Home Historical Novel Raja Perigai Part 2 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

64
0
Raja Perigai Part 2 Ch29 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch29 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 29. சொத்தும் சொர்க்கமும்

Raja Perigai Part 2 Ch29 | Raja Perigai | TamilNovel.in

தேவிக் கோட்டையிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ ஸ்வாமி கோயிலின் கோபுர வாசற்படியில் உட்கார்ந்து பையிலிருந்த கர்நாடக தேசப் படத்தைப் பிரித்து விஜயகுமாரனுக்குக் காட்டிய கிளைவ், ”விஜயகுமார்! படத்தை நன்றாகக் கவனி. தேவிக் கோட்டையிலிருந்து திருச்சிக்கு மூன்று வழிகள் இருக்கின்றன. கொள்ளிடத்தைச் சற்று மேற்கில் தாண்டி வடபுறம் சென்று, போர்ட்டோநோவோவிலிருந்து நேராக வால்கொண்டாவை அடைந்து, திருச்சி ஆற்காட்டுப் பெருஞ்சாலை மூலமாகத் திருச்சியை அடைவது ஒரு வழி. சற்றுச் சுற்று வழிதான். இருப்பினும் சாலைகளும் பாதைகளும் பயணத்துக்கு மிக அனுகூலம். இரண்டாவது வழி இங்கிருந்து சீர்காழி வழியாகத் தஞ்சை சென்று அங்கிருந்து மேற்கில் பயணம் செய்து திருச்சியை அடைவது. மூன்றவது வழி சீர்காழியை அடைந்ததும் காவிரிப்பூம்பட்டினம் சென்று, அங்கிருந்து நேர் மேற்கில் திரும்பித் தஞ்சையை அடைந்து திருச்சி செல்வது. இம்மூன்றில் எது நமக்கு அனுகூலம்?” என்று வினவினான்.

விஜயகுமாரன் தரையில் விரிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தை நன்றாகக் கவனித்தான். ”முதல் வழியில் செல்வது சுற்றுமட்டுமல்ல, தற்கொலைக்கு ஒப்பானதும்கூட. வால் கொண்டா சந்தாசாகிப் வசம் இருக்கிறது. அங்கிருந்து திருச்சி செல்லும் பெருஞ்சாலையில் ஆற்காட்டுப் படைகள் கண் காணிப்பு மிக அதிகமாயிருக்கும். நெடுக உள்ள வேவுப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதும் மிகவும் கஷ்டம்” என்று கடைசியாகச் சொல்லவும் செய்தான்.

கிளைவ் விஜயகுமாரன் பேச்சை ஆட்சேபிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை . ”அடுத்த வழி?’ என்று மட்டும் வினவினான்.

விஜயகுமாரன் கண்ணைப் படத்திலிருந்து எடுக்கவில்லை. இரண்டாவது வழியைத் தன் ஆள்காட்டி விரலால் நீளத் தடவினான் ஒருமுறை. பிறகு சொன்னான், “இந்த வழியில் தஞ்சை வரையில் பாதுகாப்பு இருக்கிறது நமக்கு. அதற்குபின் நேராகத் திருச்சியை முற்றுகையிட்டிருக்கும் சந்தாசாகிபின் வாயில் நுழைவோம்” என்று.

அதற்கும் பதில் சொல்லவில்லை காப்டன் கிளைவ். விஜயகுமாரன் மூன்றாவது வழியையும் ஆராய்ந்தான். “இது மிக அபாயம். காரைக்கால் பிரெஞ்சு தளம். அதில் போய் மாட்டிக் கொள்வதைவிட இந்த ஆச்சாள்புரத்திலேயே தற்கொலை செய்து கொள்ளலாம்’ என்றான்.
”உபயோகமில்லை என்ற சொல்லவில்லை. ஆபத்து இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்” என்றான் விஜயகுமாரன்.

”நாம் திருச்சிக்குச் செல்வது சந்தாசாகிபின் பாராட்டுதலைப் பெறுவதற்கல்ல. முகம்மது அலியைச் சந்திக்கச் செல்கிறோம். ஆகையால் காரணத்திலேயே ஆபத்து இருக்கிறது…” என்ற கிளைவ், தனது கண்களைப் படத்திலிருந்து உயர்த்திச் சற்று எட்ட நின்ற இருந்த அடிமைப் பெண்ணை நோக்கினான் சில விநாடிகள். பிறகு அவளை அருகில் வரும்படி சைகை செய்து, ‘பெண்ணே ! நீ என் அடிமைதானே?” என்று வினவினான்.

”என் உயிரைக் காத்திருக்கிறீர்கள், முகம்மது அலியின் சகோதரிடமிருந்து” என்றாள் அடிமைப் பெண்.

“எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயா?” என்று வினவினான் கிளைவ்.

“என் உயிர் உங்களுடையது. உங்கள் விருப்பப்படி அதை உபயோகிக்கலாம்” என்றாள் அவள் முகத்தில் எந்தவிதச் சலனமுமின்றி.

