Home Historical Novel Raja Perigai Part 2 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 2 Ch23 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch23 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 23. அடிமைப் பெண்

Raja Perigai Part 2 Ch23 | Raja Perigai | TamilNovel.in

அசட்டுப் பிடிவாதம் அதைரியம், முடிவுகளை எடுக்க முடியாத மனம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும் மனிதன் குட்டிச்சுவராவதற்கு. இந்த மூன்றும் காப்டன் ஜின்ஜின்ஸிடம் முழு அளவில் இணைந்திருந்ததால் அவன் கிளைவின் யோசனையையோ வஹாப்கான் யோசனையையோ கேட்க மறுத்தான். ”துணிவுடன் முன்னேறித் தாக்கு என்ற யோசனையைச் சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக ராணுவ ஆணைகளில் ஒன்றான, ‘ஆம்னியா ஆடாக்ஸையும்” கிளைவ் சுட்டிக் காட்டிய போது, “சந்தாசாகிப்பின் படையில் 500 பிரெஞ்சுக்காரர்கள் இருக்கிறார்கள். தவிர சுதேசிப் படையும் நம்மைவிட அதிகமானது” என்று சொன்னான்ஜின்ஜின்ஸ்.

”உங்ளிடம் 600 பிரிட்டிஷ்காரர்கள் இருக்கிறார்களே” என்று கிளைவ் கேட்டதற்கு, ‘பெருவாரியான எதிரியின் சுதேசிப் படை பிரிட்டிஷ்காரர்களை அழித்துவிடும்” என்று சால்ஜாப் சொன்னான், ஜின்ஜின்ஸ்.

‘நான் 4000 வீரர்களை அழைத்து வந்திருக்கிறேன்” என்று அப்துல் வஹாப்கான் கூறியதற்கு, ”அவர்களுக்குப் பயிற்சிப் போதாது” என்றான் ஜின்ஜின்ஸ். இதைக் கேட்ட அப்துல் வஹாப்கான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ”எங்களுக்குப் பயிற்சி இருக்கிறதோ இல்லையோ, போரில் இறங்காமல் பெண்களிடம் குலாவவும் குடிக்கவும் உங்கள் காப்டனுக்குப் பயிற்சி இருக்கிறது” என்று மற்றவர்களை நோக்கிச் சீறிவிட்டுச் சரேலென்று எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியேறினான் அப்துல் வஹாப்கான்.

அது வரையில் நிதானத்துடன் இருந்த கிளைவின் முகம் திடீரென நிதானத்தை இழந்து கோபத்தில் குப்பெனச் சிவந்தது. ”விஜயகுமார் நீ சென்று நவாப்பைச் சாந்தப்படுத்து” என்று விஜயகுமாரனுக்கு உத்தரவிட்டு, அவன் வெளியே சென்றதும் சுடுவிழிகளைக் காப்டன்ஜின்ஜின்ஸ் மீது திருப்பினான். “காப்டன் இந்த ஒரு சமயந்தான் இருக்கிறது வெற்றிக்கு. வெள்ளைக்கார சோல்ஜர்கள் உங்களிடம் அதிகம். நான் எடை போட்ட வரையில் அப்துல் வஹாப்கானும் அவரது சிப்பாய்களும் உயிரைவிடத் தயாராக இருக்கிறார்கள். இப்போது உடனே முன்னேறிக் கோட்டைக்குச் செல்லும் நீர்நிலையைக் கைப்பற்றுங்கள். பிறகு சந்தாசாகிப் வந்தால் நீர்நிலை உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். கோட்டைச் சுவர் மறைவளிக்கும். மறைவிலிருந்து நீங்கள் தாக்கலாம். ஆகவே உடனடியாகக் கூடாரங்களைக் கழற்றிப் போருக்குத் தயாராகுங்கள்” என்று கூறினான். சொற்களில் கடுமையைக் காட்டி.
இதைக் கேட்டதும் காப்டன் ஜின்ஜின்ஸ் தனது உபதளபதிகளை ஒருமுறைச்சுற்றி நோக்கினான், ‘கம்பீரமாக. பிறகு வினவினான் கிளைவை நோக்கி, ‘உன் பதவி என்ன?” என்று.

”காப்டன்” என்றான் கிளைவ், ஜின்ஜின்ஸின் கண்களுடன் தனது கண்களைக்கலந்து.

