Home Historical Novel Raja Perigai Part 2 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

54
0
Raja Perigai Part 2 Ch28 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch28 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 28. ஜூலை, 1751

Raja Perigai Part 2 Ch28 | Raja Perigai | TamilNovel.in

கவர்னரின் கடிதத்தைப் படித்துச் சுவரிலிருந்த கர்நாடக தேசப் படத்தையும் பார்த்து, ‘அபாயம் அபாயம்’ என்று கிளைவ் கூறியதன்றி, அரசகுமாரியை நோக்கி, ‘நீங்கள் தீர்க்கதரிசி’ என்று பாராட்டியதால் கவர்னர் கடிதத்தில் முக்கியமான விஷயம் ஏதோ அடங்கியிருக்கிறதென்பதை விஜயகுமாரன் நந்தினி இருவரும் புரிந்து கொண்டாலும், விளக்கம் காப்டன் வாயிலிருந்தே வரட்டுமென்று இருவரும் அவனையே நோக்கிக் கொண்டிருந் தனர். கிளைவ் நீண்ட நேரம் தீர்க்க சிந்தனையில் இருந்தான். பிறகு கையிலிருந்த கவர்னரின் கடிதத்தை விஜயகுமாரிடம் நீட்டி, “இதைப் படி. அரசகுமாரிக்கும் காட்டு” என்று கூறினான்.

விஜயகுமாரன் கடிதத்தைப் பிரித்து அரசகுமாரிக்கும் காட்டித் தானும் படித்தான். தலையோடு தலையிடிக்கக் கவர்னர் கடிதத்தைப் படித்த இருவரும் மீண்டும் கிளைவை நோக்கிய போது இருவர் கண்களிலும் பிரமிப்பின் சாயை இருந்தாலும் விஜயகுமாரன் மட்டுமே சொன்னான், ”கிளைவ்! நீ சொன்னது சரி. அரசகுமாரி தீர்க்கதரிசிதான்” என்று.

“ஆம் அரசகுமாரி என்னைப் பதினைந்து நாட்களுக்குள் முகம்மது அலியிடம் கடிதத்தைச் சேர்க்கச் சொன்னார்கள். கவர்னரும் உடனடியாக திருச்சிக்குச் செல்ல உத்தரவிடுகிறார். கவர்னருக்கும் அரசகுமாரிக்கும் நிரம்ப ஒற்றுமையிருக்கிறது” என்றான் கிளைவ்.

”கடிதம் கொடுத்திருப்பது நானல்ல. மகாராஜா பிரதாப் சிம்மர்’ என்ற நினைவூட்டினாள் நந்தினி.

கிளைவ் அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக லேசாகத் தலையை ஆட்டினாலும், ”கடிதத்தில் கண்ட விஷயம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்” என்றான் நந்தினியை நோக்கி. மேலும் சொன்னான், ”இல்லாவிட்டால் கடிதத்தை இங்கே கொண்டுவர சொந்தப் பெண்ணை அனுப்பியிருக்க மாட்டார் மகாராஜா” என்று.

விஜயகுமாரன், ‘’ஆம் ஆம்” என்றான்..

”என்ன ஆம் ஆம்?” என்று சினத்துடன் கேட்டாள் நந்தினி.

“அரசாங்க விஷயமான முக்கியமான முடிவுகளை உன்னிடம் தானே விடுகிறார் மகாராஜா?” என்ற வினவினான் விஜயகுமாரன்.

”யார் சொன்னது? டபீர் பண்டிதரில்லையா? மானாஜி அப்பா இல்லையா?” என்ற கேட்டாள் நந்தினி.

”அவர்களும் இருக்கிறார்கள், இன்னும் பல பேரும் இருக்கிறார்கள். ஆனால் நான் பிரிட்டிஷார் சார்பாகத் தூது வந்த போது முடிவெடுக்க உன் அறைக்குத்தானே மகாராஜா என்னை அழைத்து வந்தார்கள்?” என்ற கேட்டான் விஜயகுமாரன்.

