Home Historical Novel Raja Perigai Part 2 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 2 Ch15 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch15 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 15. அந்தப்புர அரசியல்

Raja Perigai Part 2 Ch15 | Raja Perigai | TamilNovel.in

‘பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ?” என்ற கம்பன் காவிய உரைகாலத்தால் மறையவில்லையென்பதை, தனித்து விடப் பட்ட விஜயகுமாரன், நந்தினி இருவருமே நிரூபித்தார்கள் அன்று, அந்த மூன்றாவது உப்பரிகையில் அரச குமாரியின் அந்தரங்க அறையில்.

நீண்ட நேரம் இருவரும் ஏதும் பேசாவிட்டாலும் இருவர் உள்ளங்களும் தனித்தனியாக ஏதோ பேசிக் கொண்டுதான் இருந்தன. அரச மகளின் அந்தப்புரத்துக்குள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லையென்பதும், அப்படித் தவறி வந்துவிடுபவருக்குக் கூடக் கடுமையான தண்டனை உண்டென்பதும், அறையில் நின்ற இருவருக்குமே நன்றாகத் தெரியும். அதுவும் அரண்மனையின் அடிப்பகுதியிலிருக்கும் அரச மகளிர் வாசஸ்தலத்துக்கு வருவதே பெரும் குற்றமாயிருக்க, தோழியரையும் தாய்மார்களையும் தவிர, வேறு யாருமே வரமுடியாத, வரக்கூடாத மூன்றாவது உப்பரிகைக்கு மன்னர் எப்படி இவரை அழைத்து வந்தார் என்று அரசகுமாரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

அரண்மனை விதிகளை அரசரே தகர்க்க முற்பட்டால் வேலியே பயிரை மேயும் கதையாகாதா என்றுகூட வினவிக் கொண்டாள். ‘எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல், பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக இவரை எனக்குக் காவல் வைத்து விட்டுப் போயிருக்கிறாரே தந்தை, இதை விட விசித்திரம் என்ன இருக்க முடியும்?’ என்ற வினாவையும் மனத்தில் எழுப்பிக் கொண்டாள். இத்தகைய நினைப்புகளால் ஏற்பட்ட சங்கடத்தால், நாணத்தால், பொய்க்கோபத்தால், நந்தினி சட்டென்று திரும்பிச் சாளரத்தை நோக்கிச் சென்று முழுமதியை உற்று நோக்கினாள் காரணமின்றி.

விஜயகுமாரன் மனநிலையும் பெரும் சங்கடத்தில் தான் இருந்தது. பிரிட்டிஷ் கவர்னரிடமிருந்து தான் தூது வந்ததைச் சொன்னதும் மகாராஜா, டபீர் பண்டிதரை வரவழைத்ததும், அவரிடம் தனது தூதைப் பற்றி எடுத்துரைத்து யோசனை கேட்டதும், அவர் இதைத் தன்னைக் கேட்பதில் பயனில்லை என்று கூறியதும், பிறகு மகாராஜா ஏதோ தீவிர யோசனை செய்து விட்டு, ‘அப்படியானால் வாருங்கள்’ என்று தங்கள் இருவரையும் அந்தப் புரத்துக்கு அழைத்து வந்ததும் பெரும் வியப்பை அளித்தது விஜயகுமாரனுக்கு.

‘போர் விஷயங்களைப்பற்றி ஆலோசனை கேட்க வேண்டுமானால் மானாஜியைக் கேட்டிருக்க வேண்டும் மன்னர். அதற்குப் பதில் டபீர் பண்டிதரைக் கேட்கிறார். பண்டிதர் அதற்குப் பதில் சொல்லாத போது அவரையும் சேர்த்து அந்தப்புரத்துக்கு இழுத்து வருகிறார். இங்கே தூதைக் கேட்டு முடிவு செய்யும்படி அரசகுமாரியிடம் சொல்லி விட்டுச் செல்கிறார். மன்னரின் அபிப்பிராயம் தான் என்ன?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அந்தப்புரத்துக்குள் நுழையுமுன்பு டபீர் பண்டிதர் ஆட்சேபித்ததும், அதற்கு மன்னர் தந்த பதிலும் கூட அந்தச் சமயத்தில் அவன் அகத்தே எழுந்தது பெரிதாக அவன் உதடுகளில் லேசான புன்முறுவலும் உதயமாயிற்று.

