Home Historical Novel Raja Perigai Part 2 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

52
0
Raja Perigai Part 2 Ch17 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch17 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 17. விளக்கில் தெரிந்த முகம்

Raja Perigai Part 2 Ch17 | Raja Perigai | TamilNovel.in

கட்டிலில் உட்கார்ந்த நிலையில் கட்டழகி நந்தினி காதில் சொன்ன ரகசியம் விஜயகுமாரனுக்குத் திக்பிரமையை விளைவித்ததென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. ஸெய்ன்ட் டேவிட் கோட்டையில் ஸாண்டர்ஸ் கேள்வியாகக் கேட்டதை நந்தினி செய்தியாகச் சொன்னாள். ‘உங்கள் சபதம்” என்ற இரு சொற்களில் அந்த ரகசியம் அடங்கியிருந்ததென்றாலும், நந்தினி அந்தச் சொற்களை உச்சரித்த போது இருந்த தொனி அவற்றுக்கு முழுபலத்தைக் கொடுக்கவே செய்ததால் விஜயகுமாரன் அதிர்ச்சியால் பல விநாடிகள் செயலற்று உட்கார்ந்திருந்தான். முடிவில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ”என் சபதமா?” என்று ஏதும் அறியாதவன் போல் அவளை நோக்கி வினவினான்.

அவன் திண்டாட்டத்தையும் திகைப்பையும் கண்ட நந்தினி மெல்ல நகைத்தாள். ”ஆம், சபதந்தான். சபதம் இல்லாவிட்டால் கூச்சலில்லை. கூச்சல் இல்லாவிட்டால் தனிமையில்லை. தனிமை இல்லாவிட்டால் அக்கிரமமில்லை, அக்கிரமம் இல்லா விட்டால் காதலில்லை, இந்த நிலையுமில்லை” என்று கூறிய அவள் சொற்களில் கூட நகைப்பின் ஒலி பரம திட்டமாகத் தெரிந்தது.

விஜயகுமாரன் அவள் அருகாமையிலிருந்து நகர்ந்தான். ”புதிர் போடுகிறாய் நந்தினி” என்றும் கூறினான் சங்கடத்துடன்.

நந்தினி பக்கவாட்டிலிருந்த விஜயகுமாரன் கடைக் கண் அம்பு ஒன்றை வீசிவிட்டுச் சொன்னாள், ”புதிர் போடவில்லை, சரித்திரம் சொல்லுகிறேன்” என்று.

விஜயகுமாரன் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி அவள் எதிரே தலை குனிந்து நின்றான் சில விநாடிகள். பிறகு அவன் பேசிய போது அவன் குரலில் காதல் இல்லை, கனிவில்லை கடுமையிருந்தது. ”என்ன சரித்திரம் நந்தினி?” என்று வினவினான்.

”சரித்திரம் என்று சொல்லட்டுமா? அல்லது கதை என்று சொல்லட்டுமா?” என்று வினவினாள் நந்தினி, அவன் கேள்வியின் உஷ்ணத்தைப் பற்றிச்சிறிதும் லட்சியம் செய்யாமல்.

“சரித்திரம் எது? கதை எது?”

”சரித்திரம் பூராவும் உண்மை. கதை பொய்யாகவும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்று பிறக்கிறது.”

”புதிர் வலுக்கிறது” என்றான் விஜயகுமாரன் சிக்கலான அவள் பதிலைக் கேட்டு.

”இதில் புரியாத புதிர் ஏதுமில்லை வீரரே. தனி மனித ஆசாபாசங்கள் அவர்களைப் பற்றியது கதை. அந்தக் கதை நாட்டு நிகழ்ச்சிகளோடு கலக்கும் போது சரித்திரம் உதயமாகிறது” என்ற நந்தினி அத்துடன் இல்லாமல், “ஏன், உங்கள் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்னையைச் சந்தாசாகிப் வஞ்சித்துத் திருச்சியைக் கைப்பற்றினார். அன்னை தீக்குளித்தாள். அதற்கு வஞ்சம் தீர்க்க அவர் தலையை வெட்டிக் கொணர்வதாக நீங்கள் அரங்கன் முன்பு சபதம் செய்தீர்கள்…” என்று வாசகத்தை முடிக்காமல் விட்டாள் அவள். விஜயகுமாரன் முகம் கல்லாயிருந்தது. “சொல் மேலே” என்ற ஆணையிலும் கடுமை ஒலித்தது.

