Home Historical Novel Raja Perigai Part 2 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

45
0
Raja Perigai Part 2 Ch24 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch24 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 24. காப்டனின் சங்கடம்

Raja Perigai Part 2 Ch24 | Raja Perigai | TamilNovel.in

எதற்கும் பிரமிக்காத காப்டன் ராபர்ட் கிளைவ் அந்த அடிமைப் பெண்ணின் சொல்லைக் கேட்டும் செயலைக் கண்டும் அடியோடு அதிர்ச்சிக்குள்ளாகி, கவர்னர் ஸாண்டர்ஸ் முன்பு ஆடு திருடிய கள்ளன் போல் விழித்துக் கொண்டு நின்றான் பல விநாடிகள். சிறிது அசைந்தாலும் பக்கத்தில் நிற்கும் அந்த அடிமைப் பெண்ணின் உடல் தன்மீது பட்டுவிடும் என்ற பயத்தில் பக்கவாட்டிலோ பின்னாலோகூட நகராமல் சிலை போலவே காட்சியளித்தான். ஆனால் அந்த அடிமைப் பெண் சும்மா இல்லை. கிளைவின் ஒரு கையுடன் தனது கையைப் பின்னிக் கொண்டாள். ‘அடிமைக்கு உத்தரவிடுங்கள்” என்று கேட்டாள் ஹிந்துஸ்தானியில்.

‘நீ எனக்கு அடிமையுமில்லை, நான் உத்தரவிட ஏதுமில்லை ” என்று கடுப்புடன் பதில் கூறினான் கிளைவ் அரைகுறை ஹிந்துஸ்தானியில்.

அந்த நிலையில் ஸாண்டர்ஸின் இதழ்களிலும் புன்முறுவல் அரும்பி, அவரது வாயிலிருந்த பைப்பும் லேசாக அசைந்தது. அந்தப் பைப்பை எடுத்துக் கையில் வைத்துச் சிறிது நேரம் திருகிக் கொண்டே இருந்த கவர்னர், ”காப்டன் தி கேர்ல் இஸ் ப்யூடிஃபுல்” என்று குறிப்பிட்டார். அவர் சொற்களில் நேரடியாக உணர்ச்சி தெரியாவிட்டாலும் மறைமுகமாக விஷமம் ஊடுருவி நின்றது.

காப்டன் கிளைவ் நின்ற இடத்தில் லேசாக அசைந்து அவள் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டான். பிறகு கவர்னரை நோக்கி, ”யுவர் எக்ஸலன்ஸி! பிரிட்டிஷ் படை அடிமைகளை ஏற்பது வழக்கமல்ல” என்றான்.

கவர்னர் ஸாண்டர்ஸ் உற்சாக நிலையில் இருந்ததால் நாற்காலியில் சிறிது சாய்ந்து உட்கார்ந்து, ”காப்டன் இன் தி ஆர்ட்டிகில்ஸ் கவர்னிங் மிலிடரி டிஸ்ப்ளின் ஐ டோன்ட ஃபைன்ட் எனி ரெபரென்ஸ் டு ஸ்டேட்டஸ் ஆப் ஸ்லேவ் கேர்ல்ஸ் (காப்டன், தமது ராணுவக் கட்டுப்பாட்டு விதிகளில் அடிமைப் பெண்களின் அந்தஸ்து பற்றிய குறிப்பு எதையும் காணவில்லை”) என்று கூறினார்.

இந்தச் சமயத்தில் அந்த அடிமைப் பெண்ணும் உரையாடலில் கலந்துக் கொண்டு, ”யுவர் எக்ஸலென்ஸி இஸ் ரைட்” என்று சொன்னாள்.

இதைக் கேட்ட கிளைவ் அசந்து போய், ”உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?” என்று வினவினான்.

”இங்கிலிஷ், பிரெஞ்சு இரண்டு மொழிகளில் எங்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது” என்றாள் அவள்.

‘’எங்களுக்கு என்றால் சந்தாசாகிபின் பெண்களுக்கா?” என்று வினவினான் கிளைவ்.

”இல்லை,” என்றாள் அடிமைப் பெண். ” வேறு யாருக்கு?”

