Home Historical Novel Raja Perigai Part 2 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

45
0
Raja Perigai Part 2 Ch26 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch26 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 26. மன ஓட்டம் நீராட்டம்

Raja Perigai Part 2 Ch26 | Raja Perigai | TamilNovel.in

கிட்டத்தட்ட ஒரு மைல் சுற்றுளவுடனும், பதினெட்டு அடி உயரமுள்ள சுவர்களுடனும், இடையிலேயே வட்டமும் சதுரமுமான ஸ்தூபிகளுடனும், கொள்ளிட முகத் துவாரத்தில் மிகக் கம்பீரமாக வங்கக் கடலை நோக்கிக் கொண்டிருந்த தேவிக்கோட்டையை, கவர்னர் உத்தரவிட்ட அடுத்த நாளிரவே அடைந்த ராபர்ட் கிளைவ், அதன் பாதுகாப்பைப் புதுக் கவர்னர் மிகவும் பலப்படுத்தியிருப்பதைக் கண்டான். கோட்டையின் படை மட்டுமின்றி, கோட்டைக்குச் சற்றுத் தூரத்திலிருந்த புதர்கள் மறைவிலும் சிப்பாய்கள் படுத்துக் காவல் இருந்ததையும் கொள்ளிடத்தைத் தாண்டித் தானும் விஜயகுமாரனும் அடிமைப் பெண்ணுடன் காலடி வைத்த மறு விநாடி சிப்பாய்களால் ‘சாலன்ஜ்’ செய்யப்பட்டதையும் பார்த்த கிளைவ், அந்த நிலையில் இந்தக் கோட்டையை யாரும் திடீரெனத் தாக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தான். கோட்டைக்குப் பக்கத்திலோடிய கொள்ளிடத்தின் கரையிலும் சிறு சிறு படகுகள் தளைகளில் பிணிக்கப்பட்டிருந்ததையும், அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு துப்பாக்கி வீரன் இருப்பதையும் கவனித்த கிளைவ், கவர்னர் உத்தரவு வரும்வரையில் தான் நிம்மதியாகப் படுத்து உறங்கலாமென்று தீர்மானித்தான்.

ஆனால் வீரனுக்குக் கடமை முன்னாலிருக்கும்போது உற்க்கம் எங்கிருந்து வரும்? ஆகவே கோட்டையை அடைந்து அங்குள்ள காப்டனால் ராஜோபசாரத்துடன் வரவேற்கப்பட்டு உணவுருந்திய பின்னும் கிளைவுக்கு உறக்கம் பிடிக்காததால், ”விஜயகுமாரா! சற்றுக் கோட்டைக்கு வெளியே சுற்றிப் பார்ப்போமா?” என்று கேட்டான்.

விஜயகுமாரன் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று, பழைய நினைப்புகளால். ”பார்க்கலாம்” என்ற அவன் பதிலிலும் லேசாக நகைப்பொலி இருந்தது.

அதன் காரணத்தைக் காப்டன் கிளைவ் உணர்ந்திருந்தாலும் உணராதது போலவே கேட்டான், வெளியே செல்லத் தனது கோட்டை எடுத்து அணிந்த வண்ணம், ‘எதற்காக நகைக்கிறாய் விஜயகுமார்?” என்று.

”நகைக்கவில்லையே” என்றான் விஜயகுமாரனும் வெளியே செல்ல எழுந்து.

”பகிரங்கமாக நகைக்கவில்லை” என்று ஒப்புக்கொண்டான் கிளைவ்.

”உள்ளே நகைப்பது உனக்குத் தெரிகிறதா?”

”ஆம், பதிலின் ஒலியிலிருந்து.”

இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை விஜய குமாரன். கிளைவின் கூரிய அறிவையும் எதையும் அறியும் ஆற்றலையும் வியக்கவே செய்தான் சில விநாடிகள். பிறகு சொன்னான், ”ஆமாம் கிளைவ்! இதே கோட்டையில் முன்பு சந்தித்தோம் எதிரிகளாக…” என்று.

”இன்று வந்திருக்கிறோம் நண்பர்களாக” என்ற சுட்டிக் காட்டினான் கிளைவ்.

“அப்போதும் நாம் நண்பர்கள்தான்.”