‘’அந்தச் சபதத்தைச் செய்ய நீங்கள் கூச்சலிட்ட போது நானும் டபீர் பண்டிதரும் ஆலயத்துள் வந்தோம். உங்களைச் சிறை செய்ய உத்தரவிட்டார் டபீர் பண்டிதர். அப்படி உத்தரவிடாவிட்டால்…’’ என்ற அரசகுமாரி புன்முறுவல் கொண்டாள்.

“உத்தரவிடாவிட்டால்?” விஜயகுமாரன் கேள்வி வறண்டக் குரலில் வெளிவந்தது.

”என்னை அப்படிப் பலவந்தமாக தூக்கிச் சென்றிருக்க மாட்டீர்கள். கிளைவைச் சந்தித்திராவிட்டால் தஞ்சை சுணங்குவதைக் கண்டதும் பிரிட்டிஷ் படையில் சேர்ந்திருக்க மாட்டீர்கள். சேர்ந்திராவிட்டால் இப்பொழுது தஞ்சையைப் பிரிட்டனுடன் இணைக்கத் தூதும் வந்திருக்க மாட்டீர்கள்” என்ற அரசகுமாரி அவனை கூர்ந்து நோக்கினாள்.

அவனும் தலை நிமிர்ந்து அவளை நோக்கி அவள் அறிவின் ஆழத்தை வியந்து, “தூது வராவிட்டால்?” என்று வினவினான்.

”தூது வராவிட்டால் சரித்திர புருஷனாக ஆகியிருக்க மாட்டீர்கள்” என்றாள் நந்தினி.

”நான் சரித்திர புருஷனாகிவிட்டதாக யார் சொன்னது உனக்கு?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”நிகழ்ச்சிகள் சொல்லுகின்றன. எங்கும் உங்கள் பேச்சாகவே இருக்கிறது. எதற்கும் மசியாத என் தந்தை கூட இந்த அரசின் விமோசனம் உங்கள் கையில் இருப்பதாக நம்புகிறார். நேற்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். ‘’அந்த நாயக்கர் வம்ச வாலிபன் காரணமாகத்தான் பிரிட்டிஷாரோடு சேர்ந்திருக்கிறான். சந்தாசாகிபைத் தீர்த்துக் கட்டுவதுதான் அவன் நோக்கம். நமது நோக்கமும் அது தான். அதை நாம் தனித்துச் செய்ய முடியாது. பிரிட்டிஷ் உதவி வேண்டும். அதை நமக்கு அளிக்க அந்த வாலிபன் தேவை’ என்று நேற்றுதான் தந்தை சொன்னார். இன்று நீங்கள் வந்து நிற்கிறீர்கள். இதை விதியின் நோக்கு என்று சொல்லவா? சரித்திரத்தின் சம்பவம் என்று விளக்கவா?” என்று வினவினாள் நந்தினி.

விஜயகுமாரன் சற்று நேரம் அந்த அறையில் உலாவினான். பிறகு அவள் எதிரே நின்றான். “நந்தினி விதி தனி மனிதர்களை மட்டும் ஆட்டுவிப்பதில்லை. நாடுகளையும் நாடுகளின் மூலம் சரித்திரத்தையும் ஆட்டுவிக்கிறது. இந்த நாட்டின் மீது கண்களை ஒட்டிப் பார். இது சிறிய நாடே அல்ல. உண்மையில் இது ஒரு உபகண்டம். இங்கு இஸ்லாமியரும் வாழலாம்; ஹிந்துக்களும் வாழலாம், சகோதரர் போல். சந்தாசாகிப்புக்கு மட்டும் பேராசை இல்லாவிட்டால், குர் ஆன் மீது இட்ட ஆணைப்படி என் தாயைச் சகோதரியாக நடத்தியிருந்தால் இப்போது பிரிட்டிஷார் எதிர்ப்பும் அவனுக்குத் தேவையில்லை. பிரெஞ்சு உதவியும் தேவையில்லை, என் விரோதமும் ஏற்பட்டிருக்காது. சந்தாசாகிப் என் அன்னையை அழித்தான், நான் அவனை அழிக்க விரும்புகிறேன். இப்போது பிரிட்டிஷாரும் அழிக்க விரும்புகிறார்கள். இந்த நாட்டின் சுதந்திரக் கதை இப்போது சந்தாசாகிபின் பேராசையால் அடிமைக் கதையாக மாறி இருக்கிறது. நீ சொன்னது போல் நான் கூடச் சரித்திர பாத்திரமாக மாறியிருக்கிறேன். ஆனால் அரசகுமாரி! நான் சரித்திரத்தில் ஜீவிக்க மாட்டேன், ஜீவிக்க விரும்பவில்லை” என்று கூறினான் உணர்ச்சியுடன்.

