Home Historical Novel Raja Perigai Part 2 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 2 Ch5 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch5 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 5. கண்ணாடியில் தெரிந்த உருவம்

Raja Perigai Part 2 Ch5 | Raja Perigai | TamilNovel.in

அரசுகளின் முக்கியமான முடிவுகள் பல, அரசியல் வாதிகளின் ஆலோசனை சபைகளைவிட, அவர்கள் படுக்கும் பஞ்சணைகளில் கிடைக்கும் மந்திரோபதேசத்தில் தான் எடுக்கப்படுகின்றன என்பதற்கு டூப்ளே உதாரணமாக விளங்கினார்.

இல்லையேல் இந்த நாட்டில் அவர் கண்டிப்பாகப் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பார். எப்பேர்ப்பட்ட மேதைகளுக்கும் நாட்டாட்சி ஒருபுறம் இருந்தால், பலமான வீட்டாட்சியும் மற்றொருபுறம் இருப்பதால், மேதைகள் பைத்தியங்களாகிறார்கள். அப்படிப்பட்ட பைத்தியக் காரந்தனந்தான் டூப்ளேயின் முதல் முடிவை மாற்றி டி ஆதுனில்லை நவாபுகளுடன் அனுப்பி வைத்தது.

ஆனால் இந்தப் பொது நியதிக்குச் சில விலக்குகளும் உண்டு. அப்படி விலகி நிற்பவர்கள் பல சிக்கல்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அறிவு, காதின் மூலம் கிடைக்கும் மந்திரச் சொற்களால் மயங்காது தெளிவுடன் நிற்கிறது. ஆகவே அவர்கள் முடிவுகளிலும் ஒரு தெளிவு இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய தெளிவு படைத்தவர் தஞ்சை மன்னர் பிரதாபசிம்மன். தஞ்சை இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ் வராமல் கடைசி வரை நின்றதற்கு, அவரது தெளிந்த, ஆழ்ந்த அறிவு தான் காரணம். அப்பேர்ப்பட்ட மகாராஜா பிரதாபசிம்மனையும் மூன்று பேர் உஷ்ணத்துடன் பார்த்தார்கள்.

டூப்ளேயின் மந்திராலோசனை புதுவையில் நடந்த மூன்றாம் நாள் இரவில் தஞ்சை அரண்மனையிலும் ஒரு மந்திராலோசனை நடக்கத்தான் செய்தது. என்றும் உஷ்ணத்தையோ பதற்றத்தையோ காட்டாத டபீர் பண்டிதர்கூட அன்று முகத்தில் கோபச் சாயை காட்டினார். “இவ்வருஷம் வானம் நம்மை ஏமாற்றி விட்டது” என்று அரசை நோக்கி சொன்னார், அதற்கு அரசன் தான் பொறுப்பாளி போல.

மகாராஜா பதிலேதும் சொல்ல வில்லை. ஆம் என்று ஒப்புக் கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தார்.

டபீர் பண்டிதருக்கு மகாராஜாவின் மௌனமும் தலையசைப்பும் அதிக எரிச்சலை உண்டாக்கவே அவர் மேலும் சொன்னார், ”இந்த ஆண்டு மக்களிடமிருந்து போதிய நெல் கிடைக்காது” என்று குரலிலும் எரிச்சலைக் காட்டியது.

”உண்மை ” என்று மகாராஜாவின் வாயிலிருந்து ஓர் ஒற்றைச் சொல் மட்டும் உதிர்த்தது.

”தவிர, தேவிக்கோட்டையும், அதன் சுற்றுப்புற நிலங்களும் போய் விட்டன” என்றும் குற்றம் சாட்டினார் டபீர் பண்டிதர்.

”அவை போகவில்லை. நாமாகக் கொடுத்தோம், வெள்ளைக்காரர்களுக்கு” என்றார் பிரதாபசிம்ம மகாராஜா.

அதுவரை டபீர் பண்டிதருக்கும் மகாராஜாவுக்கும் ஏற்பட்ட சம்பாஷணையில் குறுக்கிடாமல் தமது பெருவாள் இடையில் தொங்க, எட்டவே நின்றிருந்த மானாஜி அப்பா, ‘அவசியம் இல்லாத சமயத்தில் …” என்றார் குரலில் லேசாக வெறுப்பைக் காட்டி.

”எப்படி அவசியமில்லை?” என்று வினவினார் தஞ்சை மன்னர் தமது படைத்தலைவரை நோக்கி.

