Home Historical Novel Raja Perigai Part 2 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 2 Ch25 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch25 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 25. தோல்வி

Raja Perigai Part 2 Ch25 | Raja Perigai | TamilNovel.in

கழுத்தை அடிமைப் பெண்ணின் கரம் வளைத்துக் கட்டிக் காதில் அவள் வாய் புதைத்து நின்ற நிலையில் கவர்னர் தன்னைக் கண்டதே பரம சங்கடமாயிருந்தது கிளைவுக்கு. அத்துடன் அவர் ”ஐ ஆம் ஸாரி” என்று சொன்னதும் புன்முறுவல் பூத்ததும் கிளைவின் எரிச்சலைப் பல மடங்கு உயர்த்தவே, “இதில் வருந்து வதற்கு எதுமில்லை ” என்றான் சுத்தத் தமிழில்.

கவர்னர் ஸாண்டர்ஸ் தாம் சாதாரண மனிதரல்ல என்பதை நிரூபித்தார். “உண்மை உண்மை” என்றார் அவரும் சுத்தத் தமிழில். அவரடைய தமிழைக் கண்டு அசந்து போனான் கிளைவ். ”யுவர் எக்ஸலன்ஸி” என்று வியப்படன் ஏதோ சொல்லவும் தொடங்கினான்.

”சொல்” என்றார் ஸாண்டர்ஸ்.

“தமிழை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?”

“தினம் இரண்டு மணி நேரம் செலவழித்து.”

”எதற்கு?”

”ஒரு தேசத்தில் நாம் இருப்பதாக முடிவு செய்துவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார் கவர்னர்.

கிளைவ் அவரை வியப்புடன் நோக்கினான். “வாட்டு யு மீன் யுவர் எக்ஸலன்ஸி? (என்ன சொல்கிறீர்கள் எக்ஸலன்ஸி?)” என்ற சொந்த மொழிக்குத் திரும்பினான்காப்டன். இந்தச் சமயத்தில் அடிமைப் பெண் இடை புகுந்தாள். ”ஹிஸ் எக்ஸலன்ஸி ஹாஸ் டிஸைடெட் (எக்ஸலன்ஸி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்)” என்று ஆங்கிலத்தில் திட்டமாகப் பேசினாள்.

கவர்னர் அவள் மீது பார்வையைச் செலுத்திவிட்டு, ”யு ஆர் எஷ்ரூட் கேர்ள்” என்றார்.

”ஹௌ?” கிளைவ் வினவினான் வெறுப்படன்.

”ஷீ அண்டர்ஸ்டாண்ட்ஸ் (அவள் புரிந்து கொள்கிறாள்)” என்றார் கவர்னர்.
கிளைவுக்குக் கவர்னரின் மனத்தில் ஓடியது என்னவென்று புரிந்தாலும் அவர் வாயாலேயே அதை வரவழைக்கத் தீர்மானித்து, ”அவள் எதைப் புரிந்து கொண்டிருக்கிறாள்?” என்றான்.

“நான் இங்கிருந்து அசையப் போவதில்லை என்பதை” என்றார் கவர்னர் திட்டவட்டமாக.

”இந்தியாவிலிருந்து, இப்போது கர்நாடகம் இருக்கும் நிலையில் ஒன்று பிரிட்டன் நிலைக்கும், அல்லது பிரான்ஸ் நிலைக்கும்” என்று தமிழில் சொன்ன கவர்னர் உணர்ச்சி மேலிட்டு, “ஐ ஹாவ் டிசைடெட் தட் இட்ஷல் பி அஸ் (இருக்கப் போவது நாம்தான் என்பதை நான் தீர்மானித்து விட்டேன்)” என்றார்.

இந்த உரையாடலுக்கு முன்பே எழுந்து சற்று எட்டி நின்றிருந்த விஜயகுமாரன் , ”யுவர் எக்ஸலன்ஸி…’ என்று உரை யாடலில் உட்புகுந்தான்.

”எஸ், லெப்டினண்ட் ” கவர்னர் கண்கள் அவன் இருந்த திசையை நாடின.

”இந்த நாட்டை நீங்கள் ஆள நினைக்கிறீர்கள்?” என்று விஜயகுமாரன் வினவினான்.

”ஆம்.”

“இந்த நாட்டு மன்னர்கள், நவாபுகள் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பார்களா?”

”மாட்டார்கள். தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டிருப்பார்கள். அங்கேதான் நாங்கள் வருகிறோம்’ என்ற கவர்னர், ”மை டியர் பாய்’ ஸ்டாண்டிங் டிவைடெட் இஸ் யுவர் பர்த் ரைட் (பிரிந்து நிற்பது உங்கள் பிறவிக் குணம்)” என்றும் சுட்டிக்காட்டினார்.

