Home Historical Novel Raja Perigai Part 2 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

48
0
Raja Perigai Part 2 Ch27 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch27 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 27. அரசகுமாரி! நீங்கள் தீர்க்க தரிசி!

Raja Perigai Part 2 Ch27 | Raja Perigai | TamilNovel.in

அசந்தர்ப்பமான அந்த நிலையில் விஜயகுமாரனின் நகைப்பு உறைந்ததே தவிர, கொள்ளிடத்தின் நகைப்பு உறைய வில்லை . காலைக் கதிரவனின் கிரண வீச்சினால் பளபளத்த கொள்ளிடத்தின் சிற்றலைகள் அவனைப் பார்த்துப் பலமாகவே நகைத்தன. நந்தினி நகைக்கவுமில்லை, இருந்த இடத்திலிருந்து நகரவுமில்லை. இகழ்ச்சி மிகுந்த பார்வை யொன்றை மட்டும் அவன்மீது விசினாள். போதாக்குறைக்கு இந்தச் சமயத்தில் அடிமைப் பெண் தன் கையிலிருந்த துண்டை எடுத்து, ”எசமான்! உடம்பைத் துடைத்து விடட்டுமா?” என்று கேட்டுக் கொண்டு அவனை நெருங்கினாள்.

விஜயகுமாரன், ”சீ பிரும்மஹத்தி துடைக்கவும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். கொடு அதை இங்கே” என்று எரிந்து விழுந்து துண்டைப் பிடுங்கிக் கொண்டு, “போ கோட்டைக்கு” என்று கூறிக் கோட்டையையும் சுட்டிக் காட்டினான்.

”ஏன், அவள் துடைத்து விடுவாளா?” என்று வினவினாள் அடிமைப் பெண், எட்ட நின்ற நந்தினியைக் காட்டி.

விஜயகுமாரன் நிலை அந்த அடிமைப் பெண் பேச்சினால் மிகப் பரிதாபமான கட்டத்தை அடையவே, அவன் சொன்னான் கடுமையாக, ”அட சனியனே! யார் எதைச் செய்தால் உனக்கென்ன? நீ போய் விடு ” என்று.

அடிமைப் பெண் ஒரு விநாடி அவனையும் நோக்கி நந்தினியையும் நோக்கினாள். “சரி, சீக்கிரம் நீங்கள் கோட்டைக்கு வாருங்கள். இங்கு அதிக நேரம் கடத்த வேண்டாம்” என்று சொல்லிவிட்டு மெள்ளக் கோட்டையை நோக்கிச் சென்றாள்.

விஜயகுமாரனும் மடமடவென்று தலை துவட்டி அந்தத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு தரையிலிருந்த தன் உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு நந்தினியை அணுகினான். ”நீ எப்போது வந்தாய் நந்தினி?” என்று வினவவும் செய்தான்.

நந்தினியின் இதழ்களில் மட்டுமன்றி வள் கண்களிலும் இகழ்ச்சிக் குறி நன்றாகப் படர்ந்திருந்தது. ‘எப்போது வந்தாலும் இங்கு உங்கள் புனல் விளையாட்டுக்கு இடைஞ்சலாக வந்தேன்” என்று பதில் சொன்னாள் நந்தினி, குரலிலும் இகழ்ச்சி தோன்ற.

விஜயகுமாரன் சித்தத்தில் சினம் லேசாகத் துளிர்த்தது. ‘நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்” என்ற அவன் விளக்கத்திலும் சினம் விரவிக் கிடந்தது.

”எதை?” அலட்சியமாகக் கேட்டாள் நந்தினி.

”புனல் விளையாட்டுக்காக நான் வரவில்லை இங்கே. நீந்த வந்தேன். அந்தப் பிசாசு என்னைத் தொடர்ந்து வந்தது.”

”பிசாசாயிருந்தாலும் அழகான பிசாசுதான். உங்களிடம் பற்றுள்ள பிசாசுதான்.”

”நந்தினி’’

”என்ன வீரரே?”

”நீ தப்புக்கணக்குப் போடுகிறாய். அவளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்முமில்லை.”

“அப்படியா?”