அந்தத் தூதின்போது நடந்த சம்பவங்கள் நந்தினியின் நினைவுக்கு வரவே அவள் நாணத்தால் தலை குனிந்தாள். அந்த அசந்தர்ப்ப நிலையிலிருந்து அவளை விடுவிக்க கிளைவ் இடைபுகுந்து, ”நடந்க விஷயங்களைப்பற்றி இப்போது பேச அவசியமில்லை . நடக்க வேண்டிய விஷயங்கள், எடுக்க வேண்டிய முடிவுகள் அபாயமானவை. அவற்றைக் கவனிப் போம்” என்ற கூறி, ”விஜயகுமார்| கவர்னர் நம்மை உடனடியாகத் திருச்சி செல்ல உத்தர விடுகிறார். அதுவும் அங்கிருக்கும் முகம்மது அலியின் படைகளுக்கும் நமது படைகளுக்கும் உணவு எடுத்துச் செல்ல பணிக்கிறார். ஒரு பெரும் படைக்கு, திருச்சியின் முற்றுகையில் கோட்டைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் ஒரு படைக்கு உணவு எடுத்துச் செல்வதென்றால் குறைந்த பட்சம் பதினைந்து பொதி வண்டிகளாவது வேண்டும். வழி நெடுக எதிரி இருக்கிறான். சந்தாசாகேபும் பிரெஞ்சுக்காரரும் திருச்சியை வளைத்து நிற்கிறார்கள். அந்தத் தடையைப் பிளந்து நாம் உட்செல்ல வேண்டும். ஆகவே உணவுப் பொதி வண்டிகளைக் காக்க ஐம்பது சோல்ஜர்களாவது வேண்டும்” என்று விளக்கினான்.

அத்தகைய உணவுப் பொதி வண்டிக் கூட்டத்தைக் கொண்டு போய்த் திருச்சியில் சேர்ப்பதிலுள்ள கஷ்டத்தைத் திட்டமாகத் தெரிந்து கொண்ட விஜயகுமாரன், “இத்தனை வண்டிக் கூட்டத்தை எதிரி கண்ணிலிருந்து மறைக்க ஒரே வழிதான் இருக்கிறது” என்றான்.

“என்ன வழி?” என்று ஆவலுடன் கேட்டாள் நந்தினி.

”எதிரி சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் குருடர் களாக அடிக்க வேண்டும்” என்றான் விஜயகுமாரன் அலுப்புடன்.

விஜயகுமாரன் அலுப்பின் காரணத்தைக் கிளைவ் உணர்ந் திருந்தானாகையால் அதற்குப் பதில் சொல்லவில்லை அவன். ஏதோ யோசித்தான் பல விநாடிகள். கடைசியாகச் சொன்னான்: ”விஜயகுமாரா அரசகுமாரியின் உதவி கொண்டு கொள்ளிடத் துக்கு அக்கரையிலிருக்கும் கிராமங்களில் பொதி வண்டிகளைத் தயார் செய். நான் ஸெயின்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று கவர்னருடன் பேசிவிட்டுத் தேவனாம்படினத்தில் உணவுப் பொருள்களைத் திரட்டி வருகிறேன். அப்புறம் அதைக் கொண்டு செல்லும் வழியைப்பற்றி யோசிப்போம்” என்ற கூறி விட்டு அவர்கள் இருவரும் போகலாம் என்று கையாலும் சைகை செய்தான்.
அவர்கள் சென்ற இரண்டு மணி நேரத்துக்கெல்லாம் இரண்டு சோல்ஜர்களுடன் கிளைவ் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையை நோக்கிப் பயணமானான். அவன் புரவியைத் தட்டிவிடுமுன்பாக விஜயகுமாரனை நோக்கிச் சீக்கிரம் பொதி வண்டிகளை ஏற்பாடு செய்யுமாறு கூறினான். அத்துடன் புரவி யிலிருந்தபடியே குனிந்து, அந்த அடிமைப் பெண்மீது ஒரு கண் வைத்திரு, அவளை எக்காரணத்தை முன்னிட்டும் தப்பவிடாதே” என்ற எச்சரிக்கவும் செய்தான்.

”ஏன்? அவள்…” என்று ஆரம்பித்த விஜயகுமாரனைக் கண்ணைக் காட்டியே அடக்கி, ”காரணம் கேட்காதே. எந்த நிமிஷத்திலும் அவள் தப்பப் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுக் குதிரையைத் தட்டி நடக்கவிட்டுச் சற்றுத் தூரம் சென்றதும் பறக்க விட்டான்.

கிளைவின் புரவி கண்ணுக்கு மறைந்ததும் விஜயகுமாரன் பக்கத்தில் நின்ற நந்தினி, தான் அரசகுமாரியாக இருந்தாலும், வந்ததும் தூதுக்காகத்தான் என்றாலும், பெண்தான் என்பதைக் காட்டிக் கொண்டாள். ”உங்களிடம் காதில் ரகசியமாக அடிமைப் பெண்ணைப் பற்றிச் சொன்னாரே, அது என்ன?” என்று வினவினாள் சந்தேகத்தடன் விஜயகுமாரனை நோக்கி.

‘’கிளைவ் ரகசியமாகச் சொன்னது உன் காதில் விழுந்து விட்டதா?” என்று கேட்டான் விஜயகுமாரன் நகைத்து.

