Home Historical Novel Raja Perigai Part 2 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Perigai Part 2 Ch21 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch21 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 21. வஹாப்கான் வழி

Raja Perigai Part 2 Ch21 | Raja Perigai | TamilNovel.in

காப்டன் ஜின்ஜின்ஸின் உல்லாச நிலை கண்டு கிளைவ் கோபத்தின் உச்ச நிலையை அடைந்தானானாலும் அவன் அந்தச் சமயத்தில் ஏதும் செய்ய மாட்டாமல் சிலையென நின்றான் பல விநாடிகள். பிறகு தன்னையும் மீறி, “காப்டன் ” என்று சீற்றத்துடன் ஜின்ஜின்ஸை அழைத்தான் ஒரு முறை. கிளைவின் குரலைக் கேட்டதும் அச்சமுற்ற அந்தப் பெண் விலகி ஓட முயன்றாலும், அதைக் குடி வெறியால் அனுமதிக்காத காப்டன்ஜின்ஜின்ஸ் தனது கழுத்தைச் சுற்றியிருந்த அவள் கையை இறுகப் பிடித்துக் கோப்பையிலிருந்த மீதி மதுவைத் தானாகவே வாயில் புகட்டிக் கொண்டதன்றி, ”ஹு ஆர் யூ?” என்று கிளைவையும் நோக்கிக் குழறினான்.

”காப்டன் கிளைவ்!” என்ற கிளைவின் குரல் அந்தக் கூடாரத்தைக்கத்தி போல் கிழித்தது.

ஜின்ஜின்ஸ் அப்பொழுதும் தெளியவில்லை. குடிவெறியிலிருந்து, “யூ ஹாவ் ப்ராட் ஃபுட்? (நீ உணவு கொண்டு வந்திருக்கிறாயா?)” என்று வினவினான், அதிகாரத் தோரணையில்.

‘எஸ்” என்றான் கிளைவ் எரிச்சலுடன்.

”ஹௌ மச் ஒயின்” என்று வினவினான் காப்டன் ஜின்ஜின்ஸ்.

அதற்கு மேல் பொறுக்காத கிளைவ் நான்கே அடிகளில் தனக்கும் ஜின்ஜின்ஸுக்கும் இருந்த இடத்தைத் தாண்டி, அந்தப் பெண்ணின் கையிலிருந்த கோப்பையை வாங்கித் தூர எறிந்து விட்டு அந்தப் பெண்ணையும், ‘கெட் அவுட்” என்று கூற, பெண் கூடாரத்தை விட்டுப் பறந்தாள். பிறகு கிளைவ் அந்தக் கூடாரத்தின் மூலைக்குச் சென்று அங்கிருந்த நீண்ட மண்கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை எடுத்து ஜின்ஜின்ஸின் தலையில் அபிஷேகம் செய்தான். பிறகு, ”யாரோ! ஆர்டர்லி?” என்று கூவினான். கூடார வாயிலை நோக்கி உள்ளே ஓடி வந்த ஆர்டர்லியிடம், ”காப்டனைப் படுக்கவை. அவர் தெளிந்த பின் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்று அங்கிருந்த படைத்தளத்தின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.

பிரிட்டிஷ் படையும் அப்துல் வஹாப்கான் படையும் எதிரேயிருந்த கோட்டைக்கு வெளியே நன்றாகப் பரந்து முகாம் செய்திருந்தது. திருச்சியிலிருந்து நாற்பத்து ஐந்தாவது மைலில் ஆற்காட்டுச் சாலையில் இருந்த வாலிகண்டபுரம் என்ற வால் கொண்டாவின் கோட்டை அத்தனை பெரிதல்லவென்றாலும் வலுவுள்ளதாகவே இருந்தது. அதன் வாயிலுக்கு நேர் எதிரே ஆழமான பெரிய நீர்நிலை இருந்தது. அந்த நீர் நிலையைத் தாண்டியே ஜின்ஜின்ஸ் முகாம் செய்திருந்ததால் அதை ஏன் அவன் பிடிக்கவில்லையென்பது கிளைவுக்குப் புரியவில்லை. ஆகவே அங்கிருந்த படைத்தளத்தின் மூலமே நடந்து சென்றவன் ஆங்காங்கு படை வீரர் படுத்துக் கிடப்பதையும் காப்டன்களின் கூடார.

