Home Historical Novel Raja Perigai Part 2 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

58
0
Raja Perigai Part 2 Ch30 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch30 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 30.. சாம்ராஜ்யப் புயல்

Raja Perigai Part 2 Ch30 | Raja Perigai | TamilNovel.in

மறுநாளிரவு மாற்றுடை யணிந்து விஜயகுமாரனுடனும் மற்ற வீரர்களுடனும் தனது பயங்கரப் பயணத்தைத் துவங்கிய கிளைவ், அரசகுமாரியை ஜாக்கிரதையாகத் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் போதிய காப்பு அளித்துவிட்டு, ”அரசகுமாரி! இந்தப் பயணம் இந்த நாட்டின் சரித்திரத்தைத் திருப்பலாம் என்று மகாராஜா பிரதாப் சிங்கிடம் சொல்லுங்கள்” என இறுதியாகக் கூறிவிட்டு, பொதி வண்டிகளைப் பின்தொடரப் பணித்து, தான் மட்டும் விஜயகுமாரனுடன் புரவில் ஏறி முன்னதாக வழிகாட்டிக் கொண்டு சென்றான். கொள்ளிடக் கரையின் தென்புறத்தில் ஒற்றை வண்டி போகும் குறுகிய பாதையே இருந்ததால் மற்றச் சோல்ஜர்களும் சிப்பாய்களும் அடிமைப் பெண்ணும் பொதி வண்டித் தொடரின் பின்பகுதியில் சென்றார்கள். அந்தப் பவனியைத் தன் வீட்டு வாசலிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அரமகுமாரி, புரவியில் கிளைவும் விஜயகுமாரனும் அமர்ந்திருந்த கம்பீரத்தைப் பார்த்து, இருவரும் கர்ம வீரர்கள் என்று புரிந்த கொண்டாலும், அந்த இருவரில் தன் காதலனும் ஒருவன் என்பதையும், அவன் தன்னைப் பிரிந்து அபாயத்தை நோக்கிச் செல்கிறான் என்பதையும் உணர்ந்ததன் விளைவாக ஒரு பெருமூச்சும் விட்டாள். அவளது கலங்கிய கண்கன், முன்பே சென்ற இரு காளைகளையும் கண்டன. வண்டிகளை இழுத்த காளைகள் மீது பதிந்தன. பதிந்த கண்களில் நீரும் திரண்டன. திரணட நீரீல் தூரத்தே சென்றவர்கள் நிழல்கள் போலத் தெரிந்தனர். அந்த நிழல்களும் இருட்டளித்த நிழலில் கலந்துவிடவே, அந்தகாரம் அவள் கண்களை என்ன, இதயத்தையும் கூடச் சூழ்ந்து கொண்டது.

கிளைவும் இருட்டளித்த கருமையில், அந்தகாரத்திலேயே அடுத்த வாரம் முழுவதும் பயணம் செய்தான். கொள்ளிடக்கரையை அடுத்துத் தஞ்சை மன்னர்களால் விவசாயிகளுக்காகப் போடப்பட்டிருந்த வண்டிப் பாதை அவ்வப்போது சீர்படுத்தப்பட்டு வந்தாலும், ஆற்றின் அருகாமையால் அடிக்கடி வெடிப்புக் கொடுத்திருந்ததால் பயணம் மிகக் கஷ்டமாகவே இருந்தது.

