Home Historical Novel Raja Perigai Part 2 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 2 Ch18 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch18 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 18. போர்க் காதல்

Raja Perigai Part 2 Ch18 | Raja Perigai | TamilNovel.in

வீதி விளக்கில் தெரிந்த அழகு முகம் பல நாட்களுக்கு முன்பு கிளைவிடமிருந்த லாக்கெட்டிலிருந்த அதே முகம். அந்த முகத்துக்குடையவளை, கிளைவின் காதலியை, கையைப் பிடித்து இழுத்து அணைக்கவும் முயலக்கூடிய துணிவுள்ளவன் எவனாக இருக்க முடியும் என்பதை அறியக் கையில் புகைந்து கொண்டிருந்த துப்பாக்கியுடன் புரவியிலிருந்து குதித்த விஜயகுமாரன் புரவி மீது சேணத்தைப் போட்டு விட்டு வெள்ளை சோல்ஜர்கள் இருந்த இடத்தை அணுகலானான்.

அந்த இடம் கிளைவும் அவனது நண்பன் எட்மண்ட் மாஸ்கலீனும் தங்கியிருந்த சார்லஸ் ஸ்டிரீட் என்றழைக்கப்பட்ட வீதியின் முகப்பு. ஸெயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு நேர் எதிரில் செல்லும் பாதையை எதிர்த்து, செயின்ட் மேரீஸ் சர்ச்சுக்குப் பக்கத்தில் வடக்குத் தெற்காக ஓடும் சார்லஸ் தெருவில், அதுவும் கிளைவின் இருப்பிடத்துக்கு வெகு அருகில் அந்த அநீதத்தை விளைவிக்க க்கூடிய சோல்ஜர்கள் யாராக இருக்கலாம் என்று அறிந்து கொள்ள அவர்களை அணுகிய விஜயகுமாரன், ”வாட்டு யூ மின்பைதிஸ்?” என்று ஆங்கிலத்தில் சீற்றத்துடன் வினவினான்.

விஜயகுமாரன் கைத்துப்பாக்கிச் சுட்டதால் அலறிய சோல்ஜர் நன்றாகக் குடித்திருந்ததால் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து, “ஹுத டெவில் ஆர் யூ?” என்று வினவினான்.

விஜயகுமாரன் அவனை உற்று நோக்கினான் பல விநாடிகள். கைத்துப்பாக்கியால் அவனைப் பயமுறுத்த அவன் காலடிக் கருகில் விஜயகுமாரன் சுட்டானேயொழிய அவனைக் காயப்படுத்தவோ கொல்லவோ சுடவில்லையாகையால், அவனுக்கு எந்த வித ஹானியும் இல்லாதிருந்ததால், அவன் அசட்டுத் துணிச்சலை மீண்டும் காட்டத் தொடங்கி, ‘யூ ஆர் எ நேடிவ்? வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?” (நீ ஒரு சுதேசி இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்)” என்று வினவினான், சொற்களைக் குளறிக் கொட்டி.

அவனது துணைவர்களான மற்ற இரு சோல்ஜர்களும் ”எஸ், ஹு ஆழ் யூ?” என்று குடிவெறியால் தமிழின் தனி எழுத்தான ‘ழ்’ ஐயும் ஆங்கிலத்தில் இணைத்து உச்சரித்துக் கொண்டே அவனை அணுக முற்பட்டார்கள்.

”ஸ்டே வேர் யூ ஆர்” என்ற விஜயகுமாரன் அதிகார அதட்டலும் அதைத் தொடர்ந்து அவன் கையில் மீண்டும் எழுந்த துப்பாக்கியும் அவர்களை எட்டவே நிற்க வைத்தன.

‘நான் லெப்டினட் விஜயகுமார் திரும்பிச் செல்லுங்கள். காலையில் விசாரிக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறிய விஜயகுமாரன், ”ரைட் அபௌட்டர்ன், மார்ச்” என்று உத்தரவும் இட்டான் ராணுவ தோரணையில்.