வாயில்களில் மட்டும் விளக்குள் எரிவதையும் பார்த்தான். அந்தக் கூடாரங்களின் ஒன்றின் வாயிலில் தான் அழைத்து வந்த பொதி வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருந்ததையும், அதன் முன்னணியில் நின்ற விஜயகுமாரன் மிகுந்த சினத்துடன் இரைந்து கொண்டிருந்ததையும் கண்ட கிளைவ் அந்த இடத்தை அடைந்து, ”என்ன விசேஷம் விஜயகுமார்?” என்று வினவினான்.

”சென்னையிலிருந்து பொதி வண்டியைக் கொண்டு வந்திருக்கிறோம். உணவு பொருள்களை இறக்கவோ வாங்கவோ யாருமில்லை ” என்றான் மிகுந்த கோபத்துடன் விஜயகுமாரன்.

இந்த இரைச்சலைக் கேட்டுக் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்தவனைப் பார்த்ததும் வியப்படைந்த கிளைவ், ”காப்டன் டால்டன்! நீ இங்கேயா இருக்கிறாய்?” என்றான்.
காப்டன் டால்டனின் கூரிய விழிகள் கிளைவின் மீது பதிந்தன. “கிளைவ் இங்கு எதற்கு வந்தாய்?” என்று வினவினான்.

உணவுச் சப்ளை கொண்டு வந்தேன். இதோ, மீட் மை லெப்டினண்ட் மிஸ்டர் விஜயகுமார்” என்று விஜயகுமாரனை அறிமுகப்படுத்தியதன்றி வந்த காரணத்தையும் விவரித்தான் கிளைவ்.

விஜயகுமாரனும் காப்டன் டால்டனும் கைகுலுக்கிய பிறகு விஜயகுமாரன் வினவினான், ”இந்த வண்டிகளை யாரிடம் ஒப்படைப்பது?” என்று.

காப்டன் டால்டன் ஒரு விநாடி சிந்தித்தான். பிறகு ஒரு பிரிட்டிஷ் லெப்டினண்டை அழைத்து, “லெப்டினண்ட் டேக்சார்ஜ் ஆப் தி சப்ளைஸ்” என்று உத்தரவிட்டு, கிளைவையும் விஜயகுமாரனையும் தனது கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றான். கூடாரத்துக்குள் மூவரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டதும் கிளைவ் வினவினான், “டால்டன் வாட் ஈஸ் ஹாப்பனிங் ஹியர் (இங்கு என்ன நடக்கிறது)?” என்று.

”நத்திங் (எதுவும் நடக்க வில்லை)” என்றான் டால்டன் துக்கம் நிரம்பிய குரலில்.
”கோட்டை வாயிலில் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கவா இங்கு நமது படை வந்திருக்கிறது?” என்ற வினவினான் கிளைவ் ஆத்திரத்துடன்.

”அப்படித்தான் தெரிகிறது.” ”காப்டன் ஜின்ஜின்ஸ் என்ன செய்கிறார்?”

”குடிக்கிறர், யாராவது சுதேசிப் பெண்கள் அகப்பட்டால் உல்லாசமாக இருக்கிறார்.”

“கோட்டையை ஏன் பிடிக்கவில்லை?” ”கோட்டை அதிகாரி கதவுகளைத் திறக்க மறுக்கிறார்.”

”கதவுகளைத் திறக்க மறுக்கிறாரா?” என்ற கிளைவின் கேள்வியில் ஏளனமும் வியப்புமும் கோபமும் எல்லாமே கலந்து தாண்டவமாடின.

”ஆம்” என்றான் காப்டன் டால்டன்சர்வசாதாரணமாக.

”கோட்டைத் தலைவன் கதவுகளைத் திறந்துவிட்டு, பாண்டு முழங்க உங்களை வரவேற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று சீறினான் கிளைவ்.

“அப்படித்தான் தோன்றுகிறது” என்ற காப்டன் மெள்ள கிளைவை நோக்கி, “’கிளைவ், நீ எனக்கு ஒரு உபகாரம் செய்ய முடியுமா?” என்று வினவினான்.

“முடிந்தால் செய்கிறேன்.” கிளைவின் பதிலில் வியப்பு ஒலித்தது.

”என்னை இந்தத் தொடை நடுங்கியிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.”

”யாரிடமிருந்து?” “ஜின்ஜின்ஸிடமிருந்து.”

“ஏன்?”

”எனக்கு அவமானம் தாங்கவில்லை.”

”என்ன அவமானம்?”

“சுதேசி சிப்பாய்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள். நேரிலல்ல. அவர்கள் பார்வையில் ஏளனம் இருக்கிறது. நம்மையும் பார்த்துக் கோட்டையையும் பார்க்கிறார்கள்.”

