Home Historical Novel Raja Perigai Part 2 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

47
0
Raja Perigai Part 2 Ch3 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch3 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 3. நடுங்கிய நவாப்

Raja Perigai Part 2 Ch3 | Raja Perigai | TamilNovel.in

சந்தா சாகிபின் தடுமாற்றத்தையும், திகிலையும், சோகத்தையும் கண்டதால் புதிய நவாபின் உள்ளத்தில் பெரும் புயல் மூண்டிருப்பதை உணர்ந்த டூப்ளே, அவரை அனுதாபத்துடன் பார்த்தார். ‘’விளக்கமாகச் சொல்லுங்கள் நவாப்! எதுவாக இருந்தாலும் காப்பாற்ற நான் இருக்கிறேன்” என்று ஆறுதலும் கூறினார் கவர்னர்.

ஆனால் சந்தா சாகிபின் இதயத்தில் கவர்னரின் சொற்கள் எந்தவித ஆறுதலையும் அளிக்கவில்லையென்பதை அவர் முகம் சந்தேகத்துக்கு இடமின்றிக் காட்டியது, “இதிலியிருந்து என்னைக் காப்பாற்ற அல்லாவை (ஜல்)த் தவிர வேறு யாராலும் முடியாது. ஏனென்றால் அது அவர் மீது நான் இட்ட ஆணை” என்று துன்பக் குரலில் கூறிய சந்தா சாகிப் மெள்ள விவரங்களைக் கூறத் தொடங்கினார்.

”ஆம். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை தான். அப்போது நான் திருச்சியை முற்றுகையிட்டிருந்தேன். அந்தத் திருச்சியை ஆட்சி செய்தவள் ஒரு பெண். நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவள். பெயர் மீனாட்சி. பல மாதங்கள் முற்றுகையிட்டும் அந்தக் கோட்டையை என்னால் பிடிக்க முடியவில்லை . போரால் பிடிக்க முடியாததைத் தந்திரத்தால் பிடிக்க முயன்றேன். அப்போது நாயக்கர் வம்சத்தில் அரியணை போட்டியிருந்தது. திருச்சியில் என்னைப் புகவிட்டால் ராணிக்கு நான் சகோதரனாக இருப்பேன், அவள் உறவினர்களை முறியடிக்க உதவுவேன்” என்று ராணி மீனாட்சிக்குச் செய்தியனுப்பினேன். ராணியிடமிருந்து பதில் வந்தது.

அனுகூலமான பதில் தான். ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது. ‘குர் ஆன் மீது சத்தியம் செய்தால் உங்களைக் கோட்டைக்குள் அனுமதிக்கிறேன்’ என்று ராணி சொல்லி அனுப்பினாள். என் பாடு திண்டாட்டமாகிவிட்டது. குர்ஆன் மீது ஆணையிட்டால் அதை மீற முடியாது. என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடிய சமயத்தில் ஒரு யோசனை பிறந்தது. ஒரு செங்கல்லைப் பட்டுத் துணியால் மூடி ஒரு பலகையில் வைத்து, அதைக் குர்ஆன் என்று கூறிச் சத்தியம் செய்தால் என்ன என்று நினைத்தேன். அப்படியே செய்யவும் செய்தேன். ‘அல்-ஆலீம்’ (ஜல்) என்று கூறி ராணி மீனாட்சியையும், அவள் அரசையும் பாதுகாப்பதாக ஆணையிட்டேன். ஆல்-அமீன்’ (ஜல்) குர் ஆனில் சொல்லப்படும் எல்லாம் வல்ல அல்லாவின் (ஜல்) 99 நாமங்களில் ஒன்று.”

ஆனால் கவர்னர், ”அது ஆணை ஆகாது. ஏனென்றால் பலகையிலிருந்தது குர் அன் அல்ல, செங்கல் வெறும் செங்கல்…” என்றார். சந்தாசாகிபின் குரல் நடுங்கியது, குரல் தழுதுழுத்தது.
டூப்ளே, நவாபின் நடுக்கத்தையும் குரலில் ஒலித்த திகிலையும் கண்டு வெறுப்புக் கலந்த பார்வையொன்றை அவர் மீது செலுத்தினார். ”பிறகு என்ன நடந்தது?” என்று அவர் கேள்வியிலும் அந்த வெறுப்பு பூர்ணமாக ஒலித்தது.