கொள்ளடத்தின் தென்கரை தஞ்சை அரசைச் சேர்ந்ததானாலும் தாங்கள் வருவது யாருக்கும் தெரியக் கூடாதென்ற காரணத்தால் கிளைவ் பகல் பயணத்தை அடியோடு கைவிட்டான். பகலில் கொள்ளிடக்கரையை அடுத்த அடர்ந்த தோப்புகளில் தங்கி இரவு மூண்டதும் பயணத்தைச் செய்து வந்தான். இப்படி மறைந்தும் நிதானமாகவும் பயணம் செய்ததன் விளைவாக, சீக்கிரமாகத் திருச்சியை அடைய முடியவில்லை கிளைவினால். அத்தனை நிதானத்திலும்கூட சில சமயங்களில் விபத்துக்கள் நேர்ந்தன. பாதை மடிப்பில் தட்டி இருமுறை இருவண்டிகள் குடை சாய்ந்தன. அந்தக் குடை சாய்ந்த வண்டிகளின் மாடுகளை அவிழ்த்துவிட்டுச் சிப்பாய்களைக் கொண்டு வண்டிகளை நிமிர்த்தி, பிரித்துக் கொட்டிய பருப்பு மூட்டையொன்றைத் தைத்து கூடப் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டு வண்டிகளில் ஒன்ரு குடை சாய்ந்தபோது உடன் வந்த சிப்பாய்களோ, சோல்ஜயர்களோ அதை நிமிர்த்த முடியாமல் திண்டாடிய போது, கிளைவ் தன் குதிரையிலிருந்து குதித்துத் தனது தோளை வண்டியில் சாய்ந்த கூண்டில் கொடுத்து மற்றவர்களுடன் தூக்கவும் செய்தான். இப்படி எந்தப் பணியையும் குறைந்த பணியாக நினைக்காமல் குறிக்கோளொன்றையே பிரதானமாக நினைத்து, சொல்லவொண்ணாகஷ்டங்களை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அனுபவித்துக் கொண்ட கிளைவை ஒவ்வொரு நாளும் உள்ளூறப் பாராட்டிக் கொண்டிருந்தான் விஜயகுமாரன்.

ஆச்சாள்புரத்திலிருந்து புறப்பட்ட ஒரு வாரம் கழித்துக் கொள்ளிடக் கரைத் தோப்பு ஒன்றில் ஒரு நாள் இரவு சுள்ளிகளை உடைத்துப் போட்டு நெருப்பு உண்டாக்கிக் கிளைவ் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். கல்கத்தா சென்று குணம் பெற்று வந்த பிறகும் கூட அந்தப் பழைய குளிர் காய்ச்சல் எப்போதாவது ஒருமுறை கிளைவைப் பாதித்துக் கொண்டுதான் இருந்தது. இந்தப் பயணத்தின்போது அந்தக் குளிர் காய்ச்சல் பிடித்துக் கொள்ளவே, அன்றிரவு பயணத்தை நிறுத்தியிருந்தான் காப்டன்.

கொய்னாவை எடுத்து நீரில் கலக்கிக் குடித்துவிட்டுப் படுத்து விட்ட கிளைவ், இரவு ஒன்பது மணிக்கு மெள்ள விழித்துச் சுள்ளிகளைப் போட்டுக் குளிர்காயத் தீமூட்டச் செய்தான். அந்தத் தீயில் மிலிடெரி தடிப் போர்வையை உடல் முழுவதும் போர்த்திய வண்ணம் குளிரும் காய்ந்தான். அவன் ஜுரத்திலிருந்தபோது அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் நெற்றியைப் பிடித்து விட்ட அடிமைப் பெண், அப்போதும் அவனருகில் இணைந்து உட்கார்ந்து நெற்றிப் பொட்டுகளை அழுத்திக் கொண்டிருந்தாள். எதிரே உட்கார்ந்திருந்த விஜயகுமாரன் அந்த நிலையில் கிளைவை நோக்கிச் சொன்னான். ”கிளைவ்! உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையா யிருக்கிறது” என்று.

கிளைவின் ஜுரக் கண்கள் அவனை விஷமத்துடன் ஏறெடுத்து நோக்கின. “இவளை வேண்டுமானால் உன் தலையைப் பிடிக்கச் சொல்.”

விஜயகுமாரன் மேலும் பார்த்தான் வியப்புடன், “ஜுரம் எனக்கில்லை ” என்றான் மெதுவாக.

”இருக்கிறது” என்று கூறினான் கிளைவ்.

”என்ன ஜுரம்?”

“பிரிவு ஜுரம் ”

“பிரிவு ஜுரமா?”

”அரசகுமாரியின் பிரிவினால் உள்ளூற அடிக்கும் ஜுரம்.’’ இதைச் சொன்ன கிளைவ் நகைத்தான்.

”கிளைவ்” விஜயகுமாரன் அழைப்பில் சங்கடமுமில்லை; வியப்புமில்லை.

”ஏன்ன விஜயகுமார்?”

“என் விஷயம் கிடக்கட்டும்…”

”என் விஷயத்துக் கென்ன?”