இந்த உத்தரவு அவன் குரலில் தொனித்த அதிகார தோரணையும் எல்லாவற்றையும்மிட அவன் கையில் எழுந்து அவர்களை நோக்கிப் பயங்கரமாகக் குறி வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியின் புகையும் குழலும் அவர்களைத் திகைக்க வைத்ததாலும், குடிவெறியையும் ஓரளவு போக்கடித்ததாலும் அவர்கள் திரும்பிச் செய்ய ராணுவ பாணியில் கால்களைச் சேர்த்துச் சலாம் செய்தானர். “நீ போவதற்கு முன்பு அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேள்’ என்றும் கூறினான் விஜயகுமாரன் அவளை அவமதித்தவனை நோக்கி. அந்த சோல்ஜரும், ”ஸாரி மேடம்” என்று கூறித் தலை வணங்கிவிட்டுத் திரும்பவே மூன்று சோல்ஜர்களும் பாசறையை நோக்கி நடந்தனர். நடந்தபோது கொஞ்சம் பாக்கியிருந்த குடிவெறியால் ஆங்கிலத்தில் பாடிக்கொண்டும் பரஸ்பரம் அணைத்துக் கொண்டும் சென்றனர்.

அவர்கள் செல்லும் வரை சிலைபோல் நின்றிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண், அவர்கள் சிறிது தூரம் சென்றதும் விஜயகுமாரனை நோக்கினாள் பிரமிப்பு நிரம்பிய கண்களுடன். “உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றும் கூறினாள்..

அவள் சுத்தத் தமிழைக் கண்டு பிரமித்த விஜயகுமாரன், ”உங்களுக்கு யார் தமிழ் கற்றுக் கொடுத்தது? எட்மண்டா , கிளைவா?” என்ற வினவினான்.

அவன் சொற்களிலிருந்து தான் யார் என்பதை அவன் ஏற்கெனவே புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை அந்தப் பெண் ஊகித்துக் கொண்டாளாகையால், ”அப்படியானால் என்னை உங்களுக்கு…” என்று துவங்கி, பேச்சை நடுவில் நிறுத்தினாள்.

”தெரியும்” என்று வாக்கியத்தைப் பூர்த்தி செய்த விஜயகுமாரன், “நீங்கள் மார்கரெட் மாஸ்கலீன் என்பது தெரியும், எட்மண்டின் சகோதரி என்பது தெரியும், கிளைவின் காதலி என்பது தெரியும். நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி’ என்று சொன்னான் புன்சிரிப்புடன்.

அவள் லேசாகை நகைத்தாள் தனது முத்துப் பற்களைக் காட்டி. அந்த நகைப்பின்போது நன்றாகச் சிவந்துவிட்டது அந்த வெள்ளை முகம். ”யூ ஆர் ப்ரிஸ்யூமிங் டூ மச்” என்று லிஜயகுமாரனை நோக்கிக் கூறிய அவள் சொற்களில் வெட்க மிருந்தது. முகத்தில் குழப்பமிருந்தது.

“இல்லை மிஸ் பெக்கி நான் ஊகித்து எதுவும் சொல்ல வில்லை” என்று விஜயகுமாரன் கூறியதும் அந்தப் பெண்ணின் வியப்பு எல்லை மீறியது.

”யூ! யூ!” என்று ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்தாள்.

”தமிழில் பேசுங்கள், உங்களுக்குத்தான் தமிழ் தெரிகிறதே!”

அவள் சிறிது சிந்தித்துவிட்டு அவனை மெல்ல அணுகி அவன் கையின் மேல் தனது கையை வைத்தாள். வெள்ளைக் காரர்களின் வழிகளை நன்றாக அறிந்திருந்த விஜயகுமாரனும் தனது கையைச் சிறிது தூக்கி அவள் கை அத்துடன் இணைய இடங் கொடுத்தான். அந்த அவன் செய்கையைக் கண்டு பிரமித்த அந்த அழகி, ”வெள்ளைக்காரர் வழக்கங்கள் உங்களுக்கு நன்றாகப் படிந்திருக்கின்றன” என்று கூறிக் கொண்டே அவன் கையில் மேல் தன் கையை வைத்து நடக்கலானாள். விஜயகுமாரனும் அவளுடன் நடந்து சென்றான், சாட்சாத் வெள்ளைக்காரனைப் போல். வெள்ளைக்காரர் பழக்க வழக்கங்கள் எனக்கு மட்டுமல்ல. இன்னும் பல தமிழருக்கும் படிந்திருக்கின்றன’’ என்று அவளுடன் நடந்த வண்ணம் முந்திய அவள் கேள்விக்குப்பதிலும் சொன்னான்.