”திருச்சிக்கு உள்ளே நுழைந்ததும் கோட்டையை வசப்படுத்திக் கொண்டேன். ராணியைச் சிறையிலிட்டேன்” என்றார் சந்தா சாகிப்.

“சகோதரராக நடந்து கொண்டீர்” என்றார் டூப்ளே இகழ்ச்சி நிரம்பிய குரலில்.

“இல்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. போருக்குத் தேவை தந்திரம். அதைக் கையாண்டேன்” என்று உளறினார் சந்தா சாகிப். ஆனால் அந்தப் பாழும் ராணியும் தீக் குளித்துவிட்டாள்” என்று ராணி ஏதோ தவறு செய்து விட்டது போல் குளறவும் செய்தார் ஆற்காட்டு நவாப்.

டூப்ளே, நவாபின் அழுகையைத் தாங்க முடியாமல் ஆசனத்திலிருந்து எழுந்து அறையில் சிறிது நேரம் சிந்தனையுடன் உலாவினார். பிறகு கேட்டார் சந்தா சாகிபை நோக்கி, ”அதற்காக இப்போது ஏன் பிராணனைவிடுகிறீர்?” என்று.

‘அந்த விட்ட கதை தொட்ட கதையாகத் தொடர்கிறது. இப்பொழுது யாரோ ஒருவன் அதை நினைவுபடுத்துகிறான். என்னைப் பழிவாங்கப் பார்க்கிறான்” என்றார் சந்தா சாகிப், பரிதாபக் குரலில்.

”யாரவன்?” என்று வினவினார் டூப்ளே.

”இந்தச் சீட்டை அனுப்பியவன்” என்று அதைக் கச்சையிலிருந்து எடுத்து மீண்டும் டூப்ளேயிடம் நீட்டினார்.

”அவன் பெயர் தெரியுமா?”

”தெரியாது.”

“பார்த்திருக்கிறீரா?”

“இல்லை.”

அந்தச் சமயத்தில் அறைக் கதவு இருமுறை தட்டப்பட்டதால் புஸ்ஸி ஒதுங்கிக் கதவைத் திறந்தான். டூப்ளேயின் மனைவி வெகு வேகமாக உள்ளே நுழைந்தாள். அவள் அழகிய வதனத்தில் சினம் மண்டிக் கிடந்தது.
‘நடனத்தைப் பாதியில் விட்டு ஏன் வந்தீர்கள்?” என்று கவர்னரை நோக்கி உஷ்ணம் கக்கும் சொற்களை உதிர்த்தாள்.

டூப்ளே அதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. புஸ்ஸியே பதில் சொன்னான்; ‘மேடம் நம்மையும் அறியாமல் நமது மாளிகைக்குள் நமது நவாப்புக்கு ஒரு சீட்டு வந்திருக்கிறது.”

மேடம் டூப்ளேயின் சினம் அவள் முகத்திலிருந்து மறைந்தது. “நம்மை அறியாமல் வரவில்லை. அதை அனுப்பியது நான் தான்” என்றாள் அவள்.

”நீயா!”டூப்ளே வாயைப் பிளந்தார்.

”ஆம். ஒரு வாலிபன் கொண்டு வந்து கொடுத்தான். அதை நவாப்புக்கு அனுப்பச் சொல்லிக் கெஞ்சினான்” என்றாள் மேடம் டூப்ளே .

”அவன் யார், எப்படி இருந்தான்?” என்று ஆத்திரத்துடன் வினவினார் சந்தாசாகிப்.

டூப்ளேயும் அதே கேள்வியைக் கேட்டார். மேடம் டூப்ளேயின் முகத்தில் மகிழ்ச்சி விரிந்தது. அழகிய உதடுகளில் மந்தகாசம் மலர்ந்தது. ”அவன் மிக அழகன்” என்றாள்.

