Home Historical Novel Raja Perigai Part 2 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 2 Ch22 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch22 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 22. OMNIA AUDAX

Raja Perigai Part 2 Ch22 | Raja Perigai | TamilNovel.in

அப்துல் வஹாப்கானின் கூடாரம் இந்திய நவாபுகளின் படாடோபத்துக்குத் தக்கபடி பெரிய பட்டுச் சீலைத் திரைகளுடனும், அழகிய விளக்குகளுடனும் இரண்டு பந்தங்களுடனும் காட்சியளித்தது. ஒரு கோடிலிருந்த திரையின் சித்திர வேலை அதை நீக்கினால் அடுத்தபடி வஹாப்கானின் பஞ்சணையிருக்கும் என நிரூபித்தது. கூடாரத்தின் ஒரு மூலையில் நவாபுகள் உபயோகப்படுத்தும் நீண்ட ஹுக்காகூட இருந்தது. இத்தகைய விமரிசையுடனிருந்த கூடாரத்தின் உள்ளே ஆஜானுபாகுவாய் நின்ற அப்துல் வஹாப்கானின் உருவம் மிகவும் கம்பீரமாகத் தெரிந்தது. கை கால் கட்டி உருட்டிவிடப்பட்டிருந்த பெண்ணைப் பார்த்து, ‘உம். சொல் ” என்று அவர் விரட்டிய போது அவர் குரலில் கூட ஒரு தனி கம்பீரம் ஒலித்தது.

அந்தப் பெண் சொன்ன பதில்களை, அவற்றில் விளைந்த கதையை வஹாப்கான் மௌனமாகக் கேட்ட நிலையில் கூட ஓர் உறுதி இருந்தது.

ஆறடிக்கு மேலாகத் தன்னை நோக்கி நின்ற வஹாப்கானை நோக்கி அந்தப் பெண் சொன்னாள்:

”ஆற்காடு நவாப் சந்தாசாகிப் அவர்கள் இங்கு நடப்பதை வேவு பார்க்க என்னை அனுப்பினார். தினசரி நான் வேவு பார்த்து விஷயங்களைச் சொல்லியனுப்ப நள்ளிரவில் ஒரு வீரன் பிரிட்டிஷ் சிப்பாய்களின் உடயைணிந்து படைத்தளத்தின் முகப்பில் நிற்பான். அவனிடம் விஷயங்களைக் கூற எனக்கு உத்தரவு. காப்டன் ஜின்ஜின்ஸை முதலில் கையில் போட்டுக் கொள்ளும்படி எனக்கு உத்தரவு. அவரை மயக்குவது மிகச் சுலபம் என்று நவாப் சந்தாசாகிப் சொன்னார். ‘காப்டன் ஜின்ஜின்ஸ் பெண் பித்துப் பிடித்தவன், தொடை நடுங்கி, அவனுக்கு நமது மதுவை நன்றாகப் புகட்டி விடு’ என்று சொல்லி ஒரு மதுக் குப்பியையும் கொடுத்தார் நவாப். அவர் எதிர்பார்த்தது அப்படியே நடந்தது. மதுக் குப்பியை என் பாவாடைக்குள்ளிருந்த சராய் பையில் மறைத்த எடுத்து வந்தேன். என்னை ஜின்ஜின்ஸிடம் வீரர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டதும் அவர்களை வெளியே செல்ல உத்தரவிட்டார் ஜின்ஜின்ஸ். அவரை மயக்க அவசியம் இல்லாது போயிற்று. அவரே என்னைப் பிடித்துக் கொண்டார் வெறியுடன். என் சராயிலிருந்த புட்டியையும் கையை விட்டு அவரே எடுத்தார். மதுவைப் புகட்டினேன். இங்கு இருக்கிற படை பலம், நீங்கள் கோட்டையைப் பிடிக்க முயன்று முடியாமல் போனது எல்லாவற்றையும் அவர் சொன்னார், மது மயக்கத்தில். வாலிகண்டபுறத்தில் அடிக்கடி என்னைப் போன்ற அழகிகள் கிடைப்பதால் இதை விட்டுப் போவதில்லையென்றும் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் இவர் வந்தார்….”

இந்த இடத்தில் அந்தப் பெண் தயங்கவே, மேலே சொல்” என்றார் வஹாப்கான்.

