Home Historical Novel Raja Perigai Part 2 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 2 Ch2 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch2 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 2. விட்ட கதை தொட்ட கதை

Raja Perigai Part 2 Ch2 | Raja Perigai | TamilNovel.in

ஆற்காட்டு நவாப் அன்வருதீனை ஆம்பூரில் முறியடித்ததால் வெற்றி வெறியுடன் வந்திருந்தவரும் பழைய ஆற்காட் நவாப் தோஸ்த் ஆலியின் மூன்றாவது பெண்ணின் கணவரும், குலாம் ஹுசேன் தோஸ்த் கான் என்கிற இயற்பெயரை உடையவரும், திருச்சி, திண்டுக்கல் கோட்டைகளையும் மதுரையையும் முன்பு பிடித்து இஸ்லாமியக் கொடியை அங்கெல்லாம் நாட்டியவரும், மகா வீரனுமான சந்தாசாகிப் உணவருந்தி முடித்ததும் அவரிடம் பட்லர் ஒரு தட்டை நீட்டியதையும் அதிலிருந்து ஒரு சிறு காகிதத்தை எடுத்துப் பார்த்ததும், அவருடைய முகம் வெளுத்துக் கைகள் நடுங்கியதையும் காணத் தவறாத கவர்னர் டூப்ளே, பல கேள்விகளை உதிர்த்த தமது கண்களைச் சந்தாசாகிப்பின் மீது திருப்பினார்.

எதிரே உட்கார்ந்திருந்த புஸ்ஸியின் கூரிய கண்களும் சந்தாசாகிப்பைச் சந்தேகத்துடன் நோக்கின. சாதாரணமாக எதற்கும் கலங்காத சந்தாசாகிப் சட்டென்று அந்தக் கடிதத்தை மறைத்திருந்தாலும், மேற்கொண்டு சிறிது மது வகையறா கொண்டு வரச் சொல்லி அருந்தி தமது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டிருந்தாலும், கவர்னர் டூப்ளேயின் கண்களை மட்டும் அவர் ஏமாற்ற முடியவில்லை.

விருந்தின் அடுத்த அம்சமாகப் ‘பால்’ என்ற ஆண் பெண் நடன வகை துவங்கி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி, சந்தாசாகிபின் வெற்றிக்கு உச்ச முத்திரை வைத்திருக்க டூப்ளே ஏற்பாடு செய்திருந்தார். அத்தகைய நடனத்தை எதிர்பார்த்துப் பக்கத்து ஹாலில் பியானோவும் பிடில்களும் கூடப் பலமாக முழங்கின. ஆனால் அவை ஆனந்தத்தைக் குலைக்க வந்த சோக கீதத்தையே எழுப்பினாற்ப் போல் தோன்றியது சந்தாசாகிப்பின் செவிகளுக்கு. திடீரென்று தமது நண்பர் நிலை குலைந்ததற்குக் காரணத்தை அறியாத டூப்ளே தமது கண்கள் விடுத்த கேள்விகளுக்குப் பதில் ஏதும் கிடைக்காது போகவே, மெள்ளப் பக்கவாட்டில் குனிந்து, ஆற்காட்டின் புது நவாப்பின் அதிர்ச்சிக்கு எனக்குக் காரணம் தெரியவில்லை” என்றார் மிக மெதுவாக.

அப்படிக் கவர்னர் குனிந்து கேட்டபோது அவர் அணிந்திருந்த ‘விக்’ கின் சுருள் குழல்கள் சந்தாசாகிப்பின் கன்னத்தைத் தடவியுங்கூட அமைதி ஏற்படவில்லை, ஆம்பூரின் வெற்றி வீரருக்கு. டூப்ளேயின் கேள்விக்குச் சந்தாசாகிப் பதில் ஏதும் சொல்லாமல் கையிலிருந்த சீட்டை மட்டும் நீட்டினார்.

உருது லிபியில் இருந்த அந்த வாசகத்தைப் படிக்க முடியாத டூப்ளே, “யாரங்கே, நமது துபாஷை (துவிபாஷிகளை) கூப்பிடு” என்று உத்தரவிட்டார்.

