Home Historical Novel Raja Perigai Part 2 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

49
0
Raja Perigai Part 2 Ch16 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch16 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 16. காதில் ஒலித்த ரகசியம்

Raja Perigai Part 2 Ch16 | Raja Perigai | TamilNovel.in

சில விநாடிகளுக்கு முன்பு சித்தினியாக, தன் கைப்பாவையாக வளைந்த அரசகுமாரி திடீரென அரசியலில் இறங்கிவிட்டதையும், தான் வந்த காரியத்தை முன்கூட்டியே ஊகித்து விட்டதையும், ஆங்கிலத்தில் கேள்விகளைப் போட்டு வெளுத்து வாங்கியதையும் எண்ணிப் பார்த்துப் பிரமையடைந்த விஜயகுமாரன், பேச சக்தியற்று நின்ற நிலையில், ”ஆர் யூ டம்? என்று கேட்டு, தன்னை அரசகுமாரி ஊமைக் கோட்டானாக்கி விட்டதை நினைத்ததும் அவன் உள்ளத்திலிருந்த காதல் மயக்கம் சட்டென்று விலகி, சினம் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளவே, அவன் கோப விழிகளை ‘அவள் மீது நாட்டினான். பிறகு அவளுக்கும் தனக்கும் எந்த விதச்சம்பதமும் இல்லாதது போலவே நடந்து, ‘ஆம் அரசகுமாரி நான் ஊமையாகத்தான் ஆகிவிட்டேன்” என்று சொல்லவும் செய்தான் சினத்தைக் குரலிலும் காட்டி.

”பேச்சில் வல்லவரான நாயக்கர் வம்ச வீரர் திடீரென ஊமையாவதற்குக் காரணம்?” என்று வினவினாள் அரசகுமாரி. அவன் சினத்தைக் கண்டு வெளியில் லட்சியம் செய்யாமலும், உள்ளூற நகைத்துக் கொண்டும்.

விஜயகுமாரன் மிகுந்த பணிவுடனும் கம்பீரத்துடனும் சொன்னான். ”சில சமயங்களில் எப்பேர்ப்பட்ட மனிதனும் ஊமையாகிறான்” என்று.

”கொஞ்சம் விளக்கலாமா?” என்று கேட்டான் நந்தினி ஏளனக் குரலில்.

”விளக்கலாம்.”

”விளக்குங்களேன்.”

“அபரிதமான அழகைப் பார்க்கும் போது…”

”பெண் அழகை?”

‘’ஆம் ஆம்.’’

”மனிதன் சிலையாகி விடுகிறான்?”

”ஆம்!”

”சிலை பேசாது. சரி, அடுத்த சந்தர்ப்பம்?”
”எதிர்பாராத கேள்விகள் பிறக்கும் போது மனிதன் திகைப்படைகிறான். அதுவும் எதிர்பாராத இடத்திலிருந்து பிறக்கும் போது” என்ற விஜயகுமாரன் மெல்ல நகைத்தான்.

நந்தினி நகைக்கவில்லை, புன்முறுவல் கொண்டாள். “மூன்றாவதும் ஒன்றிருக்க வேண்டும்?” என்றாள்.

“இருக்கிறது.”

”திடீரெனப் பழமொழி நம்மீது வீசப்படும் போது.”

”இதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் சிறிது சிந்தனை பிறந்தது. ”சில நேரங்களில் சொந்த மொழி பயனற்றதாகி விடுகிறது” என்றும் குறிப்பிட்டாள் அவள் சில விநாடிகளுக்குப்பிறகு.

‘’அந்த நேரங்களை நான் அறிந்து கொள்ளலாமா?” “தெரிந்து கொள்லாம்.”

”சொல்லுங்கள் அரசகுமாரி” என்று பணிவுடன் கேட்டான் விஜயகுமாரன்.

“தம் நாட்டவர், பிற நாட்டாரின் தூதராக வரும் போது…”

“உம் உம்…”

“அவர் பிற மொழியில் வல்லவராகிவிடும் போது.”

“உம், சொல்லுங்கள்.”

”மூன்றாவதாக அரசியல் பேச அவர் அந்தப்புரத்துக்கு வரும் போது…” இந்தக் கடைசிச் சொற்களைச் சொன்ன அரசகுமாரி மெல்ல நகைத்தாள்.