பெக்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட மார்க்ரெட் அன்று வெள்ளை வெள்ளேரென்ற சிலக் கௌன் அணிந்திருந்தாள். காலையும் மறைத்துத் தொங்கிய அந்த கௌனுக்கு மேலேயிருந்த பகுதியின் பிரில்கள்’ அந்தக் காலத்து வழக்கப்படி நிரம்பவைக்கப் பட்டிருந்ததால் நன்றாகப் பருத்திருந்த அவள் மார்பகத்தைக்கூட கௌனின் மேல்பாகம் ஓரளவு மறைத்திருந்தது. இந்த அழகிக்குக் கிளைவ் தனது இதயத்தைப் பறி கொடுத்ததில் தவறில்லையென்றே விஜயகுமாரன் நினைத்தான்.

அந்த நினைப்புடன் மௌனமாக நடந்த விஜயகுமாரனிடம் தானாகவே பேச்சைக் கொடுத்த மார்க்கரெட், ”என்னை பெக்கி என்று அழைத்தீர்கள்” என்று குறிப்பிட்டாள் மெதுவாக.

”ஆம்” என்ற விஜயகுமாரன், இந்த நிலையில் நந்தினி என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாள்?’ என்று உள்ளூறக் கேட்டுக் கொண்டதால் அவன் உதடுகளில் புன்முறுவலும் தவழ்ந்தது.

நேரே தெருவைப் பார்த்துக் கொண்டு நடந்த அந்தப் பெண், ”அது என் தாய் தந்தையர் அழைக்கும் செல்லப் பெயர்” என்று

கூறினாள்.

”தெரியும்.”

”என் குடும்பத்தார் அப்படி என்னை அழைக்கலாம்…”

“சரி..”அல்லது…”

”உங்கள் காதலர் அழைக்கலாம்…”

இதைக் கேட்ட அவள் சட்டென்று நின்று திரும்பி அவனை நோக்கினாள். “என்ன சொல்கிறீர்கள்?”

”உள்ளதைச் சொன்னேன்” என்றான் விஜயகுமாரன்.

”எது உள்ளது?”

”செல்லப் பெயரால் உங்களை உங்கள் காதலரும் அழைக்கலாம் என்பது.”

”எனக்கு யார் காதலர்…?”

இந்தக் கேள்வி விஜயகுமாரனை அசர வைத்தது. ‘’அது கூடத் தெரியாதா?” என்று வியப்புடன் கேட்டான். அத்துடன் “ஐ தாட்…” என்றும் ஏதோ துவங்கினான்.

‘யூ தாட்?” இதைக் கேட்ட போது அவள் குரலில் கோபமில்லை. வியப்பு இருந்தது.

விஜயகுமாரன் அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. சிறிது நேரம் மௌனம் சாதித்தான். ‘நெவர் மைண்ட். கம்” என்று அவளை அழைத்துக் கொண்டு கிளைவும் எட்மண்டும் இருந்த விடுதிக்குச் சென்றான். அந்த விடுதிக்குள் கிளைவைக் காணோம். எட்மண்ட் மட்டுமே இருந்தான். ‘ஓ விஜயகுமார்/யூடு ஹாவ் பிகம் ஃப்ரண்ட்ஸ் (நீங்கள் இருவரும் நண்பர்களாக்கி விட்டீர்களா?)” என்று வினவினான் எட்மண்ட்.

”இவர் என்னை இரு குடிகாரர்களிடமிருந்து காப்பாற்றினார்” என்றாள் மார்க்கரெட் தனது குழப்பத்தை அடக்கிக் கொண்டு.

”சோல்ஜர்களிடமிருந்தா?”

”எஸ்” என்றாள் அவள்.
‘’ஆல் ரைட். யூ கோ இன். (சரி, நீ உள்ளே போ)” என்று எட்மண்ட் கூறி அவளை அனுப்பிவிட்டு, “தாங்க் யூவிஜயகுமார்” என்று நன்றி கூறினான் எட்மண்ட்.

”எஸ்.”

”நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்; கிளைவ் எங்கே?”

“இதைக் குடும்ப விடுதியாக்கி விட்டார் காப்டன். அவர் நாலு வீடு தள்ளிச் சென்று விட்டார்” என்று அறிவித்தான் எட்மண்ட்.

“இந்த பெண் இருப்பதாலா?”

“ஆம்…

“இருந்தால் என்ன?” “கல்யாணமாகாதவள்.”

”ஆக வேண்டியது தானே?”

”ஆம்.”

“அப்படியானால்…?” என்று வினவினான் விஜயகுமார்.

எட்மண்ட் முகத்தில் திடீரென அச்சத்தின் சாயை படர்ந்தது. ”அப்படியானால் என்ன?” என்று வினவினான் சற்று அச்சம் குரலிலும் ஒலிக்க.