”ஆனால் எதிர்ப் படைகளில் இருந்தோம்.”

”அதனால் நட்பு எப்படிக் கெடும்?”

”கெடாது என்பதை அன்றே நிரூபித்தாய், நீ என் உயிரைக் காப்பாற்றி.”

காப்டனின் இந்த கடைசிச் சொற்களுக்குப் பதில் சொல்ல வில்லை விஜயகுமாரன். காப்டனுடன் வெளியே நடக்கவே செய்தான். ஜூன் மாதத்துச் சந்திரன் தேவிக் கோட்டையையும் அதன் மேற்குப் புறக் காடுகளையும் தென்புறக் கொள்ளிடத்தையும் கண்கொள்ளாக் காட்சியாகச் செய்து கொண்டிருந்தது. தூரத்தேயிருந்த கடலலைகளை உள்ளே வாங்கிக்கொண்டு பின்னோக்கி வந்த கொள்ளிடச் சிற்றலைகள் ஆயிரமாயிரம் கண்ணாடிகளைப் போல் ஜொலித்தன. இத்தகைய சூழ்நிலையில் நடந்து சென்று காப்டன் கிளைவின் மனமும் விஜயகுமாரன் மனமும் வெவ்வேறு நிலைகளில் இருந்தன.

கிளைவ் திருச்சிக்கு ஓடிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் படையின் கதியைப்பற்றியும் இந்தியாவில் பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். ”இப்போதைய நிலைகொண்டு பார்த்தால் இங்கே பிரிட்டனின் அரசியல் வானம் கறுத்துத்தான் கிடக்கிறது. ஆனால் ஒரு சிறு காற்று, நமக்கு அநுகூலமான ஒரு சிறு சம்பவம், இந்த மேகத்தை விரட்டி விடும். அந்தக் காற்று, சம்பவம், எப்போது வரும்?” என்று எண்ணிப் பார்த்தான் கிளைவ்.

விஜயகுமாரன் மனம் காப்டன் நினைவுகளுக்கு எதிர் திக்கில் ஓடிக்கொண்டிருந்தது. இன்பமான சிந்தனைகள் அவன் சித்தத்தில் எழுந்து உலாவிக் கொண்டிருந்தன. ”அதோ அந்தப் புதருக்கருகில் தானே நானும் நந்தினியும் உட்கார்ந்திருந்தோம் எத்தனை பேச்சுக்களைப் பேசியிருப்போம்! பேசாதபோது உள்ளங்கள் ஊமையாக இருந்ததில்லையே!’ இப்படிப்பட்ட நினைவுகள் அவன் சித்தத்தில் எழுந்துலாவின. நந்தினியின் அழகிய உருவம் பக்கத்துக் காடுகளில் தெரிந்தது, கொள்ளிட அலைகளில் தெரிந்தது. திடீரெனப் பக்கத்தில் நடப்பது போலவும் தோன்றியது. அவள் பாதச் சிலம்பின் ஒலிகூட அந்தச் சமயத்தில் அவன் மனக் காதில் விழுந்தது. இப்போது நந்தினி என்ன செய்து கொண்டிருப்பாள் தஞ்சை அரண்மனையில்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

இத்தகைய எண்ணங்கள் மேலோங்கிவிடவே நடையும் சற்று நிதானப்பட, கிளைவ் முன்னால் தனியே சென்றுவிட்டதைக்கூட அவன் கவனிக்கவில்லை. நினைவுச் சுழலில் ஈடுபட்ட காரணத்தால் திடீரென நடையை நிறுத்தி ஒரு புதருக்கருகில் உட்கார்ந்து கொண்டு விழித்தவண்ணமே சொப்பன உலகத்தில் சஞ்சரித்தான். அன்றும், நந்தினி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். தன் மலர்க்கரத்தை அவன் கையுடன் பூட்டினாள். அந்த இன்பத்தால் அவன் தரையில் படுக்கவும் செய்தான். படுத்த இடம் தரையாகத் தெரியவில்லை . மலர் மடியில் படுத்துக் கிடப்பதாகவே தோன்றியது. தாயின் மடி எத்தனை இன்பமாயிருக்கிறது என்று நினைத்தான், அந்தத் தரையை நினைத்து. இதுவே நந்தினியின் மடியாயிருந்தால் எத்தனை சிறப்பாயிருக்கும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