பிறகு கிளைவை நோக்கி, ”காப்டன்! நீங்களும் உங்கள்….! உம்…உம்… உங்கள் அடிமைப் பெண்ணும் இருந்த நிலையில் நான் உட்புகுந்தது சரியல்ல. ஆனால் விஷயம் அவசரம்… அதனால் தான் வந்தேன்” என்றார்.

”இஸ் இட் ஸோ அர்ஜண்ட் யுவர் எக்ஸலன்ஸி, (எக்ஸலன்ஸி அத்தனை அவசர வேலையா?)” என்ற வினவினார் காப்டன்.

”காப்டன் டால்டன் இஸ் ஹியர்!” என்றார் கவர்னர்.

”தட்ஸ் வாட் ஷி டெல்ஸ் மி” என்றான் கிளைவ்.

”வி ஹாவ் லாஸ்ட் தி பாட்டில் அட் வால்கொண்ட (நாம் வால்கொண்டா போரில் தோற்றுவிட்டோம்)” என்று கவர்னர் செய்தி சொன்னார்.

அதற்கும் வியப்புக் காட்டவில்லை கிளைவ். ‘ஷி டோல்டு மிதட் ஆல்ஸோ (அதையும் சொன்னாள் இவள்)” என்று அடிமைப் பெண்ணைச்சுட்டிக் காட்டினான்.

கவர்னர் மீண்டும் அவளை உற்று நோக்கினார். பிறகு கேட்டார். “நானும் டால்டனும் பேசினதைப் பார்த்தாயா?” என்று.

”பார்த்தேன். பிறகு கேட்டேன்.”

”எப்படி?”

”முதலில் சாவி போடும் கதவுத்துளையில் ஒரு கண்ணை வைத்தேன், பிறகு காதை வைத்தேன்” என்றாள் அவள்.

கவர்னர் ஒரு விநாடிதான் சிந்தனையில் இறங்கினார். பிறகு, ”யூ வில் பி யூஸ்ஃபுல் டு அஸ் (நீ எங்களுக்கு உபயோகப் படுவாய்)” என்ற கூறிவிட்டுக் கிளைவைத் தம்மைத் தொடரும்படி கையால் சைகை செய்து திரும்பி நடந்தார்.

‘டக், டக்’ என்ற சீரான பூட்ஸ் ஒலி தோல்வியிலும் அசையாத அவர் திட மனத்திற்கு அத்தாட்சி கூறியது.

அவர் சென்ற அடுத்த விநாடி கிளைவ் தனது ஹாட்டைத் தரித்துக்கொண்டு , ‘விஜயகுமாரா விஷயம் என்னவென்பதையும், அடுத்த திட்டம் என்னவென்பதையும் நான் அறிந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு, கவர்னர் அறையை நோக்கிச் சென்று, அங்கே காப்டன் டால்டனுடன் கை குலுக்கியதும் இரு வரையும் அமரச் சொன்ன கவர்னர் ஸாண்டர்ஸ், ”காப்டன் டால்டன் ரிலேட் வாட் ஹாப்பன்ட் இன் வால் கொண்டா இன் டீடெய்ல் (வால் கொண்டாவில் நடந்ததை விவரமாகச் சொல்)” என்ற உத்தரவிட்டார்.

காப்டன் டால்டன் மிகுந்த வேதனையுடனும் வெறுப்புடனும் வாலிகண்டபுரத்தின் தோல்வியை விவரித்தான். அவன் சொன்னான் ஆங்கிலத்தில்: ”யுவர் எக்ஸலன்ஸி வெற்றியாக வேண்டிய போர் தோல்வியை அளித்தது. இத்தனைக்கும் காப்டன் ஜின்ஜின்ஸின் திடமில்லாத மனமும் முடிவுகளை எடுக்க முடியாத மூளையுந்தான் காரணம். காப்டன் கிளைவ் வந்த பிறகும் அவர் யோசனை கூறிய பிறகும் ஜின்ஜின்ஸ்
முன்னேறிச் சந்தாசாகிபின் படையை எதிர்கொள்ள மறுத்தார். அநாவசியமான தாமதம் எதிரியின் கையை வலுப்படுத்தியது. கோட்டையைத் தாக்க நமது மார்ட்டர் பீரங்கிப் படை பின்வாங்கிப் பாசறைக்கு வந்தது. சந்தாசாகிப் படையின் முன்னோடிகள் மறுநாள் தூரத்திலிருந்த மலை உச்சிகளில் தெரிந்தார்கள். அந்த மலைப்பகுதிகள் எங்களுக்கும் எதிரிப் படைகளுக்கும் இடையில் இருந்தது. அந்த மலைப் பகுதியிலிருந்து கோட்டை வாயிலுக்குச் செல்லும் நீர் நிலையைக் கைப்பற்ற எதிரியின் படை முன்னேறியது. நீர் நிலையின் பக்கத்திலிருந்த நாங்கள், அதைச் சுலபமாகக் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் ஜின்ஜின்ஸ் அசைய வில்லை. அசைந்த போதும் அவரால் திட்டமாகக் கட்டளை இட முடியவில்லை. நாங்கள் அணிவகுத்து நின்றபோதும் எங்களை நோக்கிக் கேட்டார், ‘நாம் முன்னேறித் தாக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா ?’ என்று.