விஜயகுமாரன் சங்கடத்தால் இருந்த இடத்திலேயே அசைந்தான் சில விநாடிகள். ”அரசகுமாரி அரசியல் பேச இங்கு வந்தது என் எண்ணத்தாலல்ல…’ என்று சமாதானம் கூறினான் சங்கடத்துக்கிடையில்.

“தந்தை உத்தரவை முன்னிட்டு அவருடன் வந்தீர்கள்.”

”ஆம்.”

“அவர் இங்கு வந்து பேசவேண்டும் என்று சொன்னதை ஆட்சேபித்தீர்களா?”
இந்தக் கேள்விக்கு விடை சொல்லத் தெரியாமல் திகைத்த விஜயகுமாரன், ”ஏன் ஆட்சேபிக்க வேண்டும் நந்தினி; அரசரின் ஆணையை ஆட்சேபிக்கவோ மீறவோ நான் யார்?” என்று வினவினான்.

”ஐயோ பாவம்! ஒன்றுமறியாத குழந்தை!” என்றாள்.

நந்தினி.

“நந்தினி!” சீற்றத்தடன் எழுந்தது விஜயகுமாரன் குரல்.

ஆனால் அந்தச் சீற்றத்தை லட்சியம் செய்யவில்லை அரசகுமாரி. “வீரரே!” என்று மெள்ள அழைத்தாள்.

”என்ன நந்தினி!” “அங்கு மரம் மாதிரி நிற்க வேண்டாம்,” “பின் என்ன செய்யச் சொல்கிறாய்?”

“இப்படி அமருங்கள்” என்ற நந்தினி தனது பஞ்சணையை நோக்கி நடந்து அதில் உட்கார்ந்து கொண்டு, தன் பக்கத்தில் உட்கார அவனுக்கும் இடத்தைக் காட்டினாள். ஏதோ கனவில் நடப்பவன் போல் அந்த அறை மூலையிலிருந்த பஞ்சணையை அடைந்த விஜயகுமாரன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான், உட்கார்ந்தவன்கை மெள்ள அவள் இடையில் தவழ்ந்தது.

அதனால் சற்றே நெளிந்த நந்தினி, ”அரசியல் பேசும் முறை இது வல்ல” என்று மிக மெதுவாகக் கூறினாள்.

“இடமும் இது வல்ல நந்தினி.” இதைச் சொன்ன போது அவன் கை அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டது.

“தூதர் அத்து மீறுகிறார்” என்று எச்சரிக்கை செய்தாள் அரசகுமாரி.

”தூதர் என்பது நினைப்பில்லை; அத்து எதுவென்றும் புரியவில்லை ” என்றான் விஜயகுமாரன்.

”புரியாது புரியாது! தஞ்சை மன்னரைப் போல் ஒரு இளிச்சவாயர் இருந்தால் எப்படிப் புரியும்?” என்றாள் நந்தினி குழைந்த குரலில். “அவர் இளிச்சவாயரா?”

”ஆம். இல்லாவிட்டால் உங்களை இங்கு விட்டுப் போவாரா?

”’காரணத்துடன் தான் விட்டுப் போயிருக்கிறார்.”
”என்ன காரணமாம்?”

”இவன் இந்த இடத்தில் அடிமை. எதையும் ஒப்புக் கொள்வான் என்பது மன்னருக்குத் தெரியும். என்னைக் கட்டக் கூடிய கயிறு இங்கிருப்பது அவருக்குத் தெரியும்.”

”கயிறா?”

”ஆம்” என்ற விஜயகுமாரன் இடக் கையை இடையில் பலமாக நெருக்கி, அவள் இரு கைகளையும் தனது வலக் கையால் தொட்டுக் காட்டினான். “இக் கயிறுகள் பிணைத்தால் நான் மீள முடியாதென்று மன்னருக்குத் தெரியும்” என்றும் கூறினான்.

தலையை கவிழ்த்துக் கொண்டாள் நந்தினி. அவன் சமீபத்தாலும் அவன் கரங்களின் சேஷ்டையாலும் உதிர்ந்த உணர்ச்சிப் பரவசத்தால் அந்த நிலையிலேயே மெள்ளக் கேட்டாள், ”என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்று.

