Home Historical Novel Raja Perigai Part 2 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 2 Ch6 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch6 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 6. கோட்டை மருந்து

Raja Perigai Part 2 Ch6 | Raja Perigai | TamilNovel.in

கண்ணாடியில் தெரிந்த உருவத்தைக் கண்டதும் கணநேரம் திகைத்து விட்ட விஜயகுமாரன் வதனத்தில் அந்தத் திகைப்பு வந்த நேரத்தில் மறைந்து, மந்தகாசம் அது இருந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளவே சரேலெனத் திரும்பினான். பின்னாலிருந்த உருவத்தை நோக்கி, “இது சௌகரியம்” என்றும் சொல்லிச் சிரிப்பை லேசாக உதிரவிடவும் செய்தான், தன் வலிய உதடுகளிலிருந்து. அத்துடன் கதவு பக்கம் திரும்பி அது தாளிடப் பட்டிருப்பதையும் நோக்கிப் புன்முறுவலும் கொண்டான். பிறகு அவன் பேசவில்லை. அந்த உருவத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் கண்களால் விழுங்கவே செய்தான்.

நந்தினி மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவள் தலைக் குழலை அலங்கரித்த தஞ்சை முல்லைச் சரம் அவள் கண்களிலிருந்த உக்கிரத்தைக் கேலிக் கூத்தாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் கழுத்தைச் சுற்றிக் கிடந்த மாணிக்க மாலை, அவள் கன்னத்தில் ஏறிக் கிடந்த கோபச் சிவப்பைப் பார்த்துத் தனது செவ்விய கிரணங்களைக் கொண்டு போராடிக் கிடந்தது. அவள் அணிந்திருந்த காசிப் பட்டுச் சேலைக் கூட உடல் முழுவதையும் மறைக்க முடியாததால், அவள் உடல் வழவழப்பின் முன்பு தனது வழவழப்பு அர்த்த மற்றது என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அவள் கையிலிருந்த தங்க வளையல்கள் நான்கும் சர்ப்பங்களைப் போல் செய்யப் பட்டிருந்தாலும், அவள் கொல்லும் விழிகளின் முன்பு தங்கள் விஷம் – பயனளிக்காது என்ற நினைப்பால் சத்தமின்றித் தலைகளைச் சாய்த்து எதிர் கணுக்களைக் கவ்விக் கொண்டிருந்தன.

கோபம் அவள் கண்களில் மட்டுந்தான் தோன்ற முடியும் என்ற நியதியில்லையென்பதை, கூரிய முனைகளுடன் நின்ற அவள் மார்புகள் இரண்டுங்கூட எடுத்துக் காட்டின. அவள் கை நீட்டிய துப்பாக்கியின் முனையுமாகச் சேர்த்து மூன்று முனைகள் அந்த வாலிபளைக் கடுமையுடன் பார்க்கவே செய்தன. அத்தனையிலும் ஒரு பலவீனம் மட்டும் அவளிடம் இருந்ததை ஒருக்களித்த அவள் சிற்றிடை நிரூபித்தது. ‘எனக்கு அத்தனை திராணியில்லை’ என்பதைக் கூறுவது போல், இடை துவண்டு ஒருக்களித்து, கீழ்ப் பெரும் பகுதிகளை ஒருபுறமாக ஒதுக்கிவிட்டதால் எந்த இளைப்பையும் அடுத்துப் பலம் தர மலை போன்ற சக்திகள் வாழ்வில் உண்டு என்ற பெரிய தத்துவம் அவள் அழகிய உடலில் விளங்கிக் கொண்டிருந்தது.