”இந்த உடல்நிலையில் எந்தக் காப்டனும் இத்தகைய பயங்கரப் பயணத்தை மேற்கொள்ள மாட்டான்” என்று கூறிய விஜயகுமாரன் மேலும் சொன்னான். ”உன் மனத்தில் என்ன இருக்கிறதென்பது எனக்குத் தெரியாது. எதுவாயிருந்தாலும் அது பெரும் படைகளால் சாதிக்க முடியாது. எப்போதோ உதயமாகும் ஒரு மகாவீரனால்தான் சாதிக்க முடியும். அத்தகைய வீரனில் நீ ஒருவன். பிரெஞ்சு ஆதிக்கத்தைக் குலைக்க, பிரிட்டனை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல நீ பிறந்திருக்கிறாய். உன்னிடம் சேவை செய்வது என் நாட்டுக்கு நல்லதல்ல. இருப்பினும் அதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எனக்கு எது வேண்டும் என்பதே இப்போது புரியவில்லை. நாட்டுச் சுதந்திரமா? அல்லது சபதத்தின் வெற்றியா? எதுவுமே தெரியவில்லை எனக்கு. ஜுரத்தில் கூடச் சளைக்காத உன் மன உறுதி என்னை மயக்கியிருக்கிறது.”

இப்படிச் சொல்லி முடித்த விஜயகுமாரன் சட்டென்று எரிந்த சுள்ளிகள் அளித்த வெளிச்சத்திலிருந்து எழுந்து கொள்ளிடக் கரையை நோக்கிச் சென்றான். அவன் போவதைப் பார்த்த கிளைவ் மெல்லப் புன்முறுவல் செய்தான். ‘எப்படிப்பட்ட வீரர்களை இந்த இந்தியா படைத்திருக்கிறது. இருந்தும் எப்படித் தத்தளிக்கிறது சிலரின் சுயநலத்தால்?” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

மறுநாளிரவு மீண்டும் பொதி வண்டிகளின் சக்கரங்கள் உருண்டன. தேவிக்கோட்டையிலிருந்து புறப்பட்ட பத்தாவது நாளிரவு, ஆச்சாள்புரத்திலிருந்து பயணப்பட்ட எட்டாவது நாளிரவு , கிளைவ் கோயிலடிக் கோட்டையை அடைந்தான். கோட்டையின் மேற்கு வாயிலை அடைந்ததும் புரவியின் லகானைப் பிடித்து இழுத்த கிளைவ் தனது கத்தியை உயர்த்தி, ”கவர்னர் டூப்ளேயின் தூதுவனுக்குக் கதவு திறக்கட்டும்” என்று கூவினான் பிரெஞ்சு மொழியில்.

கோட்டைக் கதவுகள் மெள்ளத் திறந்தன. கிளைவ் மட்டும் உள்ளே சென்றான். அங்கு அவன் என்ன பேசினானோ யாருக்கும் தெரியாது. அடுத்த ஒரு மணியில் கதவுகள் திறந்து பொதிகள் கோட்டைக்குள் நுழைந்தன. கிளைவைச் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு விஜயகுமாரன் பார்க்கவில்லை. பார்த்தபோது கிளைவ் மகா சிடுமூஞ்சியாக இந்தான். ”நவாப் மகள் எங்கே?” என்று ஹிந்துஸ்தானியில் வினவினான் எரிச்சலுடன். பிறகு அடிமைப் பெண்ணைக் கண்டதும் தலைவணங்கி, ”வாருங்கள்” என்று எதிரே தெரிந்த கோயிலுக்கருகிலிருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். போகும்போது விஜயகுமாரனை நோக்கி, “ஹவில்தார் நான்கு பருப்பு மூட்டைகளைக் கோட்டைக் கிடங்குக்கு அனுப்பு” என்று ஹிந்துஸ்தானியில் கூறிச் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சில ஆற்காட்டுச் சிப்பாய்களிடம் விஜயகுமாரன் நான்கு மூட்டைகளை எடுத்துக் கொடுத்தான். அந்தச் சிப்பாய்கள் மூட்டைகளை முதுகில் சுமந்து சென்றபோது போட்ட முனகல் சப்தம், கோவிலை அணைத்து ஓடிய காவிரி நீரின் சலசலத்த ஒலியுடன் கலந்து கொண்டது.

