Home Historical Novel Raja Perigai Part 2 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

46
0
Raja Perigai Part 2 Ch7 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch7 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 7. காலத்தின் துரத நடை

Raja Perigai Part 2 Ch7 | Raja Perigai | TamilNovel.in

உடலோடு உடல் இழைந்ததால் உலகை மறந்த நிலை; உணர்ச்சிகளின் சுழற்சியால் காதல் விரித்த வலை; இவை இரண்டையுமே விஜயகுமாரன் அவள் காதில் உதிர்த்த மந்திரச் சொல் கத்தரித்துவிடவே, அவள் விழிகளில் அவன் இதழ்கள் மாறி மாறிப் பதிந்த போதுகூட அவள் பழைய மயக்கத்தின் வசப்படாமல் வியப்பின் வசமே சிக்கியதால், ”அந்த மருந்தின் பெயரை இன்னொரு முறை சொல்லுங்களேன்” என்று மெள்ள வினவினாள், சொர்க்கத்திலிருந்து சாதாரண நிலைக்குத் திரும்பி.

”கிளைவ்” என்று மீண்டும் சொன்ன விஜயகுமாரன் அவள் மீது சாய்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் இடையைத் தனது இரு கைகளாலும் வளைத்தான்.

அவன் உடை மூட்டையில் சாய்ந்து படுத்த வண்ணம் அவனைக் கூர்ந்து நோக்கிய நந்தினி, ”யார்? திருச்சிச் சாலை சத்திரத்தில் நமது உதவிக்கு வந்தானே அந்த வெள்ளைக்காரனா?” என்று வினவினாள். கண்களிலே விரிந்த வியப்பின் சாயை உதடுகளிலும் பரவ.

”ஆம், அவன் தான்” என்றான் விஜயகுமாரன், அவள் அழகைப் பருகிய வண்ணம்.

அவன் அப்படிப் பதில் கூறிய சமயத்திலும் அவன் கண்கள் மட்டும் தனது ஆடையை ஊடுருவிப் பார்ப்பது போன்ற பிரமை தஞ்சை மன்னன் மகளுக்கு ஏற்பட்டதால் அவள் முகத்தில் மீண்டும் நாணத்தின் சாயை படர்ந்தது. உடலின் கவர்ச்சி அம்சங்களை அவன் கண்களிலிருந்து மறைக்கவோ என்னவோ அவள் லேசாகத் திரும்பிப் படுத்தாள். அதனால் வேட்கை அதிகமாகவே செய்தது. திரும்பியதால் அவள் மார்பு அவன் கண்களிலிருந்து மறைந்தாலும் இடைக்கும் கீழே எழுந்த ஒரு புறத்து அழகு அவன் இதயத்தைச் சிதைத்ததால் அவள் கையொன்று அதன் மீது தவழ்ந்தது. இதனால் நந்தினி நகைத்தாள்.

ஒரு கண் உடை மூட்டையில் பதிந்திருந்ததால் இன்னொரு கண்ணால் பார்க்கவும் செய்தாள். இரு கண்களின் பார்வையைவிட ஒரு கண்ணின் பக்கப் பார்வையின் வேகம் எத்தன்மையது என்பதைப் புரிந்து கொண்ட விஜயகுமாரன் இதயம் மிக வேகமாக அடித்துக் கொண்டதால், அந்த ஆபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கையை எடுத்துக் கொண்டான் அவன். படுக்கையிலிருந்து எழுந்து எட்ட நின்று கொண்டான்.
நின்ற நிலை படுத்த நிலையைவிட எந்த விதத்திலும் ஆதரவு அளிக்கவில்லை அவனுக்கு. பஞ்சணையில் கிடந்த அந்த மோகன உருவத்தின் வளைந்த நிலையும் கண்ணைக் கவர்ந்த பல்வேறு அம்சங்களும் அவனை மீண்டும் வெறி பிடிக்கும் நிலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தன. அதனால் அவன் அவளைப் பார்ப்பதைவிட்டு அறையில் அங்குமிங்கும் உலாவினான் சில விநாடிகள். அந்த உலாவலால் சிறிது உணர்ச்சிகள் ஒரு கட்டுக்குள் அடங்கவே அவன் கனவில் பேசுவது போல் பேசினான். ”ஆம், அவன் தான், நந்தினி! அந்த வெள்ளைக்கார வாலிபன் தான். அவன் தான் என் கவலைக்குத் தகுந்த மருந்து. அவன் சாதாரண மனிதனல்ல. எதோ பெரிய காரியத்தைச் சாதிக்கப் பிறந்தவன்” என்று கூறினான்.