‘உன் தந்தைக்கு நான் எதிரி” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ்.

“ஆம்.”

”அவருக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கைகளில் நீ எப்படி எனக்கு உதவ முடியும்?”

”தந்தை என்னைப் பார்த்ததில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை, பாசத்திற்கு இடமில்லை.”

“வேறு எதற்கு இடம்?”

“கடமைக்கு.”

”சரி. நீ போ” என்று கிளைவ் அவளை அனுப்பிவிட்டு மீண்டும் படத்தில் கண்களைச் செலுத்தினான். கடைசியாகத் தன் விரலால் தான் செல்ல உத்தேசித்திருந்த வழியைக் காட்டினான் விஜயகுமாரனுக்கு.

”விஜயகுமார் மேற்படி மூன்று வழிகளிலும் நாம் போகப் போவதில்லை. தஞ்சையை நாம் புறக்கணிப்போம். இங்கிருந்து கொள்ளிடக்கரையே சென்று தெற்கே திரும்பி, கோயிலடிக் கோட்டையை அடைகிறோம் நேராக. கோயிலடி பிரெஞ்சுக்காரர் தளம். அங்கு ஒரு நாள் இளைப்பாறிக் காவிரியைக் கடந்து திருச்சி எல்லையை அடைகிறோம் பிறகு திருச்சி பெருஞ்சாலையையும் சிறுவீதிகளையும் புறக்கணித்து வயல்கள் வழியாக இரவில் திருச்சிக்கோட்டை மதிளை அடைகிறோம். மதிளை அடைந்ததும் ஓர் அம்பை எறிகிறோம் கோட்டைக்குள். அந்த அம்பு ஓர் ஓலையைத் தாங்கிச் செல்லும். பிறகு வெகு வேகமாகப் பொதி வண்டிகளைச் செலுத்தித் தெற்குக் கோட்டை வாசலில் நுழைகிறோம். அங்கிருக்கும் சிறு பிரெஞ்சுப் படையுடன் மோத வேண்டியிருக்கும். நாம் எதிரியைத் தாக்கியவுடன் உள்ளிருந்து நமக்கு உதவி கிடைக்கும்” என்று விவரித்தான் கிளைவ்.

விஜயகுமாரன் அது மிகவும் ஆபத்தான வழி என்பதை உணர்ந்தாலும், அதைவிடச் சிறந்த வழியை அவன் அறியாததால் ஒரு கேள்வி கேட்டான். ”கோயிலடி பிரெஞ்சு தளமானால் அங்குள்ள படைப் பிரிவை எப்படி ஏமாற்ற முடியும்? அங்கு எப்படி இளைப்பாற முடியும்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”இங்கேதான் நாம் மாறுகிறோம். இங்கிருந்து நாம் கிளம்பு முன்பே நானும் நம்முடன் வரும் ஐந்து பிரிட்டிஷ் சோல்ஜர்களும் பிரெஞ்சு ராணுவ உடைகளை அணிந்து கொள்வோம். எனக்குப் பிரெஞ்சு பேசத் தெரியும். நீ முகம்மதிய உடை அணிவாய். நீ சந்தாசாகிபின் படையில் ஹவில்தார் அல்லவா?” என்று கேட்டான் கிளைவ்.

‘ஹவில்தாரா! சந்தாசாகிபின் படையிலா!” வியப்பு குரலிலும் மிதமிஞ்சி ஒலிக்கக் கேட்டான் விஜயகுமாரன்.

”ஆம்.” கிளைவ் பதிலில் ஏளனமிருந்தது.

”யார் நம்புவார்கள் இதை?”

”பிரெஞ்சுக்காரர்.”

“எப்படி?”

”சந்தாசாகிபின் மகள் அதற்கு அத்தாட்சி கூறுவாள்.”

”அடிமைப் பெண்ணா?”

”ஆம். அவளை வேவுக்குத் தயார் செய்தது நீதானே?”

இந்த விபரீதத் திட்டத்தைக் கேட்டதும் வாயைப் ‘பிளந்தான் விஜயகுமாரன். “இந்தக் கட்டுக் கதையை யார் நம்புவார்கள்?” என வினவினான்.
”பிரெஞ்சுக்காரர்” என்றான் கிளைவ்.

”எதற்காக நம்ப வேண்டும்?”

”நாம் செல்வதே சந்தாசாகிபின் படைகளுக்கும் உணவு சப்ளை செய்வதற்காக. அதில் சிறிது கோவிலடி படைகளுக்கும் அளிக்க டூப்ளே உத்தரவிட்டிருக்கிறார். அதற்காகத் தான் கோவிலடிப் போகிறோம்” என்று சர்வசகஜமாகச் சொன்னான் கிளைவ்.

இந்தக் கோட்டைப் புளுகைப் பிரிஞ்சு தள அதிகாரி ஜீரணிப்பாரா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் விஜயகுமாரன். ”கண்டிப்பாக இந்தப் புரட்டு வெளிப்பட்டுவிடும்” என்றே நம்பவும் செய்தான்.