ஜின்ஜின்ஸ் அந்தக் கண்களின் கூரிய நோக்கைத் தாளாது டால்டனை நோக்கித் திருப்பினான் தனது கண்களை. ”காப்டன் டால்டன் காப்டன் கிளைவ் இங்கு எதற்காக வந்திருக்கிறார்?” என்று வினவினான்.

”உணவுப் பொருள் கொண்டு வந்திருக்கிறார்” என்றான் காப்டன்டால்டன், குரலில் வெறுப்பைக்காட்டி.

அந்த வெறுப்பின் காரணத்தை உணர்ந்த ஜின்ஜின்ஸ் கிளைவை மீண்டும் நோக்கி, ”காப்டன் கிளைவ்| இந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்த வந்திருக்கிறீரா?” என்று வினவினான்.

“இல்லை.”

”கவர்னர் உத்தரவு என்ன?”

”உணவுப் பொருள்களை உங்களுக்குச் சப்ளை செய்வது,”

”வேறு உத்தரவு இல்லையே?”

“இல்லை.”

”தென் யூ கான் கோ. போரை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றான்ஜின்ஜின்ஸ் திட்டவட்டமாக.

காப்டன் கிளைவ் ஜின்ஜின்ஸின் தோரணையைக் கண்டு சிறிதும் சளைக்கவில்லை. ”வேவு பார்க்க வரும் பெண்களைக் கட்டிக்கொண்டு போரை நடத்த முடியாது” என்று கடுங்குரலில் சொன்னான்.

காப்டன் ஜின்ஜின்ஸின் முகத்தில் அப்போதான் திகில் உதயமாயிற்று. “என்ன! வேவு பார்க்கும் பெண்களா” என்று வியப்பும் திகிலும் கலந்த குரலில் வினவினான்.

“ஆம்.”
“எங்கே பார்த்தாய் அவர்களை?”

“முதல் இரண்டு பேரைப் பார்க்கவில்லை. மூன்றாமவளை இந்தக் கூடாரத்தில் உங்கள் அணைப்பில் பார்த்தேன்.”

“அவள் வேவுகாரியென்று உனக்கு எப்படித் தெரியும்?”

”அவள் உன் படைத் தளத்தின் ஓரத்துக்குச் சென்று அங்கு வரும் சந்தாசாகிபின் வீரனுக்குச் செய்தி கொண்டு போவதற்கு முன்னால் வஹாப்கான் அவளைப் பிடித்து விஷயத்தைக் கக்க வைத்தார்.”

“இதை ஏன் என்னிடம் நீங்கள் சொல்ல வில்லை ?”

“நான் கேவலம் உணவுப் பொருள் கொண்டு வரும் காபடன்” என்றான் கிளைவ் இகழ்ச்சி நிரம்பிய குரலில். பிறகு தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று கொண்டு, “ஜின்ஜின்ஸ்” என்று அழைத்தான் காப்டன் என்ற சொல்லைக் கைவிட்டு.

”யூ ஆர் டாக்கிங் டு காப்டன் ஜின்ஜின்ஸ்”’ கடுமை கலந்திருந்தது ஜின்ஜின்ஸின் குரலில்.

”ஐ நோ” என்ற கிளைவ், ஜின்ஜின்ஸைப் பரம இகழ்ச்சியுடன் நோக்கினான். “எமான் பிகம்ஸ் காப்டன் நாட் பை தி டைட்டில் பட் பை பர்ஃபாமன்ஸ் (ஒரு மனிதன் பட்டத்தால் காப்டனாவதில்லை சாதனையால் ஆகிறான்)” என்றும் மிகக் கடும் சொற்களை பிரயோகித்து மேலும் தொடர்ந்தான் அதே குரலில்: ”காப்டன்! உடனடியாகப் போரைத் துவக்குங்கள். இல்லையேல் கோட்டை வாயிலுக்கு எதிரிலுள்ள நீர்நிலையைாவது கைப்பற்றி எதிரி உங்களை அழிக்காத நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் யார் யோசனையும் தேவையில்லையென்று சொன்னாலும் நான் சொல்கிறேன் யோசனையை. கசப்பாயிருந்தாலும் உண்மையைக் காணவும், ஒப்புக் கொண்டு செயலாற்றவும் முற்படுங்கள். நான் உணவுப் பொருள் கொண்டும் வரும் காப்டன்தான். ஆனால் கவர்னரிடம் இங்குள்ள நிலைமையை நான் சொல்வதிலிருந்து என்னை யாரும் தடுக்க முடியாது. துரிதமாக நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரு குற்றங்கள் உங்கள் மேல் செலுத்தப்படும். 1. நீங்கள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்காதது. 2. நீங்கள் நம்மை நம்பியுள்ள முகம்மது அலியைக் கைவிட்டது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.” இதற்கு பிறகு அந்தக் கூடாரத்திலிருந்து வெளியேறினான் கிளைவ்.