”நந்தினி இப்பொழுது…” என்று துவங்கிய விஜயகுமாரன் பேச்சு மேலே ஓடவில்லை.

”சொல்லுங்கள்” என்று ஊக்கினாள் நந்தினி.

”இப்போது நாட்டில் இரண்டு விதேச சக்திகள் இருக்கின்றன….” என்றான் விஜயகுமாரன் மெள்ள.

”ஆம். பிரெஞ்சு ஒன்று, பிரிட்டிஷ் இரண்டு” என்றாள் நந்தினி.

‘’அதே மாதிரி சுதேசி சக்திகளும் இரண்டு இருக்கின்றன” என்று குறிப்பிட்டான் விஜயகுமாரன்.

”ஒன்று ஆற்காடு நவாப் வம்சம், மற்றொன்று மகாராஷ்டிரர் இனம்” என்ற நந்தினி கூறினாள்.

”ஆம். இங்குள்ள மாகாராஷ்டிரர் வம்சம், அரசு எல்லாம் தஞ்சை ஒன்று தான். அதைக்கபளீகரம் செய்வது ஆற்காட்டு நவாப் சந்தாசாகிபின் உத்தேசம். சந்தாசாகிப் தஞ்சை அரசுக்கு இழைந்திருக்கும் தீமை சொல்ல முடியாது. பல முறை படையெடுத்திருக்கிறான். பல முறைச் சுற்றுப்புறங்களைச் சூறையாடி இருக்கிறான். இந்த நிலையிலும் நாம் சேர வேண்டியது சந்தாசாகிபின் எதிரியை. அந்த எதிரி பிரிட்டிஷ்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.
நந்தினி சிறிது நேரம் சிந்தனையில் இறங்கினாள். “பிரிட்டிஷ்காரர்கள் இதுவரை நம்முடன் தான் போரிட் டிருக்கிறார்கள். தேவிக் கோட்டையைத் தான் பிடித்திருக்கிறார்கள். ஆகையால் அவர்களும் நமக்கு விரோதிகள் தான். தவிர, இது வரை சந்தாசாகிபை எதிர்க்கவில்லை. மசமசவென்று உட்கார்ந்திருக் கிறார்கள். ஆனால் பிரெஞ்சுக்காரர் சண்டைகளில் நுழைந்தார்கள். சந்தாசாகிபை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் பலம் உச்ச ஸ்தாயியில் நிற்கிறது…’ என்ற விளக்கினாள் அரசகுமாரி.

இதைக் கேட்ட விஜயகுமாரனும் சிந்தனையில் இறங்கினான். பிறகு மெள்ளச் சொன்னான். ‘அரசகுமாரி பிரிட்டிஷ்காரர்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். சிங்கம் உறங்குவது போல் இருக்கும். எழுந்த பின்பும் மெதுவாகத்தான்

நடக்க ஆரம்பிக்கும். ஆனால் பாயும் நேரத்தில் அதை எதிக்கக்கூடிய மிருகம் சிருஷ்டியில் எதுவுமே கிடையாது.”

”இத்தனை நாள் கழித்து, அதுவும் பிரெஞ்சு பலம் திடப்பட்ட பின்பு, சிங்கம் விழித்துக் கொண்டு விட்டதாக்கும்?” என்ற நந்தினியின் கேள்வியில் ஏளனமிருந்தது.

”ஆம் நந்தினி! இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது.”

“காரணம்?”

”தாமஸ் ஸாண்டர்ஸ்” என்ற விஜயகுமாரன் மேலும் சொன்னான்; ”ஸாண்டர்ஸ் ஏற்கனவே இருந்த கவர்னர் ப்ளாயரைப் போலல்ல. பேச்சாளரல்ல. செயல் வீரர். இப்போது நீ ஸெய்ன்ட் டேவிட் கோட்டையைப் பார்த்தால் தெரியும்; அதன் ராணுவம் பல மடங்கு உயர்த்தப் பட்டிருக்கிறது. இரும்பு மனிதர். பிரெஞ்சு பலத்தை ஒடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காகப் பிரான்ஸுக்கு எதிரான சக்திகளையெல்லாம் திரட்டியிருக்கிறார். நண்பர்களுக்குப் பாதுகாப்பும் அளித்திருக்கிறார்…”

இப்படிச் சொல்லிக் கொண்டுப் போன விஜயகுமாரனை இடை மறித்த நந்தினி, “என்ன பாதுகாப்பு?” என்று வினவினாள்.