நாழிகைகள் ஓடியது தெரியாமல் விண்ணை நோக்கி, வெண்ணிலவின் அழகை நோக்கி, இடையே சிந்தனையில் சுழன்ற எழில் நந்தினியை நோக்கிப் படுத்துக் கிடந்த விஜயகுமாரன் பக்கப் புதரில் ஏதோ சலசலப்பதைக் கேட்டுக் கண் விழித்துச் சுயநிலை வந்து திடீரென வெகுளவும் செய்தான். புதர்களின் மறைவிலிருந்து வந்த அடிமைப் பெண் அவன் அருகில் வந்து மிகச் சொந்தமாக அமர்ந்து கொண்டாள். அவன் கையையும் பிடித்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு தடவி விட்டாள்.

‘விடு கையை” என்று சீறிய விஜயகுமாரன் தன் கையை இழுத்துக் கொண்டான். ”யார் வரச் சொன்னது உன்னை இங்கே?” என்ற கடிந்தும் கொண்டான்.

“என் எஜமான்” என்றாள் அடிமைப் பெண், அவன் அதட்டலைச் சிறிதும் லட்சியம் செய்யாமல்.

”எதற்காக?” இம்முறை விஜயகுமாரன் குரலில் எரிச்சல் பன்மடங்கு அதிகமாயிற்று.

“உங்களுக்குத் துணையிருப்பதற்காக?”

”எனக்கு எதற்குத் துணை?”

”எனக்குத் தெரியாது.”

”அவருக்குத் தெரியுமாக்கும்?”

”ஆம்.”

“துணை என்றால் என்ன செய்யச் சொன்னார்?”

”உங்கள் கை கால்களைப் பிடிக்கச் சொன்னார்.”

”அவ்வளவுதானே?”

“இல்லை.”

“வேறென்ன?”

“நீங்கள் எந்த உபகாரத்தை விரும்பினாலும் செய்யச் சொன்னார்.”

இதைக் கேட்ட விஜயகுமாரனுக்கு என்ன பதில் சொல்வ தென்று தெரியாததால், ‘பெண்ணே !” என்று அனுதாபத்துடன் அழைத்தான்.

“ஏன்?” என்றாள் அவள்.

”என் விருப்பம் எதுவாயினும் நீ செய்யவேண்டியது தானே?”

”ஆமாம்.”

”அப்படியானால் எழுந்து கோட்டைக்குப் போய்விடு. நான் தனியாக இருக்க விரும்புகிறேன்.”

இதற்கு அந்த அடிமைப் பெண் தலையைப் பக்கவாட்டில் விடு விடுவென அசைத்தாள். ”அந்த ஒரு விஷயம் நடக்காது. உங்களைத் தனியாக மட்டும் விடக்கூடாதென்று எசமான் உத்தரவு ” என்று திட்டமாக அறிவித்த அடிமைப் பெண் நன்றாகச் சப்பணம் கொட்டி உட்கார்ந்து விட்டாள் அவன் பக்கத்தில்.

இதனால் பெரிதும் சங்கடப்பட்ட விஜயகுமாரன், ”கிளைவ் எங்கே இப்பொழுது?” என்ற வினவினான் ஆத்திரத்துடன்.

“கோட்டைக்குப் போய் விட்டார்.”

”எப்பொழுது?” ”ஒரு மணி நேரத்துக்கு முன்பு.” ”இப்பொழுது நேரம் என்ன?”
‘பன்னிரண்டு மணி.” இதை அவள் சொல்வதற்கும் கோட்டை மணி பன்னிரண்டு அடிப்பதற்கும் சரியாயிருந்தது.

