Home Historical Novel Raja Perigai Part 2 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 2 Ch20 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch20 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 20. சொர்க்கானுபவம்

Raja Perigai Part 2 Ch20 | Raja Perigai | TamilNovel.in

தேவனாம்பட்டணம் என்று அழைக்கப்பட்ட தேவநாதன் பட்டிணத்தின் ஸெய்ன்ட் டெவிட் கோட்டையில், தமது ஆலோசனை அறையில் கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸ் தமது இரு கால்களையும் எதிரே இருந்த மேஜை மீது போட்டுக் கொண்டும் கால் பூட்ஸ்களின் நுனிகளை ஒன்றோடொன்று தட்டிக் கொண்டும், கையிலிருந்த நீள டம்ளரின் அடியிலிருந்த அரை பெக் விஸ்கியை லேசாக உறிஞ்சிக் கொண்டும் தீவிர சிந்தனையில் இருந்தபடியால் முன்னறிவிப்பின்றிக் காப்டன் கிளைவ் உள்ளே நுழைந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை. தன் வரவை அறிவிக்க கிளைவ் தொண்டையைக் கனைத்த பின் தனக்கு எதிரேயிருந்த சாளரத்தின் மூலம் தெரிந்த கடல் பகுதியைக் கவனிப்பதை விட்டு, கையிலிருந்த கண்ணாடி டம்ளரையும் மேஜை மீது வைத்து விட்டு, தமது கண்களைக் கிளைவ் மீது திருப்பினார் பிரிட்டிஷ் கவர்னர். காப்டன் கிளைவ் ரிப்போர்டிங் யுவர் எக்ஸலென்ஸி” என்று தனது வரவை உத்தியோக முறையில் கிளைவ் அறிவித்தான்.

அதற்கும் கவர்னர் பதில் கூறவில்லை . தமது இரும்பு விழிகளைக் கிளைவின் மீது நாட்டினார் சில விநாடிகள். பிறகு டம்ளரிலிருந்த மீதி விஸ்கியையும் உறிஞ்சிவிட்டுத்தம் கால்களை மேஜையிலிருந்து விலக்கி ஆசனத்தில் செங்குத்தாக உடகார்ந்தார். அவரது இரும்புக்கண்கள் கிளைவின் மீது பதிந்தன.

அந்தப் பார்வையின் பொருளைக் கிளைவ் புரிந்து கொண்டிருக்க வேண்டும் ”தங்கள் உத்தரவுப்படி காப்டன் ஜின்ஜின்ஸின் படைக்கு உணவுப் பொருள் பொதி வண்டிகள் கொண்டு வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தான் ஆங்கிலத்தில்.

அதற்கும் கவர்னர் பதில் கூறவில்லையாதலால் கிளைவே விளக்கினான்: ”காப்டன் ஜின்ஜின்ஸ் ஆற்காட்டின் மீது படையெடுத்துச் சென்றிருப்பதாகத் தங்கள் உத்திரவில் கண்டிருந்தது. அவர்களுக்கு உணவுச் சப்ளை செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருந்தீர்கள். இருபது வண்டிகள்…”

கவர்னர் முதல் முதலாகத் தமது மௌன விரதத்தைக் கைவிட்டு, ‘ஹொய் டிட் யூ பிரிங் தெம் ஹியர்?’ (இங்கு எதற்காக அவற்றைக் கொண்டு வந்தாய்)” என்று வினவினார்.

”ஹொயர் எல்ஸ் கான் ஐ டேக் தெம்? (அவற்றை வேறு எங்கே கொண்டு போவது?)” என்ற கிளைவும் உறுதி கலந்த குரலில் பதில் கூறினான்.

”காப்டன்” கவர்னரின் ஒற்றைச் சொல்லில் அதிகாரம் இருந்தது.

“எஸ் எக்ஸ்லென்ஸி”

”யூ ஆர் டூ டேக் ஸப்ளைஸ்டு காப்டன்ஜின்ஜின்ஸ், நாட் டு மி (சப்ளையைக் காப்டன் ஜின்ஜின்ஸுக்குத்தான் செய்ய, வேண்டும், எனக்கல்ல)” என்றார் கவர்னர்.

”அது தெரியும் எனக்கு” என்றான் கிளைவ்.

”தென்?”

“காப்டன்ஜின்ஜின்ஸ் ஆற்காட்டைப் பிடிக்க வேண்டும்.”

“எஸ்.”

“அதற்கு ஆற்காட்டை அடைய வேண்டும்.”

“ஷ்யூர்.”

”அடைய முடியாது. ஆற்காட்டுப் பாதையைச் சந்தாசாகிபின் படைகள் அடைத்து நிற்கின்றன. அது மட்டுமல்ல…” இந்த இடத்தில் கிளைவ் பேச்சை நிறுத்திக் கவர்னரை நோக்கினான்.