பெண் தொடர்ந்து, “இவர் வந்து ஜின்ஜின்ஸின் மீது வெகுண்டு அவர் தலை மீது தண்ணீரைக் கொட்டி விட்டு வந்ததும் நான் பயமெடுத்து ஓடினேன் படைத் தளத்துக்கு, அப்பொழுது நீங்கள் பிடித்துக் கொண்டீர்கள்” என்று கூறினாள்.

“சந்தாசாகிப் எந்த வித விவரங்களை அறியும்படி சொன்னார்?” என்று வினவினார் வஹாப்.

”இங்கிருக்கிற படைகளின் எண்ணிக்கை சுமாராக, காப்டன்களின் பெயர்கள், உங்கள் கூடாரம் இருக்கும் இடம், உங்களைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு” என்றாள் அந்தப் பெண்.

வஹாப்கான் மெல்ல நகைத்தார். ”என்னைத் தீர்த்துக் கட்டப் பார்க்கிறார் சந்தாசாகிப்” என்றும் கூறினார், கிளைவைப் பார்த்து. மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி வினவினார்: ”அவ்வளவுதானா?” என்று.

”ஆம்” என்றாள் அவள்.

வஹாப்கான் திரும்பிப் பக்கத்தில் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க வீரனைப் பார்த்து, ”சரி, சுட்டுவிடு” என்று உத்தரவிட்டுத் திரும்ப முயன்றார்.

‘பொறுங்கள்” என்று கூவினாள் அந்தப் பெண்.

”சொல், அந்த முக்கிய விஷயத்தை. எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றார் வஹாப்கான்.

பெண் சற்று நேரம் மிரள மிரள விழித்தாள். கடைசியில் கிளைவின் மீதும் விஜயகுமாரின் மீதும் அவள் கண்கள் நிலைத்தன. கண்களை அவர்கள் மீதிருந்து அகற்றாமலே சொன்னாள்: ‘காப்டன் கிளைவ் வந்திருக்கிறாரா என்பதையும், விஜயகுமாரன் என்ற ஒரு வீரன் வந்திருக்கிறாரா என்பதையும் அறிந்து வரச் சொன்னார். அவர்கள் வந்திருந்தால் அவர்கள் உறங்கும்போது அவர்களைப் பிச்சு வாளால் குத்தித் தீர்த்து விடவும் சொன்னார்.”

கிளைவின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. ‘எதற்கு இந்த உத்தரவு? நான் என்ன செய்தேன் நவாபை?” என்று வினவினான்.
“நீங்கள் இல்லாவிட்டால் இந்தப் பிரிட்டிஷ் படை ஜெயிக்க முடியாதென்று நவாப் அடிக்கடி தனது படைத் தலைவர்களிடம் சொல்கிறார். உங்கள் லெப்டினண்ட் அபாயகரமான வெறியன் என்றும் கூறுகிறார்” என்றாள் அந்தப் பெண்.

அத்துடன் அந்தப் பெண்ணைக் கூடாரத்திலிருந்து அகற்றித் தனது அடிமைகளோடு சேர்த்துவிட உத்தரவிட்ட வஹாப்கான், ”காப்டன் கிளைவ் இப்போது புரிகிறதா உங்கள் மகிமை? உங்கள் மகிமையென்ன, உங்கள் லெப்டினண்ட் மகிமையுங்கூடப் புரிந்து இருக்க வேண்டுமே உங்களுக்கு?” என்று கேட்டுப் பெரியதாக நகைத்தார். ”சந்தாசாகிப் உங்கள் இருவர் உயிருக்கு ஈடாக ஆற்காட்டு ராஜ்யத்தில் பாதியை இனாமாகக் கொடுத்தார். இது எனக்கு முன்பே தெரியும்” என்று விளக்கினார் நகைப்புக்கிடையே.

கிளைவ் கேட்டான், “இந்த ரகசியம் உங்களுக்கு முன்பே எப்படித் தெரியும்?” என்று.