நந்தினி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். ‘ஏதோ சொப்பனத்தில் இருக்கிறீர்கள். தஞ்சை ராஜ்யம் அளிக்க முடியாத உதவியை அந்த வாலிபன் உங்களுக்கு எப்படி அளிக்க முடியும்?” என்று வினவினாள் குனிந்த தலை நிமிராமலே.

விஜயகுமாரன் உலாவலை நிறுத்தி அவளை உற்று நோக்கினான். குனிந்த நிலையிலும் அவள் அழகு அவன் கண்களைப் பறித்தது. உடை மூட்டையில் தலை உருண்டதால் தலையிலிருந்த மலர்ச் சரத்தில் பாதி நார் மட்டும் தெரிந்தது. குழலும் கலைந்து விட்டது. கலைந்ததிலும், மலர் சிதறலிலுங்கூட அழகு இரட்டிப்பாக முடியும் என்பதை அந்த நேரத்தில் புரிந்து கொண்டான் விஜயகுமாரன். குனிந்த தலை அவன் கழுத்தின் வெளுப்பை எத்தனை மடங்கு அதிகமாக அறை வெளிச்சத்தில் காட்டமுடியும் என்ற ஆராய்ச்சியும் அவன் சித்தத்தில் சுழன்றது. மீண்டும் உணர்ச்சிப் பிரவாகத்தில் தான் இழுபடுவதைத் தவிர்க்க உரையாடலின் உதவியை நாடிய அந்த வாலிபன் சொன்னான்:

”தஞ்சை ராஜ்யத்தின் உதவி தற்சமயம் மிகவும் பஞ்சை, பயனற்றது. உன் தந்தையின் உள்ளம் ஸதாரா அரசின் உதவியை, அதன் கத்தியைப் பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறது. இந்த அரசர்களுக்குள்ள வீண் கௌரவம் தஞ்சை அரசின் அஸ்திவாரத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறது. ராகோஜி போன்ஸலாவும் முராரிராவும் உதவிக்கு வராவிட்டால் பல ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை ராஜ்யம் மகாராஷ்டிரர் கைகளை விட்டுப் போயிருக்கும். அந்தப் படிப்பினையைக்கூட உன் தந்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது மீண்டும் சந்தாசாகிபின் கை உயர்ந்து விட்டது. அந்தக் கையை வலுப்படுத்த டூப்ளே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். வெள்ளைக்காரர் போர் முறை நமது போர் முறையை விடப் பல மடங்கு உயர்ந்தது என்பதைப் பாரடிஸ் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் சென்னைக்கருகில் நடந்த அடையாற்றுப் போரில் நிரூபித்து விட்டார். ஆகையால் அவர்கள் அணிவகுப்பு, படை நடத்தும் முறை, இவற்றை நாம் கற்றாலொழிய நமக்கு நாடு நிலைப்பது கஷ்டம். அதை மானாஜி நன்றாக அறிவார். ஆனால் அவர் இஷ்டப்படி இப்போது தஞ்சையில் விவகாரங்கள் நடைபெறவில்லை. ஆகவே, தஞ்சை வெகு சீக்கிரம் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகும். சந்தாசாகிபின் படைகளையும், பிரெஞ்சு படைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்கும் அளவுக்குத் திராணியில்லை. வெளி உதவி அவசியம். அதை உன் தந்தை ஏற்க மறுக்கிறார்.”

இப்படி விடுவிடு என்று உணர்ச்சியுடன் விஜயகுமாரன் பேசியதால் நந்தினியின் சித்தமும் அரசியலுக்குத் திரும்பவே, அவளும் மெல்ல பஞ்சணையிலிருந்து எழுந்து நின்று அவனை நேருக்கு நேர் நோக்கினாள். ”தந்தையின் போக்கு உங்களுக்குப் பிடிக்கவில்லை?” என்றும் கேட்டாள் சினத்துடன்.

”ஆம்” என்றான் விஜயகுமாரன் திட்டத்துடன்.