இப்படி அலைந்த அவன் கண்களை நந்தினியும் பார்க்கவே செய்ததால், அவள் உக்கிரம் முன்னைவிட அதிகப்பட்டது. தவிர தன்னை அலசிப் பார்க்கும் முன்பு அவன், ”இது சௌகரியம்” என்று சொன்ன வார்த்தைகளின் பொருள் என்ன என்று ஆராயவும் செய்தாள். ‘நேராகத் திரும்பி விட்டால் என்னைப் பார்க்க சௌகரியமாயிருக்கும் என்று சொல்கிறார். சே! வெட்கமின்றிச் சொல்கிறாரே இந்த ஆண்மகன்’ என்று தன்னைக் கேட்டுக்கொள்ளவும் செய்தாள் நந்தினி, வெட்கம் விஜயகுமாரனுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில். என்ன ஊடுருவும் கண்கள் சேசே ஆண் வர்க்கமும் ஒரு வர்க்கமா? அந்த விழிகளைத் தோண்டினாலென்ன?’ என்று தன்னை மீண்டும் கேட்டுக் கொண்டாள் தஞ்சை மன்னன் மகள். ‘அதிருக்கட்டும் அவர் பார்ப்பதை நான் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?’ என்றும் கேட்டுக் கொண்டாள். அதற்கு மேல் ஓடிய எண்ணங்களை நினைக்கவும் வெட்கம் கொண்டாளாகையால் நந்தினி தன் கைத்துப்பாக்கியின் குதிரையைச் சற்று அதிகமாகவே இழுத்து, ”இது சௌகரியம் என்று சொன்னீர்களே, என்ன சௌகரியம்?” என்றாள்.

விஜயகுமாரன் இதழ்களில் இளநகை அளவுக்கு அதிகமாகவே விரிந்தது. இப்படி நான் இங்கே எதிராக நிற்பது” என்று மெள்ளக் கூறினான் முறுவலின் ஊடே.

”இதில் என்ன சௌகரியத்தைக் கண்டு விட்டீர்கள்?” குரலில் சீற்றத்தைக் கூட்டிக் கேட்டாள் நந்தினி.

‘முன்பு நான் கண்ணாடியைப் பார்த்து நின்று கொண்டிருந்தேன்…” என்றான் விஜயகுமாரன்.

“ஆம். அழகு பார்த்துக் கொண்டிருந்தீர்கள்” என்றாள் நந்தினி இகழ்ச்சியுடன்.

“ஆம்” என்று ஒப்புக் கொண்டான் விஜயகுமாரன்.

”என்ன ஆம்?”

”அழகு பார்த்துக் கொண்டிருந்தேன். அதாவது…”

”அதாவது?”

”பின்னால் தோன்றிய அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

இதைக் கேட்ட நந்தினியின் முகம் கோபத்தில் அதிகமாகவே சிவந்தது. ”உங்களுடன் நான் விளையாட வரவில்லை’ என்ற அவள் குரலிலும் கோபம் உச்சத்தில் தெரிந்தது.

”இல்லை.”

”என்ன இல்லை?”

”விளையாட வரவில்லை.”

“புரிந்து கொண்டீர்களா அதை?”

”புரிந்து கொண்டேன், கைத்துப்பாக்கியைப் பார்த்ததும்.”

”அப்படியும் ஏன் திரும்பினீர்கள்?”

”முதுகில் சுடுவதைவிட…” என்று கூறிச்சற்று நிதானித்த விஜயகுமாரன், அவள் மார்பைக் காட்டி, “இங்கு சுடுவது சௌகரியம் என்றும் சொன்னேன்” என்று கூறினான்.

நந்தினி சுயநிலையை அறவே இழந்தாள். அடுத்த விநாடி இடக் கை தன்னைச் சுற்றி வளைத்துவிட்டதாலும், தனது கையிலிருந்த கைத்துப்பாக்கியை நழுவ விட்டாள் நந்தினி. அந்தச் சமயத்தில் அவன் அவள் காதுக்கருகில் குனிந்து, ”நந்தினி’ என்று ரகசியமாக உதிர்த்த பிறகு கழுத்தில் ஆழப் புதைந்து விட்ட அவன் முரட்டு உதடுகளும் அவள் சுய உணர்வை யெல்லாம் பறித்துக் கொண்டதால், ”நந்தினி” என்று அழைப்பதற்குப் பதிலும் சொல்லவில்லை அவள்.