‘’அடிமைகளுக்கு. நான் ஒரு பெண் இருக்கிறேன் என்பது கூட நவாபுக்குத் தெரியாது. எத்தனையோ அடிமைகள். எத்தனையோ பெண்கள். எல்லாரையும் நவாப் அறிய முடியாது. எங்களுக்குப் பயிற்சியளிக்கும் ஹவில்தாரர்களுக்குத்தான் தெரியும்.”

கிளைவ் சிந்தனையில் இறங்கினான். கவர்னர் ஸாண்டர்ஸும் சிறிது சிந்தித்தார். ”காப்டன் பெட்டர் டேக் தி கேர்ல் டு யுவர் ரூம். வெயிட் ஹியர் ஃபார் ஃபிஃப்டீன் டேஸ் (காப்டன் இந்தப் பெண்ணை உங்கள் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். இங்கேயே பதினைந்து நாட்கள் தங்கட்டும்)” என்று முடிவில் உத்தரவிட்டார்.

கிளைவும் ஒரு தீர்மானத்துக்கு வந்து கவர்னர் கதவைத் திறந்து, ”லெப்டினண்ட்” என்று அழைக்க விஜயகுமாரன் உள்ளே தோன்றிக் கவர்னரை வணங்கினான். ”காப்டன்” என்று கிளைவையும் வணங்கி உத்தவை எதிர்பார்த்து நின்றான்.

அடுத்த விநாடி இடப்பட்ட கிளைவின் உத்தரவு விஜயகுமாரனைத் திகைக்க வைத்தது. ”லெப்டின்ட்ட இவளை எனது அறைக்கு அழைத்துப் போ” என்று உத்தரவிட்டதைக் கேட்டதும், கிளைவுக்குச் சித்தப் பிரமையில்லையென்பதை உறுதி செய்துகொள்ள அவனை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான் விஜயகுமாரன். பிறகு ”உங்கள் அறைக்கா?” என்று வினவினான்.

இந்தச் சமயத்தில் கவர்னர் இடைபுகுந்து, ”லெப்டினன்ட், காப்டன் கிளைவுக்கு இந்த மாளிகையில் ஒரு தனி அறை எப்போதும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதோ மாடியில் கோடி அறை” என்று அறிவிப்பை விடுவித்தார்.

விஜயகுமாரனுக்குச் சிந்திக்கவும் அவகாசமில்லாததால், ”ஆம்” என்று அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு அவள் பின்தொடர வெளியே சென்றான்.

அவ்விருவரும் சென்ற பிறகு கிளைவ் கவர்னரை நோக்கி, ”யுவர் எக்ஸலன்ஸி, வாட் இஸ் காமெடி அபௌட்? (யுவர் எக்ஸலென்ஸி! இந்த ஹாஸ்ய நாடத்துக்கு என்ன அர்த்தம்?)” என்று வினவினான்.

கவர்னர் ஒரு முறை பைப்பை வாயில் வைத்துப் புகையை நன்றாக இழுத்து வெளியிட்டார். ”ஐவில் ராதர் டர்ம் இட் எ ட்ராஜடி (இதை நான் விபரீதம் என்று கருதுவேன்)” என்றும் சொன்னான்.

”என்ன விபரீதம் இதில்?”

‘’ஒரு அழகி கிடைக்கிறாள்…”

”ஆம்.”

”அவள் பிரிட்டிஷ் காப்டனிடம் அடிமையாயிருக்க, அவன் எதைச் சொன்னாலும் செய்ய…”

”யுவர் எக்ஸலென்ஸி…”

”செய்யத் தயாராயிருக்கிறாள். அப்படியிருக்க ஒரு ராணுவ காப்டன் அவளைக் கண்டு நடுங்குகிறான்’ என்ற கவர்னர், ”மை பாய் யூ ஆர் லக்கி (தம்பி நீ அதிர்ஷ்ட சாலி)” என்றும் கூறி அவன் போகலாமென்பதற்கு அடையாளமாகக் கையை அசைத்தார்.

காப்டன் அவருக்குத் தலைவணங்கி வெளியே வந்து தனது அறையை அடைந்ததும் அங்கு உண்மையாகவே விபரீத நிலை இருந்தது.. அறை வாயிற்படியில் விஜயகுமாரன் உட்கார்ந்திருந்தான். உள்ளே அடிமைப் பெண், கிளைவுக்குப் படுக்கையை அங்கிருந்த சிறு கட்டிலின்மீது விரித்துக் கொண்டிருந்தாள். அந்த நிலையைக் கண்ட கிளைவ் சினத்தின் வசப்பட்டு, “லெப்டினன்ட்” என்று கண்டிப்பு நிரம்பிய குரலில் விஜயகுமாரனை அழைத்தான்.