”அவர் எத்தனை அபாயங்களைச் சமாளித்திருக்கிறார் தெரியுமா?”

”தெரியும்.”

”அவர் அநுபவம்…?

“மிக அதிகம்.”

”உங்களை விட அவருக்கு அநுபவம் அதிகம்.”

”மறுக்க வில்லை நான்.”

”அப்படியிருக்க நீங்கள் அவரிடம் நம்பிக்கை வைத்து இங்கேயே தங்கினால் என்ன? தஞ்சைப் படையில் இப்போதுள்ளப் பதவியைத் தொடர்ந்து வகித்தால் என்ன?” இந்தக் கேள்வியை நந்தினி மிக உக்கிரத்துடன் கேட்டாள்.

விஜயகுமாரன் முகம் சிந்தனைக் கடலாயிருந்தது. ஆனால் அக் கடலில் அலைகள் கொந்தளிக்க வில்லை. சேதுவைப் போல் நிச்சலமான தடாகம் போலிருந்தது. அந்த நிதானத்துடன் மெள்ளப் பதில் கூறத் தொடங்கிய விஜயகுமாரன் தன் இடக் கையால் வலக் கையைப் பிடித்துக் கொண்டான்.

”நந்தினி! நான் எனது ஊரை விட்டு வந்தது பதவி ஏற்க அல்ல. இந்த நாட்டைக் காப்பாற்றக் கூட அல்ல. எனது சபதமொன்றை அரங்கன் சந்நிதானத்தில் செய்ய, அதை நிறைவேற்ற, அந்த லட்சியத்துக்கு எந்த ராஜ்யம் இடம் கொடுக்கிறதோ அந்த ராஜ்யத்தில் நான் இருப்பேன். எந்த இனம் அது நிறைவேற உதவுகிறதோ அந்த இனத்துடன் சேருவேன். எந்தப் பயிற்சி நிறைவேற்றத் தேவையோ அந்தப் பயிற்சியை மேற்கொள்வேன். எனக்கு மாட்ச் லாக்கால் சுடத் தெரியும். மகாராஷ்டிரர்களின் வளைவு வாளால் தலைகளைச் சீவத் தெரியும். புரவிப் படையை இயக்கத் தெரியும். வேலைக் கூடக் குறி தவறாமல் ஓடும் குதிரையிலிருந்து எறிவேன். இலக்குத் தவறாமல் அம்பெய்யவும் முடியும். ஆனால் தற்காலப் போர்முறைக்கு இவை மட்டும் போதா. படை அணிவகுப்பு முறைகளில் வெள்ளையர் சில புதுமுறைகளைக் கையாளுகிறார்கள். அதை நான் அறிய வேண்டும். அந்தப் பயிற்சி சுதேச மன்னர்கள் மீது எனக்கொரு புது உயர்வை அளிக்கும். அதைப் பெற நான் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையை நாடிச் செல்கிறேன். அங்கே கிளைவிடம் சேர்ந்து அந்தப் பயிற்சியை முழுதும் பெறுவேன். அப்படிப் பெற்று இங்கே திரும்புவேன் ஒரு நாள். அந்த நாள் தஞ்சை ராஜ்யத்துக்குப் பொன்னாளாகும். எனக்கும் நன்னாளாகும். எனது சபதம் நிறைவேற அந்த நாளில் இந்தச் சோழமண்டல மண்ணில் வித்துடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறினான் விஜயகுமாரன்.

“இந்தப் பயிற்சிக்கு கிளைவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? பிரெஞ்சுக்காரர் உதவாதா?”

‘’உதவாது. அவர்கள் தஞ்சை மண்டலத்தின் விரோதிகள்.”

“பிரிட்டிஷார்?”

”தற்சமயம் அவர்களுடன் நாம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம். தவிர, கிளைவ் மகாவீரன்.”

திரும்பத் திரும்ப அவன் கிளைவைப் பற்றிச் சொன்னது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. ‘கிளைவ் என்ன மந்திரவாதியா இந்த மாநிலத்தை மாற்றிப் படைக்க?” என்றாள்.

”இல்லை தந்திரவாதி. தவிர அவன் கண்களில் சதா ஒரு கனவு இருக்கிறது” என்றான் விஜயகுமாரன்.

”பகற்கனவா?” அவள் குரலில் கேலியும் கோபமும் இருந்தன.