”நான் தேவிக் கோட்டையிலிருந்து பின்வாங்கியதற்குக் காரணம் தோல்வியல்ல” என்றார் மானாஜி.

”தெரியும் எனக்கு” என்றார் மகாராஜா சர்வசகஜமாக.

”தேவிக்கோட்டையில் இருக்கும் வரை பிரிட்டிஷாருக்கு அவர்கள் கப்பற்படையின் உதவி இருந்தது.”

”ஆம்.”

”அதிலிருந்து அவர்களை இழுக்கவே ஆச்சாள்புரம் கோவிலுக்குள் படைகளை நிறுத்தினேன். மதிள் மீது நமது பீரங்கிகளையும் பொருத்தினேன்.”

”ஆம்.” ”தாங்கள் சிறு உதவி அனுப்பியிருந்தாலும், அல்லது சில நாட்கள் அவகாசம் அளித்திருந்தாலும் பிரிட்டிஷ் படையை முறியடித்திருப்பேன். “இந்த சொற்களைச் சிறிது உஷ்ணத்துடன் சொன்னார் மானாஜி.

”இது எதிலும் சந்தேகமில்லை ” என்றார் மகாராஜா.

‘நமது கை ஓங்கியிருந்த சமயத்தில் துணைப்படை அனுப்புவதற்குப் பதில் தூதனை அனுப்பினீர்கள், பிரிட்டிஷ் படையுடன் சமாதானத்துக்கு” என்று சுட்டிக்காட்டினார் மானாஜி.

பிரதாபசிம்ம மகாராஜாமானாஜியைச் சிறிது நேரம் உற்று நோக்கினார். ‘மானாஜி| நீங்கள் சொல்வது எதிலும் தவறில்லை. ஆனால் மன்னனாக இருப்பவன் தனது ராஜ்யத்தின் ஒரு திசையை மட்டும் கவனிப்பதற்கில்லை” என்றார்.
டபீர் பண்டிதர் துணிவுடன் இடை புகுந்து, ”ஆனால் நீங்கள் கவனித்த திசையில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கலம் நெல் கைவிட்டுப் பொய்விட்டது” என்று சுட்டினார்.

”வருமான வரி அமைச்சர் வருமானத்திலேயே கண்ணாயிருக்கிறார்” என்ற மன்னர், மீண்டும் டபீரைப் பேச விடாமல் கையமர்த்தி, ”மானாஜி நீங்கள் ஆச்சாள்புரத்தில் இருந்த போது தான் சந்தாசாகிப் பெரும் படையுடன் ஆற்காட்டை வெற்றி கொண்டார். அங்கு நமக்கிருந்த ஆதரவு போய்விட்டது. அடுத்தபடி சந்தா சாகிபுவும் டூப்ளேயும் கண் வைக்கக் கூடிய இடம் திருச்சிதான். அங்கு ஓர் இடத்தில்தான் நமது நண்பர் முகமது அலி இருக்கிறார். திருச்சி பிரெஞ்சுக்காரர் கையில் விழுந்தால் தஞ்சையைப் பிடிப்பது பெரிய காரியமல்ல. தவிர, சந்தா சாகிபுக்குத் திருச்சியை விடத் தஞ்சை மீது அன்பு அதிகம்” என்றார்.

மானாஜி புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். இருப்பினும் அவர் சொன்ன காரணத்தை முழுவதும் ஆமோதிக்காததால் வினவினார்; ”திருச்சியைப் பிடித்துக் கொண்டு இங்கு வருவதற்கு மூன்று மாத காலம் ஆகும். அதற்குள் இங்கு நாம் நிலைமையைத் திடப்படுத்திக் கொள்ள முடியாதா? அதற்காகத் தேவிக்கோட்டையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?” என்று.

பிராதபசிம்ம மகாராஜா அவருக்கு உடனடியாக விடையளிக்கவில்லை. சற்றுத் தூரத்தே சாளரத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரனை கூர்ந்து நோக்கினார். “விஜய குமாரா நமது தளபதியின் யோசனை பற்றி உன் கருத்து என்ன?” என்று வினவினார்.

விஜயகுமாரன் சாளரத்திலிருந்து மெல்ல நடந்து அறையின் நடுவுக்கு வந்தான். ”பெரியவர்கள் முடிவுகளில் எதற்கும் அபிப்பிராயம் சொல்லக்கூடிய தகுதி எனக்கு இல்லை. நான் சிறுவன், அநுபவமற்றவன். அதிக போர்களைக் கண்டறியாதவன்” என்று தப்பிக் கொள்ள முயன்றான்.