என்ன காரணத்தாலோ அவன் கைகள் அன்று அவளை அளவுக்கு அதிகமாக நெறித்தன. கழுத்தில் புதைந்த உதடுகள் மீண்டும் ஒரு கன்னத்திலும் புதைந்து விலகின. ”நந்தினி! நந்தினி ” என்று மீண்டும் இரு முறை அழைத்தன.

‘உம்’ என்று உம் மட்டும் கொட்டினாள் நந்தினி, உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் அந்த உம்முக்குக் காரணங்கூடப் புரிய வில்லை அவளுக்கு.

ஆனால் அந்த ‘உம்’மிலிருந்த குழைவு வீணையின் கமகம்போல் இழைந்து ஒலித்தது அவன் செவிகளில். ஆகவே அவளைத் தழுவி நின்ற நிலையிலேயே அவன் சொன்னான் “நந்தினி நீகைத்துப்பாக்கியைக் கீழே போட்டிருக்கக் கூடாது.”

”ஏன்?” அவள் கேள்வியில் ஆவேசமில்லை இப்போது ஆசைதான் இருந்தது.

“இந்த நிலையில் சுட்டு விட்டால் ஆனந்தத்துடன் இறப்பேன்” என்றான் விஜயகுாரன்.

”உங்களைச் சுட என்னால் எப்படி முடியும்?” என்று வினவினாள் அவள் பெருமூச்சின் ஊடே.
”பின் எதற்காகக் கைத்துப்பாக்கியை நீட்டினாய்?”

”உங்களைத் தடை செய்ய.”

“எதிலிருந்து?”

“என்னை விட்டு ஓடுவதிலிருந்து.”

”யார் சொன்னது ஓடப் போவதாக?”

அத்தனை துன்பத்திலும் அவள் இனிமையாக நகைத்தாள். அவன் பிடியிலிருந்து மெல்ல விலகி அவள் பஞ்சணையைப் பார்த்தாள். கையால் அங்கிருந்த மூட்டையைச் சுட்டிக் காட்டி, “இதற்கு என்ன அர்த்தம்?” என்று வினவினாள்.

விஜயகுமாரன் மீண்டும் ஒரு முறை வலிய அணைத்தான். பிறகு அவளை அழைத்துக் கொண்டு பஞ்சணையில் தனது மூட்டைக்குப் பக்கத்தில் உட்காரவைத்தான். அவள் எதிரே நின்று அவளை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னான்: ‘இந்தப் பயண மூட்டையைப் பார்த்துத் தவறாகப் புரிந்து கொண்டாய், நந்தினி.”

அவள் அழகிய விழிகள் அவனை ஏறெடுத்து நோக்கின. “இந்த மூட்டை மட்டுமல்ல, உங்கள் அலங்காரமும் பயணத்துக்கு அத்தாட்சி கூட்டுகிறது” என்றாள் நந்தினி.

”அதனால்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”உங்களைத் தடுப்பது என் கடமையாயிற்று.’’

“என்ன கடமை அது?”

”ஒரு பெண்ணைத் தொட்டுவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் வாலிபர்களைத் தடுப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.”

இதற்குப் பிறகு இரண்டு விநாடிகள் சிந்தனையில் இறங்கினான் விஜயகுமாரன். ”ஆமாம் நந்தினி பயணமெல்லாம் ஓட்டமாகுமா?” என்று வினவினான் முடிவில்.

”எதுவும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது” என்று விளக்கினாள் நந்தினி.

“எந்த சந்தர்ப்பத்தைக் குறிக்கிறாய்?”

“இந்தச் சந்தர்ப்பம் தான்… இப்பொழுது நடுநிசி.’’

“ஆம்.’’

“நீங்கள் என் தந்தை அறையிலிருந்து படைவீடு வந்த போது மிக வேகமாக வந்தீர்கள்.”

”அதை நீ பார்த்தாயா?”

”பார்த்தேன். இந்தப் படைவீடுகளில் ஏற்படும் எந்த அசைவும் என் உப்பரிகை அறையிலிருந்து தெரியும்.”

”அந்தப்புரம் வேவு பார்க்கும் அரங்கம் போலிருக்கிறது.”