”ஆம். அவள் என்னைத் தொடர்ந்து நீச்சலை வேடிக்கை பார்க்க வந்தால் நான் என்ன செய்யமுடியும்?”

நந்தினி இகழ்ச்சி நகை காட்டினாள், “முடியாது… முடியாது” என்றாள் லேசாக நகைத்து.

”என்ன முடியாது?” ஏதும் புரியாமல் கேட்டான் விஜயகுமாரன்.

”அவளைப் பிரிய முடியாது. அவள் வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க முடியாது?” என்ற நந்தினி, ”அதுவும்…” என்று ஒரு சொல்லைத் துவங்கி வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.

”அதுவும்?” சீற்றத்துடன் எழுந்தது விஜயகுமாரன் கேள்வி.

”உங்களைக் கைலாகு கொடுத்துக் கரைக்குத் தூக்கியதைத் தவிர்க்க முடியாது” என்று கூறிய நந்தினி சரேலென்று திரும்பி நடந்தாள் கோட்டையை நோக்கி.
இரண்டே எட்டில் அவளை அணுகி அவள் இரண்டு தோள்களையும் பிடித்துத் தன்னை நோக்கித் திருப்பிய விஜயகுமாரன், அவள் விழிகளைத் தைரியமாகவே சந்தித்தான். ”சத்தியமாகச் சொல்கிறேன் நந்தினி. அவளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. எல்லாம் அந்தக் கிளைவின் வேலை. கோட்டைக்கு வா, அவனையே சொல்ல வைக்கிறேன்” என்று பெஞ்சினான் நந்தினியை நோக்கி.

இதைக் கேட்ட நந்தினியின் விழிகள் நகைத்தன. “கிளைவ் தான் என்னை இங்கே அனுப்பினார்…” என்று சொன்னாள் நந்தினி.

”அவன் வேலைதானா இது? அடிமைப் பெண்ணை என்மேல் ஏவி விட்டு உன்னையும் இங்கு அனுப்பி என்னை வேடிக்கையா பார்க்கிறான் கிளைவ்?” என்று சீறிய விஜயகுமாரன், நந்தினியைக் கையைப் பிடித்துச் சரசரவென்று இழுத்துக் கொண்டு கோட்டையை நோக்கி நடந்தான்.

”விடுங்கள் கையை. முதலில் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களுடன் இந்த நிலையில் என்னைப் பார்த்தால் ஏதாவது நினைப்பார்கள்” என்ற நந்தினி கையை விடுவித்துக் கொண்டாள்.

விஜயகுமாரன் பக்கத்திலிருந்த புதருக்குச் சென்று அதன் மறைவில் தனது ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வர, இருவரும் கோட்டையை நோக்கி நடந்தார்கள் மௌனமாக. கோட்டையின் முன் வாசலிலேயே நின்றிருந்த கிளைவ் அவர்ள் இருவரையும் பார்த்துப் பன்னகை புரிந்தான். “காதல் பறவைகள் வருகின்றன” என்று கூறவும் செய்தான் விஷமமாக.

நந்தினி இதைக் கேட்டுச் சிறிதும் வெட்கப்பட்டாளில்லை. ”காதல் ஜோடிகளைச் சேர்ப்பதில் காப்டனுக்குத் திறமை அதிகம் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்றாள் நந்தினி இகழ்ச்சி ததும்பிய குரலில்.

”என்ன சொல்கிறீர்கள் அரசகுமாரி?” என்று வினவினான் கிளைவ் ஏதுமறியாதவன் போல்.

”முதலில் அந்த அழகியையும் இவரையும் அனுப்பினீர்கள். கொள்ளிட நீரில் விளையாட…” நந்தினி பேச்சை முடிக்க வில்லை, அவள் பார்வை முடித்தது.

”யார் அவள்?” கிளைவ் கேட்டான் உணர்ச்சியற்ற குரலில்.

”யாரோ அடிமைப் பெண்ணாம்.”

”அவளா? இன்னும் விஜயகுமாரனை விடவில்லையா?”

“இல்லை அவளையும் அனுப்பி என்னையும் அனுப்பினீர்கள்.”