அதைக் காதில் வாங்கிய விஜயகுமாரன், “நள்ளிரவு வரையிலா தங்கிவிட்டேன்!” என்று தன்னைத்தானே இரைந்து வினவிக்கொண்டு எழுந்திருந்தான் துரிதமாக. கோட்டைக்கு நடந்தான் வேகத்துடன். அவன் வேகத்துக்குச் சற்றும் சளைக் காமல் அடிமைப் பெண்ணும் அவனுடன் ஓடினாள். இப்படி அந்த இருவரும் ஜோடியாகக் கோட்டைக்குள் நுழைவதைக் கண்ட காவலர் ஒருவரையொருவர் பார்த்து லேசாகப் புன்னகை கோட்டினார்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் புன்னகையும் பின்பக்க ரகசியப் பேச்சுக்களும் அதிகமாயின. அவற்றைக் கவனிக்காதது போல் கவனிக்கவே செய்தான் விஜயகுமாரன். அந்த அடிமைப் பெண்ணே அவன் எங்கே சென்றாலும் அவனைத் தொடர்ந்து சென்றாள். இதைச் சகிக்க முடியாத விஜயகுமாரன் மூன்றாம் நாளிரவு கிளைவை மிக கோபத்துடன் அணுகி, ”எதற்காக இவளை என்மீது ஏவி இருக்கிறாய்?” என்று வினவினான்.

“துணைக்கு…” என்றான் கிளைவ், உள்ளே சிரித்துக் கொண்டாலும் முகத்தில் சிரிப்பைக் காட்டாமல்.

”எனக்கு எதற்குத் துணை, யார் என்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்?” என்று சீறி விழுந்தான் விஜயகுமாரன்.

கிளைவ் தனது முகத்தில் கவலையைக் காட்டினான். ”விஜயகுமார் யூ ஆர் எ ஸிக் ஃபெல்லோ நௌ” என்று கூறினான்.

”நானா? நோயாளியா?”. ”எஸ். வென் ஐ டேக் யூ ஃபார் எவாக் யூ ஸிட் டௌன்” என்றான் கிளைவ்.

”நோய் காரணமா அதற்கு?”

”எஸ்.”

”என்ன நோய்?”

”யூ ஆர் லவ் ஸிக் (உனக்குக் காதல் நோய்)” என்று கூறிய கிளைவ், ”விஜயகுமார், சுரக்காரனைக்கூட நான் நம்புவேன். காதல் வியாதிக்காரனை நம்ப முடியாது. திடீரென்று அவனுக்கு மூளை பிசகும்; மறதி ஏற்படும். நாம் இப்போதுள்ள நிலையில்

இரண்டு ஆபத்து. இந்தக் கோட்டையில் கூட நாம் பாதுகாப்பில் இல்லை. எந்த நேரம் நம்மை யார் தாக்குவார்களோ சொல்ல முடியாது. நாம் விழித்திருக்க வேண்டிய சமயம் இது. அதற்காகத்தான் உனக்குத் துணை அனுப்புகிறேன்” என்றான் கிளைவ்.

அடுத்த பல நாட்களுக்குக் கவர்னரிடமிருந்து எந்த உத்தரவும் வராதிருக்கவே அந்த அடிமைப் பெண்ணின் தொல்லை மிக அதிகமாயிற்று.

விஜயகுமாரன் கடைசியாக அவளை உதற ஒரு வழி கண்டு பிடித்தான். அதை நிறைவேற்ற ஒரு நாள் காலை கொள்ளிடக் கரைக்குச் சென்று தன் உடைகளைக் களைந்தான். அவனைப் பின் பற்றி வந்த அடிமைப் பெண் அதை லட்சியம் செய்யாமல் அருகே நின்றாள். கடைசியாக ஒரு ராணுவ டிராயரை மட்டுமே அணிந்து நின்ற விஜயகுமாரன் சரேலென்று கொள்ளிட நீரில் குதித்து நீந்திச் சென்றான். அடிமைப் பெண் முழங்காலைக் கட்டிக்கொண்டு அவன் நீந்துவதைப் பார்த்துக் கொண்டு கரையில் உட்கார்ந்திருந்தாள். நீண்ட நேரம் நீச்சலடித்த அவன் கரையேறவும் உதவினாள். சொட்டச் சொட்ட நனைந்த தேகத்துடன் கரையில் நின்ற விஜயகுமாரனைப் பார்த்து அடிமைப் பெண்ணும் சிரித்தாள். ஆனால் விஜயகுமாரன் சிரிப்புமட்டும் திடீரென உறைந்து விட்டது அவன் உதடுகளில். சற்று எட்ட நின்று இந்த வேடிக்கையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

Previous articleRaja Perigai Part 2 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here