Home Uncategorized Raja Perigai Part 2 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0

Raja Perigai Part 2 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 4. மேடம் வின்ஸன்ஸ்

Raja Perigai Part 2 Ch4 | Raja Perigai | TamilNovel.in

சந்தா சாகிபுவுக்கும் முஸபர் ஜங்குக்கும் கவர்னர் டூப்ளே தமது திட்டத்தை விளக்கிய போது, அவர் ஏதோ பெரும் சாம்ராஜ்யக் கனவில் இருக்கிறார் என்பதை இருவருமே புரிந்து கொண்டார்கள். அத்தகைய சாம்ராஜ்யக் கனவுக்கு முக்கிய காரணம் அவருக்கு இருந்த பெரும் கடன் தொல்லையும் அவரது மனைவியுமே என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை.

*உண்மையில் மேடம் வின்ஸன்ஸக்கும் டூப்ளேக்கும் நடந்த விவாகம் காதல் விவாகமல்ல. வங்காளத்தில் டூப்ளே இருந்த போது அவர் செய்த வர்த்தகத்தில் பெரும் நஷ்டமடைந்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனின் ஒரு பாகம் வின்ஸன்ஸ் குடும்பத்தாரிடம் வாங்கப்பட்டியிருந்தது. அந்தக் கடனைத் தீர்க்க மிஸ்டர் வின்ஸன்ஸ் இறந்ததும் மேடம் வின்ஸன்ஸை டூப்ளே 1741 ஏப்ரல் 17-ஆம் தேதி விவாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது மேடம் வின்ஸன்ஸுக்கு வயது முப்பத்தைந்து. முதல் கணவன் மூலம் அவளுக்கு எட்டுக் குழந்தைகள் இருந்தன. அந்த எட்டில் மூன்று மாண்டு விட்டதால் மேடத்துடன் அந்த ஐந்து கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு டூப்ளே புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.

வீட்டில் சதா மேடம் வின்ஸன்ஸின் தொந்தரவும் ஆர்ப்பாட்டமும் மிக அதிகம். மேலும் அவளுடைய காலஞ்சென்ற கணவரின் குழந்தைகளும் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக், கவர்னர் இல்லத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருந்தனர். டூப்ளேயின் இல்வாழ்க்கை உண்மையில் மல்வாழ்க்கையாகிக் கொண்டிருந்தது. ஆகவே அறிவாளியான டூப்ளே தமது அறிவை அரசியலில் அதிகமாகச் செலுத்தினார். அதன் மூலம் நவாபுகள் அடித்த கொள்ளைகளில் பெரும் பகுதி கவர்னரின் கஜானாவுக்குப் போய்க் கொண்டிருந்தது. மேடத்துக்குப் பரிசு எதுவும் கொண்டுவராத எவனும் பட்டபாடு சொல்ல முடியாது.

இத்தனைக்கும் மேடம் வின்ஸன்ஸ் அழகாகவே யிருந்தாள். இந்த 43-ஆவது வயதிலும் அவள் கவர்ச்சி இணையற்றதாக இருந்தது. அவள் சென்னையில் பிறந்த காரணத்தால் தமிழை மிக அழகாகப் பேசினாள். ஹிந்துஸ்தானியும் அவளுக்கு ஓரளவு தெரியும். அவள் தாய் டி.காஸ்ட்ரோ போர்ச்சுக்கீஸ்; தந்தை ஜேக்ஸ் ஆல்பர்ட் என்ற • மேடம்டுப்ளேயைப்பற்றிய பிரெஞ்சுக்காரர். இப்படிக் கலப்பு மணத்துக்குப் பிறந்ததால் இரண்டு இனத்தின் குணமும் அவளிடம் பொருந்தியிருந்தது. சில சமயங்களில் போர்ச்சுக்கீசியரின் கொடூரமும், சில சமயங்களில் பிரெஞ்சுக்காரர்களின் குழைவும் தென்பட்டன. இத்தகைய இல்லத்தரசியைக் கட்டிக் கொண்ட டூப்ளே அவளைக் கண்டு சதா நடுங்கிக் கொண்டு அவளைத் திருப்தி செய்வதிலுமே குறியாக இருந்து, நரக வேதனையை அனுபவித்தார்.