இதைக் கேட்ட டூப்ளே மட்டுமின்றி இரு நவாப்புகளும் கூடக் கவர்னரின் அழகிய மனைவியை வியப்புடன் உற்றுப் பார்த்தார்கள். மிக அபாயத்தைத் தரக்கூடிய ஒரு சீட்டைப் பற்றித் தாங்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கையில், சீட்டை அத்தனை ரகசியமாக மாளிகைக்குள் அனுப்பியவனுடைய அழகைப்பற்றி மேடம் கூறியதும், அந்த மூவருக்கும் வியப்புடன் வெறுப்பும்கூட ஏற்பட்டது. அந்த வெறுப்பை டூப்ளே வெளிப்படையாகவே காட்டி, ”அவன் அழகைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை” என்றார் சற்றுச் சினம் தொனித்த குரலில். அவர் அப்படிக் கேட்டது இரு நவாப்புகளுக்கும் சிறிது ஆறுதலைத் தந்தாலும் சிறிது நேரத்தில் அந்த ஆறுதல் பறந்தது.

மிக சுயேச்சையான சுபாவமுடையவளும், கவர்னர் டூப்ளேயை ஆட்டிப் படைத்துச் சுதேசிகள் அடிக்கும் சூறையில் தனக்கும் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்பவளும், மிக அழகியுமான மேடம் டூப்ளே, கவர்னரின் சினத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், “என்ன சொன்னீர்கள்!” என்று மற்றுமொரு முறை வினவினாள்.

”அவன் அழகைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை என்று சொன்னேன்” என்றார் கவர்னர்.
”எனக்கு அக்கறையிருக்கிறது” என்றாள் மேடம் டூப்ளே வெகு அசட்டையாக.

”என்ன அக்கறை?” என்று வினவினார் டூப்ளே.

”ஒரு வாலிபன், உங்கள் கட்டுக் காவல்களையெல்லாம் மீறி எனது அறையின் சமீபத்தில் உலவுகிறான். என்னைக் கண்டதும் அசைவற்று நிற்கிறான். பிறகு என்ன செய்தான்?” இப்படிக் கேட்ட மேடம் களுக்கென்று சிரித்தாள்.

அப்போது டூப்ளேக்கு ஐம்பத்தைந்து வயது முடிந்தாலும் தேகத்தில் அயர்வோ புத்தியின் துடிப்பில் குறையவோ இல்லாததால் சற்று வேகத்துடன் கேட்டார்; “என்ன செய்தான்?” என்று.

மேடம் டூப்ளேயின் முகத்தில் மந்தகாசம் அதிகமாக விரிந்தது. அவள் தன் அழகிய சிற்றிடையைச் சிறிது வளைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து மிக அழகாக நின்றாள். “இந்த நவாப்புகளாக இருந்தால் என்ன செய்வார்கள்?” என்று வினவினாள் மிக மிருதுவான குரலில்.

”தலை தாழ்த்தி வணங்குவோம்” என்றார் சந்தா சாகிப் கவர்னரைப் பதில் சொல்ல விடாமல்.

”அந்த வாலிபன் அப்படிச் செய்யவில்லை” என்றாள் மேடம் அன்பு ததும்பும் குரலில்.

இப்படி அந்த இரு நவாப்புகளுக்கும் எதிரில் வேறொரு வாலிபனைப் பற்றி மேடம் டூப்ளே பேசியதால் கோபமுற்ற டூப்ளே, ‘வேறு என்ன செய்தான்?” என்று சீறினான் இரைந்தே.

டூப்ளேயின் கூக்குரலைக் கேட்டுக் கொண்டு கதவுக்கருகில் நின்ற புஸ்ஸியின் இதழ்களில் இந்தக் குடும்ப விவாதத்தைக் கண்டு புன்சிரிப்புத் தவழ்ந்தது. அதுவரையில் உரையாடலில் தலையிடாத அவனும், ”மேடம்! அந்த வாலிபன் நடத்தை தங்களுக்குப் பெரிதும் பிடித்திருக்கிறது” என்று குத்திக் காட்டினான்.