இதைக் கேட்ட கிளைவ் தீவிரசிந்தனையில் இறங்கினான். ”டால்டன் நாளை ஜின்ஜின்ஸுடம் பேசுவோம். இப்பொழுது அவன் சுய நிலையில் இல்லை ” என்று சமாதானம் கூறினான். அத்துடன் சொன்னான், “காப்டன்/ஜின்ஜின்ஸைத்தனியாக இந்தப் படையுடன் விட்டுப் போவது பிரிட்டனைச் சந்தாசாகிபின்கையில் ஒப்படைப்பதாகும். நீ அநுபவமுள்ள காப்டன். நீயும் நகர்ந்து விட்டால் பிரிட்டன் கர்நாடகத்திலிருந்து இங்கிலாந்துக்கு மூட்டை கட்டலாம்” என்று. ”அது மட்டுமல்ல, கோழையான காப்டன் ஜின்ஜின்ஸை ஓரளவு நடவடிக்கைக்குத் தூண்ட உன்னைப் போன்ற ஒரு சீனியர் காப்டன் இங்கே தேவை” என்றும் சுட்டிக் காட்டினான் கிளைவ்.

கிளைவின் உபதேசங்கள் காப்டன் டால்டன் காதில் ஏறவில்லை . ”சரி, படுத்துக் கொள் கிளைவ். லெப்டினண்ட்ட நீங்களும் இங்கேயே தங்கலாம்” என்று இருவரும் படுக்க ஏற்பாடுகளைச் செய்தான் கிளைவ்.

அன்று இரவு கிளைவுக்குத் தூக்கம் அடியோடு பிடிக்காததால் நள்ளிரவில் விஜயகுமாரனுடன் கூடாரத்திலிருந்து கிளம்பிப் படைகளைப் பார்க்கப் போனான். படை உறங்கிக் கிடந்தது. ஆங்காங்கிருந்த காவலர் மட்டும் கிளைவைத் தடுத்தார்கள். யாரென்று தெரிந்ததும் தலைத் தாழ்த்தி வழி விட்டார்கள். படுத்திருந்த படையையும் சற்று அப்பாலிருந்த அப்துல் வஹாப் கான் கூடாரத்தையும் கோட்டையையும் கவனித்த கிளைவ், “இத்தனை பெரிய படையை வைத்துக் கொண்டு ஜின்ஜின்ஸ் ஏன் போர் துவங்க மறுக்கிறான்?” என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த விஜயகுமாரனை விசாரித்தான்.

”ஜின்ஜின்ஸ் சாமாதானவாதி” என்று கூறி நகைத்தான் விஜயகுமாரன்.

”நீயாக இருந்தால் என்ன செய்வாய் இந்த நிலையில்?” என்று வினவினான் கிளைவ்.

‘இந்தச் சிறு கோட்டை மீது இரண்டு பீரங்கிகளைக் கொண்டு குண்டு வீசுவேன். பிறகு ஒரு படைப் பிரிவுடன் சென்று கோட்டைக் கதவுகளைத் தாக்கிக் கோட்டைக்குள் நுழைந்து விடுவேன். பிறகு…”

“பிறகு?”

“சந்தாசாகிப்புக்காகக் காத்திருப்பேன்.”

”சந்தாசாகிப் வந்தால்?”

”கோட்டைக்கு வெளியில் உள்ள ஆழமான நீர்நிலையை அரணாகக் கொண்டு சந்தாசாகிபின் படை மீது பீரங்கிக் குண்டுகளை வீசுவேன். பிறகு இரவில் சுற்றிச் சென்று சந்தாசாகிபைப் பின்புறத்தில் எதிர்பாராத விதமாகத் தாக்குவேன். முடிவு உனக்குத் தெரியும் ” என்ற விஜயகுமாரன் விளக்கினான்.

கிளைவ் ஆமோதித்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். “தட்டீஸ் தீகரெக்ட் மெதட் (அது தான் சரியான வழி)” என்று கூறினான்.

அப்பொழுது அவர்களுக்குப் பின்னாலிருந்து, ”உங்கள் வழியை யார் கேட்கப் போகிறார்கள்?” என்று ஒரு குரல் எழுந்தது.

திரும்பிப் பார்த்த இருவரும் திக்பிரமை பிடித்து நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஆஜானுபாகுவான ஒரு முஸ்லீம் வீரன் நின்றிருந்தார். ‘ஐ ஆம் அப்துல் வஹாப் கான்” என்று தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொண்டான்.