பொதிகள் இறங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வந்த கிளைவுடன் பிரெஞ்சு காப்டனும் வந்தான். ஹவில்தார் விஜயகுமாரனுக்கும் மற்றவர்களுக்கும் உணவு அளிக்குமாறு பிரெஞ்சு சோல்ஜர்களுக்கு உத்தரவிட்ட பிரெஞ்சு காப்டன், கிளைவை அங்கேயே விட்டுச் சென்றான். அவன் சென்றதும் விஜயகுமாரனை அணுகிய கிளைவ், ”விஜயகுமாரா, கோட்டையைப் பார்த்தாயா?” என்ற வினவினான் ரகசியமாக.

“முன்பே பார்த்திருக்கிறேன்” என்றான் விஜயகுமாரன்.

”பலமான கோட்டை” என்றான் கிளைவ்.

”என்ன கோயில் இது?”

”அப்பக்குடத்தான்.”

”அப்படியென்றால்?”

”சொன்னால் உனக்கு விளங்காது.”

”சரி, விளங்க வேண்டாம். இதிலிருந்து உடனடியாக நாம் தப்ப வேண்டும்.”

“ஏன்?”

”காப்டன் ஏதோ சந்தேகப்படுகிறான். அடிமைப் பெண்ணின் முகம் நல்ல வேளையாகச்சந்தாசாகிபின் முகத்தைப் போலிருக்கிறது. அதைக் கண்டுதான் மாறினான்” என்ற கிளைவ் மேலும் சொன்னான்: ”இந்த மாதிரி பொதி வருமென்று டூப்ளேயிடமிருந்து செய்தி கிடையாது என்று ஆட்சேபணை கிளப்பினான் பிரெஞ்சுக் காப்டன். பிறகு சந்தாசாகிபின் குமாரத்தி மாறு வேடத்தில் வந்திருப்பதாகவும் நவாபின் உத்தரவின்மேல் அவர்களுக்காக இந்தப் பொதிகள் வந்திருப்பதாகவும் சொன் னேன். பிறகு அடிமைப் பெண்ணையும் காட்டினேன். மெள்ள திருப்தியடைந்தான். பிறகு ஒரு சேதி சொன்னான், ‘நாளைக்குப் பிரெஞ்சு தளபதி டீ ஆதுனில் இங்கு வரப்போவதாக. இந்த நிலையில் நாம் இங்கு அதிக நேரம் தங்குவது பிசகு. விடியற்காலையில் கிளம்பி விடுவோம்’ என்று.

அம்மாதிரியே பொதி வண்டிகளை விடிவதற்கு முன்பே பூட்டிய கிளைவ், காவிரிக்குள் இறக்கினான் வண்டிகளை. பிரெஞ்சுக் காப்டன் அவர்களுக்கு வழி காட்டவோ எதற்கோ துணையாக ஒரு பிரெஞ்சு சோல்ஜரையும் புரவியில் அனுப்பியிருந்தான். காவிரி மணலில் புரவிகள் தத்தளித்து நடந்தன. வண்டியிழுத்த காளைகள் திண்டாடின. இருப்பினும் அவற்றுக்கு வண்டியோட்டிகள் தார்க்குச்சி போட்டும் வாலை முடுக்கியும் ஓட்டினார்கள். காவிரிப் பயணம் மிகக் கஷ்டப்பட்டு நடந்தது.

அந்தக் கஷ்டத்தைத் தாங்காத ஒரு பிரிட்டிஷ் சோல்ஜர், ”டாமிட், வாட் எ டெரிபிள் திங்” என்ற ஆங்கிலத்தில் இறைந்து விட்டான். அதைக் கேட்டதும் கிளைவை உற்று நோக்கிய பிரெஞ்சு சோல்ஜர் எதையோ புரிந்து கொண்டு விட்டவன் போல் கோட்டையை நோக்கித் திரும்பினான். அதுதான் அவன் செய்த தவறு. கிளைவின் கைத்துப்பாக்கி அதன் உறையிலிருந்து வெகு வேகமாக வெளி வந்தது. அதைத் திருப்பி அதன் பிடியில் பிரெஞ்சுக்காரன் பொட்டில் அடித்த கிளைவ் அவன் நிலத்தில் சாய்ந்ததும் அவனை எடுத்துப் பொதி வண்டி யொன்றில் போடச் செய்தான்.