”ஆம், எனக்குப் பாம்புச் செவி” என்றாள் அரசகுமாரி சினம் உதயமான விழிகளால் அவனை நோக்கி.

”அப்படியானால் நீ பாம்பா?”

“ஆம்.”

“கடிப்பாய் போலிருக்கிறது?”

”அதற்கு நான் தேவையில்லை.”

‘’ஏன்?”

”நீங்கள் கண்ணை வைக்க வேண்டிய வேவுகாரி இருக்கிறாள்.”

இதைக் கேட்ட விஜயகுமாரன் புன்முறுவல் கொண்டான். ”கிளைவ் சொன்னது முழுதுமே உன் காதில் விழுந்திருக்கிறது” என்றம் கூறினான் முறுவலின் ஊடே.
”விழாமல் எப்படியிருக்கும்? உங்கள் காதருகில் ரகசியம் பேசுவதுபோல் காப்டன் குனிந்தாரே தவிர, விஷயத்தை என் காதில் விழும்படியாகத்தானே சொன்னார்” என்ற அரசகுமாரி, ”சரி சரி, நீங்கள் போய் அடிமைப் பெண்மீது கண்ணை வையுங்கள்” என்ற கூறிவிட்டு வேகமாகக் கொள்ளிடத்தை நோக்கி நடந்தாள்.

விஜயகுமாரன் அவள் சென்ற வேகத்தைக் கவனித்தான். ஒரு விநாடியில் கோட்டையை நெருங்கினான். கோட்டைத் தளத்தில் அந்த அடிமைப் பெண் நின்றிருந்தாள். அவள் கிளைவ் சொன்ன ரகசியத்தையும் மீறி, தனக்கும் நந்தினிக்கும் நடந்த விவாதத்தையும் கவனித்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்த விஜயகுமாரன் ஒரு சிப்பாயை அழைத்து அந்தப் பெண்ணைக் கண்காணிக்கும்படி உத்தரவிட்டு, நந்தினி சென்ற வழியைப் பின் பற்றிச் சென்றான்.

அவனை விட்டு வெக வேகமாகச் சென்ற நந்தினி கொள்ளிடக் கரைக்குச் சற்று முன்பிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கொள்ளிடத்தை நோக்கினாள். விஜயகுமாரனும் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ”நந்தினி!” என்று அழைத்து அவள் இடையில் தன் கையைச் செலுத்தினான்.

அந்த ஸாகசத்துக்கு அவள் நெளியவுமில்லை; பதில் சொல்லவுமில்லை. மரக்கட்டை போல் உணர்ச்சியற்று உட்கார்ந் திருந்தாள். அவள் இடுப்பை அவன் இறுக்கி அவளைத் தன் பக்கத்தில் இழுத்தான். இழுபட்ட போதும் அவள் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அவனைத் தடை செய்யவுமில்லை, அதற்கு இழைந்து கொடுக்கவுமில்லை. ”நந்தினி!” என்று மீண்டும் அழைத்தான் விஜயகுமாரன்.

”என்ன?”சுட்டது பதில்.

”இந்த மாதிரி ஊடலுக்கு இது வேளை அல்ல” என்றான் விஜயகுமாரன்.

”ஊடல் செய்ததாக யார் சொன்னது?”

”யாரும் சொல்ல வேண்டாம்; உன் போக்கு சொல்கிறது.”

”என்ன என் போக்குக்கு?”

”எதற்கு இங்கு வந்தாய்?”

”கொள்ளிடத்தைப் பார்க்க.”

”இதுவரை பார்த்ததில்லையா?”

”பார்த்திருக்கிறேன். மனச்சாந்தி குலையும் போதெல்லாம் இதைப் பார்ப்பேன். எத்தனையோ முறை இங்கு வந்தும் இருக்கிறேன், அமைதியை நாடி.’’
விஜயகுமாரன் வலக் கை அவள் தலையைக் கோதிக் கொடுத்தது. கொள்ளிடம் ஒரு வெறும் நதி. அதில் ஏது சாந்தி?” என்று வினவின அவன் உதடுகள்.

”கொள்ளிடமும் காவிரியும் வெறும் நதிகளல்ல. இந்த நாட்டின் புண்ணிய நதிகள். எதுவுமே வெறும் நதிகளல்ல. மக்களுக்கு அவை தாய்மாதிரி. தாயைப் பார்ப்பதும் சாந்தி, அமிழ்ந்து அவள் அலைக்கரங்களால் அணையப்படுவதும் சாந்தி” என்ற நந்தினி பெருமூச்செறிந்தாள்.