பண்டிதர் ஆட்சேபணை கிளப்பி, ”மகாராஜா! இது அந்தப்புரம்…” என்று குறிப்பிட்டார்.

”என் அந்தப்புரம் எனக்கே தெரியாதென்று நினைக்கிறீரா?” என்று முன்னே சென்ற மகாராஜா திடீரென்று திரும்பிப் பின்புறம் பார்த்துப் பண்டிதரை நோக்கி வினவினார்.

”ஏன், தங்களுக்குத் தெரியாமல் என்ன?” என்று இளக்காரமாகப் பதில் சொன்னார் பண்டிதர்.

”தெரிந்து நான் செய்வதை நீர் தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று பிரதாப் சிங் வினவினார்.

”அரசியல் விஷயங்களை முடிவு செய்ய அந்தப்புரத்தில் என்ன வேலையென்று யோசித்தேன்” என்றார் பண்டிதரும் தமது விஷமத்தை விடாமலே.

மகாராஜா புன்முறுவல் கோட்டினார், “பண்டிதரே” என்றும் விளித்தார் முறுவலின் ஊடே.

“மகாராஜா” பண்டிதர் அதிகப் பணிவைக் காட்டினார்.

“இப்போது இந்த நாட்டில் யார் பலம் ஓங்கி நிற்கிறது?”

“பிரெஞ்சு பலம்.”

“யாரால் ஓங்கி நிற்கிறது?”

“டூப்ளேயால்.”

“டூப்ளேயின் பிரதான ஆலோசகர் யார்?”

”மகாராஜா…’ என்று இழுத்தார் பண்டிதர் மகாராஜாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு.

“கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் அமைச்சரே!”

“டூப்ளே மனைவியார் மேடம் வினிஸன்ஸ்.”

“இப்பொழுது ஒப்புக் கொள்கிறீரா”

“எதை?”

”அந்தப் புரத்து ஆலோசனை அவசியமென்பதை” என்ற மகாராஜா அத்துடன் விடவில்லை. ”பண்டிதரே! முக்கால் வாசி விவகாரங்கள் உலகத்தில் படுக்கையறைகளில் தான் முடிவாகின்றன” என்றும் உணர்த்தினார் பண்டிதருக்கு.

பண்டிதர் பெரிய வட்டாவுடனிருந்த தலையை மிக மரியாதையாகவும் ஏளனமாகவும் அசைத்தார். ”மகாராஜாவின் சிறந்த பல முடிவுகளுக்கு வித்து எங்கிருக்கிறது என்பதை இன்று தான் புரிந்து கொண்டேன்’ என்று கூறவும் செய்தார். இதை கேட்ட மகாராஜா லேசாக நகைத்து விட்டு மாடிப்படிகளில் ஏறலானார்.

அவருடன் தானும் பண்டிதரும் ஏறி வந்ததையும் மகாராஜா தன்னை நந்தினியின் அறையில் விட்டுப் போய்விட்டதையும் எண்ணிப் பார்த்த விஜயகுமாரன், மகாராஜாவின் நடவடிக்கைகளுக்கு ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும் என்று மட்டும் அறையில் நின்ற அந்த சில விநாடிகளில் தீர்மானித்துக் கொண்டான். இத்தகைய யோசனைகளில் அவன் திளைத்திருந்த சமயத்திலும் சாளாரத்தண்டை நின்ற நந்தினியின் பேரழகை அவனால் பருகாதிருக்க முடியவில்லை .