சந்தாசாகிப் உடனடியாகப் பேசினார் குரல் நடுங்க. “வேண்டாம். யாரையும் அழைக்காதீர்கள்.”
”ஏன்?” என்று வினவினார் டூப்ளே, அவர் நடுக்கத்திற்குக் காரணம் புரியாமல்.

”அதில் என்ன எழுதியிக்கிறது தெரியுமா?” என்று மீண்டும் நடுங்கும் குரலில் சொன்னார் சந்தாசாகிப்.

”எனக்கு இந்த மொழி தெரியாதே” என்றார் டூப்ளே.

“இதைப் பகிரங்கமாகச் சொல்வதற்கில்லை” என்றார் சந்தாசாகிப்.

“சரி, காகிதத்தைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நடனத்திற்குப் பிறகு, அதைப் பற்றிப் பேசுவோம்” என்ற டூப்ளே, ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவே, மற்ற விருந்தினர்கள் அனைவரும் எழுந்தனர்.

பிரான்சு நாட்டு நாகரிகத்திற்கு ஏற்றபடி படாடோபமான ராணுவ உடையணிந்த பிரெஞ்சுக்காரரும், நானாவித வர்ண ஜாலங்களை உடையனவும், பலவிதமான ‘ப்ரில்ஸ்’களை உடையனவுமான சிங்கார உடையணிந்ததால் தேவமகளிர்போல் காணப்பட்ட பிரெஞ்சு நாட்டுச் சிங்காரிகளும், எப்போதும் அதிகாரிகளைப் போல் உடையணிவதிலும் நடனமாடுவதிலும் பெருமை கொண்ட சுதேசிப் படை தலைவர்களும் அனைவருமே கவர்னர் எழுந்ததும் ஆசனங்களைவிட்டு எழுந்தார்கள். அவர் களுக்கு வழிகாட்டி முன் சென்ற கவர்னர் டூப்ளேயின் பின்னால் சந்தாசாகிப்பும் முஸபர்ஜங்கும், அவர்களுக்குப் பின்னால் மகாவீரனான டிபுஸ்ஸியும், அவனுக்குப் பின்னால் மற்றவர்களும் ஒழுங்காக நடனமண்டபத்திற்குள் நுழைந்தார்கள். நடனம் ஆரம்பமாக, கவர்னர் தனது மனைவியின் கையைக் கோத்துக் கொண்டதும், மற்ற வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரிகளும் அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்து கைகளைக் கோத்துக் கொண்டு நடனத்துக்குத் தயாராயினர்.

அந்த மகோன்னதக் காட்சி யாரையும் மயக்கக் கூடியதானாலும் சந்தாசாகிப்பை மட்டும் அன்று மயக்கமுடியவில்லை. அவர் ஒதுங்கியே சிரமப்பட்டு மயங்கி நின்று கொண்டிருந்தார். அதைக் கண்ட டூப்ளே தமது கண்ணின் அசைப்பினால் டிபுஸ்ஸியை அருகில் அழைத்து, ‘புஸ்ஸி! சந்தாசாகிப் ஏன் கலந்து கொள்ள வில்லை ?” என்று வினவினார், காரணம் அவருக்கு முன்னதாகத் தெரிந்திருந்தும்கூட.

”கலந்து கொண்டு விட்டார்’ என்றான் புஸ்ஸி மேலுக்கு மிக மரியாதையுடனும் உள்ளுக்குள் ஏளனச்சிரிப்புடனும்.

“எப்பொழுது?”

“முன்பே.’’
”உனக்கு எப்படித் தெரியும்?”

”அதோ பாருங்கள் அவர் கால்கள் நடனமாடுகின்றன” என்று நடுங்கிக் கொண்டிருந்த சந்தாசாகிப்பின் கால்களைச் சுட்டிக் காட்டினான் புஸ்ஸி.