”நானாக அனுப்பவில்லையே அரசகுமாரி. நீங்கள்தான் கேட்டீர்கள் லெப்டினண்ட் எங்கேயென்று. போன இடத்தைச் சொன்னனேன். நீங்கள் உடனடியாக அங்கே பறப்பீர்களென்று எனக்குத் தெரியுமா?” என்றான் கிளைவ். அரசகுமாரி சட்டென்று திரும்பி, தான் தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றாள்.

கிளைவை நோக்கி விஷப் பார்வையை வீசிய விஜயகுமாரன் அரசகுமாரியைத் தொடர்ந்து சென்றான். அப்படி விரைந்த இருவரையும் நோக்கிப் புன்முறுவல் கொண்ட கிளைவ், ”காதல் என்பது பைத்தியம்தான். நல்லவேளை, அது என்னைப் பிடிக்க வில்லை” என்று தனக்குள் சொல்லி நகைத்துக் கொண்டான்.

பிறகு பக்கத்திலிருந்த ஒரு சிப்பாயை அழைத்து, ”அவர்கள் இருவரும் சிற்றுண்டியருந்தியதும் என் அறைக்கு அழைத்து வா” என்ற உத்தரவிட்டுவிட்டுக் கோட்டையின் மத்தியிலிருந்த தனது அறையை நாடிச் சென்றான்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்பு கிளைவின் அறையை விஜயகுமாரனும் நந்தினியும் அடைந்தபோது, கிளைவ் சுவரில் தீட்டப்பட்டிருந்த கர்நாடக நாட்டுப் படத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் தீவிர ஆலோசனையில் இருந்ததால் தாங்கள் வந்ததை அவன் அடியோடு கவனிக்கவில்லையென்பதை இருவருமே உணர்ந்தார்கள். அந்தப் படத்திலிருந்து அவர்களை நோக்கித் திரும்பிய கிளைவ், சற்று முன்பு விளையாட்டுப் பேச்சு பேசிய கிளைவ் அல்லவென்பதையும், காப்டன் கிளைவ் என்பதையும் இருவருமே புரிந்து கொண்டனர். அவன் பேச்சின் தோரணையும் ராணுவ முறையில் கட்டுத்திட்டமாக இருந்தது.

கிளைவின் சீரிய விழிகள் அவர்கள் இருவரையும் ஒரு விநாடிதான் கவனித்தன. அவன் இதழ்களிலிருந்து சொற்கள் பதுமையின் வாயிலிருந்து உதிருவன போல் வறட்சியுடன் உதிர்ந்தன. ‘உங்கள் தந்தை சொல்லியனுப்பிய செய்தியைச் சொல்லுங்கள்” என்று கேட்டான் நந்தினியை நோக்கி.

நந்தினியின் விழிகளில் வியப்பு நிரம்பி நின்றது. ”தந்தையின் செய்தியா?” அவள் சொற்களிலும் வியப்பின் சாயை இருந்தது.

”ஆம். மகாராஜா பிரதாப்சிங் என்ன சொல்லியனுப்பியிருக்கிறார்?” என்று வினவினான் கிளைவ்.

“மகாராஜா என்னைத் தூதனுப்பியதாக யார் சொன்னது?” என்று கேட்டாள் நந்தினி மிக்க கம்பீரமாக.
‘பிரிட்டிஷ் படையிருக்கும் இந்தத் தனிக் கோட்டையை வேடிக்கை பார்க்க உங்களை மகாராஜா அனுப்பியிருக்க மாட்டார்” என்றான் கிளைவ்.

”நானாக வந்தால் என்னை யார் தடை செய்ய முடியும்?”

”எனது சோல்ஜர்கள். மகாராஜா பிரதாப்சிங் அல்லது பிரிட்டிஷ் கவர்னர் இந்த இருவரிடமிருந்து வருபவர்களை மட்டுமே இந்தக் கரையில் காலடி எடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்றான் கிளைவ்.

”அப்படி வந்தாலும் செய்தி ஏன் கொண்டுவர வேண்டும்?”

”இப்போதுள்ள போர் நிலைமையால்…” என்ற கிளைவ், ”அரசகுமாரி சொல்லுங்கள் செய்தியை” என்று ஆணையிட்டான்.