விஜயகுமாரன் இதழ்களில் இளநகை அரும்பியது அவள் சினத்தைப் பார்த்து. “கனவு அர்த்தமற்றதல்ல அரசகுமாரி. வாழ்க்கையே கனவென்று தத்துவம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையே அர்த்தமற்றதாக ஆகவில்லையே. நீயும் நானும் வருங்கால வாழ்க்கை பற்றிக் கனவு காண்கிறோம். அது அர்த்தமற்றதா? பயனற்றதா? கனவு கான்பவன் காரியங்களைச் சாதிக்கிறான். என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது, கிளைவின் கனவுடன் என் சபதமும் சம்பந்தப் பட்டிருக்கிறதென்று. ஆகவே அவனை நாடி நான் செல்கிறேன். ஆனால்…?

”திரும்பவும் வருவேன் உன்னை அழைத்துச் செல்ல” என்று கூறிய விஜயகுமாரன், அவளை நெருங்கி இரு தோள்களையும் பிடித்தான். அத்துடன் கேட்கவும் செய்தான், ‘நந்தினி, என்னுடன் வடக்கு வாசல் வரையில் வருவாயா?” என்று.

”எதற்கு? நம்மிருவர் உறவையும் பறைசாற்றவா?” என்று வினவிப் புன்னகை பூத்தாள் அவள்.

”இல்லை. அதை இனிமேல் பறைசாற்றத் தேவையில்லை.’’

”ஏன்? உலகமறிந்த கதை போல் இருக்கிறது?” என்றாள் அரசகுமாரி.

‘’ஆம்.”

”அப்படியானால் நான் வருவானேன்?”

“நான் வெளியில் செல்ல உதவியாயிருக்கும். தவிர, தஞ்சை ராஜ பேரிகை சப்திக்கும், அரசகுலத்தவளான நீ வருவதால்.”

“ராஜபேரிகை முழக்கமா?”

”ஆம்.”

”நான் உங்களை வெளியே அனுப்புவது தந்தைக்குத் தெரிய வேண்டுமா?”

”அதுவும் ஒரு காரணம். அந்தப் பேரிகை ஒலியைக் காதில் வாங்க ஆசைப்படுவதும் ஒரு காரணம்.”

”எதற்கு அந்த ஆசை?”

“ராஜ பேரிகை பின்னால் ஒரு காலத்தில் ஒலிக்கும்.”

”எப்பொழுது?” ”என் சபதம் நிறைவேறும் போது.”

”அதற்காக?”

‘அந்த ஒலி இப்பொழுது என் காதில் மட்டுமல்ல இதயத்திலும் விழும். அந்த வேகம் என் சிந்தனையை இலக்கை விட்டுத் தடம் புரளாதிருக்கச் செய்யும். மிகுந்த உணர்ச்சியுடன் சொன்னான் விஜயகுமாரன்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. தனது தலைப்பை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டாள். விஜயகுமாரன் தனது உடை மூட்டையை எடுத்துக் கொள்ள அவனைத் தொடர்ந்தாள் அரசகுமாரி.

வடக்கு வாசலை அரசகுமாரி அடைந்ததும் ராஜபேரிகை தடதடவென முழங்கியது. அந்த முழக்க அடிகள் அல்ல, இடிகள். அரசகுமாரியின் இதயத்தைத் தாக்கினாலும் அதை அவள் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. புரவியின் முதுகின் மீதிருந்த அவள் கையை அவன் பிடித்த போது அவள் கண்கள் அவனை நோக்கித் திரும்பின. கண்களில் ஏதோ யோசனை பிறந்தது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டு அவள் தனது தலைச் சுட்டியை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு விலகி நின்றாள். சுட்டியை ஒரு முறை விளக்கொளியில் பார்த்த விஜயகுமாரன் அதை தனது கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டான். பிறகு புரவி மீது திடீரெனத்தாவி ஏறி அதைச் செல்ல விட்டான் மெதுவாக.

புரவியின் நடையில் அசைய அசைய மிகக் கம்பீரமாகச் சென்ற விஜயகுமாரனின் வீர உருவத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் நின்றாள் நந்தினி. அவள் கண்களில் நீர் திரளவில்லை இதயத்தில் திரண்ட காரணத்தால்.

Previous articleRaja Perigai Part 2 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here