எட்மண்ட் தனது தங்கையின் காதலை மறைக்க பார்க்கிறானென்பதை உணர்ந்து மேற்கொண்டு எதுவும் பேசாமல், ”பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே நடந்தான்.

அவன் போகுமிடமெல்லாம் அவனைப் பின்தொடரும் குணமுள்ள அவன் புரவி வாயிலில் நின்று கொண்டிருந்ததைக் கவனித்த விஜயகுமாரன் அதன் கன்னத்தைத் தடவிக் கொடுத்துவிட்டுக் காப்டன் கிளைவ் இருந்த விடுதியை நோக்கி நடந்தான்.

அவன் உள்ளே நுழைந்த போது முதல் அறையிலேயே காப்டன் கிளைவ் பெரிய ‘மாப்’ ஒன்றை மேஜை மீது பரப்பி அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததால் நண்பன் உள்ளே நுழைந்ததைக் கூட அவன் அறியவில்லை பல விநாடிகள். ”காப்டன் ராணுவ ‘மாப்’பைப் பார்ப்பதில் அதிக சிரத்தை கொண்டிருக்கிறார் போலிருக்கிறது!” என்று விஜயகுமாரன் கூறிய பிறகே அவனைக் கவனித்த கிளைவ், ”எப்போது வந்தாய் விஜயகுமார்?’ என்று வினவினான்.

”வந்து கொண்டே இருக்கிறேன்” என்று பதில் கூறினான் விஜயகுமாரன்.

”போன வேலை?” “வெற்றிதான்.” “இங்கு …”

”வந்த வேலையும் வெற்றிதான்” என்று விஜயகுமார் நகைத்தான்.

”என்ன விஜயகுமார்?” கிளைவின் குரலில் லேசாக நகைப் பொலி இருந்தது.

”நான் உன் காதலியை பார்த்தேன்” என்றான் விஜயகுமார். கிளைவின் அடுத்த கேள்வி விஜயகுமாரனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. “யாரது?” என்று கேட்டான் கிளைவ்.

”மிஸ் மார்க்கரெட்” என்ற விஜயகுமார், “இப்பொது தான் அவளைக் குடிகார சோல்ஜர்களிடமிருந்து காப்பாற்றி விட்டு வருகிறேன்” என்று கூறினான்.

கிளைவ், ”தாங்க்ஸ்’ என்று சம்பிரதாயமாகக் கூறிவிட்டு, ”விஜயகுமார்! அவளை நான் காதலிப்பது அவளுக்குத் தெரியாது” என்றும் ஒரு புதிரைப் போட்டு விட்டான்.

”ஏன்?”

“நான் சொல்ல வில்லை.”

”விசித்திரமாக இருக்கிறது.”

கிளைவ் சிறிது நேரம் நன்றாக நிமிர்ந்து நின்றான். ”விஜயகுமார், காரணம் சொல்லட்டுமா?” என்று வினவினான்.

”சொல் கிளைவ்.”

”எனக்குக் காதலில் கவனம் செலுத்த இப்பொழுது அவகாசமில்லை.”

”ஏன்?”

”கர்நாடகத்தின் இறுதிப் போர் துவங்கி விட்டது. எனக்குப் பெண் காதலை விட போர்க் காதல் அதிகம்” என்றான் கிளைவ்.
அவன் முகத்தில், மேலிருந்த பவர் விளக்கின் வெளிச்சம் நன்றாக விழுந்தது. அந்த வெளிச்சத்தில் கிளைவின் வீர வதனத்தில் ஜெயஸ்ரீ ஜொலித்தாள். அப்படி ஜொலித்த ஜெயஸ்ரீயுடன் தனது ஷர்ட் பையில் கையை விட்டு முத்திரை உடைக்கப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்த கிளைவ், ”இதைப் பார், புரியும்” என்றும் கூறினான், விஜயகுமாரனிடம் கடிதத்தை நீட்டி. கடிதத்தை, கையில் வாங்கிய விஜயகுமாரன் உறையிலிருந்து அதை எடுத்துப்படித்தான். பிறகு கண்களை உயர்த்தினான் கிளைவை நோக்கி. ”திஸ் இஸ் ஸீரியஸ்” என்று கூறவும் செய்தான்.

”திஸ் இஸ் வார், ரியல் வார்” என்றான் கிளைவ் உற்சாகத்துடன்.

Previous articleRaja Perigai Part 2 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here