“இதனால் உபதலைவர்கள் அதைரியமடைந்தார்கள். இதற்குள் இருபடைகளும் கை கலந்துபோது சுதேசிகளே நன்றாகப் போரிட்டார்கள். அப்துல் வஹாப்கான் படை சீறிச் சென்றது சந்தாசாகிபின் மீது. வஹாப்கானின் குதிரை சுடப்பட்டு வீழ்ந்தபோதும்கூட அவர் மீண்டும் வேறு புரவி ஏறிப் போரிட்டார். சுதேசிகளுடைய வீரம்கூட வெள்ளையரை ஊக்கவில்லை. இதைவிட மானக்கேடான போரை நான் பார்த்ததில்லை. அப்துல் வஹாப்பின் படையினர் நம் கோழைத்தனத்தைக் கண்டு வெறுத்தனர். இப்போது ஜின்ஜின்ஸ் தமது படையுடன் திருச்சிக்கு ஓடிக் கொண்டிருக்கிறார். சந்தாசாகிப் அவரைத்தொடர்ந்து செல்கிறார்.’’

இந்தக் கதையைச் சொல்லி முடித்த காப்டன் டால்டன் தன் மன வேதனையை முகத்தில் நன்றாகக் காட்டினான். இதை எதிர்பார்த்துத்தான் உங்களை அங்கேயே தங்கிப் படையை நடத்தும்படி கேட்டுக் கொண்டேன்” என்று கிளைவ் மீதும் குற்றம் சாட்டினான்.

கவர்னர் ஸாண்டர்ஸ் தீவிர சிந்தனையில் இறங்கிக் கண்களை மூடிக்கொண்டார். கடைசியாக அவர் கண் விழித்தபோது அவர் மனத்தில் ஏதோ திட்டமொன்று உருவாகி இருப்பது புலனாயிற்று. கவர்னர்ஸாண்டர்ஸ் கூறினார்: ”காப்டன் டால்டன்| யூ ஜாயின் ஜின்ஜின்ஸ். காப்டன் கிளைவ் யூ கோடு தேவிகோட்டா வித் யுவர் லெப்டினென்ட் அன்ட் தட் கேர்ள் (காப்டன் டால்டன், நீ போய் ஜின்ஜின்ஸுடன் சேர்ந்து கொள். காப்டன் கிளைவ், உன் லெப்டினன்டையும் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு தேவிக்கோட்டைக்குப் போ)” என்று.

கட்டளை திட்டமாயிருக்வே இரு காப்டன்களும் எழுந்து கவர்னருக்குச் சல்யூட் செய்தார்கள். ”தேவிக்கோட்டையில்…” என்ற கிளைவ் ஏதோ சொல்ல முற்பட்டான். அவனைத் தமது கையசைப்பால் நிறுத்திய ஸான்டர்ஸ், ‘யூ வில் ரிஸீவ் மை ஆர்டர்ஸ் ஸூன் (விரைவில் என் உத்தரவு கிடைக்கும் எனக்கு)” என்றார்.
அத்துடன் பேட்டி முடிந்துவிட்டதை அறிவிக்க கவர்னரும் ஆசனத்திலிருந்து எழுந்து அவர்கள் வணக்கத்திற்குப் பதிலாகத் தலையை லேசாக ஒரு புறமாகச் சாய்த்தார். காப்டன்கள் சென்றதும், ”எந்தத் தோல்வியையும் வெற்றியாகத் திருப்ப முடியும். எப்படி என்பதை அறிவாளிகள் தீர்மானிக்கிறார்கள்” என்று தாமாகவே சொல்லிக் கொண்டார்.

Previous articleRaja Perigai Part 2 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here