நந்தினி அவன் சொற்களைக் கேட்டு மனம் நெகிழ்ந்தாள். அதில் உங்கள் விருப்பம் என்ன இருக்கிறது?” என்றாள்.

விஜயகுமாரன் நின்ற நிலையில் சொன்னான், ”என் பெயரைச் சரித்திரத்தில் வராதபடி நானே அழித்து விடுவேன்!” என்று.

”எப்படி?”

“என் சபதம் நிறைவேறியதும் நான் மறைந்து விடுவேன்.”

”எங்கு மறைந்து விடுவீர்கள்?”

”ஏதோ ஒரு மூலையில். அதை இப்போது கேட்காதே”

“பின்னால் சொல்வீர்களாக்கும்?”

“ஆம்.”

“எப்பொழுதோ?”

“சந்தாசாகிபின் தலையைக் கொய்த பிறகு.”

”அது அத்தனை நிச்சயமா?”

”ஆம். அதில் சந்தேகம் வேண்டாம். அதற்காகவே நான் வாழ்கிறேன். நான் சிவகங்கையிலிருந்து கிளம்பிய போது தஞ்சைக்கு வர நினைக்க வில்லை. விதி இழுத்து வந்தது. அன்றிலிருந்து எது எது சந்தாசாகிப்புக்கு எதிரிடமோ, எந்த இடத்தில் சேர்ந்தால் சந்தாசாகிபை நான் அழிக்க முடியுமோ அங்கெல்லாம் சென்றேன்; சேர்ந்தேன். முதலில் தஞ்சை செயல்படுமென்று இங்குள்ள படையில் சேர்ந்தேன். பிறகு உன் தந்தை தீவிரமாகப் போரில் இறங்க மலைத்ததால் பிரிட்டிஷாரிடம் சேர்ந்தேன். இப்போதுள்ள நிலையில் என்றும் போர் துவங்கலாம். இன்று தமிழகம் போர் என்னும் எரிமலை மீது உட்கார்ந்திருக்கிறது, என்றும் மலை வெடிக்கலாம். எரிமலைப் பிழம்பு ஆறாக ஓடலாம், இந்நாட்டில். அந்த வெள்ளத்தில் அக்கினிப் பிழம்பில் தஞ்சை பிரிட்டனுடன் நிற்க வேண்டும். அப்போதுதான் தனி அரசாக நிற்கமுடியும்…” என்று வேகத்துடன் சொல்லிக் கொண்டு போனவன் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

“பிரெஞ்சு பலத்தைப் பிரிட்டன் உடைக்க முடியுமா?” என்று வினவினாள் அரசகுமாரி.

”கண்டிப்பாய் உடைக்க முடியும். தாமஸ் ஸாண்டர்ஸ் சாதாரண மனிதரல்ல. கிளைவ் இன்று வெறும் காப்டனாக இருக்கலாம். ஆனால் அவன் இந்த நாட்டில் பிரிட்டனின் கதியை நிர்ணயிப்பான்” என்றான் விஜயகுமாரன்.

”உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பெரிதும் நம்பிக்கையிருக்க வேண்டும்” என்றாள் நந்தினி.

முழு நம்பிக்கையிருக்கிறது. இல்லையேல் நான் அவன் படையில் சேர்ந்திருக்க மாட்டேன்; இங்கே தூதும் வந்திருக்க மாட்டேன், நந்தினி! பிரிட்டனுடன் சமயத்தில் சேருமென்று நீ கூறிய உறுதி சந்தாசாகிபின் கதியை நிர்ணயித்து விட்டது” என்று உணர்ச்சியுடன் பேசினான் விஜயகுமாரன்.