நந்தினி சாளரத் தண்டை நாணியோ ஒடுங்கியோ, சாளரத்தை இரண்டாகப் பிரித்த நடுக்கட்டையில் சாய்ந்தோ நிற்காமல் செங்குத்தாகச் சாளரத்தின் ஒரு பகுதியில் முழு நிலவு அவள் பூவுடலைக் குளிப்பாட்டத் திடமாக நின்றிருந்த கோலத்தில் காதலியின் கோலத்தை விட அரசகுமாரியின் தோரணையே அதிகமாக இருந்தது. முழுமதியின் கிரணங்கள் அவள் முன்புறத்தை என்ன செய்தனவோ, அவனுக்குத் தெரியாது, பின் பகுதிகளுக்குப் பெரும் மெருகை ஊட்டிவிட்டதை மட்டும் அவன் புரிந்து கொண்டான். அத்தனை நேரம் படுத்துக் கிடந்ததால் தலையின் மல்லிகைச் சரம் ஓரளவு கசங்கியும் சில மலர்கள் உதிர்ந்தும் இருந்ததாலும் நிலவொளியில் அது ஈடு இணையற்ற அழகைப் பெற்று இயற்கை வெளுப்பை விட அதிக வெளுப்பைப் பெற்றிருந்தது. அதற்குப் பின்னணியாக இருந்த கருத்த குழல் திரைக்கூடக் கண்ணைப் பறிக்கும் வண்ணம் பளபளத்தது. நிலவு முன் பக்கம் இருந்ததன் விளைவாக அவள் கழுத்தின் பின்புறத்தின் முழுவெண்மை தெரியாவிட்டாலும், கழுத்தின் இருபுறங்களின் வழவழப்பும் வெளுப்பும் அவன் கண்களுக்கு ஏதோ ஒரு புதுவித விருந்தை அளித்தன.

ரவிக்கைக்கும் சிற்றிடையில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த சேலைக்குமிடையே தெரிந்த சதைப்பற்றின் உறுதியும் வழவழப்பும் அவன் சித்தத்துக்கு என்னென்ன இம்சைகளை அளித்துக் கொண்டிருந்தன என்பதை விவரிக்க முடியவில்லை. அந்த இடைக்குக் கீழே முன்பு லேசாகப் பருத்திருந்த பகுதிகள் இப்பொழுது சற்று அதிகமாகப் பருத்திருந்ததால் அவன் உள்ளம் உன்மத்தத்தை அடைந்தது. அந்த உன்மத்தத்தின் விளைவாகவோ என்னவோ அவன் மெல்லப் பூனை போல் நடந்து அவளை அணுகி இடையை ஒரு விநாடி இறுகப் பிடித்தான். பிறகு அவள் திரண்ட தோள்களைப் பிடித்துத் தடவி, அவள் உடலுடன் தன் உடலை லேசாக இணைய விட்டு, ”அரச குமாரி” என்று அவள் காதுக்கருகில் குனிந்து குழைந்தான்.

அரசகுமாரி. அவனுக்குப் பதில் சொல்லவும் இல்லை , திரும்பவும் இல்லை . குளிர் மதி சற்று முன்பு கிரணங்களால் செய்த கொடுமையை விட அதிக இம்சையை அந்த ஆண்மகனின் அண்மையும் கைகளும் அவளுக்கு அளித்து உடலில் நெருப்பை வாரிக் கொட்டின. அவன் தன்னை நோக்கி நகர முற்பட்டதுமே தனது இதயம் படபடவென அடிக்கத் துவங்கிவிட்டதை அறிந்த அரசகுமாரி, ‘அருகில் வந்து எத்தனை சொந்தமாக இடையைத் தொட்டார்? உம்…. நல்ல வேளை தோளுக்கு உயர்த்தினாரே கைகளை… ஆனால் என்ன பயன், இவர் உடல் அநாவசியமாகப் படுகிறதே பின்னால் என்மேல்…’ என்று அவன் ஒவ்வொரு செய்கையையும் அனுபவித்தாலும், என்ன காரணமாகவோ கோபத்தினால் “உம்” என்று உம் கொட்டினாள் அவன் கேள்விக்கு.

.”நீண்ட காலம் கழித்து வந்திருக்கிறேன்” என்ற விஜயகுமாரன் தோளிலிருந்த கைகளால் அவள் உடல் பூராவையும் தடவினான்.

அரச குமாரியின் முகம் முன்பிருந்ததால், அவள் இதழ்களில் காதல் பிரவகித்த முறுவல் படர்ந்ததை விஜயகுமாரனால் பார்க்க முடியாததால் அவள் முறுவலை அடக்கி வேகத்துடன் கேட்டால், அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று.

