Home Historical Novel Raja Perigai Part 2 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

40
0
Raja Perigai Part 2 Ch19 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch19 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 19. அன்புச் சதி

Raja Perigai Part 2 Ch19 | Raja Perigai | TamilNovel.in

கிளைவ் தன்னிடம் காட்டிய கடிதத்தில் கண்ட விஷயம் கவலை உண்டாக்கக் கூடியதாக இருக்க, கவலைக்குப் பதில் கிளைவ் உற்சாகத்தை அதிகமாகக் காட்டவே, விஜயகுமாரன் விவரணத்துக்கும் அப்பாற்பட்ட வியப்பை அடைந்து, ”போர் மூளுவதில் என்ன அத்தனை உற்சாகம் உனக்கு?” என்று விசாரித்தான் தனது நண்பனை ஏறெடுத்து நோக்கி.

”கடிதத்தைச் சரியாகப் பார்த்தாயா?” என்று பதிலுக்கு வினவிய கிளைவின் குரலில் ஆரம்ப உற்சாகம் சிறிதளவும் குறையவில்லை .

”படித்தேன், கவர்னர் ஸாண்டர்ஸ் எழுதியிருக்கிறார், காப்டன் ஜின்ஜின்ஸை ஆற்காட்டின் மீது படையெடுக்க அனுப்பியிருப்பதாக…’ என்ற விஜயகுமாரனின் இதயத்தில் வேதனையிருந்ததால் அது அவன் குரலிலும் பிரதிபலித்தது.

கிளைவ் அந்த வேதனையில் பங்கு கொள்ளவில்லை. லேசாக நகைத்துக் கொண்டே சொன்னான், ‘ஜின்ஜின்ஸுடன் 100 ஐரோப்பிய சோல்ஜர்களும், 3,000 சிப்பாய்களும் சென்றிருக்கிறார்கள்” என்று.

‘ஆம்” என்றான் விஜயகுமாரன் கடிதத்திலிருந்த விஷயத்தைக் கிளைவ் எதற்காகத் திருப்பிச் சொல்கிறான் என்பதை அறியாமல்.

”இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று வினவினான் கிளைவ்.

”பிரிட்டிஷ் கவர்னர் வலுச் சண்டையில் இறங்கிவிட்டார் என்று பரிபூரணமாகத் தெரிகிறது.” விஜயகுமாரன் பதிலில் வெறுப்பு இருந்தது.

”அதல்ல பொருள்” என்றான் கிளைவ். ”வேறு என்ன?”

“முதல் முதலாகப் பிரிட்டிஷார் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து விட்டார்கள் என்று அர்த்தம்…” என்று சற்று நிதானித்த கிளைவ், விஜயகுமாரனை அணுகி மறுபடியும் இயற்கைத் தோஷத்தால் ஆங்கிலத்தைக் கலந்து, ”லுக் ஹியர்மை ஃப்ரண்ட் இப்பொழுது பிரிட்டிஷார் திட்டமான நடவடிக்கை எடுக்காவிட்டால் தேவில் பிஃபினிஷ்ட்” என்று கூறினான்.

அது உண்மை என்று தெரிந்ததால் விஜயகுமாரனும் தலையை ஆட்டினான். “தட் ஈஸ்ட்ரு ” என்றும் கூறினான்.
சந்தாசாகிப் ஆற்காட்டில் வலுவான படையுடன் இருக்கிறார். புதுச்சேரியில் டூப்ளே பூரண பலத்துடன் இருக்கிறார்.

தட்சிணசுபாவான அவுரங்காபாத்தில் டி புஸ்ஸியின் ஆட்சி நடக்கிறது. தட்சிணத்தில் முக்கிய ஸ்தானங்கள் பிரிட்டிஷ் படையைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது ஒன்று நாம் முன்னேறித் தாக்க வேண்டும். அல்லது அழிபட வேண்டும். முன்னேறித் தாக்க கவர்னர் தீர்மானித்து விட்டார். இந்த ஒரே சந்தோஷச் செய்தியை முதல் முதலாக இப்பொழுது தான் நான் கேள்விப்படுகிறேன்” என்று விளக்கினான் கிளைவ்.