“நான் பிடித்திருக்கும் மூன்றாவது வேவுகாரி இவள். முதல் வேவுகாரியே விஷயத்தைக் கூறிவிட்டாள். எனக்கு இங்கு வேறு வேலையும் இல்லை. இங்கு ஏப்ரல் முதல் வாரத்தில் ஜின்ஜின்ஸ் வந்தார். நான் அடுத்த வாரம் வந்தேன். இங்கு எங்களுக்குத் தூங்குவதைத் தவிர வேறு வேலை கிடையாது. வாலிகண்டபுரம் நகரத்தைப் பிடித்தோம், கோட்டையைப் பிடிக்க வில்லை. இந்த முகாமில் கோட்டைக்கு வெளியேயுள்ள இந்தச் சமநிலத்தில் சந்தாசாகிப் வந்து எங்களை அழிப்பதற்காகக் காத்திருக்கிறோம்” என்று வெறுப்புடன் கூறினார் வஹாப்கான். ”சீக்கிரம் கோட்டையைத் தாக்கி உள்ளே நுழையுமாறோ, அல்லது முன்னேறிச் சந்தாசாகிபைப் தாக்குமாறோ காப்டன் ஜின்ஜின்ஸுக்குப் புத்தி சொல்லுங்கள்” என்று துக்கம் நிரம்பிய குரலில் விண்ணப்பித்துக் கொண்டார்.

கிளைவின் கண்கள் மகாவீரரான அப்துல் வஹாப்கான் கண்களுடன் கலந்தன. “காலையில் இதைப் பற்றி விவாதிப்போம்” என்று கூறிய கிளைவ், கடைசியாக அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறி, காப்டன் டால்டனுடைய கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான். மறு நாள் பொழுது விடிந்ததும் காப்டன் டால்டனை நோக்கி, ‘காப்டன்! அவசர ஆலோசனைக் கூட்டமென்று ஏற்பாடு செய்யும் படிஜின்ஜின்ஸிடம் கூறு” என்று உத்தரவிட்டான்.

”ஜின்ஜின்ஸ் மறுத்தால்…?’ என்று வினாவினான் டால்டன். கிளைவின் நிதானம் பறந்தது. “மறுக்க முடியாது ” என்ற சீறினான் கடுங்குரலில்.

கிளைவ் எதிர்பார்த்தது சரியாயிற்று. காப்டன் ஜின்ஜின்ஸ் பேராலோசனை சபையைத் தன்னுடைய கூடாரத்தின் காலை வேளை உணவு முடிந்ததும் கூட்டினாள். பிரிட்டிஷ் படையின் முக்கிய லெப்டினண்டுகள் இருவரும் காப்டன் டால்டனுடன் அப்துல் வஹாப்கானும், அவரது இருபடைத் தலைவர்களும் ஜின்ஜின்ஸின் கூடாரத்துக்குக் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். கடைசியாகக் கூடாரத்துக்குள் நுழைந்த கிளைவை, ஆசனத்திலிருந்து எழுந்திருக்காமலும் கை குலுக்காமலும் தலையை மட்டும் ஒரு புறம் கம்பீரமாகச் சாய்த்து வரவேற்றான் காப்டன் ஜின்ஜின்ஸ்.

கையாலாகாதவர்களுக்கு இயற்கையாக உள்ள அந்த வீம்பைச் சிறிதளவும் லட்சியம் செய்யாத கிளைவ் அங்கிருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து விஜயகுமாரனையும் அமரச் சொன்னான். இருவரும் அமர்ந்ததும் காப்டன் ஜின்ஜின்ஸ் தனது தர்பாரைத் தொடங்கி, “ஜென்டில்மேன் வாட் வில் யூஹாவ்? குட் ஒயின், ஆர் விஸ்கி?” என்று தனது விருந்தோம்பல் குணத்தைக் காட்டினான்.

கிளைவ் காப்டன் ஜின்ஜின்ஸைக் கொடுங்கண்களால் நோக்கினான். அந்தப் பார்வையைத் தொடர்ந்து, “தாங்யூ காப்டன் வி ஹாவ் நாட் கம் ஹியர் டூட்ரிங் நார் டூ டிபாச் (நன்றி காப்டன் . இங்கு நாங்கள் குடிக்கவும் வரவில்லை; விபச்சாரத்துக்கும் வரவில்லை)” என்று அவன் உதடுகள் சுடுச் சொற்களைக்கக்கின.