இருப்பினும் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவடைய வேண்டிய விஷயங்களை அவர் அலசும்போது திறமையாகவே அலசினார். ஆகையால் இரு நவாபுகளையும் பார்த்துச் சொன்னார்; ”அடுத்தபடி நீங்கள் திருச்சியின் மீது படையெடுக்க வேண்டும்” என்று.

சந்தா சாகிபும் முஸபர் ஜங்கும் முகத்தில் கலவரத்தைக் காட்டினார்கள். ”ஆம்பூர் போர் முடிந்து இப்போது தானே இரண்டு மாதங்கள் ஆகின்றன?” என்று சந்தா சாகிப் வினவினார்.

”அதற்குப் பிறகு ஆற்காட்டு நிர்வாகத்தைத் திடப்படுத்தி விட்டு இங்கு வந்திருக்கிறோம்” என்று இரண்டு மாதத் தாமதத்துக்குக் காரணம் சொன்னார் முஸபர்ஜங்.

டூப்ளே தமது சீரிய கண்களை அந்த இருவர்மீதும் திருப்பினார். ”எந்த விதை உங்களை ஆற்காட்டிலிருந்து விரட்டியதோ, எந்த வித்து உங்கள் ஆற்காட்டுச் சொந்தத்தை இன்னும் பாதிக்கிறதோ அது களையப்படவில்லை” என்று கூறினார், பார்வையிலிருந்த சீரான நோக்கு குரலிலும் பிரதிபலிக்க.

மேடம் வெளியே சென்றதும் கதவைச் சாத்தி விட்டு அதன் அருகிலேயே நின்று கொண்டிருந்த டி புஸ்ஸி மிக நிதானமான, ஆனால் அழுத்தமான குரலில் சொன்னான், “அந்த வித்து முகம்மது அலி, கம்பெனி நவாப்” என்று.

டூப்ளேயின் கண்கள் மகிழ்ச்சியுடன் நோக்கின, தன் வலக் கரம்போன்ற புஸ்ஸியை. அவன் சொன்னதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையையும் அசைத்தார் டூப்ளே. “நீ சொல்வது சரி புஸ்ஸி முகம்மது அலி இருக்கும் வரை, பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் நமக்கு ஆபத்திருக்கிறது” என்றும் கூறினார் தலையாட்டலைத் தொடர்ந்து.

புஸ்ஸி அத்துடன் நிற்கவில்லை. ”இங்கு மழைக் காலம் தொடங்க இருக்கிறது. ஆகவே உடனடியாகப் படையெடுப்பைத் தொடங்கினால் நல்லது” என்று ஊக்கினான் டூப்ளேயை.

”அது தான் சரி” என்ற டூப்ளே நவாபுகளை நோக்கி, ”இப்போது அக்டோபர் 15 தேதி ஆகிறது. நல்லவேளை, வடகிழக்குப் பருவ மழை தலைகாட்டக் காணோம். இதுவும்

உங்களுக்கு நல்ல சகுனம். ஆகையால் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கிளம்பிப் பாருங்கள்” என்றார்.

‘எங்கள் படை…” என்று இழுத்தார் சந்தாசாகிப்.

”சண்டையிட்டுக் களைத்திருக்கிறது. தவிர சம்பளமும் சென்ற மாதத்திற்குக் கொடுக்கப்படவில்லை” என்றார் முஸபர்ஜங்.

‘’ஆற்காட்டு கஜானா பணம் என்னவாயிற்று?” என்று வினவினார் டூப்ளே.

”பாதியை மேடத்துக்கு அனுப்பிவிட்டோம்” என்றார் முஸபர்ஜங்.