விஜயகுமாரன் சிந்தனையில் இறங்கினான். கிளைவின் உற்சாகம் அவனுக்கு இல்லை. பிரெஞ்சு பலத்தையும் ஆற்காட்டு நவாப் பலத்தையும் ஒருங்கே தாக்க நமக்குப் பலம் இருக்கிறதா?” என்று வினவினான் சிறிது நேரத்திற்குப் பிறகு சந்தேகத்துடன்.

”எந்தப் பலத்தைப் பற்றிக் கேட்கிறாய்?”

“பலத்தில் பல வகை இறக்கிறதா?”

“படை பலம், புத்தி பலம் என்ற இரண்டு இருக்கிறது.”

“டூப்ளே உங்களை விட இரண்டில் ஏதாவது ஒன்றில் குறைந்தவரா?”

“இப்பொழுது அவருக்குப் படைபலம் அதிகம். இதுவரை ஏற்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டு பார்த்தால் புத்தி பலமும் அதிகம் தான்.”

”இரண்டில் ஏதாவது ஒன்றில் இப்பொழுது குறைந்து இருக்கிறதா?”

”குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது…” என்று கூறிய கிளைவ் மேலும் சொன்னான்: ”விஜயகுமார், டூப்ளே இதுவரையில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். இப்போது அவரது போக்குச் சரியாய் இல்லை . பிரெஞ்சுப் படையின் சிறந்த தளபதியான டி புஸ்ஸியை ஒளரங்காபாத்துக்கு அனுப்பிவிட்டார். செஞ்சிக் கொட்டையைப் பிடித்த அந்த மகாவீரன் சென்றதில் டூப்ளேயின் ஒரு கை உடைந்து விட்டது. தவிர, மனிதனுக்கு ஆசை இருக்கலாம்; பேராசை இருக்கக்கூடாது.”

“டூப்ளேக்கு என்ன பேராசை?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”தென்னிந்தியாவைப் பிரெஞ்சு மாகாணமாக்கப் ‘பார்க்கிறார். அதற்காகக் கையை அவுரங்கபாத் வரையில் நீட்டி விட்டார். அது எட்டாத தூரம். நெருக்கடி இங்கே ஏற்பட்டால் அங்கிருந்து படையோ, டி புஸ்ஸியோ இங்கு வரமுடியாது. டூப்ளேக்கு உதவி சந்தா சாகிப் தான். அவருக்குச் சந்தா சாகிப் என்றால் நமக்கு முகம்மது அலி. சந்தாசாகிப் டூப்ளேயின் கருவி என்றால், முகம்மது அலி பிரிட்டனின்கருவி.”

“பிரெஞ்சுக் கருவி பலமானது” என்று சுட்டிக் காட்டிப் புன்முறுவல் கொண்டான் விஜயகுமாரன்.

”பிரிட்டிஷ் கருவிக்கு நாம் பலம் தருவோம்” என்றான் கிளைவ்.

”கருவிக்குப் பலம் தரமுடியுமா?”

“கையாள்பவனைப் பொறுத்தது.”

“கருவி மொக்கையாய் இருந்தால்!”

”சாணை பிடிப்போம்.”

“எப்படியோ?”

”நாம் போரில் இறங்கினால் முகம்மது அலி திருச்சியில் உட்கார்ந்திருக்க முடியாது, போர் அவர் பெயரால் அவரைச்சாக்காக வைத்து நடப்பதால். நமது முயற்சி அவருக்கும் துணிவை உண்டாக்கும். அவரது படைகளும் நம்மோடு சேர்ந்து போராடும்” என்ற கிளைவ், “இப்போது சந்தேகம் தீர்ந்ததா?” என்று கேட்டான்.

“இல்லை” என்றான் விஜயகுமாரன் திட்டமாக. ”ஏனோ?” கிளைவின் கேள்வியில் பிரமிப்பு இருந்தது.