“அப்படி நினைத்துத்தான் எந்த அந்தப்புரத்திற்கும் காவல் போடப்படுகிறது.”

”காவல் அதற்காக அல்ல நந்தினி.” ”வேறு எதற்காக?” என்று கேட்டாள் நந்தினி.

விஜயகுமாரன் கண்களில் விஷமம் சொட்டியது. ”பெண்களைப் பாதுகாப்பதற்கு.”

”பெண்கள் நள்ளிரவில் ஓடிவிடுவார்களென்ற பயமா?” என்று கேட்டாள் அவளும் விஷமமாக.

”மாட்டார்கள். ஓடுபவர்களைத் தடுப்பார்கள்” என்றான் விஜயகுமாரன். அத்துடன் அவளை அணுகிப் பஞ்சணையில் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு இருவருமே நகைத்தார்கள்.

அந்தச் சிரிப்பு ஒரு விநாடிதான் நிலைத்தது. அடுத்த கணம் இருவருமே சீரிய எண்ணங்களுக்கு இலக்காயினர். ”ஆம். எதற்காக தந்தை அறையிலிருந்து கோபத்தடன் வந்தீர்கள்? இங்கு வந்ததும் ஏன் மூட்டை கட்டத் தொடங்கினீர்கள்?” என்று வினவினாள் நந்தினி.

விஜயகுமாரன் அடுத்திருந்த தனது உடைப் பையின் மீது அவளைச் சாத்தினான். அவள் அழகைப் பருகிக் கொண்டே சொன்னான், ”நந்தினி உன் தந்தையின் அரசியல் முடிவுகள் எனக்குப் பிடிக்க வில்லை ” என்று.

“அதனால்?”

“நான் வேறிடத்துக்குப் போகிறேன்.”

”அங்குள்ள அரசியல் முடிவுகள் பிடிக்குமா உங்களுக்கு?”

”சொல்ல முடியாது. ஆனால் என் சபதம் நிறைவேற அங்கே கிடைக்கும் பயிற்சி உதவும். அது மட்டுமல்ல, பின்னால் அது உன் தந்தைக்கும் உதவும்.”

”அப்பேர்ப்பட்ட இடம் எதுவோ?” ”ஸெய்ன்ட் டேவிட் கோட்டை.’
இதைக் கேட்டதும் துடித்து எழுந்தாள் நந்தினி. அவளை மீண்டும் உடைப்பையின் மீது சாய்த்த விஜயகுமாரன் அவள் மீது தானும் லேசாகச் சாய்ந்தான். அந்த நிலையில் சொன்னான், ”இனி என் சபதம் நிறைவேற அங்கே தான் இருக்கிறது மருந்து” என்று.

நந்தினியின் அழகிய விழிகள் அவன் விழிகளை நன்றாகச் சந்தித்தன. அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்து தலையை எடுத்து மார்பின் மீது சாய்த்துக் கொண்டன. ”என்னை விட்டுப் போகிறீர்கள்…” என்ற அவள் முணுமுணுப்பில் வேதனை நிரம்பி நின்றது.

ஆம். ஆனால் மீண்டும் திரும்பிவர… உன்னை நிரந்தரமாக என் சொத்தாக்கிக் கொள்ள…” என்ற விஜயகுமாரன் குரலிலும் சோகம் ததும்பி நின்றது.

அப்படி என்ன மருந்து இருக்கிறது ஸெய்ண்ட் டேவிட் கோட்டையில்?” என்று மெதுவாக வினவினாள் அவள்.

அவள் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்திய விஜயகுமாரன் அவள் காதுக்கருகில் மருந்தின் பெயரைச் சொன்னான். அவன் சொற்களைக் கேட்ட அவள் அம்புஜ விழிகளில் வியப்பு மிதமிஞ்சி நின்றது. அந்த வியப்பைப் போக்கவோ என்னவோ அவன் உதடுகள் அந்தப் பங்கஜ விழிகளின் மீதும் மாறிமாறிப் பதிந்தன.

Previous articleRaja Perigai Part 2 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here