டூப்ளே வாயைச் சட்டென்று மூடிக்கொண்டார். ஓரக்கண்ணால் புஸ்ஸியின் இகழ்ச்சி முறுவலைக் கண்டார். ஆனால் அதைப் பற்றி உள்ளூற எரிச்சல் உண்டானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், ”சரி, அது எப்படியிருந்தாலும் இருக்கட்டும். நான் உங்களுக்குச் சிறிது பணமும் கொடுக்கிறேன். துணையும் கொடுக்கிறேன். புறப்படத் தயாராகுங்கள்” என்று அறிவித்து விட்டு, அவர்கள் போகலாம் என்பதற்கு அறிகுறியாக வலக் கையையும் ஆட்டினார். நவாபுகள் இருவரும் தயங்கினாலும் வேண்டா வெறுப்பாக எழுந்து வெளியே சென்றார்கள். அவர்களை வெளியே அனுப்பக் கதவைத் திறந்த டி புஸ்ஸி தானும் வெளியே செல்ல முயன்றாலும் “புஸ்ஸி’ என்ற கவர்னரின் சொல் அவனது கால்களைத் தடைப்படுத்தியது.

‘எனக்கு ஏதாவது உத்தரவு இருக்கிறதா?’ என்று வினவினான் புஸ்ஸி.

”கதவைச் சாத்திவிட்டு வா” என்றார் டூப்ளே.

அவர் கட்டளையின்படி கதவைச் சாத்திவிட்டு வந்த டி புஸ்ஸியை ஓர் ஆசனத்தில் உட்காரச் சொல்லிவிட்டுத் தாமும் எதிரே அமர்ந்த டூப்ளே, ”புஸ்ஸி உன்னை எனது சொந்த சகோதரனாக நினைக்கிறேன்” என்று துவக்கினார் சம்பாஷணையை.

”பாக்கியம்” என்றான் புஸ்ஸி புன்முறுவலுடன்.

டூப்ளே மனம் இருந்த நிலையில் அவர் அந்த புன்முறுவலைக் கவனிக்க வில்லை. ”புஸ்ஸி! திருச்சியை முற்றுகையிட்டு முகம்மது அலியைச் சிறைப்படுத்தி விட்டால் சந்தா சாகேபின் பலம் கர்நாடகத்தில் திடப்பட்டு விடும். அப்படித் திடப்படுத்தி விட்டால் பிரெஞ்சு பலம் வேரூன்றி விடும். பிறகு மெள்ள நமது வர்த்தகக் கம்பெனி மூலமே பிரெஞ்சு சாம்ராஜ்யத்தை இந்த நாட்டில் பரவவிடலாம்’ என்ற டூப்ளேயின் கண்கள் அப்போதே சாம்ராஜ்யத்தைக் கண்டுவிட்டன போல் பளபளத்தன.

டி புஸ்ஸியின் சூட்சுமக் கண்கள் டூப்ளேயின் கனவைக் கவனிக்கவே செய்தன. ஆனால் அவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட உதிரவில்லை. ஆகவே டூப்ளேயே கேட்டார். ”இந்த திட்டத்தைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?” என்று.

“திட்டம் சரியானது தான்” என்று இழுத்தான் புஸ்ஸி. ”வேறு எது சரியில்லை?” என்று வினவினார் டூப்ளே. “இந்த நவாபுகள்” என்றார்டி புஸ்ஸி. “ஏன்? அவர்களுக்கென்ன?”

”உங்கள் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக எனக்குத் தோன்றவில்லை.”

“அதற்கு என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?” ”நான் அவர்களுடன் செல்லலாமென்று நினைக்கிறேன்.”

இதைக் கேட்ட டூப்ளே யோசித்தார். பிறகு சொன்னார் திட்டமாக, ”முடியாது புஸ்ஸி, முடியாது. நீ இங்கு எனக்குத் தேவை” என்று.

”எப்படியிருந்தாலும் இவர்களை மேற்பார்வை பார்க்க ஒரு பிரெஞ்சுப் படைத் தலைவன் தேவை” என்றான் புஸ்ஸி.

டூப்ளே சிறிது சிந்தனையில் இறங்கினார் மீண்டும். கடைசியாக, ‘டி ஆதுனிலைப் பற்றி உன் கருத்து என்ன?” என்று வினவினார்.

இம்முறை டி புஸ்ஸியும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். “டி ஆதுனில் சிறந்த போர் வீரர், சிறந்த படைத் தலைவர்…” என்று இழுத்தான்.

“அவரை அனுப்பினால் என்ன?”

”சூது வாது தெரியாதவர். வெளுத்ததையெல்லாம் பால் என்று நினைப்பவர்.”