கவர்னர் அந்த நகைச் சுவையை ரசித்ததால் சற்று இரைந்தே நகைத்தார். அத்துடன் புஸ்ஸியை நோக்கி, “புஸ்ஸி! நீ அந்த இரண்டு நவாபுகளையும் அழைத்துக் கொண்டு போய் எனது அந்தரங்க அறையில் உட்கார வை. நான் சீக்கிரம் வருகிறேன்” என்று உத்தரவிட்டார்.

டி புஸ்ஸியின் இதழ்கள் மிக விஷமமாக மடிந்தன. சரி என்பதற்கு அறிகுறியாக அவன் தலையை அசைத்த விதத்திலும் ஏளனம் இருந்தது. கவர்னரைச் சூழ்ந்திருந்த வெள்ளைக் கும்பலை விலக்கிக் கொண்டு எட்ட இருந்த சந்தாசாகிப்பை நெருங்கிய டிபுஸ்ஸி, ‘நவாப்! தங்களைத் தமது தனியறைக்கு அழைத்துச் செல்ல கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார்” என்றான்.

”ஏன்?” என்றார் சந்தாசாகிப், மெள்ளத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

“இங்கு ஆண் பெண்கள் இணைந்தாடும் நடனந்தான் உண்டு” என்றான்டி புஸ்ஸி மிகுந்த மரியாதையுடன்.

”அதனால் என்ன?”

“தனி நபர் நடனம் அனுமதிக்கப்படுவதில்லை.”

“நீ சொல்வது எனக்கு புரியவில்லை.”

”உங்கள் கால்கள் நடனமாடத் துவங்கியதைத் தூரத்திலிருந்தே கவர்னர் பார்த்து விட்டார். மற்றவர்களும் பார்த்தால் வித்தியாசமாக நினைத்துக் கொள்வார்கள் என்று கவர்னர் கருதுகிறார்.”

சந்தாசாகிப் தமது கோபக் கண்களைப் புஸ்ஸியின் மீது நிலைக்க விட்டார் சில விநாடிகள். பிறகு சொன்னார்: “சந்தாசாகிப்புடன் விளையாடுவது அபாயம்” என்று.

”அது எனக்கு நன்றாகத் தெரியும்” என்று பயந்தவன் போல் பதிலிறுத்தான் புஸ்ஸி.

‘இந்த நாட்டுக்கு நேற்று வந்தவன் நீ, உனக்கு என்ன தெரியும்?” என்று சீறினார் புது ஆற்காட்டு நவாப்.
“நீங்கள் புது நவாப்….’’ என்று இழுத்தான் புஸ்ஸி.

”ஆம்”

”பழைய கதைகள் எனக்குத் தெரியும்.”

”என்ன பழைய கதை?”

”ஆற்காட்டுக் கதை.”

”ஆற்காட்டுக்கதையா?”

“அனுமதி கொடுத்தால் சொல்கிறேன்.”

”சொல், ‘சந்தாசாகிப்பின் ஆணைக் குரலில் அதிகாரமும் இருந்தது, அச்சமும் இருந்தது.

டி புஸ்ஸி மிகப் பணிவுடன் தொடங்கினான். கதையை.

”1740′-இல் தங்கள் மாமனார் தோஸ்த் ஆலி ஆற்காட்டு நவாபாய் இருந்தார். அவரைத் தாமல்சேரி கணவாயில் மகாராஷ்டிரர்கள் கொன்றார்கள். பிறகு சப்தர்ஆலி நவாப் ஆனார். தாங்கள் சப்தர் ஆலியை நம்பாமல் தங்கள் குடும்பத்தைப் புதுச்சேரியில் தங்க வைத்தீர்கள். சப்தர் ஆலி தனது குடும்பத்தை மதராஸில் ஆங்கிலேயரிடம் தங்க வைத்தார். சப்தர் ஆலிக்கு வேலூரில் இருந்த அவரது மைத்துனர் மூர்த்திசா ஆலி விஷம் வைத்ததாகவும், விஷம் வேலை செய்யத் தாமதமாகியதால் ஒரு பட்டாணியனை விட்டுக் கத்தியால் குத்தி முடித்து விட்டதாகவும் கேள்வி. அவரைக் கொலை செய்த பின்பு மதராஸிலிருந்த அவரது அடுத்த வாரிசு ஸையது முகமத்கான் என்ற குழந்தையும் பரலோகம் நோக்கிப் பறந்தது. பிறகு சமீபத்தில் தங்களால் மாண்ட அன்வருதீன் நவாப் ஆனார். அவரும் மூர்த்திசா ஆலியும் சேர்ந்து பழைய நவாப்பின் சிறுவனைத் தீர்த்து விட்டதாக வதந்தி உலவுகிறது. ஆற்காட்டு நவாப் பதவியைப் போல உயிர் உறிஞ்சும் சக்தி உலகத்தில் வேறெதுவும் கிடையாது போல் தோன்றுகிறது. இப்பொழுது தாங்கள் ஆற்காட்டு நவாப்…” என்ற புஸ்ஸி அரைகுறையாகப் பேச்சைவிட்டான்.