நந்தினி சிறிது நேரம் பதில் ஏதும் பேசவில்லை. பிறகு தனது மடியிலிருந்து முத்திரையிட்ட கடிதம் ஒன்றை எடுத்துக் கிளைவிடம் நீட்டி, “இது திருச்சியிலுள்ள நவாப் முகம்மது அலிக்கு எழுதப்பட்டிருக்கிறது. இதை அவரிடம் சேர்த்துவிட மகாராஜா உத்தரவு” என்று கூறினாள்.

கடிதத்தை வாங்கிய கிளைவ் அதன் விலாசத்தைப் படித்தான் இருமுறை. பிறகு அதைத் தனது பையில் வைத்துக் கொண்டான். அடுத்தபடி கேட்டான். ‘’அரசகுமாரி, நான் திருச்சிக்குப் போகாவிட்டால்?” என்று.

”போவீர்கள் என்று மகாராஜாதிட்டமாக நம்புகிறார்.”

”நம்புவதற்குக் காரணம்?”

”இப்போதுள்ள போர் நிலைமை.’’ நந்தினி, முன்பு கிளைவ் சொன்ன சொற்களைத் திருப்பினாள்.

கிளைவ் கூறினான். ”அரசகுமாரி மகாராஜாவுக்கு மட்டும் குடும்ப எதிரிகள் இல்லாவிட்டால் இன்று அவர் தஞ்சையை மட்டுமல்ல, இந்தக் கர்நாடகத்தையே ஆளத் தகுதியுள்ளவர்” என்று.

அந்தப் பாராட்டுதலைத் தலை தாழ்த்தி ஏற்றுக் கொண்டாள் நந்தினி. கிளைவ் மேலும் சொன்னான், ”அரசகுமாரி பெரும் இக்கட்டான நிலையில் இன்று தஞ்சை இருக்கிறது. நாம் ஒருவரையொருவர் கைவிடாத வரையில் சந்தாசாகிபை முறியடிக்கலாம். இதை உங்கள் தந்தையிடம் கூறுங்கள். இக் கடிதத்தை நான் திருச்சிக்குப் போகும்போது முகம்மது அலியிடம் கொடுக்கிறேன்” என்று பையிலிருந்த கடிதத்தையும் தட்டிக் காட்டினான்.

”அந்தக் கடிதம் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் நவாபின் கைகளில் இருக்கவேண்டும். இல்லையேல் நிலைமை எப்படி மாறும் என்று சொல்லமுடியாது” என்றான் நந்தினி.

காப்டன் கிளைவ் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ”கவர்னர் உத்தரவிட்டால்தான் நான் திருச்சி போகமுடியும்” என்று கூறினான் சிறிது சிந்தித்துவிட்டு.

”உங்கள் கவர்னர் அறிவாளியாயிருந்தால் உங்களை உடனடியாகத் திருச்சிக்கு அனுப்புவார்.”

கிளைவ் தலையசைத்தான். இப்பொழுது வந்திருக்கும் கவர்னர் எதிலும் தாமதம் காட்டாதவர். ஆனால் எப்போது உத்தரவு வருமோ தெரியாது” என்றான்.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த ஆர்டர்லி, ”காப்டன்! கவர்னரிடமிருந்து தூதன் வந்திருக்கிறான்” என்ற அறிவித்தான்.

”வரச்சொல்.”

அடுத்த விநாடி உள்ளே நுழைந்த ஒரு சோல்ஜர் காப்ட னிடம் ஒரு கவரை நீட்டினான். கவரைப் பிரித்து உள்ளிருந்த கடிதத்தைப் படித்த கிளைவின் முகத்தில் சந்துஷ்டி, கவலை ஆகிய இருவித உணர்ச்சிகள் ஆட்கொண்டன. கையில் பிடித்திருந்த கவர்னரின் கடிதத்துடன் திரும்பிச் சுவரிலிருந்த படத்தை நோக்கினான் கிளைவ். பிறகு, ”அபாயம்! மிகுந்த அபாயம்” என்று சற்று இரைந்தே சொன்னான். கடைசியில் அரச குமாரியை நோக்கி, “நீங்கள் தீர்க்கதரிசி” என்றும் பாராட்டினான்.

Previous articleRaja Perigai Part 2 Ch26 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here