விஜயகுமாரன் சட்டென்று எழுந்து சல்யூட் அடித்து, “எஸ் காப்டன்” என்று உத்தரவுக்கு எதிர்பார்த்து நின்றான்.

‘’இங்கு ஏன் வாயிற்படியில் உட்கார்ந்திருக்கிறாய்?” கிளைவின் குரலில் கோபம் நிரம்பி வழிந்தது.

”அவள் உள்ளே விட மறுக்கிறாள்.”

”அவள் உத்தரவுபடி நீ நடக்க வேண்டுமா?”

”இல்லை.”

“பின் உள்ளே செல்வதுதானே?”

”செல்ல முயன்றேன். தலையணையை எடுத்து வீசீனாள் என் மீது.”

”பிறகு?”

”பிடித்தும் தள்ளினாள்.”

”இதைச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை?”

‘’இல்லை. முதலில் அவள் பலசாலி, இரண்டாவது உங்கள்…..”

”விஜயகுமார்”

”அவள்தான் சொன்னாள்”

”என்ன சொன்னாள்?”

”உங்களுக்குச் சொந்தமென்று.”

இதைச் சொன்ன விஜயகுமாரன் வெளிப்படையாகச் சிரிக்கவில்லையென்றாலும் உள்ளூற நகைப்பதை அவன் முகம் தெளிவாகக் காட்டியது.

கிளைவ் அவன் முகத்தைக் கவனித்த விஷயத்தை உணர்ந்து கொண்டாலும் உணராதது போலவே நடித்து, ”விஜயகுமார் யூகம் வித்மி’ என்று கட்டளையிட்டு அறைக்குள் சென்றான். விஜயகுமாரனும் பின்தொடர்ந்தான். கிளைவ் உள்ளே நுழைந்ததும் அவன் ஹாட்டை அந்தப் பெண்ணே கழற்றி எட்ட இருந்த கோட் ஸ்டாண்டில் மாட்டினாள். பிறகு அவன் கோட்டையும் அவிழ்த்து அதற்குப் பக்கத்தில் மாட்டி விட்டாள். கிளைவ் பிரமை பிடித்தவனாய்ச் சட்டென்று கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டான். அந்தப் பெண் தூரத்திலிருந்த பீங்கான் பேஸினில் எட்ட இருந்த மண் கூஜாவிலிருந்து நீரை ஊற்றி ஒரு டவலையும் எடுத்துக் கிளைவிடம் நீட்டினாள். கிளைவ் ஏதோ சொப்பனத்தில் நடப்பவன் போல் பேஸினில் முகம் கைகள் கழுவி டவலால் துடைத்துக் கொண்டான். பிறகு கிளைவுக்கும் விஜயகுமாரனுக்கும் உணவை அந்தப் பெண்ணே பரிமாறினாள். அவர்கள் உணவருந்திய பின் தானும் நிதானமாகக் கிளைவின் பிளேட்டிலேயே உணவைப் பரிமாறிக் கொண்டு அருந்திக் கை கழுவினாள். ப்ளேட் முதலியவற்றைப் பக்கத்தறையில் அலம்பிக் கொண்டு வந்து சுத்தமாக வைத்தாள்.

அவள் நடவடிக்கைகளைக் கிளைவும் விஜயகுமாரனும் வேடிக்கையாகக் கவனித்துக் கொண்டு ஒருவன் படுக்கையிலும் இன்னொருவன் நாற்காலியிலும் உட்கார்ந்திருந்தார்கள். அலு வல்களைச் சீராக முடித்த பின் அவள் விஜயகுமாரனை நோக்கி, ”லெப்டினண்ட்” என்ற அழைத்தாள்.

”எஸ் மேடம்” என்றான் விஜயகமாரன்.

”யூ நாட் ஸ்பீக் குட் இங்கிலீஷ்” என்றாள் அப் பெண்.

”யூ மீன்மீ?”

”எஸ்.”

”ஹொய்?”

”ஐ ஆம் நோட் மேடம்; ஐ ஆம் மிஸ்.”

இதைக் கேட்ட கிளைவ் தன்னையும் மறந்து கைகளைத் தட்டி விட்டான்.