விஜயகுமாரன் சங்கடம் அதிகமாயிற்று. ‘இதென்ன கேள்வி நந்தினி?” என்று அரசகுமாரி என்பதைக் கைவிட்டு உரிமையைக் காட்டினான் விஜயகுமாரன், அத்தனை சங்கடத்திலும்.

அரசகுமாரி கடுமையான குரலிலேயே கேட்டாள் தலையை தூக்கி முழுமதியை நோக்கிய வண்ணம். வேறென்ன கேள்வியை எதிர்பார்க்கிறீர்கள்?”

மதியை நோக்கி அவள் தலை உயர்ந்ததால் கழுத்தும் சற்று நீண்டு உயர்ந்ததையும், அது மதி ஒளியில் எத்தனையோ இன்ப ஜாலங்களை அள்ளி வீசியதையும் கவனித்த விஜயகுமாரன் அது வரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த தென்றலில் பறக்க விட்டுத் தன் இதழ்களைத் துணிவுடன் அவள் கழுத்தில் புதைத்தான்.

அப்படிப் புதைத்த இதழ்களை அரசகுமாரி தடுக்க முயலவில்லை. அவன் இதழ்கள் அளித்த இன்ப வேதனையில் நெளியச்கூடச் சக்தியற்றவளானாள். நெளிந்தால் பின்னால் லேசாக அழுத்திய அவன் சரீரம் அதிகமாக அழுந்திவிடுமே என்ற பயமும், ஏன் அழுந்தவில்லை என்ற ஏக்கமும், ஏக்கம் விளைவித்த பலவிதக் எதிர்பார்ப்புகளும், அவள் எண்ணங்களுக்கு ஏதேதோ விபரீத கற்பனைகளைக் கற்றுக் கொடுத்திருந்ததால், பெருமூச்சு மட்டும் விட்டாள் நந்தினி. அதன் பொருள் அவனுக்குப் புரிந்திருந்ததால் உதடுகளை நீக்காமலே, “நந்தினி” என்று அழைத்தான் மெதுவாக.

“உம்.”

”எத்தனை நாளாகிறது?”

“உம்?”

“இது தான் நந்தினி…”

“நந்தினி”

”என்ன நந்தினிக்கு?”

“நமக்குள்…”

“நமக்குள்?”

”ஒளிவு மறைவு…”

”வேண்டாமென்கிறீர்கள்” என்ற நந்தினி சரேலென்று கைகளில் சுழன்று திரும்பினாள். இருவர் கண்களும் சந்தித்தன. ஆயிரம் கதைகளைச் சொல்லின. நேருக்கு நேர் இருந்ததால் இடையே அது வரை அவர்களை மறைத்திருந்த சங்கடத் திரையும்• அகன்றது. விஜயகுமாரன் கண்கள் அவள் பங்கய விழிகளிலிருந்து சற்றுத் தாழ்ந்து வேறு இரு பங்கயங்களை நோக்கின. அந்த ஆண்மகனின் துணிவைக் கண்ட நந்தினி வியந்தாள். ‘என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

”உன்னைத்தான்.”

“இல்லையே.”

“ஏன் இல்லை ?”

”முகத்தைப் பார்க்க மறுக்கிறீர்கள்.”

“முகம்… முகம்.”

“அத்தனை அழகாயில்லை?”

”சே சே! யார் சொன்னது?”

“எனக்கே தெருகிறது.”

”எப்படி?”

”நீங்கள் என் முகத்தைப் பார்க்க மறுப்பதிலிருந்து, உங்கள் கண்கள் வெட்கத்தால் தாழ்ந்து விட்டதிலிருந்து… வெட்கத்தால்தானே வீரரே?” என்று கேட்ட அரசகுமாரி திடீரென நகைத்தாள் வாய்விட்டு.

அவன் சட்டென்று அவளைச் சுற்றியிருந்த கைகளை நீக்கினான். ‘இப்படி இன்னொரு சிரிப்பு சிரித்தால்…. நான் கடமையை மறந்து விடுவேன், பண்பாட்டைக் கூடக் காற்றில் விட்டு விடுவேன்…” என்று அச்சத்துடன் சொல்லிக் கொண்ட விஜயகுமாரன் நந்தினியை விட்டு மெள்ள விலகி நின்று, ”அரசகுமாரி” என்று மரியாதையுடன் அழைத்தான்.