அதற்குப் பிறகு அதிக தடையில்லாமல் பயணம் நடந்தது. மூன்று இரவு பயணம் செய்து நான்காம் நாளிரவு வயல்களின் பக்கமாகத் திருச்சிக் கோட்டை மதிளை அடைந்ததும், அதற்காகத் தயாராக வைத்திருந்த வில்லால் அம்பு ஒன்றைப் பறக்க விட்டான் கோட்டைக்குள். பிறகு பொதி வண்டிகளைப் பின் தொடரச் சொல்லிக் கிழக்கு வாயிலை அடைந்து உள்ளே புகுந்தான்.

கோட்டையின் உட்புறத்தை அடைந்ததும் பொதி வண்டி களைத் தொடரச் சொல்லிக் காப்டன் ஜீன்ஜின்ஸ் தங்கியிருந்த வீட்டை அடைந்தான். அது வீடு மாதிரியில்லாமல் பல அறை களுடன் பாசறை மாதிரியே இருந்ததைக் கண்டு வியந்த கிளைவ்,. இந்தச் சூழ்நிலையில் காப்டன் ஜின்ஜின்ஸ் எதிரிகளுக்குத் தண்ணீர் காட்டியிருக்கலாம் என்ற எண்ணினான். ஆனால் மறு நாளைக்குள் காப்டன் ஜின்ஜின்ஸுக்கும் படை வீரர்களுக்கும் உபதளபதிகளுக்கும் இருந்த கிலியைப் பார்த்து அனேகமாக முகம்மது அலி முடிந்தார் என்ற தீர்மானித்தான். இத்தனையிலும் கிலி பிடிக்காத ஒரு மனிதனைக் கண்டு கிளைவ் உற்சாகம் கொண்டான்.

அவன் வந்த மறுநாளே அவனைத் தமது ஆஸ்தான அறையில் சந்தித்த முகம்மது அலி, கிளைவுக்கு நன்றி கூறினார். ”எதிரி சூழ்ந்துள்ள இந்தக் கோட்டையை நீங்கள் எப்படி நாடினீர்களோ புரியவில்லை எனக்கு. ஆனால் இந்த உணவு எங்கள் பட்டினியைத் தீர்க்கும். படைகளுக்குச் சிறிது ஆறுதலையும் அளிக்கும்” என்றார் நவாப் முகம்மது அலி. அவர் முகத்தில் துன்பப் புன்முறுவலின் சாயை படர்ந்து கிடந்தது.

முகம்மது அலி, கிளைவைத் தமது அரண்மனையிலேயே இரண்டு நாள் இருத்திக் கொண்டார். மூன்றாவது நாள் சொன்னார், காப்டன் கிளைவ் சந்தாசாகிபின் படைகள் பூராவும் இங்கே தூங்குகின்றன. இப்போது ஆற்காட்டை யாராவது தாக்கினால் பிடிப்பது சுலபம். ஆற்காடு பிடிபட்டால் சந்தாசாகிப் மீண்டும் அங்கே திரும்பும்படி இருக்கும். அதை நீங்கள் செய்ய முடியுமா?” என்று.

கிளைவ் சிந்தனையில் இறங்கினான். “நான் எந்த முடிவும் எடுக்க முடியாது யுவர் மெஜஸ்டி கவர்னரிடம் சொல்லிப் பார்க்கிறேன்” என்றான் முடிவில். ஆனால் மும்மது அலி விதைத்த வித்து மெள்ள ஊன்றியது, முளைவிட்டது, கிளைவின் சாம்ராஜ்யக் கனவில்.

அந்தக் கனவுடன் 1751 ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வந்தான் கிளைவ் ஸெய்ன்ட் டேவிட் கோட்டைக்கு. அந்த வருகை, வருகையிலிருந்த கனவு, உள்ளே எழுந்திருந்த போர் வெறி மெள்ள மெள்ள உருவாயிற்று, சாம்ராஜ்யப் புயலாக. அந்தப் புயலில் கிளைவுடன் கவர்னர் ஸாண்டர்ஸும் கலந்து கொண்டார்.

இரண்டாம் பாகம் முற்றும்

Previous articleRaja Perigai Part 2 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here