”ஆம். புஸ்ஸி! அவன் என்ன செய்தான் தெரியுமா?” என்றாள் மேடம் அன்பு கொட்டிய குரலில்.

“சொல்லுங்கள்.”

”என்னைக் கண்டு அஞ்சவில்லை.”

”உம்.”

“தலை தாழ்த்த வில்லை.”

“உம்.”

“இவர்களைப் போல் சலாம் அடிக்கவில்லை.”

“அப்படியா?”

“ஆம். நமது பிரான்ஸ் நாட்டுப் பிரபுக்களைப் போல் நடந்து கொண்டான். என்னைப் பார்த்ததும் ஒரு காலை மடித்து மண்டியிட்டான். கௌனின் அடியைப் பிடித்துச் சிறிது தூக்கி அதை முத்தமிட்டான்” என்று கூறிய மேடம் தனது கௌனின் அடிப்பாகத்தைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டியதால் அவள் அழகிய காலின் ஆடுசதை வெளேரெனத் தெரிந்தது.

கவர்னர் டூப்ளே சங்கடத்தால் அசைந்தார். அந்தப் பேச்சை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, ‘இந்தச் சீட்டை எப்படிக் கொடுத்தான்?” என்றார்.

”மிக மரியாதையாகக் கொடுத்தான். சிறிது பிரெஞ்சு மொழியிலும் பேசினான். இதை ரகசியமாக இந்த நவாப்புக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டான்” என்றாள் மேடம்.

டூப்ளே வெறுப்புடன் அடங்காப்பிடாரியான தமது மனைவியை நோக்கினார் ஒரு விநாடி. “நீ ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லையா?” என்று வினவினார்.

”விருந்துக்கும் நடனத்துக்கும் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன், மார்டின்! உனக்கு அடுத்தபடியாக அவனுடன் ஆடுவதாகவும் சொன்னேன். அவன் கேட்கவில்லை. அவசர வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான்” என்று துன்பப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள் மேடம்.

அதற்கு மேல் அந்த பேச்சைப் வளர்த்த இஷ்டப்படாத டூப்ளே அவளைப் போய் மற்ற விருந்தினர்களைக் கவனிக்கும் படியும், தாம் சீக்கிரம் வருவதாகவும் சொல்லி மெள்ளக் கெஞ்சிக் கூத்தாடி வெளியே அனுப்பினார்.

பிறகு இரண்டு நவாப்புகளையும் நோக்கினார். இருவரும் இதுவரை கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த உரையாடல்களைக் கேட்டதாலும், உரையாடலும் வந்தவன் யாரென்பதை விளக்காமல் வேறு பாதையில் போய்விட்டதாலும், என்ன பேசுவதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் டூப்ளேயின் கோபம் அவர்கள் மீது திரும்பியது. ”சந்தா சாகிப்! முஸ்பர் எதற்காகக் கோட்டான் மாதிரி விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கூச்சல் போட்டார் கவர்னர்.

சந்தா சாகிபும் சிறிது வெகுண்டார். ”கவர்னர், நவாப்புகளை இகழ்வது பிரெஞ்சு நாட்டுக்கு நல்லதல்ல” என்று சொன்னார்.

“எனது நாட்டிற்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும். ஏன், உமக்கு எது நல்லது என்பதும் எனக்குத் தெரியும். சீட்டைக் கண்டு பிராணனை விடுவது என் வழக்கமல்ல. உருப்படியான வேலையில் ஈடுபட முற்படுங்கள்” என்றார். அந்த உருப்படியான வேலை எது என்பதை விளக்கினார். அதைக் கேட்ட சந்தா சாகிப் பெரிதும் நடுங்கினார். டூப்ளே தமது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுக்கு வந்திருப்பதை அவர் சொற்கள் சந்தேகமற விளக்கின.

Previous articleRaja Perigai Part 2 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here