”இந்தப் போரை நடத்தப் போவது காப்டன்ஜின்ஜின்ஸ்.”

“அதனால் என்ன?”

‘’திட்டமான முடிவுகளை எடுக்க முடியாதவன்.”

இதைக் கேட்ட கிளைவின் முகத்தில் வியப்பு பெரியதாக விரிந்தது. ”ஹொய் டூ யூ ஸே தட்?” உணர்ச்சி மிகுதியில் ஆங்கிலத்தில் இறங்கினான்.

“ஐ கான் ரீட் எ மான் ஆஸ் ஐ ரீட் எ புக் (புத்தகத்தைப் படிப்தைப் போல் ஒரு மனிதனையும் என்னால் எடை போட முடியும்” என்றான் விஜயகுமாரன்.
காப்டன் ஜின்ஜின்ஸைப் பார்த்து விஜயகுமாரன் போட்ட எடையில் தவறு இல்லை என்பது கிளைவுக்குத் தெரிந்தது. ஆனால் விஜயகுமாரன் படைத் தலைவர்களை அத்தனை தூரம் எடை போட முடியும் என்று அவன் அடியோடு நினைக்காததால் சிறிது நேரம் எதிரேயிருந்த மேஜை மீது கைகளை ஊன்றி மெளனமாக நின்றான். பிறகு கேட்டான், “ஹாவ் யூ எனி ஆல்டர்நேடிவ்” (வேறு மாற்று ஏதாவது இருக்கிறது)” என்று.

“இருக்கிறது. “விஜயகுமாரன் பதில் சந்தேகத்துக்கிடமின்றி வெளிவந்தது.

”என்ன மாற்று?”

”பிரிட்டிஷ் படையில் ஒருவன் இருக்கிறான் துணிவுடன் காரியங்களை நிறைவேற்ற.”

“அவன்?”

”ராபர்ட் கிளைவ்” இதை மிகச் சர்வசாதாரனமாகச் சொன்னான் விஜயகுமாரன். இருப்பினும் அவன் குரலில் பெரு உறதியும் நம்பிக்கையும் இருந்தது.

கிளைவ் தர்ம சங்கடத்துக்கு உள்ளானான். ”யூ ஆர் ஓவர் எஸ்டிமேடிங்மி’ என்றும் கூறினான் தனது பார்வையை மேஜை மீதிருந்த ‘மாப்’ பில் நாட்டி.

”’ராபர்ட்!”. விஜயகுமாரன் அழைப்பில் உறுதியும் உணர்ச்சியும் கலந்திருந்தன.

”எஸ்!”

விஜயகுமாரனின் முகத்தில் சாந்தி நிலவிக் கிடந்தது. “நான் முகஸ்துதி செய்பவனா?” என்று வினவினான் அவன்.

“இல்லை” என்றான் கிளைவ் சங்கடத்துடன்.

‘உன் சக்தி எனக்குத் தெரியும், ஸாண்டர்ஸுக்குத் தெரியாவிட்டாலும். தேவிக் கோட்டையில் உன் துணிவைப் பார்த்திருக்கிறேன் இருமுறை. கோழையான காப்டன் கோப்புடன் வந்து தோல்வியடைத்த சமயத்திலும் நீ கோட்டையைத் தாக்கத் தயாராயிருந்தாய். ஆனால் தலைவன் சரியாக இல்லாததால் அன்று தோல்வி ஏற்பட்டது உனக்கு. மறு முறை வெற்றி கொண்டாய் தேவிக் கோட்டையை…”

“அப்படியா…?”
‘பிரிட்டிஷ் கவர்னர் உன்னைச் சரியாக உபயோகப்படுத்தவில்லை. நீ ஏற்கனவே சாணை பிடிக்கப்பட்ட கருவி. நீ இருக்க மொக்கைகளை அனுப்புகிறார் கவர்னர் முக்கிய காரியங்களுக்கு.”