‘உன் அநுபவத்தைப் பற்றிக் கேட்கவில்லை, அபிப்பிராயத்தைப் பற்றிக் கேட்கிறேன்” என்றார் மகாராஜா மீண்டும்.

விஜயகுமாரன் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினான். “இப்போது நாட்டில் நடக்கும் போர் இஸ்லாத்துக்கும் ஹிந்துக்கும் அல்ல” என்றான் மெதுவாக. ”வேறு யாருக்குள் நடக்கிறது?” என்றார் மானாஜி.

”பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடக்கிறது” என்றான் விஜயகுமாரன்.

அதற்குமேல் அவனைப் பேசவிடாத மகாராஜா, “அதுவே உண்மை. இந்த இரண்டு விதேசிகளும் இங்கே தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அதற்கு நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்த முயல்கிறார்கள். இப்போது பிரெஞ்சுக்காரர் கை ஓங்கி நிற்கிறது. சந்தாசாகிபை இங்கு நிலைக்கவிட்டால் நாம் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தை நிலைக்க விடுகிறோம்” என்று கூறியதுடன் நிற்காமல், ‘அதை தவிர்க்க வேண்டுமென்றால் நாம் ஒரு கட்சியில் சேர்ந்து தானாக வேண்டும். ஆகையால் சந்தாசாகிப் ஆற்காட்டைப் பிடித்தவுடன் பிரிட்டிஷாரின் கையைப் பலப்படுத்த முடிவு எடுத்தேன். இல்லையேல் நாம், சந்தாசாகிப், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகிய மூன்று விரோதிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். வழி ஒன்றுதான் இருந்தது. ஒரு எதிரியை நமது நண்பராக்கிக்கொள்ளும் வழி. அந்த வழியைக் கையாண்டேன். அதனால் தான் தேவிக் கோட்டையில் நமது வெற்றி நிச்சயமாயிருந்தும் சமாதானம் செய்து கொண்டேன்” என்றும் விளக்கினார்.

மானாஜி அப்பா பதிலேதும் கூறவில்லை, இந்த விளக்கத்துக்கு. ஆனால் விஜயகுமாரன் மட்டும் ஒரு சந்தேகம் கேட்டான். வேறு வழியில்லையா?”

பிராதாபசிம்ம மகாராஜாவின் கண்கள் மட்டுமின்றி மற்ற இரு அமைச்சர் கண்களும் விஜயகுமாரனை வியப்புடன் நோக்கின. வேறு வழி இருக்கிறதா?” என்றார் மகாராஜா.

”இருந்தது. இன்னும் இருக்கிறது. ஆனால்…” என்று சற்றுத் தயங்கினான் விஜயகுமாரன்.

”தைரியமாகச் சொல்” என்று ஊக்கினார் மன்னர்.

விஜயகுமாரன் மன்னரையும். நோக்கினான்; மற்றோரையும் நோக்கினான். ”உண்மையைப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்” என்று தன் உரையையும் தொடங்கினான் துணிவுடன்.

‘மகாராஜா, தாங்கள் நினைப்பது போல் இன்று இந்த நாட்டில் இருக்கும் பெரும் சக்திகள் இரண்டு தான். அதில் ஒன்று நசிந்து விட்டது. மிகத் திறமைசாலியான அவுரங்கசீப்புக்குப் பிறகு டில்லியின் சக்தி ஒடுங்கிக் கிடக்கிறது. இரண்டாவது சக்தியான மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் சக்தி இன்று உச்சநிலையில் இருக்கிறது. முன்பே அதன் சக்தியை ரகோஜி போன்ஸ்லா இந்தத் தென்திசையில் உடைத்திருக்கிறார். இன்று கூட இந்த வெள்ளைக்காரர்கள், தொண்டை மண்டலத்தை அடுத்துள்ள மலைச்சாரலில் தங்கியிருக்கும் முராரிராவின் படையைக் கண்டு அஞ்சுகிறார்கள். இந்தத் தஞ்சை ராஜ்யம் ஆதியிலிருந்து மகாராஷ்டிர தாயகத்திலிருந்து பிரிந்து தனித்து நிற்கிறது. அத்துடன் இது இணைய வைக்க சிவாஜி மகாராஜா முயன்றார்; முடியவில்லை. இந்தத் தஞ்சை ராஜ்யம் தனித்து நிற்காமல் மகாராஷ்டிரப் பேரரசுடன் இணைந்து விட்டால் இதை அணுகவும் பிறர் அஞ்சுவார்கள்” என்று கூறினான் விஜயகுமாரன்.