”திருச்சிக்கு ஓடிவிட்ட முகம்மத அலிக்கு உதவக் காப்டன் கோப்பை அனுப்பியிருக்கிறார், சிறுபடையுடன். வெகு சீக்கிரம் ஆற்காடும் தாக்கப்படும்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

”அத்தனை பலம் இருக்கிறதா பிரிட்டிஷ்காரருக்கு?” என்று கேட்டாள் அரசகுமாரி.

“பலம் என்றால் எதைக் குறிப்பிடுகிறாய்?” ”படைபலம்.”
”முன்னை விட அதிகமாக இருக்கிறது. இன்னும் சுதேசிகளைச் சேர்த்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் ஸாண்டர்ஸ். காப்டன்ஜின்ஜின்ஸின் கீழ் பிரிட்டிஷ் படையும் பிரதி தினம் போர்ப் பயிற்சி பெற்று வருகிறது. அது வெகு சீக்கிரம் நகரலாம்…”

”ஸாண்டர்ஸ் எங்கள் உதவியை எதிர்பார்க்கிறாரா?” திடீரென குறுக்கே பாய்ந்தது நந்தினியின் கேள்வி.

”உடனே எதிர்பார்க்க வில்லை. ஆனால் தஞ்சை அரசு எப்போதும் போருக்குத் தயாராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். போரில் முதலில் பிரிட்டிஷ் படை நுழையும். அவசியம் வரும் போது தஞ்சையும் இணைய வேண்டும். அவர் முக்கியமாக எதிர்பார்ப்பது நீங்கள் முகம்மது அலிக்கு உதவ வேண்டுமென்பது. அப்படி ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை எதிர் பார்க்கிறார். இந்த ஒப்பந்தம் ரகசியமாக இருக்க வேண்டும். டூப்ளே இதை அறிந்தால் தஞ்சை மீது அவரே பாய்வார். கர்நாடக யுத்தத்தின் உச்சக் கட்டம் வரும் போது இது வெளியாகும். தஞ்சைப் படையும், முகம்மது அலியின் படையும், பிரிட்டிஷ் படையும் இணைந்த பெரும் சக்தியை டூப்ளே சமாளிக்கும்படி இருக்கும். இது தான்ஸாண்டர்ஸின் திட்டம்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

”திட்டம் அழகாக இருக்கிறது. பயனும் தரலாம்…” என்ற அரசகுமாரி தனது பஞ்சணையிலிருந்து இறங்கி நின்று கொண்டாள் அவன் எதிரே. அப்பொழுது சொன்னாள், “இந்த ஒப்பந்தத்துக்குத் தஞ்சை தயார். உச்சக் கட்டம் வரும் போது நாங்கள் தவறமாட்டோம் என்று நீங்கள் ஸாண்டர்ஸிடம் சொல்லலாம்” என்று. அத்துடன் அவள் அவனைக் கூர்ந்து சில விநாடிகள் நோக்கிப் புன்முறுவலும் கொண்டாள். “தஞ்சை சேருவதற்கான முக்கிய காரணத்தையும் நீங்கள் சொல்லலாம்” என்றாள்.

”எது முக்கிய காரணம்?”

”இது!” என்று அவள் அவன் மார்பில் குத்தினாள்.

அவன் கைகள் அவளைச் சுற்றின. ”இதில் எனக்கென்ன லாபம்?” என்று உதடுகள் முணுமுணுத்தன.

அவள் அவனை நோக்கி நன்றாகக் குனிந்தாள். காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள். விஜயகுமாரன் முகத்திலிருந்த காதல் பறந்தது. வியப்பு குடிகொண்டது. திக்பிரமையால் அவளைச் சுற்றிய கைகள் கூடச் செயலற்றுப் போயிற்று. “இந்த மர்மத்தை இவள் எப்படி அறிந்தாள்?” என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுந்தது அவன் மனத்தில்.

Previous articleRaja Perigai Part 2 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here