பிறகு இருவருமே பேசவில்லை. கடைசியில் கிளைவ் கேட்டான். “இந்தக் கோட்டையை பார்த்தாயா?”

”பார்த்தேன்.”

“எப்படியிருக்கிறது?”

விஜயகுமாரன் அதற்கு உடனடியாகப் பதில் கூறவில்லை. கிளைவின் முன்பாக அறையில் மிறிது நேரம் உலாவினான். பிறகு கூறினான். “‘கிளைவ்! இந்த மதறாஸ் பட்டணம் சரியாக இணைக்கப்படவில்லை. மூன்று பகுதிகளாய்ப் பிரிந்து கிடக்கிறது. வொய்ட் டவுன் என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டைப் பகுதியில் வெள்ளையர் மட்டும் வசிக்கிறார்கள். இது சுமார் 700 கெஜம் சமுத்திரத்தை நோக்கியுள்ள கிழக்குப் பகுதியில் ஓடுகிறது. அகலம் உட்புறமாக 200 அடி. இதற்குப் புறம்பே மேற்கேயுள்ள பட்டணம் 1000 கெஜம் நீளம். இது பிளாக் டவுன். என்னைப் போன்ற கறுப்பர் வசிக்கும் பகுதி. பிளாக் டவுனுக்கு அப்பால் பெத்து நாயக்கன் பேட்டையும் முத்தியால் பேட்டையும் இருக்கின்றன. இங்கே கறுப்பர்களும் வெள்ளைக்காரர்களும் பங்களாக்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடைசிப் பகுதியின் நீளமும் 1000 கெஜம், அகலம் 1000 கெஜம். இந்த மூன்று பிரிவுகளை இணைக்கக் காப்டன் கிளைவ் அல்ல, ஜெனரல் லாரன்ஸே வந்தாலும் முடியாது. இந்தக் கோட்டையை மட்டும் பாதுகாக்கக்கூடப் போதிய படைத்தளம் இங்கில்லை. இருந்தால் கிளைவின் காதலியைப் பகிரங்கமாகச் சோல்ஜர்கள் தொடத் துணிவார்களா?” இதைச் சொன்ன விஜயகுமாரன் புன்னகை கொண்டான்.

நண்பனின் புன்னகையைப் பறக்க அடிக்க ஒர பதிலைச் சொன்னான் கிளைவ், ”முதலில் அவள் என் காதலி அல்ல. அப்படியே இருந்தாலும் அது சோல்ஜர்களுக்குத் தெரியக் காரணமில்லை.”

”என்ன சொல்கிறாய்?”

”அந்த பெண்ணை என் தலையில் கட்ட எட்மண்ட் பார்க்கிறான்” என்ற கிளைவ் மீண்டும் நகைத்தான். “நீ அன்று பார்த்த லாக்கெட்டை எட்மண்ட் நான் பார்க்கும் இடத்தில் வேண்டுமென்றே போட்டிருந்தான். அவனைத் திருப்தி செய்ய அதைத் திருடி வைத்துக் கொண்டேன். அவளை எனக்கு மனைவியாக்க அவன் தான் அவளை இங்கு வரவழைத்தான். இது அவன் அன்புச்சதி. அதனால் அந்த இடத்தைக் காலி செய்து இங்கு வந்தேன். அவள் இங்கே ஏன் வந்திருக்கிறாள் என்பது எட்மண்டைத் தவிர யாருக்கும் தெரியாது. தெரிந்தால் சோல்ஜர்கள் அவள் அருகே போயிருக்க மாட்டார்கள். அவளை மணம் செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இப்போது அது முடியாது. அதற்கு அவகாசமும் இல்லை. நாளைக் காலை நாம் புறப்படுகிறோம்.”

”எங்கு?”

”வால்கொண்டாவுக்கு” என்றான் கிளைவ் சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பில் போர் வெறி இருந்ததை விஜயகுமாரன் கண்டான். கண்டதால் பிரமிப்புடன் கிளைவை நோக்கவும் செய்தான்.

Previous articleRaja Perigai Part 2 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here