அவன் திடீரென விலகியதற்கும் காரணம் புரிந்திருந்தது. அவன் அரசகுமாரியென மரியாதையுடன் மீண்டும் அழைத்ததற்கும் காரணம் புரிந்திருந்தது. அந்த ஒரு சொல் அவளிடமும் திடீர் மாற்றத்தை விளைவித்தது. குழைந்து கிடந்த அவள் முகம் திடீரெனத்தனிக்கம்பீரத்தை அடைந்தது.

”எஸ், லெப்டினண்ட்…” என்று அவள் கூறினாள், அரசகுமாரி என்ற அதிகாரத் தோரணையில்… தான் அரசாங்க விஷயங்களைப் பேசத்தயாராயிருப்பதை அறிவுறுத்த. அவள் திடீரென அரசியல் பேசும் பெருமாட்டியாகி விட்டதைக் கவனித்த விஜயகுமாரன் வியப்படைந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், ‘இனி…’ என்று ஏதோ துவங்கினான்.
“மன்னர் விஷயத்தைப் பேசுவோம். அதாவது உங்கள் தூது விஷயத்தைப் பேசுவோம்” என்ற நந்தினி, “பேச இதுவும் சரியான இடம் தான். அந்தரங்க ஆலோசனைக்கும் அந்தப்புர ஆலோசனைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சரி, சொல்லுங்கள்! ஸாண்டர்ஸ் என்ன எதிர்பார்க்கிறார்?” என்ற கேள்வியைத் திடமாக வீசினாள்.

விஜயகுமாரன் பிரமித்து நின்றான். ”ஸாண்டர்ஸ், ஸாண்டர்ஸ்” என்று குழறவும் செய்தான்.

”எஸ்…. தாமஸ் ஸாண்டர்ஸ், கவர்னர் ஆஃதி பிரிட்டிஷ் ஸெட்டில் மெண்ட்ஸ் இன் இண்டியா” என்று ஆங்கிலத்திலேயே வெளுத்து வாங்கினாள் நந்தினி.

”விஜயகுமாரன் பிரமை மேலும் அதிகமாயிற்று. ‘உனக்கு ஆங்கிலம்…? ” என்று இழுத்தான்.

”நன்றாகத் தெரியும். ஐ ஹாவ் எட்யூடர்நௌ.”

”எதற்கு நீ ஆங்கிலம் படிக்க வேண்டும்?”

‘எதற்கு நீங்கள் பிரிட்டிஷ் படையில் சேர வேண்டும்?”

”ஐ ஹாவ் மை ரீஸன்ஸ்’’ என்றான் விஜயகுமாரன் கடுமையாக.

”ஐ ஆல்ஸோ ஹாவ் மை ரீஸன்ஸ், கம் நௌ லெப்டினன்ட்! வாட் டஸ் ஸாண்டர்ஸ் வாண்ட்?” என்ற நந்தினி விஜயகுமாரனை ஏறெடுத்து நோக்கினாள்.

விஜயகுமாரன் பிரமை பிடித்து அவளை நோக்கினான். இன்னொரு இடி அவன் தலையில் இறங்கியது ”கவர்னருக்கு வேண்டியது எனக்குத் தெரியும். ஹி வாண்ட்ஸ் அவர் ஹெல்ப்” என்று திட்டவட்டமாக அறிவித்தாள் நந்தினி. அந்தப்புர ஆலோசனை தன் மூளையையும் மீறி ஆழத்தில் செல்வதை அறிந்த விஜயகுமாரன் பேச நா எழமால் நின்றான்.

”வாட் லெப்டினண்ட் ஆர் யூ டம்? (நீங்களென்ன ஊமையா?)” என்று கேட்ட அரசகுமாரி சற்று இரைந்தே நகைத்தாள், எதிரே நின்ற வாலிப வீரனை நோக்கி.

Previous articleRaja Perigai Part 2 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here