எந்த வித உணர்ச்சியையும் காட்டாத கவர்னரின் முகத்தில் கூடச் சிறிது உணர்ச்சி தெரிந்திருந்தது. ‘வேறென்ன?” என்றார்.

கிளைவ் மெள்ள விளக்கத் தொடங்கி, “இப்பொழுது பிரிட்டனும் பிரான்ஸும் சமாதானம் செய்து கொண்டிருக்கின்றன ஐரோப்பாவில். ஆகவே நாம் இங்கே நேரிடையாகப் போரில் இறங்க முடியாது. யாரையாவது முன் வைத்து நாம் அவர்களுக்கு உதவுவதாகப் பாசாங்கு செய்து போரிட வேண்டும். ஆகவே நீங்கள் முகம்மது அலியை ஆற்காட்டின் மீது படையெடுக்க உத்தரவு அனுப்பியிருக்க வேண்டும். அந்தப் படை வரும் வரையில் காப்டன் ஜின்ஜின்ஸ் மெதுவாக நகரவேண்டும். ஆகையால் காப்டன் ஜின்ஜின்ஸ் ஆற்காட்டை அடைய இன்னும் பதினைந்து நாட்களாவது ஆகும். ஆகவே நான் வால் கண்டா செல்லத் தீர்மானித்தேன்.

”ஹொய் வால் கொண்டா?” என்ற வினவினார் ஸாண்டர்ஸ்.

”ஆற்காடு போகும் வழியில் இருக்கும் சிறிய கோட்டை அது தான். அதன் தலைவன் நடுநிலை வகிப்பதால் சந்தாசாகிபின் துருப்புகள் அதற்கு அப்புறமே நிற்கின்றன. ஆகவே முகம்மது அலியின் படைகள் வரும் வரையில் பிரிட்டிஷ் படை பந்தோபஸ்துடன் தங்க அது தான் சரியான இடம் ” என்று பதில் கூறினான் கிளைவ்.

இதைக் கேட்ட ஸாண்டர்ஸ் மீண்டும் மௌனம் சாதித்தார். கிளைவ் மேலும் தொடர்ந்தான். ‘ஆற்காட்டுக்கும் மதராஸுக்கும் இடையிலுள்ள சாலையில் சந்தாசாகிபின் படைகள் இருக்கின்றன. உணவுப் பொருளைக் கொண்டு செல்ல அந்த வழி அபாயமானது. ஆகவே இங்கு வந்து வால் கொண்டா போகத் தீர்மானித்தேன். அதனால் தான் இங்கு வந்தேன்.”

கவர்னரின் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. ”காப்டன் ஜின்ஜின்ஸைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

இதனால் ஒரு விநாடி கிளைவ் அசந்து போய் நின்றான். பிறகு பதில் சொன்னான், ”இருக்கிற காப்டன்களில் அவர் தான் ஸீனியர்” என்று.

கவர்னரின் புன்முறுவல் மேலும் விகசித்தது. ”ஈஸ் ஹி காம்பிடண்ட்? (அவர் தகுதி வாய்ந்தவரா?)” என்று வினவினார் கவர்னர்.

“எனது ஸீனியர்களைப் பற்றி நான் விவாதிப்பதில்லை.”

கிளைவ் எந்த விதச் சர்ச்சையிலும் ஈடுபடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கவர்னர், பேச்சை லேசாக மாற்றினார். ”காப்டன் ஜின்ஜின்ஸ் இங்கிருந்து ஏப்ரல் முதல் வாரத்தில் கிளம்பினார். வால்கொண்டாவைப் பதினைந்தாம் தேதி அடைந்தார். அங்கேயே கோட்டைக்கெதிரே முகாம் செய்திருக்கிறார்” என்று கூறியதன்றி ”நோ ஆக்டிவிடி, நோ டெஸ்பாட்சஸ் (நிகழ்ச்சிகளுமில்லை தபால்களும் இல்லை அவரிடமிருந்து)” என்று விளக்கினார்.

”அவர் முகம்மது அலியின் படைகளுக்காகக் காத்திருக்கலாம்” என்றான் கிளைவ்.

”முகம்மது அலியின் சகோதரன் அப்துல் வஹாப்கான் பெரும்படையுடன் வால்கொண்டாவை அடைந்து நான்கு நாட்களாகின்றன” என்று சுட்டிக் காட்டினார் கவர்னர்.