”யூஸீமை லார்ட் அப்ரிஷியேட்ஸ் மி (பார்த்தாயா? என் தலைவர் என்னைப் பாராட்டுகிறார்)” என்றாள் அடிமைப் பெண்.

கிளைவின் முகம் திடீரெனப் பரிதாபகரமாக அவளை நோக்கியது. விஜயகுமாரன் நகைத்தான்.

கிளைவுக்கு ஒரு யுக்தி தோன்றவே, ‘’மை டியர் கேர்ல் ” என்று அழைத்தான் அவளை.

”எஸ்லார்ட்” என்றாள் அவள் பூரித்த உள்ளத்தின் உவகை முகத்தில் விரிய.

”மை லெப்டினண்ட்” என்று விஜயகுமாரனைக் காட்டினான்.

”எஸ்’’ என்ற அவள் புருவங்கள் கேள்விக் குறியால் உயர்ந்தன.

”அழகாயிருக்கிறான்” என்றான் கிளைவ். ”ட்ரூ” என்றாள் அவள். ”உனக்கு என்னைவிடத்தகுந்தவன்.”

இந்த உரையாடலைக் கேட்ட விஜயகுமாரன், ”மிஸ்” என்று அவளை அழைத்தான்.

“எஸ்”

”எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்.”

“குட்?”

”காப்டனுக்கு யாருமில்லை”

”வெரி குட்”

”தவிர, என்னைவிடப் பெரிய வீரர், தனிக்கட்டை தவிர…”

”எஸ் எஸ்.”

”குட் மேட்டு யூ. டோண்ட் ஃபர்கெட் கவர்னர் கேவ் யூ டு ஹிம், நாட்டு மி (உனக்குச் சரியான ஜோடி. தவிரகவர்னர் உன்னை அவருக்குத்தான் தந்தாரே தவிர எனக்கல்ல)” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

”யூ ஆர்ரைட் நௌ கெட் அவுட்” என்ற அந்த அடிமைப் பெண் வாயிற்படியைச்சுட்டிக்காட்டினாள் விஜயகுமாரனுக்கு.

விஜயகுமாரன் ஏதோ பெரிய விபத்திலிருந்து தப்பியவன் போல் ரெலென எழுந்தான் நாற்காலியிலிருந்து. ஆனால், ‘ஸிட் டௌன்” என்ற கிளைவின் கடுமை அவனை மீண்டும் உட்கார வைத்தது.

கிளைவ் முடிவாகக் கூறினான், ‘நாம் மூவரும் இந்த அறையில் படுக்கப் போகிறோம்” என்று.

அன்றைய நாடகம் அந்தக் கட்டளையுடன் முடிந்தது. கிளைவ் ஆணையிட்டதும் அந்தப் பெண் அறை மூலைக்குச் சென்று சுருட்டிப் படுத்துக் கொண்டாள். அன்றும் அடுத்த பதினைந்த நாளும் கிளைவுக்கும் விஜயகுமாரனுக்கும் வாழ்க்கை பரம நரகமாக இருந்தது. அவர்கள் எங்கே சென்றாலும் அடிமைப் பெண் அவர்களைத் தொடர்ந்து சென்றாள். ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்த சோல்ஜர்கள் கிளைவையும் லெப்டினண்டையம் கேலியாகப் பார்த்தார்கள். பின்னால் ஏதோ கிசகிசு வென்று பேசினார்கள். இந்த நிலைக்குப் பரிகாரம் பதினைந்தாம் நாளன்றே வந்தது. அந்த இரவில் எங்கோ வெளியிலிருந்து வந்த அடிமைப் பெண் தூங்கிக்கொண்டிருந்த கிளைவை அசைத்து எழுப்பினாள். அவன் எழுந்து உட்கார்ந்ததும் பேச வேண்டாமென்று சைகை காட்டிவிட்டுக் கட்டிலில் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கழுத்தைத் தன் கையால் வளைத்துக் காதுக்கருகில் கிசுகிசுவென்று ஏதோ சொன்னாள்.

இந்தச் சமயத்தில், ”ஐ ஆம் ஸாரி” என்ற குரல் வாயிற் படியிலிருந்து வந்தது. கிளைவ் திகிலுடன் பார்த்தான், வாயிற் படியை. கவர்னர் ஸாண்டர்ஸ் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார்.

Previous articleRaja Perigai Part 2 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here