”காப்டன் காப்டன்” என்ற டால்டனின் அழைப்புக் குரல் சிறிது தடுக்கவே கிளைவ் நின்று திரும்பி நோக்கினான்.
“காப்டன் இன்னும் ஒரு வாரம் இங்கே தங்க முடியாதா?” என்று வினவினான் காப்டன் டால்டன்.

“முடியாது. கவர்னர் உத்தரவில்லை அதற்கு.”

”இங்குள்ள நிலைமையை எடுத்தெழுதி அனுமதி கேட்க முடியாதா?”

‘’அனுமதி கேட்டாலும் பயனில்லை. முட்டாளான ஜின்ஜின்ஸிடம் என்னால் வேலை செய்ய முடியாது.”

“ஜின்ஜின்ஸ்…”

”எனக்குச் சீனியர்.”

“இங்கு சீனியாரிடி எதற்கு? திறமைதானே தேவை?”

காப்டன் கிளைவ் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது சிந்தித்துவிட்டு, ”காப்டன் டால்டன்!

பிரிட்டிஷ் படை சில சம்பிரதாயங்களால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அதை மீறுவதற்கில்லை. கவர்னர் உத்தரவில்லாமல் சீனியரான காப்டன்ஜின்ஜின்ஸின் உத்தரவுகளை மீறி நான் எதுவும் செய்ய முடியாது. நீ இருக்கும் நிலையில் தான் நானும் இருப்பேன். எதற்கும் நான் போய்க்கவர்னரிடம் விஷயங்களைச் சொல்கிறேன். அப்துல் வஹாப்கான் நம்மிடமிருந்து நழுவ விடாமல் நீ பார்த்துக் கொள்” என்று கூறி விட்டு அப்துல் வஹாப்கான் கூடாரத்தை நோக்கி நடந்தான். அங்கு வஹாப்கானுக்குத் தைரியம் சொன்னான்; ”நவாப் பிரிட்டிஷ்காரர்கள் சிறந்த நண்பர்கள். உங்களையோ உங்கள் அண்ணனையோ கைவிடமாட்டார்கள். உறுதியாய் நம்புங்கள்” என்று. அத்துடன் கவர்னரிடம் விஷயங்களை விவரிப்பதாகவும் கூறிவிட்டு விஜயகுமாரனை அழைத்துக் கொண்டு வஹாப்கானிடம் அனுமதி பெற்று வேவுகாரப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு ஸெய்ன்ட் டேவிட் கோட்டையை நோக்கிப் பயணமானான்.

அங்கிருந்து புறப்பட்ட மூன்றாம் நாள் ஸெயின்ட் டேவிட் கோட்டையை அடைந்து கவர்னரிடம் விஷயங்களை அறிவித்து, அந்த வேவுகாரியையும் அவர் முன்பு நிற்க வைத்தான். அன்றும் கவர்னர் அந்த ஆலோசனை அறையில் தானிருந்தார். வாலிகண்ட புறத்தின் பயங்கர நிலையைக் கேட்டபோதுகூட அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தெரியவில்லை. அவர் விழிகளில் அந்த இரும்பு நோக்கு மட்டும் இருந்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் எதிரே நின்ற அடிமைப் பெண்ணை உற்று நோக்கினார். பிறகு யாரும் கேட்காத ஒரு கேள்வியை மெல்லக் கேட்டார்ஸாண்டர்ஸ், ‘ஹௌ ஆர்யூரிலெடட்டு சந்தாசாகிப்?” என்ற அந்த கேள்வியைக் கேட்டு கிளைவ் அசந்து போனான். அந்தப் பெண்ணின் முகத்திலோ இணையிலா பிரமிப்பு பரவியது. அதிலிருந்து அவளுக்கு ஆங்கிலமும் சிறிது தெரியும் என்பதைப் புரிந்து கிளைவின் பிரமிப்பு எல்லை கடந்தது.

இத்தனைக்கும் அந்தப் பெண் வாயைத் திறக்கவில்லை. ஆகவே கவர்னர் ஸாண்டர்ஸே சொன்னார், ”யூ ஆர் ஹிஸ் டாட்டர்’’ என்று.