‘காப்டன் ஜின்ஜின்ஸ் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.”
கவர்னர் திடீரெனத் தமது கைகளை மேஜை மீது குத்தி, ”ஆனால் சந்தா சாகிப் காத்திருக்க மாட்டான்” என்று சீறினார். அத்துடன், ‘மை பாய்! இன் எனி வார் டிலே இஸ் டேஞ்சரஸ் (மகனே/ எந்தப் போரிலும் தாமதம் அபாயமானது)” என்றும் சொன்னார், தமது சீற்றத்தை சிறிது அடக்கிக் கொண்டு. பிறகு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு அந்த அறையில் மௌனமாகப் பல விநாடிகள் உலாவினார். திடீரென்று நின்று கிளைவை அந்த இரும்பு விழிகளால் நோக்கிக் கொண்டே, ”கிளைவ் காப்டன் ஜின்ஜின்ஸைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையில்லை. அவனுக்கு பதில் நீ போயிருந்தால் நான் நம்பிக்கையுடன் இருந்திருப்பேன். தட் ஸ்விஸ் பெலோ (காப்டன் ஜின்ஜின்ஸ்) காண்ட் டேக் டெஸிஷன்ஸ் (முடிவுகளை துரிதமாக எடுக்க மாட்டான்)” என்ற தமது இதயத்திலுள்ள கருத்தை வெளியே திறந்து காட்டினார். ‘ஐ காண்ட் ஹெல்ப் ஸெண்டிங் ஹிம் ஹி இஸ் F ஸீனியர் மோஸ்ட்; டாம் த ஸீனியாரிடி! (நான் வேறெதும் செய்வதிற்கில்லை. அவன் தான் ஸீனியர். எழவெடுத்த ஸீனியாரிடி)’ என்று எரிந்தும் விழந்து தம்மை நொந்துக் கொண்டார்கவர்னர்.

அவரைச் சாந்தப்படுத்த முயன்ற கிளைவ், “இதற்குள் நாம் எந்தத் தீர்மானித்திலும் இறங்க வேண்டாம். விளைவுகளைக் கவனிப்போம், காத்திருப்போம்” என்றான்.

‘காத்திருப்போம் ஒரு நூற்றாண்டு காத்திருந்து விட்டோம். பிரான்ஸை இங்கு வேரூன்ற விட்டோம். மீதி நாளையும் காத்திருந்து கழிப்போம்” என்ற கவர்னர் மெல்லச் சிரித்துக் கொண்டார்.

”ஏன் சிரிக்கிறீர்கள்?”

”ஸ்பெயினின் கடல் பலத்தை, முதுகெலும்பை முறித்த பிரிட்டன் இந்தச் சிறு காலனியில் அடங்கிக் கிடக்கிறது. அந்தப் பரிதாபத்தைப் பார்த்துச் சிரித்தேன்” என்ற கவர்னர் மேலும் கேட்டார், ”கிளைவ்| எங்கும் வெற்றி வாகை சூடும் பிரிட்டிஷ் சோல்ஜர்கள் இங்கு ஏன் படுத்துக் கிடக்கிறார்கள்? சிங்கமான பிரிட்டன் இங்க ஏன் நரியாகிவிட்டது?” என்று.

”பிரிட்டன் ஒரு நாளும் நரியாகாது. சிங்கம் பதுங்கிக் கிடக்கிறது, பாய்வதற்காக. அதுவும் தங்கள் தலைமையில் கண்டிப்பாக அது தன் சொரூபத்தைக்காட்டும்.”

“லெட் மீ ஹோப் ஸோ” என்ற கவர்னர், ‘யூ ஹாவ் எனிதிங் ஸ்பெஷல் டு டெல் மீ?” என்றார்.

“நதிங்.”

“வெள் ஆர்யூஸ்டார்ட்டிங்?”

‘நௌ.”

“யூ டோண்ட் வாண்ட்டு ரெஸ்ட்?”

”நோ.”

இதைக் கேட்ட கவர்னர் பெருமூச்செறிந்தார். கடைசியில் ஒன்று கேட்டார், “நீ வால்கொண்டாவிலிருந்து திரும்பும் போது இப்படி வரமுடியுமா?” என்று.

”வருகிறேன்” என்றான் கிளைவ். ”அங்குள்ள நிலைமையை நன்கு அறிந்து வா” என்றார்.

“சரி” என்று கூறி விடை பெற்ற கிளைவ் அப்பொழுதே பொதி வண்டிகளுடன் வால்கொண்டாவுக்குப் புறப்பட்டான். அவன் வால்கொண்டாவை அடைய இரண்டு நாள் பிடித்தது. அங்கு அவன் கண்ட நிலை பயங்கர நிலை/ காப்டன் ஜின்ஜின்ஸின் படைகள் கூடாரமடித்துக் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்தன. யாரும் அவற்றின் மீது பாய்ந்து அழித்து விடலாம். எங்கும் கோலாகலம் நிரம்பி நின்றது. அந்த நிலையைக் கண்டதால் வெகுண்ட கிளைவ் ஜின்ஜின்ஸின் கூடாரத்தை நோக்கிச் சென்றான். ஜின்ஜின்ஸ் தனியாயில்லை. அவன் நாற்காலியின் அருகே ஒரு பெண். ஜின்ஜின்ஸின் தலை மீது இடித்துக் குனிந்து மதுவையும் அவன் வாயில் கோப்பையின் மூலம் புகட்டிக் கொண்டிருந்தாள். ஜின்ஜின்ஸ் சொர்க்காநுபவத்தில் இருந்தான்.

Previous articleRaja Perigai Part 2 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here