”ஐ ஆம்…” என்று கிளைவ் துவங்கி வாசகத்தை முடிக்குமுன்பு முகம்மது அலியின் சகோதரரான அப்துல் வஹாப் கான். “ஐ நோ யூ ஆர்கிளைவ். திஸ் பிரண்ட் ஈஸ் விஜயகுமார், யுவர் லெப்டினண்ட்” என்று வாசகத்தை முடித்தார். அத்துடன் நிற்காமல், ”காப்டன் கிளைவ்/ஐ ஆம் ஹாப்பி யூ ஆர்டேகிங் கமாண்ட் ஹியர் (காப்டன் கிளைவ்! இங்கே தலைமை ஏற்க நீங்கள் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி)” என்றும் உற்சாகத்துடன் கூறினார்.

காப்டன் கிளைவின் விழிகள் கம்பெனி நவாபின் சகோதரரை அநுதாபத்துடன் பார்த்தன. ”நான் இங்கே தலைமை ஏற்க வரவில்லை. உணவுப் பொருள் கொண்டு வந்தேன்” என்றான்.

வஹாப்கானின் வதனம் சட்டென்று சுண்டி விட்டது. ”தலைமை ஏற்க வரவில்லையா?” என்ற அவர் கேள்வியில் ஏக்கமும் இருந்தது.

“இல்லை.”

ஆனால் நீங்கள் இந்த ஜின்ஜின்ஸைவிடச் செயல் வீரராயிற்றே ?”

”யார் சொன்னது?”

வஹாப்கான் சிறிது சிந்தித்தார். ”நீங்கள் தேவிக் கோட்டையை வெற்றி கொண்டது எனக்குத் தெரியும். உங்கள் வீரம் கர்நாடகத்தில் பெரிதும் பரவியிருக்கிறது” என்றார்.

கிளைவ் மிகவும் வியப்படைந்தான். “நான் நம்பவில்லை” என்றான் அடக்கத்துடன்.
”என் கூடாரத்துக்கு வாருங்கள்” என்ற கூறிய வஹாப் கான் தமது கூடாரத்தை நோக்கி நடக்கலானார். அவர் நீண்ட கால்கள் வெகு வேகமாகவும் சீராகவும் பரவிச்சென்றன தரையில். அவரைப் பின் தொடர்ந்த கிளைவும் விஜயகுமாரனும் பெரிய வீரன் ஒருவனைத் தாங்கள் பின்பற்றுவதை உணர்ந்தார்கள். இத்தகைய வீரனைத் தம்பியாக உடைய முகம்மது அலி ஏன் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது இருவருக்கும் புரியவில்லை.

மூவரும் அப்துல் வஹாப்கான் கூடாரத்தை அடைந்ததும் அப்துல் வஹாப்கான் முதலில் உள்ளே நுழைந்த பிறகு மற்ற இருவரையும் உள்ளே வரும்படி சைகை செய்தார். உள்ளே சென்ற இருவரும் பெரும் பிரமைக்குள்ளானார்கள். ஜின்ஜின்ஸுக்கு மது புகட்டி மோகத்தையும் புகட்டிய அந்தச்சுதேசிப் பெண்கை கால்கள் கட்டப்பட்டுத் தரையில் உருட்டப்பட்டிருந்தாள். அவளை நோக்கி ஓர் ஆப்பிரிக்க வீரன் துப்பாக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அவளை அணுகிய அப்துல் வஹாப்கான், ‘உம் சொல். உன்னை அனுப்பியது யார்?” என்று வினவினார்.

அவள் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தாள். ‘சரி, அவளைக் கொன்று விடு” என்று உத்தரவிட்ட அப்துல் வஹாப்கான் கிளைவையும் விஜயகுமாரனையும் பார்த்து, ”வாருங்கள் நாமும் சிறிது குடிப்போம்” என்று அழைத்தார். அந்தச் சமயத்தில் அந்தப் பெண் மீது குறிவைத்திருந்த துப்பாக்கியின் குதிரை இழுக்கப் பட்ட சத்தம் கேட்டது. ‘வேண்டாம். சொல்லிவிடுகிறேன்” என்று அந்தப் பெண்கிரீச்சென்று கத்தினாள்.

அப்துல் வஹாப்கான் திரும்பவும் அவளை நோக்கிச் சென்றார். “சரி சொல்” என்றார்.

அந்தப் பெண் மடமடவென விஷயத்தைக் கக்கினாள். அதை கேட்ட கிளைவின் முகத்தில் கவலை பெரிதாகப் படர்ந்தது. ”இந்த ரகசியத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்ற வினவினான் கிளைவ்.

”எங்களுக்கு வழிகள் பல இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று’ என்ற அப்துல் வஹாப்கான் மர்மத்தை அவிழ்க்கத் துவங்கினார்.

Previous articleRaja Perigai Part 2 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here