அவன் காட்டிய உணர்ச்சியும் வேகமும் அரசகுமாரியையும் பாதித்திருக்க வேண்டும். அவள் கட்டிலை விட்டிறங்கி அவனை நோக்கி வந்தாள். “ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறித் தலை நிமிர்ந்தாள்.

அவன் அவள் கண்களிலிருந்த வேட்கையைக் கவனிக்க வில்லை. தலைவணங்கி, “நன்றி நந்தினி” என்று கூறிவிட்டுத் திரும்ப முயன்றான்.
”தூதரே!” என்ற நந்தினியின் ஒரு சொல் அவனை நிற்க வைத்தது. அவளை நோக்கித் திரும்பவும் செய்தது.

“என்ன நந்தினி?” என்று வினவினான் அவன்.

”ஒப்பந்தம்…” என்ற நந்தினியின் கண்களில் ஏதோ மயக்கம் இருந்தது.

”அதற்கென்ன?”

”ஒப்பந்தம் எப்படிச் செய்கிறார்கள்?”

“காகிதத்தில் எழுதுகிறார்கள். அது தேவையில்லை எனக்கு. உன் சொற்களே போதும்.”

கடைசிச் சொற்களைக் கவனிக்காதது போல் பேசினாள் அரசகுமாரி. “காகிதத்தில் எழுதிய பின்…?” என்று வினவினாள்.

“முத்திரை வைக்கிறார்கள்” என்ற விஜயகுமாரன், ”அதுவா! அதுவா!” என்று உளறினான். உளறலில் ஆனந்தம் இருந்தது. அவன் பொறித்த முத்திரையில் இருவருக்கும் மயக்கமும் இருந்தது. முத்திரைக்குப் பின்பு சரேலென அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்து விட்டு வெளியேறினான், விஜயகுமாரன். வெகு வேகமாக அவன் போகும் வேகத்தைக் கண்ட நந்தினி புன்முறுவல் பூத்தாள். போன பின் நன்றாகப் பஞ்சணையில் மல்லாந்து இதயம் விட்டு நகைக்கவும் செய்தாள்.

ஆனால் வெளியே சென்ற விஜயகுமாரன் மனத்தில் நகைப்பில்லை. மயக்கமே அவனை உந்திச் சென்றது. தஞ்சை மன்னரிடம் விடைபெற்று வந்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட திருப்தியைக்கூட அனுபவிக்காமல் அவன் கடமையை நாடி வேகமாகச் சென்றான், வேலூரை நோக்கி. நான்கு நாள் பயணத்துக்குப் பிறகு வேலூருக்கு அப்பாலிருந்த முராரிராவின் பாசறையை அடைந்து, அவரிடம் பல நாட்கள் தங்கினபோதும் நந்தினியைப் பற்றிய மயக்கம் தீரவில்லை, வேகமும் குறையவில்லை. கவர்னர் அனுப்பிய காரியங்களை முடித்துக் கொண்டு அவன் சென்னைக்குக் கிளைவைச் சந்திக்க வந்த போது மாதம் இரண்டு முடிந்து விட்டது.

அந்த இரண்டு மாதங்களும் ஸெய்ன்ட் ஜார்ஜ் கோட்டையை மிகவும் கிளைவ் பலப்படுத்தியிருந்தாலும், அதில் பலவீனமும் இருந்ததைக் கவனித்த விஜயகுமாரன் கோட்டைக்குள் நுழைந்த போது, நன்றாக இருட்டிவிட்டது. இருட்டில் இரண்டு மூன்று வெள்ளைக்கார சோல்ஜர்கள் குடிவெறியில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்ல. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைப் பிடித்து ரகளை செய்யவும் முயன்றார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைப் பலவந்தமாக இழுத்து அணைக்கவும் முற்பட்டான். அந்தச் சமயத்தில் சரேலெனப் பயங்கரமாக ஒலித்தது விஜயகுமாரன் கைத்துப்பாக்கி. வெள்ளைக்காரன் அலறி விலகினான். அவன் விலகியதால் அப்பெண்ணின் முகத்தில் சார்லஸ் ஸ்ட்ரிட்டின் வீதி விளக்கு விழுந்தது. அந்த முகத்தைக் கண்ட விஜயகுமாரனுக்குத்திக் பிரமை மீறியது.

Previous articleRaja Perigai Part 2 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here