அவன் சொற்களின் காரணம் ஜின்ஜின்ஸுக்குப் புரிந்ததால் அவன் முகம் சிவக்கக்கம்பீரத்தை அதிகமாக கண்களில் காட்டி, “யூ வாண்ட் டூ அட்வைஸ் மீ அபௌட் தி வார்? (போருக்கு எனக்கு யோசனை சொல்ல எண்ணுகிறாய்?)” என்று வினவினான்.

கிளைவ் ஜின்ஜின்ஸை அலட்சியமாகப் பார்த்தான். ”யோசனையை நான் கண்டபடி விரயம் செய்வதில்லை. கேட்பவர்களுக்கு மட்டும் தான் சொல்வது வழக்கம்’ என்று பதிலும் சொன்னான், குரலிலும் அலட்சியம் ஒலிக்க. அத்துடன் நிற்கவில்லை கிளைவ். ”உனக்கு யோசனை சொல்ல இங்கு டால்டன் இருக்கிறார். அப்துல் வஹாப்கான் இருக்கிறார். இன்னொருவர் தேவையில்லை” என்றும் கூறினான்.

காப்டன் ஜின்ஜின்ஸின் உதடுகளில் புன்சிரிப்புப் படர்ந்தது, ”யார் யோசனையும் தேவையில்லை எனக்கு. நாளைக்கு வால் கொண்டா கோட்டையைத் தாக்கப் போகிறேன்” என்று தனது திட்டத்தையும் மெல்ல அவிழ்த்தான். இதைக் கேட்ட வஹாப்கான் நகைத்தார். ”அது தான் சரியான வழி” என்றும் இகழ்ச்சியுடன் கூறினார் நகைப்புக்கிடையே.

இகழ்ச்சி ஒலியைக் கவனிக்கவில்லைஜின்ஜின்ஸ். “ஒப்புக் கொள்கிறீரா?” என்று வினவினான் பெருமையுடன்.

”ஒப்புக் கொள்கிறேன். நம்மை அழித்துக் கொள்ள இதை விட சிறந்த வழி கிடையாது” என்ற வஹாப்கான் புன்முறுவல் காட்டினான்.
வஹாப்கான் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அப்போது தான் ஜின்ஜின்ஸ் மூளையில் எட்டியது. ”போர்த் தந்திரம் என்னை விட உமக்குத் தெரியுமா?” என்று வினவினான், ஜின்ஜின்ஸ் கடுமையுடன்.

”தந்திரம் தெரியாது. போர் தெரியும். நாம் கோட்டையை நோக்கி இப்பொழுது படையைத் திருப்பினால் பின்புறத்தில் சந்தாசாகிப் தாக்கத்தயாராக இருக்கிறார்” என்றார் வஹாப்கான்.

”சந்தாசாகிபா?” காப்டன் ஜின்ஜின்ஸின் குரல் லேசாக நடுங்கியது.

“எஸ்” என்ற வஹாப்கான் ஆங்கிலத்தில் இறங்கினார்.

“வேர் ஈஸ் ஹி?”

”வித்தின்த்ரீமைல்ஸ்.’’

காப்டன்ஜின்ஜின்ஸ் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. ‘யூ ஆர் ஷ்யூர்? (உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?)” என்று வினாவினான்ஜின்ஜின்ஸ்.

‘டாம் ஷியூர்” என்று எரிச்சலுடன் கூறினார் வஹாப்.

”வாட் டூ யூ வாண்ட் மி டு டூ? (இப்பொழுது என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்?)” என்று வினவினான்ஜின்ஜின்ஸ்.

அது வரை வாளாவிருந்த கிளைவ், ”அட்வான்ஸ் அண்டு அட்டாக் (முன்னேறித்தாக்கு)” என்றான்.

”டேன்ஜரஸ் (அபாயமானது)” என்றான்ஜின்ஜின்ஸ்.

கிளைவ் கடுமை நிரம்பிய கண்களால் உற்று நோக்கினான் ஜின்ஜின்ஸை. ”அவர் மாட்டோ மஸ்ட் பி ஆம்னியா ஆடாக்ஸ் (நமது லட்சியம் எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும்)” என்று ஆங்கிலமும் லத்தீனும் கலந்த மொழியில் மிக உக்கிரத்துடன் கூறினான் காப்டன் கிளைவ். தனது போர் முறையையும் விளக்கினான்.

Previous articleRaja Perigai Part 2 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here