அவள் மன வேதயைப் புரிந்து கொண்டான் விஜயகுமாரன். ”நந்தினி/ வீணாக மனத்தை அலைய விடுகிறாய். இந்த ஜன்மத்தில் இந்த மனம் வேறொரு பெண்ணை நாடாது. என்னால் ஏற்படும் வேதனைக்காக நீ கொள்ளிடத்திடமோ காவிரியிடமோ சாந்திக்குச் செல்லவேண்டாம். இன்று நீயும் நானும் நாட்டின் பெரும் மாறுதல்களுக்கு முன்பு நிற்கிறோம். வரலாற்று வாயில் எப்படித் திறக்கும், எப்பொழுது திறக்கும், யார் அதில் நுழைவார்கள் வெற்றி வாகையுடன் என்ற சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் சிறு விஷயங்களை நினைத்து உன் மனத்தைச் சஞ்சலத்துக்கு உள்ளாக்காதே.

“கிளைவின் மனம் எனக்குத் தெரியும். இந்த அடிமைப் பெண்ணை உபயோகப்படுத்தி உணவுப் பொதிகளைத் திருச்சிக்குக் கொண்டு செல்ல ஏதோ திட்டமிடுகிறான். அவன் வந்தவுடன் விஷயம் தெளிவாகும். நந்தினி அரசகுமாரியாக நடந்துகொள். என் சபதம், தஞ்சை அரசின் பிற்காலம், நமது வாழ்க்கை எல்லாமே இந்தச் சந்தாசாகிப்- முகம்மது அலி போரிலும், பிரிட்டிஷ் பிரெஞ்சு சர்ச்சையிலும் அடங்கியிருக்கின்றன. விளைவுகளை நமக்கு அனுகூலமாகத் திருப்பப் பார்க்கிறேன். அதற்கு, உன் நிர்மலமான மனம், அந்த மனம் அளிக்கும் துணை இரண்டும் எனக்குத் தேவை. அவற்றை மறுக்காதே” என்று கூறி அவளை இரு கைகளாலும் இழுத் தணைத்தான்.

அவள் மறுக்கவில்லை. மனத்தின் மாசுத் திரை நீங்க அவள் இதழ்களை அவனுக்குப் பறிகொடுத்தாள் ஒரு நிமிடம். நீண்ட நேரத்துக்குப் பின் கோட்டையை அடைந்த இருவர் மனத்திலும் சாந்தியும் சந்துஷ்டியும் நிரம்பி நின்றன.

அந்தச் சந்துஷ்டியின் விளைவாக மறுநாளே கொள்ளிடத்துக்கு அக்கரை சென்ற விஜயகுமாரன் பொதி வண்டிகளை ஏற்பாடு செய்தான். நான்காம் நாள் கிளைவும் பல உணவுப் பொதிகளுடன் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாகப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தான். ஆனால் புறப்படுமுன்பு இரண்டு நாட்களைக் கர்நாடக நாட்டுப் படத்தைப் பார்ப்பதிலேயே கழித்தான். பிறகு தனிக் காகிதத்தில் ஒரு பகுதியைத்தானே வரைந்து பையில் வைத்துக்கொண்டான்.
1751 ஜூலை மாதத்தின் முதல் வார முடிவில் பொதி வண்டிகளை அழைத்துக் கொண்டு விஜயகுமாரனுடனும், அடிமைப் பெண்ணுடனும் மிக அபாயமான தனது பயணத்தைத் துவங்கினான் கிளைவ். தேவிக்கோட்டையிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்த ஆச்சாளபுரத்தை அடைந்ததும் விஜயகுமாரனைத் தனிமையில் அழைத்துப் புரவியிலிருந்து குதித்து, ”விஜயகுமார் நாம் சிறிது மாறவேண்டும் உருவத்திலும் உடையிலும். அதுமட்டுமல்ல, சம்பிரதாயமான வழியிலிருந்தும் மாற வேண்டும். இப்படி உட்கார்” என்று கூறி ஆச்சாள்புரம் கோயில்

வாசலில் உட்கார்ந்து பையிலிருந்த காகிதத்தைப் பிரித்துக் காட்டினான், விவரித்தான்.

கிளைவின் திட்டம் மிகச் சாமர்த்தியமானதாக இருந்தது. இருந்தும் அபாயமும் எதிர்நோக்கும் திட்டம் அது. ”திருச்சிக்கு உயிருடன் போய்ச் சேர்ந்தால் பெரும் விசித்திரம்” என்று கிளைவிடம் வாய்விட்டுச் சொன்னான் விஜயகுமாரன்.

Previous articleRaja Perigai Part 2 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here