சந்தாசாகிபின் கண்களில் அச்சம் தெரிந்தது. ”அப்படியானால் அடுத்த பலி நான். என்கிறாயா?” என்று குழம்பிய குரலில்.

”சேசே அப்படியெல்லாம் இருக்காது. கவலைப் படாதீர்கள்” என்றான் புஸ்ஸி. அவன் சொன்னது ஆறுதலா அல்லது கேலியா என்பது புரியவில்லை சந்தாசாகிப்புக்கு.

இருந்தாலும் அதைப் பற்றிப் பேச்சை வளர்த்தாமல், ‘கவர்னர் அறை எங்கே?” என்று வினவினார்.

”என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்ற புஸ்ஸி மெல்ல அந்த மண்டபத்திலிருந்த ஒரு வாயில் மூலம் வெளியேறினான். அவனைத் தொடர்ந்து சந்தாசாகிப்பும் அவரைத் தொடர்ந்து முஸபர்ஜங்கும் சென்றார்கள். கவர்னர் தனி அறையில் அவர்களைத் தங்க வைத்த பின்பும் புஸ்ஸி வெளியில் செல்ல வில்லை. அவன் அங்கே நிற்பதைக் கண்ட சந்தாசாகிப், “இனி நீ போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.

   "தங்களைத் தனியாக விட்டுவிட்டுப் போக உத்தரவு இல்லை" என்றான் புஸ்ஸி.

”இதோ தான் முஸபர்ஜங் இருக்கிறாரே” என்றார் சந்தாசாகிப் மீண்டும்.

“தாங்கள் பிரெஞ்சுக்காரர்களின் ஆற்காட்டு நவாப்’ என்று உணர்த்தினான் புஸ்ஸி.

”அதனால் என்ன?”

“தங்களைக் காப்பது எங்கள் கடமை.”

”இப்போது எனக்கு என்ன ஆபத்து வந்து விட்டது?”

”ஏதோ வந்திருக்க வேண்டும்.”

”உனக்கு எப்படித் தெரியும்?”

”நீங்கள் வீரர்.”

“அது சரி.’’

”ஆனால் ஒரு சீட்டைப் படித்ததும் நடுங்கி விட்டீர்கள்.”

”ஆம் ஆம். அது பயங்கரச் சீட்டுத்தான்” என்று ஒப்புக் கொண்டார் சந்தாசாகிப்.

இத்தனைக்கும் முஸபர்ஜங் வாய் திறக்கவில்லை.

அவரையும் சீண்ட முற்பட்ட புஸ்ஸி, ”என்ன புது நிஜாம் வாய் திறக்க வில்லையே?” என்றான் மெதுவாக.

‘நான் இன்னும் நிஜாம் பதவியை அடைய வில்லை. நாஸர்ஜங் அந்த பதவியை வகிக்கிறான்” என்றார் முஸபர்ஜங் சற்று உஷ்ணத்துடன்.

‘’அது சரியில்லை போல் இருக்கிறது?” சீண்டினான் புஸ்ஸி.

”இல்லை.”

”நாஸர்ஜங் பழைய நிஜாமின் புதல்வரல்லவா?”