இதைக் கேட்ட பிரதாபசிம்ம மகாராஜாவின் முகம் உணர்ச்சியற்ற கல்லாகிவிட்டது. சிறுது நேரம் ஆலோசனை அறையில் நிலவிய மௌனத்தை மகாராஜாவே கலைத்து, ”இது வரை அரசாக இருந்து வரும் தஞ்சை ராஜ்யத்தை ஸதாராவின் சிற்றரசாக்கப் பார்க்கிறாய்” என்றார் மிக மெதுவாக. அந்த மெதுவில் கடினம் கலந்திருப்பதை உணர்ந்தான் விஜயகுமாரன். ஆனால் இளங்கன்று பயமறியாது என்ற மூதுரைக்கும் விளக்கம் தரத் தொடங்கி, சொரூபத்தைக் காட்டத் தொடங்கி, ”மகாராஜா! தந்தை தனயர்களுக்குள் ஆண்டான் அடிமை உறவு கிடையாது. மகாராஷ்டிர அரசுகளுக்குள் பேரரசு – சிற்றரசு என்ற வேறுபாடு கிடையாது. ஆதி முதல் நமது பாரத மன்னர்கள் தாயாதிச் சண்டையாலும் வீண் பெருமைகளாலும் தங்கள் அரசுகளை இழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரர்கள் எங்கிருந்தாலும் ஓர் இனந்தானே! அவர்கள் பிரிந்து எதிராளிகளுக்கு வலுவை அளிப்பானேன்?” என்று வினவினான்.

மகாராஜா இதைக் கேட்டுக் கோபிக்க வில்லை. இதழ்களில் இள நகையே கூட்டினார். ”சிறுவனே! நீ நினைப்பதுபோல் அரசியல் சிக்கல்கள் அத்தனை சுலபமாகத் தீருவதில்லை. சாம்ராஜ்யங்கள் உருவாவதும் அழிவதுங்கூட ஒரு தனி மனிதனின் திறமையாலும், திறமையின்மையாலுமே நடை பெறுகின்றன.சிவாஜி மகாராஜாசின்னஞ்சிறு மலைக்கூட்டங்களைக் கொண்டு சாம்ராஜ்யத்தைச் சிருஷ்டித்தார். அவுரங்கசீப் சக்கரவர்த்தி பெரும் படையிருந்தும் தமது சாம்ராஜ்யத்தை அழித்தார். ஆகவே, எண்ணிக்கையும் அரசுகளின் சேர்க்கையும் பலத்தை நிர்ணயிப்பதில்லை. தனி மனிதர்களின் தீர்க்காலோசனை, துணிவு, ஊக்கம், சமயமறிந்த ராஜதந்திரம் – இவை அரசுகளைத் தப்ப வைக்கின்றன. இந்தத் தஞ்சை அரசையும் தப்ப வைக்க அப்படித்தான் முயலுகிறேன். எனக்குத் தெரிந்த ராஜதந்திரத்தின்படி இப்போது இந்தப் பகுதியில் நமக்கு வேண்டியது ஸதாராவின் துணையல்ல. இதை நீயே காலத்தில் புரிந்து கொள்வாய்” என்று கூறிய பிரதாபசிம்மன் மானாஜியை நோக்கி, ”மானாஜி, நமதுக் கோட்டை நீண்ட கால முற்றுகையைத் தாங்க ஏற்பாடு செய்யுங்கள். பண்டிதரே அதற்கு வேண்டிய உணவு வகையறாக்களைச் சேர்க்க நீர் முனைந்து பணி செய்யும் ” என்று உத்தரவிட்டார்.

அத்துடன் மீண்டும் சிந்தனையிலும் இறங்கினார். மன்னர் அதற்கு மேல் ஏதும் பேச விரும்ப வில்லை என்பதை உணர்ந்த மூவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். அறைக்கு வெளியே வந்ததும் இரு அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ பேசத் தொடங்கினாலும் அதில் கலந்து கொள்ளாத விஜயகுமாரன் நேராகத் தனது அறைக்குச் சென்றான்.

Previous articleRaja Perigai Part 2 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here