“அப்படியிருக்கக் கூடாது.”

”நயவஞ்சகனான ஒருவனை அனுப்ப வேண்டும் என்கிறாய்?”

“இல்லை. எதையும் சட்டென்று நம்பிவிடாதவரை அனுப்பவேண்டும் என்கிறேன்.” இதை மிகத் திட்டமாகக் கூறினான் புஸ்ஸி.

‘சரி, யோசிக்கிறேன்” என்றார் டூப்ளே. ஆனால் அவர் யோசிப்பதற்கு வழி ஏதுமில்லாத ஒரு சதி அதே மாளிகையின் ஒரு மூலையில் நடந்து கொண்டிருந்ததை அவர் அறிய வில்லை. அந்த மாளிகையின் கோடி அறை ஒன்றில் சந்தா சாகிபும் முஸபர் ஜங்கும் மேடம் டூப்ளேயின் மூளையைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார்கள். மேடத்துடன் பேச முற்படுமுன்பு சந்தா சாகிப் அவள் கைகளில் ஒரு பணமுடிப்பைக் கொடுத்தார்.

முடிப்பை இருமுறை தன் கையில் தூக்கித் தூக்கி எடை பார்த்த மேடம், “இதில் எத்தனை இருக்கிறது?” என்று வினவினாள்.

“ஆயிரம்* பகோடாக்கள்” என்றார் சந்தாசாகிப் “ஆனால் இது ஆரம்பம்தான். எங்கள் இஷ்டப்படி காரியங்கள் நடந்தால்…” என்று சொன்னார்.

”என்ன உங்கள் இஷ்டம்?” என்று வினவினாள் மேடம். ”இந்த புஸ்ஸி இருக்கிறானே…”

“ஆம்.”

”என்ன செய்கிறான்?”

” நமது படையெடுப்புகளில் லாபம் சம்பாதிப்பதை ஆட்சேபிக்கிறான்.’

”என்ன அயோக்கியத்தனம்”

”அது தங்களுக்குத் தெரிந்திருப்பது பற்றி எங்களுக்கு மகிழ்ச்சி. அவன் எங்களுடன் வந்தால் மேடத்துக்குப் போதிய பணம் கிடைப்பது மிகவும் கஷ்டம்” என்ற சந்தா சாகிப் முகத்தில் வருத்தக் குறி காட்டினார். முஸபர்ஜங் முகம் சோகத்தால் மிக நீண்டுவிட்டதால் அவர்தாடி மார்பில் இடித்தது.

மேடம், ”சரி, நீங்கள் செல்லலாம்” என்று உத்தரவு கொடுத்து விட்டு நடன மண்டபத்துக்குச் சென்றாள். அங்கிருந்த விருந்தினர்களையெல்லாம் மரியாதையுடன் அனுப்பி வைத்து விட்டுத் தன் பள்ளியறை சென்றாள். அங்கிருந்த பெரும் கட்டிலின் பஞ்சணையில் படுத்துக் கிடந்த டூப்ளேயைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். பிறகு தனது உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்தாள். டூப்ளேயின் கண்கள் அவள் உடைகள் நழுவ நழுவ வெறி பிடித்தன. ‘முடிவில் அவள் நைட் கௌன் அணிந்து பக்கத்தில் படுத்தாள். ”மார்ட்டின்” என்று செல்லமாக அழைத்தாள்.

”என் பெயர் மார்ட்டின் அல்ல, ஜோஸப் பிராங்காய் டூப்ளே” என்றார் டூப்ளே.
”ஆனால் என் பழைய கணவரை இந்த செல்லப் பெயரால் தான் அழைத்து வந்தேன். அந்தச் செல்லம் முழுவதையும், அதற்கு மேலும் உன் மேல் மாற்றி விட்டேன்” என்ற மேடம் திரும்பி டூப்ளேயின் மீது தனது கரமொன்றைத்தவழவிட்டாள்.

விளைவு? பிறகு நவாபின் படைகளுக்குத் துணையாக புஸ்ஸி போகவில்லை. டி ஆதுனில் சென்றார்.

Previous articleRaja Perigai Part 2 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here