இருப்பினும் கிளைவ் தனது திட்டத்தை உடும்புப் பிடியாகப் பிடித்து அன்றிரவே பிரிட்டிஷ் சோல்ஜர்களையும், பொதி வண்டி ஓட்டுபவரையும் அழைத்து விஜயத்தைக் கூறி எச்சரித்தான். “பிரிட்டிஷ் சோல்ஜர்கள் பிரெஞ்சு ராணுவ உடை தரிக்க வேண்டும். நமது உடைக்கும் அதற்கும் செங்குத்தாக உள்ள அவர்கள் ஹாட்டைத் தவிர வேறு வித்தியாசம் கிடையாது. மற்றவர்கள் முகம்மதிய உடைகளில் வருவார்கள். என்னைத் தவிர யாரும் பேசக்கூடாது. பேசுவதானால் அடிமைப் பெண் பேசுவாள். உத்தரவை மீறி யார் வாயைத் திறந்தாலும் அந்த இடத்திலேயே சுட்டுவிடுவேன்’ என்று திட்டமாகக் கூறவும் செய்தான். பிறகு அரசகுமாரியைத் தனிப்பட அழைத்து, ”அரசகுமாரி / நீங்கள் தஞ்சை சென்று உங்கள் தந்தையிடம் கூறுங்கள், அவர் ஆணைப்படி இன்னும் பதினைந்து நாளல்ல, ஒரு வாரத்துக்குள்ளாகவே அவர் கடிதம் மும்மது அலியின் கையிலிருக்குமென்று” எனக் கூறினான்.

”ஏன்? நீங்கள் தஞ்சை வரவில்லையா?” என்று கேட்டாள் நந்தினி.

”தஞ்சை வந்தால் நாங்கள் வருவது எதிரிக்குத் தெரிந்து விடும். பிறகு நாங்கள் திருச்சியை அணுகுவது குதிரைக் கொம்பாகிவிடும். தவிர, உங்கள் தந்தையின் விருப்பமும் அதுவல்ல” என்றான் கிளைவ்.

‘தந்தையின் விருப்பம் அதுவல்லவா?” என்று கேட்டாள் நந்தினி வியப்புடன்.

”அல்.”

”எப்படித் தெரியும் உங்களுக்கு?”

”தஞ்சையில் எங்களை எதிர்பார்த்தால் உங்களிடம் ஓலையை அனுப்பியிருக்க மாட்டார், உங்கள் தந்தை. தற்சமயம் அவர் சந்தாசாகிபின் சந்தேகத்துக்கு ஆளாவதும் உசிதமல்ல.”

இதைக் கூறிய கிளைவ் நேராக எதிரிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றான். அங்கே சென்று தங்கியதும் மறுநாள் உடைகளை மாற்றி இரவிலேயே பயணம் செய்யத்துவங்கினான். விஜயகுமாரனும் மாற்றுடை அணிந்து அரசகுமாரி இருந்த இல்லத்துக்குச் சென்று அவளிடம் விடை பெற்றுக் கொண்டான். விடை பெற்றபோது அவளைக் கட்டியணைக்கவும் செய்தான். ”விடுங்கள்! யாராவது பார்த்தால் நான் சந்தாசாகிபின் ஹவில்தாரின் மனைவியென்று நினைப்பார்கள்” என்று கூறி வருத்தம் கலந்த புன்முறுவல் ஒன்றை வெளியிட்டாள் நந்தினி. பெரிய ஆபத்தை நோக்கி அவன் செல்கிறானென்பதை உணர்ந்ததால் அவள் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. கண்களில் நீர் திரண்டது. அவற்றைத் தனது உதடுகளால் அழித்த விஜயகுமாரன், “அஞ்சாதே நந்தினி கண்டிப்பாய்த் திரும்புவேன் உயிருடன். நிறைவேற்ற வேண்டிய சபதம் இருக்கிறது; அனுபவிக்க வேண்டிய சொத்து இருக்கிறது. இரண்டையும் விடமாட்டேன்” என்று ஆறுதல் சொன்னான்.

”சொத்தா” கண்ணீருக்கிடையில் கேட்டாள் நந்தினி.

”ஆம்.”

”எங்கே?”

”இதோ” என்று அவள் மார்பைத் தொட்டுக் காட்டி, ”இந்தப் பயணத்திலும் சரி, பின்னால் ஏற்படவிருக்கும் போரிலும் சரி ஒன்று வீரசொர்க்கமடைவேன் வீரனாக அல்லது இன்ப சொர்க்கம் நாடி வருவேன் காதலனாக” என்று சொன்ன விஜயகுமாரன், அவளை இழுத்து நெறுக்கியணைத்து, முத்திரை பொதித்து விலகிச் சென்றான்.

விக்கினாள் அரசகுமாரி. அவள் உள்ளம் சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது. ”அரங்கன்தான் உங்களைக் காத்து என்னிடம் அனுப்ப வேண்டும்” என்று பள்ளிகொண்ட பரமனை மனத்துள் வேண்டவும் செய்தாள்.

Previous articleRaja Perigai Part 2 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here