை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தார். அரசகுமாரி அடுத்த கேள்வியையும் தொடுத்தாள், ”அங்கே போய் என்ன சொன்னீர் சந்தாசாகிபுவிடம்?” என்று.

அரசகுமாரியின் மூளை எந்தத் திக்கில் பாய்கிறதென்பதை நொடிப் போதில் ஊகித்துக் கொண்ட டபீர் பண்டிதர், ”மகாராஜா சொல்லச் சொன்னதைச் சொன்னேன்” என்றார்.

”மகாராஜா என்ன சொன்னார்?” என்று மீண்டும் கேட்டாள் நந்தினி.

”சமாதானத்தைக் கோருவதாகச் சொல்லச் சொன்னார்” என்றார் பண்டிதர்.

“சந்தாசாகேப் அதை ஒப்புக் கொண்டார்?”

“ஆம். ஆனால் நாம் ஆற்காட்டுக்குச் செலுத்த வேண்டிய பகுதிப் பணத்தைக் கட்டும்படி கேட்டார்.”

”தொகை எத்தனையோ?”

”இரண்டு கோடி ரூபாய்.”

“கொடுத்தீரா?”

“இன்று வரையில் இல்லை.”
”ஏன் கொடுக்க வில்லை? முன்பணமாக மூவாயிரம் கொடுக்க வில்லையா?” என்று மகாராஜா சங்கடத்துடன் கேட்டார் பண்டிதரை நோக்கி.

”இரண்டு கோடிக்கு மூவாயிரம் அதிகம் தான்” என்ற டபீர் பண்டிதர் தமது முழுவிஷமத்தைக் காட்டினார்.

இந்த இடத்தில் நந்தினி குறிக்கிட்டு, “சமாதானம் ஏற்பட்ட பிறகு மூன்று மாத காலம் முற்றுகை நடப்பானேன்?” என்று வினவினாள்.

பீர் பண்டிதர் உற்சாகத்தைக் காட்டினார் முகத்தில். ”பேரம் பேசினோம் பதினைந்து நாட்கள். ஒரு நாள் நாலைந்து வைரக்கற்கள், இன்னொரு நாள் பொற்கிண்ணங்கள் இரண்டு, அடுத்த நாள் வெள்ளிக் குடங்கள் பதினைந்து, அதற்கும் அடுத்த நாள் இருபது புரவிகள், இப்படியாகக் கொண்டு காட்டினோம், மகாராஜா உத்தரவுப்படி. விலையில் சிறிது தகராறு, அதாவது அவர்கள் போட்ட மதிப்புக்கும் நமது மதிப்புக்கும் ஏற்ற தாழ்வுகள் அதிகமாக இருந்தது…” என்று டபீர் பண்டிதர் உற்சாகத்துடன் கூறினார்.

”அதாவது உங்களுக்குப் பணம் கொடுக்க இஷ்டமில்லை. பேரம் பேசி இழுக்கடித்து நாளைப் போக்கினீர்” என்று நந்தினி விளக்கினாள்.

”போக்கினீர் என்பது சரியல்ல” என்று பொய்த்துன்பத்தை முகத்தில் காட்டினார் பண்டிதர்.

”என்ன தவறோ?”

”இது என் யோசனையல்ல.”

”வேறு யார் யோசனை?”

பண்டிதரின் இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன. ”மாகாராஜாவை விட யோசனை மிகுந்த யாரையும் நான் இங்கும் பார்க்க வில்லை, எங்கும் பார்க்க வில்லை” என்றார்.

இதைக் கேட்ட பிரதாப் சிம்ம மகாராஜா சிறிது பலமாகவே நகைத்தார். ”சபாஷ் பண்டிதரே! கடைசியில் பழியை என் மீதே போடுகிறீர்” என்றும் கூறினார்.

”பழியா நாஸர்ஜங் பெரும் படையுடன் கிளம்பி விட்டார் கர்நாடகத்தின் மீது என்ற செய்தியைக் கேட்டதுமே நாடகத்தைத் துவங்கினீர்கள். காலங்கடத்த என்னைத் தினமொரு தரம் ஏதாவது பொருளைக் கொடுத்துப் பேரம் பேசச் செய்தீர்கள். நாஸர்ஜங் வருவதை அறிந்ததும் பிரெஞ்சுக்காரர்கள் வடக்கு வாசல் காவலைத் தகர்த்து உள்ளே நுழைந்தார்கள். அதனால் மூவாயிரம் ரூபாயைக் கண்ணில் காட்டினீர்கள். அதை வாங்கிக் கொண்டு சந்தாசாகேபும், முஸபர்ஜங்கும் பிரெஞ்சுக்காரரும் புதுவைக்கு ஓடினார்கள். வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் என்று நாஸர் வந்தார், சந்தா போனர். பிறகு புஸ்ஸி வந்தார், நாஸர் போனார்… போனார்… அடுத்தபடி…” என்று வரலாற்றை விளக்கிக் கொண்டு போன பண்டிதரை மடக்கிய மகாராஜா, ”பண்டிதரே வளர்த்த வேண்டாம். விஷயத்துக்கு வாருங்கள்” என்றார்.

பண்டிதர் இளநகை பூத்தார். ”போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பழமொழியை எடுத்து வீசினார்.

‘யாரது?” என்று வினவினாள் நந்தினி ஆத்திரத்துடன். அந்த ஆத்திரத்தில் கட்டிலிலிருந்து கீழே குதித்துப் பண்டிதரை நோக்கினாள் சீற்றத்துடன். பண்டிதர்தாம் அடைத்துக் கொண்டிருந்த வாயிற்படியை விட்டு விலகி, ”மச்சான் வாருங்கள்” என்று உபசாரமாக அழைக்க விஜயகுமாரன் பூர்ண ராணுவ உடையில் உள்ளே நுழைந்தான்.

நந்தினி பிரமை பிடித்து நின்றாள் ஒரு விநாடி. அடுத்த விநாடி பண்டிதரையும் பார்த்துத் தந்தையையும் பார்த்தாள். “இவர்….” என்று ஏதோ கேள்வியை வீசினாள்.

மகாராஜா பிரதாப்சிங்கும் கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் நின்றார். ”பிரிட்டிஷ் பிரதிநிதி லெப்டினண்ட் விஜயகுமார்!” என்று மகளுக்கு அறிமுகப்படுத்தினார். ”மேற்கொண்டு இவரையே நீயே விசாரித்து முடிவு சொல்” என்று கூறி, பண்டிதருடன் அறையை விட்டு அகன்றார்.

Previous articleRaja Perigai Part 2 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here