“ஆம். ஆனால் நான் அவர் பெண் வயிற்றுப் பேரன். என்னைத் தான் பழைய நிஜாம் தட்சிண சுபேதரராக நியமித்தார். அப்படி இருக்க….”

”அவர் மகன் நிஜாம் ஆவது தவறுதான்” என்று ஒப்புக் கொண்டான் புஸ்ஸி.

”நீ புத்திசாலி” என்று பாராட்டினார் முஸபர்ஜங்.

“இத்தனை புத்திக் கூட இல்லாவிட்டால் உங்களுக் கெல்லாம் உதவி செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்குமா?” என்றான் புஸ்ஸி விஷமமாக.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த டூப்ளே அறையிலிருந்த மூவரையும் மாறி மாறிச் சில விநாடிகள் கவனித்தார். புஸ்ஸியின் இதழ்களில் விஷமம் இருந்தது. சந்தாசாகிப்பின் வதனத்தில் சீற்றமும் அச்சமும் கலந்த சாயை படர்ந்து கிடந்தது. புஸ்ஸி ஏதோ விஷமம் செய்திருக்கிறான் என்பதைக் கணப்போதில் புரிந்து கொண்ட டூப்ளே ஏதும் பேசாமல் தமது ஆசனத்தில் அமர்ந்து, “புஸ்ஸி, கதவைச் சார்த்து” என்று கட்டளையிட்டார்.

அவர் கட்டளைப்படி கதவைச் சாத்திய புஸ்ஸி அந்தக் கதவிலேயே சாய்ந்து கொண்டு நின்றான்.

கவர்னர் மற்ற இருவரில் சந்தா சாகிபின் மீதே முதலில் கேள்வியைத் தொடுத்தார். ”உமக்கு வந்த காகிதத்தில் என்ன எழுதியிருந்தது?” என்று வினவினார் சர்வ சாதாரணமாக.

”அல் அலீம் (ஜல்)” என்றார் சந்தா சாகிப் குரல் தழுதழுக்க.

”அதற்கு என்ன அர்த்தம்?” என்று வினவினார் டூப்ளே.

”அல்லா (ஸல்) எல்லாம் அறிந்தவர் என்று பொருள்” என்று விளக்கினார் ஆற்காட்டு நவாப்.

”உலகத்தின் மதங்கள் எல்லாமே கடவுளைச் சகலமும் அறிந்தவராகத்தான் சொல்கின்றன.”

”ஆம்.”

”அப்படியானால் இந்த கடிதத்தைக் கண்டு ஏன் நடுங்கினீர்கள்?” என்று சீற்றத்துடன் கேட்டார் டூப்ளே.

சந்தா சாகிபும் நிதானத்தில் இல்லை. ”இது… இது…” என்று நடுக்கத்துடன் சொற்களை உதிர்த்தார்.

”சொல்லும். “டூப்ளேயின் குரல் இடியென முழங்கியது.

டூப்ளேயின் உத்தரவைக் கேட்டதும் இடியைக் கண்ட நாகமென நடுங்கினார் சந்தா சாகிப். அந்த இடி டூப்ளேயின் குரலிலிருந்து உண்டானதல்ல. பழைய நினைவுகள் பல கிளப்பி விட்ட இடியொன்று அவர் இதயத்தைத் தாக்கிச் சென்றது. அதன் காரணமாகச் சுய நிலை இழந்த சந்தா சாகிப் தம்மைத் திடப்படுத்திக் கொள்ளப் பல விநாடிகள் ஓடின. அப்படித் திடப் படுத்திக் கொண்ட பிறகுங் கூட அவர் குரல் சற்று நடுக்கத்துடனேயே ஒலித்தது.

”கவர்னர் அவர்களே! அது பழைய கதை, பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விட்ட கதை, அது மீண்டும் என்னைத் தொடர்ந்திருக்கிறது. வந்திருக்கிற சீட்டு அதை உணர்த்துகிறது” என்றார் சந்தா சாகிப் தட்டுத் தடுமாறி.

Previous articleRaja Perigai Part 2 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here