இதற்கு அந்தப் பெண் தலை அசைத்தாள். கவர்னர் மந்திரவாதியாகத்தாள் இருக்க வேண்டும் என்றும் கிளைவ் தீர்மானித்தான். ”யுவர் எக்ஸலென்ஸி’’ என்று பிரமிப்புடன் துவங்கினான் பேச.

கவர்னர் கையசைப்பினாலேயே அவனை மேலே பேச விடாமல் அடக்கிவிட்டு, “லுக் அட்ஹர் பேஸ்” என்று கூறினார்.

கிளைவ் அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கினான். சந்தாசாகிபின் முகச்சாயல் அதில் பூர்ணமாயிருந்ததை அப்போது தான் கண்டான். இருப்பினும் கவர்னருக்கு அந்த விஷயம் எப்படித் தெரியும் என்று அவனால் புரிந்து கொள்ள முடியாததால் திகைத்து நின்றான்.

புன்சிரிப்பையைக் காட்டிப் பழக்கமில்லாத கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸின் முகமும் சிறிது உவகையின் சாயலைக் காட்டியது. கவர்னர் மௌனமாகவே தமது மேஜை டிராயரைத் திறந்து அங்கு எதையோ தேடி, முடிவில் ஒரு காகிதச் சித்திரத்தை எடுத்து மேஜைமீது போட்டார். அதில் சந்தாசாகிபின் உருவம் தத்ரூபமாகக் காட்சியளித்தது.”ஐ லைக் டு நோ மை எனிமீஸ் அண்டு ப்ரண்ட்ஸ்” என்று கூறி முகம்மது சித்திரமொன்றையும் எடுத்து மேஜை மீது போட்டார்.

”ஹௌ டிட் யூ கெட் திஸ்?” என்று சந்தாசாகிபின் படத்தைச் சுட்டிக்காட்டி வினவினான் கிளைவ்.

”ஐ ஆஸ்க்ட் முகம்மது அலி டு ஸெண்ட் ஒன்” என்றார் கவர்னர்.

கிளைவ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. கவர்னரின் உத்தரவுக்காக எதிர்பார்த்து நின்றான். கவர்னர் அவனைக் கவனிக்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்து, “யூவாண்ட்டு கோடு யுவர்ஃபாதர்? (உன் தந்தையிடம் போக விரும்புகிறாயா)” என்று வினவினார்.

”ஐ ஆம் நாட் ஹிஸ் ஸ்ட்ரெய்ட்டாட்டர் (நான் அவர் நேர் பெண்ணல்ல)” என்ற கூறினாள் அவள்.
”டாட்டர் ஆப் எ ஸ்லேவ்? (அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவளா)”

”எஸ்” என்றாள் அவள்.

”எனிவே சந்தாசாகிப் ஹாஸ் ட்ரெய்ன்ட் யூ வெரி வெல் (எப்படியிருப்பினும் சந்தாசாகிப் உன்னை நன்றாகப் பழக்கியிருக்கிறார்)” என்று கூறிய கவர்னர், “காப்டன் ரிலீஸ் ஹர் அண்டு ஹாவ் ஹர் ஸேப்லி டெலிவர்ட்டு ஹர் பாதர். (காப்டன் இவளை விடுதலை செய்து ஜாக்கிரதையாகச் சந்தாசாகிபிடம் அனுப்பிவிடு!)” என்றார்.

முடியாதென்பதற்கு அறிகுறியாகக் கிடுகிடுவென்று பக்கவாட்டில் தலையசைத்தாள் அவள். ”நான் போனால் நவாப்கொன்று விடுவார்” என்றும் திட்டவட்டமாகக் கூறினாள் ஹிந்துஸ்தானியில் இதைக் கிளைவ் மொழிப் பெயர்த்தவுடன் கவர்னர் கேட்டார் ஆங்கிலத்தில், “என்ன செய்யப் போகிறாய்?” என்று.

அந்தப் பெண் சொன்ன பதிலைக் கேட்டதும் எதற்கும் அசையாத கவர்னரும் அசைந்து சிரித்தார் பலமாக. கிளைவோ சொல் செயல் இரண்டையும் இழந்து நின்றான்.

”நான் இனி இவருக்குச் சொந்தம்’’ என்று அவள் கிளைவை நோக்கி கையைக் காட்டினாள். அது மட்டுமல்ல. தனது உரிமையை ஊர்ஜிதம் செய்ய அவன் பக்கத்தில் போயும் நின்று கொண்டாள்.

Previous articleRaja Perigai Part 2 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here